மீடியாவின் போக்குக்குறித்து,
சி.என்.என்-ஐபிஎன் சேனலின்‘கரன் தாப்பர்’ கேள்வியும், முன்னாள் தலைமை நீதிபதி ‘ஜட்ஜ் கட்ஜீ’ பதிலும்
-----------------------------------------------------------------------------
சி.என்.என்-ஐபிஎன் சேனலின்‘கரன் தாப்பர்’ கேள்வியும், முன்னாள் தலைமை நீதிபதி ‘ஜட்ஜ் கட்ஜீ’ பதிலும்
-----------------------------------------------------------------------------
நிச்சயமாக இல்லை.
உண்மையாகவா சொல்கிறீர்கள்?
உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சில நேரங்களில் மக்கள் நலனுககு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன்.
உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின் கடமை என்று அந்த சந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாக செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதானக இல்லையா?
ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றம் நேர்ந்துகொண்டிருக்கிறது. நில பிரபுத்துவ வேளாண் சமூகமாக இருந்த இந்தியா இன்றைக்கு நவீன தொழில்சார் சமுதாயமாக மாறும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இரு வலிகள் மிகுந்த காலகட்டம். முன்பு ஐரோப்பா இதே மாற்றத்தை சந்தித்த நேரத்தில் மக்களுக்கு அந்த வலியை குறைக்கும் வகையில் அங்குள்ள மீடியாசெயல்பட்டது.
இந்தியாவில் அப்படி நடக்கவில்லை என்கிறீர்களா?
இங்கு அதற்கு தலைகீழாக நடக்கிறது, ஐரோப்பாவில் ரூசோ, தாமஸ்பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்துக்கு தயார் செய்தார்கள். ‘இந்த நாட்டிலுள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது’ என்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.
அவர்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் வரலாற்று மாற்றத்துக்கு நமது மீடியாவின் பங்களிப்பு எப்படி?
இந்திய மீடியா பெரும் பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதை பார்க்கிறேன். மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாம் பொருளாதார அடிப்படையிலானவை. நம் மக்களில் இன்னமும் 80 சதவிகிதம் பேர் வறுமை, வேலையின்மை, விலைவாசி நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா. சினிமா நட்சத்திரங்கள், அழகிபோட்டி, கிரிக்கட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது, அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.
ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் மேட்டரை மக்களுக்கு போதையேற்ற மீடியா பயன்படுகிறது என்கிறீர்கள்?
ஆமாம் கிரிக்கெட் நமது ஜனங்களுக்கு ஒரு போதை பொருள்- ஓப்பியம்மாதிரி. ‘ரோமாபுரி பேரரசன் சொல்வானாம், மக்களுக்கு ரொட்டிக்கொடுக்க வழியில்லை என்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடுசெய்’ என்று. இந்தியாவில் மக்களுக்கு தேவையானதை கொடுக்க முடியாவிட்டால் அவர்களை கிரிக்கெட் பார்க் வைக்கிறோம். நிறைய சேனல்களில் இரவு பகல் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட்மேட்ச் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுதான் நாட்டின் ஒரே பிரச்சனை மாதிரி.
மக்கள் விரோதமாக மீடியா செயல்படுவதை காட்டும், இன்னும் இரண்டு விஷயங்கள் என்னென்ன?
இரண்டாவது , அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழமுடியும், ஆனால் என்ன நடக்கிறது? ஒரு ஊரில் குண்டுவெடித்தால் போதும், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்ற இந்தியன் முஜாஹிதின் கூறுகிறது’ அல்லது ஜய்ஷ் இ முக மத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது’ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது. இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ் இமெயில் எல்லாம் யார்வேண்டுமானாலும், யார்பெயரிலும் அனுப்பமுடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியிலும் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது? முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக இருந்தாலும் 99 சதவிகிதம்பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.
மீடியா இந்த விஷயத்தில் கேர்லசாக நடக்கிறது, தகவ்ல் உண்மையா என்பதை செக் பண்ணாமல் செய்தி வெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படி செய்வதாக நினைக்கிறீர்களா?
மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.
மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டைக்குவதாகவா சொல்கிறீர்கள்?
குண்டு வெடித்து சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மததிதையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?.
மீடியாவின் மக்கள் விரோத நிலைப்பாடுக்கு மூன்றாவது உதாரணமாக எதை சொல்லப் போகிறீர்கள்?
ஒரு ஃபியூடல் சொசைட்டியாக மாறுகிற காலகட்டத்தில் அந்த மக்களும் நாடும் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும். அதற்கு மீடியா உதவவேண்டும் ஐரோப்பாவில் நடந்ததை சொன்னேன். இங்கே என்ன நடக்கிறது? அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கு பதில் ஜோசியம், மூட நம்பிக்கை போன்ற விஷயங்களை பரப்புகிறது மீடியா. ஏற்கனவே நமது நாட்டில் 80 சதவித மக்கள் ஜாதி, மதம், மூடநம்பிக்கை போன்ற விஷங்களில் சிக்கி மனரீதியாக பின்தங்கி நிற்கிறார்கள். அவர்களை அந்த மாயைகளில் இருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்கு கொண்டுவர, முற்போக்கான எண்ணங்கள் உருவாக டியா தூண்டுதலாக இருக்க வேண்டுமா, வேண்டாமா? ஆனால் மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை நமது மீடியாசெய்கிறது. பல சேனல்களில் பெரும்பாலான நேரம் ஜோசியம் ஓடுகிறது. இன்றைக்கு நீங்கள் இந்த கல் மோதிரம் போடவேண்டும், இன்ன கலர் சட்டை அணிந்தால் நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாக சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள்.என்ன பெத்தல் இது!
ஆக மீடியா என்ன செய்யவேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அதை செய்யவில்லை என்கிறீர்கள். தன்னை நம்பிய இந்தியாவை மீடியா கைவிட்டு விட்டதாக எடுத்துக்கொள்ளலாமா?
ஒரு பெரிய சமுதாய மாற்றத்தில் மீடியாவின் பங்களிப்பு அபாரமானதாக இருக்கவேண்டும். ஏனென்றால் மீடியா என்பது ஏதோ சாமான் உற்பத்திசெய்து சந்தையில் விற்கும் சாதாரணமான பிசினஸ் கிடையாது. அறிவு சம்பந்தப்பட்டது. மக்களுக்கு அறிவியல் அடிப்படையிலான புதிய சிந்தனைகள் உருவாக தூண்டுகோலாக செயல்படும் புனிதமான பணி மீடியாவுக்கு தரப்பட்டிருக்கிறது. அந்த பொறுப்பை அதுசெய்ய தவறினால் நாட்டை, மக்களை கைவிட்டு விட்டதாகத்தானே அர்த்தம்?
இந்தியாவை இன்னும் மோசமாக்குகிறது மீடியா என்றா சொல்கிறீர்கள்?
அதுதான் என் மதிப்பீடு. ஒரு ஜோசியர் உட்கார்ந்துக்கொண்டு ‘இது அந்த ராசி, அது அணிந்தால் உங்களுக்கு ராசி’ என கதை அளந்துகொண்டிருப்பதை எத்தனை சேனல்களில் பார்க்கிறோம்.
செய்தியை சரியாக சொல்வதில்லை, உண்மைகளை இஷ்டத்துக்கு திரித்து கூறுகிறது, கருத்தையும் வார்த்தைகளையும் வெட்டி ஒட்டிவேறு அர்த்தம் கொடுக்கிறது’ என்பது மீடியா பற்றிய மக்களின் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அதுதான் என் கருத்தும் 2009 தேர்தலில் பார்த்தோம். முன்னெல்லாம் செய்தியாளர்கள் வேட்பாளரை பார்த்து, ‘எனக்கு பத்தாயிரம் கொடு உனக்கு சாதகமாக செய்திபோடுகிறோம் ’ என்று பேரம் பேசினார்கள். அதை பார்த்த பத்திரிகை உரிமையாளர்களுக்கு வேறு ஐடியா உதித்தது. நாம்தான் சம்பளம் கொடுக்கிறோம், செய்தியாளர்கள் இப்படி சம்பாதிக்க ஏன் இடமளிக்க வேண்டும்? நாமே சம்பாதிக்கலாம்? என்று முடிவுசெய்து, ஒரு கோடி கொடுங்கள், நான் ஒரு பேக்கேஜ் தருகிறேன்.’ என்று கீழே முதல் பக்கத்திலேயே பிரசுரமான விசித்திரத்தை பார்த்தோம். கண்ணை விற்று சிட்ததிரம் வாங்கும் வேலை.
இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நீதிபதி வர்மா தலைமையில் நியூஸ் பிராட்கார்ஸ் அசோசியேஷன் அமைத்து சுயமாக சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சிசெய்தார்கள்....
அதில் எந்த பலனும் ஏற்பட்டதாக தெரியவில்லையே. நீங்கள் தொழில் நடத்தவது ஏழைகள் வாழும் நாட்டில், அதனால் அவர்களுடைய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும், அதைவிடுத்து லேடி காகா வந்து விட்டார், கரீனா கபூர் தனது மெழுகு சிலையை மிகவும் சிலாகித்தார்’ இதையெல்லாமா முக்கியசெய்தி ஆவது?
மீடியா ஏன் மாறவில்லை என நினைக்கிறீர்கள்?
அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அதுதான் காரணம். கொஞ்சமாவது பயம் இருக்கவேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம்.
அதற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
பத்திரிகைகளை மட்டும்தான் பிரஸ் கவுன்சில் இப்போது கேள்வி கேட்கமுடியும். பிரஸ் கவுன்சில் பெயரை மீடியா கவுன்சில் என மாற்றி டீவி சேனல்களையும் அதன் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். சொல்லி திருந்தா மீடியா நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்களை நிறுத்துவது, லைசென்ஸை குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைப்பது போன்ற தண்டனை அளிக்க அந்த கவுன்சிலுக்கு அதிகாரம் வேண்டும். பிரதமருக்கு எழுதியிருக்கிறேன்.
அது பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்கும் என்பார்களே?
ஜனநாயகத்தில் எல்லோரும் மக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவர்கள். எந்த சுதந்திரமும் எல்லையில்லாதது அல்ல. சில கட்டுப்பாடுகள் இருந்தாக வேண்டும் மீடியா இதை உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.
மீடியா பற்றி மக்கள் கூறும் இன்னொரு புகார், அப்பாவிகளைப் பற்றி தவறான செய்தி வெளியிட்டு சில நேரம் தெரியாமலும் சில நேரம் தெரிந்தே வேண்டு மென்று அவர்களை ஆதாரமின்றி குற்றவாளியாக பிரகடனம் செய்து வாழ்க்கையை நாசமாக்கிவிடுகிறது என்பதாகும். அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது உண்மைதான். நான் தலைமை நீதிபதியாக வேலைப்பார்த்த ஐகோர்ட்டில் இருந்த ஒரு நீதிபதியின் படத்தையும் ஊரறிந்த குற்றவாளியின் படத்தையும் அருகருகே வைத்து தொடர்ந்து செய்தி ஒளிபரப்பியது ஒரு பிரபலமான சேனல். அந்த நீதிபதி நிலம் அபகிரித்தார் என்பது குற்றச்சாட்டு . நான் விசாரித்தேன். புகாரில் உண்மையில்லை. அழுதார் அவர். இதுவா பத்திரிகை தர்மம்? நேர்மையற்ற ஊழல் நீதிபதியை தோலுரித்துகாட்டு. நானும் ஆதரிக்கிறேன். ஒரு ஜர்ன்லிஸ்ட் எந்த விசாரணையும் இல்லாமல், ஆராச்சி செய்யாமல், உண்மையைத் தேடாமல் கையில் கிடைத்த செய்தியை பிரசுரிப்பது என்ன ஜர்னலிசம். பரபரப்புக்காக எதை வேண்டுமானாலும் எழுதிவிடுவதா?
முக்கியக்குறிப்பு
இது பத்திரிக்கை செய்திதான். எல்லோரும் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் மிக மிக அவசியமானது.இக்கருத்துக்கள் மக்கள் நலனை சார்ந்திருப்பதால் எனக்கு இக்கருத்துக்களில் மிகுந்த நம்பிக்கை இருப்பதால் என் வலைபூவிலும் பதிவிடுகிறேன். உங்களால் முடிந்தால் நண்பர்களுக்கு சேர் செய்யுங்கள்.
ஜேடி


No comments:
Post a Comment