Monday, November 7, 2011

கவிதை

மூன்று வாத்துக்கள்

பாசிப்படர்ந்த
குட்டையில் உலவுகிறது
மூன்று வாத்துக்கள்

மழை,வெயில்,பகல்,இருள்
எல்லாம் வந்துபோகின்றது
இவற்றில் எதையுமே அவைகள்
விஷேசமாக எண்ணியதேயில்லை

எங்கு இருக்கிறோம்
எதற்காக வாழ்கிறோம்
நடமாடிக்கொண்டிருப்பதற்குப்பெயர்
வாழ்வா என்று
ஒரு கணம் கூட யோசிக்கவேயில்லை

வயிற்றுப் பசிக்காக
குட்டை வளர்க்கும்
பாசிகளை சப்பிக்கொள்கிறது
அதனால் அதற்கான வயிறு
நிறைவதேயில்லை
நாளுக்கு நாள்
எலும்பை மூடிய சதைப்பற்று
சுருக்கம் அடைகிறது
விஷேசமான இறக்கை இருந்தாலும்
வேகுதூரம் பறக்குமளவுக்கு
திறமையைக்கொடுக்காத
கடவுளைச்சாடவும் தெரியவில்லை
இருந்தாலும் குட்டையில்
நீந்துவதை நிறுத்தவில்லை

திபுதிபுவென
தூசி பறக்க
ஓடிவந்த எருமைகள்
குட்டையில் முழ்கின
தங்கமீன்கள்,காந்தி நோட்டுகள்
லேடனின் வார்ப்புக் குழந்தை
இவைகளை
வாயின் இடுக்குகளில்
வைத்து தின்றுகொண்டு எழுந்தபோது
அதன் கொழு கொழுத்த
உருவம் பிரமாண்டமாய் இருந்தது

ஒருவாத்து
சதிகாரக் குட்டை
இதுநாள் வரை
நமது பார்வைக்கு
பசுமை என்ற பெயரில்
பாசியைத்தானே ஈந்தளித்து என்றது
மற்ற இரண்டு
ஒன்றுபோல சேர்ந்த குரலில்
சீ அப்படியில்லை
நாற்றம் அடிக்கும் அதன்
அடி சேர்வரை
நாம் முழ்கவே இல்லையே என்றது.

ஜேடி


No comments: