Friday, January 24, 2014

சிறுகதை,




அந்தத் தண்ணீ‘ 

அவள் சாத்தியப்படுத்திவிடலாம் என்கிற தொனியில்தான் சற்று அலட்சியமாகத் தொடங்கினாள். ஏனென்றால் இதற்கு முன்பு அது நடந்திருகிறது. கூட்டம் அதிகம் இல்லை. இரண்டாவது, யூ.கே.ஜீ படிக்கும் வயதொத்த பெண்பிள்ளைகள் அம்மா, தாத்தா என்று குடும்பமாக கடைசிப் பெட்டியில் ஏறினார்கள். ரயில் கடகடப்பு அதிகமாக இருந்தது. 

ஆறுபேர் உட்காரும் இருக்கையில் தாராளமாக உட்கார்ந்தார்கள். நெருக்கிக்கொள்கிற அவசியம் ஏற்படவில்லை. வரிசையாக அமர்ந்திருந்தவர்களின் இடுப்பளவு அதிகபட்சம் நாற்பதைத் தாண்டாது. வெண்தாடியுன் இரு கண் புருவ மயிர்களின் இடையில் நேர்கோட்டில் தொடுவதுபோன்று, நீளத்தில் சிறிதாக மெல்லிய சந்தனக்கோடு இட்டிருந்தார். சற்று மேலே கனத்தும் மேல்நோக்கிப் போகும்போது மெலிதாக குங்குமம் குழைத்து நடு நெற்றியில் இட்டிருந்தார்.  இந்த பிம்பம் உங்களுக்கு பிடிபடவில்லை என்றால் மெலிந்த மெழுகு எரிவதை கற்பனை செய்துபாருங்கள். நெற்றி முடிவின் மையமாக நடுவிரல் அளவிற்கு சந்தனப்பொட்டுச்  சரியான வட்டத்தில் வைத்திருந்தார். தாத்தாவிற்கு காவி உடை அணிவித்தால் சாமியார்தான். ஆனால், வெள்ளை வேட்டியும், சட்டையும் அணிந்திருந்தார். வாழ்வாதாரத்திற்கான அத்தனை தாஸ்தாவேஜ்ஜூகளும் தன் பாக்கட்டுக்குள்ளே திணித்திருந்தார். உப்பலின் முடிவில் தெரிவது ஏதோ சாமியாகத்தான் இருக்கவேண்டும். கறுப்பும், மஞ்சளும், சிகப்பும் கலந்து குறுக்கும் நெடுக்குமான ஆயுதங்களுடன் தெரிந்தது. அவர் காலுக்குக்கீழ் வெள்ளை நிறத்தில் ஒரு கட்டைப்பிடிக்கொண்ட பை இருந்தது. ஏதோ ட்ரெஸ்ட்டின் பெயர் இருபக்கங்களிலும் பொறிக்கப்பட்டிருந்தது.  

ரயிலில் கடைசிப்பெட்டிக்கு, இரண்டாவது பெட்டியின் கடைசி இருக்கைகளில் உட்கார்ந்தார்கள். அம்மாவை ஒட்டி இரண்டரை அடி அகலத்துக்கு வாசல். அந்த வாசல் அடுத்தப்பெட்டிக்கு போகும் வழியாக இருந்தது. அம்மா தெற்கு பார்த்து அமர்ந்திருந்தாள். பக்கவாட்டில் சன்னல். அம்மா வலப் பக்கமாகவும், பெரியவள், சிறியவள் நடுவிலும் இருந்தார்கள். வழக்கம்போலவே சின்னவள், பெரியவளை அடைக்கியாள்கிற செயலை செய்துகொண்டிருந்தாள். உச்ச கட்டமாக பெரியவளை கீழேத்தள்ளி அம்மா மீது தலையையும், தாத்தாவின்மீது கால்களையும் வைத்து தூங்க ஒத்திகைப்பார்த்தாள். பெரியவள் உட்கார ஆசைப்பட்டபோது, அம்மா சிறியவள் தலையை சற்று ஒதுக்கி பெரியவளுக்கு இடம் கொடுத்தாள். திடீரென்று சின்னவள் எழுந்து உட்கார்ந்தாள். ஏதோ உதித்தவள்போல அம்மா மடியில் ஏறி பின்னாக ஓடும் மரம், செடிகளின் விந்தையைப் பார்த்தாள். அம்மாவின் கைப்பிடியை விலக்கிக்கொண்டு சன்னல் அருகில் சென்று கம்பியைப் பிடித்தாள். அம்மாவின் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தாலும் நொடிக்கொருமுறை குழந்தையைப் பார்க்கிறாள். தற்போது மூத்தவளுக்கு பிரச்சனை இல்லை. அம்மாவை முட்டி படுக்க முற்படுகிறாள்.  முடிந்தவரை தாத்தாவின் மீது கால்போடாமல் தன்னை ஒடுக்கிக்கொண்டு படுக்கிறாள். சின்னவள் சன்னல் அருகில் ஓடியதைப்பார்த்த தாத்தா ஏய், பாப்பா. அந்தப்பக்கம் போகாதே என்று குரல் கொடுத்தார். பிறகு அவள் அம்மா பக்கத்தில் இருப்பதால், மீண்டும் எச்சரிக்கை விடவில்லை.

சற்று நேரம் பார்த்துவிட்டு மீண்டும் மூத்தவளிடம் முட்டி மோதிக்கொள்ள வந்துவிட்டாள். இருவருமே சற்று நேரம்கூட சரியான கோணத்தில் நிலையாக உட்காரவில்லை. நான் படுக்கப்போகிறேன். எனக்கு எடம் வேணும் என்றப்போட்டி இருந்தது. இந்த களேபரத்தில் பெரியவள் செருப்பையும், சிறியவள் ஷுவையும் கழட்டிப்போட்டார்கள். தாத்தா ஷுவை பையில் வைத்துக்கொண்டார். குனிந்து பையில் வைத்தபோது இருக்கையின் கீழ் நிறையக் குப்பைகள் சுழன்று கொண்டிருந்தது. அது விடுதலையாக, ரயில் தன் சவாரியை முடித்தால்தான் முடியும் என்று எண்ணினார். ரயில் அதிவேகத்தில் போய்க்கொண்டிருந்தது. ரயில் பயணத்தில், எதிர் இருக்கைகளில் இருப்பவர்களின் முகங்களை அதிகமான நிர்பந்தத்துடன் பார்க்கவேண்டியுள்ளது. இருந்தாலும் பயணத்தின் படியை விட்டகன்றதும் பார்த்து வந்தவர்களின் முகங்கள் எத்தனைபேருக்கு நினைவிருக்கும் தெரியவில்லை.

இரு பெண் குழந்தைகளும் தற்போதைய அம்மா வயதை எட்டும்போது நிச்சயம் மாற்றம் இருக்காது. சிறியவளுக்கு கீழ் உதடு சற்று தடித்து எப்போது கீழே விழுந்துவிடுமோ என்று இருந்தது. கடைசிவரை விழவே விழாது என்பதை அம்மாவைப் பார்த்தும் தெரிந்தது. அப்படி இருப்பது இருவருக்கும் அழகாகவே இருந்தது. சின்னவள் மூக்கு வட்டவடிவத்தில் சிறியதாக, அழகாக இருந்தது. மேற்தாடையின் பல் வரிசையின் கடவாய் பல் ஒன்று பழுப்பு நிறத்தில் இருப்பது இன்னும் அழகுதான். அம்மா நாற்பதைத் தாண்டிவிட்டதால் சிவந்த முகத்தில் அங்கங்கே கறுப்பு மச்சங்கள்போல் தோற்றம் இருந்தது. அம்மாவிற்கு தலைமயிர் கிராப்செய்து சிறியவர்களுக்குரிய ஆடையை அணிவித்தால், அப்படியே சின்னவள்தான். 

ரயிலில் சிறு வியாபாரி அவித்த வேர்கடலைக்கூவிக்கொண்டு வந்தாள். சின்னவள் அம்மா, வாங்கிக்குடுங்க என்று சினுங்கினாள். இரண்டாவது முறை கேட்பதற்குள் கடலை வைத்திருந்தவள் இறக்கி காகிதக்குழலைத் தயார் செய்தாள். அம்மாவும் குடும்மா என்றாள். சின்னவள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள அதிகம் கஷ்டப்படவேண்டி இருக்கவில்லை. கைக்கு கடலை வந்ததும் யாருக்கும் கொடுக்கப்போவதில்லை என்கிற தொனியில் அமர்ந்து ஒவ்வொன்றாய் கொறித்தாள். பக்கத்தில் இருந்த மூவரும் அவளையேப் பார்த்தார்கள். ஒரு வேளை யாருக்கும் தரமாட்டாளோ என்று இருந்தது. அம்மாவும், தாத்தாவும் அக்காவுக்கு கொஞ்சம் கொடும்மா என்றபோது இப்படியும், அப்படியும் தலையை ஆட்டினாள். கொடுக்கமாட்டாள் என்பது தெரிந்திருந்தால், இன்னொன்றாவது  வாங்கியிருக்கலாம். எப்படியும் சற்றுநேரத்தில் கொடுப்பாள் என்று அம்மா நினைத்தாள். 

கடலை விற்றவள் இரண்டு குழந்தை இருப்பதைப்பார்த்து ஒன்றே ஒன்று கொடுத்து பணத்தை வாங்கி அவசரமாய் நகர்ந்துவிட்டாள். அவளுக்கு விபாரத்தந்திரம் தெரியாமல் இருக்கவேண்டும் அல்லது எந்தநேரத்தில் ரயில் பரிசோதகர்கள் வந்து மொத்தமாக தன் முதலீட்டை அள்ளுவானோ என்ற பதட்டம் இருக்கவேண்டும். தாத்தாவிற்கு ஏதாவது தந்திரம் செய்து அவளிடத்தில் இருந்து கொஞ்சமாவது வாங்கிவிடவேண்டும் என்ற முணைப்பில் இருந்தார்.
 
சின்னவள் ஒவ்வொன்றாக சாப்பிட்டாள். எதிரில் இருந்தவர்களில் ஒருவர்  அக்காவிற்கு கொடும்மா என்பதுபோல் குரல் வந்தது. அதை அவள் காது கேட்கவில்லை. சற்று நேரம் கழித்து அவளாகவே ஒரு பருப்பு எடுத்துக்கொடுத்தாள். சிறிது நேரத்தில் தண்ணீர் கேட்டாள். கையிலிருந்த கடலையை தாத்தா வாங்கினார். அம்மா பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து லைட் மஞ்சள் கலர் கப்பில் ஊற்றினாள். கப்பிற்கு மூடியிருந்தது. மூடியின் ஓரத்தில் கூம்புபோல் திறந்தவழி இருந்தது. குழந்தைக்குக் குடிப்பதற்கு மிக சுலபமாக இருந்தது. பாட்டில்கூட மஞ்சளும், லேசான பச்சையும் சேர்ந்த கலரில் நீள நீளமாக வலைவானக் கோடுகளின் டிசைன் போட்டிருந்தது. 

குழந்தை கூம்பில் வாய்வைத்து உறிஞ்சினாள். நல்ல வசதியாகத்தான் இருந்தது. கழுத்து நரம்பு நிமிர்ந்து, குனியும் வேலையை மேல்மூடியின் கூம்பு மிச்சப்படுத்தியிருந்தது. அவள் விட்டு விட்டுக் குடித்தாள். வயிறு சற்று உப்பலாகத்தெரிந்தது. இந்நேரத்தில் தாத்தா சந்தர்ப்பத்தை நிறை வேற்றிக்கொண்டார். கடலையை கொஞ்சம் வாயில் கொட்டிக் கொண்டார். மூத்தவளுக்கு கொஞ்சம் தந்தார்.  சின்னவள் கப்பில் இருந்தத் தண்ணீர் முழுமையும் குடித்தாள். இரண்டு மூன்றுமுறை வெறுமனே சாய்த்துச் சாய்த்து ஊறுஞ்சினாள். இல்லை என்றானபிறகு கடலையைக் கேட்கவில்லை. அது நினைவிலும் இல்லை. தற்போது ரயிலின் வெளியில் ஓடும் பசுமைகளைப் பார்த்து லையித்து சன்னல் கம்பிகளிடம் தஞ்சம் அடைந்தாள். டீச்சர் வெள்ளை ஏடுகளில் காண்பித்த பெரிய மரங்களைத்தவிர அவள் என்னத்தை தேடப்போகிறாள். உண்மையில் கடலை பொட்டலத்தில் அதிகம் சாப்பிடவில்லை. ஆனால், இப்போது அதைக்கேட்கவும் இல்லை. பக்கத்தில் பக்கத்தில் இருந்த அடுத்தடுத்த நிலையங்கள் வரை தாத்தாதான் மென்று கொண்டிருந்தார்.

சின்னவள் ஏதோ அறிதலின் ஆவலோடு அம்மாவின் மடியில் அமர்ந்துகொண்டு, அம்மா, அது இன்னா மரம்மா,  இது இன்னா மரம்மா கேட்டுக்கொண்டிருந்தாள். தங்கை கேட்டபோதுதான், மூத்தவள் ஓடும் மரங்களின் காட்சியைப்பார்த்தாள். திடீரென்று பார்த்ததால் எந்த மரத்தின் அடையாளத்தையும் சரியாக கணிக்க முடியவில்லை. சற்று நேரம் பார்த்தபோதுதான் பெரிய மரங்கள் ஓடும் பிம்பம் ஓரளவு ஊகிக்கமுடிந்தது. மூத்தவள் பேசினாள் அது காடுங்க. பெரியப்பெரிய மரங்கள் இருந்தா அது காடுங்க என்றாள். ஆனால், சின்னவள், மூத்தவளின் பதிலை கவனிக்க மனமற்றவளாய் இருந்தாள். அம்மா சொன்னால்தான் நம்ப முடியும் என்பதுபோல அம்மாவின் பதிலை எதிர்நோக்கி இருந்தாள். ரயிலின் மேற்குவெளிக் காட்சியை மட்டுமே பார்த்தாள், கிழக்கில் பரந்திருந்த தண்ணீர் இருப்பைப் பார்க்கவேயில்லை. அம்மா ஒவ்வொரு மரமாக சொல்லிக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்திற்குமேல் சலிப்பதாக இருக்கவே சின்னவளின் கவனத்தை திசைத்திருப்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அம்மாவிற்கும், மகளுக்குமான உரையாடல் அறிந்துகொள்ளுதல், புகட்டுதல் நிலையை எட்டியிருந்ததால் அம்மாவிற்கு மாற்று யோசனையில் மனம் சீக்கிரமாகச் செல்லவில்லை. ஒருவேளை எதிர் இருக்கையில் இருப்பவர் யாரேனும் அவர்களின் செயல்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தால் குழந்தைகளின் மனம் ஒவ்வாத ஒரு விஷயத்திலிருந்து சீக்கிரம் வெளியேறி விடுகிறார்கள். ஒன்றி விட்டால் வெளிவருவது கடினம் என்று சட்டென பதில் சொல்லிவிடுவார்கள்.

அம்மா இப்போது கிழக்குப்பக்கம் பெரிய ஏரியின் பரந்த தண்ணீர் நிலையைக் காட்டினாள். சின்னவள் சட்டென கிழக்குப்பக்கம் திரும்பினாள். மேற்குப் பக்கத்தைவிட, கிழக்குப்பக்கம் ஆச்சரியம் தந்தது. இருந்தாலும் ஏற்கனவே மேற்குப்பக்கம் கொடுத்துவந்த சந்தோஷததை மறந்துவிடவில்லை. இரண்டுபக்கமும் மாறி மாறி பார்த்துக்கொண்டு வந்தாள். தண்ணீர் நிலை முடிந்தபிறகுதான் ஒருதிசைப் பார்வையில் ஒன்றினாள். மூத்தவள் நடுவாக தூங்கிவிட்டாள்.

தற்போது முன் பெட்டியிலிருந்து தண்ணீர் விற்கிறவன். வாட்டர்.. வாட்டர்..  வாட்டர் பாக்கட். தண்ணீர்.. தண்ணீர்.. தண்ணீர் பாக்கட் என்று ஓசைபட கூவிவந்தான். தண்ணீர் விற்பவனுக்கு  கடந்த காலத்தில் கோர்ட் டபாரியாகவாவது போகவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கலாம். அவன் கூவும் ஓசைக் கேட்டதும், நிச்சயம் யாரானாலும் அப்படித்தான் முடிவுசெய்வார்கள். அம்மா இருந்த பெட்டிக்குள் நுழைந்தபோதே சின்னவள் மிக சாதுவாக அம்மா, அந்தத் தண்ணீ வேணும் என்றாள். அம்மா அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. சின்னவள் தற்போது வெளிக்காட்சியைப் பார்த்தாள். ரயில் நின்றபோது பெரிய குசுபோன்ற சத்தத்தைத் தந்தது. அந்த சத்தத்திற்கு உருவம் தரவேண்டும் என்றால் வளமான, மூத்த யானை சரியாக பொருந்தும். சத்தத்தை ஊகித்தவர்கள் நிச்சயம் சிரித்தார்கள். தண்ணீர் விற்றவனின் இன்னும் சத்தமான குரலுடன் கிட்டி நெருங்கினான். சின்னவள் கேட்டதை ஏற்கனவேப் பார்த்துவிட்டதால் ஒரு பாக்கட்டை எடுத்து அம்மாவும், மகளும் பார்க்கின்ற நேரம்பார்த்து நீட்ட முற்பட்டான்.

அம்மா, கௌரவம் நிறைந்த பார்வை வெளிப்படுத்தி சின்னவளின் கையைப் பிடித்துக்கொண்டாள். தண்ணீர் விற்றவன் நீட்டியக்கையை தன் கவருக்குள் வைத்துவிட்டு மீண்டும் குரல்கொடுத்துக் கொண்டே போய்விட்டான். சற்று நேரம் பக்கக்காட்சிகளில் மறந்துவிட்ட சின்னவள் மீண்டும் நாபகம் வந்தவளாக அம்மா, அந்தத் தண்ணீ வேணும். என்றாள். அம்மா பதில் சொல்லவில்லை. மாறாக சின்னவளின் உடலைப்பிடித்து தன் காலுக்கு நடுவாக அணைத்துக் கொண்டாள். 

சற்று நேரங்கழித்து தண்ணீர் விற்றவனின் குரல் இல்லவே இல்லை. அந்தத் தண்ணீ வேணும். அந்தத் தண்ணீ வாங்கிக்குடுங்கம்மா என்று மூன்று, நான்கு முறைக்குமேலாக திரும்பத்திரும்ப கேட்டாள். அம்மா, பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்தாள். அந்தத் தண்ணீ வேணாம்மா. நம்மலாண்ட தண்ணீ இருக்கிது இல்ல. அதக்குடுக்கிறேன்“ 

நம்மத் தண்ணீ வேணாம். அது நல்லாயில்ல. எனக்கு அந்தத் தண்ணீதான் வேணும் வாங்கிக்குடுங்கம்மா“ 

அம்மா, சரியாகிவிடுவாள் என்று அமைதியாக இருந்தாள். தாத்தாவும் இதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. எதிர் இருக்கையில் ஒருவர் கைபேசியில் இருந்தார் ஒருவர் மினி கணினியை பார்த்துக் கொண்டிருந்தார். சிலர் இருவேறு பக்கங்களின் காட்சிகளில் ஒன்றி இருந்தார்கள்.

சின்னள் சற்று சத்தமாக அந்தத் தண்ணீ வேணுஊம். அந்தத் தண்ணீ வேணுஊம் என்றபோது அம்மா என்ற உறவை எடுத்துவிட்டு வெறுமனே அந்தத் தண்ணீ வேணும் என்று சத்தத்தைக்கூட்டி கத்தினாள். இப்போது வெளிக்காட்சிகளில் பார்வை செல்லவில்லை. முழுவதுமாக அந்தத் தண்ணீ கேட்பதிலேயே கவனம் இருந்தது. கோரிக்கையில் இடைவெளியில்லை.

இடையில் தாத்தா நுழைந்தார். இதோ பார். இந்தப்பக்கம் பார்என்றார். அவருடையப் பேச்சு அவள் காதில் விழவில்லை, என்பதைவிட ஏற்றுக் கொள்ளவில்லை எனச்சொல்லலாம். இவ்வளவு நேரம் கத்தியபோதும் அவள் கண்களில் தண்ணீர் வரவில்லை. இன்னும் அம்மாவின் மீது நம்பிக்கை இருந்தது. ஒரே குரலில் கடலை பருப்பு கையில் வந்தது நினைவில் இருந்தது. இதையும் எப்படியும் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆனால், இயல்புக்குமாறாக இவ்வளவு நேரம் கத்தியும் பலன் இல்லையே. தன்னுடைய வேண்டுதல் நிராகரிக்கப்படுகிறது என்கிற எண்ணம் நுழைந்தபோதுதான் அழுகை வர ஆரம்பித்துவிட்டது. இப்போது சின்னவள் கண்களில் மாலை மாலையாக கண்ணீர் வழிந்தது.

எதிர் இருக்கையில் இருப்பவர்களின் கவனம் சிதறி சின்னவள் அழும் திசையைப் பார்த்தார்கள். தற்போதைய சூழலில் தங்களால் பிறருக்கு தொல்லை ஏற்படுவதை அறிந்த அம்மா  இவ்வளவு அடம்பிடிப்பாள் என்று தெரிந்திருந்தால் அப்போதே ஒன்றிற்கு, இரண்டாகத் தண்ணீர் பாக்கட் வாங்கியிருப்பாள். விற்றவன் வரப்போகும் சூழ்நிலையை அறிந் திருப்பானோ. நாம் வேண்டாம் என்றுகூட சொல்லவில்லை. ஒரு பார்வைப் பார்த்ததும் போய்விட்டானே. சீக்கிரம் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டால் போதும் என்று இருந்தது. அதற்கு இன்னும் நேரம் இருப்பதை அறிந்து சின்னவள் பிடிவாதத்தை நிறுத்துவதில் முணைப்புக்காட்டினாள்.

சின்னவள் இரக்கமற்று உச்ச நிலைகொண்டு ஓயாமல் கத்தினாள். எதிர் இருக்கையில் இருந்தவர்களுக்கு அம்மாவிடம் கொஞ்சி பேசியபோது ஆழகாய்த் தெரிந்திருந்தாள். சத்தம் அதிகமாக அதிகமாக, அவள் கீழ் உதடு தொங்கி, கீழ்தாடை பல் வரிசை மேல்தாடை பல் வரிசையைவிட முன்னுக்கு வந்து நின்று அழகற்றவளாகக் காட்டியது.

அம்மா செய்வதறியாமல் சும்மா இருந்தாள். சின்னவள் தன் ஆடையில் வரிசையாக இருந்த மூன்று அழகிய பட்டன்களை பிடித்து அறுத்து அம்மாவின் மடியில் போட்டாள். அம்மா, இனி சும்மா இருக்கமுடியாது என்று  சின்னவளை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு ரகசியமாக மிரட்டத் தொடங்கினாள். எதிர் இருக்கையில் இருப்பவர்க்கு தன் முகம் தெரிந்துவிடக்கூடாது. குழந்தையையும் ராட்சசி என்று நினைத்து விடக்கூடாது என்பது அம்மாவின் எண்ணம். மடியில் இருந்த குழந்தையின் தலையை இருகைகளாலும்  பிடித்துக்கொண்டு தன் வாயை அவள் காதில் வைத்து இரு.. இரு.. நாளைக்கு உங்க டீச்சராண்டையே போட்டுக் குடுக்கிறேன். இவள் வீட்டில் அடங்கவில்லை டீச்சர். அடம்பிடிக்கிறா. சொல்பேச்சை கேட்க மாட்டேங்கிறானு. போட்டுகுடுக்கிறேன். என்றாள். 

சின்னவள் சற்று உற்றுக் கேட்டாள். அந்த கவனிப்பில் நாளைக்கு பள்ளிக்கு போகணுமே என்கிற பயம் இருந்தது. நொடிப்பொழுது அமைதியானாள். அப்போது சற்று அழுகைக் குறைந்ததுபோல இருந்தது. சடாரென்று மீண்டும் கதறல் தொடர்ந்தது. 

அம்மா, சின்னவள் செய்த குற்றங்களை எல்லாம் தற்போது சொல்ல ஆரம்பித்தாள். சரி நீ ஏன் சட்டையில் இருந்த பட்டனை எல்லாம் பிச்சிபோட்ட. தப்புதானே. அப்படி செய்யலாமா? என்றாள். 

அது எனக்கு புடிக்கலஅ. அந்தத் தண்ணீ வேணுஊம்“ 

சற்று குரல் ஓய்வதுபோல் இருந்தால் அம்மா சின்னவளின் தலையை விட்டு விடுவதும். சத்தம் அதிகமானால் மீண்டும் தலையைப்பிடித்து தன் வாயில் வைத்து வீட்டுக்குபோனதும் அத்தையைப் பாக்கலாம். இன்னா. என்று ஒரு நேரம் மிரட்டுவதும். இன்னொரு நேரம் ஆசை வார்த்தைகளை சொல்லி திசைத்திருப்ப முயற்சிப்பதும் தொடர்ந்துகொண்டிருந்தது. அம்மாவின் அடுத்தடுத்த பேச்சில் கவனமாக இருந்து தன் தேவைக்காக முரண்டுபிடித்தாலும். சில நேரம் அத்தையைப் பார்க்கலாம், மாமாவின் காரில் போகலாம் எனும்போது சற்று ஏமார்ந்து தலையை ஆட்டிவிடுகிறாள்.

சின்னவள் இந்தப்பிடிவாதத்தை திட்டமிட்டேத் தொடங்கவில்லை. சற்று குரல்கொடுத்தால் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே, அழுவதுபோன்ற தொனியைக் கையாண்டாள். ஆனால் சந்தர்ப்பம் ஒரு போராட்டத்திற்கு ஒத்த பிடிவாதத்தைக் கட்டமைத்துவிட்டது. ஒருவேளை அந்தத் தண்ணீ வேணும் என்று கேட்ட முதல் குரலிலேயே வேண்டுகோளை மதித்து அம்மா சரியான பதிலை அனுசரனையாக சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே சின்னவள் பிடிவாதம் திசைதிரும்பி ஒன்றுமில்லாமல் போயிருக்கும். இவ்வளவு தீவிரம் அடைந்திருக்காது.

ஒரு குரலில் கிடைத்துவிடுகிற பொருள்கள், இவ்வளவு கதறலுக் குப்பின்பும் அம்மா சொம்மா விடுகிறாளே என்பதுதான் தாங்கமுடியவில்லை. பொருள் கிடைக்கவில்லை என்பதை விட, அம்மாவின் சும்மாயிருத்தல்தான் மேலும் ஆழவைக்கிறது. இன்னும், முடித்துக்கொள்கிற மனநிலை ஏற்படவில்லை. தணிக்கிற வழி அம்மாவிற்கு பிடிபடவில்லை. தாத்தா, அம்மாவாலேயே ஆற்றுபடுத்த முடியவில்லை என்றால் நாம் என்ன செய்யமுடியும் என்று இருக்கிறார்.

அம்மா, சரி. இன்னொரு முறை வரட்டும் நான் வாங்கித்தாரேன்.“ 

ரயில் நின்று கிளம்பியது. உழைத்து ஓடாகிற மக்கள் விடுமுறை நாட்களில் பயணத்தை ரத்துசெய்கிறார்கள்போல. பெட்டிக்கு வரவும் இல்லை. இருந்தவர்கள் இறங்கவும் இல்லை. நேரம் ஆக.. ஆக.. அம்மாவின் மடியில் அடங்கியிருந்த சின்னவளின் கால்கள் இரண்டும் சற்று தளர்ந்தது. கால் விரல்களில் பூசிய சிகப்பு ஜிகினா நிற சாந்தின் ஓரங்கள் உறிந்து இருந்தது. தீட்டி வாரம் ஆகியிருக்கலாம். லேசாக கறுநிறம் தரித்த முத்துக்கள் அடர்ந்த கால்கொலுசின் தடதடப்புச்சத்தம் தற்போது அதிரவில்லை.

நடுவில் தூங்கிக்கொண்டிருந்த மூத்தவள் புரண்டு படுத்தாள். இடுப்பின் அரை மிடி விலகி உள்ளாடையாய் இருந்த சிமெண்ட் நிற சட்டித் தெரிந்தது. அம்மா உடனே ஆடையை இழுத்து சரிசெய்தாள்.

சின்னவளுக்கு நம்பிக்கையற்றுப்போனது. நம் கோரிக்கை நிறை வேறுவதற்கான எந்தச் சூழலும் நடப்பதுபோல் தெரியவில்லை. வந்தா வாங்கித்தாரேன் என்றும், அதைத்தவிர்த்து கூடுதலாக பல்வேறு ஆருதல் வார்த்தைகளையும் அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள், அவைகளில் நம்பிக்கை இல்லை. இனி கிடைத்தாலும் தனக்கு பிடிக்காததாக, அவள் விருப்பம் மாறியிருந்தது. அதனால்தான் படிப்படியாக தீவிரம் குறைந்து, தற்போது அம்மா சொல்லுகிற திசைமாற்று வார்த்தையில் கவனம் குவிகிறது. கவனம் குவிதலால் சற்று நேரம் வேறு திசையைப் பார்க்கிறாள்.  சற்று நேரம் கழித்து மீண்டும் நாபகம் வந்தவளாக அந்தத் தண்ணீ வேணும் என்றாள். ஆனால், அதில் தீவிரம் இல்லை.

அம்மா ஜாக்கிறதையாக இருந்தாள். கோரிக்கை தொடங்குகிறபோதே அதற்கான நம்பிக்கைத்தரும் வார்த்தைகளை காதில் ஓதினாள். ரயிலின் ஆங்கார சத்தம் தடதடத்தது. சின்னவளின் குரல் எடுபடவில்லை. எதிர் இருக்கையில் இருந்தவர்கள் அவரவர் இயல்புக்கு திரும்பினார்கள். 

சின்னத் தேவையைப் பூர்த்தி செய்ய மனமில்லாதவளா? அம்மா என்கிற முடிவில் இருந்த சின்னவள்  அம்மாவின் மடியில் மெல்ல கண் மூடினாள். ரயிலின் வேகம் குறைந்து, இடித்து நிற்கும்போது குளுங்கிய குளுங்களில் சின்னவள் கண்கள் திறந்தது. திறந்தபொழுதில் இவ்வளவு நேரம் தான் போராடிய போராட்டம் நினைவு வந்தது. இருந்தாலும் எந்த முரண்பாட்டையும் சொல்ல முடியாமல் அமைதியாக இமைகளை மூடினாள். 

டேனியல்

No comments: