அன்பைப் பொழிகிறவள்
ஒரு சிறியப் பறவையின்
சிறகை மேல்நோக்கி வைத்ததுபோலவே
உன் கருவிழியின் ஓரங்களில்
முளைத்த பிஞ்சு மயிர்கள்
அத்தனை வசீகரத்தைப் பரிந்துரைக்கிறது
கனிந்து விழாததற்கு முன்பே
அறுக்கப்பட்ட ஆப்பிளின் நிறத்தை
உதடுகளில் தீட்டிக்கொண்டதால்
மித மின்சாரமாய் இழுக்கிறது
மரத்தின் அழகை ரசிக்கும்
கைதேர்ந்த ஆச்சாரி
சந்தன மரத்தைக் கையாள்வதுபோல்
செய்த, இடைசேர்ந்த கால்களில்
இறுக்கமாக அணிந்த ஆடையால்
ஆண்மையுடன் ஆழியில் முழ்கிறது.
இத்தனைக்கும் நீதான் சொந்தக்காரி
நன்றாக யோசித்துப்பார். என்றாவது
ஒரு ஆதரவற்ற, வருமானமற்ற
ஆடவனை ஏறிட்டு பார்த்ததுண்டா?
உன் புத்தியை மழுங்கடித்தது யார்?
உயர்ந்த நிறுவனங்களில்
பணி என்று தலைகுனிந்தாய்
படுக்கையறை உனக்கு எப்போதும்
வெறுப்பாக இருப்பதைக் காலங்கடந்து
யோசிக்கின்றாய்.
காதலாக இருக்கும்
எல்லா நாட்களும் நீ காயங்களை
தரிசிப்பதேயில்லை.
உடல் தரிசிப்பின்
கணம் தொடர்ந்து
சிறு பிள்ளையின் அழுகைபோல்
காயங்கள் தொடர்வதை
மருத்துவனின்
நோய் கண்டுபிடிப்பைப்போல்
தைரியமாக வெளியிடலாம்.
இக்கொடுமைகளை
ஆனந்தக் கண்ணீரை
வெளியிடுவதுபோல்
ஆத்மார்த்தமாய்ச் சகித்துக்கொள்ள
யார் உன்னைப் பயிற்றுவைத்தது?
ஒரு மரத்தடி நிழலில்,
வாழ்வைக் கடத்த முடியும் என்பதை,
உண்மை இல்லை என மறுதலிக்கிறாயா?
அன்பைப் பொழிகிறவள்
அன்பை விற்றுக்கொண்டே
ஆள முற்படுவதால்
எதை, யாருக்கு விட்டுச்செல்வாய்?
தனியறை காலியாகவேக் கிடக்கிறது
யோசிக்கத்தான் யாருமே இல்லை.
ஜேடி

No comments:
Post a Comment