Monday, June 10, 2013

கவிதை,



எனதருமை நாஸ்தென்கா

முந்தய வெண்ணிற இரவில்
உன் தோளைத்தொட முயன்ற
காமக்கிழவனின்  
கிளர்ந்த கரத்தைத் தடுத்து
துரத்தியபின், 
மனதிற்குள் வணங்குகிறேன்
அக்கிழ கரங்களை.
இல்லையானால், 
துணையற்று
நாள்தோறும் கமழ்ந்தழும் 
என் இதயத்தில்
மென்சூடுக் கிளம்பி
உன் பிஞ்சு விரலின்  
ரத்தஓட்டப் பாய்ச்சலை நுகர்ந்திருக்குமா?

வெண் நிலவின் ஓரத்தில் பாயும் மேகங்கள் 
கணப்பொழுதில் மஞ்சள்தழுவி,
கடல் நீரின் மினு மினுப்பை அணியும்போது
கரையோர பெஞ்சில் அமர்ந்தவாறே,
அவன் ஏமாற்றுக்காரன்
உன் கரத்தைக்கொடு என்றாயே!
எனதருமை நாஸ்தென்கா.

நான்காம் இரவு
நல் ஜாமம் தொடங்கும் முன்
இன்பமேயற்ற கடந்த காலத்தைப்போல்
கொடியதாக்கினாயே எதிர்காலத்தையும்.
இருந்தபோதிலும்,
என் இருப்புகளிலெல்லாம் 
அக்கரையோர பெஞ்சில்
உனக்கும் எனக்குமான
உரையாடலின் ஓசைக்கேட்டுக்கொண்டே,
எங்கோ இருக்கின்றேன்
எதற்காகவோ இருக்கின்றேன்
எப்படியோ இருக்கின்றேன்
ஏனோ இருக்கின்றேன்
எப்போதும் இறக்காமலே இருக்கின்றேன்
எனதருமை நாஸ்தென்கா.

ஜேடி 


Saturday, May 18, 2013

சினிமா,



                             சூது கவ்வும்

மிக மோசமான  எண்ணங்களை உற்பத்தியாக்க முயலும் புதிய இளைஞர்களின் புதிய தொழில் நுட்பங்கள்தான் சூது கவ்வும்.

நண்பர் சிவ சங்கர் தன் முகப்புத்தகத்திலும், அருண் தன் பக்கத்திலும் இப்படத்தைப்பற்றியக் கருத்தைசொல்லியிருந்தார்கள். மேலும், போஸ்டரின் வடிவமைப்பைப் பார்க்கும்போது ஏனோ படம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். பிறகு, பேசாமொழியில்  சாட் பை சாட் என்கிற மொழிபெயர்ப்பை செய்கிற ராஜேஷ் என்கிற கருந்தேல் அவருடைய வலைதளத்தில் இப்படத்தின் விமர்சனத்தை எழுதியிருந்தார். அவர் பரவலாக உலகப்படங்களைக்குறித்து பேசுகிறவர். நல்ல ரசனை வாய்ந்ததாக இருக்கும். அவர் எழுதிய விமர்சனத்தை அருண் விரும்பியிருந்தார். எனக்கு சற்றுக் குழப்பமாக இருந்தது.

நன்பர் சிவசங்கர், அருண் முகப்புத்தகத்தில் கருத்துக்கள் ஓரளவுக்கு ஒத்திருந்தது. கருந்தேலின் பார்வை முற்றிலும் படத்திற்குச் சாதகமானதாக இருந்தது. நாம படத்தைப்பார்த்தால்தான் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று படத்தைப்பாத்தேன்.

ஒரு படம் எவ்விதமான கலாச்சாரத்தை ஏற்படுத்தும், என்பதை அதன் பார்வையாளர்களை வைத்துசொல்லிவிடலாம். நான் சென்ற திரையரங்கு முப்பது ரூபாய், ஐம்பது ரூபாய் கட்டணங்களைக் கொண்டது. முப்பது ரூபாய் திரையை ஒட்டியும். ஐம்பது ரூபாய் குஷன் இருக்கை கொண்டதுமாய் இருந்தது. ஒருவன் டிக்கட்டை ஆய்வுசெய்து ஆனுப்பியிருந்தான். நான் முப்பது ரூபாய் டிக்கட்டில் சென்று அமர்ந்திருந்தேன். திரையரங்கம் இருளாய் இருந்தது. சற்று நேரம் கழித்து வயதுகுறைந்த வாலிபப்பெண்கள் மூன்றுபேர் வந்தார்கள். சோதனைக்காரன் முன்னேபோகும்படி சத்தமாகச்சொன்னான். ஏறக்குறைய முன் இருக்கை முழுதும்  ஆண்கள் இருந்தார்கள். அப்பகுதிக்கு போக பெண்கள் தயங்கினார்கள். ஒரு பெண் வேணாம் வெளியே போய்விடலாம் என்றாள். சோதனைக்காரன் இப்போது சத்தமாகக் கத்தினான். “ஏம்மா உள்ளப்போங்க“ மூன்று பெண்களும் வெளியேப் போய்விட்டார்கள். சற்று நேரங்கழித்து மீண்டும் என்னைக்கடந்து போனார்கள். என் வரிசையில் நான்காவது இருக்கையில் அமர்ந்திருந்தவன். போங்கடி முப்பது ரூபாக்கு இந்த இடந்தான் வரும் என்றான். பெண்களுக்கு நன்றாகக்கேட்டு இருக்கும் ஆனால் அவர்கள் கேட்காத்துபோல சென்றார்கள். முன்னாடி இருந்தவர்கள் சத்தமாக சிரித்தார்கள். நான் அவனைத் திரும்பித் திரும்பி கோபத்துடன் பார்த்தேன்.  சற்று நரேம் கழித்து வாலிபர்கள் என் வரிசையில் காலியான இடத்திற்கு வந்தார்கள். அதே ஆள் முன்னபோங்கபா பிகர்லாம் வந்திருக்குது என்றான். முன்னே சென்ற பெண்கள் இருக்கையில் நுழைந்தபோது சிலர் சத்தமாகக் கத்தினார்கள். அவர்கள் பயந்து பின் இருக்கையைத்தேடி அமர்ந்தார்கள். இதுபோன்றப் படங்கள் இதுமாதிரி ஆட்களைத்தான் இழுக்கும்போல என்று படம் முடிந்தபிறகு நினைத்துக்கொண்டேன். 

சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை கேலிசெய்கின்ற விதமாகத்தான் எடுத்திருக்கின்றோம் என்ற நொண்டிசாக்கைச் சொல்லி தப்பிவிடமுடியாது. இப்படியெல்லாம் சமூகத்தில் நடக்கிறதா? என்கிற கேள்விகளை எழுப்புவதாக இருக்கவேண்டுமேத்தவிர. அந்த அவலங்களைப் பார்வையாளனையே செய்யத்தூண்டுவதாக இருக்கக்கூடாது. உலகப்படங்களில் எதார்த்தம் கொட்டுகிறது, கக்குகிறது என்கிறவர்கள். அதைத்தொடர்ந்து பார்க்கிற புதிய இளைஞர்கள் சுருக்கமான எதார்த்தமற்ற காட்சிகளின் மூலம் பார்வையாளனை நுனி இருக்கையில் அமரவைத்து சந்தோஷப் படுத்திவிடலாம் என்று நினைத்தால், அது தமிழ் சினிமாவை மீண்டும் பாதாளத்தில் தள்ளும் செயல்தான். 

இதற்குத்தான் எங்களின் நண்பர் ஒருவர் தமிழ் சினிமாக்களைப்பார்த்து நல்ல கலைஞனாக உருவாகமுடியாது என்று அடிக்கடிச் சொல்வார். (அதில் முழுமையான நம்பிக்கையில்லை என்றாலும் யோசிக்வேண்டியிருக்கிறது) என்னயிருந்தாலும் மலையாளப்படங்கள் ஏற்படுத்தும் மன நிறைவை புதிய தொழில் நுட்பங்கள் பேசும் இளைஞர்களாலும் ஏற்படுத்த முடியாதது தமிழின் தொடர் சோகந்தான்.
ஜேடி 


Tuesday, May 14, 2013

கவிதை,

முகத்தின்  நகல்

அம்மா மேல் அண்ணத்தில்
சற்று நீண்ட
வெளிர் நிற பல்
உனக்கு எத்தனை அழகாய் இருந்தது.

பச்சை மிளகாய், சற்று உப்பு
கேழ்வரகின்  
பச்சைக்கதிர்களை உதிர்த்து
அம்மியில் அரைத்த
உன் ஆள்காட்டி விரலைச்
சூப்பியபோது
கண்சிமிட்டி கண்சிமிட்டி
உன் முலைப்பாலை ருசித்த
மகிழ்வு இருந்ததம்மா

என் பசியைத் திசைதிருப்ப
இடது கன்னத்தை 
கடித்து முத்தமிட்டபோதும்
முந்தி அழுந்திய
உன் ஒற்றை பல்லின் பதிவை
நோவாக
நான் உணரவேயில்லையம்மா

அம்மா,
மலைகளில் புதைந்த செல்வம்
காடுகளின் விரிந்த செழுமை
பனிகளின் மென்குளிர்ச்சி என்பதை
உணராத பால்யத்தில்
உன்னை இழந்திருக்கிறேன் என்பது
இப்பொழுது புலப்படுகிறது

 நகல் ஏதுமற்ற நிலையில்
உன் முகம் எப்படி இருந்ததென்று
திரும்பத் திரும்ப நினைவுகூறுகிறேன்.
அப்பொழுதெல்லாம்  படிய வாரிய
கறுத்த மயிர்களில்
ஒன்றிரண்டு வெள்ளை மயிர்களும்
மென் கறுப்பில்
கோபம் அறியாது
சாந்தம் வழியும் முகத்தில்
வெளிர் நிற
நடுப்பல்லின் அழகையுந்தான்
என் கண் கண்டெடுக்கிறதம்மா.

ஜேடி

Wednesday, May 8, 2013

கவிதை,



மழை

கணப்பொழுதில்
மின் விழுதை  
நெடுந்தொலைவுக்கு
பரப்பிச்செல்கிறது வானம்.

வானம்தொடாத மேகமும்
நிலவின் குளிர்ச்யை ருசித்துத்திரியும் காற்றும்
சாதிச்சண்டையின் ஓங்காரத்தோடு மோதி
முழக்கங்களை எழுப்புகின்றன

ஏனோத்தெரியவில்லை
நுனிப்புல்லில் பனிப்பூவை
தரிசிக்கமுடியவில்லை 

தார் பூசாத மணல் பூமியில்
பாதம்
பஞ்சு மிதித்ததை உணர்வைதில்லை

சாலையின் தண்ணீரை
விளையாட்டுக்குக்கூட சிதறடிக்க முடியவில்லை

கழனிக்காட்டில்,கால்வாயில், ஏரியில்
குரூரமானவன்
காய்ந்த சருகைக் கொளுத்தும்போது
கபடி வீரன்
எதிரியைத் துரத்தி அடிக்கப்பாய்வதுபோல்
மிஞ்சிய பசுமையும்
கருகி கரிக்கட்டையாகிறது

பூமியின் அரசியல் வாதிபோல்
நீலமும், வெண்மையும், மஞ்சளும்
மாறி மாறி வேடிக்கைக்காட்டும் வானமே
உன் பிறப்புறுபிலிருந்து
மூத்திரத்தையாவது பெய்தல் கூடாதா?
எங்கள் உச்சந்தலை
சிறிது குளிர்ச்சியை 
உணர்ந்து இளைப்பார.
ஜேடி

Sunday, May 5, 2013

சிறுகதை,

                              முகம்

பலிபீடம் சுவர் நடுவில் பெரிய சிலுவை. சிலுவை தரம் வாய்ந்த மரத்தால் ஆனதுதான். மினு மினுப்பான உட்பிரைமருக்குமேல் சிவப்பு நிறத்தில் சிறுசிறு வண்ண விளக்குகள் விட்டு விட்டு எரிந்தன. உயர்ந்த வலைவான சுவர்கள் வெண்நிறத்தைப் பூசிக்கொண்டிருந்தது. அங்கங்கே அழகிய உயிரற்ற பூக்கள் சுவர்களில் பூத்திருந்தது. கீழே அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான டேபில், அதில், கிறிஸ்துவிடம் அழைத்துச்செல்கிறேன் என்று சொல்வதற்கான அனைத்துப் பொருள்களும் இருந்தது. விசுவாசிகள் பலிபீடத்திற்குள் நுழைந்துவிடாதபடி எல்லையை வகுக்கும் விதமாக அலங்காரமான மரக்கதவு இரண்டடி உயரத்தில் இருந்தது. சிலுவையின் இருபக்கங்களிலும் இரண்டு கிறிஸ்துகள். ஒன்பதிற்கு ஆறு என்ற அளவிற்குள் பிரமாண்டமாய் இருந்தார்கள். இடப்பக்கத்தில் இருந்தவர் மலைப்பகுதியில் ஜெபித்துக் கொண்டிருந்தார். இரண்டு முன்று சிறு பாறைகள் பக்கத்தில் பக்கத்தில் இருந்தது. பாறை பொன்னும், ஜீவாலையும் கலந்த நிறத்தில், ஒரு மாதிரி கண்ணை ஈர்க்கும் விதமாக இருந்தது. பாறையின் இடுக்கிலிருந்து பக்க வாட்டாக சில பூண்டுகள் வளர்ந்திருந்தது. கிறிஸ்து பாறையை ஒட்டி முழங்கால் பணிந்திருந்தார். இரு கரங்களின் விரல்களைக் கோர்த்தபடி பாறையின் மீது வைத்திருந்தார். விரல்கள் மிக இறுக்கமாக மூடிவைத்திருப்பதுபோல் இருந்தது.  லேசான இளஞ்சிவப்பு நிறத்திலான மேல்போர்வையை வலப்புறத் தோளில் போட்டிருந்தாலும், இடப்புறத் தோளையும், கையையும் மைறைத்திருக்கவில்லை. இடது தோள்பகுதியிலிருந்து ஒரே தையலில் ஆன வெள்ளை அங்கியும், வலது தோளிலிருந்து லேசான இளஞ்சிவப்புப் போர்வை பாதம் வரையும் மூடியிருந்தது. கால் பகுதியும், அதன் சுற்று வட்டங்களும் அடர்பச்சையும், சற்று மஞ்சளும் கலந்த புற்கள் பசுமையாக இருந்தது.  கிறிஸ்துவின் வலப்பக்கத்திற்கு பின்னாக அழகழகான மஞ்சள் மலர்கள் இரவு பகல்வித்தியாசம் இல்லாமல் பூத்திருந்தது.

கிறிஸ்து தலையை லேசாக வானம் பார்த்தவாறு வைத்திருந்தார். கன்னத்தில் லேசாகவும் மோவாய்கட்டையில் மட்டும் சற்றுக் கூடுதலாகவும் மயிர்கள் இருந்தது. வானத்திலிருந்து சூரியக்கதிர்கள் சிகப்பு, மஞ்சள், பச்சை கலந்த நிறத்தில் தலைக்குப்பின்னாகப் பிரகாசித்தது. கிறிஸ்து வடக்கு பக்கமாக முகத்தையும், தெற்கு பக்கமாக முதுகையும் காட்டியவாறு ஜெபித்திருந்தார். வலது பக்கத்தின் கன்னம் மட்டுமே தெரிந்திருந்தது. சந்தனமும், ரோஜா இதழ்களும் குழைத்த நிறத்தில் வழுவழுப்பாக இருந்தது. கன்னம் அழகுதான் ஆனால், கன்னத்தின் மயிர்களைவிடச் சற்றுக் கூடுதலாக தாடி மொத்தையாக இருந்தது.

இடப்பக்கம் இருந்த கிறிஸ்து ஆடுமேய்த்துக்கொண்டிருந்தார். உயரமான மலைசார்ந்த பகுதிதான். சுற்றி பாறைப்பகுதிகள். இடது பக்கமாகச் சற்று உயரத்தில் நீர்வீழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது.  அது, வானத்தின் நீலமும் மின்னலின் வெளிச்சமும் கலந்த நிறத்தில் இருந்தது. கிறிஸ்துவின் பாதங்களைச் சுற்றி பசுமை அடர்ந்த புற்கள். அவ்வளவு அற்புதமான பசுமை. செழித்த பூண்டுகள். எப்போதும் குளிர்ச்சியை உள்வாங்கியதால் தங்கள் இயல்பான நிறங்களில் இருந்து மாறாத பாறைகள். கிறிஸ்து நடுவாக நிற்கிறார். சிறிய ஆட்டுக்குட்டியை வலது மார்பில் அணைத்துக் கொண்டிருக்கிறார். இளஞசிவப்பான போர்வையைத் தோளில் போர்த்தியவாறு இருக்கிறார். இடது கையில் குடைக்காம்பின் வளைவு வானக் குச்சியை வைத்திருக்கினறார்.

சற்று உயரமான குச்சியைப் பிடித்திருந்ததால், இடதுகை முழங்கைவரை மடங்கி இருந்தது. தோளில் போர்த்தியிருக்கும் போர்வை இடது முழங்கையோடு மடிந்தவாக்கில் தொங்கிக்கொண்டிருந்தது. கழுத்திலிருந்து பாதம் வரை குறுக்குத் தையலில்லாத அங்கி மிகவும் வெண்மை நிறத்துடன் இருந்தது. அங்கி நெடுகவும் அதிக மடிப்புகள் இல்லை. அங்கி, பாதம் தெரிகிற அளவில் இருந்தது. வலதுகாலை முன் வைத்துக்கொண்டிருந்தார். 

கோணல் இல்லாத விரல்கள் வரிசை, ஒரு தொடங்கு புள்ளியின் கணக்கியலைச் சொல்லித்தருவதுதாக இருந்தது. பாதத்தின் மொழு மொழுப்பானத்தன்மை  மெழுகின் வார்ப்புபோல் இருந்தது. முட்டிக்காலுக்கு சற்று உயரமாக இரண்டு ஆட்டுக்குட்டிகள் வலதும் இடதுமாக இருந்தது. அவைகள் வெளுக்கப்பட்ட வெண்மையாய் இருந்தது. இடது பக்க ஆடு அன்னாந்து கிறிஸ்துவைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தது. அந்தக்குட்டி வலது பக்க ஆட்டைவிட சற்று மெலிந்து இருந்தது. அதற்கு முன்னங்காலின் வலது கால், இடதுகாலைவிட உயரம் கொஞ்சம் குறைந்ததாக இருந்தது.  

வலதுபக்க ஆடு குனிந்து இரை எடுத்திருந்தது. புற்களின் உடல் பகுதியெல்லாம் மென்றுவிட்ட நிலையில்  வால்பகுதி மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டிருந்தது. இடது பக்க ஆட்டைவிடச்  சற்று குண்டாக இருந்தது. ஆனால் இரண்டுமே கிறிஸ்துவின் கால்களை ஒட்டியவாறு இருந்தது. கிறிஸ்துவிற்கு நைல் நதியின் ஆற்றில் தலைக்கசக்கிய மயிர்கள் லேசானக்காற்றில் அலைவதுபோல் பிரிந்து சரிந்து விழுந்திருந்தது. தலையை லேசாக வலது பக்கம் சாய்த்திருந்தார். சுருக்கமற்ற நெற்றியின் கீழ், வளைந்த புருவங்களின் மயிர்கள் முகத்தின் அழகைக் கூட்டியிருந்தது. பார்வைக் கீழ்நோக்கியிருந்ததால் கண் பாதுகாப்புக்கரங்களால் சற்று மூடியவாறு இருந்தது. முரட்டுத்தன்மை யில்லாத மீசையும் தாடியும் ரசிக்கும்படியாகவே இருந்தது. ஒட்டியும், அதிகமாக உப்பியும் இல்லாதக்கன்னத்துடன் ஒட்டுமொத்த  முகம் சாந்த சொரூபமாய் இருந்தது.

அவனுக்கு என்னப் பிரச்சனையோ தெரியவில்லை. ஆலயம், தினந்தோறும் காலை பத்து மணிமுதல், இரவுவரை திறந்தே இருக்கும். ஒரு நாள் திடீரென நுழைந்தான். பிரசங்கம் செய்கிற இடத்தில் இருந்த மைக்கைப் பிடுங்கி எறிந்தான். இடப்பக்கம் நின்றிருந்த கிறிஸ்து. சுக்குநூறாக நொறுங்கிப்போனார்.  சற்று நாள் கழித்து இடப்பக்கத்தில் புதிதாக ஒரு கிறிஸ்து வந்தார். அதே மலைப்பகுதிதான், அதேச் சுழல்தான். இடது பக்கத்தின் உச்சியிலிருந்து மொத்தையான நீலமும் உப்புக்கலவையின் சாரமும் கலந்த நிறத்தில் நீர்வீழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. எரியும் கதிர்பட்டு பாறைகள் கறுத்து இருள் அடர்ந்ததுமாக இருந்தது.  கிறிஸ்துவைச் சுற்றி புற்களின் பசுமையே இல்லாமல்,  எரிக்கப்பட்ட கரித்தூளுடன், அடர்பச்சை நிறத்தைக் கலந்து கத்துக்குட்டி பெய்ண்டர் திட்டுதிட்டாக அடித்தார்போல் இருந்தது. சிறிய ஆட்டுக்குட்டியை மார்பில் அணைத்துக் கொண்டிருக்கிறார். தோளின் மேல் இருந்த போர்வை இடது முழங்கையை முட்டித் தொங்கிக்கொண்டிருந்தது. கறுப்பும், பொடியும் கலந்த நிறம் அழுதுகொண்டிருந்தது. குடைமுனைபோல் வளைந்த குச்சி இடது கையில் இருந்தது. கழுத்து பகுதியில் இருந்து, பாதம் வரைத்தொங்கும் அங்கி இரண்டு மூன்று குறுக்குத்தைய்லகளை சுட்டியது. அங்கியில் கணக்கற்ற மடிப்புகள் இருந்தது. வெள்ளையும் ஊதாவும் கலந்த நிறத்தில் அங்கி இருட்டை நிரூபித்திருந்தது. இடப்பக்கம், வலப்பக்கம் ஆட்டுக்குட்டிகள் லேசாக சிகப்பு, அதிகமாக கறுப்புக் கலந்த நிறத்தில் இருந்தது. அதன் கண்கள் குருடுடாக்கப் பட்டிருந்தது. இரண்டு குட்டிகளுமே எதிர் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுபோல நின்றிருந்தது. கிறிஸ்துவின் தலைமயிர் விக் வைத்ததுபோல் கவிழ்த்திருந்தது.  சுருக்கப்பட்ட நெற்றியின் இறக்கத்தில் வளைவற்ற புருவங்களில் மயிர்கள் இருந்தது. கன்னங்களில் மிதமான மயிர்களாலும், தாடி சற்று தொங்களாக இருந்தது. மார்பில் இருந்து ஒட்டியக்கழுத்து சற்று பொறுத்தமற்ற வகையில் எக்கியதுபோல் இருந்தது. அதிலும் மார்புசதையில் இருந்து இழுத்து பிடித்ததுபோல் கழுத்து நரம்புகள் தூக்கலாக இருந்தது. முகத்தின் கண்களில் சுற்று சதைகள் உள் இழுத்ததுபோல் இருந்தும், கண்கள் மட்டும் வெளியில் எழுந்ததுபோல் உருண்டு இருந்தது. அக்கண்களில் துளியும் சாந்தம் இருக்கவில்லை. கிறிஸ்துவின் சாய்ந்த தலையில் ஒழுகும் தாழ்மையும் புலப்படவில்லை.

கடந்த மாத்ததில் இடப்பக்கம் கிறிஸ்து உடைந்து புதிதாக மாட்டப்பட்டது முதல் நான் கவனிக்கின்றேன். முன்பு இடப்பக்கம் கிறிஸ்துவிற்கு நேராக ஜெபித்தவர்கள். தற்போது வலப்பக்கம் இருக்கும் கிறிஸ்துவிற்கு நேராக ஜெபிக்கிறார்கள்.

அனேகமாக, கடவுள்களின் முகங்களை ஒழுங்கற்றதாக சித்தரித்தாலே மதங்கள்... ?தான். 

ஜே. டேனியல்