Saturday, April 27, 2013

கவிதை,



எல்லையை வகுக்கும் தெரு நாய்கள்

எதிரி
சுவர்ஒட்டி விளம்பரமாய் இருந்தாலும்
கிழித்தெறியும் வன்முறையாளன்,

பாதுகாப்பில்லை
பத்திரம், பத்திரமாக இருக்கட்டும்
எனப் பக்கத்தில் கொடுத்திருந்தால்
பட்டாவில் பெயர் மாற்றிக்கொள்ளும்
பாதக மோசக்காரன்,

மென்சதைகள் துளிர்க்காதவளை
வன்புணர்வுக்குத் தூக்கும்
இரக்கமற்ற கொலைகாரன்,

கிழம் பூண்டு விழுவோர்,
தெருவோரம் அழுவோர்,
இருப்பிடம் தேடி
ஒரு வேளை நிம்மதியைத் தந்ததின்
இன்பங்களை ரசிப்போர்,

இத்தனை வகையாரில் யாரும்
மாற்றுச் சிந்தனையே அற்றவர்கள்போல்
ஒரே கதகதப்பில் உறங்கவைக்கும்
மென்மையான இருளை
அலங்கோலமாக்குவது
தெருநாய்கள் மட்டுமே.


எதற்காகவோ ஒரு நாய்
எழுப்பும் அருவருப்பான ஊலையிடுதலுக்கு
பல மூலைகளில் இருந்து
பின்னணியை கட்டமைக்கும் நாய்கள். 

நாய்கள் தனக்கு
உப்பிட்டவனை மட்டுமே
நேசிக்கப் பழகுகிறது
குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே
தான் உழலவேண்டும்
என்றக் கட்டாயத்தில் வாழ்கிறது

பக்கத்துத் தெருவில்
வாழும் நாய் தவறுதலாக
நுழைந்துவிட்டால்
கூட்டாகச்சேர்ந்து
அதன் குரல்வலையைப் பிய்த்து
துடிக்கத்துடிக்கச் சாகடிக்கிறது

இதன் உச்சகட்டமானக் கொடூரம்
வந்தது குழந்தை நாயாக இருந்தாலும்
அதன் உயிர்த் தப்புவதேயில்லை.

பெண் நாய்
தனக்கு இனக்கமானவற்றோடு
தன் இளமையைச் 
சுகித்துக்கொள்ள முடிவதேயில்லை
வலுவுடன் திரியும் நாய்
வாலுக்கு மறைவின் வழியில்
வழியும் காம ரசத்தை
நக்கிக்கொண்டே அலைகிறது

அதன் எல்லைக்குள்
பருவமாகும்
எல்லா பெண் இளமையையும்
தான் மட்டுமே அனுபவிக்க
பல வீடுகளில் இரந்து வாழ்கிறது


ஆரம்பம் முதல் முடிவுவரையான மனிதனுக்கு
வெட்ட வெளிகளில்
அலங்கோலமாகப் புணர்வையும்
கூட்டுப்புணர்வுக்கானப் பயிற்சியையும்
மனிதனோடு இணைந்து வாழும்
எல்லை வகுக்கும் தெரு நாய்கள்
கற்றுக்கொடுக்கிறது.

ஜேடி

Friday, April 26, 2013

கவிதை

                     நலம்,  நாதி, நாடு

கடலுக்கு நேராக  வானத்தில் 
பறக்கும்போது
எனது நாடு
இந்தியா என்பதில் பெருமை.

விமானச் சக்கரம்
தலைநகரில் தரைதட்ட
தமிழ்நாட்டில்
கால் பதியத்தான் வாழ்வு.

தடதடக்கும் சத்தம்
மிதமாகி
சென்ட்ரலை குறுக்கு வெட்டாகக் கடந்து
அண்ணாவின் நகரத்தை
அடைந்துவிட்டால் நிம்மதி.

இருதலை ஓட்டிகளின் வாகனம்
கோபுரத்தைக் கடந்து
நுழைந்தபோதும்
தொப்புல் கொடி அறுந்த இடத்தில்தான்
நல்ல தூக்கம்.

இப்படி
நம்பிக்கையுடன்தான்  உருண்டது
இரு சக்கர வாகனம்

அண்ணன், தம்பிகள்
ஓடிவந்தார்கள்
 தம்பி
கிராமங்களில்
மேலாண்டை வீதியார்
சோறு சமைக்கும் பாணையில்
நெருப்பைச் சமைத்து
ஊட்டிவிட்டார்கள்
ஜீரணம் ஆகாத நெருப்புகள்
வயிரை அரிக்கிறது,

நீ போகாதே, போகாதே, தம்பி போகாதே...

நலமற்றவர்களாய்
நாதியற்றவர்களாய்
நாடற்றவர்களாய்
போகிறோம் என்பதின்
எதிர்பதமாக வைத்துக்கொள்கிறேன்
அண்ணன், தம்பிகளே.

ஜேடி


Wednesday, April 17, 2013

சிறுகதை,

                                                                         பதில் கடிதம்


                       

 நமக்கான உறவின் வர்த்தகம் தடம் புரண்டுப் போயிருக்கிற நிலையில் அன்புள்ள மாமனே உங்களுக்கு, இக்கடிதத்தை  எழுதுகிறேன். ‘மாமனே’ என்பதை உயர் மதிப்பீடாகத்தான் விளிக்கிறேன்.  நம் உறவு சீராய் இருந்த கடந்த காலங்களில், என்  மீது  தாயிக்கு ஈடான அன்பு வைத்திருந்தவர் என்றும், சில நேரம் தங்களைப்போல் தன்னலம் மிக்கவர் இருக்க முடியுமா என்றும் கேட்டுக்கொண்டேதான் வாழ்க்கையைக் கடந்திருக்கிறேன்.  நம் இருவருக்குமான,  அல்லது குடும்பத்திற்கான, அல்லது சிநேகிதர்களுக்கான உறவுகளை, மனித ஜீவித நாள்வரை ஒரே மாதிரியாக  தடையின்றி வைத்துக்கொள்ள ஏதாவது சாத்தியம் இருக்கிறதா? அல்லது என்ன விதமான நடத்தையில் அப்படியான உறவை தக்க வைத்துக்கொள்ள முடியும்,  மிகச் சிறியவனான என்னால் அதை உணரமுடியவில்லை. பல உயர்நிலைகளில் அனுபவம் வாய்ந்த உங்களிடத்தில் வினவ முயற்சிக்கிறேன்.  இதை ஒரு கேள்வியாக  எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் அனுபவத்திலிருந்து நடை முறை சாத்தியத்தையேக் கோரி நிற்கிறேன்.

மாமனே, மரணக்கைதி, கருணை மனு கோரும்போதுதான்   ஜனாதிபதிக்கான அதிராத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது. மாமன் முறைக்கும் அதே அதிகாரம், குடும்ப உறவுகளில் இருக்கிறதை நான் நன்கு அறிந்திருக்கிறேன். இப்போதெல்லாம் அடிக்கடி உங்களை நினைவு கூறுகிறேன். அந்த நினைவு கூறலின்  பலனாக கடந்த காலங்கள் கண்முன்னே வந்து போகின்றன. நினைவில் வருகின்ற கடந்த காலங்கள், தற்போதைய நிகழ்காலத்தைப்போல வேகமாய் நகருவதில்லை. ஆமையின் வேகத்தை ஒத்திருக்கிறது.  இரவு நேரங்களில் உங்கள் வீட்டுக்கு வரும்போது எவ்வளவு அன்பொழுகக் கிண்டலடிப்பீர்கள். மீனும், கறியும் விஷேஷமாக செய்த நாளில்  வீட்டின் நடுக்கூடத்தில் உட்கார்த்தி  உணவிட்டீர்கள்.  தனியாக  சாப்பிட விட்டால், ஒரு அன்னியம்  தெரியும்  என்று  நீங்களும் கூடவே சாப்பிடுவீர்கள். பரிமாறும்பொழுது  உங்களுக்கு குறைவாக இட்டுக்கொண்டு, எனக்கு  இரண்டு  பீஸ் அதிகமாகவே வைத்துவிடுவீர்கள். விதண்டா வாதம் பேச அடிக்கடி அழைப்பீர்கள். அப்போதெல்லாம்  என் மீதிருந்த அன்பினால்தான்  இவைகள் நடந்ததென்று எனக்குத்தெரியாததல்ல. அதே சமயம் எப்போதெல்லாம் நிஜமான கோபம் ஏற்பட்டது என்பதையும்  அறிந்தவன்தான். அபோதெல்லாம் சிறு சிறு கல் காலை தடுக்கும் நிகழ்வுபோலவேதான், அவைகள் நடந்தது. இருந்தாலும் ஒரு நீண்ட இடைவெளி என் மனைவி, அதாவது உங்கள் தங்கை இருந்தவரை ஏற்பட்டதேயில்லை.

பிறகு எப்படியோ, இரவு வௌவால்கள் தலை கீழாய் தொங்கிக்கொண்டே இருப்பதுபோல குற்றமற்றவனின் கூடாரத்தில் தூக்கு கயிறுக்கொப்பான தண்டனைகள், நிராகரிப்பு வடிவில் குறுக்கும், நெடுக்குமாக என்னைச் சுற்றிக்கொண்டேயிருந்தது.   திரும்பத் திரும்ப யோசிக்கிறேன். பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதும் பாதையில் காலைத் தடுக்கிவிடும் சின்னக்கல்தான். குணிந்து எடுத்து ஓரம்போட்டு நடக்க உங்களுக்கும் யோசனை இல்லை.  நீங்கள் எடுக்காதக்கல்லை தொட்டு எடுப்பதற்கு எனக்கும் மனவிசாலம் இல்லை. யார் பெரியவர். யார், யாருக்காக குணியவேண்டும் என்று தாங்கள் கேட்கலாம். ஒரு உண்மையைச் சொல்லவேண்டு மென்றால் உங்கள் மீதான மரியாதை இன்றளவும் குறையவில்லை. நான் உங்கள் வீட்டுக்கு வருவதில், பல சிக்கல் இருக்கிறது. ஆனால், நீங்கள் அழைத்து விடுவதற்கு கொஞ்ம் மனது மட்டுமே வேண்டும்.  சின்ன அழைப்பை மட்டுமே ஏழு வருஷங்களாக எதிர்பார்த்தேன். யோசித்துப் பாருங்கள் நம் இருவருக்குமான இருப்பு தூர, தூரமான தேசங்களில் இல்லை. இரண்டு தெரு இடைவெளிதான். இதில் ஒருவர் முகம் ஒருவர் பார்க்காதது எவ்வளவு பெரிய சோகம்.

மாமனே இப்போதெல்லாம் ஏனோ அடிக்கடி உங்களை நினைக்கிறேன். திடீர் என்ன பாசம் என்று நீங்கள் எண்ணக்கூடும். நன்றாக நினைவு கூறுங்கள். எனக்கு எதையோ செய்யப்போகிறீர்கள் என்பதற்காக நான் எப்போதாவது சர்வாங்க தகனபலியாய் கிடந்திருக்கிறேனா? நீங்கள் எதையுமே செய்யப்போவதில்லை என்பதற்காக உங்கள்வாசல் ஏறாமல் இருந்திருக்கிறேனா?  எப்போதெல்லாம் அழைப்பு வந்ததோ அப்போ தெல்லாம் வந்து நின்ற நாட்கள்  உண்டுதானே. இருந்தாலும், ‘நீங்கள் இக்கடிதத்தைப் படிக்கும்போது நினைக்க வாய்ப்பிருப்பதுபோல்‘ சற்று கூடுதலாகத்தான் நான் திடீரென்று தங்களை நினைக்கிறேன்  என்று என்னை நானே விமர்சனம் செய்கிறேன். விமர்சனம் செய்கிற நானே, பிள்ளைகளுக்கு துணையை அங்கீகரிக்கும் நிலையில் இருப்பதால்தான். அடிக்கடி தங்களை நினைவுகூறுகிறேன் என்பது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், இந்த நினைவுகூறுதல் மேலோட்டமாக சந்தர்ப்பவாதம் என்று சட்டென்று யாராலும் சொல்லிவிடமுடியாது. அதற்குள், கடந்தகால ஆண்மா உலவிக்கொண்டே இருப்பதை, எவ்வேளையும் கடவுள் ஆவியை தரிச்க்கின்ற உங்களாலும் கண்டுணரமுடியாது. ‘இல்லை. இவன் எதையோக் குழப்பிக்கொண்டு இருக்கிறான்‘ என்று உங்களுக்குச் சொல்லத்தோன்றும். மாமனே நம்பமாட்டீர்கள் எங்களைப்போல தெளிவானவர்களை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. உலகத்தின் மிக நீண்டவாழ்வியல் கூறுகளின் வழித்தடங்களைச்  சுருக்கி மிகச் சிறியதாக கக்கத்தில் வைத்துக்கொடுண்டு அலைபவர்கள். ஆனால், துண்டு பீடிக்கு கையேந்துகிறவன்கூட துச்சமாய் எண்ணுகிற பின்னணி எங்களைத் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. அது விஷயமல்ல.

என் தனிப்பட்ட  பிம்பம் 1993லிருந்து 2006வரையான கால கட்டங்களில் ஒரு மாதிரியாகவும் 2006க்கு பிறகிலிருந்து ஒரு மாதிரியாகவும் உங்களுக்கு தோன்றுகிறது. முதல் கட்டத்தில் நான் தங்களுக்குப் பிடித்தமானவனாகவும். பின்வரும் காலகட்டத்தில் அயோக்கியனாகவும்  நினைக்கிறீர்கள். நானல்ல,  பொதுவாக  மனிதன் அப்படி இருக்கவே முடியாது.  நல்லவன் என்றால் கடைசிவரை நல்லவன். கெட்டவன் ஆரம்பத்திலிருந்தே கெட்டவன்தான். சமூக  அனுபவங்கள், படிப்பினைகள் தங்கள், தங்கள் பாதையில் செய்ல்பாடுகளை கட்டுப்படுத்தி வைக்க மட்டுமே உதவும்.  இதை மேலும் உறுதி செய்துகொள்ள வேண்டுமென்றால். என் வலைதளத்தில் இதற்கான கட்டுரை  இருக்கிறது. அது உங்களுக்கு சற்று, விளக்கமாக வாதிடும். அதைபார்த்து தங்கள் முடிவை மேற்கொள்ளலாம்.

மாமனே, என்னை வைத்து பிள்ளைகளை கணக்கிடவேண்டாம். அவர்களுக்குத் தனித்தனி அவயங்கள் இருக்கிறது. எனக்குப்பிடித்தமான ஒரு புத்தகம் வாங்கும்போது, மகன் ரேஷன் கடையில் சர்க்கரை  போடுகிறார்கள் அதை வாங்கியிருக்கலாம் என்கிறான். புதிய முயற்சியாக தமிழில் சினிமா வந்திருகிறது பார்த்துவருகிறேன் என்றால், மூணுமாதம் கழித்து டிவியிலேயே போடுவான் என்கிறான். மகன் பல விஷயங்களில் உங்களுக்கு நெருக்கமானவனாகவே இருக்கிறான். நானும் உள்ளுக்குள் ‘சந்தோஷப் பட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், எனக்கு நல்லதென்று படுகின்ற விஷயங்களில் நான் தொடர்ந்து உழல்கிறபோது, அவ்விஷயம் பிடித்தவர்களே கண்டுகொள்ளாமல் விடுகிற போக்கு இருக்கிறது. ஆக என்போக்கில, அவனுக்கு நாட்டமில்லாமல் இருப்பது சந்தோஷம்தான். ஆனால், என் இருப்புகளை தரிசிக்க நேருகிற  ஏதாவது ஒரு காலத்தில், அதன் சுகம் இன்னதென்று அறிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், அதற்கான எல்லாத் தரவுகளும், ஆவணங்களும் என் அறைகளைச் சுற்றிக்கிடக்கிறது. ஆனால், அப்போது நான் இருப்பேனா, சொல்லமுடியாது. அவன் என்பாதையே சிறந்தது என்று, அதில் நடக்கவோ, உதவாத ஆவணங்கள் என்று எல்லா தடத்தையும் அழித்துவிடவோ செய்யலாம். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.  ஏனென்றால், சிறு வயது முதல்  பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல் செய்யாமல் இருக்கிறான். என் பாதையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தமுடியாது. அவன் யோசனைக்கு எது நல்லது என்று படுகிறதோ, அதை முழு சுதந்திரத்துடன் செய்துகொள்ள அவனுக்கு உரிமை இருக்கிறதுதானே. அதற்குள்ளும் ஒரு நீதியின் விளக்கைக் கூடவே எடுத்துச்செல்வான் என்பதுதான் என் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதுதான் உங்களுக்கும் ஏற்புடையதான வழிமுறையாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

மாமனே, மகன் உயர்கல்வியை முடிக்கும்  தருவாயில் இருக்கிறான். இதுவரை ஒரு சம்ஸ்டின் முடிவுகளையும் என் கண்ணில் காட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதில்லை. தேர்வுமுடிவுகள் தனிமனிதனின் ஒழுக்கவிதிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாக இல்லை. எனக்குத்தெரிந்த பள்ளியிலேயே காலாண்டு, அரையாண்டுக்கான பனிரெண்டாம் தேர்வுத்தாள்களை, பதினோராம் வகுப்பு மாணவர்கள் திருத்தி மதிப்பெண் வழங்குகிறார்கள்  என்று  கேள்விப்படுகிறேன். இப்படியானச் செயல் எந்தத் தகுகியை நிறுபிக்க நடத்தப்படுகிறது என்றக்கேள்வி எனக்குள் இருக்கிறது. எல்லா இடங்களிலும் இந்த நிலை இருக்காது என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆகவே, தேர்ச்சியைக்காட்டும் அட்டவணைகள் எனக்கு திருப்த்தியளிப்தில்லை. இருந்தாலும், மகனை பொதுவாக கல்வியை முடிக்குமபோது எந்த அரியரும் வைத்திருக்காமல் வெளிவரவேண்டும் என்று எச்சரித்து வருகிறேன்.  அவனும்,  அது என்பாடு வெற்றியாய் முடித்து வேலையில் சேர்ந்துவிடுவேன் என்கிறான். மேலும், உங்கள் மகள் முடித்து நல்ல கம்பெனியில் வேலை செய்வதாகவும், அவளைப்போலவே எனக்கும் நடக்கும் என்று நம்பிக்கையளிக்கிறான். அவன் உயர் கல்வியை தொடங்கும்போதே அநேகப்புத்தகங்கள் உங்கள் மகள்தான் கொடுத்து உதவியிருக்கிறாள். அநேகமாக அவன் வாழ்வுக்கு வழிகாட்டுகிற செயல் என்றே நான் நம்புகிறேன். அவள் செயலை வாழ்த்தவும் செய்கிறேன். மேலும், ஒருவருக்கு, நடந்ததுபோலவே இன்னொருவருக்கு பிசகாமல் நடக்குமா என்று என்னால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் அவன் நம்பிக்கைக்கு மாறாக வார்த்தைகளை சொல்முடியவில்லை.  அப்படி நடந்துவிட்டால் எந்தத் தகப்பன் வேண்டாம் என்று சொல்லுவான். பைபிளில், ஏசுவின் தாய் மரியாளைக் குறிப்பிடும்போது ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று பொருள் சொல்வார்கள்.  அந்த, அர்த்தப்படுத்தல்தான் உங்கள் மகள் என்று நீங்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.  அவள், வேலைக்குபோகிற அளவுக்கு வந்துவிட்டாளா என்று நினைக்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறது. உங்கள் மகளைவிட ஒரு வயது குறைவான மகனுக்கு அக்கம்பெனியின் வேலைக்கு பயணிப்பதை எப்படித் தொடங்குவது என்ற வழிக்காட்டுதலை உங்கள் மகள் மூலமாக தெரிவிக்க முடியுமா? நல்ல பெண்ணின் வழிக்காட்டுதல் அவனுக்கான நிம்மதியான பயணத்தைக் கொடுக்கும்  என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. கடைசியாண்டை தொடங்கும் தருவாயிலிருந்தே  அந்நிறுவன  ஊழியராகிவிடுவேன் என்கிறான்.  முன்கூட்டி திட்டமிடுதல்  தவறு என்று என்னால் சொல்லமுடியவில்லை. அது கிட்டாதபோது அதன் துயரம் மிக வேதனையாய் இருக்குமே’ என்று  முன்கூட்டியே  நான்  அறிந்திருக்கிறேன்.

மகனின் முன்கூட்டிய திட்டமிடுதலா? என் கணிப்பின்  பின்கால வேதனையா? எது சாத்தியமாக வாய்ப்பிருக்கிறதென்று  நீங்கள் அனுப்பும்  பதிலிலிருந்து  ஆய்வு செய்துக்கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
அன்புடன் ஜேடி


ஜே. டேனியல்


Sunday, March 31, 2013

சிறுகதை,

                            மரண வாக்குறுதி


இன்னும் பத்து நாளுக்குள் பூமி மண் தம்மை மூடிக்கொள்ளும் என்ற முடிவுக்கு சாந்தி வந்திருந்தாள். நேற்று மாலைவரை என் உயிரை யாரும் எடுக்க முடியாது என்று உறுதியாக நம்பியிருந்தவள்தான். இன்று இரவு ஒன்பது மணிக்கு டாக்டர் பார்வையிட வந்தார். டாக்கருக்கு மெல்லிசான உருவம். அவர் கோட்டும், பேண்டும் தொலதொலவென ஆடிக்கொண்டிருந்தது. லைட் நீல கலறில் சட்டையின் காலர் சற்று எடுப்பாக இருந்தது. கூடவே இரண்டு நர்சும் வந்தார்கள். ஒருவள் சற்று வயது முதிர்ந்தவள் குண்டாண உடல். இன்னொருத்தி இளம் வயது இருவரும் சீனியர், ஜீனியர் என்ற நிலையில் செயல்கள் இருந்தது. சின்னவள். டாக்டர் வருகிறார் எனறு அவசரமாக தன் இருப்பிடத்திலிருந்து வந்தாள் தலையின் அடையாள கவசம் சற்று ஏற்றம், இறக்கமாக இருந்தது. கையிலிருந்த சார்ட்டை டாக்டர் பார்வையில் படும்படியாக வைத்திருந்தாள். டாக்டர் சார்ட்டைப் பார்த்ததும் அவசரமாக  கோட்டிலிருந்து பேனாவை எடுத்தார். சார்ட் நர்ஸ் கைக்கும், டாக்டர் இடது கைக்குமாக இருந்தது. பேனாவைத் திறக்கவில்லை. படுக்கையில் இருந்த சாந்தியின் கண் மூடியிருந்தது. முகம் உப்பியிருந்தது. கண்களின் சற்றுத்தோல் லேசாக கறுப்படைந்து இருந்தது. வயிறு மூச்சுக்காற்றை உள்வாங்கியும், வெளிஅனுப்பியும் இருந்தது. டாக்டர் அவள் முகத்தைப் பார்த்தார். குளுகோஸ் பாட்டிலின் மீது பார்வை நகர்ந்தது. குளுகோஸ் பாட்டளுக்குமேல் எந்த லேபிலும் இல்லாமல் வெறும் உடம்பாய் இருந்தது. அதில், சற்று நேரங்கழித்து ஒரு சொட்டு என்ற கணக்கில் விழுந்திருந்தது. .சீனியர் நர்ஸ், டாக்டர் கூடவே தன் அசைவுகளையும், தொடர்ந்தாள். டாக்டர் பேனாவை மீண்டும் தன் வெள்ளை கோட்டுப்பாக்கட்டில் வைத்துக்கொண்டு சீனியர் நர்ஸிடம் வாயசைத்தார். அவள், ஜீனியர் நர்ஸிடம் எதோ இன்ஜெக்சன் மட்டும் குளுகோஸில் போடச்சொன்னாள். டாக்டர் அடுத்த பெட்டுக்குச்சென்றுவிட்டார்.

ஒரு மணி நேரம் கழித்து சாந்தி இரண்டு முறை வாந்தி எடுத்தாள். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. அந்த நேரம்தான் கண்விழித்தாள். எதிரில் இருந்த உறவுகளை கிட்ட வரும்படி கண் அசைவுகளை காட்டினாள். நின்று இருந்தவர்களில் ஒருத்தி அழுதுகொண்டே கிட்டவந்தாள். சாந்தி கைகளை தடவி நா தழுதழுக்க  என் கதை சீக்கிரம் முடிஞ்சிடும். என் பிள்ளைகள்தான் என்னாகுமோ என்று பேச்சு சரியாக வராத நிலையிலும் சொன்னாள். நின்றவர்களுக்கு அழுவதைத்தவிர ஒனறும் தெரியவில்லை. செய்தி சொந்தங்களுக்கு பரவியது. விடியர்காலையில் சாந்தி பெட்டைச்சுற்றி கூட்டம் நிறம்பி வழிந்தது. இவர்களின் நடுவில்தான் வஸ்த்தி இருந்தாள். வஸ்த்தி, சாந்தியின் நாத்தனார் மகள். சிறு குழந்தையில் இருந்தே ராஜியின் வீட்டில் வளர்ந்தவள். மற்றவர்கள் அவளை, ஏனோ கிட்ட போ, கிட்டபோய்க் கேளு என்று அழுத்தம் கொடுத்தார்கள்.  அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்கக்கூடாது என்றுதான் ராஜ், வஸ்த்தியை சாந்தி பக்கத்தில் அனுமதிக்காமலே இருந்தான். தற்போது ராஜ் எங்கோ வெளியில் போன நேரம்பார்த்து உறவுக்காரர்கள் வஸ்த்தியை சாந்தி கிட்டத்தில் அனுப்பி உன் பிள்ளைக்கு என்ன சொல்ற, உன் வீட்டுகாரருக்கு என்ன சொல்ற என்று மரணவாக்கு றுதி கோரிநின்றார்கள்.

வஸ்த்தியின் கையைப் பிடித்துக்கொண்டு “என் பிள்ளைகளை பத்திரமாக பாத்துக்கோ. அதுங்க, ஏமாளிப்புள்ளிங்கோம்மா. எப்படியாவது கரை சேர்த்துடும்மா உனக்கு புன்னியமாப்போகும். செய்வியா என்று சத்தியவாக்குறுதி வாங்கிக்கொண்டிருந்தாள்.  ராஜ் வந்து சேரும்போது வாக்குறுதி முடிந்து இரு கைகளும் பிரிந்தது. மற்ற எல்லாரும் அதில் பெருத்த நிம்மதி அடைந்தார்கள். சாந்தி எண்ணியதும் நடந்துவிட்டது. இப்போதுதான் நடந்ததுபோல இருந்தது. அதற்குள ஏழு வருஷம் கடந்துவிட்டது என்பது ஆச்சரியம்தான். 
உறவுகளில் எத்தனை மனக்கஷ்டங்கள் இருந்தாலும் குடும்பத்தில் ஏதோ ஒரு முக்கிய நிகழ்வு நடத்துவதற்கு கூடிப் பேசுகிறபோதுதான், அவ்வுறவுகளின் அவசியம் புரிகிறது. நீண்ட வராண்டாவில் பேச்சுகள் தொடங்குகின்றன. வாசலில் இருக்கும் வேப்ப மரத்தில் கோழிகள் ஏறுவதும் குதிப்பதுமாக இருந்தது. சற்றுத்தள்ளி ஆண் வான்கோழி சிறு குழந்தைகளை குத்துவதற்கு துரத்திக்கொண்டிருந்தது. அத்தெரு குழந்தைகளுக்கு அது விளையாட்டாகவே இருந்தது. வெறுமனே ஓரமாக மேய்ந்துகொண்டிருக்கும வான்கோழிகளை ஆவ்வழியாகப்போகும ஒன்றிரண்டு குழந்தைகள் சீண்டுவார்கள். கோழித் துரத்துவதைப்பார்த்து சிரித்துக்கொண்டு ஓடுவார்கள். சில நேரம் சற்று கிட்டத்தில் பிள்ளைகள் மாட்டிக்கொண்டால் வான் கோழி குத்தியும்விடும். வான்கோழி, தன் நீண்ட கழத்தை துக்கி நடக்கும்போது கம்பீரமாகதான் இருக்கும். அதன் தலையிலும், தொண்டையிலும் தொங்கும் செந்நிற மடிப்பு சதைகள்தான் பார்க்கச் சற்று அறுவருப்பாக இக்கும். 

ராஜ் வான்கோழியை பார்த்துக்கொண்டே பேச்சை கவனித்தான். ராஜ் சகோதரி பேச்சைத்தொடங்கினாள். ஏற்கனவே பார்த்துவிட்டு போனவர்கள்தான் மீண்டும் வராங்களாம். அவுங்களுக்கு வஸ்த்தியை ரொம்பப் புடிச்சிப்போச்சாம்.”

“ஆமாம், அவனுங்க பார்த்து கிழிச்சாங்க, முன்ன பார்த்துட்டுபோயி ஆறுமாசம் ஆகுது, வரன்னு போனவங்க ஒருத் தகவலையுஞ் சொல்லல. இப்ப வரானுங்களா? என்றார் ராஜின் அப்பா.

ராஜின் சகோதரன், “இல்லப்பா, போனமாசம் அவுங்ள கூட்டியாந்தானே. என்னோட பிரண்டு, அவன் சொன்னபிறகுதான் தெரியுது. கலியாணத்தை பொண்ணு ஊட்டுக்காரரையே நடத்திடச்சொல்லு. இல்லனா, இன்னும் ஒருவருஷம் கழிச்சிதான் பண்ணமுடியும்னு சொன்னாங்களாம். தான் பெத்த புள்ளக்கி, இன்னொருத்தன கலியாணம் பண்ணசொல்றாங்க. இவுங்களாம் கிறிஸ்த்தவங்கனு வேற சொல்லிக்கிறாங்க”

“அவுங்க பக்கம்லாம் அப்படித்தானாம். பொண்ணு ஊட்டுக்காரன்தான் கலியாணம் பண்ணுவாங்கலாம். நாப்பது சவரண், ஐம்பது சவரண்னு நகைபோடுவாங்கலாம். கோட்டு, சூட்டுலாம்கூட நாமதான் எடுத்துக் குடுக்கனுமா. மாம்ள மண்டபத்தில வந்து நிப்பாராம். எல்லாரும் செய்யிற பழக்கத்த்தான் நம்மளாண்டையும் வைக்கிறாங்க.” என்றாள் ராஜ் சகோதரி.

“என்னம்மா சொல்ற நீ, பையன் ஒரு வேலைக்கும் போகலையாம். அவனுக்கு பொண்ண குடுக்குறோமே, நமக்குதான் அவன் போடனும். அதவிட்டுட்டு இவ்ளோபோடு, அவ்ளோபோடு, கல்யாணம் பண்ணிவையின்னா என்ன அர்த்தம்.” என்று சற்று கோபமாகப்பேசினார். 

வராண்டாவில் பேச்சு துவங்கியதிலிருந்து வஸ்த்தி ஒரு முறை சுத்தமாக இருந்த வராண்டாவைப் பெருக்கிக்கொண்டே போனாள். இன்னொரு முறை ராஜீன் சகோதரரின் சின்னக்குழந்தையைக் கூப்பிட்டு முகம் கழுவி தலைவாரி பவுடர் போட்டுவிட்டாள். மூன்றாவது முறை வீட்டில் இருந்தரேஷன் அரியைக்கொண்டுவந்து கோழிகளுக்கு தீணிபோட்டாள். ராஜின் சகோதரி அண்ணன் மகளை அழைத்து தண்ணீர் கொண்டுவரச்சொன்னதும், வஸ்த்தி முந்திக்கொண்டு சொம்பில் தண்ணீர்க் கொண்டுவந்து கொடுத்து வேறு எங்கோ கவனிப்பதுபோல் இருந்தாள். 

வஸ்த்தியின் செயல் ராஜிக்கு சிரிப்பைத் தந்தது. ஆனால், உள்ளுக்குள் சற்று ஏமாற்றமும் நுழைந்தது. ராஜியைவிட வஸ்த்தி குறைந்தது பத்துவயது குறைவுள்ளவள். சாந்தி இறந்த பிறகு, வஸ்த்தியின் முழு உடமைகளும் ராஜியிடம் விடப்பட்டது. எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும், ஒரே ஒரு வார்த்தை வஸ்த்தியை இங்கு அனுப்புங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டமாகஇருக்கிறது என்று சொன்னால் போதும், எந்தவிதமான சாக்கும் சொல்லாமல், சடங்கும் பார்க்காமல் வீட்டில் கொண்டுவந்து விட்டு போக்க்கூடிய நிலமை. இதே நிலமைதான் ஏழு வருஷமும். ராஜின் மனதில் ஏதோ சலனம் ஏற்பட்டு வஸ்த்தியை அழைத்துக்கொள்ளமாட்டானா? என்ற எதிர்பார்ப்பே இருந்தது. வஸ்த்தியும் கண்டிப்பாக அப்படிதான் நினைத்திருந்தாள். அழுத்தமாக சொல்லமுடியும். ஏனென்றால் உலகத்தின் எந்த வசீகரபிம்பத்தின் மீதும், அவளுக்கு நாட்டம் இருந்ததில்லை. இருந்ததில்லை என்று சொல்வது சரியல்ல. அதை ரசித்து, அதன் வலைகளுக்குள் விழுகிற புரிதல் இல்லை எனலாம். ஆனால், எல்லா வாலிப்பெண்கள் போலவே தனக்கு ஒரு குடும்பம் வேண்டும். அதுவும் தன் வயதொத்தவர்கள் எல்லாம் பிறந்த ஊரை துறந்து செல்கிறபோது, அவள் மட்டும் இருப்பது. வேதனைத் தரக்கூடிய விஷயமாக இருந்தது. ராஜிதான் நமக்கு விதிக்கப்பட்டது. சீக்கிரம் நடந்தால் நல்லது என்கிற அளவில் இருந்தாள். மற்றபடி, தோற்றமும், அழகும் நல்லபடியாகத்தான் இருந்தது. 

சாந்தி இறந்த மூன்றாவது வருஷத்தில் வெளியூரில் இருந்து மிக நெருங்கிய உறவுக்காரர் வந்து ராஜியிடம் பேசினார்கள். இப்படியே இருந்தால் எப்படி. பெண் பிள்ளை வைத்திருக்கிறாய். வீட்டில் அதற்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா? என்று வினவினார்கள். “நீங்கள் சொல்வதில் எல்லாம் எனக்கு உடன்பாடு உண்டுதான். எனக்கும் ஆசைகள் இல்லை என்று சொல்லிவிடமுடியாது. ஆனால், நீங்கள் சற்று என் நிலமையை கவனிக்கவேண்டும். நான் இயல்பாகவே, போட்ட முதலை வளர்த்தெடுக்கிறவன் அல்ல. முதலையே எனக்காகவோ, யாருக்காகவோ அழித்துவிடுகிறவன்.  எல்லா நட்ப்புகளும் எனக்கு முன் நையாண்டி காட்டிக்கொண்டு செம்மையாக நடக்கும். நான் வெறுமனே காகிதங்களை நம்பி வாழ்கிறவன். பிள்ளைகள் பறக்க ஆரம்பித்துவிட்டால், நான் இதே இடத்தில் இருப்பேனா சொல்ல முடியாது. வஸ்த்திக்கு, மாமனார், மாமியார் (குறிப்பாக பெரியவர்கள்) இருந்து அலோசனையுடன் நடத்திச்செல்கின்ற குடும்பம்தான் அவள் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும். நிச்சயம் ஒரு குடும்பத் தலைவிக்கான மரியாதையை அனுபவிப்பாள். என்பதோடு உறவுக்காறரின் தூதை அப்போதே முடித்ததை, இப்போது நினைத்தான். ஒரு வேளை நீண்ட நாள்  கை கூடாமல் வஸ்த்தி தனியாக நின்றால், நாம்தான் கைக்கொடுக்கவேண்டும் என்கிற உறுதியும் மனதில் வைத்திருந்தான் ராஜி.

சென்னையின் பக்கத்தில்தான் கல்யாணம் மண்டபம் லாரி வச்சிருப்பதால், கிராமத்தின் ஜனங்கள் அநேகமாக கிளம்பிவிடுவார்கள். ராஜின் சகோதரர். ஒரு மணிக்கெல்லாம் சாப்பாடு கொடுத்து ஜனங்களை லாரியில் ஏற்றவேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ராஜி நகரத்தில் இருந்து வருவதால் பெண்ணுக்கு அழுகு நிலையத்திலிருந்து. கவரிங் நகை செட் வாங்கிவரப் பணிக்கப்பட்டான். மூன்று, நான்கு ரகங்கள் காட்டப்பட்டது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை. ராஜி இதற்கு முன்பு இத்தனை வகையான நகைகளை கண்ணால் பார்த்தேயில்லை.  நகைகள் ஏதேதோ வடிவங்களில் இருந்தன. அழகு நிலையத்தின் சேரில்  இரு பெண்கள் முகத்திற்கு ஏதோ பூசப்பட்டு, காய்களை வட்டமாக அரிந்து கண்களில் வைத்திருந்தார்கள். நிலையத்தில் தீடீரென்று ஆண் குரல் கேட்டதால் சற்றுப் பதட்டத்துடன் சரியாக அமர்ந்தார்கள். ராஜ் நகைகளைப்பற்றி அதிகமாக விசாரிக்கவில்லை. சில ஆரங்களில் வெள்ளை கல் உதிர்ந்து விட்டிருந்தது. பெண்கள் ஏன் இவ்வளவு அலங்காரங்களை விரும்புகிறார்கள். விலை உயர்வுக்கும், கீழுக்கும் நடுவாக ஒரு செட்டை எடுத்துக்கொண்டு வேகமாக கிராமத்திற்கு வந்தான். கவரிங் நகை வருவதற்குள், ஒரிஜினல் தங்க நகைகள் அணிந்து பலபலப்பாக வெளியே வந்தாள். வஸ்த்தியை இதற்கு முன் அப்படிப் பார்த்தில்லை.  கவரிங் நகைக்காகத்தான் காத்திருந்தார்கள் போல ராஜ் வந்தவுடன் ஒருத்தி வந்து பிடுங்கிச்சென்றாள். 

லாரியை ரோட்டிலேயே நிறுத்துங்கப்பா, என்று ஒரு பெரியவர் குரல்கொடுத்தார். குழந்தைகள் கல்யாண வீட்டிற்கும் லாரிக்கும திரிந்துகொண்டிருந்தார்கள். சற்று வாலிபத்தை கடந்த பெண் “என்னாடியம்மா, இம்மா நேரமாவா சிங்காரிப்பிங்க.  பொண்ணு முன்னாடி கௌம்பிச்சினா, பின்னாடியே லாரிய கௌப்பிடலாம். நல்லநேரம் முடியறதுக்குள்ள கௌம்பனும் இல்ல.” என்றாள். 
ராஜின் சகோதரர் தன் மனைவியை தூரிதப்படுத்தினார். “போ சீக்கிரம் கௌம்பு, பசங்கல்லாம் கௌம்பிட்டாங்களாப் பாரு” என்றார். ராஜின் சகோதரி, ஊரில் பல பெரியவர்களை வீடு தேடிச்சென்று சாப்பிட அழைத்துச்சென்றாள். கல்யாணத்திற்கு வராதவர்கள், சாப்பிட வர சற்று தயங்கி நின்றார்கள். ராஜீம் வந்தவர்களை போங்கப்பா, சாப்பிடுங்க. சென்னைக்கு போகனும் இல்ல. நேரத்தோடு போனாதனே.” என்று அவசரப்படுத்தினான்.  

இப்போது வான்கோழில் ரோட்டில் சுற்றவில்லை. நிறைய குழந்தைகள் கும்பலாக ஓடுவதும் வருவதுமாக இருந்ததால். வான்கோழி பயந்து ஓரமாக திரிந்துகொண்டிருந்தது. டாடா சுமோ வந்து நின்றது. வாலிப்பசங்கள் வெற்று பந்தாவில் சொர்க்க சுகம் காணுகிறார்கள். பொண்ணுக்கு மட்டும் சுமோவா, எங்களுக்கும் இருந்தா? சும்மா கெத்தா போவோம் இல்ல. இன்னொரு மூலையில் இருந்து குரல் வந்நது. 

வஸ்த்தி, தாத்தாவிடம், மாமாவிடம், அக்காவிடம், அண்ணனிடம் போய்வருகிறேன் என்பதைச் சொல்லிக்கொண்டே வந்தாள். ராஜி வராண்டாவில் வேறு ஏதோவேலையாக மூலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தான். வஸத்தி தன் அலங்காரத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள. பாதையைச் சரியாகப் பார்த்து நடந்தாள். நடந்தாள். சுமோவில் அவளுக்கான இடம் இருந்தது. அமர்ந்து கொண்டாள். ராஜ் பார்த்தான். அவள் வேறு பக்கம் பார்த்தாள். ராஜ் இப்போதும் பார்த்தான் சுமோ கிளம்பியது. ராஜிக்குத் தெரிந்த ஓட்டுநர் என்பதால்  “தம்பி, பார்த்து பத்திரமாப் போங்கப்பா“ என்றான்.

“அப்பா, வஸ்த்தி அக்காவுக்கு கலியாணம் ஆகி, நாலு மாசம் ஆயிடுச்சா? போன் பண்ணுச்சி.  அது அம்மா ஆகப்போகுதாமே?  இப்பதான் அவுங்க வீட்டுக்காரர் போன் பன்னார். சற்று கிண்டலாக ராஜின் பிள்ளைகள் பேசினார்கள். சற்று நேரத்தில் ராஜியின் கைபேசி ஒலித்தது. ராஜ். ‘அலோ‘ என்றபோது  மறுமுனையில் குரல் தடுமாறித் தடுமாறி பேசியது “நான் வஸ்த்தி பேசுறேன் மாமா. எங்க வீட்டுக்காரர் ஆஸ்பத்திரிக்கு கூட்டிம்போனார்.  டாக்டர் நாலுமாசம் தொடங்குது. நீ முழுகாம இருக்கிறனு சொன்னாங்க.”

“அப்படியா, ரொம்ப சந்தோஷம். ஒடம்ப பத்திரமாப் பாத்துக்கோமா”  என்று பேசி முடித்தபோதுதான், சாந்தி, வஸ்த்தியிடம் வாங்கிய வாக்குறிதி  ராஜிக்கு நாபகம் வந்தது. லேசாக சிரித்துக்கொண்டான்.

ஜே,டேனியல்.


Monday, March 18, 2013

விமர்சனம்,

நியாயமாஆஆர்ரே   நியாயமாஆ   செய்யுங்க   நியாயமார்ரே!

எரியும் பனிக்காடும்- பரதேசிகளும்

‘பாலா’ எரியும் பனிக்காடு சினிமாவாக எடுக்கிறார் என்று நண்பர்கள் சொன்னபோது  அந்நாவலை நூலகத்திலிருந்து கொண்டுவந்து வாசித்தேன்.  பரவாயில்லை நல்ல களத்தைத்தான் தேர்வுசெய்திருக்கிறார். என்று நினைத்தேன்.  தற்போது,  பரதேசி பார்க்க நண்பர் ஒருவர் சென்ற சனிக்கிழமை அழைத்தார். போகமுடியவில்லை. அன்றே மாலைக்காட்சிதான் பார்க்க முடிந்தது. நாவலின் பாத்திரங்கள் அதன் தன்மைக்கு இல்லாமல் மாற்றி அமைத்திருப்பது போன்று தோன்றியது. ஏட்டில் இருப்பதுபோன்றே அமைக்கமுயாதுகூட இருக்கலாம். இருந்தாலும், நாம் சரியாக வாசிக்கவில்லையோ. அன்றிரவே மீண்டும் நாவலை வாசித்தேன். ஞாயிறு மதியத்திற்குள் முடித்தேன். மீண்டும் ஞாயிறு மாலைக்காட்சி அதேப்படத்தைப் பார்த்தேன்.

பாலாவின் குழு  உண்மையிலேயே மிகக்கடினமாக உழைத்து  எடுத்திருக்கிறார்கள்.  ஒரு பெருங்கூட்டத்தை கையாண்டு, ஒன்று படுத்தி நடிக்கவைப்பது சிரமமான விஷயம்தான். கிராமம், காடு, தோட்டம் என்று எல்லா இடங்களிலும் வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார். பாலா இப்படியான வரலாறுகளை கையில் எடுப்பது வரவேற்கவேண்டிய விஷயம். சிறு குழந்தைகளில் இருந்து கிழவிகள் வரை, கொட்டாங்கச் சியிலிருந்து, கோணிப்பை வரை எதார்த்தம் மாறாமல் நிறைவேற்றியிருக்கிறார். சிலது விடுபட்டும் இருக்கிறது. சற்று மங்கிய ஒளியில் கூட, எல்லா இயற்கை வளங்களையும் ரசிக்க முடிகிறது.  இரண்டு பாடல்களைத்தவிர  பின்னணி  இசை எதோ கலந்து கொட்டும் விதமாக இருக்கிறது. கங்கை அமரன் குரலில் இளையராஜாவை ருசித்ததுபோன்று உணர்வு இருந்தது. கூன் கிழவியின் வசைமொழி, டாக்டரின் “கர்த்தருக்குள் அய்க்கியமாயிட்டாளா? ஆகனும்” என்கிற இரட்டை அர்த்தம் தோய்ந்த வசனம் உள்பட நகைச்சுவை, சோகம் என்கிற வகையில் நாஞ்சில் நாடன் தன் பங்கை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார்.

ஆதர்வா நல்ல முறையில் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகிகளும் சரி, கூன் கிழவி, குழந்தைகள், மக்களோடு மக்களாக கூட்டமாக நடந்துச் செல்லும்போதும் சரி எல்லோரிடமும்  நிறைவான அனுபவத்தையே உள்வாங்கமுடிகிறது. அதற்கு பாலாவின் உழைப்புதான் காரணம். பாலா மட்டுமல்ல அவரின் கூட்டுக்குழுக்களும் காரணம் என்றும் சொல்லலாம். 

இவைகளைத் தவிர்த்து, நாவலில் வரும் பார்திரங்களின் தன்மையை ஏன் மாற்றினார்?  மாற்றப்பட்டப் பாத்திரம் எது? எது? அதன் அரசியல் என்ன? இவைகளை சற்று விளக்கமாக  என் அறிவுக்கு எட்டியவரை  சொல்லவேண்டியது  அவசியமாக  இருக்கிறது. அது, என்ன பயனை ஆற்றப்போகிறது  என்றாலும்கூட.  சமூகத்தில்  வெறுமனே கைக்கால்களை ஆட்டிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.  இல்லை என்றால்,  நான் சீக்கிரம் புதைக்கப்பட்டும் விடலாம். விஷயத்துக்கு வருகிறேன்.

போகிற போக்கில் நாவலும், பரதேசியும் கலந்துவர வாய்ப்பிருக்கிறது,  பார்த்து  பின் தொடருங்கள்.
                                                 
     பி.எச் டேனியல் 1941 லிருந்து 1965 வரை இருபத்தி ஐந்தாண்டுகள் தேயிலைத்தோட்டத்தில் பணி புரிந்ததின் அடிப்படையில் இந்நாவலை எழுதியிருக்கிறார். மிக முக்கியமாக தொண்ணுறு விழுக்காடுக்கும் மேலாக அரிஜன மக்கள்தான் புலம்பெயர்ந்தார்கள். கொஞ்சம்பேர் நாகர்கள் அதில் சிலர் கேரள உயர்சாதி மக்கள் என்கிற புள்ளிவிவரத்தை முன்னுரையில் சொல்லுகிறார்.  நாவலின் உயிரோட்டமாக கருப்பன், அவன் மனைவி வள்ளி  இவர்கள் தான் முக்கியப்பாத்திரம். இவர்களை வைத்துதான் நாவல் முழுக்க பயணம் செய்கிறது. உபரி பாத்திரங்களாக கங்காணி, கருப்பனுக்கு முன்பாகவே தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு குடும்பம். கொழுந்தனுடன் இருக்கும் ஒரு பெண். துரைமார்களுக்கு உடன் பணியாளர்களை பேசிமுடிக்கும் சற்று வயதான பெண். கூலிகளுக்கு பலசரக்கு கடன்கொடுக்கும்  செட்டியார், கம்பௌண்டர், துரைகள், மற்றும் டாக்டர் இவர்கள்தான் நாவலின் முக்கியப்பாத்திரம். இப்பாத்திரங்களை  பாலா எப்படி மாற்றியிருக்கிறார்  என்று பார்ப்போம்.

1939 சாலூர் கிராமம் என்று படம் தொடங்குகிறது. காலைநேரத்தில் ஒரு கிராமம் எப்படி எல்லாம் செயல்படத்தொடங்கும். மிகத்துள்ளியமாக செய்திருக்கிறார்கள். ஒரு மூலையில் பிள்ளைகள் விளையாடுவது, இன்னொரு பக்கம் பாணையில் தண்ணீர் ஊறறுவது, இன்னொருப்க்கத்தில் இயற்கை உபாதைக் கழிக்கச்  செல்வது. சில பெரியவர்கள் பேசிச்செல்வது இதுமட்டுமல்லாமல், முறிந்த பன ஓலை  கூரைகள் குறுக்கும் நெடுக்குமான சந்துகள் என நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள்.  அதில் ஒட்டுப்  பொறுக்கி தமுக்குப்போடுகிறான். இந்த ஒட்டுப்பொறுக்கி மிக சோம்பேரியாக, வீடு வீடாக பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துகிற மனம் தெளிவுடைய வாலிபன். இவன் தேயிலைத்தோட்டத்திற்கு போனபிறகு கோணி கந்தல் சட்டையாகத் தரப்படவில்லை.இந்தக்  கிராமத்திலேயே கோணிக் கந்தையை  உடுத்தியிருக்கிறான். மாமா, அத்தை, பெரியம்மா, பெரிய்ப்பா என்று பழகுகிறவன்  இப்படிக்கோணிக்கந்தை அணிந்திருப்பது விசித்திரம்தான்.

இவன்தான் நாவலின் கதை நாயகனான கருப்பன். பஞ்சம் தலைவிரித்தாடுகிற சூழ்நிலையிலும் வேலை தேடி அலைகிற பண்புடையவன். தான் பட்டினி கிடந்தாவது பெற்ற தாயையும் மனைவிப்பிள்ளைகளையும் காப்பாற்றுகிற மன தைரியம் படைத்தவன்.  ஒரு போராளி குணம் படைத்தவன்  தோட்டத்தில் கங்காணியின் அட்டகாசம் தாங்கமுடியாமல் ஒரு கட்டத்தில் மனைவியை துரைமாருக்கு தாரை வார்த்து தர நினைக்கிறபோது, கங்காணியை கொலை செய்வேண்டும் என்ற நிலைக்கு வருகிறவன். இப்படிப்பட்ட பாத்திரத்தை ஒரு அரிஜன மனிதனுக்கு கட்டமைத்தால் பூமி தாங்காது என்ற அடிப்படையில்தான். பாலா நாவலின் உண்மையான பாத்திரத்தை மிகக்கேவலமாக, ஒட்டுப்பொறுக்கியாக சித்தரித்துவிட்டார். அய்யோ, இவன் நாவலில் வருகின்ற கருப்பன் அல்ல என் சுயசிந்தையில் வடிக்கப்பட்டது என்று சொல்லமுடியாது. ஏனென்றால் இவன்தான் நாவலிலும்/ சினிமாவிலும் நாய்க்கர்மார் டீக்கடையில் வேலைகேட்டு வெளியூருக்கு வருகிறான். விறகுபிளக்கிறான். இவன்தான் கங்காணியை முறைத்துப்பார்க்கிறப் பாத்திரம்.

இன்னும் சற்று விவரமாகச் சொல்லவேண்டுமென்றால் நாவலில் வருகின்ற கருப்பன் வள்ளி பாத்திரத்தைப் பிரித்து பாலா இரண்டுஜோடியாக்கிவிட்டார்.. கருப்பனை ஒட்டுப்பொறுக்கியாக்கி,  அவனுக்கு ஒரு காதலியைக் கட்டமைத்தது, வள்ளிக்கு கல்யாணம் செய்து அவளுக்கு கணவன் பாத்திரத்தை கொடுத்திருக்கிறார்.  நாவலில்  இருப்பதை அப்படியே எடுக்க, பாலா  விஷயம் தெரியாதவரா என்ன என்றக்கேள்வியை எழுப்பலாம். சினிமா மொழிக்கென்று பல விஷயங்களை மாற்ற வேண்டியிருக்கிறது. என்று சொல்லலாம்.  நானும் மறுக்கிறவன் அல்ல. சினிமா பாணியை மெருகேற்ற புதியப் பாத்திரத்தை உருவாக்கினால் பரவாயில்லை. ஆனால், உண்மையாய் உழைக்கின்ற, தன் குடும்பத்தை  முன்னேற்ற நினைக்கின்ற பாத்திரத்தை, ஒரு இழிவான பாத்திரம் போன்று சித்தரிப்பது நியாமா? சரி என்று ஏற்கமுடியுமா?  இது நிரபராதியை வேண்டுமென்றே குற்றவாளியாய்  தீர்ப்பதற்குச் சமமான செயல் அல்லவா?

போலிகள் என்றுமே ஜெயிக்காது என்பதற்கு பாலாவால் உருவாக்கப்பட்ட செயற்கையான  இந்த இரு பாத்திரங்களும் கதையில் ஒரு வலுவான இடத்தைப் பெறவே இல்லை. மேலும் கதைக்களன் 1939ல் நடக்கிறது. காதல் மட்டும்-2012ன்,  நவ நாகரீகக் காதல்.  எல்லா நுணுக்கங்களையும்  கையாண்ட ‘பாலா‘ ஒன்றை யோசிக்க மறந்துவிட்டடார். 1939களில் பொதுவாக  பெண்களைத் தனித்து ஊரைச்சுற்றி வரவிடுவார்கள் என்பது சந்தேகம். இன்னொன்று பத்து பனிரெண்டு வயதை நெருங்கும் நிலையிலேயே கல்யாணம் முடித்துவிடுவார்களே. 13 14 வயதுவரைகூட கல்யாணம் ஆகாமல் பெண்கள் இருக்க, வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கும்போது சற்றும் உண்மையில்லாமல் ஒரு பெண் திருட்டுத்தனமாக கற்பமாகிவிட்டாள் என்பது ஏற்கவே முடியவில்லை. நாவலிலும், படத்திலும்  இருக்கும் கருப்பன் என்கிற ஒட்டுபொறுக்கி, வள்ளி என்கிற கறுப்பு கண்ணி இவர்கள்தான்.  இரு படைப்புகளிலும்  உண்மையான கதாநாயகர்கள்.

நாவலில் வள்ளி கடைசிவரை துரைகளிடமும், கங்காணியிடமும் சிக்காமலே துண்பங்களை அனுபவித்து, போராட்டங்களைச் எதிர்கொண்டு ஒரு கட்டத்தில் நோயின்  பாதிப்பினால் மரித்துப்போகிறாள்.  ஆனால், பாலா அவளை  கருப்பு கண்ணியாக்கி   வலுக்கட்டயாமாக  துரைகளுக்கு தத்தம் செய்துவிடுகிறார்.

இன்னொன்று,  நாவலில், முக்கியமாக  கூலிகளு  ரேசன் முதலிய பொருட்களை விற்பனை செய்கிற  நபர்  செட்டியார். ஆனால்,  பாலா அந்த நபரை முஸ்லீமாக   கட்டமைத்தது  ஏன் என்றே தெரியவில்லை? மனிதனுக்கு கொடுந்துரங்களை ஏற்படுத்துகிறவன், உயர் சாதி மக்கள் அல்ல. என்று சொல்லும் விதமாக விட்டுவிட்டாரா?

நாவலில் டாக்டர் பாத்திரம். உழைப்பாளி மக்களுக்கு ஒரு விடிவெள்ளி போன்று  வந்துசேர்ந்தவர். சொந்த நாட்டிற்கே மலையகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில். உள்ளுர் பணப்பேய்களும் துரைகளின் எலும்புத்துண்டுக்கும், எச்சில் சாராயத்திற்கும் அடிமை சேவகம் செய்துகொண்டு தன் சொந்த மக்களையே நெருப்பில் வாட்டிய நிலையில். டாக்டர்தான் கொஞ்ச கொஞ்சமாக நிலைமையை சரிசெய்கிறார். ஏறக்குறைய இயற்கை உபாதை கழிக்கக்கூட கம்பெனிகள் இதுவரை முயற்சி செய்யாததைக்கண்டு புலம்புகிறார். தொழிளாளர்களுககு ஆதரவாக இரவு பகல் பார்க்காமல் மருத்துவம் செய்து உழைக்கிறார். அப்படிப்பட்ட  பார்திரத்தைத்தான்  மிக உயரிய கலைஞனான பாலா கொஞ்சங்கூட மனசாட்சியில்லாமல் போக்கிரியும், நகைச்சுவையும் கலந்த குடிகார  டாக்டராக சித்தரிக்கிறார்.  இன்னொரு நிலமை என்னவென்றாள் மதம்மாற்றம் செய்யகிற வேலையை முழு மூச்சாய் செய்வதுபோல் காட்டுகிறார். ஆனால், நாவலில் ஒரு இடத்தில்கூட மக்களுக்கு கடவுளைப்பற்றி போதனையோ, மதத்திற்கு ஈர்க்கும் படியான வார்த்தைகளையோ பார்க்கவேமுடியாது.  மேலும் வேதனைத்தரக்கூடய விஷயம் என்னவென்றால்  இதில் வருகின்ற டாக்டர்தான், ரெட்  டீ ( எரியும் பனிக்காடு) என்ற நாவலையும் எழுதியவர். பி.எச் டேனியல் நாவலில் கொட்டிவைத்த தங்கங்களை மிக அழகாக பொறுக்கி  நிதானமாக நீண்ட கூர்வாளாக செய்து  பி.எச் டேனியலின் கல்லறையைத்தோண்டி அவரின் எலும்புகளை பொடியாக நறுக்கியிருக்கிறார்  என்றால் பாலாவின் நேர்மையை என்ன சொல்வது.

நாவலின் எதார்த்தத்தை பிரிதிபலிக்காத இடங்கள். நாவலின் தொடக்கமே திருநெல்வேலி மாவட்டம் மழையின்றி பஞ்சத்தால்  அடிபட்டுக்கிடக்கிறது. மயிலோடை கிராமத்தில் மக்கள் பிழைக்க வழிதெரியாமல் தவிக்கிறார்கள். இந்த நிலையில் ஏஜெண்டுகள்  மூலம் பல ஊர்களில் இருந்து மக்களை நயவஞ்சகமாக பேசி மூளைசலவைசெய்து ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களை அழைத்துச்செல்கிறார்கள். அழைத்துச்செல்கிறவன் வெள்ளைக்காரன் அல்ல உள்ளூர் பணத்தாசை பிடித்த மனிதர்கள்தான். அவர்கள் அநேகமாக உயர்சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வாய்ப்பு இருக்கிறது. 

சினிமா இந்த இயல்பை கடைபிடிக்கவில்லை.  ஒரே கிராமத்திலிருந்து மக்களைக் கூட்டிச்செல்வதுபோல் இருக்கிறது. மேலும் பஞ்சம் பிழைக்கச்செல்கிறார்கள்  என்று படித்துவிட்டு, அதற்கான காட்சிப்படுத்தல் கைவிட்டிருக்கிறார்கள். சோறு கீழும்மேலும் கொட்டி பரிமாறுகிற அளவுக்கு  வசதி வாய்ப்புகள் அக்கிராமத்தில் கிடக்கிறது. கொட்டாங்கச்சி, தையல் இலை கூடையில் சோறு என்று 1939ன் பாரம்பரியத்தைக் காட்டியவர்கள். சோறு மட்டும் 2012ன் பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை வெளேர் சோற்றை போடுகிறார்களேப்பா.  அந்தகால கார் அரிசி, கிச்சிலிச்சம்பா, கப்பச்சம்பா  பூரி அரிசி எல்லாம்  கிடைக்கவில்லைபோல.

நாவலைப் படிக்காதவர்கள் பாலாவின் மிக அற்புதமான வறலாற்றுப்பதிவு என்று சொல்வார்கள். நானும் அப்படித்தான் நினைக்கிறேன் தலித் வரலாற்றை பொதுத்தன்மை வாய்ந்ததாக சாதி, மதமற்ற மக்களின் வரலாறாக உள்நோக்கத்தோடு  மாற்றியதைத் தவிர்த்துவிட்டு. ஆனால், எந்த பொதுத்தன்மை வாய்ந்த கட்டமைப்புகளும் அன்று ஆயிரக்கணக்கான  கருப்பனும்  வள்ளியும்  அனுபவித்த  துயரத்தை  மீட்டுத்தரவேமுடியாது.

தமிழ் சினிமாத்துறையில்  ஒரு சாரார்  நான்தான் கலையை வாழவைக்கிறேன் என்று  சொல்லிக்கொண்டு   உலகப் படங்களை அச்சு பிசகாமல் காப்பியடித்து பணம்  சம்பாதித்துக் கொள்கிறார்கள். பாலா அப்படியெல்லாம் இல்லை. நம் சொந்த மண்ணின்  அடித்தட்டு மக்களின் வாழ்வை பதிவு செய்கிறார் என்று பெருமைபட்டால்  அந்த நேரம் பார்த்து இப்படி  உண்மைகளை தன் விருப்பப்படி பொய்யாக்கி, பொய்யை உண்மையாக்கி வரலாறை கட்டமைக்கிறாரே என்று வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லை.

ஒட்டுப்பொறுக்கி இதயத்தில் அன்பான காதலியின் நினைவு வாட்ட,   நரகத்திலிருந்து  தப்பமுடியாமல்,   நாதியற்ற நிலையில், பசுமைதோட்டத்தின் நடுவே   (பணம், ஊடகவாய்ப்புக் கிடைத்தவனுக்கு  சமூகம் சுற்றி பசுமைத்தோட்டமாகவும். அது கிடைக்காத அடித்தட்டு மனிதன் எங்கும் நகரமுடியாமல் கிடக்கும்  துண்டு பாறையாகவும்தான் எனக்குத்தெரிகிறது) பாறைமீது உட்கார்ந்து, ஆதர்வாவின் உச்ச நடிப்பாக  தன் முழுபலத்தையும் கூட்டி கத்துவதுபோல்.

நானும் இந்த  2013லிலும் கத்தவேண்டியிருக்கிறது   “நியாயமாஆஆர்ரே  தலித்தின் சரித்திரமாக இருப்பதால் கருப்பனை, ஒட்டுப்பொறுக்கியாக  சித்தரிப்பது நியாயமா? நியாயமாரே.  பொறிக்கியை பொறுக்கி என்றும் நேர்மையானவனை நேர்மையாகவும் சொல்வதும்தானே நியாயம் நியாயமாரே. அடித்தட்டு  மக்களை கண்டுகொள்ளாமல் விடுபவரைவிட இது மோசமான செயல்தானே  நியாயமாஆரே.

ஜே. டேனியல்