சமச்சீர்
திறந்துகிடக்கும்
மூத்திரக்கதவை மூடிவைக்க
வேலை செய்யாத ஜிப்பை
நடுவாக நிறுத்தியுள்ளான்
எட்டாம் வகுப்பு மாணவன்
ஜெபத்திற்கு
மண்டியிடுவது போல
வீட்டுக் கதவின்
சாவி தூவாரத்தின் வழியாய்
அறையின் உள் நிகழ்வுகளை
ஆராய்வதுபோல்
அம்மாணவனை நோக்கினால்
ஜட்டியில்லாமல்
அம்மணம் தெளிவாய் தெரியும்
வகுப்பறையில்
மூன்றுபேர் அமரும் பெஞ்சில்
தினந்தோறும் அமர்கிறவர்கள்தான்
மதிய இடைவேளையில்
ஒருவன் உயர்ரக பதார்த்தத்துடன்
எப்போதும் சாப்பிடும் நண்பருடன் சென்றுவிட்டான்
இரண்டாமவன் ரசத்தின் முகத்துடன்
சாம்பார் பெயருடன்
மிதக்கும் முட்டையோடு
வேண்டா வெறுப்பாக சாதம் வாங்கினான்
மூன்றாமவன் நிர்பந்தப் படுத்தி
தினித்ததைப்போல்
மதிய உணவு இடைவேளையை வெறுக்கிறான்
வெறுமனே நேரத்தை கழிக்க
வகுப்பறையை விட்டு வெளியேறுகிறான்
கடை வீதியில்
பசியைத்தூண்டும் பொருட்களில்
பார்வையில் பசியாரி
டீக்கடை முதளாலியின்
வசை மொழியை வாங்கிக்கொண்டு
டம்ளர் தண்ணீரோடு
மீண்டும் வகுப்பறை பெஞ்சை நிறப்பினார்கள்.
இதன் உச்சகட்டமாக
பதினோராம் வகுப்பு மாணவன்
சீருடையின் வண்ணம் மாறாவண்ணம்
புட்டத்தில் ஒட்டுத்துணி தைத்துள்ளான்
காலைத்தொழுகையில்
எல்லோரும் சீருடையில் இருப்பது
மிகவும் அழகுதான் என்றார்கள்
பள்ளிக்குள்ளும் பள்ளிக்கு வெளியிலும்
சமமாய் மதிக்கின்ற சீரான மனம்
மனிதனுக்கு போதிக்காத வரை
சமச்சீரும் சீருடைத்தன்மைதான்
இருந்தாலும்
அழகுக்காக வேண்டூம்தான்
சமச்சீர்.
ஜேடி
No comments:
Post a Comment