Tuesday, February 5, 2013

விமர்சனம்

                   
கடல்-கிளைமாக்ஸ் அநியாயம்.

கிறிஸ்த்தவர்களை  மையமாகக் கொண்டு கதை அமைந்துள்ளது. கடலோர  மீனவர்கள் வாழ்வுதான் சித்தரிக்கப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் படத்தில் ஒன்றும் இல்லை. என்றுதான் சொல்லமுடியும்.  ஆனால், ஜெயமோகன் மற்றும் மணிரத்தினம், ஒரு மதத்தின் நம்பிக்கையை முடக்கிவிடும் செயலை யார் கண்ணிலும் படாதபடி எவ்வளவு சாமர்த்தியமாக பண்ணியிருக்கிறார் என்பதை நினைக்கிறபோது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இவ்வளவு நேரம் நான் நிற்கிறேன், நேர்மையற்ற நிலையில் என்னைத்தாண்டிப் போகிறாயே என்று  நேரடியாக ஒருவனை அரைந்துவிடலாம். இங்கு இருப்பது பாதுகாப்பு என்று நம்பி படுத்திருக்குபோது கையின் நரம்பைத் தடவி கண்டுபிடித்துக்கொண்டே கிருமியை ஏற்றிவிடுவது மோசமான செயல் அல்லவா? இதைச்சொல்லுவதின் மூலம் நான் கிறிஸ்த்தவ மதத்திற்கு சார்பாக பேசுகிறேன் என்பதல்ல. அம்மதத்தில் சமீபகாலங்களில் பெருத்த குளறுபடிகள் இருக்கிறது. அதைப்போகிறப்போக்கில் நான் சொல்லுவதை நீங்களே விளங்கிக் கொள்வீர்கள்.

ஜெயமோகன், படைப்புகளை சிலாக்கித்து வாசித்தும், மணிரத்தினத்தின் படங்களை ஆச்சரியப்பட்டு பார்த்தும், அதன் அழகியலைக் கண்டு வியந்தும் இருக்கிறேன். இன்னும் நம்புகிறேன். இப்படத்தைப்பார்த்து, இவர்களா? சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களாக மாறிவிடக்கூடாது என்பதற்காக இவ்வளவு பணத்தைக் கொட்டி எடுத்தார்கள். உண்மைக்கு  மாறான கருத்தாக்கங்களைப்  புகுத்தினார்கள் என்று வாயடைத்துப்போனேன்.  

1
இரவுநேரம். கடலோர குடிசை. ஒரு தாயோடு குழந்தைப் படுத்திருக்கிறது. வெளியில் கதவைத்தட்டும் ஓசைக் கேட்கிறது குழந்தை அம்மாவை எழுப்புகிறது. அவள் எழுந்திருக்கவில்லை. ஒருவன் வெளியிலிருந்து கதவைத் தட்டுகிறான். அதட்டுகிறான். குழுந்தை பயந்துசென்று கதவைத்திறக்கிறது. வெளியில் அடைமழை பொழிகிறது. வருபவன் குழந்தையை வெளியே துரத்துகிறான்.  அதுப்பரிதாபமாகச்சென்று வெளியில் உட்கார்ந்து கொள்ளும். சற்று நேரம் கழித்து வந்தவன் மேல் சட்டைக் கழட்டி தோளில் போட்டுக்கொண்டு வெளியேபோவான்.  உள்ளேக் கிடந்தவள் மல்லாந்த நிலையில் கால்கள் விரிந்துக் கிடப்பாள். வந்தவன் பிணத்தை  புணர்ந்து சென்றதாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. பிறகு அவன் டே, உன் அம்மா செத்துக்கிடக்கிறாள்என்று சொல்லிச்செல்வான்.  இவன் சொல்வதற்கு முன்பே அவள் செத்துதான் கிடக்கிறாள் என்பது பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடுகிறது. அதில் சிறதளவும்  சஸ்பென்ஸ் இருக்கவில்லை.  

திரு. ஜெயமோகன் அவர்கள் கிறிஸ்த்தவ மதத்தை விமர்சனம் செய்யட்டும் தவறே இல்லை. படைப்பாளர்களுக்கு, மாற்று மதத்தை சுதந்தரமாக அதே சமயம் உள்நோக்கம் இல்லாமல் விமர்சனம் செய்யும் வாய்ப்புத்தரவேண்டும்.  அப்படித்தரும்போதுதான் நாளை ஒரு கிறிஸ்த்தவன்  தேவநாதனைப்பற்றியோ, அதிகாரம் படைத்த இந்துத்துவாவைப்பற்றியோ படைப்பைத் தரமுடியும். ஆனால், அப்போதுமட்டும் கடப்பாரை, மண்வெட்டியெல்லாம் எடுத்துக்கொண்டு வரக்கூடாது.

பிணத்தைப் புணர்ந்து செல்வதுபோன்று காட்சி அமைக்க வேண்டியதின் அவசியம் என்ன? ஆதாவது, கதைப்படி குழந்தையை அநாதையாக்கவேண்டும். கிறிஸ்த்தவர்கள் பரவலாக இருந்தாலும், சுட்டுத்திண்ணக்கூடகாகம் தூக்கிச்செல்லும் ஒரு மீனை கொடுக்காமல் குழந்தையை துரத்தவேண்டும். அது தரிக்கெட்டு வளரவேண்டும். சரி, அதற்கு தாயை இயற்கையாகவே  மரணம் செய்திருக்கக்கூடாதா? அல்லது கிறிஸ்த்தவனிடமும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்றுக் காட்ட ஏதேச்சியாய் புணர்ந்து கொண்டிருக்கும்போதாவது அந்த மரணம் நேரச்செய்யக்கூடாதா? ஒருவேளை அந்தப்பாத்திரத்தால்தான் படம்முழுக்க  வரப்போகும் வில்லத்தனங்களுக்கு ஆணிவேர் அதனால்தான் இப்படி மூர்க்கத்தனமாகப் பார்த்திரத்தை சித்தரிக்கவேண்டியிருந்தது என்று சொல்வதற்கும்  சந்தர்ப்பமே  இல்லை. சுண்டக்காய் விஷயத்திற்கு பழி வாங்க மும்பை தாவுத்தைவிட பயங்கரமான தனி பாத்திரங்கள் இருக்கிறது.  மேலும்  கிராமத்தின் ஒட்டுமொத்த  மக்களுமே நியாயத்தை பலிகொடுக்கிவர்களாக காட்டப்படுகிறார்கள். அப்படியிருக்க, குழந்தையை இரக்கமற்று மழையில் துரத்துவதும், பிணத்தைப் புணர்வதும், அக்கிராமத்தின் மக்கள் ஈவு இரக்கமற்று குழந்தையை மிதிக்கும்படியாக வைத்ததும் எதற்காக என்று யோசித்தால் அதன் உண்மை மிக பயமாக இருக்கிறது. ஊடகங்கள் தங்கள் வசதிக்கு இருக்கிறது என்றாலும்கூட இப்படி ஒரு அநியாயத்தைச் செய்யக்கூடாது.

கிறிஸ்த்தவம் பொதுவாக  அன்பு, இரக்கம், பொறுமை என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தன் மதத்தை வளர்க்கிறது. அதனால், அந்த பிம்பத்தை உடைப்பதற்காகவே இப்படியானக் காட்சியை வலிந்து சேர்க்கப்பட்டுள்ளது. கதை ஆசிரியரும், இயக்குநரும் சேர்ந்து நல்ல விவாதம் செய்யக்கூடியத் களத்தை எடுத்திருக்கிறார்கள். எடுத்தவர்கள் ஏதோ விஷயம் தெரியாதவர்கள் அல்ல. பின் ஏன் மக்களுக்கு புரிபடாதபடி கரடு முரமாக வைத்தார்கள் என்று பார்த்தால். ஒருவரை தவறாகச் சித்தரிக்கும் கருத்தாழம் மிக்க கவிதைக்கு பொருத்தமானவர் அருகில் இருந்தாலும், எல்லோரோடும் சேர்த்து அவரும் கைத்தட்டுகிறார். கவிதையில் அவரைத் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தெரியவேயில்லை. ஏனென்றால் அக்கவிதையில் அர்த்தம் வெளிப்படையாகத் தெரியாதபடி  இருக்கிறது.  அந்த அடிப்படையில்தான் படம் முழக்க ஜெயமோகன் செய்திருக்கிறார்.

வெளிப்படையாக விளங்கியிருந்தால் கிறிஸ்த்தவத்தின் பக்கத்திலிருந்து எதிர்ப்புகள் வந்திருக்கும். மேலும் கிறிஸ்த்தவர்கள் சினிமாக்களைப் பார்த்தால் நேராக பரலோகத்திதற்குப் போகமுடியாது என்று நம்பிக்கையை விதைக்கிறவர்கள். தங்களிடம் தஞ்சம் புகுந்தவர்கள் எதார்த்த வாழ்வனுபவங்களைப்பார்த்து  விழிப்பணர்வு அடைந்துவிட்டால். நமக்கு வரும் லாபம் நின்றுவிடுமோ என்பதற்காகவே வெறும் கூப்பாடுகளைப் போடுகிறார்கள். அதனால்தான்  இப்படத்திற்கு எந்தப்பிரச்சனையும் எழவில்லை. எழ வேண்டும் என்பது நம் ஆசையுமல்ல. படைத்தவர்கள் சிறிதேனும் உணர்ந்தால்போதும். படத்திற்கு வருவோம்.

2 ஜெயமோகன் மாற்று மதத்தை பண்ணும்போது, வாசிப்பு (பைபிள் உள்பட) அனுபவத்தை மட்டுமே நம்பி திரைக்கதை பண்ணியிருக்கக்கூடாது. களப்பணியாக அம் மதத்தின் வாழ்முறை, ஜெபிக்கும்முறை கடவுளை எப்படி அழைக்கிறார்கள், அனுகுகிறார்கள். என்பதை எல்லாம் சற்றேனும் நுணுக்கமாக உள்வாங்கியிருக்கவேண்டும். மணிரத்தினமும் பெரிய  எழுத்தாளராச்சே என்று நம்பிவிட்டிருப்பார்போல.  அர்ஜீன், அரவிந்த் சாமி இருவரும் ஆயர் பயிற்சி எடுக்கிறார்கள்.  கடவுளுக்கு உண்மையாக ஊழியம் செய்யவேண்டும் என்று நினைப்பவர் நல்லவன் (அரவிந்த் சாமி). சமூகத்தின் மேம்போக்கான வாழ்க்கையை கடைபிடிப்பவன்  (அடிக்கடி கதாநாயகத்தன்மையை அவர் மீது திணிக்கப்படுகிறது) கெட்டவன்  (அர்ஜீன்)  இங்கேதான் வாதம் தொடங்குகிறது.  வாதத்தின் போக்கில் அர்ஜீன் எடே, நான் சாத்தான், நீதான் ஏசுஎன்ற வசனம் வரும். சும்மா பேச்சுவாக்கில் வரும் வார்த்தையாக பார்வையாளர்களுக்குத் தெரியும். உண்மையிலேயே கிறிஸ்த்துவின் பாத்திரத்தையும்சாத்தான் பாத்திரத்தையும்தான் வைக்கிறார்.  ஜெயமோகனுக்கு ஒரு உண்மை தெரியாமல் போய்விட்டது. சாத்தானுக்கு கொந்தளித்தெழுகின்ற கோபமெல்லாம் வராது.  புத்திசாளித்தனமாக ஏமாற்றி தன் காரியத்தைச் சாதிக்கும் திறமைப்படைத்தது.  கிறிஸ்த்துக்கூட சம்மந்தா  சம்மந்தம் இல்லாமல் சிரித்துக்கொண்டே  இருக்கமாட்டார்.  நீ என்னடா பக்கத்திலிருந்து பாத்தியானுலாம் கேக்காதிங்க. பைபிளில் ஏசுவின் உரையாடல்களை சாத்தானின் வாதங்களைக் கவனிக்கிறபோது இதுத்தெரியும். சரி அப்படித்தான் இருக்கட்டும், ஏசுவை பொதுவெளியில் காட்டுவது  நல்லதுதானே என்று நினைக்கலாம்.  இதில் பெருத்த மோசடி இருக்கிறது. ஏசு, கடவுள்போன்ற பிம்பத்தை வார்த்தையளவில் வைத்துவிட்டு, அவரின் உண்மையான செயல்பாட்டை திருத்தி அரவிந்சாமி என்ற பாத்திரத்திற்குள் தவறாகப்புகுத்துவது. இதைப்பற்றி கதையோட்டத்தில் சொல்கிறேன்.

2அ  
அர்ஜீன்  ஒரு பெண்ணுடன் அறைக்குள்  இருக்கிறார். அரவிந்சாமி  பார்த்துவிடுகிறார். கதவைத்தட்டி இதெல்லாம் தவறான் செயல் என்று எச்சரிக்கிறார்.  அர்ஜீன் இரண்டுமுறை  கெஞ்சிப்பார்த்துவிட்டுஉடனே கோபாவேசம் பொங்கி ஆயர் பயிற்சியை தூக்கி எறிந்துவிட்டு பழிவாங்கச் சபதம் எடுக்கிறார். ஜெயமோகன் கூற்றுப்படி சூழ்நிலையால் நல்ல திறமைசாளி, நல்ல  சிந்தனாவாதி கெட்டவனாக மாறிவிடுகிறான். அதற்காக, அவர் எடுத்துக்கொண்ட விஷயம்தான் மிக அற்பத்தனமானது. அரபுநாட்டிற்குச் சாதகமானது. திரு. ஜெமோகனால், எப்படித்தான் இப்படி மனசாட்சி இல்லாமல்  சித்தரிக்க முடிந்ததோ?

நீங்கள் கவனியுங்கள் (நான் உண்மையானக் கிறிஸ்த்துவைக் குறிப்பிடுகிறேன். எழுத்தாளரால் சித்தரிக்கப்டும் போலி ஏசுவைப்பற்றிச் சொல்லவில்லை) கிறிஸ்த்து போகிறவழியில், மதவாதிகள், ஒரு விபச்சாரியை கையுங்களவுமாகப் பிடித்தோம், இவளை கல் எறிந்து கொல்லவேண்டும் என்று  இழுத்துவருவார்கள். கிறிஸ்த்து உங்களில் பாவம் செய்யாத யாராவது ஒருவர், இவள்மீது முதலாவது கல்லை எறியுங்கள்என்று சொல்லுவார். ஒருவனும் பேசமாட்டான். விபச்சாரியைப்பார்த்து இனி பாவம் செய்யாதேஎன்று மன்னித்து அனுப்பிவிடுவார். இதேக்கருத்தைத்தான் அப்படியேத் திருப்பி ஏசுவாகச் சித்தரிக்கப்பட்டவருக்குள் புகுத்தியிருக்கிறார். நல்லவர் வேஷம். ஆனால், மன்னிக்க மனமற்றவர். இதற்கு ஏசுவின் பிம்பம்.

சரி படத்தில் காட்டப்படுகிற காட்சியாவது கோபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறதா? என்றால், உப்பு சப்பு இல்லாத விஷயமாகவே இருக்கிறது. நல்லவன் வேஷம்தரித்தவர் கதவைத்தட்டுகிறார். உள்ளே கெட்டவனும், பெண்ணும் நிற்பார்கள். ஏதோ, கல்யாண தம்பதிகள் அண்ணன் வீட்டு விருந்துக்கு வந்ததுபோலஅன்புள்ளம் கொண்ட நல்லவர் நீ போமாஎன்று அனுப்பிவிடுவார். அவளும் அண்ணன் வாழ்த்தை ஏற்றுக்கொண்டதுபோல சாதாரணமாகச் சென்றுவிடுவாள். நீங்க கவனிங்க, கெட்டவன் ஒரு பெண்ணை வலக்கட்டாயமாக தூக்கிவரவில்லை. அவளும் விருப்பப்பட்டுதான் உறவு நடந்து கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் சற்றும் யோசனையில்லாமல் கதவைத்தட்டினால், அந்த மனநிலையை என்னவென்று சொல்லுவது. தெருவில் நாய்கள் மாட்டிக்கொண்டிருக்கும்போது, சிறு பிள்ளைகள் மாட்டியிருக்கும் இடம்பார்த்து கல்லடிப்பார்கள் அதற்கும் இதற்கும் கொஞ்சமேனும் வித்தியாசம் இருக்கிறதா? இப்படிப்பட்ட மனிதப் பிறவிக்கு வெளிப்பார்வையில் நல்லவன் வேஷம் தந்து உள்ளீடாக ஏசுவின் சாயலை கொடுத்தால் நியாயமா?   சரி, பெண் என்ன செய்வாள் பாவம் என்ற அடிப்படையில் நல்லவன் நீ போமாவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். மன்னிச்சிடு மன்னிச்சிடுஎன்று சக பயிற்சியாளன் கெஞ்சியதையும் மீறி இரக்கமில்லாமல்  தலைமை குருவிடம் போட்டுக்கொடுப்பது எப்படி? அப்போதுமட்டும் அந்தப் பெண் வாழ்வு அடங்கியிருக்கிறது. என்பது தெரியாதா? சரி தலைமை குருவுக்கு குற்றம் செய்தது யார் யார் என்று விசாரிக்கும் அளவுக்கு அறிவுகூடகிடையாது என்று விட்டுவிட்டாரா?. கிறிஸ்த்தவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றுதான் முடிவு எடுப்பார்கள் என்பதைத் திணிப்பதுதான் எழுத்தாளரின் நோக்கமா?

கிறிஸ்த்தவர்கள் அன்பு வயப்படுகிறவர்கள். தொடர்ச்சியான அன்பின் போதனைகளே அதற்கு வித்திடுகிறது. அதனால் சில சந்தர்ப்பங்களில் பாலினபேதம் இல்லாமல் அய்க்கியமாகி விடுகிறார்கள். விபச்சாரம் செய்யாதிருப்பாயாகஎன்ற பைபிள் வார்த்தைகளையும் பெரும் பாலானவர்கள் கவனத்தில் வைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில், ஆயர் சைபையாரில் ஒருத்தியை வைத்துக்கொள்வதும்ஊழியம் செய்கிறவன், தனக்கு மனைவி இருந்தாலும் இன்னொருத்தியுடன் கூத்தடிப்பதும் நடக்கிறது. அதிகாரம் நிறைந்த மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் நடப்பதுபோலஇங்கும் தனக்குச் சாதகமானவர்களின் தவறுகளை வெளியில் தெரியாமல் மறைப்பதும், அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவரின் குரலை நெறிப்பதும், மறைமுகமான உடல் உறவுகள் நடந்துந்தான் வருகிறது. ஆனால், இதற்காக பெரிய தண்டனை எல்லாம்  கிறிஸ்த்தவத்தில் கிடைப்பதில்லை. இப்படி நடப்பது நியாந்தானா என்று கேட்கலாம், சரி, எந்த மதத்தில், எந்த அதிகாரமையத்தில் இது இல்லை. ஆங்கிலேயன் ஒப்படைத்துவிட்டு சென்றபிறகு மேலை நாடுகளின் கலாச்சாரத்தை விழுந்து விழுந்து கொண்டுவந்தது வருவது யார்ஜெயமோகனுக்கே, மதங்களை தூர வைத்துவிட்டு, தமிழ் கலாச்சாரத்தில் தம்பதிகளின் வாழ்வியலில் தாம்பத்யமுறை என்பது கணவனிடமோ, பிறரிடமோ பகுதி நேர ஒப்பந்தமாக குறுகாமலிருக்க விழிப்புணர்வு ஏற்படும்படியாக திரைக்கதை எழுதநேரிட்டாலும் நேரிடலாம்.

3 ஜெயமோகன் மூளை உண்மையிலேயே அதீதமான சிந்தனை ஓட்டம் நிறைந்தது. பின் விளைவுகளை நினைத்து முன்கூட்டியேத் திடமாகத் திட்டமிட்டிருக்கிறார் என்றே நான் கணிக்கிறேன். இப்படத்திற்கு பிஷப்பையோ, ஏற்கனவே பணிசெய்யும் ஆயரை எடுத்துக்கொள்ள வில்லை. அதன் ஆபத்து உடனே பிரிதிபலிக்கும் என்பது தெரிந்து தன்னுடையத்திட்டத்திற்கு பயிற்சி ஆயர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஜெயமோகன் சொல்லுவது கூடுதலாக இட்டுக்கட்டப்பட்டவை என்பதற்கு ஒரு சாட்சி. அரவிந்சாமி ஆயராக வேலை பார்க்கவரும் மீனவ கிராமத்தில் சர்ச், சந்திரமுகியில் வரும் பேய்பங்ளாபோல் காட்டப்படுகிறது. என்னடா இது சர்ச் இந்த நிலமையில் இருந்திருக்குமா என்று படம்பார்த்து வந்தபிறகு, இணையத்தில் திருநெல்வேலி, தஞ்சாவூர், தூத்துக்குடி, மற்றும் மதுரை நகரங்களின் ஆர்சி, மற்றும் சி.எஸ்.ஐ தேவாலய்ங்களின் வரலாற்றை தேடிப்பார்த்தேன். ஏறக்குறைய 1922- லிருந்து 1940 பிறகு ஆர்சி ஆகட்டும்  சி.எஸ்.ஐ ஆகட்டும் படிப்படியாக வளர்ச்சியைநோக்கித்தான் வந்திருக்கிறது. என் அனுபவத்தின் நிச்சயமாக தமிழகத்தில் எந்த மூலையிலும் அப்படி ஒரு சர்ச் பாழடைந்துக் கிடக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் மக்களை தேடிப்பிடித்து கொண்டுவருவதே ஒவ்வொரு ஊழியனுக்கும் இடப்படுகிறக்கட்டளை. அப்போதுதான் ஆலயத்திற்கு காணிக்கை வரும். குருமார்கள் சொகுசான வாழ்வை காணமுடியும். (பணத்தில், வசதியில்)
சரி வேணாம், படத்திலிருந்தே விவாதத்தை எடுத்துக்கொள்வோம் அரவிந்சாமிதான் ஆலயத்தை தூசுதட்டி புதுப்பிக்கிறார் என்பது உண்மையானால், கோயில்குட்டியிலிருந்து, அக்கிராமத்தில் அநேகர் கிறிஸ்த்தவர்களாய் இருப்பது எப்படிஒருகாலத்தில் மதம் மாறியிருக்கலாம் என்ற அடிப்படையில் பார்த்தால் பின் வரும் காட்சிகளில் பல குருமார்கள் குற்றத்தை விசாரிக்க வருகிறார்கள். இவ்வளவு குருமார்கள் இருந்து அப்பகுதியில் சர்ச் பாழடைந்த நிலையில் காட்டுவது பெரும்மோசடியாகும்.

இருபத்திநாலு வயது பையன். அவன் செய்யாத போக்கிரித்தனம் இல்லை. இடையில் இரண்டு வருடம் ஆளையேக் காணோம் திடீரென்று ஒரு வாரத்தில் என் வீட்டிற்கு எதிரில் ஓலை குடிசைப்போடப்பட்டது. யாரோ குடி வருகிறார்கள்போல என்று இருந்தேன். ஒருநாள் காலையில் அந்தப் பையன் வந்து அணா, நான் பாஸ்டராயிட்டேன்ணா எதிர்லதான் சர்ச் என்றான். எனக்கு அடப்பாவி என்று தூக்கிப்போட்டது.  அன்றிலிருந்து மூன்று வருடங்களாக ஒரு ஞாயிறு தவராமல் சர்ச் நடந்துகொண்டேதான் வருகிறது. இப்போ கல் வைத்து நானஸ்த்தானம் தொட்டியெல்லாம் கட்டிவிட்டான். இதையெதற்குச் சொல்கிறேன் என்றால் ஒரு சின்னப்பையனே அதன் வருவாயின் ருசியால் ஓயாமல் பணிசெய்கிறான் என்றால், அத்தனை குருக்கள் இருந்து சர்ச் பாழடைந்துக் கிடப்பது போல் காட்சிப்படுத்துவது முற்றிலும் தவறானத் தகவல்தான். இருந்தாலும் இரு படைப்பாளர்களும் இதை ஏன்வைத்தார் என்று பார்க்கிறபோது. இதன் மூலம் கொஞ்சம் சமாதானம் படுத்தத்தான்  

4. கதா நாயகனுக்கு மட்டுமே ஒரு சீரான பின்னணி அமைகிறது.  அதுவும் பல இடங்களில் கொலை வெறியைத் தூக்கிக்கொண்டு அலைபவனாகவும். தன் மனம் ஈர்த்தவளிடம் மட்டும்  அந்தச் சுவடே இல்லாமல் போவது எப்படி? என்னைப் பொருத்தளவில் ராதாவின் மகள் ஆரம்பத்திலிருந்து நல்லமுறைலேயே நடித்துவந்தார். பாதிக்கட்டம் வரை அந்தப் பாத்திரம் என்ன நிலை என்பதையே மறந்திருப்பார்கள்போல, ஒரு கட்டத்தில் காதலிப்பவன் மதரிடம் அவளைக்குறித்துக் கேட்கும் போதுதான் அவள் மனவளர்ச்சி குன்றியவள் என்று பார்வையாளருக்கு புரியவைப்பதோடு கதையாசிரியருக்கே  தெரிந்ததுபோல. அதன்பிறகு தேவையில்லாத நொண்டியாட்டம்தான். மனவளர்ச்சி இல்லாதவளை பிரசவம் பார்க்க அனுப்புவார்களா? குடிசைக்கு முன் பல ஆண்கள் பெண்கள் கூடியிருக்கும்போது ஒரு வாலிப்பனை பிரவசத்திற்கு உதவியாக அனுமதிப்பார்களா? மக்களே இந்த இடத்தை நன்றாக கவனியுங்கள் அதன் ஆழத்தை வரும் பத்திகளில் விளங்கும்.

ஜெயமோகன் படைப்பையும், மணிரத்தினத்தின் படங்களையும் மிகுந்த அக்கறையுடன் வாசித்தும், பார்த்தும் இருக்கிறேன். அவர்களுடைய விரிந்த தளத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.  இப்படத் தைப்பார்த்து அதன் ஆபத்து என்னை பயப்படவைத்தது. ஆங்கிலப் படங்களில் பெரியப் போராட்டங்களுக்குப்பிறகு தீமை அழிந்ததைப்போல விழுந்துவிடும் சற்றுநேரம் கழித்து பார்வையாளரை பயமுறுத்த திடீரென்று எழுந்து மீண்டும் விழும். இப்படத்தில் தீமை கடைசிவரை விழவேயில்லை. அர்ஜீன், கிறிஸ்த்தவ அமைப்பிலிருந்து வெளியேறியபோது குடும்பம் இருந்ததா என்று தெரியவில்லை. நம்பும்படியான பின்னல் இல்லாதபோதும் மனவளர்ச்சிக்குன்றியவள்தான் அர்ஜீன் மகள் என்று தெரிகிறது. காலத்தைக்கணக்கிட்டால் எப்படியும் குறைந்த பட்சம் பதினைந்து வருஷங்களாவது ஆகியிருக்கும். இக்கட்டத்தில் பெரியதாதாவாகி தொழில் எதிரிகள் மூலமாக துரத்திவந்து சுடப்பட்டு கடலோரத்தில் கிடக்கிறான். அரவிந்சாமி தனிமையில் தவம்செய்கிறாரா? ஜெபம் செய்கிறாரா? என்றேத் தெரியவில்லை. ஏனென்றால் கிறிஸ்த்துவே ஆனாலும் முழந்தால் பணிந்துதான் ஜெபம் செய்வார். நெஞ்சை நிமிர்த்தி யாரும் ஜெபிப்தில்லை. ஒருவேளை, ஜெபத்திலிருந்து, தவத்துக்கு மாறுங்கலையை முன்வைப் பதாகக்கூட இருக்கலாம்.

தப்பா நெனைக்காதிங்க. ஒருக்காட்சிக்கும் இன்னொருக் காட்சிக்கும் உள்ள முரண்பாடுகள் குறிக்கிடுகிறபோது அதைச் சுட்டாமல் போகமுடியவில்லை. ஆரம்பக்காட்சியில் ஆலயத்தில் ஜெபம் செய்யும்போது பையன் பக்கத்தில் சுத்தி சுத்திக் கத்துவான் அவர் பர்ஸை திருடுவான். சுவற்றில் ஒண்ணுக்கு அடிப்பான். பையனை சட்டைசெய்யாமல் ஆழ்ந்த பக்தியில் இருப்பார். மேற்சொன்னக் காட்சியில் சற்று தூரத்தில் சத்தம் கேட்டதும் காப்பாற்ற ஓடுகிறார்.

அதுகூட பராவாயில்லை, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுக்காக உயிர் காப்பாற்றியவனையே (அதிலும் முன்னால் பழகிய மனிதன்) மீண்டும் பழிவாங்கும் வசனம் பேசுவது என்ன கொடுமை. பகைவராயிருந்தாலும் வீடுதேடி வந்தவரை இன்முகத்தோடு உபசரிப்பதுதானே தமிழர் பண்பாடு என்பதெல்லாம் வெறும் கேலிக்கூத்தான கதைகள் மட்டும்தானா? ஒருவேளை, அர்ஜீன் குற்றுயிரா யிருக்கும் இருக்கும். தருவாயில் கண்ணை மூடித்திறக்கும்போது அரவிந்சாமி எதேசையாக அவ்வழியாகப் போவதைப்பார்க்க, வேறு நபர் மூலமாக காப்பாற்றப் பட்டிருந்தால்கூட பழிவாங்க ஒரு காரணம் இயல்பாக கிடைத்திருக்கும். சரி அது அவர்கள் விஷயம்.

5 அர்ஜீனைக் காப்பாற்றப்போய்அரவிந்சாமி ஆயர் விபச்சாரம் செய்கிறார் என்று கிராம மக்களால் இழுத்து வரப்படுகிறார். இரு பெண்களும்தான். ஆரம்பத்தில், ஏசு விபச்சாரியை மன்னித்த விஷயத்தைத் திசைதிருப் பியதைப்போலவே இங்கும் ஒரு மாபெரும் திசைத்திருப்பல். இதுதான் கிளைமாக்ஸ் அநியாயம். கிறிஸ்த்து இறுதியாக தன் மக்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும், அதிகார வர்க்கத்திற்கு எதிராகத் துணிந்து நின்றதின் அடிப்படையில் ஆட்சியாளர்கள் அவரை கொடூரமாக சிலுவையில் அரைந்தனர். ஆனால், ஏசு என்ற பிம்பமான அரவிந்சாமி பாத்திரத்திற்கு விபச்சாரத்தைக்காரணம் காட்டி அதேப்பரபரப்பை, பதட்டத்தை, ஒத்தத்தன்மையை இக்காட்சிக்கு தரப்பட்டது ஏன்? ஜெயமோகன் பயந்திருப்பார்போல பெண்களை அவ்வளவாக கொடுமைப் படுத்தவில்லை. இழுத்து வரப்பட்டது இரண்டு பெண்கள். ஆனால் ஒரே ஒரு பெண்ணிடம் மட்டும் விசாரணையை நடத்தி வெறும் தலையசைப்பைமட்டும் பதிலாகப் பெற்று நீதி வழங்குகிறார். இன்னொரு முக்கியமான விஷயம். கற்பில் இவ்வளவு மூர்க்கத்தனமாக அக்கறை எடுத்துக்கொள்கிற அன்பற்ற கிராமமக்கள். பிரசவத்தின் போது மட்டும் தனியாக எப்படி வாலிபனை உள்ளே அனுமதிப்பார்கள். கதையாளர் மூன் யோசனையாகத்தான் கதை நடக்கும் காலத்தை எதையும் குறிப்பிட வில்லை. ஆனால், அவர்களின் உடை அலங்காரம் வாழ்வியல் முறையைப்பார்த்தால் எப்படியும் இருபது ஆண்டுகளுக்கு முன்தான் இருக்கும். அக்காலகட்டத்தில் கிராமத்தில் பிரசவம்பார்க்க ஆயிரம் கிழவிகள் இருந்திருப்பார்கள். இதையெல்லாம் படைப்பாளர்கள் ஏனோ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

இதற்கிடையில் கெட்டவர் வலையில் நாயகன் சிக்கிக்கொள்கிறான். நல்லவர் சிறைசென்று திரும்புகிறார். இப்போது கெட்டவரிடமா? நல்லவரிடமா யாரிடம் இருப்பது என்று நாயகனுக்குத் தவிப்பு ஏற்படுகிறது. காதலியைப்பார்த்ததும் புலம்புகிறான். நான் அதிக பாவம் செய்துவிட்டேன் என் பாவங்கள் மன்னிக்கப்படாது என்று கவலையில் முழ்கிறான். மனவளர்ச்சிக் குன்றிய பெண் அவனுக்கு மன்னிப்பைத்தருகிறாள். ஆனால்கெட்டவர் தனக்கு சாதகமானவனை தன்னிடம் இருந்து மகளே பிரிக்கிறாள் என்று மகளையே கடலில் தள்ளிவிடுகிறான். கெட்டவருக்கும், நல்லவருக்கும் நீண்டநேரம் ஏதோ ஒரு போராட்டம் நடக்கிறது. (என்ன போராட்டம் யாருக்குத்தெரியும்) நீதான் ஜெயிச்சே, இல்ல நீதான் ஜெயிச்சே என்று மாறி மாறி போட்டிப் போட்டபடி படம் நகர்கிறது.

கடலில் விழுந்த பொண்ணு எப்படியோ மருத்துவமனையில் இருக்கிறாள் காதலர்கள் ஒன்னு சேருகிறார்கள். சார், அர்ஜீன் இவ்வளவுகாலம் தன் உடல் பெலத்தை மூலதனமாகக் கொண்டு நார்மலாக ஓரளவு பார்க்கும்படி நடித்துவந்தார் சார். இதில உங்கப்பார்ட் ஒரு பாட்ஷா ரேஞ்ஜிக்கு வரும்னு சொல்லிட்டாங்களோ என்னவோ தெரிலசார். இவ்வளவுநாள் காப்பாத்தி வச்சிருந்த பேரஎல்லாம் இந்த ஒரு படத்துல கெடுத்துக்கினார்சார். படத்தில பெரியதாதா சார். மீன் கூடையில துப்பாக்கிலாம் வெச்சிக்கடத்துறார்சார். பலபேர கொண்ணுட்டார் சார். முக்கியமா கதாநாயகன் அப்பாவக்கூடசார். கடைசியில சொம்மா கண்துடைப்புக்குகூட யாரும் சாகவும் இல்ல. போலீஸ் யாரையும் கைதுசெய்யவும் இல்லைசார். ஜெயமோகன் சார் இத மட்டுந்தான் எதார்த்தத்தோடு சரியாகப் பொருத்தியிருக்கார்சார். என் மனசு இன்னொரு யோசனை சொல்லுதுசார் மடையா அப்பிடியில்லடா சாரோட எண்ணம் பாதிப்படத்திலயே நிறைவேறிவிட்டது. (ஏசுவின் மீது மாற்றுக்கருத்தைத் திணித்ததின் மூலம்) பிறகு யாரை எதற்காக சாகடிக்கவேண்டும். கெட்டவர் பெரிய கதாநாயகர் அவரைச் சாகடித்தால் நல்லாயிருக்காது. கிறிஸ்த்தவர்களின் கண்துடைப்புக்காக ஏசுவின் பிம்பமும் வாழவேண்டும். அதனால, யாருக்கும் தண்டனைவேணாம். போ, பிரியா சுத்தட்டும். மக்களே, நான் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் சொல்லவில்லை. படத்தில் இருக்கும் உண்மையைச் சொல்லுகிறேன். கொலை செய்கிற நபரை தண்டனையில்லாமல் தப்பவிடுகிற படைப் பாளர்கள். இருவரும் ஒத்து உடல் உறவுகொண்டதை மதப்பின்னணியில் மாபெறும் குற்றமாகத் திரிக்கிறார்களே? படைப்பாளர்களுக்கு அழகா?

முன்பெல்லாம் தரைஎன்ற அமைப்பில் திரையிடப்படும் உலக சினிமாவிற்குப்போவேன். அந்தக் கட்டத்தில் தீ செவன்த் சீல்‘ The Seventh Seal   என்ற  படம் போட்டார்கள். அப்படம் முழுக்க கடவுள் என்று நம்பப்படுகிறவர்க்கும் ஏறக்குறைய சாத்தான் என்று சித்தரிக்கப்படுகிறப் பாத்திரத்திற்கும் மனிதனின் எதார்த்த வாழ்வை சூதாட்ட அளவிற்கு ஒப்பிட்டு விவாதங்கள் போகும். ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டிப்படிக்கும் எனக்கே அதன் கதையை உள்வாங்கமுடிந்தது.  அனால், கடல் படத்தில் அப்படி நியாயமான விவாதங்களைக் கிளப்ப தவறிவிட்டது.

சரி கடல் படத்தின் மூலம் என்னதான் சொல்லுகிறார்கள் ஒரு வரிக்கதையாகச் சொல்வேண்டுமென்றால் எனக்குப்புரிந்தளவில் இந்தச் சமூகத்தில் ஏசுவும், சாத்தானும் வாழ்கிறார்கள். வாழ்விழந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், தற்காலச் சூழலில் அவர்களை மீட்டுக்கொள்கிற ஆதாவது மன்னிக்கிற பண்பு, அன்பு குழந்தைத் தனமானவர்களிடம்தான் இருக்கிறது. என்கிற வாதத்தைத்தான் வைகிறார். இக்கருத்து உண்மையானால் நானும் வரவேற்கிறேன்.  ஆனால், குழந்தைத் தனமானவள்  காதலியாக இருப்பதால் அவள் பேச்சை மதிக்கிறான். மற்றபடி எல்லா நபர்களுகுமான தீர்வாக எடுத்துக்கொள்ளமுடியுமா?

இவைகளைக்கடந்து மனம் மகிழ்ந்த இடங்கள்

இரவுநேரம். லேசான நீலநிற வெளிச்சத்தில்  கடற்கரையோரம் தொடங்கி அதன் பரந்து விரிந்த இடத்தைக் காட்டி நடு மையத்தில் சேடோவுடன் வெள்ளை எழுத்து மெதுவாகத்தோன்றி மறையும் பாருங்கள் அப்பா. அவ்வளவு அழகு. இறுதியில் கடலில் எடுத்தவிதம்மும் பாராட்டுக்குறியது. இடத்தின் அழகும், ஒளிப்பதிவும், பாடலுந்தான் கைக்கொடுத்துள்ளது.

துளசி பாவத்தை மன்னிகிற விதம் எல்லாருக்குமான தீர்வாக இல்லாமல் போனாலும், அவள் மிகச்சுலபமாய் செய்கிறாள்  அது சாத்தியமா என்று பார்க்க பார்வையாளர்களுக்கு கேலியாக இருக்கலாம். ஆனால், ஒரு மனிதனை மன்னிக்க இந்த மனம் மட்டுந்தான் வேண்டும். மிகச்சுலபமாக  சக மனிதனுக்கு கிடைக்கவேண்டிய ஒன்றுதான். இது இல்லாமல்தான் வாழ்வின் போராட்டம் கொடியதாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் எழுத்தாளர் நிற்கிறார்.

குறிப்பு:(நான் படம் பார்த்தது 03,02,13 மதியக்காட்சி. அதன் ஆபத்து மிக நுணுக்கமாக வைத்திருப்பதாலும். படம் முழுக்க முரண்பாடான கேள்விகள் கிடப்பதாலும், மதம்சார்ந்து சட்டென நிராகரிக்கும் விதமாக கருத்தை பதிவு செய்யக்கூடாது என்பதற்காகவே நிதானமாக  இப்படத்தை அனுகநேர்ந்தது)
ஜே .டேனியல்

No comments: