Saturday, May 4, 2013

கடிதம்,

         என் எழுத்தை யாருக்காகவோ, நானே வாங்கனுமா?

இன்று (05.05.13) தஞ்சாவூர் மாவட்டம், எலங்கார்குடி என்ற ஊரிலிருந்து கே. ராஜகோபாலன் என்கிற ஒருவர் போன் செய்தார். “டேனியல் தானே” என்றார், கைபேசி சற்று நேரம் கரக்முரக் என்றது. ‘நான் ஒரு ரூபாய்க் காயிண்போட்டுப் பேசுகிறேன். சரியாக் கேட்கவில்லை. மறுபடியும் போடுகிறேன் இருங்க‘ என்றார், கட்டாகிவிட்டது.
மீண்டும் சற்று நேரங்கழித்து “டேனியல் தானே”
‘ஆமாங்க, நீங்க‘ என்றேன்.
‘உங்க ‘ஜேடி’ நாவலை வாசித்தேன். அற்புதமாக இருந்தது. ஒருவாரம் முன்பு படித்தேன். அதிலிருந்து உங்களிடம் பேசவேண்டும் என்று முடிவுசெய்து அதன் பதிப்பாளரைத் தொடர்பு கொண்டு, டேனியலின் போன் நெம்பரைத் தரமுடியுமா என்றுக்கேட்டேன். நான் வேலையா இருக்கிறேன். அங்க இருக்கிறேன். பிறகு தருகிறேன்‘என்றார். நாலைந்து நாள் ஆனபிறகும் தரவில்லை. மறுபடியும் நேற்று தொடர்பு கொண்டேன். அதன்பிறகு தந்தார்‘என்றார்.

மேலும், ‘நீங்க என்ன செய்றீங்க என்று விசாரித்தார். நான் பதில் சொன்னேன். எனக்கு எழுபத்தி இரண்டு வயது ஆகிறது. ரயில்வேயில் வேலைசெய்து ஓய்வுபெற்றவன்‘

‘அப்படியா, ரொம்ப நன்றிசார்‘ என்று சொல்லிக்கொண்டே இவர் மற்ற இலக்கியங்களை வாசிக்கிறவரா? சந்தேகம் வந்தது. ‘நான் தஞ்சாவூர் லைபிரரியில் புதிதாக எதுவந்தாலும் எடுத்து வாசிப்பேன். அப்படிப் பார்த்தபோதுதான் உங்கள் புத்தகம் இருந்தது. நாவல் சமூகத்தின் சுற்று வட்டங்களில் இருந்து எடுத்ததா? இல்லை உங்கள் சொந்த வாழ்க்கையா?“ என்றார். 

நான் ‘சொந்த வாழ்விலிருந்து எடுத்ததுசார்‘ என்றேன். சொந்த வாழ்வானாலும் அதன் சித்தரிப்பு அவ்வளவு நேர்த்தியாக வந்திருக்கிறது. மேலும், அவராகவே, நீங்கள் எழுதுவதை நிறுத்திவிடக்கூடாது. தொடர்ந்து எழுதவேண்டும்‘ என்றார். ‘நான் மீண்டும் ரொம்ப நன்றிசார்‘ என்றபோது எதிர்முனையின் இணைப்புக் கட்டானது.

அதன்பிறகுதான் ‘ஜேடி‘ நாவல் எழுதப்பட்ட சூழல், வெளியிட்ட சூழல் எனக்கு நினைவாகச் சுழன்றது.  நாவல் எழுதும்போது இலக்கியத்தின் பின்புலம், அறிமுகம் ஏதும் இல்லாமல்தான் எழுதினேன். அந்த நிலையிலும் எழுத்து என்பது அள்ள அள்ளக் குறையாத கடல் நீரையாய் இருந்தது. எழுதி முடித்தேன். பல சந்தர்ப்பங்களில் என் முகத்திற்கு நேராக குத்துகள் விழுந்தது. ஆனால், அவைகள் என்னைப் பாதிக்கவில்லை. மேலும், ஆர்வம் கூடிக்கொண்டுதான் இருந்தது. கையில் பத்தாயிரம் எடுத்துக்கொண்டேன். இரண்டாயிரத்து ஐநூறு செலவுசெய்து தட்டச்சு அட்டைப் படம் எல்லாவற்றையும் பல நண்பர்களின் உதவியுடன், சீடியிலிருந்து நேரடியாக பிடிஎப் பைலாக மாற்றி, அச்சுப்பாரம் ஏற்றுகிற அளவில் தாயாராக எடுத்துச்சென்றிருந்தோம். திருவல்லிக்கேணியில் ‘ஜேடி‘யின் பதிப்பாளரிடம் பத்தாயிரம் மற்றும் சீடியைக்கொடுத்துவிட்டு வந்தோம். அந்நேரம் அப்பதிப்பகம், அங்கொன்றும், இங்கொன்றுமாக புத்தகம் வெளியிட்டுக் கொண்டிருந்தது.

வெளியீட்டு நாளில் நூறு புத்தகங்கள் கொடுத்தார்கள். 100x100= 10,000/- அந்தநேரம் இலக்கிய நண்பர்கள் கூட்டுக்குடும்பத்தின் தலைவர்கள் என்ற அளவில் என் மதிப்பு இருந்தது. குடுபத் தலைவர்கள் எதைச்செய்தாலும் குடும்பத்தின் தனி நபர்களின் சுயமரியாதை, நலனையும் கணக்கிடுவார்கள், என்ற நினைப்பு இருந்தது. நண்பர்கள் கூட்டாக முடிவு எடுக்கும் விதமாக புத்தகம் விலை நூறு ரூபாயாக இருக்கிறது. வெளியீட்டில் என்ன விலை கொடுக்கலாம் என்றக்கேள்வி எழுந்தது.  அப்போது யார் யார் என்ற முகப்பரிச்சயம் கணித்திருக்கவில்லை. கூட்டத்தில் ஒருவர் ஐம்பது ரூபாய் வைக்கலாம். சில்லறைக் கொடுப்பதற்கு வசதியாக இருக்கும்’ என்றார்.

எனக்கு அங்குதான் பிறந்தது, இலக்கியத்தின் முதல் ஞானம்.

எண்பது புத்தகங்கள் இனாமாக போய்விட்டது என்பதில் துளியும் வருத்தம் இல்லை. ஆனால், தினந்தோறும் ஞானத்தின் கீற்றுகள் எங்கிருந்து கிளம்புகிறது என்பதை உள்வாங்கிக் கொண்டேயிருந்தேன். நான்கு வருஷத்தில் தற்போதைய இலக்கியம், வியாபாரத்தின் உச்சகட்டமும் கூட என்பதைப் புரிந்துகொண்டேன். (ராஜகோபாலன் சொன்னபிறகுதான் ஜேடி புத்தகம் நூலகத்தில் இருக்கிறது என்பது தெரியும். இத்தனைக்கும் நூலகத்தின் விண்ணப்பத் தொகையைக்கூட நான்தான் செலுத்தினேன்.) பல பிரச்சைனைகளுக்கு மத்தியில் மீண்டும் சொந்த செலவில் சிறுகதைத்தொகுப்பை வெளியிட்டேன்.

‘அப்பா நானூறு புத்தகம் நல்ல விலைக்குப் போய்விடும் என்பதை மனதில் வைத்துக்கொள். கீழாண்ட வீதியில், பின் அட்டையில் இருக்கும் உன் முகத்தைக் கிழித்துவிட்டு எடைத்தட்டில் நிறுத்தும்போது‘ என்று  என் சின்ன மகன் ஒரு வருஷம் கழித்து, பரண்டில் இருக்கும் புத்தகத்தைப்பார்த்து சொன்னபோதுச் சிரித்துக்கொண்டேன்.  

எனக்கு நானே விவாதமாய், விமர்சனமாய் வைத்தபிறகு, புதிய சிறுகதைகள் எனது கணினியின் பேஜ் மேக்கரில் 200 பக்கம் பிரிண்ட் எடுக்க நெருங்கிக்கொண்டிருக்கிறது.‘ என்பதை மூத்த வாசிப்பாளர் ராஜகோபாலன் அவர்களிடம் சொல்லவில்லை.

என் எழுத்தை யாருக்காகவோ, நானே காசுகோடுத்து வாங்கும் அவசியம் இல்லாததால்.
ஜேடி

Sunday, April 28, 2013

கடிதம்



நான்காம் ஆண்டு நிறைவு

    நான் இன்டர்நெட் கனைஷன் வாங்கி ஐந்து வருடம் தொடங்கியுள்ளது. இதுவெல்லாம் ஒரு விஷயமா என்று நினைக்க வேண்டாம். 
எனக்கு இதுதான் விஷேஷம். என் பிறந்தநாள் விழாவை கொண்டாடியதில்லை. அதை எப்போதுமே அலட்சியப்படுத்தியுள்ளேன். அதைவிட இந்தக் கனைஷனைத் தொடர்ந்து வைத்திருப்தில்தான் மகிழ்வுகொள்கிறேன். என் வாழ்க்கையில் இதைத்தவிர எந்த ஒன்றும், இவ்வளவு நாள் தொடர்ந்து தடையில்லாமல், (ஒயர் அறுந்து தடை வந்ததுண்டு) நான் வைத்திருந்ததேயில்லை. பணம் கையில் இருக்கும்போது படிப்பு, சில பொருள் என்று மிக மிக ஆசையாய் தொடங்குவேன். அதற்கு மேலும் முதலீடு தேவைப்படும்போது தொடரமுடியாமல் தடைபட்டு ஆசை எல்லாம் நிறைவேறாமல் போகும். ஆனால், இன்டர்நெட்டை மட்டும் எந்தக் காரணத்தைக்கொண்டும் இழக்கவே முடியவில்லை.

இதற்கு இன்னொரு காரணம் நான், வலைப்பூவைத் தொடர்ந்து வைத்துள்ளதாகும். ‘நம்புழுதி’ வலைப்பூ தொடர்ந்து நான்கு வருஷம் முடிகிறது. காஞ்சிபுரத்தில் தீவிரமான இலக்கிய ஈடுபாடு உள்ளவர்களில்கூட முதலாவது வலைப்பூவைத் தொடங்கி எழுதிவந்தவன் நானாகத்தான் இருக்கும். எனக்குத்தெரிந்து வலைப்பூவில் நல்ல விஷயத்தையேத் தொடர்ந்து தந்துவந்திருக்கிறேன். அதன் வாசிப்புப் பக்கம் 14,215 என்று காட்டப்படுகிறது. இதற்குப்பின்னால் எத்தனை வறுமையிலும் இன்டர்நெட்டைக் கட்செய்யாமல் கட்டணம் செலுத்தியதுதான் நிகழ்ந்திருக்கிறது. முகப்புத்தகமும் அப்படிதான் என்று நினைக்கிறேன். ஆனால், இதுவரை யார் இந்தப்பக்கங்களைப் பார்த்தது, வாசித்தார்கள், ஏதாவது தகவல் சொன்னார்களா என்றால் மிகமிகச் சொற்பம்தான். 
 
நான் முகப்புத்தகத்தில் பார்க்கிறேன். சில பிரபலமான எழுத்தாளர்கள், அல்லது பெண்கள் ஒரே ஒரு வரி, ‘அந்தத் தெருமுக்கில் வடை சாட்பிட்டேன், நன்றாக இருந்தது.’ என்றால் கூட ‘பசிக்கு எறும்பு உணவு திருடுவதுபோல்‘ வரிசையாக வருகிறார்கள். லைக் போடவும். கருத்து சொல்லவும். அப்படி வருவது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது, நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. இவைகளைத்தாண்டி எனக்கும் சில நண்பர்கள் லைக்போடுகிறார்கள். அவர்களின் பக்கங்களைச் சென்று பார்த்தால், அவர்கள் உண்மையிலேயே தீவிரமான இலக்கியப் பணியாற்றுகிறவர்கள். இந்த சிலருக்காக தொடர்ந்து எழுதவேண்டி இருக்கிறது. என்று சொன்னால் அது ஐம்பது விழுக்காடுதான் உண்மை. முக்கியமாக என் சிரசின் தளத்தை விரிவு படுத்தவும், சிரசின் பாரம் இறக்கி வைப்பதற்காகவுமே மீதி விழுக்காடு, இன்டர்நெட்டை வைத்திருக்கிறேன்.

பசித்தலும், பஞ்சமும் என் வலைப்பூ இயங்குவதை கட்டுப்படுத்திவிடாது. (கூகுளும், கரண்ட்டும் தவிர) பாரபட்சமற்று. சகலத்தையும் தடையற்றுக் கொடுக்கும் இன்டர்நெட் நான் தொடங்கி ஐந்தாம் ஆண்டு தொடர்கிறது. ‘நம்புழுதி‘ வலைப்பூ மற்றும் முகப்புத்தகம் நான்காம் ஆண்டை முடிக்கிறது.
சமகாலத்தில் இருந்தும், இப்பணிக்கு ஊக்கம் தராத அத்துனை தோழர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் நன்றி.. நன்றி.

 ஜே. டேனியல்

Saturday, April 27, 2013

கவிதை,



எல்லையை வகுக்கும் தெரு நாய்கள்

எதிரி
சுவர்ஒட்டி விளம்பரமாய் இருந்தாலும்
கிழித்தெறியும் வன்முறையாளன்,

பாதுகாப்பில்லை
பத்திரம், பத்திரமாக இருக்கட்டும்
எனப் பக்கத்தில் கொடுத்திருந்தால்
பட்டாவில் பெயர் மாற்றிக்கொள்ளும்
பாதக மோசக்காரன்,

மென்சதைகள் துளிர்க்காதவளை
வன்புணர்வுக்குத் தூக்கும்
இரக்கமற்ற கொலைகாரன்,

கிழம் பூண்டு விழுவோர்,
தெருவோரம் அழுவோர்,
இருப்பிடம் தேடி
ஒரு வேளை நிம்மதியைத் தந்ததின்
இன்பங்களை ரசிப்போர்,

இத்தனை வகையாரில் யாரும்
மாற்றுச் சிந்தனையே அற்றவர்கள்போல்
ஒரே கதகதப்பில் உறங்கவைக்கும்
மென்மையான இருளை
அலங்கோலமாக்குவது
தெருநாய்கள் மட்டுமே.


எதற்காகவோ ஒரு நாய்
எழுப்பும் அருவருப்பான ஊலையிடுதலுக்கு
பல மூலைகளில் இருந்து
பின்னணியை கட்டமைக்கும் நாய்கள். 

நாய்கள் தனக்கு
உப்பிட்டவனை மட்டுமே
நேசிக்கப் பழகுகிறது
குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே
தான் உழலவேண்டும்
என்றக் கட்டாயத்தில் வாழ்கிறது

பக்கத்துத் தெருவில்
வாழும் நாய் தவறுதலாக
நுழைந்துவிட்டால்
கூட்டாகச்சேர்ந்து
அதன் குரல்வலையைப் பிய்த்து
துடிக்கத்துடிக்கச் சாகடிக்கிறது

இதன் உச்சகட்டமானக் கொடூரம்
வந்தது குழந்தை நாயாக இருந்தாலும்
அதன் உயிர்த் தப்புவதேயில்லை.

பெண் நாய்
தனக்கு இனக்கமானவற்றோடு
தன் இளமையைச் 
சுகித்துக்கொள்ள முடிவதேயில்லை
வலுவுடன் திரியும் நாய்
வாலுக்கு மறைவின் வழியில்
வழியும் காம ரசத்தை
நக்கிக்கொண்டே அலைகிறது

அதன் எல்லைக்குள்
பருவமாகும்
எல்லா பெண் இளமையையும்
தான் மட்டுமே அனுபவிக்க
பல வீடுகளில் இரந்து வாழ்கிறது


ஆரம்பம் முதல் முடிவுவரையான மனிதனுக்கு
வெட்ட வெளிகளில்
அலங்கோலமாகப் புணர்வையும்
கூட்டுப்புணர்வுக்கானப் பயிற்சியையும்
மனிதனோடு இணைந்து வாழும்
எல்லை வகுக்கும் தெரு நாய்கள்
கற்றுக்கொடுக்கிறது.

ஜேடி

Friday, April 26, 2013

கவிதை

                     நலம்,  நாதி, நாடு

கடலுக்கு நேராக  வானத்தில் 
பறக்கும்போது
எனது நாடு
இந்தியா என்பதில் பெருமை.

விமானச் சக்கரம்
தலைநகரில் தரைதட்ட
தமிழ்நாட்டில்
கால் பதியத்தான் வாழ்வு.

தடதடக்கும் சத்தம்
மிதமாகி
சென்ட்ரலை குறுக்கு வெட்டாகக் கடந்து
அண்ணாவின் நகரத்தை
அடைந்துவிட்டால் நிம்மதி.

இருதலை ஓட்டிகளின் வாகனம்
கோபுரத்தைக் கடந்து
நுழைந்தபோதும்
தொப்புல் கொடி அறுந்த இடத்தில்தான்
நல்ல தூக்கம்.

இப்படி
நம்பிக்கையுடன்தான்  உருண்டது
இரு சக்கர வாகனம்

அண்ணன், தம்பிகள்
ஓடிவந்தார்கள்
 தம்பி
கிராமங்களில்
மேலாண்டை வீதியார்
சோறு சமைக்கும் பாணையில்
நெருப்பைச் சமைத்து
ஊட்டிவிட்டார்கள்
ஜீரணம் ஆகாத நெருப்புகள்
வயிரை அரிக்கிறது,

நீ போகாதே, போகாதே, தம்பி போகாதே...

நலமற்றவர்களாய்
நாதியற்றவர்களாய்
நாடற்றவர்களாய்
போகிறோம் என்பதின்
எதிர்பதமாக வைத்துக்கொள்கிறேன்
அண்ணன், தம்பிகளே.

ஜேடி


Wednesday, April 17, 2013

சிறுகதை,

                                                                         பதில் கடிதம்


                       

 நமக்கான உறவின் வர்த்தகம் தடம் புரண்டுப் போயிருக்கிற நிலையில் அன்புள்ள மாமனே உங்களுக்கு, இக்கடிதத்தை  எழுதுகிறேன். ‘மாமனே’ என்பதை உயர் மதிப்பீடாகத்தான் விளிக்கிறேன்.  நம் உறவு சீராய் இருந்த கடந்த காலங்களில், என்  மீது  தாயிக்கு ஈடான அன்பு வைத்திருந்தவர் என்றும், சில நேரம் தங்களைப்போல் தன்னலம் மிக்கவர் இருக்க முடியுமா என்றும் கேட்டுக்கொண்டேதான் வாழ்க்கையைக் கடந்திருக்கிறேன்.  நம் இருவருக்குமான,  அல்லது குடும்பத்திற்கான, அல்லது சிநேகிதர்களுக்கான உறவுகளை, மனித ஜீவித நாள்வரை ஒரே மாதிரியாக  தடையின்றி வைத்துக்கொள்ள ஏதாவது சாத்தியம் இருக்கிறதா? அல்லது என்ன விதமான நடத்தையில் அப்படியான உறவை தக்க வைத்துக்கொள்ள முடியும்,  மிகச் சிறியவனான என்னால் அதை உணரமுடியவில்லை. பல உயர்நிலைகளில் அனுபவம் வாய்ந்த உங்களிடத்தில் வினவ முயற்சிக்கிறேன்.  இதை ஒரு கேள்வியாக  எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் அனுபவத்திலிருந்து நடை முறை சாத்தியத்தையேக் கோரி நிற்கிறேன்.

மாமனே, மரணக்கைதி, கருணை மனு கோரும்போதுதான்   ஜனாதிபதிக்கான அதிராத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது. மாமன் முறைக்கும் அதே அதிகாரம், குடும்ப உறவுகளில் இருக்கிறதை நான் நன்கு அறிந்திருக்கிறேன். இப்போதெல்லாம் அடிக்கடி உங்களை நினைவு கூறுகிறேன். அந்த நினைவு கூறலின்  பலனாக கடந்த காலங்கள் கண்முன்னே வந்து போகின்றன. நினைவில் வருகின்ற கடந்த காலங்கள், தற்போதைய நிகழ்காலத்தைப்போல வேகமாய் நகருவதில்லை. ஆமையின் வேகத்தை ஒத்திருக்கிறது.  இரவு நேரங்களில் உங்கள் வீட்டுக்கு வரும்போது எவ்வளவு அன்பொழுகக் கிண்டலடிப்பீர்கள். மீனும், கறியும் விஷேஷமாக செய்த நாளில்  வீட்டின் நடுக்கூடத்தில் உட்கார்த்தி  உணவிட்டீர்கள்.  தனியாக  சாப்பிட விட்டால், ஒரு அன்னியம்  தெரியும்  என்று  நீங்களும் கூடவே சாப்பிடுவீர்கள். பரிமாறும்பொழுது  உங்களுக்கு குறைவாக இட்டுக்கொண்டு, எனக்கு  இரண்டு  பீஸ் அதிகமாகவே வைத்துவிடுவீர்கள். விதண்டா வாதம் பேச அடிக்கடி அழைப்பீர்கள். அப்போதெல்லாம்  என் மீதிருந்த அன்பினால்தான்  இவைகள் நடந்ததென்று எனக்குத்தெரியாததல்ல. அதே சமயம் எப்போதெல்லாம் நிஜமான கோபம் ஏற்பட்டது என்பதையும்  அறிந்தவன்தான். அபோதெல்லாம் சிறு சிறு கல் காலை தடுக்கும் நிகழ்வுபோலவேதான், அவைகள் நடந்தது. இருந்தாலும் ஒரு நீண்ட இடைவெளி என் மனைவி, அதாவது உங்கள் தங்கை இருந்தவரை ஏற்பட்டதேயில்லை.

பிறகு எப்படியோ, இரவு வௌவால்கள் தலை கீழாய் தொங்கிக்கொண்டே இருப்பதுபோல குற்றமற்றவனின் கூடாரத்தில் தூக்கு கயிறுக்கொப்பான தண்டனைகள், நிராகரிப்பு வடிவில் குறுக்கும், நெடுக்குமாக என்னைச் சுற்றிக்கொண்டேயிருந்தது.   திரும்பத் திரும்ப யோசிக்கிறேன். பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதும் பாதையில் காலைத் தடுக்கிவிடும் சின்னக்கல்தான். குணிந்து எடுத்து ஓரம்போட்டு நடக்க உங்களுக்கும் யோசனை இல்லை.  நீங்கள் எடுக்காதக்கல்லை தொட்டு எடுப்பதற்கு எனக்கும் மனவிசாலம் இல்லை. யார் பெரியவர். யார், யாருக்காக குணியவேண்டும் என்று தாங்கள் கேட்கலாம். ஒரு உண்மையைச் சொல்லவேண்டு மென்றால் உங்கள் மீதான மரியாதை இன்றளவும் குறையவில்லை. நான் உங்கள் வீட்டுக்கு வருவதில், பல சிக்கல் இருக்கிறது. ஆனால், நீங்கள் அழைத்து விடுவதற்கு கொஞ்ம் மனது மட்டுமே வேண்டும்.  சின்ன அழைப்பை மட்டுமே ஏழு வருஷங்களாக எதிர்பார்த்தேன். யோசித்துப் பாருங்கள் நம் இருவருக்குமான இருப்பு தூர, தூரமான தேசங்களில் இல்லை. இரண்டு தெரு இடைவெளிதான். இதில் ஒருவர் முகம் ஒருவர் பார்க்காதது எவ்வளவு பெரிய சோகம்.

மாமனே இப்போதெல்லாம் ஏனோ அடிக்கடி உங்களை நினைக்கிறேன். திடீர் என்ன பாசம் என்று நீங்கள் எண்ணக்கூடும். நன்றாக நினைவு கூறுங்கள். எனக்கு எதையோ செய்யப்போகிறீர்கள் என்பதற்காக நான் எப்போதாவது சர்வாங்க தகனபலியாய் கிடந்திருக்கிறேனா? நீங்கள் எதையுமே செய்யப்போவதில்லை என்பதற்காக உங்கள்வாசல் ஏறாமல் இருந்திருக்கிறேனா?  எப்போதெல்லாம் அழைப்பு வந்ததோ அப்போ தெல்லாம் வந்து நின்ற நாட்கள்  உண்டுதானே. இருந்தாலும், ‘நீங்கள் இக்கடிதத்தைப் படிக்கும்போது நினைக்க வாய்ப்பிருப்பதுபோல்‘ சற்று கூடுதலாகத்தான் நான் திடீரென்று தங்களை நினைக்கிறேன்  என்று என்னை நானே விமர்சனம் செய்கிறேன். விமர்சனம் செய்கிற நானே, பிள்ளைகளுக்கு துணையை அங்கீகரிக்கும் நிலையில் இருப்பதால்தான். அடிக்கடி தங்களை நினைவுகூறுகிறேன் என்பது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், இந்த நினைவுகூறுதல் மேலோட்டமாக சந்தர்ப்பவாதம் என்று சட்டென்று யாராலும் சொல்லிவிடமுடியாது. அதற்குள், கடந்தகால ஆண்மா உலவிக்கொண்டே இருப்பதை, எவ்வேளையும் கடவுள் ஆவியை தரிச்க்கின்ற உங்களாலும் கண்டுணரமுடியாது. ‘இல்லை. இவன் எதையோக் குழப்பிக்கொண்டு இருக்கிறான்‘ என்று உங்களுக்குச் சொல்லத்தோன்றும். மாமனே நம்பமாட்டீர்கள் எங்களைப்போல தெளிவானவர்களை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. உலகத்தின் மிக நீண்டவாழ்வியல் கூறுகளின் வழித்தடங்களைச்  சுருக்கி மிகச் சிறியதாக கக்கத்தில் வைத்துக்கொடுண்டு அலைபவர்கள். ஆனால், துண்டு பீடிக்கு கையேந்துகிறவன்கூட துச்சமாய் எண்ணுகிற பின்னணி எங்களைத் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. அது விஷயமல்ல.

என் தனிப்பட்ட  பிம்பம் 1993லிருந்து 2006வரையான கால கட்டங்களில் ஒரு மாதிரியாகவும் 2006க்கு பிறகிலிருந்து ஒரு மாதிரியாகவும் உங்களுக்கு தோன்றுகிறது. முதல் கட்டத்தில் நான் தங்களுக்குப் பிடித்தமானவனாகவும். பின்வரும் காலகட்டத்தில் அயோக்கியனாகவும்  நினைக்கிறீர்கள். நானல்ல,  பொதுவாக  மனிதன் அப்படி இருக்கவே முடியாது.  நல்லவன் என்றால் கடைசிவரை நல்லவன். கெட்டவன் ஆரம்பத்திலிருந்தே கெட்டவன்தான். சமூக  அனுபவங்கள், படிப்பினைகள் தங்கள், தங்கள் பாதையில் செய்ல்பாடுகளை கட்டுப்படுத்தி வைக்க மட்டுமே உதவும்.  இதை மேலும் உறுதி செய்துகொள்ள வேண்டுமென்றால். என் வலைதளத்தில் இதற்கான கட்டுரை  இருக்கிறது. அது உங்களுக்கு சற்று, விளக்கமாக வாதிடும். அதைபார்த்து தங்கள் முடிவை மேற்கொள்ளலாம்.

மாமனே, என்னை வைத்து பிள்ளைகளை கணக்கிடவேண்டாம். அவர்களுக்குத் தனித்தனி அவயங்கள் இருக்கிறது. எனக்குப்பிடித்தமான ஒரு புத்தகம் வாங்கும்போது, மகன் ரேஷன் கடையில் சர்க்கரை  போடுகிறார்கள் அதை வாங்கியிருக்கலாம் என்கிறான். புதிய முயற்சியாக தமிழில் சினிமா வந்திருகிறது பார்த்துவருகிறேன் என்றால், மூணுமாதம் கழித்து டிவியிலேயே போடுவான் என்கிறான். மகன் பல விஷயங்களில் உங்களுக்கு நெருக்கமானவனாகவே இருக்கிறான். நானும் உள்ளுக்குள் ‘சந்தோஷப் பட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், எனக்கு நல்லதென்று படுகின்ற விஷயங்களில் நான் தொடர்ந்து உழல்கிறபோது, அவ்விஷயம் பிடித்தவர்களே கண்டுகொள்ளாமல் விடுகிற போக்கு இருக்கிறது. ஆக என்போக்கில, அவனுக்கு நாட்டமில்லாமல் இருப்பது சந்தோஷம்தான். ஆனால், என் இருப்புகளை தரிசிக்க நேருகிற  ஏதாவது ஒரு காலத்தில், அதன் சுகம் இன்னதென்று அறிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், அதற்கான எல்லாத் தரவுகளும், ஆவணங்களும் என் அறைகளைச் சுற்றிக்கிடக்கிறது. ஆனால், அப்போது நான் இருப்பேனா, சொல்லமுடியாது. அவன் என்பாதையே சிறந்தது என்று, அதில் நடக்கவோ, உதவாத ஆவணங்கள் என்று எல்லா தடத்தையும் அழித்துவிடவோ செய்யலாம். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.  ஏனென்றால், சிறு வயது முதல்  பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல் செய்யாமல் இருக்கிறான். என் பாதையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தமுடியாது. அவன் யோசனைக்கு எது நல்லது என்று படுகிறதோ, அதை முழு சுதந்திரத்துடன் செய்துகொள்ள அவனுக்கு உரிமை இருக்கிறதுதானே. அதற்குள்ளும் ஒரு நீதியின் விளக்கைக் கூடவே எடுத்துச்செல்வான் என்பதுதான் என் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதுதான் உங்களுக்கும் ஏற்புடையதான வழிமுறையாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

மாமனே, மகன் உயர்கல்வியை முடிக்கும்  தருவாயில் இருக்கிறான். இதுவரை ஒரு சம்ஸ்டின் முடிவுகளையும் என் கண்ணில் காட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதில்லை. தேர்வுமுடிவுகள் தனிமனிதனின் ஒழுக்கவிதிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாக இல்லை. எனக்குத்தெரிந்த பள்ளியிலேயே காலாண்டு, அரையாண்டுக்கான பனிரெண்டாம் தேர்வுத்தாள்களை, பதினோராம் வகுப்பு மாணவர்கள் திருத்தி மதிப்பெண் வழங்குகிறார்கள்  என்று  கேள்விப்படுகிறேன். இப்படியானச் செயல் எந்தத் தகுகியை நிறுபிக்க நடத்தப்படுகிறது என்றக்கேள்வி எனக்குள் இருக்கிறது. எல்லா இடங்களிலும் இந்த நிலை இருக்காது என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆகவே, தேர்ச்சியைக்காட்டும் அட்டவணைகள் எனக்கு திருப்த்தியளிப்தில்லை. இருந்தாலும், மகனை பொதுவாக கல்வியை முடிக்குமபோது எந்த அரியரும் வைத்திருக்காமல் வெளிவரவேண்டும் என்று எச்சரித்து வருகிறேன்.  அவனும்,  அது என்பாடு வெற்றியாய் முடித்து வேலையில் சேர்ந்துவிடுவேன் என்கிறான். மேலும், உங்கள் மகள் முடித்து நல்ல கம்பெனியில் வேலை செய்வதாகவும், அவளைப்போலவே எனக்கும் நடக்கும் என்று நம்பிக்கையளிக்கிறான். அவன் உயர் கல்வியை தொடங்கும்போதே அநேகப்புத்தகங்கள் உங்கள் மகள்தான் கொடுத்து உதவியிருக்கிறாள். அநேகமாக அவன் வாழ்வுக்கு வழிகாட்டுகிற செயல் என்றே நான் நம்புகிறேன். அவள் செயலை வாழ்த்தவும் செய்கிறேன். மேலும், ஒருவருக்கு, நடந்ததுபோலவே இன்னொருவருக்கு பிசகாமல் நடக்குமா என்று என்னால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் அவன் நம்பிக்கைக்கு மாறாக வார்த்தைகளை சொல்முடியவில்லை.  அப்படி நடந்துவிட்டால் எந்தத் தகப்பன் வேண்டாம் என்று சொல்லுவான். பைபிளில், ஏசுவின் தாய் மரியாளைக் குறிப்பிடும்போது ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று பொருள் சொல்வார்கள்.  அந்த, அர்த்தப்படுத்தல்தான் உங்கள் மகள் என்று நீங்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.  அவள், வேலைக்குபோகிற அளவுக்கு வந்துவிட்டாளா என்று நினைக்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறது. உங்கள் மகளைவிட ஒரு வயது குறைவான மகனுக்கு அக்கம்பெனியின் வேலைக்கு பயணிப்பதை எப்படித் தொடங்குவது என்ற வழிக்காட்டுதலை உங்கள் மகள் மூலமாக தெரிவிக்க முடியுமா? நல்ல பெண்ணின் வழிக்காட்டுதல் அவனுக்கான நிம்மதியான பயணத்தைக் கொடுக்கும்  என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. கடைசியாண்டை தொடங்கும் தருவாயிலிருந்தே  அந்நிறுவன  ஊழியராகிவிடுவேன் என்கிறான்.  முன்கூட்டி திட்டமிடுதல்  தவறு என்று என்னால் சொல்லமுடியவில்லை. அது கிட்டாதபோது அதன் துயரம் மிக வேதனையாய் இருக்குமே’ என்று  முன்கூட்டியே  நான்  அறிந்திருக்கிறேன்.

மகனின் முன்கூட்டிய திட்டமிடுதலா? என் கணிப்பின்  பின்கால வேதனையா? எது சாத்தியமாக வாய்ப்பிருக்கிறதென்று  நீங்கள் அனுப்பும்  பதிலிலிருந்து  ஆய்வு செய்துக்கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
அன்புடன் ஜேடி


ஜே. டேனியல்