காப்பி அடிக்கத்தெரியாத தெய்வத்திருமகள்
காஞ்சிபுரம் 'தரை'யரங்கம் அமைப்பைத் தொடங்கி ஒண்ணரை ஆண்டுகள் கடக்கும் தருவாயில் தொடர்ந்து வாரம் தோரும் ஞாயிறு அன்று ஒரு உலகத்திரைப் படம் திரையிடுகிறோம் இதுவரை ஏறக்குறைய எண்பது படங்கள் திரையிடப்பட்டது. ஒண்ணரை வருடத்தில் எண்பது ஞாயிறா என்று அதிர்ந்துவிட வேண்டாம். அரசு விஷேச விடுமுறை நாட்களில் (வீடுகளின் வேலைகளை கவனிக்காது திட்டுவாங்கிக்கொண்டுதான்.) ஒன்றிரண்டு படங்கள் சேர்த்துதான் இந்தக் கணக்கு.
அப்படி பார்த்தப் படங்களில் ஏறக்குறைய ஐம்பது விழுக்காடு உலக சினிமாவிலிருந்து அப்படியே தமிழில் கையாளப்படுகிறது. அதில் ஒரு சிலப்படங்கள் காட்சிக்கு காட்சி எந்த மாற்றமும் இல்லாமல் (பாடல்கள், சண்டைகள் தவிர்த்து) அப்படியே பயன்படுத்துகிறார்கள். சிலப்படங்கள் கலை நேர்த்தியான காட்சிகளை மட்டும் உருவிக்கொள்கிறார்கள்.சிலப் படங்கள் அழகிய மூலக்கதையை உருவி தனக்குத்தெரிந்த சந்திரமுகியின் விகாரமான வேசத்தைப் போட்டுவிடுகிறார்கள்.
I am sam
முதல் காட்சியிலேயே இனிமையான பின்னனியுடன் தொடங்குகிறது. ஒரு சிறிய டப்பாவில் பல பிராண்ட் மாத்திரைக்ள் ஒழுங்கற்றுக் கிடக்கிறது. அதை மிகவும் சரியாக அடுக்குகின்ற, டேபிலில் சிந்திக்கிடக்கும் தண்ணீரைத் துடைக்கின்ற கைகள் குலோசப்பில் தெரிகிறது, இந்த ஒரு காட்சிதான் படத்தின் மொத்தக் கதைக்கும் முடிவுக்கும் ஆணிவேர். தன் முதளாலியோ, நிர்வாகமோ கட்டளையிடாமல் இப்படிப்பட்ட ஒரு செயலை தெளிவான மனநிலையில் இருக்கிறவன் மனமுவந்து செய்வது கடினம். அப்படிப் பட்டசெயலை செய்கிற ஒருவன் எப்படி இச்சமூக வாழ்வியலுக்கு பொருத்தமற்றவனாக இருக்கமுடியும் என்ற கேள்வியை முதளிலேயே எழுப்பி, படத்தின் ஊடாக தொடர்ந்துவந்து, எதிர்வாதமே எழாதவண்ணம் படத்தை நிறைவுசெய்கின்றார்.
மனநலம் குன்றியவன் உடல் மொழி, செயல், ஆய்வுப்பூர்வமாக எப்படியிருக்கவேண்டும் என்பதை, இயக்குநர் மிகவும் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறார்கள். சாமாக வருகின்ற நாயகன் நேர்த்தியான ஒரு மாற்றுதிறனாளியாக வாழ்ந்திருக்கின்றார். தன் வாலிப பருவத்தை கடக்கின்ற போது எந்த மனிதனுக்கும் ஏதோ ஒரு நிலையில் அவனவனுக்கான துணை ஒன்று அமைந்துவிடுகிறது. அதன்பிறகு இருவருக்குமான ஏற்றமும், இறக்கமும், இருப்பதும், இல்லாமல்போவதும் நடந்தேறிவிடுகிறது. சாமுக்கு அப்படி கிடைத்த மனைவி முதல் குழந்தையை மருத்துவமனையில் பிரசவிக்கிறாள். ஒரு திறமையான மாற்றுத்திறனாளி, தான் அச்சமயத்தில் செய்யும் வேலையில் மட்டுமே முழுகவனம் செலுத்துவான். அப்படிததான் சாம் தன் வேலையில் முழ்கி இருந்தான். அவர் நண்பர்கள் நினைவுப் படுத்துகிறார்கள். உடனே கடையின் மேலாடையைக்கூட கழட்டாமல் ஓடுகிறான். நர்ஸ் என்ன சாம் இவ்வளவு பொறுபில்லாமல் தாமதமாக வருகிறாய் என்று திட்டுவாள். உடனே சாம் ‘am sarry' என்று வருந்துவார். சாம் மனைவியை அதிர்வுடன் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார். அவள் வேதனையோடு கத்தி குழந்தையை பிரசவிக்கும்போது, அவள் சத்தத்தோடு கூடவே சேர்ந்தார்போல சாமும் கத்துவார். பிறர் துக்கப்படும்போது அழுவதும், சிரிக்கும் போது சிரிப்பதும், ஒரு குழந்தையின் தன்மையாகும் அதை சரியாக செய்திருக்கிறாகள். ரத்தப் பிசு பிசுப்பு மறையாதக் குழந்தையை சாம் பார்கும்போது அவர் வாய் தழுதழுத்துக் குழையும் காட்சிகள் அற்புதம்.
மருத்துவமனைவில் இருந்து சாமும் மனைவியும் வீட்டுக்கு கிளம்புவார்கள். குழந்தையை சாம் வைத்திருப்பார். கூடவே வரும் மனைவி பஸ் வருவதைப்பார்த்து சற்று முன் சென்று நிறுத்தச்சொல்வாள். சாம் சற்று வேகமாகச்சென்று பஸை நிறுத்துவார். சாம் மனைவி அவரை விட்டு ஓடி மனித மந்தையில் மறைந்துவிடுவாள். அவள் திடிரென்று தன்னைவிட்டு ஓடுகிறதை சாம் பார்பார். பஸ் கிளம்பிவிடும். சில நிமிடத்திற்குள் என்ன நடந்ததென்று விளங்காமல் நிராதரவாக நின்று ‘ரெபெக்காள் பஸ் இஸ் கோயிங்‘ என்று கத்தும்போது சாமின் அப்பாவித்தனமான நடிப்பு அபாரம். இப்படியான மனிதர்களுடன் தான் பூமீ நிற்காமல் சுத்துகிறதென்று, கேமராவை சுற்று வட்டத்தில் அலையவிடுவார்கள்.
குழந்தையை வீட்டுக்கு கொண்டுவந்து விடுவார். இரவில் குழந்தை அழுதுகொண்டேயிருக்கும். சத்தத்தைக்கேட்டு பக்கத்துவீட்டு அன்னாள் உதவிக்கு வருவாள். குழந்தை பசியால் அழுகிறது. சாம் குழந்தை பசியால் அழுகிறது இதுகூட தெரியாமல் குழந்தையை எப்படி வளர்ப்பாய், குழந்தைக்கு இரண்டு மணிக்கு ஒருதரம் பால் கொடுக்கவேண்டும் என்று அன்னாள் சோல்லும்போது, குழந்தையின் வேதனையை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்வார். அன்னாவிடமும், குழந்தையைத்தொட்டும் ஐயம் சாரி, என்று வருந்தி மண்ணிப்பு கோறுவார்.(சொல்லுவதை செய்யுமாம் கிளிப்பிள்ளை. இந்த சாதாரணத்தை தெய்வத்திருமகள் குழுவினர் யோசிக்கவேயில்லை.) குழந்தை தூங்குகிறதைப் பார்த்ததும் சாம் பேச்சை மெதுவாகபேசுகிறார். பார்க்கவரும் நண்பர்களை குழந்தை தூங்குகிறது மெதுவாக பேசுங்கள் என்று பணிக்கின்றார்.
தன் மகள் லூசி இப்போது வளர்ந்துவிடுவாள். அவள் கேட்கும் கேள்விகளுக்கு தனக்குத்தெரிந்த பதிலை சாம் சொல்லுவதும். ஒரு கட்டத்தில், லூசி அப்பா நீ மற்ற அப்பாக்களைப் போல் இல்லை. நீங்கள் வித்தியாசமாய் இருக்றீர்கள் என்று சொல்லும்போது, ‘சாம் சற்று குற்ற உணர்வில் i am sarry. என்று சொல்லுவார். உடனே குழந்தை பரவாயில்லைப்பா என்று சமாளித்து சாமின் கையைத்தொட்டு ஆறுதல்படுத்தும் இப்படியான கலந்துரையாடும் காட்சிகள் படத்தின் உச்சங்கள். பள்ளியில் சேர்த்து சமூகத்துடன் கலக்கும்போதுதான் பிரச்சனை தொடங்குகிறது. தன் வயதொத்த பிள்ளைகளாலும், சமூகத்தாலும் சாம் மனநலமில்லாதவர் என்று அறியப் படுகிறார். சாமால் குழந்தையை சரியாக வளர்க்கமுடியாது என்று சாமிடமிருந்து குழந்தையை போலீஸ் பிரிக்கிறது, அதற்கு மேல் சாம் யதார்த்மாகவே நீதிமன்றம் தேடிப்போகின்ற வாய்ப்பு அமைகிறது.
(தெய்வத்திருமகளின் தந்தை தெருவில் போகிற வருகிறவர்களை எல்லாம் ‘அநேகமாக பிச்சை எடுக்கிறவர்கள் நிலமை போல்‘ பார்பது எரிச்சளைத்தான் கிளப்புகிறது. ‘ஒரு வேளை ஐயம் சாம் பார்க்காதவற்களுக்கு இரக்கம் ஏற்படும்‘. தான் மட்டுமல்லாது தன் சந்ததியும் சுகபோகவாழ்வை அனுபவிக்க சமச்சீரை எதிர்க்கின்றவர், பத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளை நடத்துகிற பண முதளியின் மகள், இப்படியான தொண்ணூறு விழுக்காடு மாற்றுத் திறனாளியை, காதலித்தாள், ஓடி அவள் இஷ்டமாக வாழ்க்கையை அமைத்துக்கொண்டாள். பெரிய மனது பண்ணி கிருஷ்ணாவோடு வாழ தன்மகளை விட்டுவிட்டார். சரி அப்படியே முட்டாள் தனமாக நம்பிவிடலாம். ஆனால் பிளாஷ்பேக்கில் நல்லவர் போல் நடித்து ஒரு அப்பாவியை அழைத்துச்சென்று திக்குத்தெரியாத இடத்தில் இறக்கிவிட்டு போகிற மனநிலை கொண்டவர். ஆரம்பத்தில் வெறுமனே வாழவிட்டார் எண்பதெல்லாம் நம்புவதற்கில்லை. அதன் பின்னனியாக சொல்லும் விஷயமே கதையில் வளிய ஒட்டவைத்தது இருப்பதை காட்டிக்கொடுக்கிறது.)
வக்கிலாக வருகின்ற ரீட்டாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். முதலில் வெறுப்பை காட்டுவதுபோல் இருந்தாலும் பிறகு இலவசமாக ஆஜராக ஒப்புக்கொள்கிறார். அதன் பிறகு கோர்ட்டின் விவாதங்கள். ஒரு மாற்றுத்திறனாளியின், (சமூகத்தால் கண்டுகொள்ளப்படாத) பக்கங்களை பிரித்துப்போடுகிறது. ரீட்டா ‘சாம் கடந்த ஏழு வருடங்களாக குழந்தையை உண்மையிலேயே மிகவும் பொறுப்பாக கவனித்துவந்தார். குறைபாடு இருக்கலாம், ஆனால் கவுன்சிலிங்மூலம் சரிசெய்துவிடலாம்‘ என்று வாதிடுவார். ஆனால் எதிர்வாதி ‘இவரே ஒரு குழந்தைத்தனமானவர் இவரால் நிச்சயம் குந்தையை பாதுகாக்கவோ அதற்கு நல்ல எதிர்காலத்தை உறுவாக்கித்தரவோ முடியாது‘ என்று வாதிடுவார். ஆரம்த்தில் சாம் சற்று தெளிவான பதில் சொல்வார்.பிறகு எதிரி வக்கில் அவரை வேண்டுமென்றே குழப்பும் விதமாக கேள்விகளை வேகப்படுத்துவார். சாம் அந்த நேரத்தில் உறிய பதிலை எடுக்க முடியாமல் அழுது தினறும் காட்சியைப்பார்க்கும்போது நம்மையறியாமல் வேதனை பீரிட்டு எழுகிறது. ஒரு கட்டத்தில் தன்னை முழுமையானவராக நிறுபிக்க முடியாமல் போகிறது. இறுதி தீர்ப்பு வரும்வரை காவல் துறை கண்கானிப்பில் குழந்தைக்கு கல்வியும், பாதுகாப்பும் தரவேண்டும் என்று கோர்ட் உத்தரவிடுகிறது.
குழந்தையும், சாமும் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டிருப்பார்கள். போலீஸ் இருவரையும் வளுக்கட்டாயமாகப் பிரிப்பார்கள். வக்கில் ரீட்டா ஒன்றும் செய்யமுடியாதபடி பார்த்துஅழுவாள். போலீஸ் சாமிடமிருந்து, லூசியை கூட்டிச்செல்வார்கள். அடுத்தக்காட்சி ரீட்டாவின் வீட்டில் அவர் குழந்தை தனியாக படுத்திருப்பதைக் காட்டுவார். ரீட்டா மிகுந்த குற்ற உணர்வோடு மெதுவாக குழந்தையின் பக்கத்தில் படுத்து தலையில் முத்தமிடுவாள். இக்காட்சிதான் இச்சமூகத்திற்கான சாட்டையடி. ‘எப்போதும் பாசப்பிணைப்பில் உடனுக்குடன் அதன் தேவையை நிறைவேற்றி சந்தோசமாய் வைத்திருக்கும் சாமை மனநோயாளி என்று அவரிடமிருந்து குழந்தையை பிரிக்கிறது, ரீட்டாவால் அவர் குழந்தையை ஒருநாளும் அதன் சாதாரண உணர்வை அறிந்து முழுமையாக அன்புசெலுத்த முடியவில்லை. வேலை வேலை என்று ஓடுவதால் அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. ஆனால் அவள் எல்லா விதத்திலும் பர்பெக்ட் எனும்படியாக காட்சி அமைந்திருக்கும்.
கோர்ட் உத்தரவுப்படி குழந்தை பாதுகாப்பில் இருந்தாலும். சாம் அடிக்கடி லூசியை தேடிவருவதும், லூசி இரவில் அப்பாவை தேடிவருவதும் பாசப்பிணைப்பின் போராட்டங்கள். இவர்கள் அன்பில் உருகிப்போன பாதுகாவளரே போலீஸ் கண்கானிப்பையும் மீறி இரவில் தூங்கும்போது. குழந்தை தூக்கிச்சென்று சாமிடம் கொடுப்பாள். அக்காட்சி மனதை கனக்கச்செய்கிறது. இதையே கோர்ட்டின் இறுதி தீர்ப்பாக சூசகமாக வைத்துவிடுகறார்கள். அதனால்தான் கோர்ட் இறுதி தீர்ப்பின் காட்சியை வைக்கவில்லை. பசுமை நிறைந்த வாலிபால் மைதானத்தில் குழந்தைகளுக்கு சாம் பயிற்சி தருவார். பார்வையாளர்களுக்கு மத்தியில் லூசி ஒரு வெற்றிகோல் போடுகிறாள். சந்தோஷத்தில் குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு வாழ்க்கையின் வட்ட சுற்றளவில் பாதியை வெற்றியுடன் கடந்து விட்டார்கள் என்பதை காட்டும்விதமாக கேமராவை மிகஉயரத்தில் வைத்து வாலிபால் கிரவுண்டின் வட்டத்தை காட்டுவார்கள். சாம் குழந்தைகளுடன் வட்டத்தில் பாதியில் கடந்து ஓடிவரும்போது படம் நிறைவுறுகிறது.
I am sam ற்கும் தெய்வத்திருமகளுக்கும் சம்மந்தமே இல்லை. அது தமிழ் படமாய் இருப்பதனால்,
முரண்
மாற்றுத்திறனாளி ஒரு திறமையில் குறைவுள்ளவராய் இருந்தால், மற்றொரு திறமை கூடுதளாக இருக்கும். இதில் விக்ரமின் கதாப்பாத்திரத்தை நிர்மாணிப்பதில் தெளிவில்லாமல் இறங்கியிருக்கிறார்கள். விக்ரமனின் பாத்திரம் தொத்தித் தொத்தி பேசுகிறவரா? அப்படி இருந்தால் அப்பாத்திரம் சற்று சுறு சுறுப்பாய் இருந்திருக்கும். மூளைவளற்சி குறைவுள்ளவரா? அதாவது குழந்தைத் தன்மையா? சாதாரணமாக ஒரு குழந்தையின் இயல்பு இரு குழந்தைகள் விளையாடுகிறது. அதில் ஒன்றின் கையிலிருந்து ஏதாவது ஒரு பொருளை பிடுங்கினால் இன்னொன்று சடாரென்று அதன் கையை பிடித்து கடித்துவிடுகிறது இல்லை அடித்துவிடுகிறது. ஆக அதற்கு இழப்பு வரும்போது கோபம் பீரிட்டு வருகிறது. அந்த குழந்தையின் தன்மைக்காகவாவது விக்ரமின் பாத்திரம் அமைத்திருக்கலாம். மிகவும் பயந்த சுபாவம் என்று பாத்திரம் அமைக்கப்பட்டதா? அப்படியானால் சம்மந்தமில்லாத இடத்தில் குருவிக்குஞ்சை பூனை கடிக்க முற்படும்போது பூனையை மிரட்டி குருவிக்குஞ்சை காப்பாற்றி உயரமான மரத்தில் ஏறி அதன்கூட்டில் வைப்பதற்கு பயந்த சுபாவப்பாத்திரத்தால் எப்படிமுடிந்தது.
வாகனங்களே செல்லாத நேரத்தில் ரெட் சிக்னல் விழுந்தபோதும் கிரீன் சிக்னலுக்காக நிற்கிற அளவுக்கு போக்குவரத்து விதிகள் தெரிகிறபோது, திருடுகிறவனே தனக்கான பணத்தை எடுத்துக்கொண்டு மீதியை வைப்பதுகூட தெரியவில்லையா? போலீஸ் ஸ்டேஷனின் போலீஸ்காரர், போய் வக்கீலை பார் என்று சொல்லும்போது எதுவுமே தெரியாமல் தவிப்பது மிகவும் முரணானது.
சமூகத்தில் எல்லா விதத்திலும் புறந்தள்ளுகிற மாற்றுத்திறனாளி பொருளாதாரத்திலும் குறைவுள்ளவர்.ஆக சற்று உடல் எடை குறைவான ஆளை தேர்வு செய்திருக்கவேண்டும். ஒருவேளை பணக்கார வீட்டு மாற்றுத் திறனாளியாய் இருந்திருநதால் விக்கிரம் மாதிரி திடகாத்திறமாய் இருப்பவர் பொருத்தமாய் இருப்பார். எந்தக்கோர்ட் வாதப் பிரிதிவாதத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அதிலும் ஒரு ஏழையைக் குற்றவாளிக்கூண்டில் பேசவோ, சைகைசெய்யவோ அனுமதிக்கிறது. அதன் உணர்வுகளில் கிறங்கி ஏழைக்கு சாதகமாய் எங்கே தீர்ப்பு சொல்லப்படுகிறது.
ஒற்றுமை
“மூலக்கதை. I am sam மில் நாயகனுக்கு நான்கு நண்பர்கள். உருவ ஒற்றுமையுடன். அதில் ஒருவன் தடித்த கண்ணாடி போட்டிருப்பான். ஒருவன் நெடுமரமாய் இருப்பான், தெய்வத்திருமகளிலும் அப்படியே. குழந்தைக்கு ஷு வாங்கும்போது பணம்தருவது. பலூன் பறக்கவிட்டுச்செல்வது (பலூனில் இரண்டிற்கும் எண்ணிக்கையில் வித்தியாசம் உண்டு). குழந்தையுடன் கேள்வி பதில் உரையாடல். முக்கியமாக இரண்டிலும் பெண்கள் குழந்தைகள். பிரவசத்திலே ஆரம்பித்து ஒரே வயதில் கதைமுடிகிறது. கோர்ட் காட்சிகள் கிளைமாக்ஸ். விக்ரமுக்கு உதவுகிறது பெண் லாயர்.“ என்று எதிலும் வித்தியாசம் இல்லை.
வேற்றுமை
விக்ரம் ஜோடி இறந்துவிடுகிறாள். அதில் ஓடிவிடுகிறாள். ஒட்டவைத்த காதல் பின்னனி. தமிழ் படமாய் இருப்பதால் மாற்றுத்திறனாளியை ஒன்றுக்கும் உதவாத ஜடமாய் நிர்மாணித்து, குழந்தை காலம் முழுக்க பழிசொல்லுக்கு ஆளாகும்படி இரவல் வாழ்வு வாழ சுலபமாய் பாதுகாவளரிடம் ஒப்படைத்து விடுவது.
விக்ரம் நடிப்பு சிறப்பானது. சற்று அதிகமாகவே உழைத்திருக்கிறார். இப்படத்திற்காக நிறைய மாற்றுத்திறனாளியை சந்தித்தேன் என்கிறார். I am sam நாயகன் கைத்தட்டல், இரண்டு முழங்கைகள் மேலே தூக்கி நடப்பது போன்ற நுனுக்கங்களையும் பார்க்காமல் இருந்திருக்கமாட்டார். இருந்தாலும் ஐயம் சாம் நாயகனின் ஒரு சிரிப்பை ஈடுசெய்யவில்லை. அனுஷ்கா. நாசர் அவர்கள் பங்கை திருப்தியாக நிறைவேற்றி யிருக்கிறார்கள். இசை சில இடங்களில் கேட்கும் படியாக இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக சேர்ந்து செய்த சூது அறியாமல் குழந்தை இயல்பான நடிப்பை வெளிக்காட்டியதை பாராட்டலாம். அதற்கு தெரியுமா இது காப்பி அடிக்கப்பட்டவை, அடிக்கப்படாதவை என்று மிகவும் யதார்த்தமாக தன் நடிப்பை வெளிப்டுத்தியிருக்கிறது.
ஜேடி
No comments:
Post a Comment