Tuesday, May 8, 2012

சிறுகதை




         அடையாள வில்லை


 “என்னங்க இது, இந்தக்கடவுள் இல்லாத சிஸ்டத்தை எல்லாம் கொண்டாந்துட்டாரு. நேற்றுவரைக்கும் நான் நினைச்ச நேரத்துல நினைச்ச இடங்களில் காணிக்கையப் போட்டுவிட்டு, நிம்மதியா என் வேலையைப் பார்ப்பேன். இவர் வந்து, இந்த முறையை ஒவ்வொருவரின்  கட்டாயமாக்கிட்டாரே. என்னங்க அநியாயம்’ என்று வரிசையில் நிற்கும் முதல் நபர் ஆதங்கப்பட்டார்.  

இரண்டாம் நபர், விளம்பர நிறுவனத்தால் நிறுபிக்கப்பட்ட சோப்பில் வெளுத்த ஜிப்பா அணிந்திருந்தார். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட மூக்குக் கண்ணாடி. எப்போதும் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் தோல். மூக்குக்கு கீழே ஒழுங்கு செய்யப்பட்ட அழகிய மீசை, நீண்ட கழுத்து, கழுத்தில் நெஞ்சிக்குழிச் சற்றுத் துருத்தலாக இருந்தது. இவர் இதற்கு முன் பேசிய முதல் நபரை முறைத்துவிட்டார். “நீங்கள் சற்று வாய்பேசாமல் இருந்தால் நலமாக இருக்கும். இந்தத் திட்டத்தைப்பற்றி முழுமையாக உங்களுக்கு தெரியாது என்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்லுவதுபோல வருஷத்தில் ஒரு முறையோ அல்லது நாம் நினைத்தபோதோ எந்த உண்டியல்களிலாவது பணத்தை நிறப்பிவிட்டபின் நீயோ அல்லது நானோ மரிக்காமல் இருந்து விடுகிறோமா?. மறுமையில் இடம்பிடித்துக்கொள்ள, நான், நீ என்று போட்டிப்போட்டுக் கொடுக்கிறோம். அப்படி நிச்சயமில்லாத ஒன்றில் முழு நம்பிக்கை வைத்து அள்ளி அள்ளிக் கொடுத்துச் செத்துப்போவதைவிட,  இந்தக் கடவுள் மறுமைக்கு உறுதிப் பத்திரத்தைத் தருகிறார். மேலும், இதற்கு முன் மரித்தவர்கள் மறுமையில் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் அவர் ஹாட்டிஸ்கிலிருந்து லைவாகப் போட்டுக் காட்டுகிறார். அதனால் தாங்கள் இப்படிப்பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இங்கு  ஒழுங்குப் பணியில் ஈடுபட்டிருக்கும் கண்காணிப்புக் குழுவின் காதில் விழுந்தால்  வரிசையிலிருந்து விலக்கிவிடப் போகிறார்கள்”

மூன்றாவது நபராக நின்றிருந்தவரின் கால்களில் தரமான செருப்பு இருந்தது. முழுக்கை சட்டைபோட்டு, இன்செய்து பெல்ட்டுக் கட்டியிருந்தார். அடிக்கடி கையை நீட்டிப் பேசும்போது கையில் இருந்த தங்கக்காப்பு ஏறுவதும், இறங்கு வதுமாக இருந்தது. இடது விரலில் இந்திய்ககொடியின் மேல்வண்ணத்தை ஒத்தைக்கல் மோதிரமாகப் போட்டிருந்தார். சட்டைப் பாக்கட்டில் வைத்திருந்தப் பணம் பளிச்சென்று தெரிந்தது. முன் நின்றவர்களைப்பார்த்து “சார் பேசிக்கொண்டே நகர்ந்துபோங்க சார். பின்னாடி இருக்கிறவங்க என்ன நெருக்கிக் கொண்டே வராங்க. “முதல் நிற்பவர் சொல்கிறபடி இந்தக் கடவுளின் சட்டதிட்டங்கள் கடுமையானதாகத்தான் இருக்கிறது. சினிமாக் கொட்கைகளுக்குப் போனேன்னா. கூட்டங்களைப்பார்த்து பயந்து முந்நூறோ, நாநூறோக் கொடுத்து பிளாக்கில் டிக்கட்ட வாங்கிக்கிணு போயிடுவேன். ஆனால், இங்கு கூட்டத்தை வழி நடத்தவோ ஒழுங்கு படுத்தவோ யாருமே இல்லை. இருந்தாலும் மிகக் கண்ணியமாக  நடந்துக்கொள்ள வேண்டியி ருக்கிறது. கடவுள் ஏதோ ஒரு அறையில் உட்கார்ந்துக் கொண்டு,  கூட்டத்தின் கடைசி நபரையும் தொழில் நுட்பத்தை வைத்துக் கண்காணிக்கிறார். வேண்டியவர், வேண்டாதவர் என்று யாருக்கும் சலுகை வழங்குவதில்லை. ஏதோ ஒரு சூட்சமத்தை வைத்து நிர்வகிக்கின்றார். ஆனால் சரியாகத்தான் இருக்கிறது.  நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் இக்கடவுளைப்பற்றிக் கேள்விப்பட்டபோது என் மேனேஜரிடம் டோக்கன் போட்டுவரும்படி அனுப்பினேன். என்ன போதகத்தைக் கேட்டானோத் தெரியவில்லை. ‘சார் உங்களுக்காக நான் வரிசையில் நின்று பதிவுசெய்து வில்லை வாங்கிவருவது மிகவும் சுலபம். ஆனால்,  அந்தப் பலன் உங்களுக்கு வந்து சேராது என்கிற பட்சத்தில், அதை நீங்களே செய்வதுதான் உசிதம்.’ என்று எனக்கே புத்திசொல்லுகிறான். அதனால் இன்று, நானே வருசையில் நிற்க வந்திருக்கிறேன்.”

“அப்படியா, சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்போல.”

“சார், உங்கள் தீர்ப்புச் சரியானதாகக்கூட இருக்கட்டும் ஆனால், நான் சொல்ல வதந்ததை சொல்லி முடித்து விடுகிறேன்.” என்று மூன்றாம் நபர் சொல்லத்தொடங்கினார். இங்கு நடைமுறைப்படுத்துகிறச் செயல்கள் மிக வெயிப்படையானது. ஆதாவது, நமக்கு ஒரு பணி இடப்படுகிறது. அந்தப் பணிசார்ந்த மதிப்பெண்கள் உடனே வெளியரங்கத்தில் திரையிடுகிறார்கள். நான்கு கட்டம், ஒவ்வொருக் கட்டத்திலும்  ஒரு தலைப்பு. அதாவது, முதல் கட்டத்தில் ‘மறுமையின் நன்மைக்கான மதிப்பெண்’ (சுருக்கமான முறையில் ம.ந.ம), அடுத்தக்கட்டதில் தலைப்பு ‘இடங்கள்’ மூன்றாவது கட்டத்தில் மறுமையின் தீமைக்கான மதிப்பெண்  (சுருக்க முறையில் ம.தீ.ம) நான்காவது கட்டத்தில் ‘இடங்கள்’   அதற்குக்கீழ் காலத்தில்  ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி முதலில் மார்க், அடுத்து இடங்கள், அடுத்து மார்க், அடுத்து இடங்கள் இப்படி மூன்று தகுதியின் இடங்கள் கொடுக்கப்படுகிறது.

இன்னும் சரியாகப் புரியவில்லைதானே கொஞ்சம் கவணியுங்கள் உதாரணத்திற்கு ஒரு நபர் செய்த பணியின் நிமித்தமாக  மதிப்பெண் எழுபத்தி ஐந்து எடுத்துவிட்டால்  முதல் வரிசை தலைப்புக்குக்கீழ் கட்டத்தில்  மதிப்பெண் எழுபத்தி ஐந்து என்றும், அடுத்தக்கட்டத்தில் இடங்கள் என்பதற்கு நேராகக்கீழ் ‘மகுடம்’ என்று வரும். மேலும் இந்நபர் இழந்துவிட்ட இருபத்திஐந்து மதிப்பெண் மூன்றாவது  (ம.தீ.ம) என்ற கட்டத்திற்குக்கீழ் ‘ஏக்கம்’  என்று வரும். இப்படி மூன்று தகுதி இடங்களை இந்தக் கடவுள் வகுத்து வைத்திருக்கிறார். என்ன சார் ஒரு மாதிரியாப் பார்க்கிறீங்க இவ்வளவுதூரம் சொல்றானே இவன் இதுக்கு முன்னாடி வந்திருப்பானா? என்றுதானே யோசிக்கிறீங்க.”

இரண்டாம் நபருக்கு, இவன் சொல்லுவது மிகையாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தாலும்,  மறுத்துச்சொல்வதற்கு வரிசைக்காறர்களிட்ம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால்,  சற்று மழுப்பலாகச் சிரித்துவிட்டு “இல்ல சார், நான் ஏன் உங்களைத் தப்பா நினைக்கப்போறேன். கடவுளின் சட்டதிட்டங்களைத்தானே சொல்றீங்க. நீங்க சொல்லுங்க சார். ஆனா ஒண்ணுமட்டும் சந்தேகமாக இருக்கிறது. அதமட்டும் கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும். இந்தக் கடவுளாண்ட உலகத்தின் எந்த மனுஷனாக இருந்தாலும் ஒரு முறைதான் வருசையில் நிற்கமுடியும் என்று சொல்றாங்களே. உங்களுக்கு எப்படி இவ்வளவு துள்ளியமாகக் கடவுளின் சட்டதிட்டங்களெல்லாம் தெரியுது”

மூன்றாம் நபர் சற்று முன் பின் பார்த்தார். அவருக்கு திருப்தி ஏற்பட்டபிறகே சொல்ல ஆரம்மித்தார். “சார் என் நிலமை அப்படி மாட்டவேண்டியதாயிடுச்சி என் மனைவி இந்த ஏரியாவின் நகரமன்றத் தலைவிசார். எங்க எல்லைக்குட்பட்ட எந்த இடத்தில ஒரு கம்ப நடணும்னாலும் எங்களாண்ட கேட்டு அதற்காகப் பெரியத்தொகையைக் கட்டிவிட்டுதான் வேலையைத் தொடங்குவார்கள், ஆனா இவுங்க எதோ புதுவிதமான தொழில் நுட்பத்தில் ஒரே வாரத்துல பெரியப்பெரிய டென்டா போட்டுட்டாங்க. பார்க்கிறதுக்கு காத்துல அலைபாய்ரா மாதிரிதான் இருக்குது,  ஆனா, நீங்களே பாருங்களேன் நமக்கு இடதுகைப்பக்கமா நிக்குற வேம்பு மரத்தின் கிளைகள் எப்படி மடிஞ்சி மடிஞ்சி சாயுது. அவ்வளவு ஏன் நுழைவாயிலுக்கு முன்னாடி இருக்குதே ஆலமரம் அதன் வீழுதுகள் எப்படி ஒண்ணோடு முட்டி, புது விரல்களைப்போல் துளிர்க்கும் விழுதுகள் எல்லாம் அந்தமேடைமேலையே கொட்டிக்கிடக்குது பாருங்க சார். இயற்கைகள் இப்படி ஆட்டம் போட்டாலும், துணியால் ஆன கூடாரம்போலதானே இருக்குது, டென்ட்டு எதாவது அசையுதாப் பாத்திங்களா? எந்தப்புயலும் ஒண்ணும் செய்யமுடியல பாருங்க. சரி அதை விடுங்க நாம விஷயத்துக்கு வருவோம்.  என் மனைவி என்ன அனுப்பிவச்சா. அப்பத்தான் இந்தக்கடவுள் சொன்னார் ‘பூமியின் மனிதர்கள் மறுமையின் சட்டதிட்டங்களை மதிக்கவில்லை. நான் நிர்னயித்த ஆயுள்நாட்களை மீறி பூமியிலேயே அதிநவீன சிகிச்சைகளை மேற்கொண்டு தாங்களகவே சுயமாக தங்கள் ஆயுள்நாட்களை நீட்டித்துக் கொள்கிறார்கள். வருமையில் இருக்கும் மக்கள் நான் நிர்னயித்த தேதியில் சரியாக வந்துவிடுகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மட்டும் நான் நிர்னயித்த நாளுக்கு முன்பாகவே வந்துவிடுகிறார்கள். இதில் குறிப்பாக இலக்கியவாதிகள் இன்னும் மோசம் இவர்கள் மற்றவர்கள் வாழ்வை கண்காணித்துக்கொண்டே கிடந்து தங்கள் வாழ்வை கவணிக்காததால் அவர்களும் நாங்கள் அழைக்காத நாளுக்கு முன்பாகவே வந்துவிடுகிறார்கள். வந்தவர்கள் அங்கு வந்து சும்மா இருப்தில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்கள்  சீக்கிரம் வந்துவிட்டதற்காக அவர்களை அழைத்துக்கொண்டு என்னிமே’ “கடவுளே இதுதான் உங்கள் நீதியா? வசதியுள்ளவர்கள் உங்கள் சட்டத்தை மீறி பூலோகத்திலேயே தங்கிவிடுகிறார்கள். வசதியற்ற இந்த அப்பாவிகள் உங்கள் அழைப்புக்கு முன்னதாகவே வந்துவிடுகிறார்கள். இதற்கு உங்களிடம் நேர்மையான திட்டமில்லையா? என்று  எனக்கு முன்பாகவே நின்று போராடுகிறார்கள். அதனால் சில சீர்திருத்தங்கள் செய்வதற்காகவே இந்த பூமியின் பயணம்’ என்றார்  “இந்த இலக்கியவாதிகள் எங்க இருந்தாலும் சொம்மா இருக்கமாட்டானுங்க போல அங்கப்போய் கலகம் பண்ணி கடவுளை தொந்தரவு செய்ததால, அவரு சில சட்டத்திருத் தங்களைச் செய்துக்கொண்டு பூமியில் நேரடியா ஒவ்வோரு வருக்கும் ஆயுளைக் கண்காணித்து அதை முடிக்கும் சான்றும், மறுமையில் அவர்கள் தங்கும் இடத்தையும் இந்த டெஸ்டிங் மூலமா செயல்படுத் துகிறாராம்.’ சார் அதுகூட பராவாயில்ல சார். வந்தற்கான காரணத்தை பொருமையாகச் சொன்னக்கடவுள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து,  ‘நீதான் மொதல்ல வரிசையில நிற்கவேண்டிய ஆளுண்ணு  பேசி அனுப்பினாரு சார்.” என்றான்.

கேட்டுக்கொண்டிருந்த இரண்டாம் நபருக்கு லேசான சிரிப்பு எழுந்தாலும், கூடவே பயமும் தொடர்ந்ததால் சமாளித்தார். “சார், இச்சட்டதிட்டங்கள்  சரியாக புரியாததால் பயத்தைத்தருகிறதா? அல்லது உண்மையிலேயே கடுமையானதா?  எனக்கு  விளங்கவில்லை,  இன்னுங் கொஞ்சம் சொல்லுங்கள் சார். பிலீஸ்” என்றார். கெஞ்சினார் என்றுகூட சொல்லலாம்.

மூன்றாமவர் “சார் உங்களுக்கு புரியவில்லை என்றாள். நான்தான் சரியாகச் சொல்லவில்லை.  சொல்லத்தெரியவில்லை என்றுகூடச் சொல்லலாம். ஆனால், அந்தக்கடவுள் வகுத்திருக்கும் திட்டம் மிகச் சரியானதாக, தெளிவானதாக இருக்கிறது.  நீங்கள் அந்த ஹாலுக்குச்சென்று  அங்குத் திரையிடப்படுகின்றதை ஒரு முறை பார்த்துவிட்டால் எல்லாம் புரிந்துவிடும் இருந்தாலும் முயற்சிச் செய்துப்பார்க்கிறேன். நீங்கள் இதை ஒரு அறிமுகமாகத்தான் வைத்துக்கொள்ளவேண்டும் “முதல் தகுதியைப்பற்றி சொன்னேன் இல்லையா அதேபோல இரண்டாம் தகுதி, வரிசை இரண்டு தலைப்புக் கட்டம்  ‘ம.ந. ம’ அதற்குக்கீழ்  மதிப்பெண் ‘ஐம்பது’, அதற்கு அடுத்தக் கட்டம் ‘இடங்கள்’ என்பதற்கு நேராகக்கீழ் ‘ஆர்பரிப்பு’, அதற்கு அடுத்தக் கட்டம் ம.தீ.ம  ‘ஐம்பது’ அதற்கு அடுத்து  ‘இடங்கள்’ என்ற கட்டத்திற்கு நேராகக்கீழ் ‘அவமானம்’. பிறகு, மூன்றாம் தகுதி   முதல் கட்டம்  ‘ம.ந. ம’ - ‘இருபத்திஐந்து’  இரண்டாம் கட்டம் ‘இடங்கள்’- ‘ஆசுவாசம்’  மூன்றாம் கட்டம்- ம.தீ.ம ‘எழுபத்திஐந்து’ நான்காம் கட்டம் ‘இடங்கள்’- ‘கொல்லொப்பிடம்’ இப்படியாக அந்த ஹாலின் திரைக் கட்டங்களுக்குள் வந்துகொண்டேயிருக்கும். இந்தக் கடவுளின் நம்பகத்தன்மை என்ன வென்றாள் ஆயுளை முடித்த பிறகு மறுமைக்கு வரவேண்டிய இடத்தை முன்கூட்டியேத் தெரிவித்து அடையாள வில்லையைக் கையில் தந்துவிடுகிறார். அந்த அடையாள வில்லையில் தேதியும் மாதமும் குறிப்பிடப்படாமல் குறிப்பிட்ட வருஷம் மட்டும் அச்சடிக்கப்பட்டுள்ளதுதான் சிறப்புக்குறியது.
.
முதலாம் நபர், கவுண்டரில் ஒண்ணாம் எண் கொண்ட வில்லையை வாங்கினார். அந்த வில்லையை கையில் வாங்கியதும் சதுரமும் இல்லாமல், வட்டமும் இல்லாமல் இருக்கும் அதன் அழகிய வடிவத்தைப்பார்த்தார். மனிதனைவிட கடவுள் ரசனை மிகுந்தவர்தான், இந்த வில்லைக்கூட என்ன அழகுடன் வடிவமைத்திருக்கிறார். தன் மனதுக்குள் பெருமைப் பட்டாலும் வில்லையை கையில் வாங்கியபோது பதட்டம் அவர் முகத்தில் தெரிந்தது. “எந்த மகராசன், எனக்கு வச்சிட்டுபோயிருக்கிறானோ? என்று தனக்குள்ளாகவே முனகிக்கொண்டார்.

இரண்டாம் நபர், முதலாம் நபரைப்பார்த்து “என்ன சார் எவ்வளவு பெரிய ஆட்சியாளர் நீங்க. நீங்களே இப்படி உங்களுக்குள்ளாகவே  பேசிக்கினா,  எங்களமாதிரி தொழில் முனைவோரெல்லாம்   எம்மாத்திரம். கொஞ்சம் வெளிப்படையாகச் சொன்னால்  என்ன ?  நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்”

முதல் நபருக்கு ஏனோ பேச்சி எழவில்லை. அதற்குள் மூன்றாம் நபர்   “ஏன் சார் அவசரப்படுறீங்க, அந்த    அறைக்குள் நுழைந்தவுடன் எல்லாம் தெளிவாகிடும். இனிமேல் பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். அப்படி பேசினா உங்கள் வில்லையை ரத்துச்செய்ய நேரிடலாம்.”

பெரிய ஹால் சுற்றுப்பகுதிமுழுக்க மூங்கில்களால் பிண்ணப்பட்டு  இருந்தது. இடையிடையில் பெரிய சன்னல்கள். ஹாலுக்கு இரண்டு பக்கம் வழி, வழிக்கு ஒருவர் என, இரண்டு வழிகளிலும் காவலர்கள் மட்டும் நின்றிருந்தார்கள். அவர்கள் கையில் ஆயுதங்கள் எதுவும் இல்லை. ‘மாறாக, நீங்கள் பிரித்தியேகமாக விரும்பும் எதையும், மிகச்சுலபமாகப் பெறுதற்கான நேர்மையான வழியை எங்களால் நிச்சயம் காட்டமுடியும். என்ற வாசகம் அவர்கள் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் பதியப்பட்டிருந்தது.’ பந்திக்கு அழைக்கப் பட்டவர்கள் பின் வாசல் வழியாய் வந்து ஹாலில் பந்தி சாப்பிட்டு, முன் வாசல் வழியாய் வெளியே வரவேண்டும். சாப்பிட்டவர்கள் வெளியே வரும்போது. டோக்கன் வாங்கிக் கொண்டு நிற்பவர்களுடன்  முதல் நபர், முதல் நபருக்கும், இரண்டாம் நபர், இரண்டாம் நபருக்கும், மூன்றாம் நபர் மூன்றாம் நபருக்கும் இப்படி வரிசை மாறாமல். ஒருவர், ஒருவருக்கு மட்டுமே கைக்குளுக்கவேண்டும். அன்றய தினம் எத்தனை பேர் வரிசையில் நிற்கிறார்களோ, அத்தனை எண்ணிக்கையுள்ள நபர்கள்தான் ஹாலில் சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள். சாப்பிட்ட எல்லா நபரும் வெளியேறிய பிறகு, ஆறுபேர்க் கொண்டக்குழு அவசர அவசரமாக ஹாலில் நுழைவார்கள். அதில் ஒருவர் மடிக்கணினி வைத்திருக்கிறார். இன்னொருவர் சிறிய பிரிண்டர் தன் தோளில் மாட்டியிருக்கிறார். நான்கு பேர் சீன உணவு சாப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் குச்சியை வைத்துக்கொண்டு முதல் இலையை ஆய்வுசெய்கிறார்கள். ஒருவர் வடக்குத் தெற்காக இருக்கும் இலையைத் திடிரென  ஒரு பக்கமாகக் கையில் தூக்கிப்பார்க்கின்றார். கிழிசல்கள் எதுவும் இல்லை. என்பதைத்தெரிவிக்கிறார். இன்னொருவர் தன் குச்சியில் மிச்சமிருந்த சாதத்தையும் சாப்பிடப்படாமல் இருந்த காய்கறிகளையும் கிளறி குறிப்பெடுத்தார். உடனே தனது ஆய்வை கணினி வைத்திருப்பவரிடம் சொல்லுகின்றார். மொத்தமாக ஆய்வு முடிந்தபின்பு, குழுத்தலைவர் கணினி வைத்திருந்தவரை இதுவைரை பதிவுசெய்த குறிப்புகளைக் கேட்கின்றார். கடைசியாகச் சில மாற்றங்களைச் செய்து பிரிண்ட்டுக்குக் கட்டளை இடுகின்றார். உடனே பிரிண்ட் தனது கிரிச்.. கிரிச்.. என்ற சத்தத்துடன் வெளியே வருகிறது. பிரிண்ட் வைத்திருப்பவர் கிழித்து தலைவரிடம் தருகிறார். தலைவர் ஒருமுறை வாசித்து கடவுளின் பெஸிமன் ஸீலைக்குத்தி முதல் இலையில் பின் அடிக்க உத்தரவிடுகிறார். ஆய்வுக்குழு அடுத்த இலைக்குப்போகிறார்கள். இப்படியே எல்லா இலைக்கும் குறிப்புகள் தொங்கவிட்டுச் சற்று நேரத்தில் ஆய்வுக்குழு வெளியேறுகிறது.

இப்போது முன்வாசலில் இருக்கும் காவலர் வில்லை வாங்கி நிற்பவர்களை உள்ளே அழைக்கிறார்.  பசுமை மாறாத மூங்கில் நேராகப்பெறுக்கள் குறிபோல அடிக்கப்படாமல், வலைந்து வலைந்து குறுக்கும் நெடுக்குமாக மூங்கில் தடுப்பு நெய்யப்பட்டிருந்தது அதன் அழகில் மயங்கிக்கொண்டே முதலாம் நபர் உள்ளேப் போனார்.  டேபில்களில் எச்சில் இலைகள் சிலது மடிக்கப்பட்டும் சிலது மடிக்கப்படாமல் விரிந்த நிலையிலும் வரிசையாக ஒரு நீதையைச்சொல்லக் காத்திருப்பதுபோல் இருந்தது. முதலாம் நபர் எச்சில் இலையிடம் வந்தார் . திடீரென இன்டர்காமில்  கடவுளின் செய்தி வந்துக் கொண்டிருந்தது. ‘நண்பர்கள் கவணிக்கவும்  தயவுசெய்து இலையில் தொங்கிக் கொண்டிருக்கும் குறிப்புகளை எடுத்து தங்கள் பாக்கட்டுகளில் வைத்துக்கொள்ளவும். புனிதத் தட்டை எடுத்து அதற்கான தேனாற்றில் சேர்த்துவிட்டபிறகு குறிப்புகளைக் கண்காணிக்கும் பணியாளரின் முன்னிலையில் உங்கள் குறிப்புகளை வாசிக்கவும். அவர்கள் உங்களைச் சரியாக நடத்துவார்கள். ஒருவேளை உங்களுக்குச் சந்தேகம் எழுமாயின் அச் சந்தேகங்கள் நிவர்த்திச் செய்யப்பட்டு, நியாமானத் தீர்ப்புதான் வழங்கப் படிருக்கிறது என்பதை  நீங்கள் ஆமோத்தப் பிறகுதான், உங்களின் ஆயுளுக்குப்பின்பான அடையாள வில்லையை உங்களிடம் தரப்படும். மேலும் அதில் எந்த குழப்பமோ, மாற்றமோ இல்லாத வகையில் மறுமையில் வந்துசேரவேண்டியத் தெளிவான முகவரி தரப்படும். ஆகவே இது மிக அவசியம். இவ்வொழுங்கை சரியாகக் கடைபிடியுங்கள்”. என்று தன் இன்டர்காமை ஆப்செய்தார்.


ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட எச்சில் இலைகளை எடுத்து தேனாற்றில் (ஒதுக்குப்புறமானக் குழி) போட்டபிறகு குறிப்புகளுடன் வரிசையாக வந்தார்கள். முதலாம் நபர் குறிப்பை கண்காணிப்புப் பணியாளரிடம் வாசித்து முடித்தார்.

பணியாளர் “மதிப்புக்குறிய அய்யா  தாங்கள் ம.ந.ம வில் ஐம்பது மதிப்பெண். ம.தீ.ம வில் ஐம்பது மதிப்பெண் பெற்றுள்ளீர்கள். ஆகையால் நீங்கள் ‘ஆர்ப்பரிப்பு’ ‘அவமானம்’ சரிசமமாக அனுபவிக்க வேண்டியுள்ளது. ஒருவேளை நீங்கள் எதை முதலில் அனுபவிக்க விருப்பப்டுகிறீர்களோ அதை முதலிலோ அல்லது அதற்கடுத்தோ அனுபவிக்கலாம். அது உங்கள் விருப்பம்தான்.

முதலாம் நபர் ஆர்ப்பரிப்பு என்று சொன்னபோது  அவர் முகத்தில் சற்று சந்தோஷம் தெரிந்தது. பிறகுச் சோகமானார் அவர் அப்படியே இருந்து விடவில்லை. பேசத்தொடங்கினார். “அய்யா எந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்குகிறீர்கள் நான் ஆட்சியாளனாய் இருந்தாலும் என்னுடைய சுக துக்கங்களை அநேகநேரம் மக்களுக்காக இழந்திருக்கிறேன். ஒரு வேளை என் அதிகார மோகத்தில் சிலருக்கு பாதகமாக செய்திருக்கலாம். ஆனால், தனிப்பட்ட நிலையில் இச்சமூகத்திற்கு பயன் உள்ளவனாக இருந்திருக் கிறேனே  அதை கணக்கில் எடுத்துக்கொண்டு  முதல் தரத்தைத் தரக்கூடாதா? ”

“அய்யா மாற்றியமைக்கிறப் பணி எங்களுகுறியதல்ல. கடவுள்தான் அதற்கு முழுப் பொறுப்பு. உங்கள் வாக்குமூலத்தைத்தான் நீங்கள் எடுத்த எச்சில் இலை பிரிதிபலிக்கிறது. அந்த இலையில் சாப்பிட்டவன் தனக்கு கிடைத்துவிட்டதென்று  மிகவும் அலட்சியமாக சாப்பிட்டிருக்கிறான். முதலில் பந்திக்கு அழைத்தவனை மதிக்கவில்லை. மதித்திருந்தால் வைத்த சாப்பாட்டில் கால் பகுதியை வைத்திருப்பானா?  முக்கியமாக டம்ளரில் வைத்தத் தண்ணீர் அப்படியே இருக்கிறது. இரண்டாவது சமையர்காரனின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளாமல் காய்களை அப்படியே ஒதுக்கிவிட் டிருக்கிறான்.பிறர் பெருமையாக நினைக்கவேண்டும் என்பதற்காக அவனுக்கு வைத்த லெக்பீஸை, பக்கத்து இலைக்காரனுக்கு வைத்திருக்கிறான். கடவுள் ஒவ்வொரு லெக்பீஸிலும் ஒரு எண்ணைப் பதித்திருக்கிறார். ஆய்வு செய்தபோது இவனுக்கு வைத்த லெக்பீஸ் பக்கத்து இலையில் கூடுதலாக இருந்தது. இவன், திடிரென அவனுக்கு கொடுத்ததின் மூலம் பல தீமையானக் காரியம் அரங்கேறுகிறது. வைத்தபிறகு என்னசெய்யமுடியும் அதையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டான். ஆனால், அதன்பிறகு இப்படியான பந்திகளில்  திடிரென ஏதாவது கிடைக்கும் என நம்பி அவனுக்கானதை அவனேத் தேடிக்கொள்ளும் ஆர்வத்தைக் குறைத்துவிட்டது.  லெக்பீஸ் சாப்பிடுகிறவர் கள்தான் இந்த ஹாலில் அனுமதிக்கப்படுகிறார்கள், அப்படி இருக்கும்போது இவன் ஏன்? அவனுக்கு வைத்ததை இன்னொருவனுக்கு வைக்கவேண்டும். திடீரென ஒன்றை கூடுதலாகவைத்து  அவன் வயிற்றை பெருக்கடித் துவிட்டான். இன்னொரு முறை நியாமானபடி பரிமாரியும் ஏற்கனவே கூடுதலாகச் சாப்பிட்டவன் இப்போது வயிறு நிறையாமல் சண்டையிடுகிறான். இந்த நேரம் பந்தி செய்கிறவனுக்கு கூடுதல் செலவீனத்திற்காக கடன் வாங்கவேண்டி யிருக்கிறது. சில நேரம் திருப்பித் தரமுடியாமல் கொள்ளையடிக்கவோ, ஏமாற்றவோ வேண்டியிருக்கிறது. அவன் செய்த செயலிலேயே இவ்வளவு மோசமான விளைவுகள் நிகழ்ந்திருக்கிறதென்றால். நீங்கள் செய்த பாதகத்தால் அதன் விளைவுகளை மதிப்பிட காலஅவகாசம் அளவற்றதாகத் தேவைப்படும், இருந்தாலும் கடவுள் அதை மிகத்துள்ளியமாக தன் ஹாட்டிஸ்கில் அதற்கான முழு ஆதாரத்தையும் வைத்திறார். இதற்கு மேலும் உங்களின் மறுமைக்கான இடத்தேர்வுச் சரியானது அல்ல என்று நீங்கள் நினைத்தால் கடவுளின் அறைக்குச்சென்று உங்களுக்கான விளக்கத்தைப் பெறலாம். ஆனால், நீங்கள்  அதற்கான அடையாள வில்லையைப். பக்கத்துக் கவுண்டரில் பெறவேண்டும்.”

“அய்யா நான் சற்று யோசிக்கலாமா?”

“அப்படியென்றால் அந்த இருக்கையில் அமருங்கள்.”

இரண்டாம் நபர் வந்து அவருடைய குறிப்புச்சீட்டை வாசித்து முடித்தார்.

“வாருங்கள் அய்யா நீங்கள் ம.ந.ம-வில்  எழுபத்திஐந்து பெற்றதால் பிரதானமாக ‘மகுடம்’ என்பதற்கான இடத்தைப் பெறுகிறீர்கள், ம.தீ.ம-வில் இருபத்திஐந்து பெற்றுள்ளதால், ‘ஏக்கம்’ என்கிற நிலையும் வந்திருக்கிறது அதையும் ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும்”

அய்யா, கடவுள் மனிதனுக்கு  மூன்று இடங்களைத்தான்  வகுத்துவைத் துள்ளார். அதில் நான் முதன்மையான இடத்தை அடைந்திருக்கிறேன். கடவுள் தகுதியில்லாமல் இந்த இடத்தை எனக்குக் கொடுத்திருக்கமாட்டார். இருந்தாலும் அந்த இருபத்திஐந்திற்கு வழங்கிய ஏக்கத்தை ஏன் நான் அனுபவிக்கவேண்டும்.  அதை, அனுபவிக்காமல் இருக்க அதிலிருந்து விலக்கு அளிக்கக்கூடாதா?. நான் மகுடத்தில் முழுமைக் கானமுடியாதா?

“அய்யா, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விளக்கங்களைத்தந்தால் எங்கள் பணியைக் குறித்த நேரத்தில் முடிக்முடியாதல்லவா? மனிதனிடம் இருக்கும் ஒரு மாபெரும் குறை எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்துவிடவேண்டும், முழுமையாக வாழவேண்டும், முழுமையாகச் செய்யவேண்டும். நீங்களே யோசித்துப்பாருங்கள் லட்சக்கணக்கான வருஷங்கள் கடந்தபின்பும் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு செய்யமுடியாதவைகள் இன்னும் இருக்கத்தானே செய்கிறது. அப்போது இதுவரை வாழ்ந்த மனிதன் எதையும் முழுமையாக செய்யவில்லை என்பதைத்தானே காட்டுகிறது. இப்பிரபஞ்சத்தின் அளவிடமுடியாதப் பரப்புகளைப் புரிந்துகொள்ள மனிதனின் ஆயுள் குறைந்த பட்ச்சம் ஆயிரம் வருஷமாவது ஆரோக்கியத்துடன் வாழ்தலுக்கான உத்திரவாதம் வேண்டும். ஒருவேளை அப்படி இருந்தால், அதுவும், ஒரு மனிதன் குறிப்பாக ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் ஓரளவேணும் முழுமையாக செய்யமுடியும்.  வாழ்வது முப்பது வருஷமோ நாற்பது வருஷமோ, அதில் புத்திதெளிவதற்கே இருபது வருஷம் ஓடிவிடும் இருக்கிற சொற்ப நாட்களில் உலகத்தின் எல்லாப் பக்கங்களையும் முழுமையாக அனுபவித்து விடவேண்டும் என்பது உங்களுக்கே அபத்தமாக இல்லையா அய்யா? ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் எதையுமே முழுமையாக செய்யமுடியாதவன் மனிதன், அப்படியிருக்க நான் செய்வதெல்லாம் முழுமை என்று யாராவது சொன்னால் அது ஏமாற்றுவேளைதான். இவ்வளவு சொல்லியும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் ஒன்றை நான்கேட்கிறேன்.  ஒருமுறை தயாரிக்கப்படுகிற பொருள் கடைசிவரை எந்த மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து அதேமுறையில் தயாரிக்கப்படுகிறதா? அடிக்கடி அதனுடைய நிலைகளை மாற்றுகிறார்கள் அல்லவா? இந்த வகையில் பார்த்தாலும் எதுவுமே முழுமைக்கிடையாது. அதனால், இருக்கிறவரை அவர்களால் ஆன பங்கை இந்த பூமிக்கு வழங்கிச்செல்கிறார்கள். அதில் சிலர் கூடுதல் சிலர் குறைவு அவ்வளவுதான்.


உங்களுக்கு அதிகமான விளக்கம் தந்துவிட்டதால், நீங்கள் எடுத்த எச்சில் இலைக்கான விளக்கம் சற்றுக் குறைவாகத்தான் சொல்லமுடியும். ஆதாவது உங்களுக்கான இலையில் சாப்பிட்ட நபர் மிகச்சரியாக சாப்பிட்டு இறுக்கிறார். அவருக்குக் கொடுக்கப்பட்ட சாப்பாடு சரியாகச்  சாப்பிட்டு இருக்கிறார். மிச்சம் எதையும் வைக்கவில்லை. வைத்த காய்களை ஒதுக்கிவிடவில்லை. ஆனால், சாப்பிட்டபிறகு மிக அலட்சியத்தோடு இருந்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது.  இலைகளை தாருமாறாகக் கழியவிட்டிருக்கிறார். அவர் சாப்பிட்ட எச்சில்கள் பென்ச்சுகளில் ஒட்டிக்கிடக்கிறது. இதன் மூலமாக அங்குப்பணிபுரியும் தொழிளாளர்களுக்கு கூடுதலான வேலை பளுவை ஏற்படுத்திவிட்டார். முக்கியமாக இவரும் தண்ணீரை குடிக்கவில்லை.   ஆக நாங்கள் நிர்மானித்த மகுடம்’ என்கிற இடத்தை அடைந்தாலும், கூடவே ஏக்கம்’ என்கிற பலன்களையும் ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும். சரியா அய்யா,” என்றுக்கேட்டவர். “தங்கள் மறுமையின் தங்கும் அடையாள அட்டையை  பெற்றுக் கொள்கிறீர்களா? என்று கேட்டார். இரண்டாம் நபர் கையை கவுண்டருக்குள் நீட்டினார்.  பெற்றுக்கொணடு, முதல் நபர் உட்கார்ந்த இடத்திற்கு வந்தார்.

மூன்றாம் நபர் கவுண்டர் முன் தன்குறிப்பை வாசித்தார்.

கவுண்டரின் உள்ளிருந்தவர், வெளியில் இருந்த நபரை சற்று எச்சிரிக்கையுடன் நோக்கினார்.  “அய்யா தங்களுக்கு ம.ந.ம-வில் இருபத்தி ஐந்து  பெற்று ‘ஆசுவாசம்’ என்ற தகுதியையும்,  ம.தீ.ம - வில் எழுபத்தி ஐந்து பெற்று ‘கொல்லொப்பிடம்’ என்ற இடத்தையும் பெற்றுள்ளீர்கள். தங்களுக்கான வில்லையை தந்துதவட்டுமா? இல்லை ஏதேனும் கேட்க விரும்புகிறீர்களா?”

“நானும் பார்க்கிறேன் நீங்கள் ஒருதலைப்பட் சமாகத்தான் செய்கிறீர்கள். எனக்கு முன்னிருந்த நபர்களுக்கு மிக நீண்டதொரு விளக்கத்தை கொடுத்தீர்கள். ஆனால் எனக்குமட்டும்  வில்லையைக் கொடுத்து கொல்லிடத்திற்கு அனுப்பமுற்படுகிறீர்கள். உங்களிடம் எனக்கான நீதி மழுங்கடிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ஆகையால், நான் நேரடியாக கடவுளைப் பார்க்கப்போகிறேன். எனக்கு அவரை சந்திப்பதற்கான வில்லையைத்தாருங்கள்.”

“அய்யா ஏன் இப்படிப் பதட்டப் படுகிறீர்கள். நீங்கள் நினைப்பதுபோல் கொல் லிடமல்ல. ஒப்பான இடம் அவ்வளவுதான். முன்பு வந்தவர்களுக்கு மட்டுமல்ல, தேவை இருக்குமானால் உங்களுக்கும் அதை விட கூடுதலான விளக்கம் தரப்படும். உண்மையைச் சொல்லப்போனால் நீங்கள் ஏற்கனவே கடவுளிடம் நேரடியான சந்திப்பைச் செய்தவர்கள். சட்டதிட்டங்கள் உங்களுக்குத் தெரியும்.  இருந்தாலும் நீங்கள் இத்தகுதியைப் பெற்றதற்கான காரணத்தைச் சற்று ஆராய்ந்த பிறகு அதில் ஏற்புடையதாக இல்லை என்றால் நீங்கள் கடவுளைச் சந்திக்கலாம்.  அய்யா தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது நீங்கள் எப்போதும் உங்கள் சுயசிந்தையை நம்புவதேயில்லை. பிறரைப்பார்த்தே உங்களுக்கானப் பாதையை வகுத்துக் கொள்ளவேண்டும் என்று முடிவுசெய்கிறீர்கள்.பிறர் செய்வதில் நிறைய குளறுபடிகள் இருக்கிறது என்று தெரிந்தும்  அவன் செய்கிறான் அதனால் நாமும் செய்வோம் அவனுக்கு வரப்போவதுதானே நமக்கு வரப்போகிறது என்று நினைக்கிறீர்கள். இங்கே ஒன்றை சரியாக கவணிக்கவேண்டும். ஒருவேளை அவன் செய்தது அவனுக்கே தவறு என்று தெரியாத பட்சத்தில் செய்திருக்கலாம். அதனால், அவனுக்கு அதற்கான தகுதியின் இடங்கள் சிறப்பாகக்கூடக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதை கண்காணித்து நீங்களும் செய்ததால் நீங்கள்தான் முதன்மைக் குற்றவாளியாகிறீர்கள். இப்படிச் செய்து செய்துதான் இன்று இந்தத் தகுதியை அடைந்துள்ளீர்கள்.  அதையேதான் உங்களுக்கான இலையும் காட்டிக்கொடுக்கிறது. அந்த இலையில் சாப்பிட்டவன் ஒழுங்காக சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடிரென்று பந்தியாளனை அழைத்து கூடுதலாக சாப்பாடு வாங்கி வாங்கி தன் சேமிப்புக்காகிதத்தில் நிறப்பிக்கொண்டான். இத்தனைக்கும் அவனுக்கு குடும்பம்கூட இல்லை. எதற்காக அப்படிச் செய்ய வேண்டும். சாப்பாடு ஒருவேளைக்குப் பிறகு அதன் தன்மை கெடப் போகின்றது.  கெடப்போகிற போருளையே இப்படி சேர்க்கிறா னென்றால் மற்றவை நினைத்தால் உங்களுக்கே பயமாக இல்லையா?  மேலும், அவன் சாப்பிட்ட இலையை  மிகவும் அலங்கோலமாக திறந்தே விட்டுச்சென் றிருக்கிறான். ஆகையால்தான் உங்களுக்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது.”

முன்றாம் நபர் மறுமையில் தங்குவதற்கான அடையாள வில்லையை வாங்கிக்கொண்டு ஏற்கனவே இருந்த நபர்களைநோக்கிச் சென்றான். அப்போது கடவுள் வரிசையை பார்வையிட வந்தார்.  வில்லையை வாங்கிக்கொண்டு நின்ற மூவரில் கடைசியாக வந்தவன் கடவுளிடம் கேட்டான் “அய்யா,  யாரோ செய்த செயலுக்காக, எங்கள் மீது தீர்பெழுதப்படுகிறதே”

“அடையாள வில்லையை வாங்கிக்கொண்டீர்களா? நீங்கள், அவர்களுக்கு மாற்றானவர்கள் இல்லை. வில்லை பத்திரம்” என்றார்.


ஜே.டேனியல்









No comments: