Saturday, March 2, 2013

கட்டுரை,


இலக்கியப்பரிச்சம் மனிதனை மேம்பட்டவனாக மாற்றுகிறதா?

உலகம் முழுதும் இலக்கியத்திற்கு தனி மரியாதை உண்டு. ஒவ்வொரு காலத்தையும், அதன் கலாச்சாரத்தையும், வரலாற்றையும் பிரிதிபளிக்கின்ற ஊடகம். மிக உயரிய இலக்கியங்கள் புழக்கத்தில் இருந்த நாட்டில்கூட, அதன் பாதிப்பால் மனிதனின் செயல்பாடுகள் தலைகீழாக மாறி, மக்கள் தங்களை மேம்பட்டவர்களாக மாற்றிக்கொண்டார்களா என்றால் கேள்விக்குறிதான்.

தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகத்திற்கே நல் நெறி காட்டுகின்ற இலக்கியங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன, மேடைகளில், னி நிகழ்வுகளில் அதன் குறிப்புகளை, சாரம்சத்தைப் புகட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் பாதிப்பால் மனிதன் புனிதத்தன்மை அடைந்துவிட்டானா? என்றால் அதுவும் சந்தேகம்தான்.

ஆக இலக்கியங்கள் பொதுவாக மனிதர்களிடம் எந்தளவில் இயங்குகிறது. அதன் பயன் என்ன? இலக்கியத்தைப் படைக்கிறவர்களில் இரு தன்மை வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் தன்மை என்ன? இருசாராரும் அடிப்படையில் யாராக இருக்கிறார்கள். இக்கருத்தாக்கங்களை ஆராய்வதே இக்கட்டுரை.

இலக்கியத் தன்மை
இலக்கியம் இலக்கு நோக்கி இயங்கும் தன்மை உடையது; என்ற வகையில் ஏற்றுக்கொண்டாலும், இதுவரை என்ன இலக்கை அடைந்திருக்கிறது. சில இசங்களை கண்டடைந்திருக்கிறது. என்பதைத்தவிர பொதுவெளியில் எத்தன்மையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது கணினி புரட்சி, கைபேசி புரட்சியைப்போல் ஏன் இலக்கியத்தில் நிகழவில்லை. இலக்கியம் வியாபாரயுக்த்தி இல்லை என்பது உண்மைதான். கணினி, கைபேசி வியாபாரயுக்த்தி பாதியளவு இருந்தாலும், அதன் பயன்பாட்டால்தான் இத்தனைச் செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியுமா? அப்படி என்றால் இலக்கியத்தின் பயன்பாடு மிகக்குறைவானதுதானா? இலக்கியம் காலங்காலமாக தன்னைப் பாதுகாத்துக்கொண்டு பதுங்கு குழியில் வாழும் தன்மையிலேயே இருக்கிறது. இருந்துவருகிறது. இதற்குச் சாட்சி உலகின் எந்த மூலையிலும் இதுவரை இலக்கியத்தால் புரட்சி உண்டானது என்ற வரலாறு நானறிந்தளவில் இருப்பதாகத் தெரியவில்லை.

ரஷ்ய இலக்கியங்கள் உலகின் தலைசிறந்த இலக்கியம் என்றாலும், அவைகளால் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட்டதா என்றால் சந்தேகம்தான். ரஷ்ய புரட்சிக்கு வழிவகுத்த ‘லெனின்‘ ஆரம்ப காலத்தில் இலக்கியப் புத்தகங்களையும் வாசித்தார் ஆனால், அதினால்தான் புரட்சியாளராக செயல்பட்டார் என்று சொல்லமுடியாது. ‘மாவோ‘ புத்தகங்களை வாசித்தபோது; எல்லாமே மன்னர்களின், ராணிகளின், மந்திரிகளின், பண்ணையார்களின், ஆடம்பரமான, பகட்டான வாழ்வுமுறையை சொல்வதாகத்தான் இருக்கிறது. ஆகையால் இலக்கியம் என்பது சலிப்புத்தட்டுகிறது. என்றபிறகே மக்களின் விடுதலைக்கான வழியை நோக்கி நகர்ந்தார். தமிழக அளவில் எடுத்துக்கொண்டால்கூட இரண்டாயிரம் ஆண்டுகளாய் நல்ல இலக்கியமும், அறுபதுகளுக்குப்பிறகு, எண்பதுகளுக்குப்பிறகு என்ற கால வரிசையில் தரமான இலக்கியங்களை பகுப்பாய்வு செய்கிறார்களேத்தவிர  அதானால் என்ன விளைந்தது என்பதை யாரும் சொல்லியதாகத் தெரியவில்லை. இலக்கியம் நெல்லா, கோதுமையா களஞ்சியத்தில் சேர்க்க என்கிற நையாண்டித் தேவையற்றது. இலக்கியதைத்தவிர்த்து மற்ற எல்லாத்துறைகளும் அபரிதமான வளர்ச்சிக் கண்டிருக்கிறது. அதன் பயன் ஒவ்வொரு தனிமனிதனையும் அடைந்திருக்கிறது. ஒரு சில சுத்தமாக அழிந்தும் இருக்கிறது. (நிலங்கள் விவசாயம், உள்ளூர் தாயாரிப்பு பொருள்) பொதுவாக பயன்தராத எதையும் தொடர்ந்து செய்கிற தன்மை மனிதனுக்கு அறவே இல்லை. ஆனால் இவ்விஷயத்தில் சிறுசிறுக்குழுக்கள் விதிவிலக்கு. அதுவும் இலக்கிய வாதிகள்தான். அவர்களுக்கு மட்டும் அதில் ஏதோ இருக்கிறதென்று தெரிந்திருக்கிறதா? என்னதான் இருக்கிறது.

காலங்காலமாக இலக்கியத்தை தன் வசப்படுத்திக் கொண்ட சமூகத்தையும், புதிதாக, அதில் இணைத்துக்கொண்ட மனிதர்களையும் உற்று நோக்கினால் அதன் பயன்பாட்டை நாம் கண்டுணரமுடியும். பயன்பாடு என்று சொல்லும்போது, பயன் அடைவது இலக்கியமா? அதில் இணைத்துக் கொள்ளும் நபர்களா? அப்படி இணைத்துக்கொள்ளும் நபர்கள் யார் யார் எல்லோரும் இலக்கியம் படைப்பதில்லையே? படைக்காதவர்களின் பங்கு என்ன? என்னைப் பொறுத்தளவில் படைப்பாளர்கள் இரு தன்மையாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்கிறேன்.

இலக்கியம் படைப்பவர்கள்
படைப்பைத் தருகிற இலக்கியவாதிகள், வழிவழியாக வந்தவர்களாகட்டும், புதிதாக இணைத்துக் கொண்டவர்களாகட்டும். இவர்களில் இருசாரார் இருக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இருவரும் இலக்கியத்தின் ஒரே கருவரையில் வசிக்கிறார்கள். படைப்பே எங்கள் உயிர் மூச்சு, வீச்சு எனும்விதமாக படைக்கிறார்கள். ஆனால், அடிப்படையில் இருவருக்குமான செயல்பாடுகளில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. படைப்புகளை நிதானமாக, எந்தச் சார்பற்றும் ஆய்வுசெய்தால் தெளிவாகத்தெரியும். இந்த வித்தியாசத்தை இயற்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். திராட்சை, மாங்காய், கொடுக்காபுளி, இன்னும் அநேக கனிகளை ருசித்து நோக்கினால் புரியும். ஒரேவகை மரங்கள் கனிகள் மட்டும் இனிப்பு, துவர்ப்பு. இத்தன்மைதான் மனித குலத்திற்கும் பொருந்தியிருக்கிறது. இலக்கியத்தைப் பொறுத்தவரை படைப்பவர்கள், படைக்காதவர்கள்,என்று எடுத்துக்கொள்ளும்போதும், பொதுவெளியில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று எடுத்துக்கொண்டாலும் இந்த இரண்டுத் தன்மைக்குள்தான் அநேகமாக இயங்குகிறார்கள்.

ஒரு சாரார் அடிப்படையில் இயல்பாகவே தன்னில் அன்பு உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் வழி வழி வந்தவர்களோ, தற்செயலாக நுழைந்து நிலைநிறுத்திக் கொண்டவர்களோ எப்படி இருப்பினும் இலக்கியத்தில் நுழைந்தபிறகு இவர்களுக்கு அன்பு வரவில்லை. ஏற்கனவே அவர்களிடம் அன்பு நிறைவாக இருக்கிறது. இங்கே முக்கியமான விஷயத்தை பதிவு செய்யவேண்டும். தொடர்ந்து மாபெரும் இலக்கியங்களை வாசிப்பதாலும் அல்லது கற்றுக்கொள்வதாலும் ஒருவருடைய இயல்பான குணம் மாறிவிடுமா? என்றால் நிச்சயமாக இல்லை. மாறாது. அப்போது இலக்கியத்தின் பயன் என்ன? என்றக் கேள்வி வருகிறது. அதைப்பிறகு பார்ப்போம். அன்பை அடிப்படையாகக் கொண்டவர்கள் இயல்பாகவே இலக்கியத்தில் ஆர்வம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். சமூகம் அவர்கள்முன் கேடுள்ளவையாக இருந்தால் தானாகவே அதைத் தீர்க்கிற முறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் ஒரு நாட்டின் பாரம்பரிய அதிகார, ஆட்சி முறைகைளையே தலைகீழாக மாற்றிப்போட்ட வரலாற்று நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருக்கிறது. என்பதை யாராலும் மறுக்கமுடியாது. நான் மீண்டும், லெனின்,மாவோ,சே, இவர்களையே காட்டவிரும்புகிறேன். இவர்கள் மூவருமே இலக்கியத்தைத் தேடித்தேடிப் படித்தவர்கள். ஆனால் அடிப்படையில், அன்பு அவர்களிடம் இருந்தது. லெனின் சிறு வயதில் சுட்டியாக இருந்தாலும் தான் ஆசையாக ஒரு பறவை வளர்த்தார். பறவை திடீரென்று இறந்துவிடுகிறது. அந்த இறப்பை தாங்க முடியாமல் சோகத்தில் ஆழ்கின்றார். மாவோ தன் தந்தை வசதியாக இருந்தாலும் அந்தச் சுகத்தை அனுபவித்து ஊதாரியாய் சுற்றாமல் உழைப்பாளிகளின் வாழ்வைக்குறித்து யோசித்தார். ‘சே‘ தன் இக்கட்டான போராட்ட சூழலிலும் தனக்குத்தெரிந்த மருத்துவ உதவிகளைப் பின்தங்கிய மக்களுக்குச்செய்து உதவினார். இச்செயல் அன்பின் நிமித்தமாகவே நிகழ்ந்தது. அன்பும், போராட்டகுணமும் கலந்த செயல் வடிவந்தான் ஒட்டு மொத்த மக்களின் ஆதரவைப்பெறச்செய்தது சமூகத்தில் வெற்றியாய் பிரிதிபளித்தது. ஆனால், இந்த வெற்றிகள் இலக்கியத்தால் கிடைத்தது என்று சொல்லமுடியாது. ஏனென்றால் முன்னரே குறிப்பிட்டதைப்போல் மாவோ ஆரம்ப கட்டத்தில் இலக்கியத்தை வாசிக்கும்போது சலிப்பாக இருக்கிறதென்று சொல்லுகிறார். அதைப்போலவே அன்பு இயல்பாகக்கொண்ட படைப்பாளர்கள். இயல்பாக தங்கள் படைப்புகளில் பிறரின் வாழ்வை, தன் வாழ்வுபோல் உள்வாங்கிக் கொண்டு மிக எதார்த்மாக நம்பகத்தன்மை மாறாமல் எழுதுகிறார்கள். முடிந்தளவு இயல்பு வாழ்வில்கூட போலித்தனங்கள் இல்லாமல் இருக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். வாழ்வின் போராட்டத்தால் திடீரென்று சருக்கல் ஏற்பட்டுத் தடுமாறும் நிலை ஏற்பட்டாலும் திட மனதுடன் சமாலிக்கவும், அதைக்கடந்தும் முடியாமல்போகிறது என்பதற்காக சற்றும் முறையில்லா வழிகளைத் தூரிதமாக தேர்ந்தெடுப்பதில்லை. முப்பது, நாற்பது ஆண்டுகள் இலக்கியத்தில் இருந்தாலும் உயரிய கலை நுணுக்கங்களைப் பயின்றாலும் அதன் தாக்கத்தை உள்வாங்கிக் கொள்ளமுடிகிறதேத் தவிர, அவைகளால் மனம் பெரிய மாற்றம் அடைந்து விட்டதாகச் சொல்லமுடியாது. குணங்களைப் பொருத்தமட்டில் அப்படியேதான் இருக்கிறது.

இன்னொரு வகை படைப்பாளர்கள்
படைப்பைத் தருகிற இலக்கியவாதிகள். வழிவழியாக வந்தவர்களாகட்டும், புதிதாக இணைத்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்களாகட்டும். முழுமையாக தன் ஈடுபாட்டை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். புதிய புதிய தளங்களை யோசிக்கிறார்கள். வரலாறுகளைத் தேடுகிறார்கள். அதிலிருந்து தங்களுக்கான உருவாக்கத்தை அமைக்கிறார்கள். தங்களுக்கு அறிமுகமான அல்லது தங்களின் கடந்தகால பின் தங்கிய வாழ்வியலையும் படைப்பாகப் பதிவு செய்கிறார்கள். இவைகள் எல்லாவற்றிலுமே தான் எடுத்துக்கொண்ட விஷயத்தை செறிவாகக் காட்டுகிற முனைப்பு இருக்கும். புதிய கண்டுபிடிப்புகளின் (இலக்கியம் சார்ந்த) சாரம் அதிகமாக இருக்கும். கூடவே ஒரு மெல்லிய இழையாக படைப்பில் எடுத்துக்கொண்ட மனித மனங்கள் இயல்பாக பிரிதிபலிக்கும் தன்மையை இழந்து நிற்கும். அது அநேகமாக பலரின் பார்வைக்கு படாததாகவே இருக்கும். ஏன் இப்படி பார்வைக்குப்படாமலே போகிறது என்றால், அதின் செயல்முறைகள், புதிய விதமாக இருக்கிறது என்கிற மனப்போக்கு. இவைகளால் அந்த மெல்லிய இயல்பான இழை தெரிவதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அந்த மெல்லிய  இழையில்தான் உயிர் இருக்கிறது. எதிர்காலத்திற்கான வழிகாட்டல் இருக்கிறது.

இவர்கள் ஏன், அதைத்தவிற்கிறார்கள். சொல்லப்போனால் படைப்பில் நேர்த்தியான போக்கை கடைபிடிக்கிறார்கள்தானே என்று வாதாடமுடியும். நான் வாதாடுவது தவறு என்று சொல்லவில்லை. ஆனால், புதிதாக தொழிலை நிர்மாணிக்கிற வியாபாரியும் அநேகயுக்திகளை நுகர்வோர்களுக்கு மறைவாகவைத்து தன் வியாபாரத்தை வளர்த்தெடுக் கிறானே!. அதற்கும், இதற்கும் வேறுபாட்டைக்கான முடியுமா? இருந்தாலும்கூட இத்தன்மையில் படைக்கிற படைப்பாளிகள் வேண்டுமென்றே வியாபாரியின் மனநிலைக்கு ஈடாக தங்கள் படைப்புகளை வைக்கவில்லை. இந்த இடத்தில்தான் முதல் வகையைச் சார்ந்தவர்களிலிருந்து மாறுபடுகிறார்கள்.

இவர்களுக்கு இயல்பாகவே அன்பு குறைவுள்ளதாக இருக்கிறது. பல காலங்களாக பல உயரிய நூல்களைப் படித்தாலும், அன்பை தங்கள் மனதில் இயல்பாக உருவாக்கிக் கொள்ளமுடியாது. அது செயற்கைத் தன்மையில்தான் சூழலுக்கேற்ப வெளிப்படுத்தவும் முரண்படவும் செய்கிறது. இந்த இயல்பான நிலையில்தான் இவர்கள் படைக்கும் படைப்புகளில் ஒரு மெல்லிய உயிர்த்தன்மை வாய்ந்த விடுபடல் நடந்தேறிவிடுகிறது. இவர்கள் என்னதான் மிகவும் பின்தங்கிய, ஒரு அப்பாவித்தனத்தின் பாத்திரத்தை எடுத்து பேசினாலும், அது உயிர்ப்புடன் வராமல் லேசாக பூசி மெழுகியிருக்கும் தன்மை வெளிப்படையாகத் தெரியும். அப்படைப்புகளை ஆய்வு செய்தால் புரிந்துகொள்ளலாம். இது உண்மை இல்லை என்று வாதாடும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட படைப்பாளர்களின் படைப்பிலிருந்தே அத்தன்மையைச் சுட்டமுடியும். (அதற்கான அவகாசத்துடன்)

இவர்கள் சமூக முரண்பாடுகளை களைய கொதித்தெழுகிறார்கள். இலக்கியமும் வாசிக்கிறார்கள். தொடர்ச்சியாகப் பேசுகிறார்கள். போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். மக்களை அனுகும்போது தங்களுடைய பேச்சிற்கும், செயல்பாட்டிற்கும் பெருத்தளவில் வித்தியாசம் இருப்பது மக்களுக்குத் தெரிந்துவிடுகிறது. அதிலிருந்து எச்சரிக் கையாகவோ, பயந்தோ இவ்ர்களுடன் ஒன்றிணையாமல் ஒதுங்கிவிடுகிறார்கள். இந்நிலையில் போராட்டத்தை தொடங்கியவர்கள் சோர்ந்துவிடுகிறார்கள், அல்லது வெற்றிக்கிட்டாமல்போகிறது.

இலக்கியம் மனிதனுக்குத் தருவதென்ன
உயிருள்ள ஜீவராசிகள் உணவுக்கும், இனப்பெருக்கத்திற்குந்தான் கவலைப்படுகிறது. மனிதன் சற்று மேம்பட்டவனாக சுகமான நீண்ட வாழ்வு (அதில் பணம், புகழ் அடங்கியுள்ளது) வாழ பின்னால் வருபவனை முந்திக்கொண்டு மணிக்கு இத்தனை மயில் எனக்கணக்கிட்டு சதா ஓடிக்கொண்டே இருக்கிறான். இவன் முற்றிலும் இலக்கியம் என்ற வாசகத்தைக் காதில் கேட்டதோடுசரி பல செல்வந்தர் புத்தகத்தின்மேல் அட்டையைப் பார்த்ததோடு சரி. சிலர்தான் புற்களை, செடியை, மரத்தை, பக்கத்து மனிதனை, நாடு கடந்த உலகத்தை தேடுகிறான். ஆராய்கிறான் அப்படிச் செய்யும்போது, தான் இதற்கு முன் வாழ்ந்த வாழ்வில் மிகக்குறைபாடுகள் நிறைந்திருக்கிறது. நாம் நடந்து செல்லும்போது பின்தங்கி வருபவனையும் கைத்தாங்களாக அழைத்து செல்லவேண்டும் என்கிற கரிசனை ஏற்படுகிறது.

இயல்பாக அன்புள்ளவ்ர்களும், இயல்பில் அன்பு அற்ற நிலையில் ஏதோ ஒரு கோட்பாட்டு ரீதியாக நேர்மையின் சாயலை ஏற்றிருப்பவர்களும்கூட இலக்கியத்தில் தொடர்ந்து இயங்குவதால். சமூகத்தில் எந்த மூலையில், என்னவிதமான குளறுபடிகள் கிடக்கின்றன. நடைமுறை வாழ்வில் தினந்தோறும் தாங்கள் அனுபவிக்க நேரும் ஏமாற்று வேலைகள் எது, உண்மையான நட்பு எது, இந்த காரியத்தின் மூலம் இப்படி நடக்கலாம் என்று ஊகிக்கிறத் திறமை இவைகள் எல்லாமே பல்வேறு இலக்கியப் புத்தகத்தை வாசிக்கிறபோது கிடைக்கிற அனுபவம். அப்படிப்பட்ட அனுபவத்தை இரண்டாயிரம் வருஷங்களாகவே சம்பந்தப்பட்ட சிறுக்குழுக்கள் மக்கள் வெளிக்குக் கொண்டு வராமல், தீவிரவாத்த்தை அந்தரங்கமாய் கையாள்வதுபோல கையாள்கிறார்கள். இலக்கியத்தை அரசியல் கூட்டம்போல, சமூக விழிப்புணர்வு கூட்டம்போல வெளிக்கொண்டு வந்தால் அதன் கலைத்தன்மை பரிபோய்விடும் என்கிற மனநிலைதான் தொடர்ந்து இருக்கிறது. காலங்காலமாய் கையாண்டுவரும் சிறுக்குழுக்களின் செயல்பாட்டால் சமூகப்பொது வெளிக்கு நிகழ்ந்தது என்ன? இலக்கியத்தைக் கற்கிறவர்கள் சமூகத்தின் எந்த பொய்மைக்கும், உண்மைக்கும் தப்பித்தோ, எதிர்கொண்டோ வாழ்கிற ஆற்றலைப் பெறுகிறார்க்ள. இந்த ஆற்றலை சமுகத்தின் பெரும்பாலான மனிதன் உள்வாங்கிக்கொள்ளவோ, கற்றுக்கொள்ளவோ சிறுக்குழுக்களே ஏன் தடையாக இருக்கிறது? சினிமா ஒருகலைதுறைதான் பொது வெளிக்கு வருகிறதுதான். அதன் தாக்கம் பெருமளவில் நடந்தேறுகிறதல்லவா? அந்தந்த காலங்கட்டங்களில் நம்பிக்கை ஏற்படும்படியான படங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கடந்த காலங்களில் ‘அலைகள் ஓய்வதில்லை‘ என்ற படத்திற்கு பிறகு பல மதமாற்று காதல்கள் அறங்கேறி இருக்கிறது. அது அநேகருக்கு மறந்திருக்கலாம். கொலை, கொள்ளைகளுக்கு நிறைய அதாரங்கள் நாம் நேரடியாகவே பத்திரிக்கைகளில் வாசித்திருக்கிறோம். சற்று ஆய்ந்து நோக்கினால் பல விருதுகளை வாங்கிய வழக்கு எண்:18/9 க்குபிறகுதான் தமிழ்நாட்டில் இரண்டு, மூன்று காதல்களுக்கு எதிறான ஆஷிட் வீச்சுகள் நடந்தேறி இருக்கிறது. இப்படி சமஅளவுக்கு நன்மையான, தீமையான விஷயங்களும் திரைப் படங்கள் பொதுவெளிக்கு வருவதின் மூலமாக ஏற்படுகின்றது. இந்த இடத்தில் இலக்கியத்தை நிறுத்தமுயல்கிறேன். நீங்கள் யோசித்துப்பாருங்கள் இலக்கியத்தில் நுழைந்த நபர்கள் நிச்சயமாக தங்களையே அடிக்கடி சுய விமர்சனம் செய்துகொள்கிறவர்களாக இருக்கிறார்கள். முக்கால்பாகம் அவர்களால் பிறருக்கு தீங்கிழைக்கும் செயல்களில் இறங்க முடிவதில்லை. குறைந்த பட்சம் வெறுப்புணர்வு ஏற்பட்டாலும் விவாதங்களின் அடிப்படையில் கருத்தைப் பதிவு செய்கிறார்கள். (அத்தன்மை வாய்ந்த இலக்கிய செயல்பாடு அந்தரங்கமாக செயல்படுவதால்தான். தீமைகள் பராக்கிறமத்துடன் வெளியில் செயல்படுகிறது.)

இலக்கியங்களைப் படிப்பதின் மூலம் இயல்பாக அன்புள்ளவர் சற்றுக்கூடுதலாகவும், அன்பைத் தகவல்போல் அறிந்தவர் தன்னை சற்றேனும் உயர்த்திக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. குறைந்த பட்சம் இயல்பு வாழ்வில் அனுதினம் சந்திக்க நேர்கிற பொய்யான விஷயங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள (உதாரணமாக எஸ்.எம்.எஸ் அல்லது மெயிலோ, மூன்று கோடி பெறுகிற அதிர்ஷ்டசாலியாக நீங்கள் தேர்வுபெறுகிறீர்கள். உடனே தங்களை அனுகவும் என்று வருகிற தகவலை. ‘யாரை ஏமாற்ற இந்தச் செய்தியை அனுப்புகிறார்கள்‘)  என்று யோசிக்கிற அளவுக்காவது விழிப்புணர்வைத்தரவல்லது. அப்படிப்பட்ட அனுபவத்தை ஒரு தனி மனிதன் பெற்றுக்கொள்ள சிறு குழுக்களான இலக்கியவாதிகளே தடையாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே இலக்கியத்தில் நிலைநிறுத்திக்கொண்ட நபர்கள் தங்கள் பிள்ளைகளை எதிர்கால வாழ்வை கருத்தில்கொண்டு கல்வி உள்பட, மற்ற எல்லா துறைகளிலும் திணித்துவிட பாடுபடாமல் விடுகிறார்களா? அத்தகைய வழிக்காட்டுதல் தனி மனிதனுக்குத் தேவைதானே? அதைக்கேட்டு திருந்திவிடப்போகிறானா என்கிற விதண்டாவாதம் வேண்டாம். வட்டிக்கு விடுகிறவன் தெருமூலையில் தண்ணீர் தொட்டியைக் கட்டிவிடுகிறானே, அந்தப் பணியையாவது இலக்கியவாதிகள் செய்யவேண்டாமா? அது பலரிடம் அநியாயமாக வசுலித்ததற்கு பிராயச்சித்தமாக செய்கிறான். எங்களுக்கு என்ன தலைவிதியா என்றும் கேட்கவேண்டாம். இலக்கியவாதிகள்கூட பலரின் ஞானத்தை பேராசைகொண்டு தன்னகத்தே சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால்,  வட்டிக்கு விடுகிறவனுக்கு இருக்கிற தெருமூலை தண்ணீர் தொட்டி ஞானம் வருவதேயில்லை.  பொதுவெளிக்குத் தெரிந்தால்தானே சற்றேனும் நேர்மையை எதிர்ப்பார்க்கிறவர்கள், தங்களை மேம்படுத்திக்கொள்ள வழிவகுக்கும்.  சரி இவைகளுக்கு எல்லாம்கூட ஏதோ ஒரு காரணம் காட்டி அது சரிவராது என்று சொல்ல்லாம். நான் கேட்கிறேன். காலங்காலமாக இலக்கியங்களை அந்தரங்கமாக வைத்திருந்ததால் என்ன உயர்வுகள் நிகழ்ந்துவிட்டது? பரவலாக மக்கள் மத்தியில் கொண்டுசெல்லுகிற பணிகளை செய்து பார்த்தால் என்னதான் நிகழ்கிறது என்று ஒரு சோதனை ஓட்டமாகதான் பார்க்கலாமே!.

இலக்கியம் என்ன கத்திரிக்காயா கடைத்தெருவுக்கெல்லாம் வர!. கெட்டுவிடாதா? என்றால், சிறு குழுக்களிடம் இயங்குகிற இலக்கியம் அத்திப்பூத்தார்போன்ற விவாதங்களைத்தவிர்த்து, சாதாரண பாமரன் செய்கின்ற தில்லு முல்லுகள், தந்திரங்கள் தற்கால இலக்கியத்தில் நடக்கவே இல்லையா? நூற்றுக்கு நூறு எந்த பேதங்களும் இல்லாமல்தான் காலங்காலமாய் செயல்படுகிறதா?

இறுதியாக
நான் சமூகத்தை உற்றுநோக்கியவகையில் இலக்கியம் படைப்பவர்கள் இருபிரிவினர் இருக்கிறார்கள். அதைபோலவே விமர்சனம் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். இயல்பாகவே கேடுநிறைந்தவர்களும் இருக்கிறார்கள். எல்லோரும் மேற்கூறிய இருபிரிவுக்குள் அடங்குகிறார்கள் எனபதே என் புரிதல். நான் இலக்கியம் படைப்பவர்கள் குறித்துமட்டுந்தான் பேசியிருக்கிறேன். மற்றவைகள் இன்னொருமுறை வாய்ப்பிருந்தால் செய்யமுனைகிறேன். இலக்கியதை தொடர்ந்து அனுகுவதால் மட்டுமே ஒரு மனிதனின் இயல்பான குணம் மாறிவிடாது. ஆனால், அதை அனுகும்போது ஒவ்வொரு மனிதனும் குறைந்த பட்சம் விழிப்புணர்வு பெறுகிறார்கள் அதைப்பொது வெளிக்கு கொண்டு வரும்போதுதான் அதன் பயன் விருத்தியாகும். மனிதனின் மனம் மேம்படும்.

ஜே.டேனியல்  

No comments: