Thursday, October 2, 2014

சிறுகதை,



                     விடியும் இரவுக்காட்சி 

இருட்டு. அறையில் லேசான முனகல் சத்தம் கேட்டது. மிகவும் சிறிய அறை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன், ஏறக்குறைய இருபது ஆண்டுகள் காங்கன் அந்த அறையைக் கையாண்டு இருக்கிறான். கையாண்டான் என்றாலும் அவன் முழு சுதந்தரவாளி அல்ல. தன்னுடைய சட்டையை சுவரின் ஆணியில் மாட்டிவைக்க உரிமையில்லாத சுதந்தரவாளி. சற்று விளக்கமாகச் சொன்னால், ஐந்து குதிரை சக்திகொண்ட மோட்டாரின்  ஆயில் ஸ்டார்டரை கீழ் அழுத்தி மீண்டும் மேல் தூக்கியபிறகு, பம்ப்புசெட்டிற்கு வெளியில் இருக்கும் தொட்டியில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டதும் வெளியே வந்துவிடும் உரிமைதான். தினைந்து வருடங்களுக்கு முன், அப்படித்தான் இருந்திருக்கிறான்

இத்தனைக்கும் பம்ப்செட் உரிமையாளர் சிங்காரத்தின் பனிரெண்டு ஏக்கர் நிலத்திலும் கால்படாத இடமே இல்லை. காங்கனின் அப்பா அவனைப் பனிரெண்டு வயதில், அந்த பம்ப்புசெட்டில் விட்டார். நீண்ட காலம் கழிந்தபிறகுதான் இந்த பம்ப்புசெட் வாழ்க்கையை விட்டு வெளியேறினான். ஏதோ மாபெரும் சிந்தனைக் கிளர்ச்சியால் அல்ல. பொதுவாக விவசாயம் என்பது சுருங்கிக்கொண்டு வந்திருந்தது ஒரு காரணம். ஆண்டான், அடிமைப்பேச்சுக்கள் வெளியரங்கமாகப் பேசப்பட்டது இன்னொரு காரணம். இருந்தாலும், அவனின் முப்பத்திரண்டு வயது கிழிதிருந்தது. உள்ளூரிலும், வெளியூரிலும் வேறுவேலைகளில் தஞ்சமடைந்து மேலும் பதினைந்து வருஷம் கழிந்திருந்தது. இன்று சிங்காரமும் இல்லை. பனிரெண்டு ஏக்கர் விவசாயமும் இல்லை. காங்கன், சிங்காரம்  வாரிசுகள் பாகுபாடில்லாமல் வெள்ளைக்காரன் பம்ப்பு செட்டிற்கு சுதந்தரவாளியாக தஞ்சம் அடைந்துள்ளார்கள். முன்னோர்களின் வழியாக காங்கனுக்கு, வாய்த்த பம்ப்புசெட் உரிமை தற்போது, இரு சாராருக்கும் சமமாக பிரித்தளித் திருக்கிறது பன்னாட்டு நிறுவனங்கள். 

இன்று சிங்காரத்தின் பம்ப்புசெட், நாய், நரிகளின் குடியிருப்பு நிலையமாக இருக்கிறது. இன்று மாலையிலிருந்து அச்சிறு அறை இவர்கள் இருவரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.  அந்த, அறைப்போதும் என்பதில் அவர்கள் மனமும் நிம்மதியடைந்தது. இறங்கி சுத்தப்படுத்திவிட்டால் இரவைக் கழித்துவிடலாம் என்று முடிவுசெய்திருந்தார்கள். பம்ப்பு செட்டை ஒட்டியிருந்த கொய்யா மரத்தின் நீண்ட கிளைகள்  டர்ர்படார் என்று பம்ப்பு செட்குட்டிச்சுவரை உரசிக்கொண்டிருந்தது. அடிக்கடி தேய்வதால் கொய்யா கிளையின் கூர் மொக்கையான குச்சியாக இருந்தது. சில நேரம் அக்கிளை சுவர் வெடிப்பில் மாட்டிக்கொண்டு வரமுடியாமல் தவிப்பதுபோல் இருந்தது. காற்று வேகமெடுக்கும்போது படால் என்று, ஒரு அடி கொடுப்பதுபோல்  சத்தம் எழுப்பி, வெளியே வந்து மீண்டும் சுவரை உரசிக்கொண்டிருக்கும். அந்த சத்தம் கவனத்தில் கொள்ளும்படி இருக்கவில்லை.  

அவன் கிராமத்திற்கும், பம்ப்பு செட்டிற்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம்தான். இன்னொன்று செட்டின் பக்கத்தில்தான் அவன் தாத்தாவின் விவசாய நிலமும் இருந்தது. எப்பவாவது ஒரு நாள் விவசாய நிலத்தில் மாலைவரை இருந்திருக்கிறான். நீண்ட வருஷங்களாக நிலம் பக்கம் வந்ததேயில்லை. மாலைப்பொழுது பழுப்பு நிறத்தை எட்டிக்கொண்டிருந்தது. பம்ப்செட் வரப்பு ஓரங்களில் மிக உயர்ந்த தென்னை மரங்கள். அதில் இளனி இருந்தது.  அவனுக்கு மரம் ஏறத்தெரியும். இருந்தாலும் அதுசரியான நேரமாகத் தோன்றவில்லை. தன்னிச்சையாக வளரும் காட்டுமரங்கள் எந்த சூழலிலும் தன் முகமளர்ச்சியை குறைத்துக் கொள்வதில்லை. மனிதன் கை பக்குவமாக பாராமரித்து வளர்த்துவிட்டு, பிறகு கவனிக்கப்படாமல் விட்டுவிட்டால் அதன் இயல்பான முகமளர்ச்சிக்குவர நீண்ட நாட்களாகின்றதுபோல. அந்நிலையில் இருந்தாலும் கொய்யா மரத்தில் பூவும் பிஞ்சுமாக காய்கள் இருந்தன. அவைகளை முடிந்தவரை பறித்து வைத்துக்கொள்வது நல்லது என்று இருவருக்குமேப்பட்டது.

அவர்கள் அநேகமாக காட்டின் இருப்புக்கு மாறியிருந்தார்கள். அவன் மரத்தில் ஏறி பறித்துப்போட்டான். அவள் தன் துப்பட்டாவில் சேகரித்தாள். இரவு ஜீவனத்திற்கு போதும் என்று இறங்கிவிட்டான்.  அவன் நல்ல மாநிறம். அவனோடு ஒப்பிடும்போது அவள் லேசான கறுப்புதான். இருவருமே நாலேகால் அடிக்கு மிகாமல் இருந்தார்கள். இருவருக்கும் சேகரித்த கொய்யாக் காய்களை சாப்பிடுகிற அளவுக்கு வயிறு இருப்பதாகத்தெரியவில்லை. பெரும்பாலும் மனிதன் தான் உடுத்தும் ஆடைகள் மூலம்தான் ஒரு சீரான வாழ்வை கடத்திக்கொண்டிருக்கிறான். இவர்களேக்கூட ஆடையற்று சுவர் பக்கமாக முகத்தை வைத்து ஒட்டி நின்றால், இரு பெரிய பல்லிகள் சுவரில் ஒட்டியிருப்பது போன்றுதான் இருக்கும்

அவன் அறையில் இறங்கினான். என்ன இருக்குமோ என்ற பயமும் இருந்தது. பெண், ஆண் துணை என்று உறுதியானவுடன் தைரியம் தானாகவே கிடைக்கிறது. தங்களை ஒருவராகப் பாதுகாத்துக் கொள்ளும் பண்பு வந்துவிடுகிறது. அவன், பம்ப்பு செட்டில் இறங்கியபோதே, ‘பாத்துபாத்துப்பாஎன்று பதட்டமடைந்த குரலில் சொன்னாள். இந்த அக்கறையுள்ள வார்த்தைக்காகவே இன்னும் எவ்வளவு ஆபத்தான நிலையிலும் இறங்கலாம்போல என்று தனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டான். 
 
வடக்கு, மேற்கு இணையும் சுவர் பிளந்து, கீழே விழுந்து விடுவதுபோல் சாய்ந்திருந்தது. அறைக்குள்ளாகவே ஆயில் இன்ஜின் பட்டை சுற்றுவதற்கான பள்ளம் இருந்தது. சுவர் வெடிப்பு வழியாக, பாலைக்கொடிகளும், பலசெடிகள் உள் நுழைந்து, அறையில் நடக்கும் ஒழுங்கற்ற வேலைகளை வேவுபார்ப்பதாக இருந்தது.  அவைகளை கொம்பில் அடித்து இழுத்தான். கையில் கிடைத்தவைகளைப் பிடுங்கி வெளியேப் போட்டான். கையில் எதோ ஊர்ந்தது போல இருந்தது. சடாரென்று உடலைக்குளுக்கி பயந்துவிட்டான். பார்த்துக்கொண்டிருந்த அவள், ‘என்னப்பா, என்னாச்சி என்று உள்ளே இறங்கி, அவன் தோளைத் தழுவினாள். ‘ஒண்ணுமில்லமா‘, ‘நீ மேல ஏறி நில்லுஎன்றான். அவள், பரவாயில்லை இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவன் முகத்தை உற்று பார்த்தாள். லேசாக வேர்வைகள் வழிந்துகொண்டிருந்தது. ஆண், பெண் இணைந்த வாழ்வு அற்புதம் அல்லாமல் வேறென்ன.  அவள், தலையை தன் மார்போடு அணைத்து, துப்பட்டாவில் துடைத்தாள். அவன் அறையில் இருந்த செடிகளின் தலையைப்பிடித்து இழுத்தான். அதனதன் சக்திக்கேற்ப  வேருடன் மண்ணையும் சேர்த்து பிடிங்கிக்கொண்டு வந்தது. அவள் வாங்கி, தூர எறிந்தாள்

சூரியனின் மஞ்சள் கதிர்கள் ஒளிர்வதை முடித்துக்கொண்டு, இளைப்பார ஆயித்தமானது. இருள் சூழ்ந்தது. வளர்பிறையில் இருந்த நிலவு அடிக்கடி மேகங்களின் பயணத்தில் மறைந்து காரிருளை அவ்வப்போது அரங்கேற்றியது. தங்களின் கைபேசிகளின் அவசர விளக்கை, அறை முழுவதும் அடித்துப்பார்த்தனர். இரவில் மின்மினிப்பூச்சி வெளிச்சம்போல் புகை படர்ந்த வெளிச்சமாகத் தெரிந்தது. முக்கியமாக அந்த வெளிச்சம் சுவர் வெடிப்பின் பக்கத்தை நோக்கியே வைத்திருந்தனர். பக்கத்தில் மோட்டார் இருந்த தடத்திற்கு அடையாளமாக ஆறு போல்டுகள் தரையில் புதைக்கபட்டு, மரையுடன் மேல் நோக்கி நீட்டிக்கொண்டிருந்தது. அவைகள், அவர்கள் படுப்தற்கான இடத்தை மேலும் சுருக்கியிருந்தது. கொஞ்ச இடத்தில் அவன் எடுத்துவந்திருந்த கையிலியை கீழே போட்டான். அவள் புடவை அணிந்து கொள்கிற அளவுக்க தகுதியானவள் அல்ல, அதனால் அவளிடம் மாற்றுத்துணிக்கான ஆடை புடவையாக இருக்கவில்லை. இரண்டு ஜோடி சுடிதார் வைத்திருந்தாள். ரோஸ் நிறத்தில் நீளமான கொடிக்கிளைகளில் வெள்ளையும், லேசாக மஞ்சளும் கலந்த நிறத்தில் இலைகளை டிசைனாக இருந்த சுடிதாரும் ஒன்று. அதில் ஜிகினா தையல் அலங்காரம் அதிகமாக இருந்தது. கீழே போட அவள் ஆடைகள் எதுவும் பயன்படவில்லை.

அவன், படுக்கையில் உட்கார்ந்தான். அவளை கைபிடித்து அமரவைத்தான். அந்த அறைக்குள் இருந்து வெளியே பார்க்கும் எல்லா இடங்களும் காரிருள் சூழ்ந்திருப்பதாக அறிந்தார்கள். சற்று முன் அவன் தன் கையில் இருந்த குச்சியால் அடர்ந்திருந்த ஒட்டடைகளை சுற்றி வெளியேப்போட்டான். அதில் தப்பிப்பிழைத்த சினையான எட்டுக்கால் பூச்சி அவள் கழுத்துப் பகுதியின் மீது விழுந்து ஊர்ந்தது. “அய்யோ, அப்பாஎன்று கத்தி அவனைப் கட்டிப்பிடித்துக் கொண்டாள். பூச்சிக்கு இரண்டு கால் உடைந்து தத்தித்தத்தி மீண்டும் சுவரில் வேகவேகமாக ஏறியது. இத்தனை காலம் அப்பூச்சியின் பாரம்பரியம் அங்குதான் இருந்தது. அதன் வாழ்நாளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவே இல்லை. ஆனால், இவர்கள் அறையில் நுழைந்ததும், செடி கொடிகளில் இருந்து எத்தனை உயிர்கள் மாய்ந்துபோனது என்பதை, அவர்களேக்கூட உணர்ந்ததில்லை. அதினால் என்ன, மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு கொலையாளிகள்தானே. உயிரைக் கொல்லாதவன் யார. 

அவள் தன் வீட்டின் தொடர்பை முறித்துக்கொண்டு, ஒட்டு மொத்த ஆதாரம் நீதான் என்று காலையில் அவனோடு வந்தபிறகு இப்போதுதான் முதல் முதலாக அய்யோ, அப்பாஎன்று கத்தினாள்.

அவன் தன் வலதுகையால், அவள் முகவாய்க்கட்டைத் சற்று நிமர்த்தி பரிதாபமாகப் பார்த்தான். அவள் கண்கள், ஒரே ஒரு நொடி மட்டும் அவனின் கண்களை தரிசித்தது, பிறகு குற்ற உணர்வில் தலை சாய்த்துக்கொண்டாள். அவனும் ஒரு கணம், ‘தவறு செய்துவிட்டோமோஎன்று பிரக்ஞை எழுந்தது. அவர்கள் இருவரும் ஒன்றுபோல கதவற்ற வாசல் வழியாக வெளியே பார்த்தார்கள். அடர் இருட்டு. காற்று வேகமாக வீசத்தொடங்கியது. எந்த நேரத்திலும் மழை வரும்போல இருந்தது. கொய்யா மரத்தின் மொக்கைக்கிளை டமால்.. டமால் என்று அடிக்க ஆரம்பித்தது. அச்சத்தம் உயிரை பரித்தலுக்கான அவகாச எண்ணிக்கைபோல் அச்சுறித்தியது. இதே குச்சிதான் மாலையிலும் அடித்தது. அப்போது எந்த பயமும் இல்லை. பட படவென இடியுடன் சேர்ந்த மின்னல் ஒரு நொடி தோன்றி மறைந்தது. அந்நேரத்தில் இருவரும் எதிர் எதிர் முகங்களைப் தரிசித்தனர். மனிதர்கள் ஆதரவற்றப் பீதி முகத்தில் இருந்தது. மாலையில் தெரிந்த காதல் மளர்ச்சி மறைந்திருந்தது.

மேலும் அதிர்ச்சியாக, மழைபொழியத்தொடங்கியது. அவர்கள், உயிர் பிழைத்தலுக்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டது என்ற தருணங்களை மெல்ல மெல்ல உணர்ந்தார்கள். சுவர் பிளவின் வழியாக நீர் வந்து பள்ளத்தில் விழுந்துகொண்டிருந்தது. அவன் சமயோசிதமாக வெளியேச் சென்று சிறு சிறு செடிகளை பிடுங்கிக்கொண்டு வந்து சுவர் பிளவின் ஓட்டையை அடைத்தான். நீர் வரத்து ஓரளவுக்கு குறைந்தது. ஆனால், முற்றிலும் நிற்கவில்லை. லேசாக தண்ணீர் பள்ளத்தை நிறப்பிக்கொண்டிருந்தது. அவள் அவனை மெல்ல அணைத்து தலையைத் துவட்டினாள். லேசாக வளர்ந்திருந்த ஸ்தனங்கள் அவனின் மார்பை உரசிக்கொண்டிருந்தது. கூடிய மட்டும்  இன்று இரவு உடல் உறவை தவிர்க்கவேண்டும் என்ற மனக்கட்டுப் பாட்டில்தான் இருந்தார்கள். இச்சூழலில், அது மட்டுந்தான் நம்பிக்கைத்தரும் தைரியமாக இருக்கும் என்றும் நம்பினார்கள். இரு உடலிலும் உயிரை இருத்தி வைப்பதற்கு உடல் கலப்புதான் ஒரே வழி. உடல் அணைப்பில்லாமல் காலை வரை உயிர் தாங்குமா என்பது சந்தேகம்தான் என்ற நிலைக்கு இருவருமே வந்திருந்தார்கள். அவள் அவனின் உறுப்பைத்தேடித் தழுவினாள். அவனும் உதடுகளில் உதிர்ந்த ஈரம்கலந்த காமத்தை ஈர்த்துக்கொண்டான். இருவரின் உடைகளும் அளவாகத் திறந்துகொண்டது. வெளியில் பொழியும் மழையின் சாரல் அவர்கள் மீது படியத்தொடங்கியது. அவர்கள் தேர்ந்த கலவியாளர்களைப்போல வெறுமனே உரசுவதிலும், சுவைப்பதிலும் இருந்தனர். தங்கள் மீது கவிழும், பயதையும், சூழலின் தாக்கதையும் அதன் மூலம் கழித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் யோசித்ததுபோல நீண்டநேரம் வெறுமனே நேரத்தைக்கடத்த முடியவில்லை. அவர்கள் முழுமையாக ஈரத்தை பகிர்ந்துகொண்டார்கள். சற்று நேரம் ஒருகளித்த அணைப்பில் இருந்துவிட்டு, அவன் மல்லாந்தபடி இருந்தான். இருவருமே திறந்த வாசல் வழியாக வெளியேப்பார்த்தார்கள். மழை அதிகமாகிக் கொண்டிருந்தது. மின்னல் விட்டுவிட்டு பிரகாசித்தது. அந்த வெளிச்சத்தில் வளர்பிறையான நிலவு மேகங்கள் இடுக்கில் இருப்பது தெரிந்தது.

அவள்தான் முதலில் துவங்கினாள். “நாம், சரியான வழியை தேர்ந்தெடுக்கவில்லைனு நினைக்கிறேன்பா.  ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கைதான், நம் பாதையை வகுத்துவிட்டது. என், அப்பா என் மீது மிக நம்பிக்கை வைத்திருந்தார்.“
அவன் அவள் முகத்தை உற்றுப்பார்த்தான். கண்ணீர் வழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. “நீ சொல்வது உண்மைதான், என் வீட்டில்கூட என் முடிவை மறுத்துவிடுகிறவர்கள் இல்லை. உனக்கு கலியாணம் பண்ற வயசு இல்லியேனுதான் சொல்லியிருப்பார்கள்.“

நாமதாம்பா நம்முடைய வழியை சிக்கலாக்கிட்டோம். நேராக உன் வீட்டுக்கு போயிருக்கனும். ஜனங்களோடு பிரச்சனைய சந்திக்கிறதுல ஆபத்து இருக்கலாம், ஆனா அதிகமாக பாதுகாப்பும் இருக்கும். நாம, இப்படி தனிமையா காட்ல தவிச்சிருக்கமாட்டோம்பா. எந்தத் தடையும் இல்லாமல் சாட்சியும் இல்லாமல் நம் வாழ்வு இந்த இரவுக்குள்ளாகவே முடிந்துவிடுகிற சூழ்நிலைகூட இருக்கிறது. இதற்கு யாருமே காரணமில்லைபா. நாமதான்பா நம்ம முடிவை தீர்மானிச்சிட்டோம்.“

இப்போது அவனும் அழுதான். இறுக்கிக் கட்டிக்கொண்டான். அவள் அவனின் கண்களைத் துடைத்துவிட்டாள். அவன் பேசினான் நான் அதிகாலையில், செல்லில் சிம்மைப்போட்டு, என் அண்ணனைத் தொடர்புகொண்டு பேசுகிறேன். தவறு செய்துவிட்டோம். எங்களை மன்னித்து ஏற்பதாக இருந்தால். நாங்கள் வீட்டிற்கு வருகிறோம். இல்லை என்றாள், இருவரும் செத்துவிடுகிறோம். என்று பேசுகிறேன். அழைத்தால் போவோம். இல்லை என்றால் இங்கேயே செத்துவிடுவோம்.“ என்றான்

அவள் இருத்திய அணைப்பு அவன் வாசகத்தை சம்மதித்து உறுதி செய்தது. அவள் சுடிதார் பின் ஜிப்பை சரியாகப் பூட்டாமல் படுத்திருந்தாள். அவர்கள் நீண்ட நேரம் தங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் குணாதிசயங்களை மாறி மாறி பேசிக்கொண்டிருந்தார்கள். ஓரளவு எல்லாப் பேச்சுக்களும் நிறைவடைந்திருந்தது. அவள் அணைத்தபடியேத் தூங்கிவிட்டாள். அவனுக்கும் தூக்கம் வந்தது. தூங்கிவிட்டான். நடு இரவுக்கடந்திருந்தது. கைபேசியின் டார்ச் லைட் எரிந்துகொண்டிருந்தது. மழை லேசான தூரலாக இருந்தது. வானத்தின் மேகங்கள் ஒரேத் திசையை நோக்கி போய்க்கொண்டிருந்தன. ஏறக்குறைய அம்மேகங்களை உற்றுபார்த்தால்தான் போகும் திசையை ஊகிக்கமுடியும். சுவர் பிளவின் வழியாக ஒரு தடிமனான பாம்பு ஊர்ந்து வந்தது. அதன் வழித்தடத்தில் அவன் அடைத்திருந்த செடிகள் விலகி சற்று  கூடுதலாக தண்ணீர் வந்தது. பாம்பு தண்ணீர் பக்கம் போகாமல் இவர்கள் படுக்கை பக்கமாக வந்து, அவள் கழுத்தின் மீது ஏறி முதுகுபக்கமாக சுடிதார் சட்டைக்குள் நுழைந்தது. அவள் லேசாக உணர்ந்தவளாக விழித்தபோது  அலறி கையில் பிடித்து தூக்கிப்போட்டு அய்யோ, அம்மா, ஆமே, ஆபே, பாம்பு என்று கத்தி அவனை மிதித்து  குதித்து அலறினாள். தன் சட்டை உருவி எறிந்து கத்தினாள். அவன் அலறியடித்து எழுந்து என்னாம்மா. என்னஅங்கும் இங்கும் பார்த்த்தான். கைபேசி தண்ணியில் விழுந்து விட்டது. சடாரென்று எடுத்தான் அவளை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மேலே ஏற்றினான். துணிகளைச் சுற்றிக்கொண்டு அவனும் மேலேறினான். பாம்பு தண்ணீர் வழியில் போகும்போது வழுக்கி பள்ளத்தில் விழுந்தது.

அவள் கறுப்பு உள்ளாடை போட்ட உடம்புடன் தன் உடலை இப்படியும் அப்படியும் முறுக்கி நெளிந்து கைகளால் துடைத்துக்கொண்டு, அலறினாள். அவன், '‘கடிச்சிடுச்சா என்ன, ஐயோ கடவுளே நாங்க என்ன பண்ணுவோம். என்னம்மா'' உடலைத் தடவினான். அவள் மிரண்டவளாக எதோ மாதிரி சத்தம் போட்டு முகினாள். அவள் உடல் உதறிக்கொண்டிருந்தது. வளர்பிறை நிலவு லேசாக தன் வெளிச்சத்தைக் காட்டியது.  அவன் கழுத்து உடல் முழுதும் தேடினான். ரத்தக் கசிவு எதுவும் இல்லை. “ஒண்ணுமில்லமா. தைரியமா இரு. நான் வீட்டிற்கு கூட்டிம்போயிடுறேன். ஒண்ணுமில்ல. பயப்படாதே. தைரியமாக இருஎன்று பக்கத்தில் உட்கார்ந்து கைலியை மேலேப்போர்த்தி தேற்றினான்

அவன் அவளை தன் மடியில் சாய்த்தபடி, கைபேசியை கழட்டி துடைத்துக்கொண்டிருந்தான். அவள் உடல் உதறல் இன்னும் அடங்கவில்லை. மணி மூணைத்தாண்டியிருந்தது. நேற்று காலை ஒன்பது மணிக்கு கழட்டி வைத்திருந்த சிம்மை போட்டு ஆன் செய்தான். சற்று நேரம் விட்டு விட்டு எரிந்தது. மீண்டும் கழட்டி  நன்றாக ஊதி சுத்தம் செய்து சிறிது நேரம் கழித்துப்போட்டு ஆன் செய்தான். டிஸ்ப்லே ஆன் ஆனது.  அவன் அண்ணன் பெயர் மகிமைதாஸ் என்பதால், மகிமைதாஸ் பெயர் இருக்கிறதா என்று உறுதி செய்துக்கொண்டான். அண்ணன் கைபேசியைப் பொதுவாக இரவு பதினோரு மணிக்கு ஆப்செய்து, காலை ஏழு மணிக்குப்பிறகுதான் ஆன் செய்வான் என்பதும் நினைவுக்கு வந்தது. இருந்தாலும் விடியற்காலை வரை தான் நேசிப்பவளை காப்பாற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்தபிறகு வேறு வழியில்லை

அவன் நம்பிக்கையற்ற நிலையில் அண்ணன் பெயரை தேர்வு செய்து அழைப்பு பொத்தானை அழுத்தினான். அழைப்பு போகும் சத்தத்தையோ, எதிர்முனையில் இருந்து பதிலாக வரும் பேச்சைக்கேட்டாலோ அவளுக்கும் மனம் ஆருதல் கிடைக்கும் என்று ஸ்பீக்கரை போட்டிருந்தான். சில நொடிகள் அமைதலாக இருந்தது

நீங்கள் மகிமைதாஸை அழைத்ததற்கு நன்றிஎன்ற ரிங்டோன், அந்த இடத்தின் இருட்டைக் கிழித்துக்கொண்டு வந்தது.

டேனியல்





No comments: