Thursday, October 13, 2011

நாவல்

போக்கு 3


மாலா தன் கிராமத்தின் மண் சாலையும், மெயின்ரோடும் ஒன்று கூடும் இடத்தை நெருங்கினாள். எதிரில் கௌரி புளியமரத்தின் இளைப்பாறும் கல்லிளிருந்து எழுந்து வந்தாள். கௌரிதான் முதலில் மாலாவைப்பார்த்தாள். ஆனால் மாலாதான் கௌரியை நல்லா இருக்கிறியா கௌரி என்று விசாரித்தாள். மாலாவின் கணவன் சற்று முன் நடந்துகொண்டிருந்தான். கௌரியின் வளர்ந்த பிள்ளை கிராமம் நோக்கி ஓடினான். இன்னொரு குழந்தை இடுப்பில் வைத்திருந்தாள். கெளரி மாலாவை விட நல்ல கலர்தான். ஏதோ வேண்டுதலுக்காக மொட்டை போட்டிருப்பார்கள் போல குழந்தைகளுடன் கௌரிக்கும் ஒரே அளவில் மயிர் வளர்ந்திருந்தது. கௌரி காதுகளில், இரண்டு மூன்று இடம் சின்னச் சின்ன பொன்னகை போட்டிருந்தாள். குண்டு ஜிமிக்கி தொங்கிக்கொண்டிருந்தது.

வரும் வழியில் பாலுக்காக குழந்தை அழுதிருக்கும்போல புளிய மரத்தின் நிழலில் பால் கொடுத்து எழுந்திருக்கிறாள். மார்புக்குக்கீழ் ஜாக்கட்டின் இரு கொக்கிகள் மாட்டாமல் இருந்தது. வெள்ளை ராசிப்பணங்காவின் அடி பாகம்போல தெரிந்தது. அதன் இடையில் தாலி வாழசீப்பு, மாங்கா, நாணக்குழ, கால்சவரன் சேர்ந்து சரமாக தொங்கியது. தோற்றத்தில் மங்களகரமாய் இருந்த கௌரி மாலாவைப் பார்த்ததும் முகத்தில் சோகம் படர்ந்தது. கௌரியின் இடுப்பில் இருந்த குழந்தையை மாலா வாங்கினாள். கௌரி கொக்கி போட்டுக்கொண்டாள். மாலா குழந்தையின் வாயோடு தன் வாயை வைத்து முத்தமிட்டாள். குழந்தையின் வாய் பால் வீச்சம் அடித்தது.


மாலா நீண்ட நேரம் யோசித்தவள்போல், கௌரி நல்லாயிருக்கிறியா என்றாள். அதில் ஆயிரம் கேள்விகள் இருக்கிறது என்பது இருவருக்கும் தெரியும். பதிலுக்கு சிக்குனபிறகு இருந்துதானே ஆகணும் என்றாள் கௌரி. அதிலும் ஆயிரம் பதில் இருப்பதை இருவரும் அறிந்தே இருந்தார்கள். கடந்த காலங்களின் ஏமாற்றங்கள் இருவரின் இயல்பான பேச்சை வெளிப்படுத்த தடையாக இருந்தது. அவைகளை கிளறினால் ரணங்கள் இல்லாமலே வலியை உணர்த்தும் என்று கௌரி நினைத்திருப்பாள், பேச்சை மாற்றினாள். ‘எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம் அதான் பார்த்துவிடடு போகலாம்ணு வந்தேன்’ என்றவள், ‘மாலா உன்னப்பத்தியும் கேள்விப்பட்டேன். வேணாம் மாலா, எரிந்து கரியானது காத்துலதான் பறக்கும், தட்டுல விழுந்ததுதான் வயித்த நிறப்பும் பாத்து நடந்துக்க வரட்டுமா, உங்க ஊட்டுக்காறர் ரொம்பநேரம் நின்னுங்கிறாரு நீ போய்வா’ என்று கௌரி குழந்தையை வாங்கினாள்.

குழந்தையை கொடுத்தபோது அதன் கால்கள் மென்மையான ஸ்பரிசத்தை மாலாவுக்கு உணர்த்தியது. மாலாவுக்கு அந்த ஸ்பரிசம் ஞானராஜ் மகன் விக்டரைத்தான் நினைவுபடுத்தியது. அப்போதெல்லாம் சேரியில் முப்பது நாற்பது வீடுகள்தான் இருக்கும் . அதை வீடுகள் என்று சொல்ல முடியாது. கொட்டகைகள் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு குடிசையில் நுழைய வேண்டு மென்றால் உடலை மடித்துத்தான் உள்ளே நுழைய முடியும். ஏறக்குறைய எல்லா வீடுகளுமே அப்படித்தான் இருந்தது. இதில் ஒன்று இரண்டு தூலக்கட்டு வீடாய் இருக்கும். அப்படி தூலக்கட்டு வீடாய் இருப்பவர்கள்தான் சேரியில் பணக்காரரர் லிஸ்டில் இருப்பார் அதிலும் உபரி சொத்துகளாக எருமையோ அல்லது ஒரு ஜோடு கடா மாடுகளோ வைத்திருப்பவர்தான் பணக்காரராக கருதப்படுவர்.

அந்த லிஸ்டில்தான் கருப்பன், ஏகாளி அண்ணன் தம்பிகள். அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்திருந்தது. அண்ணனுக்கு மூன்று பிள்ளைகள். தம்பிக்கு பிள்ளைகள் ஏதும் இல்லை. எல்லோரும் நல்ல உழைப்பாளிகள். கருப்பன் தலையாரியாக இருந்தாலும் கறவை எருமை மாடுகள் இரண்டு, கடா மாடு இரண்டு ஜோடு இருந்தது. பெண்கள் கறவை மாட்டுக்கு புற்கள் அறுத்துவருவது, மாடுகளை மேய்ப்பது என்று பார்த்துக்கொள்வார்கள். தம்பி கூலி ஏர் என்று ஓயாத உழைப்பில் கவனம் செலுத்தினார்கள். சேரியில் முதல் முதலாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கியது கருப்பன்தான். இன்னும் நான்கு வருஷம் கழித்து மூன்று ஏக்கர் அதே இடத்தின் பக்கத்திலேயே வாங்கினார்கள். அந்நிலத்திற்கு கீழ் திசையில் புறம்போக்கு நிலம் மூன்று ஏக்கர் மடக்கினார்கள். அவர்கள் நிலங்கள் ஏரியின் பாசன வசதிக்கு தொலைவாக இருந்தாலும், இரவு பகல் காத்துக்கிடந்து ஏரித்தண்ணீரைக் கொண்டுசென்று போகம் தவறாமல் நல்ல விளைச்சலைக் கண்டார்கள். சிக்கனமும் உழைப்பும் குடும்பத்தில் நிறைய மாற்றங்களைக் கொணடுவந்தது.

எருமைமாடுகள் விற்கப்பட்டன, பசுமாடுகள் கறவைமாடுகளாக மாறின. கடா மாடுகள் காணவில்லை. செவளைக்காளை கூர்மையான கொம்புடன் கெட்டியான மூங்கிலைப்போல் இருந்தது. அதன் கழுத்தில் இரண்டு மூன்று மணிகள் சேர்ந்தார்போல கட்டியிருநதார்கள். அதன் வயிற்றிற்கும் முன்ங்கால் களுக்கும் இடையில் இரு பட்டையில் கறுப்புக் கயிறு கட்டியிருந்தார்கள். அவைகளை உடுத்திக்கொண்டு எருதுகள் வெளியில் போகும்போதும் வரும்போதும் குதிரைபூட்டிய தேர்போல இருக்கும். பொன்னியும், ஐ ஆர் ஐம்பதும் வண்டி வண்டியாய் வீட்டிற்கு வரும். அடங்குமளவுக்கு அதிகமாக ஒன்றிரண்டு மூட்டைகள் வண்டியில் அடுக்கினாலும், எந்த மேடு, உலையையும் அனாயாசமாக கடந்துவிடும். மாலையானால் இருமாடுகளுக்கும் தாம்பாளத்தில் குங்குமத் தண்ணீரோடு கற்பூரத்தை ஏற்றி திஸ்டி கழித்து, பொட்டிட்டபிறகுதான் கொட்டடியில் கட்டுவார்கள். கருப்பன் குடும்பத்தில் கௌரி மூன்றாவதாக பிறந்தாலும், அவள் வளர வளரதான் வீட்டில் செல்வம் கொழிக்கிறதென்று ஊர்முழுக்கபேச்சாய் இருந்தது. கௌரி இளமையின் பட்டத்தை தொட்டுவிட்டாள். முழுக்க முழுக்க நவீனத்தோடு பராமரிக்கும் பூந்தோட்டத்தைப் போல் இருந்தாள்.

கருப்பன் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் ஞானராஜ் இருந்தார். அவருக்கு மனைவி, நான்குபிள்ளைகள் இரண்டாவதுதான் விக்டர். ஞானராஜீம் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக மனைவியுடன் அதகிமாக உழைக்கிறார். ஆனால் முன்னேற்றம் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. ஞானராஜின் அப்பா முன்பு தலையாரியாக இருந்தார். வெள்ளைக்காரார்களின் வழி நடத்துதலால் கிருத்தவத்தை ஏற்றுக்கொண்டவர். சேரியிலேயே முதல் முதலாக தன் பிள்ளைகளை அரக்கோணம், பிறகு செங்கல்பட்டு என்று போடிங்கில் படிக்கவைத்திருக்கிறார். ஞானராஜ் உள்பட பிள்ளைகள் ஏழாவது, எட்டாவது என்றே முடித்துக்கொண்டார்கள். ஞானராஜின் மூத்த அண்ணனுக்கு தலையாரி வேலை கிட்டியிருக்கிறது. இன்னொரு அண்ணனுக்கு கூடுதலான நிலங்கள் ஒதுக்கப்பட்டது.அப்பாவழியாக ஞானராஜிக்கு ஒரு ஓட்டுவீடு கிடைத்திருக்கிறது. அந்த ஓட்டு வீட்டில் மயங்கி நிலங்களின் பாகத்தை அண்ணனுக்கே கூடுதலாக விட்டுக்கொடுத்திருக்கிறார்.

ஞானராஜ் முயல், கோழி, புறா, வளர்ப்பார். சேரிக்கு அத்திப் பூத்தார்போல ஒயர்மேன் வந்து தெரு கம்பத்தில் ஒரு குண்டு பல்புபோட்டு விடுவார். அந்த வெளிச்சம் நடு காட்டில் எதோ மரத்தில் மின் மினி பூச்சி ஒட்டியிருப்பது போல இருக்கும். ஒயர் வேலையை முடித்து அவர்பாட்டுக்கு சைக்கிளை தள்ளிக்கொண்டு போவார். ஞானராஜ் அவசர அவசரமாக ஓடிவந்து சார் இந்தாங்க இத வீட்டுக்கு எடுத்தும்போங்க என்று ஒரு முயலையோ அல்லது ஜோடு புறாவையோ, நாட்டுக்கோழியோ, வாத்துமுட்டையோ, எதையாவது ஒன்றை கொடுத்தனுப்புவார். கிராமத்துக்கு ஏதாவது தேவை இருப்பின் தாசில்தார், ஆர் ஐ, கலைக்டர் ஆபிஸ் என்று மனு கொடுத்து திரிவார். அந்த சில அதிகாரிகளின் வீடுகளைத் தெரிந்துகொண்டு நாட்டுக்கோழி, முட்டையோடு பயணிப்பார். விஷேஷ நாட்களில், நாட்டு உயிரிணங்களை சந்தைக்கு எடுத்துச்செல்வதுபோல் எடுத்துச்சென்று பழக்கப்பட்ட நபர்களுக்கெல்லாம் கொடுப்பார்.

ஞானராஜ் தன் அப்பா காலத்தில் கிருத்தவராய் இருந்தாலும் பிஷப் சுந்தர்கிளர்கிடம் நாணஸ்த்தானம் எடுத்துக்கொண்டார். அவரோடு எடுத்துக்கொண்டவரெல்லாம் சீக்கிரம் மீண்டும் இந்து வழிபாடுகளையே செய்தனர். நண்பர்கள் அப்படி சென்றது தனக்கு செய்த துரோகம் போல் நினைத்தார். நீங்கள் போனாலும் நான் ஒருவனாக நான் ஏற்ற மதத்தை தூக்கி நிறுத்துவேன் என்று வைராக்கியமாக தேடிவந்த அரசாங்க வேலையையும் வேண்டாம் என கிராமத்திலேயே இருந்துவிட்டார். சேரியின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு முடிந்தளவு செயலாற்றினார். அப்படி போகும்போது தன்பணத்தை போட்டு செய்வார். கிராமத்தில் வசூல் செய்வதில்லை. அதனால்தான் ஞானராஜிக்கு சேரியில் மனநிறைவான மரியாதை இருந்தது. சில குடிகாரர்கள் அவரைப்பார்த்தால் பயந்து ஒதுங்கிவிடுவார்கள்.


அப்பாவின் இந்த மரியாதையை பார்க்கும் விக்டர் நாம கருபபன் மாமாவின் குடும்ப அந்தஸ்த்தைவிட ஒண்ணும் குறைவுபட்டவர்கள் இல்லை என்று கணக்கிட்டான். ஏற்கனவே கௌரியை மனதளவில் விரும்பினாலும், இந்த அந்தஸ்த்து ஞாணம் பிறந்தபிறகே தைரியமாக தன்னுடன் படித்த நண்பனே, கௌரியின் அண்ணனனாய் இருக்கும் ரமேஷிடம் தன்விருப்பத்தை சொன்னான். ஏற்கனவே கௌரியும், விக்டரும் ஜாடைமாடையாய் பேசிக்கொள்வது ரமேஷீக்கும் தெரியும். ரமேஷீக்கு தெரிந்தது போல் வேறுயாருக்காவது தெரிந்தால் பிரச்சனையாகப்போகிறதென்று கௌரியே தன் அண்ணனிடம் சொல்லி அழுதாள். விக்டர் தன் நண்பனென்பதால், ரமேஷ் ஞானராஜிடம் பேசி தன் அப்பாவிடம் வந்து கௌரியை கேட்க்க யோசனை சொன்னான்.

கருப்பன் குடும்பத்தில் கருத்துக்கணிப்பு நடந்தேரியது. கௌரியின் அம்மா அந்தப்பையன் ரொம்ப நல்லவன்தான். சிக்கனமானவன். மனுஷங்கமேலே நல்ல மரியாதை. மிகவும் புத்திசாலியா பொழைக்கிறவன்தான் என்று சொல்லிக்கொண்டே வந்தாள். உடனே கருப்பன் அவன் நல்ல பையன்தான், ஆனா அவனை நம்பி அவன் குடும்பமே இருக்குது. அந்த குடும்பத்த கவனிக்கத்தான் அவன் வருமாணம் சரியாயிருக்கும் நம்ம பொண்ணும் அங்கப்போனா கஷ்ட்டம்தான் அனுபவிக்கணும் அதனால சரிப்படாது என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு கௌரி வெளியில் அதிகமாக வந்ததேயில்லை.

புத்திசாலி எப்போதும் அசிங்கப்படுவதேயில்லை. விக்டர் தன் ஆசையை மிக இயல்பாக கைவிட்டுக்கொண்டே வந்தான். கௌரி தன் தகப்பனின் விருப்பப்படியே அமைந்த வாழ்விடம் போனாள். ஒருவேளை அன்று அவள் அப்பாவிடம் தன் விருப்பத்தை சொல்லியிருந்தால் இந்தக்குழந்தைகள் நம்ம விக்டர் மாமாவின் குழந்தையாக இருந்திருக்காதா? எந்த பக்கமும் வாழ்க்கை இருக்கிறதா? மாலா சிந்தனை செய்துகொண்டே சென்றாள்.


ஜேடி

No comments: