Saturday, March 2, 2013

கட்டுரை,


இலக்கியப்பரிச்சம் மனிதனை மேம்பட்டவனாக மாற்றுகிறதா?

உலகம் முழுதும் இலக்கியத்திற்கு தனி மரியாதை உண்டு. ஒவ்வொரு காலத்தையும், அதன் கலாச்சாரத்தையும், வரலாற்றையும் பிரிதிபளிக்கின்ற ஊடகம். மிக உயரிய இலக்கியங்கள் புழக்கத்தில் இருந்த நாட்டில்கூட, அதன் பாதிப்பால் மனிதனின் செயல்பாடுகள் தலைகீழாக மாறி, மக்கள் தங்களை மேம்பட்டவர்களாக மாற்றிக்கொண்டார்களா என்றால் கேள்விக்குறிதான்.

தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகத்திற்கே நல் நெறி காட்டுகின்ற இலக்கியங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன, மேடைகளில், தனி நிகழ்வுகளில் அதன் குறிப்புகளை, சாரம்சத்தைப் புகட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் பாதிப்பால் மனிதன் புனிதத்தன்மை அடைந்துவிட்டானா? என்றால் அதுவும் சந்தேகம்தான்.

ஆக இலக்கியங்கள் பொதுவாக மனிதர்களிடம் எந்தளவில் இயங்குகிறது. அதன் பயன் என்ன? இலக்கியத்தைப் படைக்கிறவர்களில் இரு தன்மை வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் தன்மை என்ன? இருசாராரும் அடிப்படையில் யாராக இருக்கிறார்கள். இக்கருத்தாக்கங்களை ஆராய்வதே இக்கட்டுரை.

இலக்கியத் தன்மை
இலக்கியம் இலக்கு நோக்கி இயங்கும் தன்மை உடையது; என்ற வகையில் ஏற்றுக்கொண்டாலும், இதுவரை என்ன இலக்கை அடைந்திருக்கிறது. சில இசங்களை கண்டடைந்திருக்கிறது. என்பதைத்தவிர பொதுவெளியில் எத்தன்மையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது கணினி புரட்சி, கைபேசி புரட்சியைப்போல் ஏன் இலக்கியத்தில் நிகழவில்லை. இலக்கியம் வியாபாரயுக்த்தி இல்லை என்பது உண்மைதான். கணினி, கைபேசி வியாபாரயுக்த்தி பாதியளவு இருந்தாலும், அதன் பயன்பாட்டால்தான் இத்தனைச் செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியுமா? அப்படி என்றால் இலக்கியத்தின் பயன்பாடு மிகக்குறைவானதுதானா? இலக்கியம் காலங்காலமாக தன்னைப் பாதுகாத்துக்கொண்டு பதுங்கு குழியில் வாழும் தன்மையிலேயே இருக்கிறது. இருந்துவருகிறது. இதற்குச் சாட்சி உலகின் எந்த மூலையிலும் இதுவரை இலக்கியத்தால் புரட்சி உண்டானது என்ற வரலாறு நானறிந்தளவில் இருப்பதாகத் தெரியவில்லை.

ரஷ்ய இலக்கியங்கள் உலகின் தலைசிறந்த இலக்கியம் என்றாலும், அவைகளால் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட்டதா என்றால் சந்தேகம்தான். ரஷ்ய புரட்சிக்கு வழிவகுத்த ‘லெனின்‘ ஆரம்ப காலத்தில் இலக்கியப் புத்தகங்களையும் வாசித்தார் ஆனால், அதினால்தான் புரட்சியாளராக செயல்பட்டார் என்று சொல்லமுடியாது. ‘மாவோ‘ புத்தகங்களை வாசித்தபோது; எல்லாமே மன்னர்களின், ராணிகளின், மந்திரிகளின், பண்ணையார்களின், ஆடம்பரமான, பகட்டான வாழ்வுமுறையை சொல்வதாகத்தான் இருக்கிறது. ஆகையால் இலக்கியம் என்பது சலிப்புத்தட்டுகிறது. என்றபிறகே மக்களின் விடுதலைக்கான வழியை நோக்கி நகர்ந்தார். தமிழக அளவில் எடுத்துக்கொண்டால்கூட இரண்டாயிரம் ஆண்டுகளாய் நல்ல இலக்கியமும், அறுபதுகளுக்குப்பிறகு, எண்பதுகளுக்குப்பிறகு என்ற கால வரிசையில் தரமான இலக்கியங்களை பகுப்பாய்வு செய்கிறார்களேத்தவிர  அதானால் என்ன விளைந்தது என்பதை யாரும் சொல்லியதாகத் தெரியவில்லை. இலக்கியம் நெல்லா, கோதுமையா களஞ்சியத்தில் சேர்க்க என்கிற நையாண்டித் தேவையற்றது. இலக்கியதைத்தவிர்த்து மற்ற எல்லாத்துறைகளும் அபரிதமான வளர்ச்சிக் கண்டிருக்கிறது. அதன் பயன் ஒவ்வொரு தனிமனிதனையும் அடைந்திருக்கிறது. ஒரு சில சுத்தமாக அழிந்தும் இருக்கிறது. (நிலங்கள் விவசாயம், உள்ளூர் தாயாரிப்பு பொருள்) பொதுவாக பயன்தராத எதையும் தொடர்ந்து செய்கிற தன்மை மனிதனுக்கு அறவே இல்லை. ஆனால் இவ்விஷயத்தில் சிறுசிறுக்குழுக்கள் விதிவிலக்கு. அதுவும் இலக்கிய வாதிகள்தான். அவர்களுக்கு மட்டும் அதில் ஏதோ இருக்கிறதென்று தெரிந்திருக்கிறதா? என்னதான் இருக்கிறது.

காலங்காலமாக இலக்கியத்தை தன் வசப்படுத்திக் கொண்ட சமூகத்தையும், புதிதாக, அதில் இணைத்துக்கொண்ட மனிதர்களையும் உற்று நோக்கினால் அதன் பயன்பாட்டை நாம் கண்டுணரமுடியும். பயன்பாடு என்று சொல்லும்போது, பயன் அடைவது இலக்கியமா? அதில் இணைத்துக் கொள்ளும் நபர்களா? அப்படி இணைத்துக்கொள்ளும் நபர்கள் யார் யார் எல்லோரும் இலக்கியம் படைப்பதில்லையே? படைக்காதவர்களின் பங்கு என்ன? என்னைப் பொறுத்தளவில் படைப்பாளர்கள் இரு தன்மையாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்கிறேன்.

இலக்கியம் படைப்பவர்கள்
படைப்பைத் தருகிற இலக்கியவாதிகள், வழிவழியாக வந்தவர்களாகட்டும், புதிதாக இணைத்துக் கொண்டவர்களாகட்டும். இவர்களில் இருசாரார் இருக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இருவரும் இலக்கியத்தின் ஒரே கருவரையில் வசிக்கிறார்கள். படைப்பே எங்கள் உயிர் மூச்சு, வீச்சு எனும்விதமாக படைக்கிறார்கள். ஆனால், அடிப்படையில் இருவருக்குமான செயல்பாடுகளில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. படைப்புகளை நிதானமாக, எந்தச் சார்பற்றும் ஆய்வுசெய்தால் தெளிவாகத்தெரியும். இந்த வித்தியாசத்தை இயற்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். திராட்சை, மாங்காய், கொடுக்காபுளி, இன்னும் அநேக கனிகளை ருசித்து நோக்கினால் புரியும். ஒரேவகை மரங்கள் கனிகள் மட்டும் இனிப்பு, துவர்ப்பு. இத்தன்மைதான் மனித குலத்திற்கும் பொருந்தியிருக்கிறது. இலக்கியத்தைப் பொறுத்தவரை படைப்பவர்கள், படைக்காதவர்கள்,என்று எடுத்துக்கொள்ளும்போதும், பொதுவெளியில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று எடுத்துக்கொண்டாலும் இந்த இரண்டுத் தன்மைக்குள்தான் அநேகமாக இயங்குகிறார்கள்.

ஒரு சாரார் அடிப்படையில் இயல்பாகவே தன்னில் அன்பு உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் வழி வழி வந்தவர்களோ, தற்செயலாக நுழைந்து நிலைநிறுத்திக் கொண்டவர்களோ எப்படி இருப்பினும் இலக்கியத்தில் நுழைந்தபிறகு இவர்களுக்கு அன்பு வரவில்லை. ஏற்கனவே அவர்களிடம் அன்பு நிறைவாக இருக்கிறது. இங்கே முக்கியமான விஷயத்தை பதிவு செய்யவேண்டும். தொடர்ந்து மாபெரும் இலக்கியங்களை வாசிப்பதாலும் அல்லது கற்றுக்கொள்வதாலும் ஒருவருடைய இயல்பான குணம் மாறிவிடுமா? என்றால் நிச்சயமாக இல்லை. மாறாது. அப்போது இலக்கியத்தின் பயன் என்ன? என்றக் கேள்வி வருகிறது. அதைப்பிறகு பார்ப்போம். அன்பை அடிப்படையாகக் கொண்டவர்கள் இயல்பாகவே இலக்கியத்தில் ஆர்வம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். சமூகம் அவர்கள்முன் கேடுள்ளவையாக இருந்தால் தானாகவே அதைத் தீர்க்கிற முறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் ஒரு நாட்டின் பாரம்பரிய அதிகார, ஆட்சி முறைகைளையே தலைகீழாக மாற்றிப்போட்ட வரலாற்று நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருக்கிறது. என்பதை யாராலும் மறுக்கமுடியாது. நான் மீண்டும், லெனின்,மாவோ,சே, இவர்களையே காட்டவிரும்புகிறேன். இவர்கள் மூவருமே இலக்கியத்தைத் தேடித்தேடிப் படித்தவர்கள். ஆனால் அடிப்படையில், அன்பு அவர்களிடம் இருந்தது. லெனின் சிறு வயதில் சுட்டியாக இருந்தாலும் தான் ஆசையாக ஒரு பறவை வளர்த்தார். பறவை திடீரென்று இறந்துவிடுகிறது. அந்த இறப்பை தாங்க முடியாமல் சோகத்தில் ஆழ்கின்றார். மாவோ தன் தந்தை வசதியாக இருந்தாலும் அந்தச் சுகத்தை அனுபவித்து ஊதாரியாய் சுற்றாமல் உழைப்பாளிகளின் வாழ்வைக்குறித்து யோசித்தார். ‘சே‘ தன் இக்கட்டான போராட்ட சூழலிலும் தனக்குத்தெரிந்த மருத்துவ உதவிகளைப் பின்தங்கிய மக்களுக்குச்செய்து உதவினார். இச்செயல் அன்பின் நிமித்தமாகவே நிகழ்ந்தது. அன்பும், போராட்டகுணமும் கலந்த செயல் வடிவந்தான் ஒட்டு மொத்த மக்களின் ஆதரவைப்பெறச்செய்தது சமூகத்தில் வெற்றியாய் பிரிதிபளித்தது. ஆனால், இந்த வெற்றிகள் இலக்கியத்தால் கிடைத்தது என்று சொல்லமுடியாது. ஏனென்றால் முன்னரே குறிப்பிட்டதைப்போல் ‘மாவோ’ ஆரம்ப கட்டத்தில் இலக்கியத்தை வாசிக்கும்போது சலிப்பாக இருக்கிறதென்று சொல்லுகிறார். அதைப்போலவே அன்பு இயல்பாகக்கொண்ட படைப்பாளர்கள். இயல்பாக தங்கள் படைப்புகளில் பிறரின் வாழ்வை, தன் வாழ்வுபோல் உள்வாங்கிக் கொண்டு மிக எதார்த்மாக நம்பகத்தன்மை மாறாமல் எழுதுகிறார்கள். முடிந்தளவு இயல்பு வாழ்வில்கூட போலித்தனங்கள் இல்லாமல் இருக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். வாழ்வின் போராட்டத்தால் திடீரென்று சருக்கல் ஏற்பட்டுத் தடுமாறும் நிலை ஏற்பட்டாலும் திட மனதுடன் சமாலிக்கவும், அதைக்கடந்தும் முடியாமல்போகிறது என்பதற்காக சற்றும் முறையில்லா வழிகளைத் தூரிதமாக தேர்ந்தெடுப்பதில்லை. முப்பது, நாற்பது ஆண்டுகள் இலக்கியத்தில் இருந்தாலும் உயரிய கலை நுணுக்கங்களைப் பயின்றாலும் அதன் தாக்கத்தை உள்வாங்கிக் கொள்ளமுடிகிறதேத் தவிர, அவைகளால் மனம் பெரிய மாற்றம் அடைந்து விட்டதாகச் சொல்லமுடியாது. குணங்களைப் பொருத்தமட்டில் அப்படியேதான் இருக்கிறது.

இன்னொரு வகை படைப்பாளர்கள்
படைப்பைத் தருகிற இலக்கியவாதிகள். வழிவழியாக வந்தவர்களாகட்டும், புதிதாக இணைத்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்களாகட்டும். முழுமையாக தன் ஈடுபாட்டை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். புதிய புதிய தளங்களை யோசிக்கிறார்கள். வரலாறுகளைத் தேடுகிறார்கள். அதிலிருந்து தங்களுக்கான உருவாக்கத்தை அமைக்கிறார்கள். தங்களுக்கு அறிமுகமான அல்லது தங்களின் கடந்தகால பின் தங்கிய வாழ்வியலையும் படைப்பாகப் பதிவு செய்கிறார்கள். இவைகள் எல்லாவற்றிலுமே தான் எடுத்துக்கொண்ட விஷயத்தை செறிவாகக் காட்டுகிற முனைப்பு இருக்கும். புதிய கண்டுபிடிப்புகளின் (இலக்கியம் சார்ந்த) சாரம் அதிகமாக இருக்கும். கூடவே ஒரு மெல்லிய இழையாக படைப்பில் எடுத்துக்கொண்ட மனித மனங்கள் இயல்பாக பிரிதிபலிக்கும் தன்மையை இழந்து நிற்கும். அது அநேகமாக பலரின் பார்வைக்கு படாததாகவே இருக்கும். ஏன் இப்படி பார்வைக்குப்படாமலே போகிறது என்றால், அதின் செயல்முறைகள், புதிய விதமாக இருக்கிறது என்கிற மனப்போக்கு. இவைகளால் அந்த மெல்லிய இயல்பான இழை தெரிவதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அந்த மெல்லிய  இழையில்தான் உயிர் இருக்கிறது. எதிர்காலத்திற்கான வழிகாட்டல் இருக்கிறது.

இவர்கள் ஏன், அதைத்தவிற்கிறார்கள். சொல்லப்போனால் படைப்பில் நேர்த்தியான போக்கை கடைபிடிக்கிறார்கள்தானே என்று வாதாடமுடியும். நான் வாதாடுவது தவறு என்று சொல்லவில்லை. ஆனால், புதிதாக தொழிலை நிர்மாணிக்கிற வியாபாரியும் அநேகயுக்திகளை நுகர்வோர்களுக்கு மறைவாகவைத்து தன் வியாபாரத்தை வளர்த்தெடுக் கிறானே!. அதற்கும், இதற்கும் வேறுபாட்டைக்கான முடியுமா? இருந்தாலும்கூட இத்தன்மையில் படைக்கிற படைப்பாளிகள் வேண்டுமென்றே வியாபாரியின் மனநிலைக்கு ஈடாக தங்கள் படைப்புகளை வைக்கவில்லை. இந்த இடத்தில்தான் முதல் வகையைச் சார்ந்தவர்களிலிருந்து மாறுபடுகிறார்கள்.

இவர்களுக்கு இயல்பாகவே அன்பு குறைவுள்ளதாக இருக்கிறது. பல காலங்களாக பல உயரிய நூல்களைப் படித்தாலும், அன்பை தங்கள் மனதில் இயல்பாக உருவாக்கிக் கொள்ளமுடியாது. அது செயற்கைத் தன்மையில்தான் சூழலுக்கேற்ப வெளிப்படுத்தவும் முரண்படவும் செய்கிறது. இந்த இயல்பான நிலையில்தான் இவர்கள் படைக்கும் படைப்புகளில் ஒரு மெல்லிய உயிர்த்தன்மை வாய்ந்த விடுபடல் நடந்தேறிவிடுகிறது. இவர்கள் என்னதான் மிகவும் பின்தங்கிய, ஒரு அப்பாவித்தனத்தின் பாத்திரத்தை எடுத்து பேசினாலும், அது உயிர்ப்புடன் வராமல் லேசாக பூசி மெழுகியிருக்கும் தன்மை வெளிப்படையாகத் தெரியும். அப்படைப்புகளை ஆய்வு செய்தால் புரிந்துகொள்ளலாம். இது உண்மை இல்லை என்று வாதாடும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட படைப்பாளர்களின் படைப்பிலிருந்தே அத்தன்மையைச் சுட்டமுடியும். (அதற்கான அவகாசத்துடன்)

இவர்கள் சமூக முரண்பாடுகளை களைய கொதித்தெழுகிறார்கள். இலக்கியமும் வாசிக்கிறார்கள். தொடர்ச்சியாகப் பேசுகிறார்கள். போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். மக்களை அனுகும்போது தங்களுடைய பேச்சிற்கும், செயல்பாட்டிற்கும் பெருத்தளவில் வித்தியாசம் இருப்பது மக்களுக்குத் தெரிந்துவிடுகிறது. அதிலிருந்து எச்சரிக் கையாகவோ, பயந்தோ இவ்ர்களுடன் ஒன்றிணையாமல் ஒதுங்கிவிடுகிறார்கள். இந்நிலையில் போராட்டத்தை தொடங்கியவர்கள் சோர்ந்துவிடுகிறார்கள், அல்லது வெற்றிக்கிட்டாமல்போகிறது.

இலக்கியம் மனிதனுக்குத் தருவதென்ன
உயிருள்ள ஜீவராசிகள் உணவுக்கும், இனப்பெருக்கத்திற்குந்தான் கவலைப்படுகிறது. மனிதன் சற்று மேம்பட்டவனாக சுகமான நீண்ட வாழ்வு (அதில் பணம், புகழ் அடங்கியுள்ளது) வாழ பின்னால் வருபவனை முந்திக்கொண்டு மணிக்கு இத்தனை மயில் எனக்கணக்கிட்டு சதா ஓடிக்கொண்டே இருக்கிறான். இவன் முற்றிலும் இலக்கியம் என்ற வாசகத்தைக் காதில் கேட்டதோடுசரி பல செல்வந்தர் புத்தகத்தின்மேல் அட்டையைப் பார்த்ததோடு சரி. சிலர்தான் புற்களை, செடியை, மரத்தை, பக்கத்து மனிதனை, நாடு கடந்த உலகத்தை தேடுகிறான். ஆராய்கிறான் அப்படிச் செய்யும்போது, தான் இதற்கு முன் வாழ்ந்த வாழ்வில் மிகக்குறைபாடுகள் நிறைந்திருக்கிறது. நாம் நடந்து செல்லும்போது பின்தங்கி வருபவனையும் கைத்தாங்களாக அழைத்து செல்லவேண்டும் என்கிற கரிசனை ஏற்படுகிறது.

இயல்பாக அன்புள்ளவ்ர்களும், இயல்பில் அன்பு அற்ற நிலையில் ஏதோ ஒரு கோட்பாட்டு ரீதியாக நேர்மையின் சாயலை ஏற்றிருப்பவர்களும்கூட இலக்கியத்தில் தொடர்ந்து இயங்குவதால். சமூகத்தில் எந்த மூலையில், என்னவிதமான குளறுபடிகள் கிடக்கின்றன. நடைமுறை வாழ்வில் தினந்தோறும் தாங்கள் அனுபவிக்க நேரும் ஏமாற்று வேலைகள் எது, உண்மையான நட்பு எது, இந்த காரியத்தின் மூலம் இப்படி நடக்கலாம் என்று ஊகிக்கிறத் திறமை இவைகள் எல்லாமே பல்வேறு இலக்கியப் புத்தகத்தை வாசிக்கிறபோது கிடைக்கிற அனுபவம். அப்படிப்பட்ட அனுபவத்தை இரண்டாயிரம் வருஷங்களாகவே சம்பந்தப்பட்ட சிறுக்குழுக்கள் மக்கள் வெளிக்குக் கொண்டு வராமல், தீவிரவாத்த்தை அந்தரங்கமாய் கையாள்வதுபோல கையாள்கிறார்கள். இலக்கியத்தை அரசியல் கூட்டம்போல, சமூக விழிப்புணர்வு கூட்டம்போல வெளிக்கொண்டு வந்தால் அதன் கலைத்தன்மை பரிபோய்விடும் என்கிற மனநிலைதான் தொடர்ந்து இருக்கிறது. காலங்காலமாய் கையாண்டுவரும் சிறுக்குழுக்களின் செயல்பாட்டால் சமூகப்பொது வெளிக்கு நிகழ்ந்தது என்ன? இலக்கியத்தைக் கற்கிறவர்கள் சமூகத்தின் எந்த பொய்மைக்கும், உண்மைக்கும் தப்பித்தோ, எதிர்கொண்டோ வாழ்கிற ஆற்றலைப் பெறுகிறார்க்ள. இந்த ஆற்றலை சமுகத்தின் பெரும்பாலான மனிதன் உள்வாங்கிக்கொள்ளவோ, கற்றுக்கொள்ளவோ சிறுக்குழுக்களே ஏன் தடையாக இருக்கிறது? சினிமா ஒருகலைதுறைதான் பொது வெளிக்கு வருகிறதுதான். அதன் தாக்கம் பெருமளவில் நடந்தேறுகிறதல்லவா? அந்தந்த காலங்கட்டங்களில் நம்பிக்கை ஏற்படும்படியான படங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கடந்த காலங்களில் ‘அலைகள் ஓய்வதில்லை‘ என்ற படத்திற்கு பிறகு பல மதமாற்று காதல்கள் அறங்கேறி இருக்கிறது. அது அநேகருக்கு மறந்திருக்கலாம். கொலை, கொள்ளைகளுக்கு நிறைய அதாரங்கள் நாம் நேரடியாகவே பத்திரிக்கைகளில் வாசித்திருக்கிறோம். சற்று ஆய்ந்து நோக்கினால் பல விருதுகளை வாங்கிய வழக்கு எண்:18/9 க்குபிறகுதான் தமிழ்நாட்டில் இரண்டு, மூன்று காதல்களுக்கு எதிறான ஆஷிட் வீச்சுகள் நடந்தேறி இருக்கிறது. இப்படி சமஅளவுக்கு நன்மையான, தீமையான விஷயங்களும் திரைப் படங்கள் பொதுவெளிக்கு வருவதின் மூலமாக ஏற்படுகின்றது. இந்த இடத்தில் இலக்கியத்தை நிறுத்தமுயல்கிறேன். நீங்கள் யோசித்துப்பாருங்கள் இலக்கியத்தில் நுழைந்த நபர்கள் நிச்சயமாக தங்களையே அடிக்கடி சுய விமர்சனம் செய்துகொள்கிறவர்களாக இருக்கிறார்கள். முக்கால்பாகம் அவர்களால் பிறருக்கு தீங்கிழைக்கும் செயல்களில் இறங்க முடிவதில்லை. குறைந்த பட்சம் வெறுப்புணர்வு ஏற்பட்டாலும் விவாதங்களின் அடிப்படையில் கருத்தைப் பதிவு செய்கிறார்கள். (அத்தன்மை வாய்ந்த இலக்கிய செயல்பாடு அந்தரங்கமாக செயல்படுவதால்தான். தீமைகள் பராக்கிறமத்துடன் வெளியில் செயல்படுகிறது.)

இலக்கியங்களைப் படிப்பதின் மூலம் இயல்பாக அன்புள்ளவர் சற்றுக்கூடுதலாகவும், அன்பைத் தகவல்போல் அறிந்தவர் தன்னை சற்றேனும் உயர்த்திக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. குறைந்த பட்சம் இயல்பு வாழ்வில் அனுதினம் சந்திக்க நேர்கிற பொய்யான விஷயங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள (உதாரணமாக எஸ்.எம்.எஸ் அல்லது மெயிலோ, மூன்று கோடி பெறுகிற அதிர்ஷ்டசாலியாக நீங்கள் தேர்வுபெறுகிறீர்கள். உடனே தங்களை அனுகவும் என்று வருகிற தகவலை. ‘யாரை ஏமாற்ற இந்தச் செய்தியை அனுப்புகிறார்கள்‘)  என்று யோசிக்கிற அளவுக்காவது விழிப்புணர்வைத்தரவல்லது. அப்படிப்பட்ட அனுபவத்தை ஒரு தனி மனிதன் பெற்றுக்கொள்ள சிறு குழுக்களான இலக்கியவாதிகளே தடையாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே இலக்கியத்தில் நிலைநிறுத்திக்கொண்ட நபர்கள் தங்கள் பிள்ளைகளை எதிர்கால வாழ்வை கருத்தில்கொண்டு கல்வி உள்பட, மற்ற எல்லா துறைகளிலும் திணித்துவிட பாடுபடாமல் விடுகிறார்களா? அத்தகைய வழிக்காட்டுதல் தனி மனிதனுக்குத் தேவைதானே? அதைக்கேட்டு திருந்திவிடப்போகிறானா என்கிற விதண்டாவாதம் வேண்டாம். வட்டிக்கு விடுகிறவன் தெருமூலையில் தண்ணீர் தொட்டியைக் கட்டிவிடுகிறானே, அந்தப் பணியையாவது இலக்கியவாதிகள் செய்யவேண்டாமா? அது பலரிடம் அநியாயமாக வசுலித்ததற்கு பிராயச்சித்தமாக செய்கிறான். எங்களுக்கு என்ன தலைவிதியா என்றும் கேட்கவேண்டாம். இலக்கியவாதிகள்கூட பலரின் ஞானத்தை பேராசைகொண்டு தன்னகத்தே சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால்,  வட்டிக்கு விடுகிறவனுக்கு இருக்கிற தெருமூலை தண்ணீர் தொட்டி ஞானம் வருவதேயில்லை.  பொதுவெளிக்குத் தெரிந்தால்தானே சற்றேனும் நேர்மையை எதிர்ப்பார்க்கிறவர்கள், தங்களை மேம்படுத்திக்கொள்ள வழிவகுக்கும்.  சரி இவைகளுக்கு எல்லாம்கூட ஏதோ ஒரு காரணம் காட்டி அது சரிவராது என்று சொல்ல்லாம். நான் கேட்கிறேன். காலங்காலமாக இலக்கியங்களை அந்தரங்கமாக வைத்திருந்ததால் என்ன உயர்வுகள் நிகழ்ந்துவிட்டது? பரவலாக மக்கள் மத்தியில் கொண்டுசெல்லுகிற பணிகளை செய்து பார்த்தால் என்னதான் நிகழ்கிறது என்று ஒரு சோதனை ஓட்டமாகதான் பார்க்கலாமே!.

இலக்கியம் என்ன கத்திரிக்காயா கடைத்தெருவுக்கெல்லாம் வர!. கெட்டுவிடாதா? என்றால், சிறு குழுக்களிடம் இயங்குகிற இலக்கியம் அத்திப்பூத்தார்போன்ற விவாதங்களைத்தவிர்த்து, சாதாரண பாமரன் செய்கின்ற தில்லு முல்லுகள், தந்திரங்கள் தற்கால இலக்கியத்தில் நடக்கவே இல்லையா? நூற்றுக்கு நூறு எந்த பேதங்களும் இல்லாமல்தான் காலங்காலமாய் செயல்படுகிறதா?

இறுதியாக
நான் சமூகத்தை உற்றுநோக்கியவகையில் இலக்கியம் படைப்பவர்கள் இருபிரிவினர் இருக்கிறார்கள். அதைபோலவே விமர்சனம் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். இயல்பாகவே கேடுநிறைந்தவர்களும் இருக்கிறார்கள். எல்லோரும் மேற்கூறிய இருபிரிவுக்குள் அடங்குகிறார்கள் எனபதே என் புரிதல். நான் இலக்கியம் படைப்பவர்கள் குறித்துமட்டுந்தான் பேசியிருக்கிறேன். மற்றவைகள் இன்னொருமுறை வாய்ப்பிருந்தால் செய்யமுனைகிறேன். இலக்கியதை தொடர்ந்து அனுகுவதால் மட்டுமே ஒரு மனிதனின் இயல்பான குணம் மாறிவிடாது. ஆனால், அதை அனுகும்போது ஒவ்வொரு மனிதனும் குறைந்த பட்சம் விழிப்புணர்வு பெறுகிறார்கள் அதைப்பொது வெளிக்கு கொண்டு வரும்போதுதான் அதன் பயன் விருத்தியாகும். மனிதனின் மனம் மேம்படும்.

ஜே.டேனியல்  

Tuesday, February 5, 2013

விமர்சனம்

                   
கடல்-கிளைமாக்ஸ் அநியாயம்.

கிறிஸ்த்தவர்களை  மையமாகக் கொண்டு கதை அமைந்துள்ளது. கடலோர  மீனவர்கள் வாழ்வுதான் சித்தரிக்கப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் படத்தில் ஒன்றும் இல்லை. என்றுதான் சொல்லமுடியும்.  ஆனால், ஜெயமோகன் மற்றும் மணிரத்தினம், ஒரு மதத்தின் நம்பிக்கையை முடக்கிவிடும் செயலை யார் கண்ணிலும் படாதபடி எவ்வளவு சாமர்த்தியமாக பண்ணியிருக்கிறார் என்பதை நினைக்கிறபோது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இவ்வளவு நேரம் நான் நிற்கிறேன், நேர்மையற்ற நிலையில் என்னைத்தாண்டிப் போகிறாயே என்று  நேரடியாக ஒருவனை அரைந்துவிடலாம். இங்கு இருப்பது பாதுகாப்பு என்று நம்பி படுத்திருக்குபோது கையின் நரம்பைத் தடவி கண்டுபிடித்துக்கொண்டே கிருமியை ஏற்றிவிடுவது மோசமான செயல் அல்லவா? இதைச்சொல்லுவதின் மூலம் நான் கிறிஸ்த்தவ மதத்திற்கு சார்பாக பேசுகிறேன் என்பதல்ல. அம்மதத்தில் சமீபகாலங்களில் பெருத்த குளறுபடிகள் இருக்கிறது. அதைப்போகிறப்போக்கில் நான் சொல்லுவதை நீங்களே விளங்கிக் கொள்வீர்கள்.

ஜெயமோகன், படைப்புகளை சிலாக்கித்து வாசித்தும், மணிரத்தினத்தின் படங்களை ஆச்சரியப்பட்டு பார்த்தும், அதன் அழகியலைக் கண்டு வியந்தும் இருக்கிறேன். இன்னும் நம்புகிறேன். இப்படத்தைப்பார்த்து, இவர்களா? சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களாக மாறிவிடக்கூடாது என்பதற்காக இவ்வளவு பணத்தைக் கொட்டி எடுத்தார்கள். உண்மைக்கு  மாறான கருத்தாக்கங்களைப்  புகுத்தினார்கள் என்று வாயடைத்துப்போனேன்.  

1
இரவுநேரம். கடலோர குடிசை. ஒரு தாயோடு குழந்தைப் படுத்திருக்கிறது. வெளியில் கதவைத்தட்டும் ஓசைக் கேட்கிறது குழந்தை அம்மாவை எழுப்புகிறது. அவள் எழுந்திருக்கவில்லை. ஒருவன் வெளியிலிருந்து கதவைத் தட்டுகிறான். அதட்டுகிறான். குழுந்தை பயந்துசென்று கதவைத்திறக்கிறது. வெளியில் அடைமழை பொழிகிறது. வருபவன் குழந்தையை வெளியே துரத்துகிறான்.  அதுப்பரிதாபமாகச்சென்று வெளியில் உட்கார்ந்து கொள்ளும். சற்று நேரம் கழித்து வந்தவன் மேல் சட்டைக் கழட்டி தோளில் போட்டுக்கொண்டு வெளியேபோவான்.  உள்ளேக் கிடந்தவள் மல்லாந்த நிலையில் கால்கள் விரிந்துக் கிடப்பாள். வந்தவன் பிணத்தை  புணர்ந்து சென்றதாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. பிறகு அவன் “டே, உன் அம்மா செத்துக்கிடக்கிறாள்” என்று சொல்லிச்செல்வான்.  இவன் சொல்வதற்கு முன்பே அவள் செத்துதான் கிடக்கிறாள் என்பது பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடுகிறது. அதில் சிறதளவும்  சஸ்பென்ஸ் இருக்கவில்லை.  

திரு. ஜெயமோகன் அவர்கள் கிறிஸ்த்தவ மதத்தை விமர்சனம் செய்யட்டும் தவறே இல்லை. படைப்பாளர்களுக்கு, மாற்று மதத்தை சுதந்தரமாக அதே சமயம் உள்நோக்கம் இல்லாமல் விமர்சனம் செய்யும் வாய்ப்புத்தரவேண்டும்.  அப்படித்தரும்போதுதான் நாளை ஒரு கிறிஸ்த்தவன்  தேவநாதனைப்பற்றியோ, அதிகாரம் படைத்த இந்துத்துவாவைப்பற்றியோ படைப்பைத் தரமுடியும். ஆனால், அப்போதுமட்டும் கடப்பாரை, மண்வெட்டியெல்லாம் எடுத்துக்கொண்டு வரக்கூடாது.

பிணத்தைப் புணர்ந்து செல்வதுபோன்று காட்சி அமைக்க வேண்டியதின் அவசியம் என்ன? ஆதாவது, கதைப்படி குழந்தையை அநாதையாக்கவேண்டும். கிறிஸ்த்தவர்கள் பரவலாக இருந்தாலும், சுட்டுத்திண்ணக்கூட,  காகம் தூக்கிச்செல்லும் ஒரு மீனை கொடுக்காமல் குழந்தையை துரத்தவேண்டும். அது தரிக்கெட்டு வளரவேண்டும். சரி, அதற்கு தாயை இயற்கையாகவே  மரணம் செய்திருக்கக்கூடாதா? அல்லது கிறிஸ்த்தவனிடமும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்றுக் காட்ட ஏதேச்சியாய் புணர்ந்து கொண்டிருக்கும்போதாவது அந்த மரணம் நேரச்செய்யக்கூடாதா? ஒருவேளை அந்தப்பாத்திரத்தால்தான் படம்முழுக்க  வரப்போகும் வில்லத்தனங்களுக்கு ஆணிவேர் அதனால்தான் இப்படி மூர்க்கத்தனமாகப் பார்த்திரத்தை சித்தரிக்கவேண்டியிருந்தது என்று சொல்வதற்கும்  சந்தர்ப்பமே  இல்லை. சுண்டக்காய் விஷயத்திற்கு பழி வாங்க மும்பை தாவுத்தைவிட பயங்கரமான தனி பாத்திரங்கள் இருக்கிறது.  மேலும்  கிராமத்தின் ஒட்டுமொத்த  மக்களுமே நியாயத்தை பலிகொடுக்கிவர்களாக காட்டப்படுகிறார்கள். அப்படியிருக்க, குழந்தையை இரக்கமற்று மழையில் துரத்துவதும், பிணத்தைப் புணர்வதும், அக்கிராமத்தின் மக்கள் ஈவு இரக்கமற்று குழந்தையை மிதிக்கும்படியாக வைத்ததும் எதற்காக என்று யோசித்தால் அதன் உண்மை மிக பயமாக இருக்கிறது. ஊடகங்கள் தங்கள் வசதிக்கு இருக்கிறது என்றாலும்கூட இப்படி ஒரு அநியாயத்தைச் செய்யக்கூடாது.

கிறிஸ்த்தவம் பொதுவாக  அன்பு, இரக்கம், பொறுமை என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தன் மதத்தை வளர்க்கிறது. அதனால், அந்த பிம்பத்தை உடைப்பதற்காகவே இப்படியானக் காட்சியை வலிந்து சேர்க்கப்பட்டுள்ளது. கதை ஆசிரியரும், இயக்குநரும் சேர்ந்து நல்ல விவாதம் செய்யக்கூடியத் களத்தை எடுத்திருக்கிறார்கள். எடுத்தவர்கள் ஏதோ விஷயம் தெரியாதவர்கள் அல்ல. பின் ஏன் மக்களுக்கு புரிபடாதபடி கரடு முரமாக வைத்தார்கள் என்று பார்த்தால். ‘ஒருவரை தவறாகச் சித்தரிக்கும் கருத்தாழம் மிக்க கவிதைக்கு பொருத்தமானவர் அருகில் இருந்தாலும், எல்லோரோடும் சேர்த்து அவரும் கைத்தட்டுகிறார். கவிதையில் அவரைத் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தெரியவேயில்லை. ஏனென்றால் அக்கவிதையில் அர்த்தம் வெளிப்படையாகத் தெரியாதபடி  இருக்கிறது.  அந்த அடிப்படையில்தான் படம் முழக்க ஜெயமோகன் செய்திருக்கிறார்.

வெளிப்படையாக விளங்கியிருந்தால் கிறிஸ்த்தவத்தின் பக்கத்திலிருந்து எதிர்ப்புகள் வந்திருக்கும். மேலும் கிறிஸ்த்தவர்கள் சினிமாக்களைப் பார்த்தால் நேராக பரலோகத்திதற்குப் போகமுடியாது என்று நம்பிக்கையை விதைக்கிறவர்கள். தங்களிடம் தஞ்சம் புகுந்தவர்கள் எதார்த்த வாழ்வனுபவங்களைப்பார்த்து  விழிப்பணர்வு அடைந்துவிட்டால். நமக்கு வரும் லாபம் நின்றுவிடுமோ என்பதற்காகவே வெறும் கூப்பாடுகளைப் போடுகிறார்கள். அதனால்தான்  இப்படத்திற்கு எந்தப்பிரச்சனையும் எழவில்லை. எழ வேண்டும் என்பது நம் ஆசையுமல்ல. படைத்தவர்கள் சிறிதேனும் உணர்ந்தால்போதும். படத்திற்கு வருவோம்.

2 ஜெயமோகன் மாற்று மதத்தை பண்ணும்போது, வாசிப்பு (பைபிள் உள்பட) அனுபவத்தை மட்டுமே நம்பி திரைக்கதை பண்ணியிருக்கக்கூடாது. களப்பணியாக அம் மதத்தின் வாழ்முறை, ஜெபிக்கும்முறை கடவுளை எப்படி அழைக்கிறார்கள், அனுகுகிறார்கள். என்பதை எல்லாம் சற்றேனும் நுணுக்கமாக உள்வாங்கியிருக்கவேண்டும். மணிரத்தினமும் பெரிய  எழுத்தாளராச்சே என்று நம்பிவிட்டிருப்பார்போல.  அர்ஜீன், அரவிந்த் சாமி இருவரும் ஆயர் பயிற்சி எடுக்கிறார்கள்.  கடவுளுக்கு உண்மையாக ஊழியம் செய்யவேண்டும் என்று நினைப்பவர் நல்லவன் (அரவிந்த் சாமி). சமூகத்தின் மேம்போக்கான வாழ்க்கையை கடைபிடிப்பவன்  (அடிக்கடி கதாநாயகத்தன்மையை அவர் மீது திணிக்கப்படுகிறது) கெட்டவன்  (அர்ஜீன்)  இங்கேதான் வாதம் தொடங்குகிறது.  வாதத்தின் போக்கில் அர்ஜீன் ‘எடே, நான் சாத்தான், நீதான் ஏசு’ என்ற வசனம் வரும். சும்மா பேச்சுவாக்கில் வரும் வார்த்தையாக பார்வையாளர்களுக்குத் தெரியும். உண்மையிலேயே ‘கிறிஸ்த்து’வின் பாத்திரத்தையும்,  சாத்தான் பாத்திரத்தையும்தான் வைக்கிறார்.  ஜெயமோகனுக்கு ஒரு உண்மை தெரியாமல் போய்விட்டது. சாத்தானுக்கு கொந்தளித்தெழுகின்ற கோபமெல்லாம் வராது.  புத்திசாளித்தனமாக ஏமாற்றி தன் காரியத்தைச் சாதிக்கும் திறமைப்படைத்தது.  கிறிஸ்த்துக்கூட சம்மந்தா  சம்மந்தம் இல்லாமல் சிரித்துக்கொண்டே  இருக்கமாட்டார்.  நீ என்னடா பக்கத்திலிருந்து பாத்தியானுலாம் கேக்காதிங்க. பைபிளில் ஏசுவின் உரையாடல்களை சாத்தானின் வாதங்களைக் கவனிக்கிறபோது இதுத்தெரியும். சரி அப்படித்தான் இருக்கட்டும், ஏசுவை பொதுவெளியில் காட்டுவது  நல்லதுதானே என்று நினைக்கலாம்.  இதில் பெருத்த மோசடி இருக்கிறது. ஏசு, கடவுள்போன்ற பிம்பத்தை வார்த்தையளவில் வைத்துவிட்டு, அவரின் உண்மையான செயல்பாட்டை திருத்தி அரவிந்சாமி என்ற பாத்திரத்திற்குள் தவறாகப்புகுத்துவது. இதைப்பற்றி கதையோட்டத்தில் சொல்கிறேன்.

2அ  
அர்ஜீன்  ஒரு பெண்ணுடன் அறைக்குள்  இருக்கிறார். அரவிந்சாமி  பார்த்துவிடுகிறார். கதவைத்தட்டி இதெல்லாம் தவறான் செயல் என்று எச்சரிக்கிறார்.  அர்ஜீன் இரண்டுமுறை  கெஞ்சிப்பார்த்துவிட்டு,  உடனே கோபாவேசம் பொங்கி ஆயர் பயிற்சியை தூக்கி எறிந்துவிட்டு பழிவாங்கச் சபதம் எடுக்கிறார். ஜெயமோகன் கூற்றுப்படி சூழ்நிலையால் நல்ல திறமைசாளி, நல்ல  சிந்தனாவாதி கெட்டவனாக மாறிவிடுகிறான். அதற்காக, அவர் எடுத்துக்கொண்ட விஷயம்தான் மிக அற்பத்தனமானது. அரபுநாட்டிற்குச் சாதகமானது. திரு. ஜெமோகனால், எப்படித்தான் இப்படி மனசாட்சி இல்லாமல்  சித்தரிக்க முடிந்ததோ?

நீங்கள் கவனியுங்கள் (நான் உண்மையானக் கிறிஸ்த்துவைக் குறிப்பிடுகிறேன். எழுத்தாளரால் சித்தரிக்கப்டும் போலி ஏசுவைப்பற்றிச் சொல்லவில்லை) கிறிஸ்த்து போகிறவழியில், மதவாதிகள், ஒரு விபச்சாரியை கையுங்களவுமாகப் பிடித்தோம், இவளை கல் எறிந்து கொல்லவேண்டும் என்று  இழுத்துவருவார்கள். கிறிஸ்த்து “உங்களில் பாவம் செய்யாத யாராவது ஒருவர், இவள்மீது முதலாவது கல்லை எறியுங்கள்” என்று சொல்லுவார். ஒருவனும் பேசமாட்டான். விபச்சாரியைப்பார்த்து ‘இனி பாவம் செய்யாதே’ என்று மன்னித்து அனுப்பிவிடுவார். இதேக்கருத்தைத்தான் அப்படியேத் திருப்பி ஏசுவாகச் சித்தரிக்கப்பட்டவருக்குள் புகுத்தியிருக்கிறார். நல்லவர் வேஷம். ஆனால், மன்னிக்க மனமற்றவர். இதற்கு ஏசுவின் பிம்பம்.

சரி படத்தில் காட்டப்படுகிற காட்சியாவது கோபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறதா? என்றால், உப்பு சப்பு இல்லாத விஷயமாகவே இருக்கிறது. நல்லவன் வேஷம்தரித்தவர் கதவைத்தட்டுகிறார். உள்ளே கெட்டவனும், பெண்ணும் நிற்பார்கள். ‘ஏதோ, கல்யாண தம்பதிகள் அண்ணன் வீட்டு விருந்துக்கு வந்ததுபோல’ அன்புள்ளம் கொண்ட நல்லவர் “நீ போமா” என்று அனுப்பிவிடுவார். அவளும் அண்ணன் வாழ்த்தை ஏற்றுக்கொண்டதுபோல சாதாரணமாகச் சென்றுவிடுவாள். நீங்க கவனிங்க, கெட்டவன் ஒரு பெண்ணை வலக்கட்டாயமாக தூக்கிவரவில்லை. அவளும் விருப்பப்பட்டுதான் உறவு நடந்து கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் சற்றும் யோசனையில்லாமல் கதவைத்தட்டினால், அந்த மனநிலையை என்னவென்று சொல்லுவது. தெருவில் நாய்கள் மாட்டிக்கொண்டிருக்கும்போது, சிறு பிள்ளைகள் மாட்டியிருக்கும் இடம்பார்த்து கல்லடிப்பார்கள் அதற்கும் இதற்கும் கொஞ்சமேனும் வித்தியாசம் இருக்கிறதா? இப்படிப்பட்ட மனிதப் பிறவிக்கு வெளிப்பார்வையில் நல்லவன் வேஷம் தந்து உள்ளீடாக ஏசுவின் சாயலை கொடுத்தால் நியாயமா?   சரி, பெண் என்ன செய்வாள் பாவம் என்ற அடிப்படையில் நல்லவன் ‘நீ போமா‘ விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ‘மன்னிச்சிடு மன்னிச்சிடு‘ என்று சக பயிற்சியாளன் கெஞ்சியதையும் மீறி இரக்கமில்லாமல்  தலைமை குருவிடம் போட்டுக்கொடுப்பது எப்படி? அப்போதுமட்டும் அந்தப் பெண் வாழ்வு அடங்கியிருக்கிறது. என்பது தெரியாதா? சரி தலைமை குருவுக்கு குற்றம் செய்தது யார் யார் என்று விசாரிக்கும் அளவுக்கு அறிவுகூடகிடையாது என்று விட்டுவிட்டாரா?. கிறிஸ்த்தவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றுதான் முடிவு எடுப்பார்கள் என்பதைத் திணிப்பதுதான் எழுத்தாளரின் நோக்கமா?

கிறிஸ்த்தவர்கள் அன்பு வயப்படுகிறவர்கள். தொடர்ச்சியான அன்பின் போதனைகளே அதற்கு வித்திடுகிறது. அதனால் சில சந்தர்ப்பங்களில் பாலினபேதம் இல்லாமல் அய்க்கியமாகி விடுகிறார்கள். ‘விபச்சாரம் செய்யாதிருப்பாயாக’ என்ற பைபிள் வார்த்தைகளையும் பெரும் பாலானவர்கள் கவனத்தில் வைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில், ஆயர் சைபையாரில் ஒருத்தியை வைத்துக்கொள்வதும்,  ஊழியம் செய்கிறவன், தனக்கு மனைவி இருந்தாலும் இன்னொருத்தியுடன் கூத்தடிப்பதும் நடக்கிறது. ‘அதிகாரம் நிறைந்த மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் நடப்பதுபோல’ இங்கும் தனக்குச் சாதகமானவர்களின் தவறுகளை வெளியில் தெரியாமல் மறைப்பதும், அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவரின் குரலை நெறிப்பதும், மறைமுகமான உடல் உறவுகள் நடந்துந்தான் வருகிறது. ஆனால், இதற்காக பெரிய தண்டனை எல்லாம்  கிறிஸ்த்தவத்தில் கிடைப்பதில்லை. இப்படி நடப்பது நியாந்தானா என்று கேட்கலாம், சரி, எந்த மதத்தில், எந்த அதிகாரமையத்தில் இது இல்லை. ஆங்கிலேயன் ஒப்படைத்துவிட்டு சென்றபிறகு மேலை நாடுகளின் கலாச்சாரத்தை விழுந்து விழுந்து கொண்டுவந்தது வருவது யார்?  ஜெயமோகனுக்கே, மதங்களை தூர வைத்துவிட்டு, தமிழ் கலாச்சாரத்தில் தம்பதிகளின் வாழ்வியலில் தாம்பத்யமுறை என்பது கணவனிடமோ, பிறரிடமோ பகுதி நேர ஒப்பந்தமாக குறுகாமலிருக்க விழிப்புணர்வு ஏற்படும்படியாக திரைக்கதை எழுதநேரிட்டாலும் நேரிடலாம்.

3 ஜெயமோகன் மூளை உண்மையிலேயே அதீதமான சிந்தனை ஓட்டம் நிறைந்தது. பின் விளைவுகளை நினைத்து முன்கூட்டியேத் திடமாகத் திட்டமிட்டிருக்கிறார் என்றே நான் கணிக்கிறேன். இப்படத்திற்கு பிஷப்பையோ, ஏற்கனவே பணிசெய்யும் ஆயரை எடுத்துக்கொள்ள வில்லை. அதன் ஆபத்து உடனே பிரிதிபலிக்கும் என்பது தெரிந்து தன்னுடையத்திட்டத்திற்கு பயிற்சி ஆயர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஜெயமோகன் சொல்லுவது கூடுதலாக இட்டுக்கட்டப்பட்டவை என்பதற்கு ஒரு சாட்சி. அரவிந்சாமி ஆயராக வேலை பார்க்கவரும் மீனவ கிராமத்தில் சர்ச், சந்திரமுகியில் வரும் பேய்பங்ளாபோல் காட்டப்படுகிறது. என்னடா இது சர்ச் இந்த நிலமையில் இருந்திருக்குமா என்று படம்பார்த்து வந்தபிறகு, இணையத்தில் திருநெல்வேலி, தஞ்சாவூர், தூத்துக்குடி, மற்றும் மதுரை நகரங்களின் ஆர்சி, மற்றும் சி.எஸ்.ஐ தேவாலய்ங்களின் வரலாற்றை தேடிப்பார்த்தேன். ஏறக்குறைய 1922- லிருந்து 1940 பிறகு ஆர்சி ஆகட்டும்  சி.எஸ்.ஐ ஆகட்டும் படிப்படியாக வளர்ச்சியைநோக்கித்தான் வந்திருக்கிறது. என் அனுபவத்தின் நிச்சயமாக தமிழகத்தில் எந்த மூலையிலும் அப்படி ஒரு சர்ச் பாழடைந்துக் கிடக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் மக்களை தேடிப்பிடித்து கொண்டுவருவதே ஒவ்வொரு ஊழியனுக்கும் இடப்படுகிறக்கட்டளை. அப்போதுதான் ஆலயத்திற்கு காணிக்கை வரும். குருமார்கள் சொகுசான வாழ்வை காணமுடியும். (பணத்தில், வசதியில்)
சரி வேணாம், படத்திலிருந்தே விவாதத்தை எடுத்துக்கொள்வோம் அரவிந்சாமிதான் ஆலயத்தை தூசுதட்டி புதுப்பிக்கிறார் என்பது உண்மையானால், கோயில்குட்டியிலிருந்து, அக்கிராமத்தில் அநேகர் கிறிஸ்த்தவர்களாய் இருப்பது எப்படி?  ஒருகாலத்தில் மதம் மாறியிருக்கலாம் என்ற அடிப்படையில் பார்த்தால் பின் வரும் காட்சிகளில் பல குருமார்கள் குற்றத்தை விசாரிக்க வருகிறார்கள். இவ்வளவு குருமார்கள் இருந்து அப்பகுதியில் சர்ச் பாழடைந்த நிலையில் காட்டுவது பெரும்மோசடியாகும்.

இருபத்திநாலு வயது பையன். அவன் செய்யாத போக்கிரித்தனம் இல்லை. இடையில் இரண்டு வருடம் ஆளையேக் காணோம் திடீரென்று ஒரு வாரத்தில் என் வீட்டிற்கு எதிரில் ஓலை குடிசைப்போடப்பட்டது. யாரோ குடி வருகிறார்கள்போல என்று இருந்தேன். ஒருநாள் காலையில் அந்தப் பையன் வந்து “அணா, நான் பாஸ்டராயிட்டேன்ணா எதிர்லதான் சர்ச் என்றான். எனக்கு அடப்பாவி என்று தூக்கிப்போட்டது.  அன்றிலிருந்து மூன்று வருடங்களாக ஒரு ஞாயிறு தவராமல் சர்ச் நடந்துகொண்டேதான் வருகிறது. இப்போ கல் வைத்து நானஸ்த்தானம் தொட்டியெல்லாம் கட்டிவிட்டான். இதையெதற்குச் சொல்கிறேன் என்றால் ஒரு சின்னப்பையனே அதன் வருவாயின் ருசியால் ஓயாமல் பணிசெய்கிறான் என்றால், அத்தனை குருக்கள் இருந்து சர்ச் பாழடைந்துக் கிடப்பது போல் காட்சிப்படுத்துவது முற்றிலும் தவறானத் தகவல்தான். இருந்தாலும் இரு படைப்பாளர்களும் இதை ஏன்வைத்தார் என்று பார்க்கிறபோது. இதன் மூலம் கொஞ்சம் சமாதானம் படுத்தத்தான்  

4. கதா நாயகனுக்கு மட்டுமே ஒரு சீரான பின்னணி அமைகிறது.  அதுவும் பல இடங்களில் கொலை வெறியைத் தூக்கிக்கொண்டு அலைபவனாகவும். தன் மனம் ஈர்த்தவளிடம் மட்டும்  அந்தச் சுவடே இல்லாமல் போவது எப்படி? என்னைப் பொருத்தளவில் ராதாவின் மகள் ஆரம்பத்திலிருந்து நல்லமுறைலேயே நடித்துவந்தார். பாதிக்கட்டம் வரை அந்தப் பாத்திரம் என்ன நிலை என்பதையே மறந்திருப்பார்கள்போல, ஒரு கட்டத்தில் காதலிப்பவன் மதரிடம் அவளைக்குறித்துக் கேட்கும் போதுதான் அவள் மனவளர்ச்சி குன்றியவள் என்று பார்வையாளருக்கு புரியவைப்பதோடு கதையாசிரியருக்கே  தெரிந்ததுபோல. அதன்பிறகு தேவையில்லாத நொண்டியாட்டம்தான். மனவளர்ச்சி இல்லாதவளை பிரசவம் பார்க்க அனுப்புவார்களா? குடிசைக்கு முன் பல ஆண்கள் பெண்கள் கூடியிருக்கும்போது ஒரு வாலிப்பனை பிரவசத்திற்கு உதவியாக அனுமதிப்பார்களா? மக்களே இந்த இடத்தை நன்றாக கவனியுங்கள் அதன் ஆழத்தை வரும் பத்திகளில் விளங்கும்.

ஜெயமோகன் படைப்பையும், மணிரத்தினத்தின் படங்களையும் மிகுந்த அக்கறையுடன் வாசித்தும், பார்த்தும் இருக்கிறேன். அவர்களுடைய விரிந்த தளத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.  இப்படத் தைப்பார்த்து அதன் ஆபத்து என்னை பயப்படவைத்தது. ஆங்கிலப் படங்களில் பெரியப் போராட்டங்களுக்குப்பிறகு தீமை அழிந்ததைப்போல விழுந்துவிடும் சற்றுநேரம் கழித்து பார்வையாளரை பயமுறுத்த திடீரென்று எழுந்து மீண்டும் விழும். இப்படத்தில் தீமை கடைசிவரை விழவேயில்லை. அர்ஜீன், கிறிஸ்த்தவ அமைப்பிலிருந்து வெளியேறியபோது குடும்பம் இருந்ததா என்று தெரியவில்லை. நம்பும்படியான பின்னல் இல்லாதபோதும் மனவளர்ச்சிக்குன்றியவள்தான் அர்ஜீன் மகள் என்று தெரிகிறது. காலத்தைக்கணக்கிட்டால் எப்படியும் குறைந்த பட்சம் பதினைந்து வருஷங்களாவது ஆகியிருக்கும். இக்கட்டத்தில் பெரியதாதாவாகி தொழில் எதிரிகள் மூலமாக துரத்திவந்து சுடப்பட்டு கடலோரத்தில் கிடக்கிறான். அரவிந்சாமி தனிமையில் தவம்செய்கிறாரா? ஜெபம் செய்கிறாரா? என்றேத் தெரியவில்லை. ஏனென்றால் கிறிஸ்த்துவே ஆனாலும் முழந்தால் பணிந்துதான் ஜெபம் செய்வார். நெஞ்சை நிமிர்த்தி யாரும் ஜெபிப்தில்லை. ஒருவேளை, ஜெபத்திலிருந்து, தவத்துக்கு மாறுங்கலையை முன்வைப் பதாகக்கூட இருக்கலாம்.

தப்பா நெனைக்காதிங்க. ஒருக்காட்சிக்கும் இன்னொருக் காட்சிக்கும் உள்ள முரண்பாடுகள் குறிக்கிடுகிறபோது அதைச் சுட்டாமல் போகமுடியவில்லை. ஆரம்பக்காட்சியில் ஆலயத்தில் ஜெபம் செய்யும்போது பையன் பக்கத்தில் சுத்தி சுத்திக் கத்துவான் அவர் பர்ஸை திருடுவான். சுவற்றில் ஒண்ணுக்கு அடிப்பான். பையனை சட்டைசெய்யாமல் ஆழ்ந்த பக்தியில் இருப்பார். மேற்சொன்னக் காட்சியில் சற்று தூரத்தில் சத்தம் கேட்டதும் காப்பாற்ற ஓடுகிறார்.

அதுகூட பராவாயில்லை, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுக்காக உயிர் காப்பாற்றியவனையே (அதிலும் முன்னால் பழகிய மனிதன்) மீண்டும் பழிவாங்கும் வசனம் பேசுவது என்ன கொடுமை. பகைவராயிருந்தாலும் வீடுதேடி வந்தவரை இன்முகத்தோடு உபசரிப்பதுதானே தமிழர் பண்பாடு என்பதெல்லாம் வெறும் கேலிக்கூத்தான கதைகள் மட்டும்தானா? ஒருவேளை, அர்ஜீன் குற்றுயிரா யிருக்கும் இருக்கும். தருவாயில் கண்ணை மூடித்திறக்கும்போது அரவிந்சாமி எதேசையாக அவ்வழியாகப் போவதைப்பார்க்க, வேறு நபர் மூலமாக காப்பாற்றப் பட்டிருந்தால்கூட பழிவாங்க ஒரு காரணம் இயல்பாக கிடைத்திருக்கும். சரி அது அவர்கள் விஷயம்.

5 அர்ஜீனைக் காப்பாற்றப்போய்,  அரவிந்சாமி ஆயர் விபச்சாரம் செய்கிறார் என்று கிராம மக்களால் இழுத்து வரப்படுகிறார். இரு பெண்களும்தான். ஆரம்பத்தில், ஏசு விபச்சாரியை மன்னித்த விஷயத்தைத் திசைதிருப் பியதைப்போலவே இங்கும் ஒரு மாபெரும் திசைத்திருப்பல். இதுதான் கிளைமாக்ஸ் அநியாயம். கிறிஸ்த்து இறுதியாக தன் மக்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும், அதிகார வர்க்கத்திற்கு எதிராகத் துணிந்து நின்றதின் அடிப்படையில் ஆட்சியாளர்கள் அவரை கொடூரமாக சிலுவையில் அரைந்தனர். ஆனால், ஏசு என்ற பிம்பமான அரவிந்சாமி பாத்திரத்திற்கு விபச்சாரத்தைக்காரணம் காட்டி அதேப்பரபரப்பை, பதட்டத்தை, ஒத்தத்தன்மையை இக்காட்சிக்கு தரப்பட்டது ஏன்? ஜெயமோகன் பயந்திருப்பார்போல பெண்களை அவ்வளவாக கொடுமைப் படுத்தவில்லை. இழுத்து வரப்பட்டது இரண்டு பெண்கள். ஆனால் ஒரே ஒரு பெண்ணிடம் மட்டும் விசாரணையை நடத்தி வெறும் தலையசைப்பைமட்டும் பதிலாகப் பெற்று நீதி வழங்குகிறார். இன்னொரு முக்கியமான விஷயம். கற்பில் இவ்வளவு மூர்க்கத்தனமாக அக்கறை எடுத்துக்கொள்கிற அன்பற்ற கிராமமக்கள். பிரசவத்தின் போது மட்டும் தனியாக எப்படி வாலிபனை உள்ளே அனுமதிப்பார்கள். கதையாளர் மூன் யோசனையாகத்தான் கதை நடக்கும் காலத்தை எதையும் குறிப்பிட வில்லை. ஆனால், அவர்களின் உடை அலங்காரம் வாழ்வியல் முறையைப்பார்த்தால் எப்படியும் இருபது ஆண்டுகளுக்கு முன்தான் இருக்கும். அக்காலகட்டத்தில் கிராமத்தில் பிரசவம்பார்க்க ஆயிரம் கிழவிகள் இருந்திருப்பார்கள். இதையெல்லாம் படைப்பாளர்கள் ஏனோ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

இதற்கிடையில் கெட்டவர் வலையில் நாயகன் சிக்கிக்கொள்கிறான். நல்லவர் சிறைசென்று திரும்புகிறார். இப்போது கெட்டவரிடமா? நல்லவரிடமா யாரிடம் இருப்பது என்று நாயகனுக்குத் தவிப்பு ஏற்படுகிறது. காதலியைப்பார்த்ததும் புலம்புகிறான். நான் அதிக பாவம் செய்துவிட்டேன் என் பாவங்கள் மன்னிக்கப்படாது என்று கவலையில் முழ்கிறான். மனவளர்ச்சிக் குன்றிய பெண் அவனுக்கு மன்னிப்பைத்தருகிறாள். ஆனால்,  கெட்டவர் தனக்கு சாதகமானவனை தன்னிடம் இருந்து மகளே பிரிக்கிறாள் என்று மகளையே கடலில் தள்ளிவிடுகிறான். கெட்டவருக்கும், நல்லவருக்கும் நீண்டநேரம் ஏதோ ஒரு போராட்டம் நடக்கிறது. (என்ன போராட்டம் யாருக்குத்தெரியும்) நீதான் ஜெயிச்சே, இல்ல நீதான் ஜெயிச்சே என்று மாறி மாறி போட்டிப் போட்டபடி படம் நகர்கிறது.

கடலில் விழுந்த பொண்ணு எப்படியோ மருத்துவமனையில் இருக்கிறாள் காதலர்கள் ஒன்னு சேருகிறார்கள். சார், அர்ஜீன் இவ்வளவுகாலம் தன் உடல் பெலத்தை மூலதனமாகக் கொண்டு நார்மலாக ஓரளவு பார்க்கும்படி நடித்துவந்தார் சார். இதில உங்கப்பார்ட் ஒரு பாட்ஷா ரேஞ்ஜிக்கு வரும்னு சொல்லிட்டாங்களோ என்னவோ தெரிலசார். இவ்வளவுநாள் காப்பாத்தி வச்சிருந்த பேரஎல்லாம் இந்த ஒரு படத்துல கெடுத்துக்கினார்சார். படத்தில பெரியதாதா சார். மீன் கூடையில துப்பாக்கிலாம் வெச்சிக்கடத்துறார்சார். பலபேர கொண்ணுட்டார் சார். முக்கியமா கதாநாயகன் அப்பாவக்கூடசார். கடைசியில சொம்மா கண்துடைப்புக்குகூட யாரும் சாகவும் இல்ல. போலீஸ் யாரையும் கைதுசெய்யவும் இல்லைசார். ஜெயமோகன் சார் இத மட்டுந்தான் எதார்த்தத்தோடு சரியாகப் பொருத்தியிருக்கார்சார். என் மனசு இன்னொரு யோசனை சொல்லுதுசார் மடையா அப்பிடியில்லடா சாரோட எண்ணம் பாதிப்படத்திலயே நிறைவேறிவிட்டது. (ஏசுவின் மீது மாற்றுக்கருத்தைத் திணித்ததின் மூலம்) பிறகு யாரை எதற்காக சாகடிக்கவேண்டும். கெட்டவர் பெரிய கதாநாயகர் அவரைச் சாகடித்தால் நல்லாயிருக்காது. கிறிஸ்த்தவர்களின் கண்துடைப்புக்காக ஏசுவின் பிம்பமும் வாழவேண்டும். அதனால, யாருக்கும் தண்டனைவேணாம். போ, பிரியா சுத்தட்டும். மக்களே, நான் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் சொல்லவில்லை. படத்தில் இருக்கும் உண்மையைச் சொல்லுகிறேன். கொலை செய்கிற நபரை தண்டனையில்லாமல் தப்பவிடுகிற படைப் பாளர்கள். இருவரும் ஒத்து உடல் உறவுகொண்டதை மதப்பின்னணியில் மாபெறும் குற்றமாகத் திரிக்கிறார்களே? படைப்பாளர்களுக்கு அழகா?

முன்பெல்லாம் ‘தரை‘ என்ற அமைப்பில் திரையிடப்படும் உலக சினிமாவிற்குப்போவேன். அந்தக் கட்டத்தில் ‘தீ செவன்த் சீல்‘ The Seventh Seal   என்ற  படம் போட்டார்கள். அப்படம் முழுக்க கடவுள் என்று நம்பப்படுகிறவர்க்கும் ஏறக்குறைய சாத்தான் என்று சித்தரிக்கப்படுகிறப் பாத்திரத்திற்கும் மனிதனின் எதார்த்த வாழ்வை சூதாட்ட அளவிற்கு ஒப்பிட்டு விவாதங்கள் போகும். ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டிப்படிக்கும் எனக்கே அதன் கதையை உள்வாங்கமுடிந்தது.  அனால், கடல் படத்தில் அப்படி நியாயமான விவாதங்களைக் கிளப்ப தவறிவிட்டது.

சரி கடல் படத்தின் மூலம் என்னதான் சொல்லுகிறார்கள் ஒரு வரிக்கதையாகச் சொல்வேண்டுமென்றால் எனக்குப்புரிந்தளவில் ‘இந்தச் சமூகத்தில் ஏசுவும், சாத்தானும் வாழ்கிறார்கள். வாழ்விழந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், தற்காலச் சூழலில் அவர்களை மீட்டுக்கொள்கிற ஆதாவது மன்னிக்கிற பண்பு, அன்பு குழந்தைத் தனமானவர்களிடம்தான் இருக்கிறது. என்கிற வாதத்தைத்தான் வைகிறார். இக்கருத்து உண்மையானால் நானும் வரவேற்கிறேன்.  ஆனால், குழந்தைத் தனமானவள்  காதலியாக இருப்பதால் அவள் பேச்சை மதிக்கிறான். மற்றபடி எல்லா நபர்களுகுமான தீர்வாக எடுத்துக்கொள்ளமுடியுமா?

இவைகளைக்கடந்து மனம் மகிழ்ந்த இடங்கள்

இரவுநேரம். லேசான நீலநிற வெளிச்சத்தில்  கடற்கரையோரம் தொடங்கி அதன் பரந்து விரிந்த இடத்தைக் காட்டி நடு மையத்தில் சேடோவுடன் வெள்ளை எழுத்து மெதுவாகத்தோன்றி மறையும் பாருங்கள் அப்பா. அவ்வளவு அழகு. இறுதியில் கடலில் எடுத்தவிதம்மும் பாராட்டுக்குறியது. இடத்தின் அழகும், ஒளிப்பதிவும், பாடலுந்தான் கைக்கொடுத்துள்ளது.

துளசி பாவத்தை மன்னிகிற விதம் எல்லாருக்குமான தீர்வாக இல்லாமல் போனாலும், அவள் மிகச்சுலபமாய் செய்கிறாள்  அது சாத்தியமா என்று பார்க்க பார்வையாளர்களுக்கு கேலியாக இருக்கலாம். ஆனால், ஒரு மனிதனை மன்னிக்க இந்த மனம் மட்டுந்தான் வேண்டும். மிகச்சுலபமாக  சக மனிதனுக்கு கிடைக்கவேண்டிய ஒன்றுதான். இது இல்லாமல்தான் வாழ்வின் போராட்டம் கொடியதாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் எழுத்தாளர் நிற்கிறார்.

குறிப்பு:(நான் படம் பார்த்தது 03,02,13 மதியக்காட்சி. அதன் ஆபத்து மிக நுணுக்கமாக வைத்திருப்பதாலும். படம் முழுக்க முரண்பாடான கேள்விகள் கிடப்பதாலும், மதம்சார்ந்து சட்டென நிராகரிக்கும் விதமாக கருத்தை பதிவு செய்யக்கூடாது என்பதற்காகவே நிதானமாக  இப்படத்தை அனுகநேர்ந்தது)
ஜே .டேனியல்

Monday, January 28, 2013

கவிதை,

அழகிய வார்த்தை


அப்பா,
ஒரே ஒரு முறை
 
‘உன் நெஞ்சுக்குழியை மிதித்துக்கொல்லுவேன்’
அந்தப் புனிதமான வார்த்தையை
பள்ளி வெள்ளைத்தாளை நீட்டியபோது
உழைப்பின் முறுக்கேறிய
கன்னத்தின் நரம்புகள்
புடைத்துக்கொள்ளச் சொன்னது.
அதன் பிறகு நான் கேட்கவேயில்லையப்பா

வாழ்த்தும், அழகிய வார்த்தையைச்சொன்னபோது
உங்கள் கண்கள் ரத்தச் சாயலைத்தரித்துக்கொண்டு
அப்பழுகற்றுக்  காட்டியதை
என் உயிர் உள்ள மட்டும்
மறக்கவே முடியாதப்பா


சுகவீனத்தில் தோளில் சுமந்த  கரங்கள்
நெஞ்சுக்குழியை நெறிக்குமா? 
தாத்தாவின் கழுவேற்றப்பட்ட  தோள்களின் திமில்கள்
உங்களில் மீட்சி பெறவும்
உங்கள் குடல் வறண்ட தேகம்
என்னில் புத்துணர்வு பெரும் என்றும்,
பள்ளி வெள்ளைத்தாள் சுழிக்கப்பட்டதும்
நிராசையான  அன்பின் வெளிப்பாடு -என்று
இன்றைக்கும் நினைக்கிறேன்

அப்பா
ஒரே ஒரு முறை மீண்டும்
உன்னத வார்த்தையை உதிர்த்துவிடுங்கள்
நிகழ்காலத்தில் நீங்கள் உதிர்க்காத வார்த்தையை
எதிர்காலத்துக்கும் சேர்த்து யரெல்லாமோ
அதிகாரத்தொனியோடு  உதிர்த்துவிடுகிறார்க்ள்.
அதில் உங்களைப்போல் உள்ளன்பும் வைத்திருக்கவில்லை.
இரைத்தேடி அலையும் மிறுகத்தின்
தீராப்பசியே மிஞ்சியிருக்கிறது.

சுழிக்கப்பட்ட வெள்ளைத்தாளைக் கண்டும்
என் நெஞ்சுக்குழியை மிதிக்காமல் விட்டதால்
உங்கள் பசியில் சுரந்து வடிந்த
ஈரநெஞ்சத்தை, கூடுதலான கையின் விரலைப்போல் சுமந்தலைகிறேன்.
நீங்கள் கற்பனை செய்த பொறியாளரிடத்திலும், வைத்தியரிடத்திலும் சுலபமாகக் கிடைக்கக்கூடாத நித்தியச் சுரப்பியப்பாஅது

வாழ்க்கைப்பிடிப்பற்றுத்திரியும்போதும்
தைத்திருக்கும், பரந்து விரிந்த சாந்தம்
எழுத்தைச் சுமக்கும் எந்த வெள்ளைத்தாளும்  ஈடுசெய்யமுடியாதென்று
நீ படுக்கையில் விழுந்ததும், நான் தூக்கியபோது
என் நெஞ்சைத்தழுவி சொன்னபோது
மீண்டும் அந்த அற்புத, அழகிய வார்த்தையை
நினைகிறேனப்பா.

ஜேடி