Friday, February 21, 2014

விமர்சனம்,



வெள்ளையானை 4                        ஜெயமோகன்

//பேயுருவங்கள் போன்ற மனிதர்கள். கல்லறை திறந்து கிளம்பி வருபவர்கள் போல பாதி மட்கிய உடல்கள்// தற்சமயம் இந்த வார்த்தைகளை புகழ்ச்சி வார்த்தைகளாகக்கூட எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நான் வேண்டுமென்றே உழைப்பாளி மக்களின் சார்பாக நின்று மோசமான வார்த்தைகளாகத் தேடித்தருவதாகக்கூடத் தோன்றும். ஒன்றிரண்டு இடங்களில் குழந்தைகளைக் குறிப்பிடும்போது மட்டும் ஆசிரியரின் பெருந்தன்மையால் இலக்கியத்தன்மை வெளிப்படும். மற்றபடி கடைநிலை மக்களை மேற்குறிப்பிட்டபடிதான் பெரும்பகுதி நாவல் பேசுகிறது.

அக்கால மதராஸப்பட்டினத்தைச் சுற்றி புற நகர் இடங்களின் கோரைப்பாய் தயாரிப்புக்காக விதைக்காமல் அறுக்கும் பயிர்களாக கோரைகள் ஏரிகளில் பரந்துகிடந்ததும், அறுப்பதும்  உள்ளூர் தொழில்வளாகம்போல் ஏரிகளே இருந்ததும் உணரமுடிகிறது.

ஏய்டன் ஏரிப்பகுதிகளைப் பார்க்கும்படியும், அதில் குடியிருக்கும் மக்களின் நிலையை அறிந்து கொள்வதற்காகவும் காத்தவராயனை உடன் அழைத்துச்செல்கிறார். ஏய்டன், காத்தவராயன் ஒரு பக்கமும். குப்பத்தின் ஒருசில மனிதர்கள் எதிரிலும் நிற்கிறார்கள்.  ஏய்டன்  ‘நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில்கேட்டுச்சொல்‘ என்று பணிக்கிறார். ஆரம்பத்தில் காத்தவராயன் ஒன்றிரண்டு வார்த்தைகளை மொழிபெயர்த்துச் சொல்வார். தடாலென்று காத்தவராயன் வாயை முடக்கிவிட்டு ஆசிரியர் உதவியுடன் ஏய்டன், குப்பத்தின் மக்களின் மொழி தெரிந்தவர்போல் நேரடியாக பேசத்தொடங்கிவிடுகிறார். காத்தவராயன் வாயை முடக்கி ஏய்டன் சாயலாக ஆசிரியர் பேசவேண்டிய காரணம் என்ன? 

நாவலில் வருகின்ற இரண்டு நபர்களின் தன்மைக்குறித்து பார்க்கவேண்டியிருக்கிறது. நாவல் வெளியில் அவர்கள் செயல் எப்படியிருக்கிறது. ஆனால் அவர்கள் இயல்பைக்குறித்து ஆசிரியர் வைக்கிற ஆய்வு சரியானதா? உள்நோக்கம் இல்லையா? அறம் என்பது, இருப்பவன் இல்லாதவன் காசுக்கு ஏற்றபடி கூத்தாடுவதா? நீங்கள்தான் சொல்லவேண்டும்.

//காத்தவராயனைப் போன்றவர்கள் நடைமுறைவாதிகள். அன்றாட யதார்த்தத்திற்கு அப்பால் பார்வையை விரித்துக்கொள்ளாதவர்கள்// என்று ஏய்டன் சொல்லுவதுபோல் வருகிறது. ஆசிரியரின் கட்டுக்கோப்பை மீறி தன்னைக் கட்டமைத்துக்கொள்ளும் நாவலின் பாத்திரமான ஏய்டன் நேரடியாக பேசுகிற பல இடங்களில் காத்தவராயன் அறிவுத்திறமையை மெச்சி பேசி இருக்கிறார். அவர் மீது மரியாதை இருந்ததால்தான் தன் அரண்மனையில் தனக்குச் சமமான இருக்கையில் அமரச்செய்து பேசிய நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கிறது. மேலும் காத்தவராயன் ஏய்டனுடனான பேச்சில் //பிரிட்டீஷ்  ஆட்சி என்பதே அதிகாரிகளும், பண்ணை உரிமையாளர்களும், குத்தகைதாரர்களும் சேர்ந்து அடிக்கும் ஒரு மாபெரும் கூட்டுக்கொள்ளை மட்டுந்தானே// 

//1. இந்திய முதலாளிகள் எந்தக்கொடுமைக்கும் அஞ்சாதவர்கள்.
 2. அமெரிக்கர்கள் கெட்டபேருக்கு பயப்படுவார்கள். ஆகவே நேரடியாக
    கொடுமைகளைச் செய்ய இவர்கள் துணியமாட்டார்கள்.
  3. இந்தியாவின் உயர் சாதியினதைவிட மிகமிக மேலான மனசாட்சியும், பண்பாடும் கொண்டவர்கள் இந்த வெள்ளையர்கள்//  என்று காத்தவராயன் ஒரு பரந்துபட்ட (நாடுகள் அளவில்) விஷயத்தை ஏய்டனுடன் பல இடங்களில் பேசியிருக்கிற நிலையில், காத்தவராயனை நடைமுறைவாதி யதார்த்தத்துக்கு அப்பால் பார்வையை விரித்துக்கொள்ளாதவர் என்பது யாருடைய குரலாக இருக்கும்.

ஒருவேளை காத்தவராயன் உள்ளூர்காரர்களைத் தாழ்வாகவும், வெளியூர்காரரை உயர்த்தி பேசியிருக்கலாம். அப்படி அவர் யோசித்ததற்கான காரணம் எதன்மூலம் வந்தது.

ஜெயமோகன் என்கிற ஆளுமையின் சமீபத்திய பல தொகுப்புகளை வாசித்து நண்பர்களுடன் பேசியிருக்கிறோம். ஆனால், இந்த நாவலை ஏதாவது நிர்பந்தத்தின் அடிப்படையில் எழுதினாரா தெரியவில்லை. நாவல் அங்கங்கே மேலும் நகரமுடியாமல் நிற்கிறது. அங்கு நாவலுக்கு ஒரு அபத்தமான  வாக்கியம் தேவைப்படுகிறது. அந்த இணைப்பு வாக்கியத்தைக் கொடுத்ததும்  நாவல் வேகத்துடன் தொடர்கிறது. குறிப்பாக “தொப்பியை எடுத்து தலையை நீவிக்கொண்டான்“, “ஏய்டன் பெரு மூச்சுவிட்டான், பெரு மூச்சுடன் எழுந்தான்“ என்கிற வாக்கியம் மட்டும் நாவல் முழுக்க ஏறக்குறைய இருபது இடங்களில் வருகிறது, இவைகளே நாவலை தொடர்ந்து நகர்த்த துணையிருக்கும் இணைப்புச்சொல்லாக இருக்கிறது.….

அடுத்த பதிவோடு முடியும்

குறிப்பு- விமலாதித்த மாமல்லன் இப்பதிவைக் குறிப்பிட்டதற்கு நன்றி. நாவலில் இருந்து வெளியேச்சென்றால் அவரேக்கூடக் குட்டுவார் என்ற புரிதலும் இருக்கிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு நியாயமற்ற காரணத்திற்காக இவ்வழியைப்  பின்பற்றுவதில்லை.
உண்மையிலேயே எனக்கு  ஜெயமோகனும் பிடித்தமான எழுத்தாளர்

டேனியல் 



.

No comments: