Thursday, July 14, 2011

கவிதை

மனிதன் தொடங்குகிறான்

வாழ்ந்ததை திரும்பிப்பார் என்று,
தொடங்கிய இடத்திற்கே நகர்கிறான்
அங்கிருந்து
ஆயுதம் கண்டடையும் விதமாக
ஒருமிருகத்தை கொல்ல பழகுவதுபோல்
மனிதன் தலையை வீதியில்
கல்லால் நசுக்கி தொடங்குகிறான்.

தாகம்
கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என்று
வாசல் கதவண்டையில் வருகிறான்
சற்று மனமிரங்கி
உள் தாழ்ப்பாள் திறக்கப்பட்டது
காதுகளும், கழுத்தும் அறுக்கப்பட்டு
துடிக்கிறாள் வயது முதிர்ந்த பாட்டி
எந்த பதட்டமும் இல்லாமல்
தண்ணீரைக் குடித்து
வாழவேண்டும் என வெளியேறுகிறான்.

தீயை பரிசோதிக்க
கூரைவீட்டின் தாழ்வாரத்தில்
தீப் பந்தத்தை வைக்கிறான்
கொழுந்துவிட்டு எரிகிறதா தூரம் நின்று பார்க்கிறான்
உள்ளே குழந்தையோடு அலறல் கேட்கிறது
இவன் உரத்த சிரிப்பில்
அது வெளியில் கேட்கவே இல்லை.

உடன் பிறந்தவன் தானே என்று
வீட்டு பத்திரம்
அவனே வைத்திருக்க விட்டுவிட்டான்
சமீபத்தில்
அப்பா ஏற்கனவே எனக்கு
எழுதிவைத்துவிட்டார் என
பூர்வீக வீட்டிற்கு
தற்போது அவன் பேரில் இருக்கும்
பத்திரத்தை நீட்டி
இவனை வெளியே துரத்துகிறான்.

மனிதன் தொடங்குகிறான்
மீண்டும் முதலிருந்து.

 ஜேடி


No comments: