Friday, May 30, 2014

சினிமா,

தமிழ்சினிமா கூட்டுறவு இயக்கம்

எங்கள் பகுதிகளிலெல்லாம் (எல்லா ஊர்களிலும் இருக்கும் என்று நினைக்கிறேன்) பெண்கள் இருபதுபேர், முப்பதுபேர் குழுவாக சேர்ந்து கூட்டுறவை ஏற்படுத்திக்கொண்டு வங்கியில் கடன் பெற்று, அதைத் திரும்பச்செலுத்தி வெற்றிகரமாக இயங்குகிறார்கள் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இதற்காக பெரிதாக நேரத்தையோ, பெரிய முதலீடையோ வைக்கவில்லை. ஒருவரை ஒருவர் இணைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். நாலு பெண்கள் சேர்ந்தாக் குட்டிச்சுவர், உருப்படாது என்றதெல்லாம்போய் நல்ல ஆக்கப்பூர்வமான காரியங்கள் செய்து வாழ்கிறார்கள்.

இத்தனைக்கும் வெளிஉலகதைப்பற்றிப் பெரிய அறிதல் இல்லாமலே அவர்களால் வெற்றிகரமாக சாத்திக்க முடிகிறது.

நாம்கூட ‘தமிழ்சினிமா கூட்டுறவு இயக்கம்‘ என்று ஒன்றை உருவாக்கி, அதில் ஐநூறு உறுப்பினர்கள் (கிழிஞ்சது கிருஷ்ணகிரி. கொஞ்சம் பொறுங்கள். ஐயய்யய்யோ கொஞ்சம் சொல்லத்தான் விடுங்களேன்.) முக்கியமாக உறுப்பினர்களாக சேர விரும்புகிறவர்களுக்கு கலைகளில், இலக்கியத்தில், தொழில் முனையும் நுணுக்கத்தில் அதுசார்ந்து எதாவது ஒரு திறமை இருத்தல்வேண்டும்.

தமிழ்சினிமா கூட்டுறவு இயக்கத்திற்கு ஒரு வங்கிக்கணக்கு ஆரம்பித்தது, ஆளுக்கு பத்தாயிரம் முதலீடு செய்வது. ஐநூறு உறுப்பினர்கள் சேர்ந்து முடிந்ததும் அது மூன்றுமாதம் ஆகலாம் அல்லது ஆறுமாதம் ஆகலாம் இல்லை இதன் திட்டத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டதின் காரணமாக மிக விரைவாக இயக்கம் திட்டமிட்ட உறுப்பினர்களை அடைந்துவிடலாம் ஆக எப்படி இருந்தாலும் நாம் திட்டமிட்ட உறுப்பினர் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் குறைந்த பட்ஜெட்டில் சினிமா எடுக்கத்திட்டமிடுவது. (இயக்கம் உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு ஆறுமாதம் என்று வரையறுத்தால் ஆர்வலர்கள் இரண்டு மூன்று தவனைக்குள் நிர்ணயித்தத் தொகையைச் செலுத்துவதற்கும் வாய்ப்புத்தரவேண்டும்.)

மொத்த உறுப்பினர்களில், இயக்கத்தில் சேர்ந்த காலநேர முன்னுரிமை வரிசைப்படிக் கணக்கெடுத்து, பத்துபேருக்கு ஒரு பிரிதிநிதி என்று தெரிதல் செய்தபின் தமிழில் மிக நேர்த்தியாக ஒரு சினிமா எடுப்பதற்கான கதையை ஆய்வுசெய்து தேர்ந்தெடுப்பது. அதற்கு குறைந்தபட்சம் ஆறுமாதகாலம். (இதற்கான கூட்டம் இயக்கம் முடிவு செய்யும்போதெல்லாம் பிரிதிநிதி வாரியாகவும், மொத்த உறுப்பினர்கள் முன்றுமாத அடிப்படையிலும் வகுத்துக்கொள்வது நல்லது)

கதைத்தேர்வு முடிந்த ஆறு மாதத்திற்குள் ஒரு நேர்த்தியான தமிழ்சினிமாவை எடுக்கத்தொடங்குவது. எல்லாக் கணக்கு வழக்குகளையும் பிரிதிநிதிகள் முன்னிலையில் மூன்றுமாதத்திற்கு ஒருமுறை ஆய்வுசெய்துகொள்வதும், எக்காரணத்தைக்கொண்டும் முதலீடு செய்த உறுப்பினர்களின் பணம் குளைந்துபோகாமல் எடுக்கப்படும் படத்தின் ரூபத்தில் இருக்கச்செய்வதும் இயக்கத்தின் தலையாயக் கடமை.

படம் முடிந்து விநியோகம் முடிந்து ஒரு வேளை பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வியாபார ரீதியில் லாபம் கிடைக்குமானால் மொத்த உறுப்பினர்களைக்கூட்டி சமபங்குடன் பகிர்தல்வேண்டும். அதன் வெற்றி மொத்த உறுப்பினர்களையும் சார்ந்தது. ஒருவேளை நஷ்டம் எற்பட்டாலும் மொத்த உறுப்பினர்கள் கூடுகை அவசியம் மிச்சம் இருப்பதை வைத்து மீண்டும் படம் எடுக்க மீண்டும் முயற்சி செய்தல் குறித்து ஆலோசித்தல் நல்லது.

உறுப்பினர்களாக சேருகிறவர்களுக்கு முக்கியமான நோக்கம் தமிழில் நேர்த்தியான படம் எடுப்பதில் பங்குவகிக்கிறோம் என்ற பிரதான மனநிலைவேண்டும். லாபம் கிடைத்தால் சமபங்கு. லாபம் கிடைத்துவிட்டது என்று அதை வைத்து பெரிய பட்ஜெட் படம் என்று போகக்கூடாது. அந்த இடத்தில் கிடைத்ததை உறுப்பினர்களுக்கு பகிர்தல் முதல் கடமை. நஷ்டம் வந்தாலும் ஒட்டுமொத்த ஆலோசனையின்பேரில் மீண்டும் முயற்சி என்ற கொள்கையில் அனைவருக்கும் விருப்பம் இருக்கவேண்டும்.

ஒருவேளை இயக்கத்தை முன் நின்று நடத்த பொறுப்பு ஏற்கும் நபர் அவர் மேலானவர் என்று தன்னை ஒருபோதும் கருதிக்கொள்ளக்கூடாது. அவரும் சாதாரண உறுப்பினர்தான். நம் ஒட்டுமொத்த விருப்பத்திற்காகக் கூடுதலாக பணிசெய்கிறார். அவ்வளவுதான். முக்கியமாக படத்திற்காக செலவு செய்யும் ஒவொரு பணமும் உறுப்பினர்களுடையது என்ற பொறுப்பு இருத்தல் வேண்டும்.

இந்த இயக்கத்தை யாராவது முன்னெடுக்க வரும் பட்சத்தில் எனது உறுப்பினருக்கான முதல் தொகையாக ரூபாய் 5000 கொடுக்க சம்மதிக்கிறேன். அடுத்த 5000 த்திற்கானத் தொகையை இயக்கம் தந்துள்ள காலக்டுவுக்குள் கொடுப்பேன். ஆனால் இந்த இயக்கத்தின் திட்டப்படி தமிழில் நேர்த்தியான சினிமா எடுப்பதே தலையாயப்பணி, ஒரேப்பணியாக இருத்தல் வேண்டும். இதை விடுத்து வேறு காரியத்தில் பணத்தை விரயம் செய்தால் சட்டத்தின் உதவியை நாடுவேன்.

நான் எனது எந்த பதிவையும் பகிர சொல்வதேயில்லை. ஆனால் இதை பகிர்ந்து அநேக இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டுகிறேன்.

தமிழகத்தின் எந்த ஒரு மூலையிலும் ஒரு நேர்மையான, பகட்டில்லாத, எடுத்துக்கொண்ட பணியில் உண்மையாக இருக்கும் நபர்களிடம் சேர்ந்தால் தமிழ்சினிமாவில் ஒரு புதியமரபு உதிக்க வாய்ப்பு ஏற்படும்.

நண்பர்களே இப்பதிவை ஷேர் செய்து உதவுங்கள்.

டேனியல்

Wednesday, May 28, 2014

நம்பிக்கையின்மை வளருகிறது

ஏறக்குறைய ஐந்தாண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். சென்னையில் மிக நீண்ட நாட்களாய் நல்ல சினிமாவிற்காக களப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பவர் என்று அறியப்பட்டவரிடம் எங்கள் ஊரில் ஒரு நிகழ்வு ஒழங்கு செய்யவேண்டும் என்றபோது, முதல்கட்டமாக இவ்வளவு பணம் ஆகும் என்றார். எனக்கு என்னடா இது கலியாண மண்டப முதாலாளிபோல் தொகை நிர்ணயிக்கிறார் என்று இருந்தது.  மீண்டும் இரண்டு ஆண்டுக்கழித்து அவரின் சிறப்பு பயிற்சித் திட்டம் வெளியிட்டு இருந்ததைப் பார்த்து  என்னை நானே ‘உனக்கு எந்த மனிதர்களிடமும் பேசவும் தெரியவில்லை, பழகவும் தெரியவில்லை. என்று நொந்துக்கொண்டு, அவரை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

அய்யா, தங்களுடையத் திட்டத்தைக்கண்டேன். கலையின் மீதுள்ள ஆர்வத்தின் மீது தாங்கள் தொடர்ந்து இதுபோன்று திட்டங்கள் செயல்படுத்துகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்வு கொண்டேன். அதனால், தங்கள் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளப் பிரியப்படுகிறேன். தங்களின் அனுமதி கிடைக்குமா?‘ என்றபோது ‘மிக்கநல்லது தம்பி உங்கள் போன்ற இளைஞர்களின் ஆர்வத்தால் தான் தமிழ் சினிமாவின் கலை நயத்தை உலகுக்கு வெளிப்படுத்த முடியும். அநேகமாக சீட் முடிந்துவிட்டது. இருந்தாலும் நீங்கள் மிகத் தொலைவில் இருந்து ஆர்முடன் கேட்பதால் தங்களையும் இணைத்துக்கொள்கிறேன். நான்கு நாள் பயிற்சி தம்பி, சில சலுகைகளை நாங்கள் ஏற்பாடு செய்வோம். சிலதை நீங்களாக செய்துக்கொள்ள தயாராக இருக்கவேண்டும் (குறிப்பாக நாங்கள் லெமன், புளிசாதம் தருவோம். அது உங்களுக்க உகந்ததாக இல்லை என்றால் பிரியாணி நீங்கள் வெளியில் சென்று சாப்பிடலாம் அது உங்கள் செலவு.) கட்டணத்தொகை ரூ.  20000/. ஆகும். எடுத்துவந்து விடுங்கள் ஒண்ணும் பிரச்சனையில்லை. உங்கள் ஆர்வம் வெற்றிகரமாக நிறைவேரும்.‘ என்றார்

நான் இவ்ளோ பணமா? என்று யோசித்துக்கொண்டே  ஏதாவது குறைப்பு செய்ய வாய்ப்பிருந்தால்... என்று இழுத்து. எனக்கு கற்றுக்கொள்வதில் ஆர்வம் என்றேன். 

அவர் ‘நான் சொல்லுவது மிகக்குறைந்த கட்டணம்‘. என்றார்.
கலை பரந்தது, அதை முன்னெடுப்பவர்களுக்கும் இருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. என்பதை உணர்ந்தேன்.

அதே காலகட்டத்தில் கலை சினிமாவிற்கான முன்னெடுப்புகளை சில இளைஞர்கள் செய்தார்கள். அதில் உண்மையில் கலைசினிமாவின் பாடுபொருள் இருந்தது. பணத்துக்கான குறிக்கோள் இல்லை என தெளிவானபோது தொடர்ந்து என்னை இணைத்துக்கொண்டேன். காலம் கடக்கக் கடக்க ஆரம்ப கட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்  பாடுபொருளில் இருந்து மாறவேயில்லை. அது  ஒருதலையான பாடுபொருள் என்று தெளியவைத்தபிறகும் திரும்பத்திரும்ப அதையேப் பாடுகிறார்கள். 

கடந்த காலத்தில் பெரும் மாற்றத்திற்கான அடித்தளத்தை எப்படி முன்னெடுத்தார்கள். அவர்களின் போக்குகள் எப்படியிருந்தது என்று ஆராய்ந்து அதைகணக்கில் எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். 

குறிப்பாக காந்தியும், அம்பேத்கரும், பெரியாரும் முன்னெடுத்த களங்களின் பாணியை இந்த இளைஞர்கள் யோசிக்கவேயில்லை. இத்தலைவர்கள் முன்னெடுத்த போராட்ட வழிமுறைகள் எந்தக்கால நவீன நூற்றாண்டுக்கும் பொருந்தும் என்பதை விளங்கிக்கொள்ளவும் இல்லை. அதற்கு, அவர்கள் கொண்டிருந்த அடிப்படையான குணங்கள் மட்டும் இருந்தால் போதும்.  ஒட்டு மொத்த சமூகத்தின் மக்களை சுதந்தரத்திற்காக மட்டுமல்ல, சாதியத்திற்காக மட்டுமல்ல, ஒடுக்குமுறைக்காக மட்டுமல்ல. மக்களிடம் கலை சினிமாவின் ரசனையையும்  உயர்த்த முடியும்.  அதற்கான சாத்தியக்கூறுகள் அவர்களின் முன்னெடுப்புகளில் கொட்டிக்கிறக்கிறது.  அதை தற்கால எவ்வகை சமூக விழிப்புணர்வுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். 

ஒருதலையாக எதை, எவ்வளவு காலம் செய்துகொண்டிருந்தாலும் மக்களிடம் முன்னேற்றத்தை ஏற்படுத்தமுடியாது என்பதை என்னால் பல உதாரணங்களைக்கொண்டு சொல்லமுடியும். இத்தன்மை போராட்டங்கள் நீண்ட நெடிய காலம் கிணற்றுத்தவலைபோல் பயனற்று இருப்பதை ஆய்வு செய்து அறிகின்றேன். 

முன்னோர்கள் வெறுமனே கூட்டம்போட்டு பேசிவிட்டு போய்விடவில்லை.  தன்முனைப்பாக இறங்கி செய்தார்கள். காந்தி கூட்டத்திலும் பேசுகிறார். மக்களைத்திரட்டிக்கொண்டு முதல் ஆளாக ஓடுகின்றார். வெறுமன வெள்ளையனை குறைசொல்லிக் கொண்டிருப்பது மட்டும் செய்யவில்லை. அம்பேத்தர் பேசுகின்றார் இரவு பகலாக அதற்கான திட்டங்களை வகுக்கின்றார். வெறுமனே இந்திய சாதி வருணாசிரமங்களை குறைசொல்லிக்கொண்டிருப்பதை மட்டும் செய்யவில்லை. பெரியார் பேசுகிறார் சாதியத்தின் மேடு பள்ளம், பிராமணியத்தின் ஓட்டைகள் எங்கங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார். வெறமனே குறைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால் இத்தலைவர்களை மக்களே நிராகரித்துவிட்டிருப்பார்கள்.  இதுதான் இத்தலைவர்கள் சமூக மாற்றத்திற்காக எடுத்துக்கொண்ட அடிப்படை  முன்னெடுப்பு.

இவ்வழிவகையை கலைசினிமா பற்றி பேசும் எந்த இளைஞர்களும் கண்டுபிடிக்கவில்லை. இவர்கள் தமிழ் சினிமாவை ஒரு சில  இயக்குநர்கள் கலைநேர்த்தியாக செய்திருக்கிறார்கள் அவர்களால்தான் கொஞ்சமேனும் தமிழ் சினிமாவின் நற்பெயர் நிலைநிற்கிறது என்று பேசுகிறார்கள்.  ஆனால், அதே இயக்குநர்கள். நேர்காணலில் நான் சினிமாவை நேசிக்கிறேன். என் இயல்புக்கு வரவேண்டும் என்ற சிறத்தை செய்கிறேன். அப்படிச்செய்வது மட்டுமே எனக்குத் தெரிந்திருக்கிறது. மற்றபடி பெரிய தரிசனங்களை, கட்டமைப்புகளை எல்லாம் புகுத்தவேண்டும் என்று மெனக்கெடவில்லை என்று மிகச் சுலபமாக சொல்லியிருக்கிறார்கள்.

இவைகளை எல்லாம் தற்போதைய இளைஞர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் நல்ல சினிமாவின் ரசனையை வளர்க்க மக்கள் முன் நிற்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான்.  

என்னால் உலக சினிமாவின் மேதைகளாக போற்றப்படும் பல இயக்குநர்களின் படங்களில் இருந்தும்கூட எதார்த்தம் இல்லாதக்காட்சிகள் என்பதை சுட்டமுடியும்.  சமீபத்தில் உலகத்தின் சிறந்த இயக்குநர்களின் படங்களை தொடர்ந்து பார்க்கும்போது அதைக்கண்டுபிடித்தேன். குறிப்பாக சார்ளி சாப்ளின், மற்றும கிம் கி டக் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கும்போது எதார்த்தமற்ற தலா ஒவ்வொருக்காட்சியைக் கண்டேன். இப்படி அந்த மேதைகளிடமே சிலநேரம் தவறும்போது. நம் தமிழ் சினிமாவின் சூழ்நிலையை யோசிக்கவேண்டும்.

இவைகளை சற்றும் யோசிக்காமல், பேசியதையேத் திரும்பத்திரும்ப பேசிக்கொண்டே இருப்பதால் மட்டுமே  தமிழக சினிமா உலகம் உலகத்தரமான சினிமாவிற்கு நகர்ந்துவிடும் என்பதில் நம்பிக்கையின்மை கூடிக்கொண்டே இருக்கிறது.

நாம் எந்த செயலுக்காக மக்கள் முன் பேசுகிறோமோ  அது இப்படி இருக்கவேண்டும் என்று குறைந்த பட்சம்  செயல்வடிவத்தில் காட்டவேண்டும். அப்போதுதான் மக்கள் தாங்கள் சொல்லும் மாற்றங்களை யோசிப்பார்கள். அது இல்லாமல் ஒருதலையாக பேசிக்கொண்டே இருப்பதால், கலைக்காகப்பேசும் இளைஞர்களின் மீது கருத்து முரண் உருவாகிறது. உண்மையாகவே வேறு முன்மொழிவுகளை எதிர்பாத்து மனம் காத்திருக்கிறது.

டேனியல்


Wednesday, May 21, 2014

கட்டுரை,

                          ‘வேற்றுமைக்குள் ஒற்றுமை‘


டும்...டும்...டும்...டும்... டும். இதனால் காஞ்சியின் சகல இலக்கிய அமைப்பாளர்கள் நண்பர்களுக்கும், இலக்கியத்தில் தங்களையும் ஒரு குச்சியாக இணைத்துக்கொண்டுள்ள தனி நபர்களுக்கும் காட்சித்திரையிடல் அமைப்புகளுக்கும் தெரிவிப்ப தென்னவென்றால் இக்கல்வியாண்டு முதல் (கல்வி ஆண்டுனாதான் ஒரு பயம் வரும்) சம சஞ்சாரத்தின்கதவு திறக்கப்பட தங்களால் ஆன ஈடுபாட்டை நாடி நிற்கிறது காலம். டும்...டும்...டும்...டும்... டும்.

நாம் அரசியல் கட்சி  நடத்தவில்லை. நாம் அக்கட்சியின் தலைவர்களென்றும் சொல்லிக்கொள்வதில்லை. அப்படி இருந்தால் ஒரு கட்சி நிர்வாகத்தில்  இன்னொரு கட்சி நுழையக்கூடாது என்று கருதிக்கொண்டிருக்கலாம்.   நாம் நடத்துவது,  பெருவாரியான மக்களுக்கு சூன்யமாய்தெரிகின்ற, நடத்துனருக்கு நஷ்டத்துடன் மனக்கஷ்டத்தையும் தருகின்ற கூட்டங்களாகும். தமக்குத் தெரிந்தே சூன்யம் வைத்துக்கொள்ளும் தொழில் இலக்கியம், உலகத்தரத்தில் கலை நேர்த்தியான சினிமாவைப்பற்றி பேசுவதும்தான் என்று நினைக்கின்றேன்.

நமக்குள் பல விதங்களில் கலைசார்ந்து புரிந்துகொள்வதில் வேறுபாடுகள் இருக்கலாம். இந்த வகையில் அர்த்தங்கொண்ட வகைமைகளில் நடக்கும் கூட்டம், மற்றும் திரையிடல்களில்தான் என்னால் கலந்துகொள்ளமுடியும் என்ற முதிற்சி இருக்கலாம். அப்படி எண்ணிக்கொள்வது அவரவரின் தனியுரிமை. ஆனால், இலக்கியம், நல்ல சினிமா சார்ந்து அமைப்புகள் நடத்தும் கூட்டங்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிடுவது அறம் அன்று. வியப்பு என்னவென்றால் இரு சாராருக்கும் ஒன்றுக்கொன்றில் மிகுந்த ஈடுபாடு இருக்கிறது. ஆனால், அவர்கள் நடத்துவதில் நான் கலந்துகொள்ளமாட்டேன். இவர்கள் நடத்துவதில் அவர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்றப் போக்கு ஓங்கி நிற்கிறது. இதை வெளியில் இருந்து பார்க்கிற சாமான்யன் நம்மை கேலிக்கூத்தாகப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.  இரு நபர்கள் நேருக்கு நேர் வாதிடலில் ஒருவருக்கு தன்மானக்குறைவு ஏற்பட்டுவிட்டால் ஒருவேளை அமைப்புகளுக்கு வருவதற்கு சற்று சங்கடம் ஏற்படலாம். அதைக்கூட நிவர்த்திசெய்துக்கொள்ள சாத்தியம் இருக்கிறது. அதற்கே இருக்கும்போது வெறுமனே மன உறுதியை நம்பி வேண்டுமென்றே போகக்கூடாது என்ற முடிவை தள்ளுபடி செய்ய வேண்டி முன்மொழிவுகள் வைக்கப்படுகிறது. 

ஒரு சிறப்பானக்கூட்டம், அல்லது திரையிடல் நடக்கிறபோது அதன் நுட்பம் தெரிந்தவர்கள் இல்லாமல்போய் வெறுமனே பொழுதைக் கழிக்கவரும் நபர்களால் மேலோட்டமான (மட்டமான) கேள்விகளை எழுப்பி நிகழ்வை உப்பு சப்பு இல்லாமல் ஆக்கிவிடுகிறார்கள். இந்த நிலமை நம் இருப்பிடத்தில் தொடர்ந்து இருந்தால், எதிர்காலத்தில் தான்தோன்றியாய்த் தோன்றிய ஏதோ ஒரு இளைஞன் குறிப்பிட்ட காலத்தில் இலக்கியத்தில் சூன்யம்தான் இருந்த்து என்று சாருநிவேதிதாவின் வார்தைகளால் திட்டித் திட்டி சபிப்பதைத்தான் செய்வான். ஆகவே ஒவ்வொருவரும் இதில் தயைகூர்ந்து தாராளமயத்தை கடைபிடிக்க கோரப்படுகிறார்கள்.

ஒரு வேளை  இலக்கியம் என்ற பெயரில்  பெரு லாபம் காணுமளவுக்கு பத்திரிக்கை, பதிப்பகம் என்று வளர்ந்துவிட்டால்கூட. அவரவர் வருவாயை தக்கவைத்துக்கொள்ள நாம் எப்போதும் எதிரி நாடகம் ஆடிக்கொண்டே இருக்கலாம்.  ஆனால், நாமோ வெறுமனே டீ, பிஸ்கட்கொடுத்து சாமானியனின் மூளையில் சமூக நலன் எனும் பித்துப் பிடிக்க மந்திரம் ஓதுகின்றோம்.  ஓதுவது, சில நேரங்களில் பிறருக்கானது என்றே எண்ணிக்கொள்கிறோம். அப்படியல்ல பல நேரங்களில் ஓதும் வார்த்தைகள் நமக்கே மறந்துபோகாதபடி நிதானித்துக்கொள்ள நமக்கும் பயன்படுகின்றது. ஆக, அது அவரவர் அமைப்பு என்று தெளிவாகிவிட்டபிறகு வேறுபாடுகளை மறந்து அமைப்பாளர்கள் ஒன்றில் ஒன்று ஒன்றிக்கொள்ளவேண்டும். அவர் முதலில் வரட்டும், இவர் வரட்டும் என்பதை பின்னுக்குத்தள்ளிவிட்டு. எது முதலில் வருகிறதோ அதில் கலந்துகொள்ள முயலவேண்டும்.

ஒரு வேளை முதலில் வருவது தமக்கு ஏற்புடையக் கூட்டமாய்  இல்லாமல் இருந்தால், கட்டாயமில்லை. நமக்கு ஏற்புடையக்கூட்டமாக இருந்தால் மதிக்கவேண்டும். மதித்தல் என்பது, பங்குகொள்ளுதலின் பொருளாகும்.  இலக்கியக்கூட்டத்திற்கு ஒரு சாரார் தானாக மனமுவந்து  கலந்துகொண்டால், அடுத்து நல்ல சினிமா திரையிடலுக்கு அடுத்த அமைப்பாளர்கள் பங்குகொள்ள முயற்சிக்கவேண்டும். படைப்பைப் முன்கூட்டியேத் அறிந்திருந்தால் கலந்துகொள்பவரின் விருப்பு கருத்தில் கொள்ளலாம். அதற்காக சாக்குப்போக்குகளை தவிர்ப்பது நல்லது.

ஒருவர் கூட்டத்தில், இன்னொருவரின் கூட்டத்திற்கான அழைப்பிதழை பார்வையாளர்களுக்கு எந்த சங்கடம் இல்லாமலும் அளித்துக்கொள்ளலாம். அதற்காக பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கும், நெடுக்குமாக  நடமாடி அழைப்பிதழ் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.

காஞ்சியில் இலக்கியம், மற்றும் நல்ல சினிமா ஆர்வலர்கள் படைப்பாளர்கள் ‘வேற்றுமைக்குள் ஒற்றுமை‘ என்ற பண்பை கடைபிடிக்கவேண்டும் என்பதில் தாராள மனமுள்ளவர்கள் கடந்த காலத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. கூட்டங்களில் கலந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். ஒருவேளை ஒரு சாரார் கலந்துகொண்டு இன்னொரு சாரார் கலந்துகொள்ள மழுப்புச் செயல் செய்தால், அதன் நியாயமற்ற வாதங்களை பொதுவெளியில் வைக்கப்படும். அவரவர்கள் நடந்துகொண்டதில் எப்பக்கம் உதாசினங்கள் நடந்துள்ளது என்பதை பார்வையாளர்கள் தீர்மாணித்துக்கொள்வார்கள். தீர்மாணிப்பதின் பொருள் அவர்கள் இயல்பை தீர்மாணிக்கிறார்கள் என்பதை உதாசினப்படுத்தியோர் புரிந்துகொள்ளவேண்டும். ஒருவரின் இயல்பை தீர்மாணித்தல் என்பது எதிர்காலத்திற்கு வழிகாட்டியான விஷயமல்ல. அதற்கு பின் விளைவுகள் இல்லை என்று சொல்லிவிடமுடியாது. ஆளை காலி செய்கிற அளவுக்கு யோசிக்கவேண்டாம். ஒரு வகையில் தங்களுக்கு விருப்பமான இலக்கிய வகைமைகளில் இருந்து பார்வையாளர்களே, அவர்களைத் தள்ளிவிடுகிற வாய்ப்பிருக்கிறது. இது, ஆள் காலியாவதை விடக் கொடுமையானது என்பது அதை நேசிப்பவர்கள் உணருவார்கள்தானே.

விரும்புகிறவர்கள் ஒன்றில் ஒன்று கலக்கும்போது  மனப்புழுக்கம் உடைகிறது. சம்பந்தப்பட்ட வகைமையில் இயல்புநிலைத் திரும்புகிறது. ஆலோசனைகள் பெருகுகிறது. ஆர்வம் தழைக்கிறது. அரங்கேற்றம் தொடங்குகிறது. இவ்வளவும் இயல்பாய் நடக்க வழியிருக்கிறபோது. நாம் ஒருவரின் ஒருவர் முகம் பார்க்காதபடி ஒளிந்துபோய்க்கொண்டிருப்பது நல்ல நடைமுறைக்கான செயல்களா யோசிக்கவேண்டும். எந்த நபரும் எல்லா நிகழ்வுக்கும் தவறாது வரவேண்டும் என்பது முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது. ஆனால் முடிந்தளவு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இயல்பாக நிகழ்வுகளில் கலந்துகொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வை ஏற்பாடுசெய்கிறவர்கள் தோய்வின்றி செய்கிறபோது பார்வையாளர்கள் அதைக் குறைவாக மதிப்பிடக்கூடாது.
முதலில் இணக்கமாவோர் சமாதானத்தூதுவர்கள் என்று அழைக்கப்படுவர். இது வெறுமனே புறா பறக்கவிடும் தண்டோரா இல்லை. திறமையானவர்கள் முக முகமாய் தரிசிக்காமல் போவதால் எந்தச் செயல்களிலும் முன்னேற்றம் அற்றேக்கிடக்கிறது.

யோசிங்க. வாங்க... வாங்க... வாங்க... ‘வேற்றுமைக்குள் ஒற்றுமை‘ காண.

டேனியல்


Tuesday, May 13, 2014

சிறுகதை,

                                                         வாழ்த்துக்கள் 

   
அன்பு மகளே! ஒரு விண்வெளிப்பயணத்தை விட ஆபத்தான சமூகவெளிப் பயணத்திற்கு உன்னை அனுப்பி வைப்பதில் மகிழ்வடைகின்றேன். சமூக வெளிப்பயணத்தை பதினெட்டாவது வயதில் மேற்கொள்வது அற்புதமானதுதான். நீ தலை வாரிக்கொள்ளத்தெரியாத நிலையில் ஈன்றவள், உன்னை என் பக்கத்தில் நிறுத்தி. ஆழ்ந்த வருத்தம் தோய்ந்தக் கண்களால் என்னையேப் பார்த்துக்கொண்டு தன் கடைசி மூச்சை விட்டதின் அந்தக் காட்சித்தான் தற்போது நீ சமூகவெளிக்குப் போகும்போதும் கண்ணில் நிழலாடுகிறது. 


சமூகத்தில் அநேக சமயங்களில், அநேக இடங்களில் நாம் வாழ்தற்கான இயல்பு முடிக்கப்பட்டுவிடுகின்ற அனுபவம் சாதாரணமாக நடந்தேறிவிடும். ‘அத்தனைக் கொடுமையானதா? இருக்காது. போகும் இடமெல்லாம் நடமாடும் மனித முகங்களில் அநேகமாக அன்பு படர்ந்திருப்பதையே என்னால் காணமுடிகிறது. நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பினால் அப்படிச் சொல்கிறீர்கள்‘. என்று உனக்கு கேள்வி எழலாம். முகங்களைப்பற்றி நீ சொல்வதை ஒரு வகையில் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் மற்றெல்லாவற்றையும் விட உன்னிடம் அன்பு சிறப்பானதாக இருக்கிறது. உனக்குள் இருப்பதுபோலவே பிறருக்குள்ளும் இருக்கும் என கணிக் கின்றதற்காய். சமூகத்தை வெள்ளந்தியாய் நம்பிவிட அத்தனை மென்மையானதும், ஆபத்து இல்லாதது என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால், சுயநலமற்ற உன்னத பண்பாளர்கள் இருக்கவும் செய்கிறார்கள்.


நான்கு ஆண்டுகளுக்கு முன் உன் சகோதரனை இப்பயணத்திற்கு முதலாவது அனுப்பியிருக்கிறேன். பயணத்தை முடித்து நல்லபடியாக வீடு திரும்பியிருக்கிறான். எனக்கு மட்டும் ஏனப்பா இந்த விஷேச ஆலோசனையை சொல்கிறீர்கள். நான் பெண்ணாய் இருப்பதால்தானே என்று இதை வாசிக்கும்போது உனக்குக் கேட்கத்தோன்றும். உண்மைதான் மகளே. நீ ஒன்றை யோசிக்கவேண்டும். பெண்கள் மீதானப் பார்வை, பெரிய அளவில் வக்கிரத்தோடு இருப்பது கூடிக்கொண்டேப்போகிறதே ஒழிய குறையவில்லை. அவ்வக்கிரத்தின் உச்சமாக தற்போது பல சந்தர்ப்பங்களில் ஆண்கள் கூட்டுசேர்ந்து விடுகிற நிகழ்வை அடிக்கடி ஊடகங்களில் பார்க்கமுடிகிறது. இதற்கு கல்லூரி மாணவர்களும் விதிவிலக்கல்ல. 


இந்த இடத்தில், உன்னை டுவீளரில் அழைத்துச் சென்றபோது, “ஏய். என்ன? ரோட்ல போற அந்த ஆண்டிய மொறச்சி பாக்கிறே.“ என்று விளையாட்டாக, நீ என்னைக் கேட்டதை நினைவு கூர்ந்துப்பார். அதற்கு பதிலாக அப்போது வெறுமனே சிரித்துக் கொண்டேனேத் தவிர வேறு ஒன்றையும் நான் சொல்லவில்லை. இப்போது பதில் சொல்ல வாய்த்ததிற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். ஆண், பெண்ணையோ. பெண், ஆணையோ பார்ப்பது தவறு ஒன்றும் கிடையாது. அதின் அர்த்தம், ஒருவர் ஐஸ்கிரிம் சாப்பிடுகிறபோது. உற்றுப்பார்க்கும் குழந்தையின் பார்வைக்கு ஒத்ததாக இருக்கிறது. அநேகமாக அந்தப்பார்வையில் எந்த அநீதியும் நடந்துவிடாது. சாப்பிடுகிறவர்களுக்கு சற்று சங்கடமாக இருக்கும். பார்க்கும் குழந்தையும், சாப்பிடும் நபரும் நாகரீகராய் இருந்தால். சாப்பிடும் நபரே ஒரு ஐஸ்கிரீமை வாங்கித்தருவார். இல்லை. சாப்பிடும் நபர் வாயை வேறுபக்கம் திரும்பிக்கொள்வார்.குழந்தையின் பார்வையும் வேறு பக்கம் திரும்பிவிடும் அவ்வளவுதான்.

உன்னை அனுப்பும்போது சற்று துக்கங்கொண்டாலுக்கான மனநிலை இருந்துகொண்டே இருக்கிறது. இதை அறிவுஜீவிகள் ஆண் தன்மையில் வெளிப்படும் தாழ்வு மனப்பான்மையின் வார்த்தைகள் என்று சொல்லலாம். அவைகள் வெளி இடங்களில் பயன்படுத்துவதற்காக வைத்திருக்கும் சாதாரண வார்த்தைகள். இப்படிச் சொல்கிறவர்கள் தினந்தோறும் தன் குடும்பப் பெண்களை உயர்தர பாதுகாப்பான வாகனங்களில் வழியனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒருபோதும் ஆட்டோக்காரனையோ மக்கள் ஓடியேறும் அரசுப்பேருந்துகளிலோ தனியாக அனுப்புவதில்லை. குடும்பத்தில் அன்பாய் நேசிக்கும் எந்தக்குழந்தையையும்  வெளியே அனுப்பும்போது பதட்டப்படாமல் இருக்கும் சூழல் நாட்டின் எந்த இடத்திலும் இருப்பதில்லை என்பது வாதிடுபவர்களுக்கும் தெரிந்ததுதான்.
மகளே வீட்டிலிருந்து புறப்படும் ஒவ்வொரு நாளும் உன் மனசாட்சியை நேர்மைபட வைத்துக்கொள்வதுதான் முதன்மையான செயல். இரண்டாவது சாந்த்தம். அது இயல்பாகவே உன் காலடிகளில் தவம்கிடக்கிறது என்பது தெரிந்ததுதான், இருந்தாலும் மேற்சொன்ன இரண்டையும் இழந்துவிடாமல் இருந்தால், மனசுக்கும் பழுதொன்றும் ஏற்படாமல் நீ வீட்டிலிருந்து சென்றதுபோலவே திரும்பவும் சாத்தியம் இருக்கிறது.

குறிப்பாக நீ பயணத்திற்காக பேருந்து நிறுத்தம், அருகில் நிற்க வேண்டியிருக்கும். தினந்தோறும் பேருந்து நெரிசலைச் சந்திக்க வேண்டியிருக்கும். சில நாள் சில்லரை இல்லாததற்கு நடத்துனரிடம் வசைச்சொல் வாங்கவேண்டியிருக்கும். இங்கு வந்து ஆங்கிலத்தை கற்கிறார்கள் கழுதைகள் என்று உன் சக தோழிகளின், தோழர்களின் முன் உன் கல்வியாளரின் பேச்சை கேட்கவேண்டியிருக்கலாம். தினந்தோறும் வெறுமனே நீ போகும் திசைகள் எல்லாம் வாலிபர்கள் கண்களில் படுவார்கள். உலகத்தில் இந்தமாதிரி நற்பண்புகள் உடைய இருபத்தி ஐந்து வயதுடைய மனிதன் இருக்கமுடியுமா? என்கிற முடிவுக்கு வரும்படி மாதத்தின் முதல் ஐந்து தேதிக்குள் தவறாமல் ஒருவன் தனித்துவமாக உன் பார்வைக்குத்  தென்படக்கூடும். இந்தமாதிரி காட்டு மிராண்டிகளால்தான் தனிமனித சுதந்திரம்  கெட்டுவிடுகிறது என வேறு ஒருவனை நீ ஊகிக்கலாம். உன் கண்முன் உன்ளவு சரீரம் வாய்க்காத அல்லது உனக்கு ஈடான சரீரம் உடையவர்கள், ஒரே வகை ஈர்ப்பினால் சில நேரம் பிரிதற்காகக்கூட துக்கிக்கலாம். வயது முதிர்ந்தவன் சாலையைக் கடக்க உதவும்படி உன் கைகளை இறுக்கமாக பிடிக்க நேரலாம். சாலை ஓரங்களின் ஒதுக்குப்புறமாக அபயக்குரல் கொடுக்கும் ஏழைகள் உன் வருகையின்போது கை நீட்டலாம். வெறுமையாய் இருக்கும் உன் கறுங்கூந்தலைப் பார்த்து குடையின் கீழ் இருக்கும் பூக்காறர் அழைக்க நேரலாம். எந்தக்குரலையும் நீ அலட்சியமாக எண்ணிவிடக்கூடாது. அவைகளில் எந்தளவு நேர்மை இருக்கிறது என்பதை, நீ தினந்தோறும் கடைபிடிக்கும் நேர்மையோடு சமனாக்கி தர்க்கம் செய்துப்பார்ப்பதை மறந்துவிடாதே.

எனக்கு இருக்கும் ஒரேக் கவலை. என்னை விட ஒருப் படி மேலேச்சென்று பொன்னில் நம்பிக்கையற்று இருப்பதும், சிறு பூச்சியின் சுதந்தர வாழ்விற்கு பங்கம் ஏற்படுத்தக்கூடாது என்று பதருகிற உன் இயல்பைக் குறித்தும்தான். மகளே இப்படி இருப்பதால் தமக்கு நேரும் இழப்பு என்பதை கணக்குப்படுத்த முடியாதம்மா. என் நாற்பத்தி இரண்டு ஆண்டுகால வாழ்வில், குழந்தைப்பருவத்தின் பனிரெண்டைக் கழித்துவிட்டால் எறைக்குறைய முப்பது ஆண்டுகாலம் இழந்துவிட்டவை அநேகம் மகளே. இருந்தாலும் முற்றாக நான் அழிந்துவிடவில்லை என்பது உண்மைதான். ஆனால், இக்குணத்தை பிரித்தியேகமாக வைத்துக்கொண்டு ஒரு பெண்ணாக இச்சமூகத்தில் இயல்பாக பயணிப்பது அவ்வளவு சுலபமானது அல்ல.


மணலில் ஊறும் நீர்போல உன் காலடிகளைச் சுற்றி மிகக் குளிற்சியான தோற்றம் தரித்துக்கொண்டு நட்புகள் வருவதற்கு அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது. எது போலி, எது உண்மை என்பதை அறிந்துகொள்ள உன்னிடம் ஒரு ஆயுதமும் இல்லவேயில்லை. ஒருவேளை அறிவின் யோசனைகள் சிலநேரம் உதவலாம். ஆனாலும், அது முழுமையாகப் பாதுகாக்கும் கரமல்ல. இரண்டுக்குமான போக்குக் காட்டலை தரிசிக்க, நீ சோம்பல் படாமல் இலக்கியத்தரமான புத்தகங்களைப் படிக்க வேண்டும் அப்போது நிச்சயம் போலியை, நிஜத்தை சரியாக கணிக்க உதவும். மாதத்தில் ரத்தப்போக்கை எதிர்கொள்ள ஆய்த்தமாகும் அளவுக்கு வாசிப்பு இருந்தால்கூட போதுமானதுதான். அதற்குள்ளாகவே மனிதனிடம் நடமாடும் நாடகங்கள் உனக்கு பிடிபட்டுவிடும்.  ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. இலக்கியப் புத்தகங்கள் எல்லாம் மிக உயர்ந்த நோக்கம் கொண்டது என்று நம்பி எந்நேரமும் அதில் முழ்கிவிடாதே. அது மிக ஆபத்தமானது. கைவிடமுடியாத பழக்கமாக அரங்கேறிவிட்டால். நம்மைச்சுற்றி இருக்கும் எந்த நபரிடமும் இயல்பாக பழக அனுமதிக்காது.


நீ ஒருபோதும், உனக்கு இயல்பாகத்தோன்றும் ஆர்வங்களை மறைத்துக்கொண்டு நடமாட இடங்கொடுத்துவிடாதே. அதேசமயம் எல்லாவித ஆர்வங்களையும் வெளிப்படையாக விவாதிப்பதையும் தவிர்க்கவேண்டும். இல்லை என்றால் பயித்தியக்காரி, பீத்தல்காரி என்கிற பெயர் வந்துசேரக்கூடும். உன் ஆர்வங்கள் செயல்வடிவமாக மாறும்போது முடிந்தளவு நேர்மையை மனதில் நிறுத்திக்கொள். அது எந்தச் சூழ்நிலையானாலும் சரி. பலநேரம் சிலருக்கு நீ நம்பும்படியானவள் இல்லை என உதாசினப்படுத்தி கடந்துவிடலாம். அதற்காகச் சற்றும் வருத்தம் அடையாதே. காலம் கடந்தாலும் என்றாவது ஒருநாள் உதாசினப்படுத்தியவர்கள் உன்னைக்காண நேரலாம். அப்போது உன் எண்ணம் மேன்மையானது என்று அவேர்களே உறுதியளிக்கும் சூழல் வாய்க்கும். 


ஆர்வங்களில் முதன்மையான இடத்தில் இருப்பது காதல், அதன் தன்மை உனக்கும்கூட தெரியும் என்றளவிற்கு பருவம் அடைந்து விட்டதால். இதைத் தெளிவிக்கவேண்டியது என் கடமையும்கூட. நிறப்பாத இடங்களே இல்லாத காற்றின் தன்மை போன்றது காதல். பார்வைக்கேத் தெரியாமல், அனுமதியும் கோராமல் நமக்குள்ளே விழுது பரப்பும் சக்தி, காதலுக்கு மட்டுந்தான் வாய்த்திருக்கிறது. இதுத் தேவையில்லை என்பதை நான் தன்னிச்சையாகக் கூறும் அளவிற்கு அதன் தன்மையை அறியாதவன் இல்லை. நீ பருவத்தின் தகுதி உடையவள் என்பதால் உன்னையே யோசிக்கச் சொல்கிறேன். காதல் ஆண், பெண் விருப்பத்தை மட்டுமே சார்ந்து தொடங்குகிறது. அவர்களோடு இருக்கும்வரை அதிகமாக பிரச்சனை ஒன்றும் நிகழ வாய்ப்பில்லை. குடும்பம் ஆள்கிறவர்களோடு இணைய முயற்சிக்கும் போதுதான் பிரச்சனைத் தொடங்குகிறது. ஆக பிரச்சனை எங்கேத் தொடங்குகிறது என்பதை முதலாவது நீ ஊகிக்கவேண்டும். உன் அண்ணன் இந்தப் பிரச்னையோடு நம் வீட்டுக்கு வரநேர்ந்தால், நாம் பேசும் அதே வார்த்தைகள். எதிராளிக்கும் பொருந்தும் அல்லவா?.


ஒருவேளை இந்தச் சந்தர்ப்பம் ஒரு ஆணின் மூலமாக உனக்கு வாய்க்க நேர்ந்தால். ஒரு இமாலயக் கனவு நிறைவேறி விட்டதாக திருப்தி கொள்ளாதே. அப்படியானக் கனவு மிக அபத்தமானது. மெய்மறந்து நீங்கள் இருவர் மட்டுந்தான் சாலையில் நடமாடுகிறீர்கள் என்ற மாயையை ஏற்படுத்திவிடும். வெளியிடங்களில் டூவீலர் பயணம் வாய்க்கும்போது அக்கம், பக்கத்தில் உள்ள மனிதர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாது. 


மகளே அந்த நட்பு என்பது, நீண்டநாள் உயிராகவே உடன் கடந்துவந்து, மிக அற்பமான விஷயத்திற்காக நொடிப்போழுதில் வண்ணக்கலரில் மின்னும் சோப்பின் முட்டையாக வெடிக்கவும் நேரும்.  அப்போது நீ அற்பமாய் எண்ணிய சுற்றத்தார், உன்னை அற்பமாய் எண்ணுகிற சூழல் எழும். ஆக தற்செயலாகக் கிடைத்த ஆண் நட்பில் பெரிய விஷேசம் இருப்பதாக ஒரு கணமும் பெருமை கொள்ளாதே. இடைசெறுகளாக இங்கே இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். பிறருக்கு அளித்து, செய்து மகிழ்வது இடையில் என்னிடம் வந்தப்  பழக்கம் அல்ல. அது நம் குடும்ப பாரம்பரியமாக உன் தாத்தாவின் தாத்தாவிடம் இருந்து கடந்து வருகிறது. அந்தக் குணம் உன் அண்ணன் தம்பிகளுக்கு குறைவாகவும், பெண்பிள்ளையான உன்னிடத்தில் அதிகமாகவும் இருப்பது சற்று பயமாகவும் இருக்கிறது. சமயத்தில் நான் கல்வி கட்டணத்திற்காக கொடுக்கும் பணம், உன் காலில் கிடக்கும் மெல்லிய வெள்ளி கொளுசைக்கூட சுலபமாய் கழட்டி உதவி என்ற பெயரில் கொடுத்து விடுவாயோ என்ற பயம்தான். உன் தோழிக்கோ, முடியாபட்சத்தில் அதைச் செய்தால் நானும் வரவேற்பேன். மாறாக ஆண் நட்பையோ, தோழி நட்பையோ தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு சிறு பொருளையும் பயன்படுத்தாதே. அப்படி லஞ்சம் கொடுத்து எந்த உறவையும் தக்கவைத்துக்கொள்ள முடியாதம்மா.


நீண்ட ஆய்வுக்குப்பிறகு உன் சம்மதத்தின்பால் வயப்பட்டவன் அவ்வளவு சீக்கிரம் உன்னைவிட்டு கிளம்பிவிட மாட்டான். அதனால், முதலில் அவன் குடும்பத்து நபர்களை விசாரித்து அவர்களின் இயல்பு நடை யுடை பாவணைகளை முற்றாக அறிந்துகொள்ள முயற்சிக்க யோசனை செய். இரண்டாவது நம் குடும்பத்திற்கும் அந்த நட்பாளரை ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்திவிடுவது நலமானதாக இருக்கும் ஒன்றை மட்டும் தெளிவாக நீ புரிந்துகொள்ளவேண்டும். நட்பு என்பது உன் பாடப்புத்தகத்தோடு சேர்ந்த இன்னொரு பாடப்புத்தகம். பாடப்புத்தகம் எப்படி ஓரளவுக்கு சமூக ஒழுங்கைக் கணக்கில் கொண்டு வடிவமைக் கப்பட்டதோ, அதைப்போல உன் நட்பைக்  கடைபிடிப்பது நல்லது. ‘சமூகப்போராளிகள் இதை பழமை வாதத்தின் எச்சம். ஆண், பெண் தனிமனித சுதந்தரத்தை குளைக்கிற செயல். சந்தேகிப்பதை நாசூக்காக ஒழுங்கின் கட்டமைப்புக்குள் கொண்டுவருகிறார்‘ என்பார்கள். ஒருவேளை அவைகளில் உண்மையும் இருக்கலாம். அதைவிட நீ எடுத்துக்கொண்டக் கல்வியில் ஜெயிக்கவேண்டும் என்பதும் முக்கியமல்லவா? கல்விக்காக அறிதாகக் கிடைத்த நட்பை உதாசினப்படுத்த சொல்லவில்லை. நட்பால் கல்வியை இழந்துவிட்டால், இழந்த கல்வியின்பால் கிடைத்த நட்பையும் முற்றாக இழக்கும் சூழல் வரலாம். கூடுதலானத் தகவல் இதில் தனிக் கவனம்வேண்டும். ஒரே கல்லூரி. ஒரே வகுப்பறை. இருவருக்குமே ஒரே ஆசிரியர்தான். எதிலும் பேதமே இல்லை என ஆண் நட்பை  ஒப்பிட்டு நம்பிவிடாதே. நீயும், நட்பாளரும் இடைவெளி விட்டு நாகரீகமாய் நடந்தாலும்.  சாதி எனும் பிரிவினைப் பைத்தியம், அல்லது சைக்கோ இரக்கமற்று சாலை ஓரங்களிலும், கொள்ளைப் புறங்களிலும் உறங்கும் வேடம் தரித்து படுத்திருக்கும் மறந்துவிடாதே. இவைகள் ஒருபுறம் இருந்தாலும் பதினெட்டு வயதுவரை ஒரு கணமும் தரிசித்திராத அற்புதங்கள் தானாக வாய்ப்பது சாதாரண விஷயமல்ல.


எனக்கு சில அனுபவங்கள் நேர்ந்திருக்கிறது. இந்நேரம் அதைப் பகிர்ந்துகொள்வது அநாகரிகமானது என்று நான் கருதவில்லை. சில நேரம், பல இடங்களில் நான் பார்க்கும் அழகியப் பெண்களில் பலர் இன்னும் காதல் என்ற அற்புத அனுபவத்தைப் பெறாதவர்களாய் இருப்பார்கள் என்று நினைப்பதுண்டு. அந்த எண்ணம் வெகு சீக்கிரத்தில் என் ஊகத்தின் சுவடு மறைகிறதற்கு முன்னே தவறு என்று நிரூபணம் ஆகும். இது ஆண் சிந்தனையில் மட்டும் இப்படி உதிக்கிறதா? என்பது தெரியவில்லை. அநேகமாக பெண்களும் பல வாலிபர்களை இத்தன்மையில் நோக்க வாய்ப்பிருக்கிறது. ஒன்றை மறந்துவிடாதே. தற்கால ஊடகத்தில் வெட்டவெளி ஆபாசங்கள் துருத்திக்கொண்டு இருப்பதால்.இளம் மனங்கள் எதுவுமே தனித்து இருக்கவிரும்புவதில்லை.  ஆதலால், ஆண், பெண் ஒவ்வொருவருக்கும் குறைந்தது கைபேசியில் ‘சாப்டியா‘ ‘வணக்கம்‘ அற்பமான காரியங்களுக்குக்கூட  ‘I Like you‘ போன்ற அன்பைப்பொழிகின்ற வார்த்தைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆக புதிய இடங்களில் யாரும் தனியாட்களாய் இருப்பார்கள் என்பதை உறுதியாக கருதிவிடமுடியாது. உன்னை நாடி வரும் நட்பு சரியான ஆய்வுக்கு உட்படுத்துவது சிறந்தது. எதிர் நபரின் கண்களில் இருக்கும். உண்மை  தரிசிக்கப் பழகிக்கொள். அது சாத்தியம் ஆனால் பல சந்தர்ப்பங்களில் உனக்குச் சாதகமானப் பேச்சுக்கள் கிடைக்கும்.


ஒரு நாள் நீ தவிர்க்க முடியாதபடி, நட்பாளர் பேல்பூரி வாங்கித்தந்தால், இன்னொரு சந்தர்ப்பத்தில் அதற்கு ஈடாக அந்நபருக்கு பாப்கார்ண் வாங்கிக்கொடுத்துவிடு. ஒருவேளை அந்நபருக்கு அது பிடிக்காத நொறுக்குத்தீணியாகப் பட்டால் சற்று கூடுதலானாலும் பரவாயில்லை. வேறு ஒன்றை வாங்கி பதில் செய்துவிடு. எக்காரணத்தைக்கொண்டும் மீண்டும் மீண்டும் அந்நபரின் தன்னார்வமான  உதவுதலை அல்லது முதலீட்டை அனுபவிக்காதே. நம் குடும்பம் உன்னைத் தொடர்பு கொள்வதற்காக வாங்கித்தந்த கைபேசியை அதிகளவில் பயன்பாட்டுக்குள் வைத்திருக்காதே. ஆய்வு அளவில் பல கேடுகள் இருப்பதாக முடிவுகள் சொல்லப்படுகிறது. எனக்கோ, உன் அண்ணனுக்கோ அன்றி அநேகமான நேரங்களில் நட்பாளருக்கு மிஸ்டுகால் பயண்படுத்தாதே. அவனாகவே மூன்று முறை கால் செய்தால், இன்னொரு சந்தர்ப்பத்தில் நீ கால் செய்யப் பழகிக்கொள்.வெட்டி வார்த்தைகள் உறவில் சிறுகச்சிறுக இடைவெளிக்கு வழிவகுக்கும். ஒருவேளை அவன் குடும்பத்தின் நபர்களைத் தொந்தரவுச் செய்து நண்பர்களை மகிழ்விக்க தாராளமாய் இருக்கலாம். இருப்புக்காரனாய் இருந்தாலும் அவனுக்குறிய பணமாய் இருக்காது. எப்படி இருந்தாலும், ஒருவனின் ஆதாயத்தை தொடர்ந்து அனுபவிப்பதை தவிர்த்துவிடுவது நல்லது. நீ அப்படி இருக்கும் பட்சத்தில், அவன் நம்பிக்கையற்றவனாய் வெளிப்படும்போது எந்த மன வருத்தமும் இல்லாமல் வெளியேற உன்னால் கூடும்.

அப்பா, காதல் தற்காப்புக்கு மட்டும் ஏன் இந்த நீண்ட உரை. எனக்கு கோபம் வருகிறது என்று உனக்குச் சொல்லத்தோன்றுகிறா? இல்லை மகளே. சமூகப்போராளிகளுக்கு, குடும்பத் தலைவர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, பல விதங்களில் நெருக்கடி வருகிறது. ஆனால், இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுதான் முதன்மையான நெருக்கடியாக இருக்கிறது என்பதை மறந்துவிடாதே. சரி உனக்கு அதிர்ப்தியாய் இருப்பதால் அவைகளில் இருந்து வெளியேறிவிடுகிறேன்.


மகளே நான் முதலில் சொன்னதுபோல ஒவ்வொரு நாளும் உன் மனசாட்சியை நேர்மைபட வைத்துக்கொள்வது எல்லா சூழலுக்கும் உகந்ததம்மா. நீ ஏறிச்செல்லவேண்டியப் படிகள் செங்குத்தான உயரத்தில் இருக்கும் என்று நினைக்காதே. அந்தப் படிகள்தான் சமூகத்தில் திசைக்கொன்றாகவும், கலைத்துப் போடப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடக்கிறது. அதன் தன்மைகளைக் கண்டிபிடித்து உச்சத்தை அடைவது சாதாரணச் விஷயமல்ல. அதற்காக நிறைய உழைக்கவேண்டும். அந்த உழைப்பின் பெரும்பகுதியை நீ எடுத்துக்கொண்ட செயலில் முதலீடு செய்யவேண்டும். படிகளின் உச்சம் மிகத்தாழக் கிடக்கும். அந்த உச்சங்களை அடைய என் அன்பின் வாழ்த்துக்கள்.


மகளே! அதோ உன் கல்லூரியின் கதவு திறக்கப்பட்டுவிட்டது. முதல் நாள் வகுப்பறைப் பயணம் இனிதாகட்டும்.


டேனியல்