Thursday, May 17, 2012

கட்டுரை

                                                          அதிகாரம் நல்லது

தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களில் பள்ளிகள், மருத்துவமனைகள், மதம் என்று முப்பிரிவுகளைக் கொண்ட கிறித்தவ சிறுபான்மையினரின் நிர்வாகம் இருக்கிறது. இந்நிர்வாகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இருக்கிறார்கள். அவ்வூழியர்களைத் தன் மனத்தெளிவுக்கு ஏற்றார்போல கிடுக்கிப்பிடிப் போடவும், சுதந்தரமாகத் திரியவிடவும் முழு வல்லமையைக் கொண்டது. ஆங்கிலேயர் தலித் என்ற பெயர் புழங்காதபோது, அத்தன்மையுள்ளவர்களை நாடியது முற்றிலும் அவர்கள் மூலமாக தன் மதத்தை நுழைக்க அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்கள். தன் சொல்பேச்சைத் தட்டாத குழந்தைக்கு ஒரு தேன்மிட்டாய் கூடுதலாய்க் கொடுப்பதில் என்ன தவறு என்ற அடிப்படையில்தான் ஆங்கிலேயனுக்கு தலித்துகளுடனான உறவு இருந்திருக்கமுடியும்.

இருபது வருஷங்களுக்கு முன் வெண்மையை ஒளிரும் கறுப்பு சூரியனாக பேராயர் அசரியா பதவி ஏற்றார். தன் எஜமானின் அசைவுகளைக் கணிக்கவும், முகம் சுழிப்போருக்கு எதிராக மிரட்டும் கூரியப்பற்களைக் கொண்டுத்துரத்தும் வல்லமைக்கொண்ட உயரிய வகை நாயாக கழுத்தில் சங்கலி இல்லாமலே  அவர்கையில் மிகப் பாசமாக அடங்கியிருந்தது அதிகாரம். ஆனால், அந்த அதிகாரத்தை அவர் எப்படிச் செயல்படுத்தினார் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

பேராயராகப் பொறுப்பேற்றவுடன் தலித் மக்களை விஷேஷித்த வண்ணமாகக் கையில் எடுத்தார். கிராமப்புரங்களே அவரின் சிறப்பான பார்வையாய் இருந்தது. முதல் வேலையாக தன் நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும் ஆலயங்களின் போதகர்கள் வழியாக கிராமக் குடும்பங்களை ஆய்வுசெய்தார். அவர்களின் வாழ்வாதாரங்கள் உயர்வதற்கு பல்வேறு திட்டங்களைப் புகுத்தினார். படிக்கும் பிள்ளைகளாக இருந்தால், அவர்களை நகரத்தில் உயர்ந்து நிற்கும் கல்விக்கூடங்களில் இலவசமாய் நுழைத்தார்.  வாலிபப் பெண்கள் வீட்டில் ஆடுமாடுகளை மேய்க்கக்கூடாது என்று  அவரவர் தகுதிக்கேற்ப ஆசிரியர் பயிற்சி, மற்றும் செவிலியர் தகுதி பெறச்செய்தார்.

புதிதாக, ஆரம்பநிலைப் பள்ளியில் வேலைக் கிடைத்து கிராமங்களிலேயே பணிசெய்யும் ஆசிரியர்களை மேல்நிலைப் பள்ளிகளில் நகரத்திற்கும். நகரத்தின் தாளாளர், கல்வி அலுவலர் அவர்களின் நிரந்தர காக்காய்களாய் இருக்கும் நிரந்தர நகர  மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களை ஆரம்பநிலைப் பள்ளிகளுக்கும் மாற்றினார். நகரத்திலிருந்து சென்றவர்கள் வந்து முறையிட்டபோது, ‘ஏம்பா நீங்க எத்தனை வருஷங்கள் இங்கேயே இருக்கிறீர்கள். உங்களுடையத் திறமை கிராமப்புர மாணவர்களுக்கும் கிடைக்கணும் இல்லையா, அதேபோல அந்த கிராமத்திலேயே வேலை செய்யிற ஆசிரியர்கள் நகரத்திற்கு வந்தால் அவர்களும் கொஞ்சம் திறமையை வளர்த்துக்கொள்ள உதவியாய் இருக்காதா? கொஞ்சநாள் போங்க என்று சமாதானம்தான் அவர்களுக்கு பதிலாகக் கிடைத்தது.

ஆங்கலேயர் தமிழனிடம் பேராயப் பதவியை ஒப்படைத்த பிறகும் ஆலயப்பொறுப் புகளிலும், பள்ளிகளிலும்  பலன் அடைந்த சந்ததியே திரும்பத் திரும்பப் பலன் ஆனுபவித்து வந்தது.  அதை மீறி  கிராமங்களில் இருந்து வந்த சில புத்திசாலிகள் ஆயர்களையோ, உயர் அதிகாரிகளையோ சொக்குப்பொடிப் போட்டு சில பதவிகளை வாங்கிக்கொள்வார்கள். அதுவும் இருப்பதிலேயே கடைநிலை வேலைதான் பள்ளிகளில் அமர்த்தப்பட்டார்கள். முழுக்க முழுக்க வசதி படைத்தவர்களே பள்ளி, ஆலயம் ஆகியப்பதவிகளில் அமர்த்தப் பட்டார்கள்.

வழமையை உடைத்தவர் இந்த அதிகாரம் படைத்த அசரியாதான். ஏற்கனவே இருந்த பெருச்சாளிகள் தங்கள் பிள்ளைகளுக்காக வேலைக்கேட்டு வந்தார்கள் ‘ டே, நீ ஒரு உயரிய பதவியில் இருக்கிற, உன் பொண்டாட்டி நல்ல வேலை செய்றா, இப்போ உன் புள்ளைக்கு  வந்திட்டியா? உனக்கு மனசாட்சியே இல்லியாடா? உன் குடும்பமே மேல மேல வந்தா, கிராமத்திலே கஞ்சிக்குச் செத்து, வெயிலுக்குக் காஞ்சி, மொதல் மொதல் பையனை ஆசை, ஆசையாய் படிக்கவெச்சி, ஆவலோடு ஒரு வேலைக் கிடைக்காதானு காத்துக்கிடக்கிறானே அவனுக்குக் குடுக்கக்கூடாதா?  அவன் சாகனுமா?  ஓடிப்போடா இன்னுங்கொஞ்ச நேரம் நின்ன, உன் வேலையையும் புடுங்கிடுவேன்’ என்று சொன்னவர்தான். அவர் அப்படியேச்சொன்னார்.

அவர் நிர்வாகத்தில் இயங்கும் பள்ளிகளில் மேல்நிலை ஆசிரியர் முதல், கடைநிலை ஊழியர் வரை தேடித்தேடி கிராமப்புர தலித் மக்களையே வேலையில் அமர்த்தினார். சற்றுக் காலப்போக்கில் வழி வழியாய் வந்த பெருச்சாளிகள்  ஆலயங்களிலும், பள்ளிகளிலும் கழிவு நீர் ஓட்டை எதுவும் இல்லாததால். தங்கள் உறவினர்களை நுழைக்க ஏழை உரு எடுத்து வரத்தொடங்கினர். சிலரின் நல்ல நேரம் வேலையும் வாங்கிவிட்டார்கள். சிலரின் கெட்டநேரம் கத்தீட்ரல் சாலைவரை கழுத்திலும், காதிலும், கையிலும் தொங்கிய நகைகள் அவரின் அலுவலகத்துக்கு முன்பாக வந்தபோது  கழட்டித் தங்கள் மார்பக அறைகளிலும், பர்ஸ்சுகளிலும் போடுவதை சிலநேரம் வீட்டிலிருந்து பார்த்துவிடுவார். வேலை கேட்பவர்கள் பரம ஏழைகள்போல் நடிப்பதைப் பார்த்து இவ்வளவு சேர்த்து வைத்து என்னத்தை தூக்கிப்போகப் போகிறார்கள். வந்தவர்களை ஒரு அரைவிடுவார். ‘மரியாதையாக பையில இருக்கிற நகை எல்லாம் எடுத்துப்போடுங்க. இல்ல, போலீஸக் கூப்பிட்டு என்வீட்டு நகையை திருடிவச் சிங்கிறாங்கனு சொல்லிடுவேன். ஓடிப்போயிடுங்க. என் முகத்திலயே முழிக்காதிங்க.’ என்பார்.   முன்னே எதார்த்த நடிப்பால்  காரியத்தை சாதித்துக் கொண்டவர்கள் எப்போதாவது உண்மை தெரியும் பட்சத்தில் மீண்டும் வாய்பு வரும்போது,  அந்த அரையைச் சேர்த்து வாங்கிதான் ஆகவேண்டும்.

அவர் வீட்டிலிருந்து அலுவலகம் நோக்கி வந்துகொண்டிருந்தார். திடீரென ஒரு பெண் அவரின் காலில் விழுந்துவிட்டாள். அவர் பதரிவிட்டார். அவள் மிகவும் பயபக்தியோடு எழுந்தாள். பாளார் அரை கன்னம் மின்னலைச் சந்தித்ததுபோல் இருந்தது. உடனே காவலாளியைக் கூப்பிட்டு “ டே.. டே முட்டாள்களா இப்படித்தாண்டா ஒரு பெண் கால்ல விழுந்து ராஜிவ் காந்திய கொண்ணுப்புட்டாங்க. அவள கேட்டுக்கு அப்பால துரத்திட்டு வாங்க. என்றார். ஆனால், ஒருமாதம் கழித்து அந்தப்பெண்ணின் பெயரைச்சொல்லி அழைத்து ஒரு வேலை போட்டுக்கொடுத்தார் என்பது தான் வரலாறு.  தலைமை ஆசிரியரோ, ஆயர்களோ பதவிக்கு ஆசைப்பட்டு அவருக்குத்தெரியாமல்  அவர் அலுவலகத்தில் சுற்றும்போது தற்செயலாக அவர்பார்த்து விட்டால்  பாம்பின் தலையைக் கண்டவர்போல ஓடிவருவார். லாபம் தேடிவந்தவர் கையில் காலில் விழுந்து ‘பீ’ உருட்டி வண்டுபோல் உருண்டு வந்து தன்நிலையில் வந்து விழுவார். என்ன வேடிக்கை என்றால் நேற்று யாருக்கும் தெரியாமல் ‘பீ’ உருண்டையாக வந்து விழுந்தவர்.  இன்று அவரதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் ‘நேற்றுதான் பேராயரை சந்தித்துவிட்டு வந்தேன் பள்ளியில் யார் உன்பேச்சை மதிக்கவில்லை என்றாலும் என்னிடத்தில் பெயரை சொல் என்று சொல்லியிருக்கிறார். அதனால் பார்த்து நடந்துக்குங்க’ என்று அவருக்குக் கீழ் இயங்கும் பணியாளர்களை மிரட்டுவார்கள்.

ஆலயங்களின் பணியில் போதகர்கள் தங்கள் மனைவியர்களுக்கு வேலை கேட்டுப்போவார்கள். ஆயர் பணி, ஆசையை அகற்றியப்பணி நீங்கள் வரும்போதே பணமோ என்று வரவேண்டாம். உங்களுக்கு நல்ல சலுகைகள் வழங்கப்படுகிறது. அதுவே போதும் என்று நிம்மதி கொள்ளுங்கள். என்பார். அதுவுமல்லாமல் யாராவது காணிக்கை கையாடல், பெண்களிடம் சபலம் ஆலயச்சொத்துக்களைக் குறிவைத்தல் போன்ற சந்தேகம் எழுமாயின் அவர்களை வருமானம் இல்லாதச் சபைகளில் போட்டு மிரட்டி வைப்பார். தனக்கு இட்டப்பணியை எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் செய்கிற நபர்களை. அங்கீகரித்து சிறப்பு செய்த நிகழ்வுகளும் நடந்திருக்கிறது.

அவருக்கு, தோட்டக்காரர், காவலர், பெருக்குபவர், இவர்கள்தான் மிக நெருக்கமான நண்பர்கள். அலுவலக  நடவடிக்கைகளைக்குறித்து பேசாத நாளே இல்லை. அலுவலகம் முடிந்த நேரங்களில் காவலரை அழைத்து ‘ டே. போயி காபி வாங்கியாறியா? சூடா சுண்டல் இருக்குண்டா வாங்கியா நாம எல்லாரும் சாப்பிடலாம்.’   யாராவது கொடுக்கும் துணிமணிகளை ‘டே இந்தா இத உங்கப்பாவாண்ட கொண்டுபோய் கொடு. இந்தப்பழங்களை உன் பிள்ளைகளிடம் கொடு’ என்பார். இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது எதேச்சியாக உனக்கு சம்பளம் என்னத் தறாங்க என்று கேட்டு அதிர்ந்துவிட்டார். ‘டே கூப்பிடுடா அந்த பைனான்ஸ ஆபீஸரை. யோ, என்னய்யா சம்பளம் குடுக்குறீங்க. நாலு வருஷமா வேலை செய்யிறான் வெறும் 750 தான். இதை வெச்சி அவன் குடும்பத்தை எப்படியா நடத்துவான். உங்க சம்பளத்தை மட்டும் ஏத்திக்கிறீங்க. யோ இந்த மாசத்திலிருந்தே 1250 ரூபாய் தரனும் (1993-ல்). இந்த மாசத்திலயிருந்து பி. எப் எல்லாருக்கும் பிடிக்கனும். ஒரு வாரத்துல இதை எல்லாம் முடிக்கணும்.’ இதைச் சொல்லி முடித்துவிட்டு இந்த சம்பளமும் பத்தாதுதான் என்ன செய்யிறது, நாமும் ஏழை ஜனங்கக் குடுக்கிற காணிக்கத்துட்ட வச்சித்தானே செய்யவேண்டியிருக்குது. என்று சொல்லிவிட்டு சம்பளம் ஏத்திட்டாங்கனு வீன் செலவு செய்யாதே’. என்பார்.

இவர் பொதுவாக மதம் சார்ந்த தலித் மக்களுக்கு மட்டுமே உதவி செய்தவரல்ல பொதுவாக தலித் இளைஞர்கள் படிக்கவேண்டும், முக்கியமாக நல்ல ஒழுக்கங்களை கையாளவேண்டும் என்று மதத்திற்கு அப்பார்ப்பட்டு பொதுவானத் திட்டங்களைத் தீட்டி செய்லபடுத்தினார். அவருடைய அதிகாரத்தின் நாட்களில் காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர் மாவட்டத்தின் கிராம தலித் இளைஞ்ர்கள் ஒரு பைசா செலவில்லாமல் அவர் நிர்வகிக்கும் பள்ளிகளில் அரசு நிதியில் வழங்கும் வேலையைத் தந்து உதவினார். அவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை அப்படித்தான் செய்து நிறைவேற்றினார். அன்று வேலைவாங்கியவனுக்கு கற்பித்தல் முறையாக தன் பாக்கட்டிலிருந்து பயணச் செலவையும், அப்போதைய சாப்பாட்டுச் செலவையும் பிறருக்கு உதவும் பழக்கம் வரட்டும் என்பதற்காகச் செய்தார். அதைத்தன் சொந்த பணத்தைக்கொண்டு கொண்டுத் தொடங்குவார். ஆனால் அவரால் நன்மையைப்பெற்ற யாருமே அதைக் கடைபிடிக்கவில்லை.

(18,5,2012 இன்று மண் அதிகாரத்தைத் தாங்கப்போகும்) தலித் ரத்னா ‘மா.அசரியா’வின் அதிகாரம் நல்லது.

ஜே. டேனியல்

No comments: