Wednesday, September 10, 2014

கட்டுரை,

விமர்சனங்களில் புதிய கண்டுபிடிப்புகள் இல்லை.

தற்கால கதையாடல்கள் ஆக்கத்திலும், விமர்சனபார்வையிலும் புதிதாக ஏதாவது கோட்பாடுகளை நிறுவிச்செல்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான்.

ஒரு கதையை வாசித்தபிறகு, எனக்கு இப்படித் தோன்றியது, இன்னொருவருக்கு அப்படி புரிகிறது, வேறொருவருக்கு வேறுமாதிரி புரிகிறது. சுருக்கமாகச்சொன்னால் பத்துபேர் படிக்கிறார்கள் என்றால் பத்துவிதமாக புரிந்துகொள்ளலாம் என்பது இயல்புதான். அது எனக்கும் ஏற்புடையதுதான்.

ஆனால், ஒரு விஷயம்.  கதை (சிறுகதை அளவில் எடுத்துக்கொண்டால்கூட) எழுதிய படைப்பாளன், பெரும்பாலும் ஏதோ ஒரு கருத்தை வைத்துக்கொண்டுதான் எழுதுகிறான். ஒரு கரு துளிர்த்ததால்தான் இந்தக் கதை உருவானது என்று பல படைப்பாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். சிறுகதையில் குறிப்பாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, நூல்  பிடித்தார்போல கொண்டுசெல்லவேண்டும் என்பதும் இருக்கிறது. 

அப்படி இருக்க வாசிப்பாளனுக்குதான் பல புரிதல் இருக்கிறதே ஒழிய கதையாளன் வைத்தது ஒன்றுதான். படைப்பாளன் தன் படைப்பில் ஒரு கருத்தை வைத்திருக்கிறார் என்கிறபோது, விமர்சகர்கள் பல விதங்களில் கருத்துக்களை படைப்பை தூக்கிப்பிடிக்கும்படி சொன்னால் விட்டுவிடுகிறான். ஏனென்றால், வாசிப்பாளன் புரிதலை முடக்கக்கூடாது, கதையை வாழ்த்திதானே பேசகிறான் என்கிற அளவில் விட்டுவிட வாய்ப்பிருக்கிறது. நேர்மையான படைப்பாளனாக இருந்தாலும் பெரும்பாலும் அதுதான் நடந்துவிடுகிறது. இப்படி சொல்வது சரியில்லை என்று சொல்லிவிடமுடியாது. ஒருவேளை அப்படிச்சொன்னால், இன்னொரு கேள்வி வரும். சரி படைப்பைக்குறித்து புகழ்ச்சியாக வரும் புரிதல்களை மட்டுமே ஏன் தாராளமயம் கொண்டு ஏற்கிறான். வாசிப்பாளனின் புரிதலாக, அதே எழுத்தை இகழ்ச்சியாக சொல்லும்போது வெறுப்படைகிறான் (தேர்ந்த படைப்பாளியாக இருந்தாலும்) என்பதற்கு பதில் இல்லை. காழ்ப்புணர்ச்சி, தாங்கும் சக்த்தி, பொறாமை இவைகளுக்குள் எல்லாம் போகவேண்டாம். பொறுப்புணர்வோடு வாதிடும் நோக்கோடு பார்த்தல் முக்கியம்.

ஆக பலவிதமான புரிதல் என்பதற்கு உள்நோக்கம் இல்லை என்றாலும், அதை வாதிடும் பொருளாக சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதுதான் என் எண்ணம். இன்னொரு விஷயமும் இங்கு தோன்றுகிறது. ஒரு படைப்பை பலவிதமான புரிதல்களில் புரிந்துகொள்ளலாம் என்பது சரியாக இருந்தால், படைப்பைக்குறித்து வரும் பல விதமான விமர்சனங்களை, ஏன், எந்த ஒரு தேர்ந்த பத்திரிக்கையும்  சேர்ந்தால்போல் வெளியிடுவதில்லை. தேர்ந்த பத்திரிகைகள் ஓரளவு படைப்பைப் பிரிதிபளிக்கிற விமர்சனங்களை மட்டுமே ஏன் வெளியிடுகிறது.

என்னைப் பொறுத்தளவில் பலவிதமான புரிதல் என்பது முன்னோர்களின் கண்டுபிடிப்பு. அதைத் தவறு என்று சொல்லவில்லை. தற்போது வரும் படைப்பாளிகள் அதற்குமேல் எதுவும் இல்லை என்பதுபோல் அதையே திரும்பத் திரும்ப சொல்வது ‘மாமியார் முதுகுடைய செய்துவைத்த சாப்பாட்டை, மருமகன்  தலைவாழையில் விருந்து சாப்பிடுவதுபோல்‘ அதன்பிறகு பெரும்பாலாக அவ்உறவுக்குள் வெறுமையின் வெற்றிடம்தான் (மருமகன் சாப்பாடுனு சொன்னதும், ஒரு மலையாள படத்தில் ஒருத்தன் வரும்போதெல்லாம் சாப்பாடு மட்டுமே சாப்பிடுவானே அதுதான் நாபகம் வருது. படத்தின் பெயர்  நாபகம் இல்லை.) என்று கருதுகிறேன். 

கதையாடல்களில் ஆதர்ச விருப்பமாக, மிக நெருங்கி வாசிப்பவன் படைப்பாளனின் மனதிலிருந்து எழுத்தாக விழுந்ததை, அதே புரிதல்களுடன் மீட்டெடுப்பான். அப்படி மீட்டெடுக்க முடியவில்லை என்றால் அவனிடம் போதாமை இருக்கிறது. அல்லது அவன் அப்படைப்பை ஆழ்ந்து அணுகவில்லை என்றுதான் அர்த்தம். 

யாரோ ஒருவர் எழுதியப் படைப்பின் புரிதலை மிகச்சரியாக சொல்ல வேண்டும் என்பது இரண்டாம் பட்சமாகக்கூட இருக்கலாம். ஆனால் ஒரு கருத்தில் நிற்பது என்பதுதான் சரியாக இருக்கும். அது உண்மை என்பதால்தான், ‘உன் படைப்பை எழுத்தாக வை நீ யாரென்று சொல்லுகிறேன்‘ என்கிற சொல்லாடல் இலக்கியத்தில் அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. பிறகு ஏன் பல வித்ததில் புரிந்துகொள்ளலாம் என்பதும் பெரும்பாலன நடைமுறைப் பேச்சாக இருக்கிறது என்று யோசிக்கும்போது விமர்சகன் தங்களைத் தப்பவைத்துக்கொள்ள சொல்லும் வாசகமாகத்தான் என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. 

இந்த வாசகத்தால்தான் இலக்கியத்தை ஆழ்ந்து படிப்பதில் இருந்து கீழ் தள்ளியிருக்கிறார்கள், அல்லது கதைகள் வாசிப்பு என்பது ஒரு பொழுதுபோக்கு என்கிற அளவிற்கு வந்துவிட்டது என்பது என் நிலைபாடு.

ஆக படைப்பாளர் மற்றும் இலக்கிய ஆர்வல அறிஞர்கள் படைப்பைக்குறித்தும், விமர்சனங்களைக் குறித்தும்  புதிய கோட்பாட்டுக் கண்டுபிடிப்புகள் செய்தால்தான் இலக்கியத்தை வரும்காலத்தில் சிறுபான்மை (சாதி, மத அடிப்படையில் இல்லை. இலக்கியதில் ஊடாடும் மக்கள்) மக்களிடமாவது அழிந்துவிடாமல் தக்கவைக்கமுடியும்.

டேனியல்


Monday, August 11, 2014

விமர்சனம்

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்            1
அ. வெண்ணிலா

குறிப்பு- நான் படைப்புக்குள் இருந்து மட்டுமே, என் சிறற்றிவிற்கு எட்டிய விதத்தில், என் கருத்தை வைக்கிறேன். இதில் எந்த விதத்தில் உண்மையிருக்கிறது என்று அத்தொகுப்பை வாசித்தவர்கள் சாய்வுகோளை இறக்கிவைத்து  வாதிடலாம். என் புரிதல் என்பது எனக்கு. மற்றவர்கள் நிறுவல் அவரவர் சார்ந்தது. நான் தொகுப்பின் முதல் ஐந்து கதைகளை மட்டும் எடுத்துக்கொண்டுள்ளேன். முடிந்தால் இரண்டு மூன்று பகுதிகளாகப் பதிவிடுவேன்.

கதைகளின் யதார்த்தத்தை நடைமுறை சூழல்களுடன் தன்னுடைய கற்பனைத்திறனை குழைத்து கதையாக்கியிருக்கின்றார். ஆரம்பம் முதல் மிக மென்மையாகப் பயணிக்கும் கதைகள் ஒரு கட்டத்திற்குமேல் வேறொரு முகத்தைக் காட்டிவிடுவதற்கான உத்தியை மிக கைதேர்ந்த முறையில் கையாளுகின்றார்.. வழக்குச் சொற்களைக்கலந்த மொழி என்பது மிக நாகரீகமாக பேச்சு தொனி மாறாமல் கதைகளில் கையாளப்பட்டிருக்கிறது. பல இடங்களில் கதைப்போக்கில்  அநாயசமாக நகைச்சுவையை நுழைத்து கதையின் பாத்திரத்துடன் ஒன்றிப்போகச் செய்ய ஆசிரியரால் முடிகிறது. (பெரியப்பா நடக்கும்போது முன்னாடிப் பக்கம் தூக்கிக்கிட்டு இருக்கும்.) கவித்துவமான வரிகளை கதைகளின் திருப்புமுனைக்கு பயன்படுத்திவிடுகிறார். இவைகள் எல்லாம், படைப்பாளருக்கு  மிக நேர்த்தியாகக் கைகூடி வருகின்ற செயல்களாக நான் பார்க்கின்றேன். கைகூடி வருகின்ற காரியங்கள் யார் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் அழிந்துவிடப் போவதில்லை.  ஆக அதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கப்போவதில்லை.

கதைகளில் தவறவிட்ட விஷயங்களையே நான் பிரதானமாக எடுத்துக்கொள்கிறேன். இந்த புரிதல் என் மூளைக்குறைவினாலும் இருக்கலாம். ஆனால் எனக்கு உண்மை என்று படுகிறதை மட்டுமேக் குறிப்பிடுகின்றேன். சரி தவறவிட்ட பகுதிகளுக்கு வருவோம்.

ஆசிரியர் ஒரு பாத்திரத்தைப் படைக்கும்போது அப்பாத்திரங்களுக்கு ‘அவள்‘, ‘அவன்‘, அல்லது ‘அவர்‘ விகுதியைக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். கதையாசிரியரின் தாயாக இருந்தாலும் சரி தந்தையாக இருந்தாலும்  மிக நெறுக்கமான உறவுமுறைகளாக இருந்தாலும் சரி. கதை பாத்திரமாக எடுத்துக்கொண்ட பிறகு, அது ஒரு கதாபாத்திரம் அவ்வளவுதான். ஆசிரியர் அவர்களிடத்தில் எந்தக்கரிசனையும் காட்டக்கூடாது. அப்போதுதான் அப்பாத்திரத்தின் உண்மையான வடிவம் பிரிதிபளிக்கும். வாசகனுக்கும் கதைப்போக்கில் தடைகளற்று சீராக செல்லமுடியும். இத்தொகுப்பில் ஆசிரியர் பல கதைகளில் அம்மாவையும், அக்காவையும் நெறுங்தகிய உறவு முறைகளையும் பயன்படுத்தும்போது அக்றினை விகுதியை பயன்படுத்துவார். (ஆசிரியர் அப்பாத்திரத்தின் மீது வைத்துள்ள பாசத்தால் அப்படி குறிப்பிடுகிறார் என்பது எனக்குத்தெரியும்.). கதைப்போக்கில் அக்றினைகள் சார்ந்து வரிகளும், வர வாய்ப்பிருக்கிறது. அச்சமயம் பாத்திரமும், அக்றினை வரிகளும் சேர்ந்து வாசகனுக்கு குழப்பத்தை ஏற்படுத்திவிட வாய்ப்பிருக்கிறது.

மேலும் ஆசிரியருக்கும், பாத்திரத்திற்கும் தொடர்பற்றதுபோன்ற தோற்றம் கதைப்போக்கில் இருக்கவேண்டும். உதாரணமாக “பூனைக்கு அகப்படும் கிளிகள்’’  கதையில் “அம்மா ஓடியாந்து தட்டி எழுப்பிவிடும்” இந்த வாசகம் அம்மாவாக வரும் பாத்திரத்திற்கு ஆரிசியர் கொடுக்கும் வார்த்தைகளாகும். இங்கே வாசகனாகிய எனக்கு அவுங்க அம்மா போலிருக்கு அதான் அவ்வளவு உரிமையாக, செல்லமாகக் குறிப்பிடுகிறார்கள் என்கிற புரிதல் வெளிப்படையாகத்தெரிகிறது. அப்படிக் குறிப்பிடுவதால் ஒரு வேளை வாசகனுக்கு அப்பாத்திரத்திற்கான தன்மையின் உண்மை நிலையை குறிப்பிடத்தயக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. (திட்டவும், புகழ்வதற்கும்)  

மேலும் அதே பாராவில் “காலையிலேயே மானம் நல்லா காயுதடி, கஞ்சிப்போட்டவுடனே பாவு புடிச்சிக்கும்“ இது ஒரு செயலைக்குறிக்கும் வாசகம் இப்படி பாத்திரத்திற்கும், செயலுக்கும் ஒத்தவிதமாக வார்த்தை முடிவுகள் வரும்போது குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பொதுவாக கதைகளின் கருபொருட்கள் மனதை நெறித்து, தெறித்து வந்து விழவேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி நோக்கும்போது அககருத்தை ஒத்து வருவத்ற்கான சாத்தியம் குறைவாகவேத் தென்படுகிறது.. ஆசிரியர் அதிகமாக கற்பனைத்திறத்தை நம்பிப் பின்னப்பட்டதாகத்தான் என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஏனென்றால் நான் வாசித்தக் கதைகள் ஐந்தும் ஒரே பார்முலாவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது கதையின் ஆரம்பமுதலே ஒரு செடியின் காலைத்துளிர்ப்பு போல மிகத்தூய்மையாக நேர்த்தியாக்க கொண்டு சென்று குழிக்குள் தள்ளிவிடுகின்ற விபரீதம் நடந்துவிடுகிறது.

உதாரணமாக “பூனைக்கு அகப்படும் கிளிகள்’’  கதையை சற்று விவாதிக்கலாம். //“அத்தையும், மாமாவும் எவ்ளோ கூச்சல் போட்டு நாங்க விளையாடினாலும், சண்டைப்போட்டாலும்… எங்க பொறுப்புதானேன்னு ரெண்டுபேரும் பார்த்துக்கிட்டே இருப்பாங்க.“//

//குட்டிப்சங்களா, இப்படி மூஞ்சியத் தூக்கி வச்சிக்கிட்டா அடுத்த வர்ஷம் மாமாங்க இங்க அனுப்ப மாட்டேன்னு சொல்லுவாங்க. ஒங்க வூட்டுக்குத்தானே போப் போறீங்க. போயிட்டு நல்லா படிச்சுட்டு அடுத்த கிளாசுப் பரிட்ச எழுதிட்டு, சிரிச்சுக்கிட்டு அடுத்த கலக்கா லீவுக்கு இங்க வரணும்.//

இந்த வாசகத்ததை ஒத்த வரிகள்தான் ஆரம்பத்தில் இருந்து மாமா பாத்திரத்தின் பண்பு என்கிற நிலையில் வருகிறது. எந்த இடத்திலுமே சூசகமான வார்த்தைகள் பிள்ளைகளிடம் மாமா உபயோகிப்பது இல்லை. ஆனால், கதையின் கடைசி கட்டத்தில்
//“கண்ணத்தொறக்க முடியாம வெயிட்டா இருந்துச்சு. கண்ணத்தொறந்து மூடலாமான்னு கண்ணத் தொடைக்க கைய தூக்கப்பார்த்தேன். கைய அசைக்க முடியல. பெருட்டத்தத் துக்கி வச்ச மாதிரி இருந்துச்சு. கால அசச்சுப் பார்த்தேன், கால் மேல கனமா என்னமோ இருந்துச்சு.//

//“யாரோ கிட்டப் படுத்துக்கினு கீறாங்க. அப்ப கையையும் காலையும்? வயிறு குபீர்னு இருந்திச்சு….. திடீர்னு நெஞ்சு பூரா வலி. நெஞ்சக் கவ்வி எடுத்துச்சு“ இவைகள் எல்லாம் ஒரு எட்டு வயசு பெண்ணுக்கான யதார்த்தமான வாசகங்களாக வாசகனுக்கு உணர்த்தவில்லை. ஆசிரியர் பிருந்தாவின் எட்டுவயசு பருவத்திற்கு மாறுவதற்கு சிறமம் எடுக்கவில்லை.

ஒரு பெண்ணுக்கு அறிமுகமில்லாதவன் காமத்தை வெறியுடன் அணுகுதல் என்பதற்கும், நன்கு அறிமுகத்துடனான பெண்களிடம் ஆண் சந்தர்ப்ப சூழ்நிலையால் காமத்தை அடைதலுக்கும் நிச்சயம் வேறுபாடுகள் இருக்கும் என்றே நினைக்கிறேன். குறைந்த பட்சம்  மூர்க்கமாகக் கீறுவதற்கும், ஒரு விசாரிப்பின் தழுவலுக்குமான வித்தியாசமாவது இருக்கும். மாமா பாலியல் வன்மத்தில் ஈடுபடும் காட்சிகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. முதல் பாராவில் மாமா ஈவு இறக்கமில்லாமல் தடால்னு எறி குழந்தை மீது படுத்துவிட்டது போன்றும், அதே தொடர் நிகழ்வாக வரும் வாசகங்களின் இரண்டாவது பாராவில் பக்கத்தில் படுத்து தடவுவதுபோலவும் சொல்வது வாசகனுக்க நம்பகத்தன்மையை ஏற்படுத்தவில்லை. மாமா பாத்திரம் இரவில் அக்குழந்தையின் மீது பாலியல் தொந்தரவு செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், நிச்சயமாக ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் அவ்வளவு மூர்க்கத்தனமாக அனுகியிருக்க மாட்டார் அல்லது ஆண் பாத்திரம் நடந்து கொண்டதற்கு மிகையா ஆசிரியர் குறிப்பிடுகின்றார் என்பதை அக்கதையின் ஆரம்பத்தில் இருந்து மாமாவின் பாத்திரத்தை நோக்கும்போது அறியமுடிகிறது.

மேலும் அந்தப் பெண்ணை (பெண்களை) பச்சைக்கிளிக்கும் மாமாவை பூனைக்குமாக ஒப்பிடுகின்றார் (ஆண்களை) பாலியல் தொந்தரவுகள் எல்லாம் முடிந்துவிட்டு  அத்தை எழுதும் கடித்ததில் பச்சைக்கிளி கிணற்றடியில் செத்துக்கிடப்பதாகக் குறிப்பிடுகின்றார். இந்த இடத்தில் மாமாவின் வக்கிரத்தை உணர்த்துவதாக எடுத்துக்கொண்டால் அது மிகமிகத்தவறு எனென்றால் பூனை என்பது கிளியையோ அல்லது எலியையோ சாப்பிடுவது என்பது எதார்த்தம்.

அதன் வயிற்றுப்பசிக்காக அதைச்சாப்பிட்டே ஆகவேண்டும். அப்படியிருக்க ஒரு பெண்ணை, ஆணால் பாலியல் செய்தல் என்பது எதார்த்தமாக நடப்பது என்பதை ஏற்றுக்கொண்டு குறிப்பிடுகின்றாரா? அல்லது அப்படித்தான் ஒப்புக்கொள்ளமுடியுமா? மேலும் பாலியல் நிகழ்வை பச்சைக்கிளிக்கு ஒப்பிடுவதால் வாசகனுக்கு ஒரு பெரிய அதிர்வை எற்படுத்தவில்லை.

அக்காவின் காதலன்…… தொடரும்

டேனியல்


Thursday, July 3, 2014

விமர்சனம்,

  கோடையில் ஒரு மழை                     தமிழில் ச. ஆறுமுகம்

“அவள் அணிந்திருந்த ரவிக்கை, பாவாடை எப்படி இருந்ததோ அப்படியே அதோடு அவளைப் புதைக்க வேண்டுமெனச் சொல்லியிருந்தாளாம்“

சிறுமி, இந்த வரிகளை உதிர்ப்பதற்கு முன்னால் விரிகின்ற கதை உலகம் மிக மென்மையான வெண் பனியைவிடத் தூய்மையானது. எத்தனையோ வகை காதல் கதைகளை நாம் தரிசித்திருப்போம், ஆனால் காதலின் லாபநோக்கமான காமத்தின் துளிர்கூட இல்லாமல், காதலின் பூரணத் தன்மையை பிழிந்து அன்பின் வழியாக வெளியேற்றுகின்ற கதையை நிச்சயம் இதில்தான் என்னால் பார்க்க முடிகிறது.

புதிதாக தன் கிராமத்திற்கு வரும் சிறுமி இயற்கையின்  தன்மைகளை ரசிக்கின்றாள். அதை மறைவாக நின்று கண்காணிக்கும் சிறுவன். நாளடைவில் ஒன்றாக விளையாடும் வாய்ப்புக் கூடுகின்றது. இந்த நட்பை மெல்ல மெல்ல அற்புதமான காதல் தன்மைக்கு இழுத்துச் செல்வதுதான் கதையின் உச்சம்.

ஒரு மழைநாளில் நீண்ட தூரம் நடந்து, மழையிலும் நனைந்து களைத்துப்போன சிறுமியை, சிறுவன் தன் செம்மண் ஒட்டிய முதுகில் சுமந்து வருவான். அதன் பிறகு சிறுமிக்கு உடல் சுகவீனம் அடைந்து நீண்ட நாள் விளையாட்டுப்பகுதிக்கும், பள்ளிக்கும் வரமாட்டாள். இந்த நிலையில் சிறுமியின் குடும்பம் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பவேண்டி வருகிறது. நாம் இந்த ஊரைவிட்டு போகப்போகிறோம் என்பதை அறிந்த சிறுமி கடைசியாக தன் நட்புச்சிறுவனை பார்க்க முடிவுசெய்து. உடல் முடியாத நிலையிலும் அவனைத்தேடி வருகிறாள்.

பழகிய நாட்களின் நினைவிற்காக எந்த அடையாளமும் தங்களிடம் இல்லாதவர்களாய் முகம் பார்த்து நிற்கிறார்கள். பிரிய நேருகின்ற சோகத்தை எண்ணி தவிக்கின்ற மனங்களில் இருந்து “இங்கே பார், நான் கண்டுபிடித்துவிட்டேன், அன்றைக்கு நாம் அந்தக் கால்வாயைக் கடக்கும்போது நீ என்னை முதுகில் ஏற்றிக்கொண்டேயே, இந்தக் கறை உன் முதுகிலிருந்துதான் பட்டிருக்கவேண்டும்“ என அச்சிறுமி தன் ரவிக்கையின் முன் பகுதியில் பட்ட கறை போகவே மாட்டேன் என்கிறது. அதுதான் நம் நட்பிற்கான அடையாளம் என்று சொல்கிறாள். இந்த இடத்தைவிட்டு என்னால் வெகு சாதாரணமாக வெளியேறவே முடியவில்லை.

குடும்பம் கிளம்பும் முன்பே வாழ்வின் துரதிர்ஷ்டம் சிறுமி மரித்துப்போகிறாள். மரித்தது சிறுவனுக்குத் தெரியாமல் கடைசியாக பார்த்துவிடவேண்டும் என அவர்கள் வீடுநோக்கி பயணப்படும்போது.  “அவள் அணிந்திருந்த ரவிக்கை, பாவாடை எப்படி இருந்ததோ அப்படியே அதோடு அவளைப் புதைக்க வேண்டுமெனச் சொல்லியிருந்தாளாம்“ சிலர் பேசிக்கொள்வதைக் கேட்கிறான்.

நட்பின் உன்னதம் அவளுடன் மட்டுமே உடன்கட்டை ஏறிவிட்டது என்று சிறுனின் வெறித்த பார்வையை புறந்தள்ளி விடமுடியுமா? மேன்மையான அன்பின் தரிசனங்களை அவர்கள் வழியாக வாசகன் உள்வாங்கிவிடச் செய்வது, கதையாளரின் சாதுர்யம்தான்.

               இரும்புக் குழந்தை
இக்கதைப்பற்றி கடைசியாகத் தந்துள்ள குறிப்பில் மூலஆசிரியர், இக்கதையை நீதிக்கதையில் சேர்த்துள்ளார் என்பதை அறியமுடிகிறது.
சர்வ சக்தியையும் தன்னகத்தில் வைத்துக்கொள்ளும் அரசாங்கம், தான் கட்டமைக்கும் பணிகளுக்கு ஏழை, எளிய மக்களைத்தான் தன் இஷ்டம்போல வைத்து பயன்படுத்துகிறது. இக்கதையில் பனிரெண்டு மைல் தூர ரயில்பாதை அமைக்கும் பணிக்கு, இரண்டு லட்சம்பேரை வலுக்கட்டாயமாக பயன்படுத்துகிறது என்பதை அறியும்போது,  மக்களை ஆளுகின்ற அரசாங்கம் எந்தக்காலத்திலும் சாமான்ய மக்களின் நலனை போற்றிப் பாதுகாப்பது அல்ல மாறாக அந்த சாமான்ய மக்களை வைத்து நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளக் கட்டமைப்புகளை எப்படி உருவாக்கிக்கொள்வது என்றளவில்தான் கவனம் செலுத்துகிறது.

“மண் வெட்டி அல்லது ஏதாவது ஒரு மண் கிளறும் கருவியைத் தூக்கிப் பயன்படுத்த முடிகின்ற யாராக இருந்தாலும். தொழிலாளர் அணியில் கட்டாயமாக சேர்க்கப்பட்டனர்.“

இந்நிலமை எல்லா அதிகார மையங்களுக்கும் பொதுவிதியாக இருக்கும்போல. சாமான்ய மக்களுக்கு உணவு, உடை, ஓய்வு, எதையுமே முழுமையாகத்தராமல் அடிமைகளைப்போல் வைத்துதான் தற்காலத்தில் நாம் பார்க்கும் பிரமாண்ட சாலைகள், பாலங்கள் ரயில்பாதைகள், அரசு கட்டடங்கள் கோபுரங்கள், கோட்டைக்கொத்தளங்களை உருவாக்கி இருப்பார்கள் என்ற பழைய வரலாற்றைக் கிளறிவிடுகிறது. இக்கதையில் ரயில்பாதைப் பணியில் ஒரு செல்வந்தன்கூட ஈடுபட்டான் என்ற குறிப்பு இல்லவேயில்லை. சமூகத்தில் எப்போதும் அப்படித்தானே?

இரும்புப் பாதை அமைக்கும் பணியால்தான் தம் தாய்த் தந்தைகள் நம்மை விட்டு பிரிந்தார்கள் என்ற வெறுப்பு குழந்தைகளிடம் எழ வாய்ப்பிருக்கிறது. அதை பிரிதிபலிக்கும் விதத்தில் ஒரு இரும்பு புனைவுக் குழந்தையை உருவாக்கி இரும்புகளையே தின்றுவிடும் பயிற்சியைக்கொடுக்கிறார் கதையாசிரியர். புனைவு என்பது இடையில் திணிக்கப்பட்டது என்று சொல்லவேமுடியாது. அவ்வளவு இயல்பாக இரும்பை ஒரு ரொட்டித்துண்டை சுவைப்பதுபோல் கட்டமைத்திருப்பது அருமை. இரும்பைத் திண்ணுவது என்பது அரசை, அதிகாரத்தை எதிர்க்கப் பழக்கப்படுத்துதல் என்ற குறியீடாக நான் பார்க்கிறேன்.

இரும்பையேத் திண்ணுகின்ற திறமை வாய்ந்த ஒரு போராட்டக் குழந்தையை அரசாங்கம் கயிறுகூண்டால் முடிவுக்கு கொண்டுவருகிறது. ஒரு சாமான்யன் போராட்டம் என்பது, எந்த ரூபத்தில் வந்தாலும், அதிகார சக்திகள் அவைகளை ஈவு இரக்கம் இல்லாமல் முறியடித்துவிடும் என்ற உண்மையை காட்டிச்செல்கிறது கதை.

நகரத்தில் ஹான்வெல்
கடிதப்போக்கில் இருந்தாலும் சரளமான உரையாடலில் ஒன்றமுடியவில்லை. இதற்கு அடுத்துவரும் இரு கதைகளும் அதனதன் அளவில் தனித்தும் கொண்டதாக இருக்கிறது. எனக்கு அவ்வளவாக ஈர்ப்பு இல்லை.

இங்கிலாந்தும் என் குல மக்களும்.

“என் குடும்பத்திற்கும் ஒரு வெகுதூர தேசத்திற்கும் இடையிலான பகையையும், இணக்கத்தையும் தெரிவிக்கிற ஒரு கதை“

இவ்வரிகளோடு முடிகின்ற இக்கதை வணிகம் என்ற பெயரில் ஒரு நாடு இன்னொரு நாட்டின் வளங்களைச் சூறையாடும் நோக்கத்தையும், விழுந்துபோன வரலாற்றையும் பதிவுசெய்கிறது. இது ஒரு குடும்பத்தின் வழிவழியான கொந்தளிப்பு மட்டுமல்ல என்பதை ஊகிக்கமுடிகிறது.

சீனத்தில் வளம்கொழிக்கும் சுரங்கங்களை வைத்திருந்த ஒரு குடும்பத்தின் மூதாதையர்கள் இங்கிலாந்து அறிமுகப்படுத்திய அபின் மாயையால் படிப்படியாக செல்வங்களை இழந்து தற்கொலைக்கும், ஏழையின் வரிசைக்கும் வந்துவிடுகிறது. இந்நிலையை எண்ணி, அபின் அறிமுகப்படுத்திய நாட்டின் மீது பகை ஏற்படுகிறது. முப்பாட்டன், பாட்டன் என பல தலைமுறைகளாக பகை குலையாது தொடர்கிறது. அப்படி நிகழ சாத்தியம் இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கிறது. ஏனென்றால், மூதாதையர் காலத்திலிருந்து மாபெரும் வளங்களைத் தன்னகத்தே வைத்திருந்த மலைகள் தங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கிறது. அதைப்பார்க்கும் போதெல்லாம் தங்கள் முன்னோர்கள் செழித்திருந்த படிமத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் என்பது உண்மைதான். தாத்தாவின் இறுதி மூச்சுவரை உயிர்த்திருக்கிறது பகை.

பேரன், தாத்தாவிடம் நான் இங்கிலாந்துக்கு போகிறேன் என்றதும், தாத்தாவிற்குள் இருக்கும் மம்மி உற்சாகம் அடைவதை அவர்கண்களில் பார்க்கமுடிகிறது. ஒரு குடும்ப கௌரவத்தை ஒப்படைப்பதுபோல் முழு பகையையும் பேரனிடம் ஒப்படைக்கின்றார். தன் வழிவழியானக் கடமையை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டோம் என்று நிம்மதியாக கண்மூடுகின்றார்.  பல நேரம், தங்கள் மூதாதையர் தக்கவைத்துக் கொண்டிருந்த போராட்ட குணம், அடுத்த தலைமுறைக்கு கடக்காமல் முடிவடைந்து விடுவதும் உண்டு.  அத்தன்மையில் ஒரு குடும்பத்தில் இருந்து உருவான ஒரு நாட்டின் மீதானப் பகை, தாத்தாவின் காலத்தோடு முடிந்துவிட்டது.

குடும்பக்கொள்கையான ‘இங்கிலாந்தின் யாரையாவது துருபிடித்தக் கத்தியால் இருதயத்தில் குத்தவேண்டும்‘ என்ற குரல் தாத்தாவின் பேரனுக்கு தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருக்கின்றது. பேரன் இங்கிலாந்தின் நகரங்களில் சுற்றிவிட்டு வெறுமனே வருகின்றான்.  முதாதையர் இருப்பிடம் வந்தபேரன் தாத்தாவின் குரலையும், வளங்களைக் கொள்ளை கொடுத்த மலைகளையும் ஒரு சேரப்பார்க்கிறான். இங்கிலாந்தும் என் குல மக்களும் என்ற வரலாற்றுக் கதையை வைக்கிறான். ஒரு நாட்டின் வளத்தில் கண்ணம் வைத்த அத்தனை இருதயங்களையும் குத்தி தாத்தாவின் வாக்கை நிறைவேற்றுகின்றார்.

மலையில் வந்தது கரடி
ஆலீஸ் மன்றோவின் அதி அற்புதமான கதை. சமூகத்தில் கணவன் மனைவி என்ற மாபெரும் பிம்பத்தை, ஒன்றோடு ஒன்று கட்டுக்கோப்புடன் பிணைக்கப்பட்ட வாழ்முறையை ஒன்றுமில்லாமல் உடைத்து. அதுவும் சமூகம் எதிர்பார்க்கும் ஒழுங்கு முறைக்குள்ளாகவே நகர்த்திச்சென்று எப்படியெல்லாம் ஒழுங்கை மீறவேண்டுமோ அத்தனையையும் மீறி, பாதரசம் கூடுவதுபோல் மீண்டும் ஒழுங்கில் வந்துகூடும் கதைநேர்த்தியில் வெற்றிகண்டிருக்கிறார்.

கிராண்ட் ஃபியோனா கணவன் மனைவி. ஆப்ரே மரியான் என்று இன்னொரு தம்பதிகள். ஃபியோனா செயல் மிக நேர்த்தியானதும், அதேசமயம் நிரந்தரம் இல்லாததுமாகும். பல விஷயங்கள் துல்லியமாக பேசுவாள். திடீரென்று கணவனை மறந்துவிடுவாள். நகர்புறத்தின் கடைக்கு போகும்போது வேறு எங்காவது சென்றுவிடுவாள். மனதிறம் இல்லாதவள். கிராண்ட், மருத்துவரின் ஆலோனைப்படி காப்பகத்தில் சேர்க்கிறார். அங்கே மரியானின் கணவன் ஆப்ரே வைரஸ் நோயால் கை கால் விளங்காமல் கோமாவில் இருந்து சற்றுதேறிவருகின்ற நோயாளியாய் இருக்கிறான். நாளடைவில்  ஆப்ரேயிக்கும், ஃபியோனாவுக்கும் மன நெருக்கம் ஏற்படுகிறது.

கிராண்ட், ஃபியோனாவை பார்க்க வரும்போது, தன் கணவனை எங்கோ அறிமுகமான நபராகத்தான் பார்க்கின்றாள், பாவிக்கின்றாள். கிராண்ட் கண்முன்னே ஃபியோனா, ஆப்ரேயிடம் தனக்கு பிடித்தமான காதலர்கள் போல் தங்களைத் தாங்களே மாறி மாறித் தேற்றிக்கொள்கிறார்கள், தழுவிக்கொள்கிறார்கள். 
சமூகத்தில் மதிக்கக்கூடிய கணவனாக இருக்கின்ற கிராண்ட் தன் முன்னாலேயே மனைவி  இன்னொருவனுடன் காதல் வயப்டுகின்றாள் சேட்டைகள் புரிகிறாள் என்கிறத் தவிப்பும், புழுக்கத்தையும் ஆசிரியர் அற்புதமாக பதிவுசெய்திருப்பார்.

மனைவி (ஃபியோனா) தன் கணவனிடம் ஆப்ரேயின் மகத்துவத்தையும், இயலாமையையும் தன் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் சொல்லும்போது  உடைபடுகிறது சமூக ஒழுங்குகள். அங்கே நடக்கின்ற மிக எதார்த்தமான உரையாடல்கள், உணர்வுப் பூர்மான தழுவல்கள் எல்லாமே மிக மிக உச்சம் தொட்டவைகள்.

நார்மலான பெண் இக்காரியத்தைச் செய்யமுடியுமா? சமூம் வாய்மூடிக் கொண்டிருக்குமா? அதற்காகத்தான் பாத்திரங்களை குறைபாடுள்ளவர்களாக மாற்றி, அதேசமயம் எதார்த்த வாழ்வியல் நிலைகளை முற்றிலும்  அறியாதவர்களுமாக இல்லாமல். இரண்டையும் சமநிலையில் தந்து மிக அழகியல் தன்மையோடு பாத்திரங்களை வடித்திருக்கிறார்.

ஃபியோனா தன்னைவிட்டு போய்விடுவாளோ என்கிற நியாயமானப் பதட்டத்துடன் ஆப்ரேயின் மனைவியை வீட்டிற்குச் சென்று கிராண்ட் மனைவிக்கும், மரியான் கணவனுக்கும் இருக்கும் நிலைமைகளை விளக்கும்போது, அங்கே மரியான் தன் கணவனைக்குறித்து பேசும் மிக நியாயமான சூழல்களும் அந்த உரையாடலின் போக்கில் மரியான் கிராண்டின் மீது விருப்பம் ஏற்பட்டு அதை கிராண்டிடம் தெரிவிக்கின்ற நிலையில், கிராண்ட் முதலில் மறுத்து பிறகு கொஞ்சங் கொஞ்சமாக கிராண்ட்டுக்கு மரியான் பேச்சின்மீது ஈர்ப்பு ஏற்படுகின்றபோது ஃபியோனா மனநிலை சரியாகி ஆப்ரேயை யாரென்றே தெரியாமல், கிராண்ட்டை அன்புள்ள கணவரே வேறுயாராக இருந்தால் அந்த நோயாளி போகட்டும்  என்று விட்டிருப்பார்கள். என் அன்பே நீங்கள்தான் என் உயிரினும் மேலானவர் என அறிகின்ற தருணங்கள் எல்லாம் வாழ்வின் நிலைத்தன்மைகளை மீட்டுருவாக்கம் செய்ததாக உணரமுடிகிறது.

இத்தொகுப்பை ஒட்டுமொத்தமாக நோக்கின் ஓரிரு கதைகளைத்தவிர்த்து மற்ற கதைகள் மிக அற்புதமானவை. மனித வாழ்வியலின் அநேக முகங்களை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகின்ற முக்கியமானத் தொகுப்பு என்பதை யாரும் மறுக்கமுடியாது.

ச.ஆறுமுகம் அவர்களின் மொழிபெயர்ப்பு வாசிப்புத்தடை இல்லாமல் மிக எளிமையாகவும், மூல மொழியின் சுவாரசியம் அப்படியே உள்வாங்கும் விதமாகவும் இருப்பது சிறப்புக்குறியது. ஒரு தொகுப்பில் அதிகபட்சம் சிறந்த படைப்புகளாக தேர்ந்தெடுத்து தந்திருப்பது என்பது அவரின் ஆர்வத்தையும் அயராத உழைப்பையும் காட்டுகிறது.
ஆதி பதிப்பகம் புத்தகத்தை மிக நேர்த்தியாக் கொண்டுவந்துள்ளதைப் பாராட்டலாம்.

டேனியல்.