Sunday, February 2, 2014

விமர்சனம்

வெள்ளையானை                                                                    ஜெயமோகன்

இந்த நாவலைக்குறித்து எனக்குள் எழுகிற கேள்விகளை ஏன் விமர்சனமாக வைக்கவேண்டும். அதனால் ஆகப்போவது எதுவுமில்லை என்று யோசித்தேன். எழுதிக்கொண்டிருக்கிற இலக்கியங்களால் மட்டும் என்ன நிகழ்ந்துவிடுகிறது. வேளிங்காத்தான் முள்ளுகளுடன்தான் விளைகிறது. வலுத்தவனின் அதிகாரம் சமூக நீதியாகத்தான் சற்றும் தொய்வில்லாமல் நடைமுறையில் தொடர்கிறது. எல்லாமே அதனதன் த...ொனியில், அதனதன் இடத்தில் தடையற்றதாய் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்ற வார்த்தைகளை ஆருதலாக எடுத்துக்கொண்டாலும், இந்நாவலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல் மருந்து கட்டுதல் என்பது வெளிப்படையான பார்வைக்குள் இருந்தாலும், அம்மக்களைக் கீழ்மைபடுத்துதலும் மறைமுகமாக இருப்பதால் அதை எனக்குத்தெரிந்த வகையில் வெளிபடுத்தாமல் இருக்கமுடியவில்லை.

ஏய்டன் என்ற அயர்லாந்து வாலிபர் மதராஸப்பட்டினத்திற்கு ராணுவ தளபதியாக வருகிறார். வந்த சொற்ப நாட்களிலேயே நாட்டின் அடித்தட்டு மக்கள் மீது கரிசனை வருகிறது. அந்த வாலிபர் ஆங்கிலேயப்படையின் கேப்டன் என்பதின் வீரியம் குறைவாகவே இருக்கிறது. மாறாக ஜெயமோகன் என்ற படைப்பாளரின் மென்மையே அப்பாத்திரம் முழுக்க ஒளிர்கிறது. கேப்டனின் ஆளுகைக்குக்கீழ் எத்தனை படைப் பிரிவு, அப்பதவிக்கான அதிகாரத்தின் வலிமை என்பதெல்லாம் மேலோட்டமாகக்கூட சொல்லத்தவறிவிட்டது என்றே நினைக்கிறேன்.

பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் தங்கள் சுகபோக வாழ்விற்காக பஞ்சத்தில் சாகும் மக்களை மேலும் கொடுமைப்படுத்துகிறார்கள். அதற்கு உள்ளூர் நிலச்சுவாண்தாரர்கள், மொத்தமாக வணிகம் செய்யும் செல்வந்தர்கள், ஆங்கிலேய அதிகாரங்களுக்கு நெருக்கமாக இருந்த பிராமணர்கள் அனைவருமே சேர்ந்து பஞ்சத்தில் அழிந்துகொண்டிருந்த மக்களைக் காக்கிறார்களா? அல்லது ராஜபக்ஷேவின் நவ நாகரீக இனவழிப்பை 1887லேயே தமிழகத்தில் செய்தார்களா? என்பதையே நாவல் சித்தரிக்கிறது. அதில் ஆசிரியரின் பங்கு எந்தளவுக்கு வெள்ளை நாகரீகத்தோடு இயந்து இருக்கிறது. லட்ச லட்சமாக பஞ்சத்தில் அழிந்தவர்களுக்காக ஆசிரியரின் நீதியுணர்ச்சி என்ன? தொண்நூறு விழுக்காடு ஆங்கிலேயரின் கலாச்சாரச்சூழல் எழுத்துதொனியில் வராமல், ஜெயமோகனைத்தவிர வேறு யாராவது எழுதினால் அதை கலைப்படைப்பாக ஏற்றுக்கொள்வார்களா?

ஏய்டனின் பேச்சுமொழியில் “டொரசாமி“ என்கிற ஒரே ஒரு வார்த்தையைத்தவிர (ஆங்கிலம் தெரியாது என்பதால் ஷெல்லியின் கவிதைகள் மற்றும் ஏய்டனின் ஓரிரு ஆங்கில வாசகத்தை விட்டுவிட்டேன்) நாவல் முழக்க ஆசிரியரின் தொனியே ஓங்கியிருக்கிறதே அது சரியா? ஏய்டனின் மன வெளிப்பாட்டை தன் இயல்போடு, நீதியுணர்வையும் மிக நீளமாக கட்டமைக்கிற ஆசிரியர். காத்தவராயனுக்கு அவர் பேச்சை மட்டுமே மிக சுருக்கமாக வைப்பது கடந்த காலத்தில் காத்தவராயனின் உண்மை நிலைதானா?

வெள்ளையானை வெளிப்படையாக ஐஸ்கட்டி, மறைமுகமாக வெள்ளை நிற ஆட்சியாளர்கள் என்பதாகத் தெரிகிறது அது ஒருவகையில் மதிப்புக்குறியதாகத் தென்படுவதால் கலைநயத்தின் குறியீடு என்றேகூட வைத்துக்கொள்ளலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களையே உள் அட்டையில் கோரம் நிறைந்த நாய்களாகச் சித்தரிப்பது சரிதானா?....

பிறகு பார்க்கலாம்...

டேனியல்

No comments: