திண்டிவனக்கத்தி
சம்பத் சாப்பிடும்போது, பெயர் சொல்லி அழைத்ததுபோல், மூணாவது வீட்டு பெண்நாய் வாசலில் வந்து ஓரமாக நின்றது. இதற்குமுன்பு அங்கு வந்ததில்லை. புதிய இடமானதால், வெளியேறும் சூழல்களை, அவதானித்துக்கொள்வது, அதன் இயல்பாய் இருந்தது. சுற்றும் மூற்றும் பார்த்து பின்னங்கால்களை மடித்து, வால்பகுதி தரையில்பட உட்கார்ந்துகொண்டது. சம்பத் வீட்டு வராண்டா மூலையில், கிரில் கம்பிகளில் சாதி ஆண்நாய் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அது உடல் முழுதும் கறுப்பாகவும், முக்கிலிருந்து நெற்றிவரை தீச்சுடர் ஏற்றியிருப்பதுபோல், செவிலி நிறத்திலும் இருந்தது. அருகில் கழுவாத சில்வர் கிண்ணம் இருந்தது. சாதியற்ற பெண் நாயைப்பார்த்து குரைக்கவில்லை. பாசத்தோடு அருகில் அழைக்கும்படி, அடிவயிற்றிலிருந்து மெல்லிய கீச்சுகுரலில் கத்தியது.
பெண்நாய் சுற்றுச் சூழலைப் பார்ப்பதுபோலத்தான், சாதி ஆண்நாயையும் பார்த்தது. பார்வை நீடிக்கவில்லை. வீட்டின் உள்ளறையை நோக்கியே பார்வை இருந்தது. சம்பத் வீட்டில் எழுந்த விசேசமான சமையல் வாசனைதான், சாதியற்ற பெண்நாயை அங்கு அழைத்து வந்திருக்கிறது. சம்பத், பெண்நாய் வந்து உட்கார்ந்ததை முதலிலேயேக் கவனித்தார். அப்போதெல்லாம் கரிசனை மனதோடுதான் அமைதியாக இருந்தார். சாதி ஆண்நாய், பெண் நாயைப் பார்த்து பாசத்தில் முணகியவுடனே, சம்பத் சாப்பிடும் கையை உதறிவிட்டு பதற்றத்துடன் வெளியே ஓடிவந்தார். வந்தவர், பெண்நாயை அவலட்ச்சனமாக நினைப்பதுபோல் கோபத்தோடு அங்குமிங்கும் கல்லைத் தேடி அடிக்க மிரட்டினார். பெண்நாய் எழுந்து சற்று விலகி ஓடி, அவரை மீண்டும் திரும்பிப் பார்த்தது. சம்பத் கல்லை எறிந்தார். கல் கருணைகாட்டி நாய்மீது படாமல், சுற்றுச் சுவரில் பட்டுச் சிதறியது. ஒருவேளை சம்பத் வீசிய கல், அந்தச் சாதியற்ற பெண்நாய்மீது பட்டிருந்தால், சம்பத்தின் கோபம் அதோடு தீர்ந்திருக்கும். யாருடைய விதியோ, சம்பத் இன்னொரு முறை வரட்டும் தீர்த்து கட்டிவிடுகிறேன். என முணுமுணுத்துக்கொண்டு திரும்பினார்.
இரண்டாவது நாள், பெண்நாய் வரவில்லை. சம்பத் வீட்டின் சுற்றுச்சுவர் ஓரமாக சிறிய அறையிருந்தது. அதில் தேவையற்ற பொருட்கள் குப்பையாகக் கிடந்தது. பார்வையில் படும்படிதான் அந்தச் சிறிய அறையிருந்தது. சுத்தப்படுத்ததும் எண்ணம் நீண்ட நாட்களாக யாருக்கும் வரவில்லை. நேற்று சாதியற்ற பெண்நாய் வந்து போனபிறகுதான், சம்பத்திற்கு அந்த அறைமீது கவனம் வந்தது. எதோ ஒன்றைத் தேடுகிற பதட்டம் இருந்தது. பாதி ஒழுங்கு படுத்தியபோது அந்தக்கத்திக் கிடைத்தது. எவ்வளவு நேரம் அலையவிட்டாய். பெருமூச்சு விட்டார். சற்றுநேரம் வசமாகப் பிடித்துப் பார்த்தார். முகத்தில் பொலிவு புதிதாகத்தெரிந்தது. கத்தியை முன்னாகவே வைத்தார். கேட், வாசலைப் பார்த்தார் வெறுமையாக இருந்தது. சம்பத் வீட்டில் நுழையும் முன், சாதி ஆண்நாயின் தலையைத்தடைவி “உனக்கு அறிவு இல்ல. கொஞ்சிக் கொஞ்சி கூப்புடுறே. கால ஒடச்சிடுறேன், முட்டாள் பயலே. ஒரு தராதரம் வேணாம்“. திட்டிக்கொண்டிருக்கும்போது, சம்பத் மனைவி வந்தாள்.
“உங்க வாத்தியார் வேலைய, பள்ளிக்கோடத்துலயே விட்டுட்டு வரக்கூடாதா, பையன்களுக்கு எடுக்கிறப் பாடமேப் புரியுதோ இல்லியோ. நாயிக்கு பாடம் எடுக்க ஆரம்பிச்சிட்டீங்க. உருபட்டா மாதிரிதான்“ அமுதா சிரித்துக்கொண்டே வெளிய வந்தாள். நேராகச் சென்று சிறிய அறையில் இருந்தக் கைத்தியை எடுத்துவந்தாள். சம்பத் பார்த்தார். “ஹே..ஹே கத்திய ஏன் எடுக்கிற அங்கயே வையி“.
“ஏங்க, யாரனா போட்டுத் தள்ளப் போறீங்களா, ஏன் அப்படி பதற்ரீங்க.“
“வெளையாடாத வெய்யி அமுதா“
“இருங்க, என் தம்பி வரான், பின்னாடி தோட்டத்துல இருக்கிற வாழைக் குலைய வெட்டிக்கினு வெக்கிறேன்“
“எங்க எடுத்தியோ, அங்கயேக் கொண்டும்போய் வையி“ என சொல்லிவிட்டு சம்பத் உள்ளே சென்று ஷோபாவில் அமர்ந்தான். ஆண்நாய் கீச்குரலில் கத்தியது. சம்பத் பதற்றமாக ஓடிவந்து வெளியேப் பார்த்தார். அமுதாவின் தம்பி வண்டியை நிறுத்திவிட்டு வந்தான். சம்பத் ஏமார்ந்து, மீண்டும் வந்து ஷோபாவில் உட்கார்ந்தார். மூணாவது வீட்டுக்காரன் பாபு நினைவுக்கு வந்தான்.
பாபு. வயது நாற்பது இருக்கலாம். எதற்கு எடுத்தாலும் ங்கோத்தா போடாமல் சகஜமான வார்த்தை வராது. அத்தெருவில் முதன் முதலாய் குடிவந்ததால், தம்மால்தான் இப்பகுதியில் எல்லா முன்னேற்றமும் வந்ததென்ற பெருமைபேசுவான். அவன் வீட்டின் அருகிலேயேக் கரண்ட்டுக் கம்பம் இருந்தது. தெருக்குழாயும் வீட்டின் எதிரில்தான் இருந்தது. தண்ணீர் பிடிக்க சுலபமாய் இருக்குமென்ற நகராட்சி ஊழியருக்கு கையூட்டுக்கொடுத்து அவன் வீட்டில் எதிரிலேயேப் போட்டுக்கொண்டான். தெரு கோடியில் இருக்கிறவளுங்கக்கூட இங்க வந்துதான் தண்ணி புடிக்கிறாளுங்க. தேங்குறத் தண்ணியால சாக்கடை நாற்றம். இருசக்கர வாகனத்தில் வரவன் இங்க வந்துதான் வேகம் எடுக்கிறான். பாபுக்கு எரிச்சலாக இருந்தது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் சம்பத் வந்த இருசக்கர வாகனம் தண்ணீரைச் சிதறடித்துவிட்டது. பாபு வீட்டு ஓரம் கொட்டப்பட்டிருந்த மணலை சேர்த்துக்கொண்டிருந்ததை சம்பத் கவனிக்கவில்லை.
“ங்கோத்தா, ஒண்ணாவது பசங்களுக்கு பாடம் எடுப்பாம்போல. ஆளு இருக்கிறது கண்ணுக்குத் தெரிதாப் பாரு. இங்க வந்தாதான் ஆம்பிள வீரம் வந்துடுது. மயிரான்களுக்கு“
முதல் சில வார்த்தைகள் சம்பத்துக்குக் கேட்டது. சம்பத் திரும்பிப் பார்த்தபோது, பாபு வேறுபக்கம் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தான். சம்பத், நம்மைதான் திட்டுகிறான் என்று புரிந்துகொண்டார். ஏதும் பேசத்தோணாமல் வந்துவிட்டார். பெண்நாய் வந்து போனபிறகுதான் நினைவுக்கு வருகிறது. “அன்னக்கி, மூஞ்சிக்கு நேராகக் கேட்டிருந்தா தெரிஞ்சிரிக்கும்“ என்று மனதுக்குள்ளாகவே சற்று கோபமாகப் பேசினார்.
அமுதாவின், தம்பி பிரகாஷ் வாழைக்குலையைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தான். வலக் கையில், வாழைத்தாரும், இடக்கையில் கத்தியும் இருந்தது. சம்பத் பிரகாஷைப் பார்த்து “கத்தியக்குடுபா“ வாங்கிக்கொண்டார். வெளியேச் சென்றவர் கையில் கத்தியை வைத்துக்கொண்டே, தெருவழியே, மூணாவது வீடுவரைப் பார்த்தார். பாபு வீட்டு மணல் திட்டில் பெண்நாய் மரவட்டையாக சுருண்டு படுத்திருந்தது. சம்பத் கத்தியை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டார்.
பாபு, சம்பத் இருக்கும் அந்தத்தெரு மதியநேரத்தில் வெரிச்சோடிக்கிடக்கிறது. பகல் நேரத்தில் பெரும்பாலான வீடுகள் அநாதைகளாக மாறிவிடுகின்றது. சில வீடுகளில் ஒன்று, ரெண்டு வயதானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அநேகமாக தெருவெளிகளைப் பார்க்கக்கூடாத வகையில், அல்லது அவர்கள் இருப்பை வெளியாட்கள் பார்த்துவிடாதபடி வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டு விடுகிறார்கள். அனுதின பாணியாகத்தான் சம்பத், அன்றும் மதியச் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தார். கேட்டைத் திறந்து வண்டியை நேராக வராண்டாவில் நிறுத்தினார். கத்தியை பார்த்தார். வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் சாதி, ஆண்நாய்தான் செக்யூரிட்டி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறது. கழுத்து சங்கலி அவிழ்க்கப்பட்டு சுதந்தரமாக இருந்தது. அதன் சுதந்தரம், கழுத்தின் சங்கலிப் பூட்டப்படாமல் இருந்தாலே போதுமானது என்று அளவில் நிம்மதியாய் இருந்தது. சம்பத் நாயை செல்லமாகக் காதைப் பிடித்து உலுக்கிவிட்டு வீட்டில் நுழைந்தார். டீவியைப் போட்டுவிட்டு, தட்டில் சாதத்துடன் வந்து ஷோபாவில் உட்கார்ந்தார். நாய் வெளிபுறமாகவே இருந்தது.
அப்போதுதான் வெளியில் அந்தக் கொஞ்சல் சத்தம் கேட்டது. சம்பத் பதட்டமாகி தட்டை ஷோபாவின் மீதேப் போட்டுவிட்டு வேகமாக வெளியே வந்தார். சாதி ஆண் நாயும், சாதியற்ற பெண்நாயும், வாயோடு, வாய் முகர்ந்துகொண்டும், ஒன்றின் மீது ஒன்று வலைந்து, எகிறி குதித்துக்கொண்டும் இருந்தது. சம்பத்திற்கு மூர்க்கமான கோபம் தலைக்கேறியது. வஞ்சகமாகச் சிறிய அறையிடம் நெருங்கினார். பெண்நாய் சுதாரித்துக்கொண்டு, கொஞ்சங்கொஞ்சமாக கேட் வாசல்வரை நழுவிக்கொண்டிருந்தது. சம்பத் கத்தியின் அருகில் சென்றதும், சடாரென்று பாய்ந்து கத்தியை எடுத்தார். பெண்நாய் ஒரே குதியில், சாதி ஆண்நாயிடம் இருந்து விலகி தெருவில் பாய்ந்து ஓடியது. சம்பத், கோபம் இன்னும் அதிகமானது தன் காம்ப்பவுண்டுக்குள் இருந்தே குறுக்காக ஓடி, நாக்கைக் கடித்துக்கொண்டு, கத்தியை பெண்நாயைப்பார்த்து மிகவும் பலம்கொண்டு வீசினார். நாய் மணல் திட்டுக்காக ஓடி சந்தில் புகுந்தது. வேகமாகப் பறந்த கத்தி, வாசல் படிகளில் இறங்கிக்கொண்டிருந்த பாபு காதோரக் கன்னத்தில் பட்டு எகிறி மணல் திட்டில் விழுந்து புதைந்தது. பாபு படியில் தடுமாறி தலைக்குப்புற விழுந்தான். சற்று தூரத்தில் சைக்கிளில் வந்துகொண்டிருந்தவன், படியில் விழுந்ததைப் பார்த்தான். கிட்டத்தில் நெருங்கியபோது ரத்ததம் பொலபொலவென்று போய்க்கொண்டிருந்தது. அருகில் வந்தவன் சைக்கிளை ஓரம் நிறுத்திவிட்டு, கூச்சல் போட்டான், “யாம்பா, வீட்ல யாருபா, அய்யோ, மனுஷன் படியில இறங்கும்போது தவறி விழுந்துகெடக்குறாரே ரத்தமாப் போகுதே ஓடிவாங்களே“ கத்தினான். வீட்டில் பாவுவின் மனைவியும், சற்று வயதானப் பாட்டியும் ஓடிவந்தார்கள். பாபு மனைவி “அய்யோ என்னாச்சி, என்னங்க“ கத்தினாள், பாபு கவிழ்ந்து கிடந்தான்.
அதற்குள் சிலர் ஓடிவந்து, “தூக்குங்க, துணி கிழிச்சி எடுத்தாங்க. தண்ணீ எடுத்தாங்க“ ஆளாளுக்குக் கத்தினார்கள்.
சைக்கிளில் வந்தவன், “படியில எறங்கி வந்துகினே இருந்தார்மா. கால் சில்ப்பாயி டமால்னு, கவிழ்ந்தாமாதிரி விழுந்துட்டாரு. தல படியில வெட்டிட்டிருக்கு. நான் வேகமா ஓடியாந்து குரல் கொடுத்து பாக்கும்போது ரத்தம் ஆறா போயிக்கினு இருக்குது.“
பாபு மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார். நடுத்தர வயதானவர் தொட்டு நாடி பார்த்தார். மூச்சைக் கணித்தார். மௌனமாக எழுந்துகொண்டு. “யாம்பா 108க்கு போன் பண்ணுங்கப்பா. சீக்கிரம் தூக்குங்கப்பா. குரல் கொடுத்தார்“. பிறகு மெதுவாக ஜனக்கூட்டத்திலிருந்து வெளியேறிபடி, குரல் தாழ்த்தி “ச்சீ, என்னடா மனுசன் வாழ்க்கை, தவறி விழுந்த ஒடனேவா செத்துப்போவான்“. கமுக்கமாகச் சொல்லிக்கொண்டே போனார்.
சம்பத் “என்னாச்சி, என்னாச்சி“ எனப் பதட்டமாக ஓடிவந்தார்.
எதிர் வீட்டு சின்னப்பொண்ணு, “படியில எறங்கும்போது, கால் எடறி விழுந்துட்டாராம்ணா. படி வெட்டிட்டு இருக்குது. சரியான ரத்தம்போயிடுச்சி“
“அடக்கடவுளே, அதுக்குத்தாம்மா படியில வழுவழுப்பான டையில்ஸ் போடக்கூடாது“. சம்பத் சொல்லிக்கொண்டே மணல் திட்டை நோட்டமிட்டார். கத்தி மணலில் புதைந்ததற்கான தடயம் எதுவும் இல்லை. 108 வாயில் அடித்துக்கொண்டு வேகமாக வந்துக்கொண்டிருந்தது. பாபுவின் கை, கால்கள் உணர்ச்சியற்றுக் கிடந்தது. ஜனங்களில் சிலர் “எட்ட போங்கப்பா, வழிவிடுங்க, புடிங்க, தூக்குங்களேண்டா,“ என்கிற தள்ளு முள்ளுகள் நடந்தன. 108ல் ஏற்றினார்கள். 108ன் வாலிபப் பெண், பையன்கள் பாபுவின் கன்னப் பொட்டில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தார்கள். சற்று நேரம் எப்படிக் கட்டுபோட்டால் நிற்கும் என யோசித்தார்கள். கூட்டத்தாரில் ஒருவன் “ஏம்மா கட்டு போடுறதுக்கு இப்படி யோசிக்கிறீங்களே. போடும்மா சீக்கிரம்“ எனக் கத்தினான்.
சற்று தூரத்தில் மஞ்சள், பச்சை நிறத்தில் பெரிய பெரிய கோடு போட்ட டீசர்ட், ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்தவன், “அட ஏம்ப்பா, இதுங்களுக்கெள்ளாம் தண்ட சம்பளம்பா, இருபத்திநாலுமணி நேரமும் வண்டிய ஓரங்கட்டிட்டு கத பேசிங்கெடுக்குங்க. கட்டு போடத்தெரிதாப்பாரு“
கட்டு போட்ட ஊழியர்களுக்கு கேட்டது. எதுவும் திருப்பி பேசவில்லை. தொழில் தெரியாதவன், அனுபவம் இல்லாதவன் நாக்கில் நரம்பில்லாமல் துணிச்சலாகப் பேசுவது இயல்புதான் என 108 ஊழியர்கள் யோசித்துக்கொண்டார்கள்.
108, பாபுவின் நெருக்கமானவர்கள் சிலரை ஏற்றிக்கொண்டு கிளம்பியது, ஜனக்கூட்டம் கலைந்தது. ஆளாளுக்கு பேசிச்சென்றார்கள். “எனக்கு அப்பவேத் தெரியும் தலைவரே. ‘பாபு சனி மூலையில செப்டிக்டேங்க் வைக்காத குடும்பத்துக்கு நல்ல தில்லனு‘ சொன்னேன் தலைவரே. பாபு கேக்கல“. இன்னொரு, சாரார், ‘மணல் குவியலை வீட்டு எதிரே கொட்டிவைக்கக் கூடாதுங்க. அதான் அதின் வேலையைக் காட்டிடுச்சி'.
இன்னொரு பக்கம் பாவம், புண்ணியங்களைப் பற்றி பேசிச் சென்றார்கள். சம்பத் மெதுவாக வீட்டுக்குள் வந்தான். உடல் நடுக்கத்தில் ஆடியது. பழி வேறுபக்கம் திரும்பியதில் சற்று நிம்மதியடைந்தான். சாப்பிடவில்லை, சாதத்தை எடுத்து டைனிங் டேபிலில் மூடிவிட்டு கிளம்பிவிட்டான். பள்ளிக்கு சென்றாலும் வேலையில் நிலை கொள்ளவில்லை. சம்பத் சிலருக்கு போன் செய்து விசாரித்தார். “தகவல் தெரியவில்லை. இன்னும் வீட்டுக்குத் திரும்பவில்லை“ என்றார்கள். சற்று நிம்மதியாய் இருந்தது. அந்த நிம்மதி அதிக நேரம் நீடிக்கவில்லை. அமுதா போன்செய்தாள். “என்னங்க, நம்ம பாபண்ணே, படியில விழுந்து செத்துட்டாராமே. நீங்க கேள்விப் பட்டீங்களா. நாமகூட படியில, எறங்கும்போதும், ஏறும்போதும் பாத்து நடக்கனுங்க. நானு ஆபீஸ்ல பர்மிஷன் கேட்டு கெள்ம்புறேன். நீங்களும் வந்துடுங்க“
பாபு மறைந்து, வாரம் கடந்துவிட்டிருந்தது. பெண்நாய் சம்பத்தைப் பார்த்தாலே குரைக்க ஆரம்பித்தது. இதற்கு முன்பெல்லாம் அப்படி செய்ததில்லை. சம்பத் இரண்டு மூன்றுநாட்கள் இரவில் மணல் திட்டை நோட்டமிட்டார். எப்படியாவது கத்தியை எடுத்துவிடவேண்டும். எங்கே விழுந்திருக்கும். தோராயமாகக்கூட தெரியவில்லையே. பெண்நாய் அதன் அருகிலேயே படுத்திருக்கிறது. கத்திதான் தன்னைக் காட்டிக்கொடுக்கிற ஒரேத் துருப்புச் சீட்டு. பயந்தான். பெண்நாய், தன்னைப் பார்த்துக் குரைப்பது, சந்தேகத்தை எழுப்புமோ. அத்தெருவழியாகப் போவதை தவிர்த்தான். வேறு பக்கம் சுற்றிக்கொண்டு போனான். அப்படிப் போவது கூடுதல் நேரத்தையும், நெறுக்கடியான வழியாகவும் இருந்தது.
சம்பத் மனைவி கேட்டாள், “என்னங்க, புதுசா இந்தப்பக்கம் வறீங்க“
“பாபு வெயில் நேரத்துல செத்துபோனாரில்ல, கொஞ்சம் பயமாத்தான் இருக்குது“
“நீயெல்லாம் ஒரு ஆம்பள, இந்தக் காலத்துலப்போயி, அதுவும் டவுன்ல இருந்துக்குனு பயந்து சாகுற“ மனைவி, தம்மை பயந்தாங்கொள்ளி என்பதை, சம்பத் மானக்கேடாய் நினைக்கவில்லை. தப்பித்தால் போதும், நிலையில் இருந்தார்.
பெண்நாய் இனப்பெருக்கத்திற்கான நேரம் தொடங்கியிருந்தது. கால்கள் உயரமும், காதுகள் நீண்டதும், வெள்ளையில், சிமெண்டைக் குழைத்த கலறில் இருந்த ஆண்நாய் கடந்த முறை இனப்பெருக்க சமயத்தில் திடீரென பெண்நாயோடு சேர்ந்துகொண்டது. அதன் பிறகு இப்போதுதான் பெண்நாயின் பின் பக்கத்தை முகர்ந்து விட்டு, அருகிலேயேப் படுத்துக் கொள்கிறது. பெண்நாய் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பக்கத்து ஏரியா நாய்கள் சில வருவதைப் பார்த்த கால்கள், உயரமான ஆண்நாய் கர்ஜித்துக்கொண்டே மணல் திட்டை பிராண்டி வேகமாகத் தள்ளியது. பாபு வீட்டின் கதவில் மணல் அடித்தது. உள்ளிருந்து பாபு மனைவியின் தங்கை விஜயா “இந்தச் சனியன்கள் வேற, நிம்மதியா விடுதுங்களாப் பாரு“ என சத்தம்போட்டுக்கொண்டே வெளியே வந்தாள். கால்கள் உயரமான நாய் இன்னும் வேகமாகத் தீய்த்தது, கத்தியின் நடுப்பகுதி கருப்பாகத் தெரிந்தது. விஜயா, அதை கவனிக்கவில்லை. அதட்டினால் போகாது என கொம்பைத் தேடினாள், அப்போதுதான் பெண்நாய் வேகமாக குரைத்துக்கொண்டு, மண்ணைக் கிளரியது. விஜயா திரும்பிப் பார்த்தபோது மணலில் லேசான கறுப்பு தெரிந்தது. என்னவென்று பிடிபடவில்லை. பெட்டை நாய் ஆக்ரோசமாகக் கத்திக்கொண்டே கிளரி, கத்தியை வாயில் கவ்வி வெளியே இழுத்தது. விஜியா அளறி அடித்துக்கொண்டு, உள்ளே ஓடினாள், “அக்கா, மணல்ல கத்தி பொதச்சி வைச்சி இருக்காங்கக்கா“
பெண்நாய் கத்தியைத் தூக்கிவந்து வராண்டாவில் போட்டது. கத்தி கூர்பகுதியில் மணல் துகள்கள் அப்பிக்கொண்டிருந்தது. ரத்தக்கறை இருந்தது. பெண்நாய் குரைத்தது. “அக்கா, மாமா படியில இடுச்சி சாவலக்கா, யாரோ வெட்டிட்டு கத்திய மணல்ல பொதைச்சியிருக்காங்கக்கா.“ பாபு மனைவி அதிர்ச்சியடைந்து, விழுந்தாள். பாட்டி, “அய்யோ, என் புள்ள யாருக்கு என்ன தீங்கு செய்தான். யாரு இப்படி பண்ணினது தெரியலையே“ அக்கம் பக்கம் கூடிவிட்டது. நாய் சம்பத் வீட்டு பக்கம் பார்த்து குரைத்துக்கொண்டிருந்தது. கத்தி வாசலில் கிடந்தது. பார்த்தவர்களின் அதிர்ச்சியும், அழுகையும் அத்தெருவை மீண்டும் பதற்றத்தில் ஆழ்த்தியது. பெண்நாய் குரைத்துக்கொண்டே சம்பத் வீடுவரை ஓடி, நின்று மீண்டும் மணல் திட்டிடம் ஓடிவந்தது. பாபுவின் மனைவியைத் தண்ணீர் தெளித்து, முகத்தைத் துடைத்தார்கள். அவள் கண் விழித்தாள்.
“அய்யய்யோ, எங்க ஊட்டுக்காரக் கொண்ணுட்டாங்களே. அடப்பாவிங்க யாருடா அப்படிப் பண்ணினது. உங்களுக்கு எதுனா தீங்கு செய்திருந்தாக்கூட எங்கிட்டச் சொல்லியிருக்கக் கூடாதா. இப்படி அநியாயமா கொண்ணுட்டீங்களே“ அழுது புலம்பினாள்.
யாரோ ஒரு அறிவாளி நாய் ஏன் வாத்தியார் வீட்டாண்டயே ஓடி ஓடிக்காட்டுது “யாரும் கத்தியை கையில எடுக்காதீங்க. பிளாஸ்டிங் காகிதம் இருந்தா, அதுல சுத்தி எடுங்க“ என்றான். பாபு மனைவி கத்தியை உற்று பார்த்தாள். காகிதத்தால் சுத்தி எடுத்து கிட்ட வைத்துப் பார்த்தாள்.
“அமுதா, கொஞ்சம் கத்தியிருந்தாக் குடுமா, தோட்டத்துக்கு போற வழியில முள்ளு வளந்து பேயாட்டம் நிக்கிது. பாம்பு வருமோ, பல்லிவருமோனு பயம்மா இருக்கிது. என் வீட்ல இருந்த கத்தியக் கைபுடி போட்டாரேன்னு கொண்டுபோனார், ஒரு வாரமாச்சி, கத்தி வீட்டுக்கு வந்தபாடில்ல.“
“அதுக்கென்னக்கா, உள்ளவாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான், எங்க வீட்டுக்காரர் ட்டூர் போயி வரச்சொல்லோ, திண்டிவனம் பக்கத்திலயிருந்து இந்தக் கத்திய வாங்கியாந்தாரு“ தினத்தந்தி பேப்பரில் சுத்தியபடி இருந்தக் கத்தியை அமுதா பிரித்தாள்.
“என்னம்மா, மொத மொத எனக்குக் குடுக்கிற. வேணாம் வச்சிக்க. எங்கக் கத்தி வந்தபிறகு, பாத்துக்கிறேன்“ என பாபு மனைவி திரும்பினாள்.
“அட என்னக்கா, இதுலபோயி சாங்கியம்லாம் பாத்துக்கினு“. எனச் சிரித்துக்கொண்டே “அக்கா, இந்தமாதிரி கத்தி நம்ம பகுதியில யாராண்டையும் இருக்காதுக்கா, எங்க ஊட்டுக்காராண்ட, கத்தி வித்த ஆளு சொன்னானாம், ‘சார், நம்ம கத்திக்கு தமிழ்நாடு முழுதும் தனி மரியாத சார். ஆணுக்கும், பொண்ணுக்குமான காதல் விஷயத்த மட்டும் அதுங்காதுல கேக்குறாமாதிரி, பேசிடாதீங்கனு சொன்னாராம்“ சம்பத் மனைவி கொஞ்சம் பாலுணர்வு கலந்துபேசி சிரித்தாள். பாபு மனைவியும், “அம்மாடி, இந்தக்கத்திக்கு உயிர் இருக்கிதா என்ன“. பாபு மனைவி சற்று நேரம் திடுக்கிட்டு “இந்தக்கத்தி அந்த மூணாவது வீட்டு கத்திதான். எனக்கு நல்லாத் தெரியும்,. நாங்க, அவங்களுக்கு சொந்தமா, பந்தமா, கொடுத்தவங்களா, வாங்கனவங்களா ஒன்னுமே இல்லியே. அநியாயமா இருக்கிதே.“ எல்லாரும் மிரண்டு, ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ந்தார்கள்.
“அந்தாளு வாத்தியாரு, நல்லவர்னு பாத்தா இப்படி பண்ணியிருக்கிறானே. அவனைச் சொம்மா விடக்கூடாது. போலீஸ்ல புடுச்சிக்கொடுத்து, நாறடிக்கனும்“
“யாருய்யா அது, போலீஸ்ல புடிச்சிக்குடுத்தா. தண்டம் கட்டிட்டு வந்துடுவான், இன்னும் நாலுபேர கொலை பண்ணுவான். அவனை, நாயடிக்கிறாமாதிரி வீட்டாண்டையே அடிச்சி, கை, கால ஒடச்சிபோட்டுடனும்“ என்றான் விஜயா வீட்டுக்காரன்.
“ஏம்பா, இருங்கபா அவசரப்படாதீங்க. அந்தாளும் இந்தத் தெருவுல ரொம்ப நாளாக் குடியிருக்கிறாரு. நம்ம ஏரியா பசங்களுக்கு நெறைய உதவி செய்திருக்காரு. கொலை செய்யக்கூடிய அளவுக்கு போயிருப்பாரா. கொஞ்சம் பதட்டப்படாம விசாரிங்கப்பா.“ என்றார் ஒருவர்.
“ரத்தம் குடிச்சக் கத்திதான், தெளிவா சொல்லுதேய்யா, அப்புறம் என்னயா, விசாரிங்க, விசாரிங்கனு பாட்டு பாடுறீங்க.“ பாபு மனைவியின் சொந்தக்கார வாலிபன்
“யோ, போங்கையா, நாங்க பாத்துக்கிறோம், டேத் தம்பி, அந்தத் தடிய எடுத்துக்கடா அவன் வீட்டை அடிச்சி நாசமாக்கிடுவோம், அந்தக் கத்தியக்குடுடி அவன் கழுத்த வெட்டி எடுத்தாறேன்.“
நாலைந்து வாலிபர்கள் ஆவேசமாக ஓடி தடிகளையும், இரும்புக் கம்பிகளையும் எடுத்துகொண்டு சம்பத் வீட்டிற்கு ஓடினார்கள். அந்த நேரம்பார்த்து சம்பத் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு அருகில் வந்துவிட்டார். ஓடியவர்கள், ஆவேசமாக சிலர் வீட்டின் லைட்டுகளை அடித்து உடைத்தார்கள், கல்லால் சன்னல் கண்ணாடிகளை நொறுக்கினார்கள், சிலர், “டே, வந்துட்டாண்டா, மாமாவைக்கொன்ற கொன்ற கொலைகாரன்“ என்று, ஓடினார்கள்.
சம்பத், வண்டியைப் போட்டு விட்டு தலைத்தெறிக்க ஓடினார். விஜயாவின் கணவர் கையில் இருந்த கத்தியைப் பிடுங்கியவன், “அண்ணே எங்கிட்ட குடுண்ணா, அவனை ஒரே வெட்டுல காலி பண்ணிடுறேன். ஆளை வெட்டுறதுக்குத்தான் திண்டிவனம் போயி கத்தி வாங்கியாந்தியா, அந்தக் கத்தி உன் தலையை வெட்டுதான்னு பாக்கிறேன் வாடா நாயே“ என்று ஆவேசமாக சம்பத்தின் தலை முடியைச் சேர்த்துப் பிடித்து, மடக்கி வேகமாக ஓங்கினான்.
“தம்பி வேணாம்பா, நான் வேணும்னு செய்யலபா, என்னை விட்டுபா. தம்பி“ சத்தம்போட்டு கத்தினார்.
சம்பத் மனைவி ஓடிவந்து, “ஏங்க, என்னாச்சிங்க. என்னாச்சி. ஏன் அப்படிக் கத்துறீங்க“ எனத் தட்டினாள். சம்பத் படுக்கையிலிருந்து அளறி அடித்து எழுந்து, முகத்தைத் துடைத்துக்கொண்டு, “அமுதா, கொஞ்சம் தண்ணீக்குடேன்“ அமுதா வேகமாக சமையல் அறை நோக்கி ஓடினாள்.
‘அய்யோ, ஒருவேளை அந்த வாயற்ற ஜீவன்களின் உணர்வுகள்மீது வைத்த காழ்ப்பால்‘ நடந்தவைகள் உண்மையாக நிகழ்ந்திருந்தால், என் நிஜ வாழ்வு, கனவின் முடிவுதானா?
ஜேடி
No comments:
Post a Comment