Friday, January 24, 2014

சிறுகதை,




‘அந்தத் தண்ணீ‘ 

அவள் சாத்தியப்படுத்திவிடலாம் என்கிற தொனியில்தான் சற்று அலட்சியமாகத் தொடங்கினாள். ஏனென்றால் இதற்கு முன்பு அது நடந்திருகிறது. கூட்டம் அதிகம் இல்லை. இரண்டாவது, யூ.கே.ஜீ படிக்கும் வயதொத்த பெண்பிள்ளைகள் அம்மா, தாத்தா என்று குடும்பமாக கடைசிப் பெட்டியில் ஏறினார்கள். ரயில் கடகடப்பு அதிகமாக இருந்தது. 

ஆறுபேர் உட்காரும் இருக்கையில் தாராளமாக உட்கார்ந்தார்கள். நெருக்கிக்கொள்கிற அவசியம் ஏற்படவில்லை. வரிசையாக அமர்ந்திருந்தவர்களின் இடுப்பளவு அதிகபட்சம் நாற்பதைத் தாண்டாது. வெண்தாடியுன் இரு கண் புருவ மயிர்களின் இடையில் நேர்கோட்டில் தொடுவதுபோன்று, நீளத்தில் சிறிதாக மெல்லிய சந்தனக்கோடு இட்டிருந்தார். சற்று மேலே கனத்தும் மேல்நோக்கிப் போகும்போது மெலிதாக குங்குமம் குழைத்து நடு நெற்றியில் இட்டிருந்தார்.  இந்த பிம்பம் உங்களுக்கு பிடிபடவில்லை என்றால் மெலிந்த மெழுகு எரிவதை கற்பனை செய்துபாருங்கள். நெற்றி முடிவின் மையமாக நடுவிரல் அளவிற்கு சந்தனப்பொட்டுச்  சரியான வட்டத்தில் வைத்திருந்தார். தாத்தாவிற்கு காவி உடை அணிவித்தால் சாமியார்தான். ஆனால், வெள்ளை வேட்டியும், சட்டையும் அணிந்திருந்தார். வாழ்வாதாரத்திற்கான அத்தனை தாஸ்தாவேஜ்ஜூகளும் தன் பாக்கட்டுக்குள்ளே திணித்திருந்தார். உப்பலின் முடிவில் தெரிவது ஏதோ சாமியாகத்தான் இருக்கவேண்டும். கறுப்பும், மஞ்சளும், சிகப்பும் கலந்து குறுக்கும் நெடுக்குமான ஆயுதங்களுடன் தெரிந்தது. அவர் காலுக்குக்கீழ் வெள்ளை நிறத்தில் ஒரு கட்டைப்பிடிக்கொண்ட பை இருந்தது. ஏதோ ட்ரெஸ்ட்டின் பெயர் இருபக்கங்களிலும் பொறிக்கப்பட்டிருந்தது.  

ரயிலில் கடைசிப்பெட்டிக்கு, இரண்டாவது பெட்டியின் கடைசி இருக்கைகளில் உட்கார்ந்தார்கள். அம்மாவை ஒட்டி இரண்டரை அடி அகலத்துக்கு வாசல். அந்த வாசல் அடுத்தப்பெட்டிக்கு போகும் வழியாக இருந்தது. அம்மா தெற்கு பார்த்து அமர்ந்திருந்தாள். பக்கவாட்டில் சன்னல். அம்மா வலப் பக்கமாகவும், பெரியவள், சிறியவள் நடுவிலும் இருந்தார்கள். வழக்கம்போலவே சின்னவள், பெரியவளை அடைக்கியாள்கிற செயலை செய்துகொண்டிருந்தாள். உச்ச கட்டமாக பெரியவளை கீழேத்தள்ளி அம்மா மீது தலையையும், தாத்தாவின்மீது கால்களையும் வைத்து தூங்க ஒத்திகைப்பார்த்தாள். பெரியவள் உட்கார ஆசைப்பட்டபோது, அம்மா சிறியவள் தலையை சற்று ஒதுக்கி பெரியவளுக்கு இடம் கொடுத்தாள். திடீரென்று சின்னவள் எழுந்து உட்கார்ந்தாள். ஏதோ உதித்தவள்போல அம்மா மடியில் ஏறி பின்னாக ஓடும் மரம், செடிகளின் விந்தையைப் பார்த்தாள். அம்மாவின் கைப்பிடியை விலக்கிக்கொண்டு சன்னல் அருகில் சென்று கம்பியைப் பிடித்தாள். அம்மாவின் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தாலும் நொடிக்கொருமுறை குழந்தையைப் பார்க்கிறாள். தற்போது மூத்தவளுக்கு பிரச்சனை இல்லை. அம்மாவை முட்டி படுக்க முற்படுகிறாள்.  முடிந்தவரை தாத்தாவின் மீது கால்போடாமல் தன்னை ஒடுக்கிக்கொண்டு படுக்கிறாள். சின்னவள் சன்னல் அருகில் ஓடியதைப்பார்த்த தாத்தா “ஏய், பாப்பா. அந்தப்பக்கம் போகாதே“ என்று குரல் கொடுத்தார். பிறகு அவள் அம்மா பக்கத்தில் இருப்பதால், மீண்டும் எச்சரிக்கை விடவில்லை.

சற்று நேரம் பார்த்துவிட்டு மீண்டும் மூத்தவளிடம் முட்டி மோதிக்கொள்ள வந்துவிட்டாள். இருவருமே சற்று நேரம்கூட சரியான கோணத்தில் நிலையாக உட்காரவில்லை. “நான் படுக்கப்போகிறேன். எனக்கு எடம் வேணும்“ என்றப்போட்டி இருந்தது. இந்த களேபரத்தில் பெரியவள் செருப்பையும், சிறியவள் ஷுவையும் கழட்டிப்போட்டார்கள். தாத்தா ஷுவை பையில் வைத்துக்கொண்டார். குனிந்து பையில் வைத்தபோது இருக்கையின் கீழ் நிறையக் குப்பைகள் சுழன்று கொண்டிருந்தது. அது விடுதலையாக, ரயில் தன் சவாரியை முடித்தால்தான் முடியும் என்று எண்ணினார். ரயில் அதிவேகத்தில் போய்க்கொண்டிருந்தது. ரயில் பயணத்தில், எதிர் இருக்கைகளில் இருப்பவர்களின் முகங்களை அதிகமான நிர்பந்தத்துடன் பார்க்கவேண்டியுள்ளது. இருந்தாலும் பயணத்தின் படியை விட்டகன்றதும் பார்த்து வந்தவர்களின் முகங்கள் எத்தனைபேருக்கு நினைவிருக்கும் தெரியவில்லை.

இரு பெண் குழந்தைகளும் தற்போதைய அம்மா வயதை எட்டும்போது நிச்சயம் மாற்றம் இருக்காது. சிறியவளுக்கு கீழ் உதடு சற்று தடித்து எப்போது கீழே விழுந்துவிடுமோ என்று இருந்தது. கடைசிவரை விழவே விழாது என்பதை அம்மாவைப் பார்த்தும் தெரிந்தது. அப்படி இருப்பது இருவருக்கும் அழகாகவே இருந்தது. சின்னவள் மூக்கு வட்டவடிவத்தில் சிறியதாக, அழகாக இருந்தது. மேற்தாடையின் பல் வரிசையின் கடவாய் பல் ஒன்று பழுப்பு நிறத்தில் இருப்பது இன்னும் அழகுதான். அம்மா நாற்பதைத் தாண்டிவிட்டதால் சிவந்த முகத்தில் அங்கங்கே கறுப்பு மச்சங்கள்போல் தோற்றம் இருந்தது. அம்மாவிற்கு தலைமயிர் கிராப்செய்து சிறியவர்களுக்குரிய ஆடையை அணிவித்தால், அப்படியே சின்னவள்தான். 

ரயிலில் சிறு வியாபாரி அவித்த வேர்கடலைக்கூவிக்கொண்டு வந்தாள். சின்னவள் “அம்மா, வாங்கிக்குடுங்க“ என்று சினுங்கினாள். இரண்டாவது முறை கேட்பதற்குள் கடலை வைத்திருந்தவள் இறக்கி காகிதக்குழலைத் தயார் செய்தாள். அம்மாவும் “குடும்மா“ என்றாள். சின்னவள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள அதிகம் கஷ்டப்படவேண்டி இருக்கவில்லை. கைக்கு கடலை வந்ததும் யாருக்கும் கொடுக்கப்போவதில்லை என்கிற தொனியில் அமர்ந்து ஒவ்வொன்றாய் கொறித்தாள். பக்கத்தில் இருந்த மூவரும் அவளையேப் பார்த்தார்கள். ஒரு வேளை யாருக்கும் தரமாட்டாளோ என்று இருந்தது. அம்மாவும், தாத்தாவும் அக்காவுக்கு கொஞ்சம் கொடும்மா என்றபோது இப்படியும், அப்படியும் தலையை ஆட்டினாள். கொடுக்கமாட்டாள் என்பது தெரிந்திருந்தால், இன்னொன்றாவது  வாங்கியிருக்கலாம். எப்படியும் சற்றுநேரத்தில் கொடுப்பாள் என்று அம்மா நினைத்தாள். 

கடலை விற்றவள் இரண்டு குழந்தை இருப்பதைப்பார்த்து ஒன்றே ஒன்று கொடுத்து பணத்தை வாங்கி அவசரமாய் நகர்ந்துவிட்டாள். அவளுக்கு விபாரத்தந்திரம் தெரியாமல் இருக்கவேண்டும் அல்லது எந்தநேரத்தில் ரயில் பரிசோதகர்கள் வந்து மொத்தமாக தன் முதலீட்டை அள்ளுவானோ என்ற பதட்டம் இருக்கவேண்டும். தாத்தாவிற்கு ஏதாவது தந்திரம் செய்து அவளிடத்தில் இருந்து கொஞ்சமாவது வாங்கிவிடவேண்டும் என்ற முணைப்பில் இருந்தார்.
 
சின்னவள் ஒவ்வொன்றாக சாப்பிட்டாள். எதிரில் இருந்தவர்களில் ஒருவர்  அக்காவிற்கு கொடும்மா என்பதுபோல் குரல் வந்தது. அதை அவள் காது கேட்கவில்லை. சற்று நேரம் கழித்து அவளாகவே ஒரு பருப்பு எடுத்துக்கொடுத்தாள். சிறிது நேரத்தில் தண்ணீர் கேட்டாள். கையிலிருந்த கடலையை தாத்தா வாங்கினார். அம்மா பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து லைட் மஞ்சள் கலர் கப்பில் ஊற்றினாள். கப்பிற்கு மூடியிருந்தது. மூடியின் ஓரத்தில் கூம்புபோல் திறந்தவழி இருந்தது. குழந்தைக்குக் குடிப்பதற்கு மிக சுலபமாக இருந்தது. பாட்டில்கூட மஞ்சளும், லேசான பச்சையும் சேர்ந்த கலரில் நீள நீளமாக வலைவானக் கோடுகளின் டிசைன் போட்டிருந்தது. 

குழந்தை கூம்பில் வாய்வைத்து உறிஞ்சினாள். நல்ல வசதியாகத்தான் இருந்தது. கழுத்து நரம்பு நிமிர்ந்து, குனியும் வேலையை மேல்மூடியின் கூம்பு மிச்சப்படுத்தியிருந்தது. அவள் விட்டு விட்டுக் குடித்தாள். வயிறு சற்று உப்பலாகத்தெரிந்தது. இந்நேரத்தில் தாத்தா சந்தர்ப்பத்தை நிறை வேற்றிக்கொண்டார். கடலையை கொஞ்சம் வாயில் கொட்டிக் கொண்டார். மூத்தவளுக்கு கொஞ்சம் தந்தார்.  சின்னவள் கப்பில் இருந்தத் தண்ணீர் முழுமையும் குடித்தாள். இரண்டு மூன்றுமுறை வெறுமனே சாய்த்துச் சாய்த்து ஊறுஞ்சினாள். இல்லை என்றானபிறகு கடலையைக் கேட்கவில்லை. அது நினைவிலும் இல்லை. தற்போது ரயிலின் வெளியில் ஓடும் பசுமைகளைப் பார்த்து லையித்து சன்னல் கம்பிகளிடம் தஞ்சம் அடைந்தாள். டீச்சர் வெள்ளை ஏடுகளில் காண்பித்த பெரிய மரங்களைத்தவிர அவள் என்னத்தை தேடப்போகிறாள். உண்மையில் கடலை பொட்டலத்தில் அதிகம் சாப்பிடவில்லை. ஆனால், இப்போது அதைக்கேட்கவும் இல்லை. பக்கத்தில் பக்கத்தில் இருந்த அடுத்தடுத்த நிலையங்கள் வரை தாத்தாதான் மென்று கொண்டிருந்தார்.

சின்னவள் ஏதோ அறிதலின் ஆவலோடு அம்மாவின் மடியில் அமர்ந்துகொண்டு, “அம்மா, அது இன்னா மரம்மா,  இது இன்னா மரம்மா“ கேட்டுக்கொண்டிருந்தாள். தங்கை கேட்டபோதுதான், மூத்தவள் ஓடும் மரங்களின் காட்சியைப்பார்த்தாள். திடீரென்று பார்த்ததால் எந்த மரத்தின் அடையாளத்தையும் சரியாக கணிக்க முடியவில்லை. சற்று நேரம் பார்த்தபோதுதான் பெரிய மரங்கள் ஓடும் பிம்பம் ஓரளவு ஊகிக்கமுடிந்தது. மூத்தவள் பேசினாள் “அது காடுங்க. பெரியப்பெரிய மரங்கள் இருந்தா அது காடுங்க“ என்றாள். ஆனால், சின்னவள், மூத்தவளின் பதிலை கவனிக்க மனமற்றவளாய் இருந்தாள். அம்மா சொன்னால்தான் நம்ப முடியும் என்பதுபோல அம்மாவின் பதிலை எதிர்நோக்கி இருந்தாள். ரயிலின் மேற்குவெளிக் காட்சியை மட்டுமே பார்த்தாள், கிழக்கில் பரந்திருந்த தண்ணீர் இருப்பைப் பார்க்கவேயில்லை. அம்மா ஒவ்வொரு மரமாக சொல்லிக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்திற்குமேல் சலிப்பதாக இருக்கவே சின்னவளின் கவனத்தை திசைத்திருப்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அம்மாவிற்கும், மகளுக்குமான உரையாடல் அறிந்துகொள்ளுதல், புகட்டுதல் நிலையை எட்டியிருந்ததால் அம்மாவிற்கு மாற்று யோசனையில் மனம் சீக்கிரமாகச் செல்லவில்லை. ஒருவேளை எதிர் இருக்கையில் இருப்பவர் யாரேனும் அவர்களின் செயல்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தால் ‘குழந்தைகளின் மனம் ஒவ்வாத ஒரு விஷயத்திலிருந்து சீக்கிரம் வெளியேறி விடுகிறார்கள். ஒன்றி விட்டால் வெளிவருவது கடினம்‘ என்று சட்டென பதில் சொல்லிவிடுவார்கள்.

அம்மா இப்போது கிழக்குப்பக்கம் பெரிய ஏரியின் பரந்த தண்ணீர் நிலையைக் காட்டினாள். சின்னவள் சட்டென கிழக்குப்பக்கம் திரும்பினாள். மேற்குப் பக்கத்தைவிட, கிழக்குப்பக்கம் ஆச்சரியம் தந்தது. இருந்தாலும் ஏற்கனவே மேற்குப்பக்கம் கொடுத்துவந்த சந்தோஷததை மறந்துவிடவில்லை. இரண்டுபக்கமும் மாறி மாறி பார்த்துக்கொண்டு வந்தாள். தண்ணீர் நிலை முடிந்தபிறகுதான் ஒருதிசைப் பார்வையில் ஒன்றினாள். மூத்தவள் நடுவாக தூங்கிவிட்டாள்.

தற்போது முன் பெட்டியிலிருந்து தண்ணீர் விற்கிறவன். “வாட்டர்.. வாட்டர்..  வாட்டர் பாக்கட். தண்ணீர்.. தண்ணீர்.. தண்ணீர் பாக்கட்“ என்று ஓசைபட கூவிவந்தான். தண்ணீர் விற்பவனுக்கு  கடந்த காலத்தில் கோர்ட் டபாரியாகவாவது போகவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கலாம். அவன் கூவும் ஓசைக் கேட்டதும், நிச்சயம் யாரானாலும் அப்படித்தான் முடிவுசெய்வார்கள். அம்மா இருந்த பெட்டிக்குள் நுழைந்தபோதே சின்னவள் மிக சாதுவாக “அம்மா, அந்தத் தண்ணீ வேணும்“ என்றாள். அம்மா அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. சின்னவள் தற்போது வெளிக்காட்சியைப் பார்த்தாள். ரயில் நின்றபோது பெரிய குசுபோன்ற சத்தத்தைத் தந்தது. அந்த சத்தத்திற்கு உருவம் தரவேண்டும் என்றால் வளமான, மூத்த யானை சரியாக பொருந்தும். சத்தத்தை ஊகித்தவர்கள் நிச்சயம் சிரித்தார்கள். தண்ணீர் விற்றவனின் இன்னும் சத்தமான குரலுடன் கிட்டி நெருங்கினான். சின்னவள் கேட்டதை ஏற்கனவேப் பார்த்துவிட்டதால் ஒரு பாக்கட்டை எடுத்து அம்மாவும், மகளும் பார்க்கின்ற நேரம்பார்த்து நீட்ட முற்பட்டான்.

அம்மா, கௌரவம் நிறைந்த பார்வை வெளிப்படுத்தி சின்னவளின் கையைப் பிடித்துக்கொண்டாள். தண்ணீர் விற்றவன் நீட்டியக்கையை தன் கவருக்குள் வைத்துவிட்டு மீண்டும் குரல்கொடுத்துக் கொண்டே போய்விட்டான். சற்று நேரம் பக்கக்காட்சிகளில் மறந்துவிட்ட சின்னவள் மீண்டும் நாபகம் வந்தவளாக “அம்மா, அந்தத் தண்ணீ வேணும்“. என்றாள். அம்மா பதில் சொல்லவில்லை. மாறாக சின்னவளின் உடலைப்பிடித்து தன் காலுக்கு நடுவாக அணைத்துக் கொண்டாள். 

சற்று நேரங்கழித்து தண்ணீர் விற்றவனின் குரல் இல்லவே இல்லை. “அந்தத் தண்ணீ வேணும். அந்தத் தண்ணீ வாங்கிக்குடுங்கம்மா“ என்று மூன்று, நான்கு முறைக்குமேலாக திரும்பத்திரும்ப கேட்டாள். அம்மா, பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்தாள். “அந்தத் தண்ணீ வேணாம்மா. நம்மலாண்ட தண்ணீ இருக்கிது இல்ல. அதக்குடுக்கிறேன்“ 

“நம்மத் தண்ணீ வேணாம். அது நல்லாயில்ல. எனக்கு அந்தத் தண்ணீதான் வேணும் வாங்கிக்குடுங்கம்மா“ 

அம்மா, சரியாகிவிடுவாள் என்று அமைதியாக இருந்தாள். தாத்தாவும் இதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. எதிர் இருக்கையில் ஒருவர் கைபேசியில் இருந்தார் ஒருவர் மினி கணினியை பார்த்துக் கொண்டிருந்தார். சிலர் இருவேறு பக்கங்களின் காட்சிகளில் ஒன்றி இருந்தார்கள்.

சின்னள் சற்று சத்தமாக “அந்தத் தண்ணீ வேணுஊம். அந்தத் தண்ணீ வேணுஊம்“ என்றபோது அம்மா என்ற உறவை எடுத்துவிட்டு வெறுமனே அந்தத் தண்ணீ வேணும் என்று சத்தத்தைக்கூட்டி கத்தினாள். இப்போது வெளிக்காட்சிகளில் பார்வை செல்லவில்லை. முழுவதுமாக அந்தத் தண்ணீ கேட்பதிலேயே கவனம் இருந்தது. கோரிக்கையில் இடைவெளியில்லை.

இடையில் தாத்தா நுழைந்தார். “இதோ பார். இந்தப்பக்கம் பார்“ என்றார். அவருடையப் பேச்சு அவள் காதில் விழவில்லை, என்பதைவிட ஏற்றுக் கொள்ளவில்லை எனச்சொல்லலாம். இவ்வளவு நேரம் கத்தியபோதும் அவள் கண்களில் தண்ணீர் வரவில்லை. இன்னும் அம்மாவின் மீது நம்பிக்கை இருந்தது. ஒரே குரலில் கடலை பருப்பு கையில் வந்தது நினைவில் இருந்தது. இதையும் எப்படியும் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆனால், இயல்புக்குமாறாக இவ்வளவு நேரம் கத்தியும் பலன் இல்லையே. தன்னுடைய வேண்டுதல் நிராகரிக்கப்படுகிறது என்கிற எண்ணம் நுழைந்தபோதுதான் அழுகை வர ஆரம்பித்துவிட்டது. இப்போது சின்னவள் கண்களில் மாலை மாலையாக கண்ணீர் வழிந்தது.

எதிர் இருக்கையில் இருப்பவர்களின் கவனம் சிதறி சின்னவள் அழும் திசையைப் பார்த்தார்கள். தற்போதைய சூழலில் தங்களால் பிறருக்கு தொல்லை ஏற்படுவதை அறிந்த அம்மா  இவ்வளவு அடம்பிடிப்பாள் என்று தெரிந்திருந்தால் அப்போதே ஒன்றிற்கு, இரண்டாகத் தண்ணீர் பாக்கட் வாங்கியிருப்பாள். விற்றவன் வரப்போகும் சூழ்நிலையை அறிந் திருப்பானோ. நாம் வேண்டாம் என்றுகூட சொல்லவில்லை. ஒரு பார்வைப் பார்த்ததும் போய்விட்டானே. சீக்கிரம் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டால் போதும் என்று இருந்தது. அதற்கு இன்னும் நேரம் இருப்பதை அறிந்து சின்னவள் பிடிவாதத்தை நிறுத்துவதில் முணைப்புக்காட்டினாள்.

சின்னவள் இரக்கமற்று உச்ச நிலைகொண்டு ஓயாமல் கத்தினாள். எதிர் இருக்கையில் இருந்தவர்களுக்கு அம்மாவிடம் கொஞ்சி பேசியபோது ஆழகாய்த் தெரிந்திருந்தாள். சத்தம் அதிகமாக அதிகமாக, அவள் கீழ் உதடு தொங்கி, கீழ்தாடை பல் வரிசை மேல்தாடை பல் வரிசையைவிட முன்னுக்கு வந்து நின்று அழகற்றவளாகக் காட்டியது.

அம்மா செய்வதறியாமல் சும்மா இருந்தாள். சின்னவள் தன் ஆடையில் வரிசையாக இருந்த மூன்று அழகிய பட்டன்களை பிடித்து அறுத்து அம்மாவின் மடியில் போட்டாள். அம்மா, இனி சும்மா இருக்கமுடியாது என்று  சின்னவளை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு ரகசியமாக மிரட்டத் தொடங்கினாள். எதிர் இருக்கையில் இருப்பவர்க்கு தன் முகம் தெரிந்துவிடக்கூடாது. குழந்தையையும் ராட்சசி என்று நினைத்து விடக்கூடாது என்பது அம்மாவின் எண்ணம். மடியில் இருந்த குழந்தையின் தலையை இருகைகளாலும்  பிடித்துக்கொண்டு தன் வாயை அவள் காதில் வைத்து “இரு.. இரு.. நாளைக்கு உங்க டீச்சராண்டையே போட்டுக் குடுக்கிறேன். இவள் வீட்டில் அடங்கவில்லை டீச்சர். அடம்பிடிக்கிறா. சொல்பேச்சை கேட்க மாட்டேங்கிறானு. போட்டுகுடுக்கிறேன்.“ என்றாள். 

சின்னவள் சற்று உற்றுக் கேட்டாள். அந்த கவனிப்பில் நாளைக்கு பள்ளிக்கு போகணுமே என்கிற பயம் இருந்தது. நொடிப்பொழுது அமைதியானாள். அப்போது சற்று அழுகைக் குறைந்ததுபோல இருந்தது. சடாரென்று மீண்டும் கதறல் தொடர்ந்தது. 

அம்மா, சின்னவள் செய்த குற்றங்களை எல்லாம் தற்போது சொல்ல ஆரம்பித்தாள். “சரி நீ ஏன் சட்டையில் இருந்த பட்டனை எல்லாம் பிச்சிபோட்ட. தப்புதானே. அப்படி செய்யலாமா? என்றாள். 

“அது எனக்கு புடிக்கலஅ. அந்தத் தண்ணீ வேணுஊம்“ 

சற்று குரல் ஓய்வதுபோல் இருந்தால் அம்மா சின்னவளின் தலையை விட்டு விடுவதும். சத்தம் அதிகமானால் மீண்டும் தலையைப்பிடித்து தன் வாயில் வைத்து “வீட்டுக்குபோனதும் அத்தையைப் பாக்கலாம். இன்னா.“ என்று ஒரு நேரம் மிரட்டுவதும். இன்னொரு நேரம் ஆசை வார்த்தைகளை சொல்லி திசைத்திருப்ப முயற்சிப்பதும் தொடர்ந்துகொண்டிருந்தது. அம்மாவின் அடுத்தடுத்த பேச்சில் கவனமாக இருந்து தன் தேவைக்காக முரண்டுபிடித்தாலும். சில நேரம் “அத்தையைப் பார்க்கலாம், மாமாவின் காரில் போகலாம் எனும்போது“ சற்று ஏமார்ந்து தலையை ஆட்டிவிடுகிறாள்.

சின்னவள் இந்தப்பிடிவாதத்தை திட்டமிட்டேத் தொடங்கவில்லை. சற்று குரல்கொடுத்தால் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே, அழுவதுபோன்ற தொனியைக் கையாண்டாள். ஆனால் சந்தர்ப்பம் ஒரு போராட்டத்திற்கு ஒத்த பிடிவாதத்தைக் கட்டமைத்துவிட்டது. ஒருவேளை ‘அந்தத் தண்ணீ வேணும்‘ என்று கேட்ட முதல் குரலிலேயே வேண்டுகோளை மதித்து அம்மா சரியான பதிலை அனுசரனையாக சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே சின்னவள் பிடிவாதம் திசைதிரும்பி ஒன்றுமில்லாமல் போயிருக்கும். இவ்வளவு தீவிரம் அடைந்திருக்காது.

ஒரு குரலில் கிடைத்துவிடுகிற பொருள்கள், இவ்வளவு கதறலுக் குப்பின்பும் அம்மா சொம்மா விடுகிறாளே என்பதுதான் தாங்கமுடியவில்லை. பொருள் கிடைக்கவில்லை என்பதை விட, அம்மாவின் சும்மாயிருத்தல்தான் மேலும் ஆழவைக்கிறது. இன்னும், முடித்துக்கொள்கிற மனநிலை ஏற்படவில்லை. தணிக்கிற வழி அம்மாவிற்கு பிடிபடவில்லை. தாத்தா, அம்மாவாலேயே ஆற்றுபடுத்த முடியவில்லை என்றால் நாம் என்ன செய்யமுடியும் என்று இருக்கிறார்.

அம்மா, “சரி. இன்னொரு முறை வரட்டும் நான் வாங்கித்தாரேன்.“ 

ரயில் நின்று கிளம்பியது. உழைத்து ஓடாகிற மக்கள் விடுமுறை நாட்களில் பயணத்தை ரத்துசெய்கிறார்கள்போல. பெட்டிக்கு வரவும் இல்லை. இருந்தவர்கள் இறங்கவும் இல்லை. நேரம் ஆக.. ஆக.. அம்மாவின் மடியில் அடங்கியிருந்த சின்னவளின் கால்கள் இரண்டும் சற்று தளர்ந்தது. கால் விரல்களில் பூசிய சிகப்பு ஜிகினா நிற சாந்தின் ஓரங்கள் உறிந்து இருந்தது. தீட்டி வாரம் ஆகியிருக்கலாம். லேசாக கறுநிறம் தரித்த முத்துக்கள் அடர்ந்த கால்கொலுசின் தடதடப்புச்சத்தம் தற்போது அதிரவில்லை.

நடுவில் தூங்கிக்கொண்டிருந்த மூத்தவள் புரண்டு படுத்தாள். இடுப்பின் அரை மிடி விலகி உள்ளாடையாய் இருந்த சிமெண்ட் நிற சட்டித் தெரிந்தது. அம்மா உடனே ஆடையை இழுத்து சரிசெய்தாள்.

சின்னவளுக்கு நம்பிக்கையற்றுப்போனது. நம் கோரிக்கை நிறை வேறுவதற்கான எந்தச் சூழலும் நடப்பதுபோல் தெரியவில்லை. வந்தா வாங்கித்தாரேன் என்றும், அதைத்தவிர்த்து கூடுதலாக பல்வேறு ஆருதல் வார்த்தைகளையும் அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள், அவைகளில் நம்பிக்கை இல்லை. இனி கிடைத்தாலும் தனக்கு பிடிக்காததாக, அவள் விருப்பம் மாறியிருந்தது. அதனால்தான் படிப்படியாக தீவிரம் குறைந்து, தற்போது அம்மா சொல்லுகிற திசைமாற்று வார்த்தையில் கவனம் குவிகிறது. கவனம் குவிதலால் சற்று நேரம் வேறு திசையைப் பார்க்கிறாள்.  சற்று நேரம் கழித்து மீண்டும் நாபகம் வந்தவளாக “அந்தத் தண்ணீ வேணும்“ என்றாள். ஆனால், அதில் தீவிரம் இல்லை.

அம்மா ஜாக்கிறதையாக இருந்தாள். கோரிக்கை தொடங்குகிறபோதே அதற்கான நம்பிக்கைத்தரும் வார்த்தைகளை காதில் ஓதினாள். ரயிலின் ஆங்கார சத்தம் தடதடத்தது. சின்னவளின் குரல் எடுபடவில்லை. எதிர் இருக்கையில் இருந்தவர்கள் அவரவர் இயல்புக்கு திரும்பினார்கள். 

‘சின்னத் தேவையைப் பூர்த்தி செய்ய மனமில்லாதவளா? அம்மா என்கிற முடிவில் இருந்த சின்னவள்  அம்மாவின் மடியில் மெல்ல கண் மூடினாள். ரயிலின் வேகம் குறைந்து, இடித்து நிற்கும்போது குளுங்கிய குளுங்களில் சின்னவள் கண்கள் திறந்தது. திறந்தபொழுதில் இவ்வளவு நேரம் தான் போராடிய போராட்டம் நினைவு வந்தது. இருந்தாலும் எந்த முரண்பாட்டையும் சொல்ல முடியாமல் அமைதியாக இமைகளை மூடினாள். 

டேனியல்

விமர்சனம்,



அதிகாரத்தின் தலையில் பாம்பின் விஷம்

“உப்பு இருக்குதா, என்னதான் கொழ்பு செய்யிறியோ“ எனும் குடும்பத்தின், கடவுளின் தரிசனங்களிலேதான் ஆண்மா வாழ்கிறது எனும் மதவாதியின் அன்பற்ற அரக்கத்தனத்தை சகித்து அரைவயிறு, கால்வயிறு நிரம்பியும் நிரம்பாமலும் வாழ்ந்துவிடலாம்.

ஒரு நிறுவனத்தின் தலைமையையும், நாட்டின் சர்வ அதிகாரங்களையும் பெற்றவர் கொஞ்சம் பெருமை, சாதாரண போக்கிரித்தனம் இருந்துவிட்டாலும் போதும். தன்மானம் உள்ளவனை புற்றுநோய்போல அறித்துவிடுவான்/வாள். அதில் ஆண்,பெண் பேதமில்லை. 

இன்று காலையில் ஒரு கிறித்தவ சிகிட்சை மையத்தின் கடைநிலை ஊழியனைப் பார்த்தேன். சற்று பேசிக்கொண்டிருந்தோம். ஏற்கனவே அந் நிறுவனத்தின் கொத்தடிமை பிரயோகம் நிர்வாகத்தை அறிந்தவன். என்பதால் “அண்ணே, எப்படி இருக்கிறீங்க. வேலை எப்படி இருக்கிறது“ என்றுதான் கேட்டேன்.

கொஞ்சம் அதிவினோத விஷம் இருந்தால் அருந்திவிட்டு நாண்டுகொண்டு சாகலாம் அவ்வளவு துக்கத்தை, கொத்தடிமைத்தனப் புழக்கத்தை அடுக்கிக்கொண்டே போனார். அவர் துக்கத்தை சொல்ல நாம ஏன் சாகணும் என்பது நியாயமான கேள்விதான். ஆனால், ஒரு மனிதன் அல்லது ஒரு வர்க்கம் கண்னெதிரே படும் வேதனையை பார்த்து, கேட்டு சகித்துக்கொண்டு இருப்பது சாவதை விட லேசான காரியம் இல்லை.

“என் முப்பது வருஷ சர்வீஸ்ல இந்தமாதிரி ஒரு அரக்கத்தனத்தின் நிர்வாகத்தை நான் கண்டதேயில்லை. வாரத்தில எத்தனை முறை உபவாசம், எத்தனை முறை ஜெபப்பிரசங்கம்,  அத்தனை முறையும் எங்கள் தன்மானத்தை ஒடுக்குவதற்காகப் பயிற்சி எடுக்கிறார்களோ என்றுதான் சந்தேகப்பட வேண்டியுள்ளது.

தங்களுடைய நியாயத்தை விளக்கக்கூட என் முன்னே, பேசுவது இருக்கக்கூடாது. இளம்பெண்கள் ஓய்வுநேரத்தில் யாரிடமாவது எதேச்சியாக பேசினால் ‘அவனோடு ஓடிப்போவதற்கு போவதற்கு திட்டம்போட்டுட்டு வருகிறாயோ‘ ‘அங்க ஏன் நிக்கிற.‘ தண்டம்போட்டு சம்பளத்தை பிடிப்பது. கடைநிலை ஊழியர்களைக் கொத்தனார் வேலை செய்யவைப்பது. பணியாளர்களை ஜென்மம் சிந்திப்போகிற வார்த்தைகளால் திட்டுவது. இரத்தம் உறிஞ்சும் மிஷின் மிஷன்நிர்வாகம் செய்தால் நரகத்தை பூமியிலேயே அனுபவிக்கிறோம். எங்களை விடுவிக்க நாதியற்று நிர்கதியாய் நிற்கிறோம். வயிற்றுப் பிழப்புக்காகத்தான் தினந்தோறும் இத்தனை  வேதனைகளைச் சகிக்கவேண்டியுள்ளது. நிர்வாகத்தின் துதி பாடிகள் செழித்து வாழ்கிறார்கள். தாய் உள்ளம் கொண்டவள் பெண் என்கிறார்கள். அதிகாரம் கிட்டாதவரைதான்போல் இருக்கிறது“ என்றார்.

என்னால் மேலும் கேட்கவே முடியவில்லை. “அண்ணா, நான் வருகிறேன் என்று விரைவாக வந்துவிட்டேன். ‘யோபுவின் நேர்மைக்கு சாத்தானின் கடவுள் அனுமதிபோல‘ சிறு குழு நிர்வாகங்களின்  கடைசி அய்ந்து வருஷ நிர்வாகத்தை, கடவுள் சாத்தானின் தலைமையில் விட்டுவிடுவாரோ? என்று நினைத்துக்கொண்டேன். 

வேலையிலிருந்து வீடு திரும்பும்போது. கையில் பைசா இல்லை. நாளைய பொழுது எப்படி போகுமோ என்று நண்பரிடம் பேசிக்கொண்டே வந்தேன். “போடா. கடவுள் சும்மா விடமாட்டார். இஸ்ரவேல் மக்களை நாற்பது வருஷம் எவ்வளவு மகத்துவமாய் நடத்திவந்தார். நம்மை சும்மா விட்டுவிடுவாரா? என்றார். 
 
எனக்கு சட்டென காலையில் அந்தக் கடைநிலை ஊழியரின் வேதனைக் குரல்தான் நாபகம் வந்தது. ஆமா மயிரு. நாலு வருஷமா நிர்வாகத்துல மக்கிச் சாவுரவனைப் பற்றிப் பேச எந்தக் கிறிஸ்ததவனுக்கும் துப்பில்லை. இஸ்ரவேல் மக்களுக்கு பூட்டாணுங்க.“

டேனியல்  

Wednesday, January 15, 2014

கவிதை,

நிழல்

கறுப்பு மரம் தினந்தோறும்
அதன் வீரிந்த கிளைகளில் இருந்து
பூக்களைப்பூக்கிறது

வேர்களைச்சுற்றியத்
தரைப்பகுதி மலக்குவியல்,
சாக்கடை ஓடையென பரவிக்கிடக்கிறது

அதிகாலையில் மிகுந்த வாசத்துடன்
பூத்து உதிரும் அறிதான பூக்கள்
மெல்லியத் தென்றலைத் தழுவிக்கொண்டே
கீழே விழுகிறது

ஒன்று
தன் அழகிய இதழில் சாக்கடை குடித்தவாறு
வாசத்தைத் தொலைத்து நகர்கிறது.
இன்னொன்று
மலத்தில் நடவு செய்ததுபோல்
அமர்ந்து முகத்தைக் காட்டுகிறது
அதிலிருந்து எழும் நாற்றத்தின் வாடை
திசை நிறப்பி உலவுகிறது.

இருந்தாலும் கறுப்பு மரத்திலிருந்து
பூ உதிர்வதும் நிற்கவில்லை.
சாக்கடை ஓடுவதும் நிற்கவில்லை
மரணமும்மற்று, உயிர்த்தெழுதலுமற்று
நிலை கொண்டிருக்கிறது
பூமியின் சுழற்சிபோல் என்னைச் சுற்றும் நிழல்.

டேனியல்

Tuesday, January 7, 2014

விமர்சனம்,

'பூக்குழி'                                 பெருமாள்முருகன்

“மை வெச்சாளோ மாய்மாலம் பண்ணாளோ. பொய் ஆயிருச்சே…. போங்காலம் வந்திருச்சே.” அம்மாவின் அதிர்வு வசை கடைசிவரை புகையும், நெருப்புமாக தொடர்கின்றது. இந்த வசை தன் ஜென்ம விரோதிக்கு எதிரானதில்லை. தன் மகன் சம்மதம் இல்லாமல் நகர்புரத்தில் இருந்து இளம்பெண்ணை மணம் செய்து அழைத்து வந்துவிட்டான். 

இங்கிருந்து தொடங்குகிறது பெருமாள்முருகனின் “பூக்குழி” நாவல். குமரேசன் சற்று படித்தவன், தன்னுடைய வாழ்வாதாரத்தை தானே பூர்த்திசெய்துகொள்ளும் திறமையும், தங்குவதற்கான குடிசையும் அவனுக்கு சொந்தமாக இருக்கிது. ஆனால்,  கூரை வீட்டில் இருந்து தெருவில் போனால் “இன்னா குமரேசா, எங்க கௌம்பிட்ட.  வெய்யில் அதிகம் இல்ல, மழைவருமா?“ போன்ற வெறும் வார்த்தைகள்தான் எதிர்படுகின்ற கிராமத்தின் மாமனோ, மச்சானோ சிறவயதிலிருந்து பழகிய நண்பர்களோ அதிகபட்ச ஆருதலாக பேசப்போகிறார்கள். இதுகூட கிடைக்கவில்லையே என்பதுதான் குமரேசனுக்கு வருத்தம். கிராமத்தார் பற்றிக்கூட கவலையில்லை. பெற்ற தாயே முரட்டுத்தனமாக எதிர்ப்பதுதான் பெரும் வேதனை. குமரேசன் பரவாயில்லை. ஒருவேளை கிராம மக்களை வெள்ளந்தியானவர்கள் என்று நம்பி தன் சொந்த உறவுகளை விட்டு, குமரேசன் மீது இருந்த ஆவல், மற்றும் நேசத்தின் அடிப்படையில், வந்த இளம்பெண் சரோஜா நிலமையை நினைத்தால் அவ்வளவு வேதனை.

நாவல் பெரிய அடுக்குகளை நிறுவுகிறது. சமூகத்தின் பல நிலைகளை புகுத்தி வெளிக்கொண்டுவருகிறது. சாதிப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தின் தொடக்கப்புள்ளியாக விரிகிறது என்கிற பகட்டை எல்லாம் சொல்லமுடியாது. அது எடுத்துக்கொண்ட விஷயம் மிக… மிக லேசானது, நாம் அன்றாடம் ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் கேள்விப்படுவதுதான், ஆனால், அதைக்கொண்டுசென்ற விதத்தில்தான் அதன் சுவாரசியம், சாதாரண கிராமத்திலும் உச்சாணியில் குடிகொண்டிருக்கும் அதிகார வீச்சம், சாதியக்கட்டுமானம், பொறாமையின் வர்த்தகம் என்று மிக.. மிக விரிந்திருக்கிறது.

காதலிக்கிற ஆண், பெண் தன்னிச்சையான முடிவை எடுப்பதற்கு முன் ஒரே ஒரு முறை பூக்குழியை வாசித்துவிட்டு சுதந்தரமான முடிவை எடுக்கவேண்டும். சரோஜா நகர்புரத்தின் ஒரு சாதாரண கூலி தொழிலாளியின் மகள்தான். தாய் இல்லை. தகப்பன், ஒரு சகோதரன் இருக்கிறான். குமரேசனுக்கு தாய் மட்டுந்தான். மிகவும் பின் தங்கிய கிராமம். நிறைய ஆடுகள் வைத்திருக்கிறாள். குமரேசன் ஒரே பிள்ளை.  கிராம இளைஞர்களோடு வேலைக்கு அனுப்பாமல், குமரேசனை நகர்புரம் அனுப்புகிறாள். ஒரு சோடா கடையில் வேலைசெய்யும்போது காதல். திடீரென்று இருவரும் குமரேசன் கிராமம் வந்துவிடுகிறார்கள். அங்கு பாசத்துடன் வளர்த்ததாயும், கிராமமும் காதலர்களை ஏற்றுக்கொண்டதா அவர்கள் நிலை என்ன என்பதுதான் உச்சம்.

தகுதியான நேரத்தில் தன் பிள்ளை தகுந்த அழகுப்பெண்ணை நியாயமாக திருமணம் செய்து அழைத்து வந்திருந்தாலும், பெற்றத்தாய் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏன் தொடர்ந்து வருகிறது.  தாயிடம் முன் அனுமதி கேட்கவில்லையே என்ற காரணம் மட்டுமா? காலத்துக்கும் ஊரார் அவச்சொல்லில் நிற்கவேண்டுமே என்ற ஆதங்கமா? மேல் தட்டு, நடுத்தட்டு, கீழ்தட்டு எந்தத்தட்டாக இருந்தாலும் சாதி என்று வருகிறபோது, அது வெறும் சாணி அள்ள பயன்படுத்தும் அழகற்ற, அழுக்குப்படிந்தத் தட்டுதான் என்பதை அழகாக சொல்லிச்செல்கிறார்.

வெவ்வேறு சாதியில் இருந்து கலந்த காதல்தான் நாவலின் களம் என்றாலும்,  எந்த ஒரு இடத்திலும் ஒரு சாதியத்தை உயர்த்தி ஒன்றை தாழ்த்தி வைக்கிற பொம்மலாட்டங்கள் இடம்பெறவில்லை. ஆசிரியர் மிக நேர்மையாக சாதிய வித்தியாசங்களை கறுப்பு வெள்ளையாக வைக்கிறார். நிறத்தை வைத்தாலும் இரண்டுக்குமான உயர்வு, தாழ்வுகளை சுட்டவில்லை அதுதான் மிக.மிக முக்கியம். இன்னும் சொல்லப்போனால் கொச்சை சொல்லாகப்பேசும் பாத்திரங்கள்கூட எந்த இடத்திலும் முகம் சுளிக்கும்படியான சாதிய உயர்வு, தாழ்வுகள் பேசவில்லை.

மேலும் நாவல் இந்த வருஷங்கள்தான் என்பதை உறுதியாக சுட்டவில்லை என்றாலும், ஏறக்குறைய முப்பது வருஷத்து முந்தைய பழைமையும், தற்போது நகர்புரங்களிலும் புதிய வர்ண்ணம் தரித்து பரவி யிருக்கும் வாழ்க்கையை விளக்குகிறது என்று சொல்லிவிடலாம். ராமாயி ஒப்பாரி வைக்கும் கிராமியப்பாடல்களும், வட்டார வழக்கில்  மைறைந்துபோன அற்புதமான பழமொழிகள், தற்போது அருவருப்பாக எண்ணப்படும் பழைமையான அற்புத சொற்களை வாசிக்கிறபோது, வாசிப்பாளனை மீண்டும் தம் தம் பழைய வாழ்வின் ஏதோ ஒரு சம்பவத்தை நினைவூட்டாமல் விடாது.  

சரோஜா வெண்நிறத்தில் மயங்கிய கிராமத்தின் ஆண்கள், பெண்கள் அவர்களோடு ஒட்டவும் முடியாமல், தள்ளிவிடவும் முடியாமல் தவித்துக்கொண்டு சுற்றும் தோரனை, ரசனை வாய்ந்தது. நாளுக்கு நாள் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை, நீரில் மறைந்திருந்து தீடிரென தலை தூக்கும் சாதிய நம்பிக்கைக்கொண்ட முதலைகளிடம்  தன்னை நம்பி வந்த ஜீவனைக்காத்துக்கொண்டும், தினமும் வயிற்றுப்பிழைப்பைப் பார்க்கவும் வேண்டிய சுழலில், சரோஜாவை இரண்டு நாள் தன் வீட்டில் விட்டு நகர்புரம் போகிறான். பத்திரமாக இரு நான் இரண்டு நாளில் வந்துவிடுவேன். என்று கடைசியாக சொன்ன வார்த்தைதான் சரோஜாவுக்கு ஆருதல். என்ன நடக்குமோ என்ற நிலையில் சரோஜாவிற்கு வயிறு கலக்குகிறது சற்று இருலடைந்த புதர் பக்கமாக மலம் கழிக்கப்போகிறாள். அங்கு தன் மாமியார் அவளை கொல்வதற்காக கிராமத்தலைகளுடன் ரகசியமாக பேசிக்கொண்டிருக்கிறாள். அய்யோ தன்னுடைய மாமியாரின் குரல்தான் இருள்டைந்த புதருக்குள் குலை நடுங்கி… நடுங்கி மறைகின்றாள். எல்லாத்தையும் நானே சொல்லிடுவேனு நினைக்காதிங்க. புத்தகத்தை வாங்கி அதன் உச்சத்தை நுகர்ந்து சந்தோஷத்தால் மனதைப் பூர்த்தியாக்குங்கள், உங்கள் ஆயுசுநாட்கள் சற்று நீண்டிருக்க.

எனக்கு குமரேசன்  அம்மா பாத்திரத்தை சரியாக சொல்லவில்லையோ என்பதாகப்படுகிறது. தன் மகனை படிக்கவைத்து கிராம பிள்ளைகளோடு போனால் கெட்டுவிடுவான் என்கிற அளவுக்கு பாசத்தை வைத்திருந்தவள், கலியாணம் பண்ணிக்கொண்டு வந்தபிறகு ஏறக்குறைய ஆறுமாதம் ஆனபிறகும் தன் நிலையில் இருந்து சற்றும் மனம் மாறாது தீவிரமாக சரோஜாவையும், குமரேசனையும் பரம எதிரிபோல் பாவிப்பதற்கு வேறுகாரணம் இருக்குமோ? ராமாயி இருபது வயதிலேயே கணவனை இழந்தவள். குமரேசன் படித்துவிட்டு இருந்தபோது  நகர்புரம் சோடா கடையில் சேர்க்க உதவிய நாட்டுக்கோழி முட்டை வாங்கும்பாய். கிராமத்திற்கு வரும்போதெல்லாம் ராமாயி வீட்டில் தங்குவதும் இருந்திருக்கிறது. குமரேசன் தன் ஜோடியை கூட்டிவந்த பிறகு பாய் வருவதேயில்லை. இதற்கும் ராமாயி கோபத்துக்கும் தொடர்பு இருக்குமா? அல்லது சாதி சனங்கள் ஊர் கூடி வாழமுடியவில்லையே என்ற வருத்தம் மட்டும்தானா? இப்படியான மிக நுணுக்கமான விஷயங்களை நாவல் சொல்லாததால் சற்று வருத்தமும் இருக்கிறது.

பழக்கப்பட்ட கதையம்சமாக இருந்தாலும் யார்கண்ணிலும் படாத பல விஷயங்கள் நாவல் வைத்துச்செல்வது சிறப்புக்குரியது.

         ஆசிரியர்              வெளியீடு               விலை

      பெருமாள்முருகன்        காலச்சுவடு.             ரூ.130/-

டேனியல் 

Tuesday, December 24, 2013

கவிதை,



எல்லாமே முடிந்து விட்டது
இனி நடப்பதை ஏற்றுக்கொள்வதினால்
என்ன மிஞ்சப்போகிறது.

ஒன்றுமில்லாமல் உருகுலைந்த பிறகு
புதிய நம்பிக்கை எதன் அடிப்படையில்
துளிர்விட சாத்தியம் இருக்கிறது.

போதும், நினைவிலிருக்கிறதை
ஒரு மின்னணுவின் தவறுபோல
துடைத்தழித்திவிட்டு
வெற்று மனம்கொண்டு
உடல் கணம் பூணும் முடிவாயிற்று.

தண்டவாளங்களை நம்பி வந்து,
பயணத்தை முடித்துக்கொண்டு
முற்றிலும் வெறுமையாகி
மீண்டும் தொடங்குகிறது
புதிய இலக்கு நோக்கி
இருதலைகொண்டு நீண்டு நிற்கும் ரயில்

கட்டணமற்ற வழிகள்
வீதியில் விருதாவாய் கிடக்கிறது
கண் பார்த்ததால்
மேலும்,வாழமுடிகிறது.

ஜேடி

அனைத்து நண்பர்களுக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு
 நல் வாழ்த்துக்கள்.