‘காதல் முகம்‘
நெடுஞ்சாலை நீண்டு கிடக்கிறது. மிகத்தொலைவில் சாலை மரங்கள்தான், கனரக வாகனங்களை வேகமாக அனுப்புவதும், இழுத்துக் கொள்வதையும் செய்வதாகத் தோன்றியது. ஏதோ ஒரு மரம் பிறசவித்த இருசக்கர வாகனம் புள்ளியாகத் தொடங்கி, வரவர உருவம் பெரிதாகிக் கொண்டே வந்தது. அது டேவிட்டின் இருசக்கர வாகனம். அவனை முந்திக்கொண்டு ஒரு வாலிபன், இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்தான். அவன், கறுப்புநிற கூலிங் கிளாஸ், தங்க நிறத்தில் பிரேம் மெல்லியதாக அணிந்திருந்தான். மெருண் கலர் டீசர்ட்டில், மார்பு தசைகள் இடைவெளி விட்டு, தட்டையாக எழும்பி இருந்தது. டீ சர்ட்டில் வெள்ளைக் கலர் போல்டு பாண்ட்டில் ஆங்கில வாசகங்கள் அவனை மெத்த படித்தவனாகக் காட்டியது.
வண்டியின் பின் இருக்கையில் பெண். இருபக்கம் கால்போட்டு, அவனை இறுக்கிப் பிடித்துச் செல்கிறாள். அவள் ஒற்றையாகப் பிரித்து போட்டிருக்கும் துப்பட்டா நாறையின் சிறகுபோல சன்னமான நேர்கோட்டில் பறந்துச்செல்கிறது. அவர்கள் இருவரும் நின்று அணைத்துக் கொள்கிற சூழல் வந்தால் வாலிபன் கைகளின் இடைவெளியோடுதான் அவளை அணைக்க முடியும். வயது அவனைவிட குறைவாகத்தான் இருக்கும். ரோஸ் நிறத்தில் லெக்கின்ஸ் அணிந்திருந்தாள். அவள் லெக்கின்ஸ் கலர் மனதில் பதிந்ததுபோல் மேல் டாப் டிசைன் எனக்குப் பதியவில்லை. ஒருவேளை அவள் வண்டியில் ஒரு பக்கமாக உட்கார்ந்திருந்தால் பதிந்திருக்கலாம். அவர்களுக்கு, எதிர் திசையில் சிகப்பு நிற கார் அதி வேகமாகக் கடந்துசெல்கிறது. சாலை ஓரங்களில் பெரிய பெரிய புளியமரங்கள் இருக்கின்றன. அந்தக் காலங்களில் சாலை மரங்கள் இருவித பயன்பாட்டுக்காக வைத்திருப்பார்கள் போல, ஒன்று, மும்மாறி பெய்யும் மழை சாலையை அரித்துவிடாமல் இருக்க, இன்னொன்று நடை பயணிகள் சோர்ந்து போகாமல் ஓய்வெடுத்துச் செல்லும்படியாக இருக்கலாம். தற்போது இரு செயலுக்கும் அர்த்தமற்றுப் போய்விட்டது. வாகன ஓட்டிகளின் பார்வைக்கு ஏற்றார்போல் மரங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
சற்று தொலைவில் வந்துகொண்டிருந்த டேவிட், எதிரில் ஒருவன், லிப்ட் கேட்பதைப் பார்த்தான். அவனை ஏற்றிக்கொள்ள மனம் தூண்டவில்லை. வண்டியை நிறுத்தாமல் போய்விட நினைத்தான். கொஞ்சம் அருகில் வந்தபிறகுதான், லிப்ட் கேட்பவர், மூன்று மாதம்முன் முகப்புத்தகத்தில் அறிமுகமான பெண்ணின், இணையர் முகமாகத் தெரிந்தது. டேவிட் வேகம் குறைத்து நிறுத்தினான். சாலையில் டயர் தேய்ந்த சத்தம் கேட்கிறது. சாலையும், டயரும் புணர்ந்த அடையாளம் கோடாக விழுந்திருந்தது. நரேசுக்கு கொஞ்சம் முன்பாகவே டேவிட் இறங்கினான். வணக்கம் வைத்தான். பதிலுக்கு நரேஷ் வணக்கம் வைக்கவில்லை. ‘வாங்க சார்‘ என்பதாகத் தலையை மட்டும் ஆட்டினான்.
டேவிட், வண்டியிலிருந்து இறங்கி ஓரமாக வந்தான். “என்ன சார், நீங்க மட்டும் தனியா நிக்கிறீங்க. உங்க ஒய்ப் எங்க“
“அவளுக்கு லேசா அடிப்பட்டுடிச்சி, நீங்க ஒரு எல்ப் பண்ணனும். இன்னும் கொஞ்சம் ஓரமா வறீங்களா?“
டேவிட் பதட்டத்துடன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, “என்ன, ஆச்சி சார்” ஆவலாகக் கேட்டான். புளியமரம் மறைவிலிருந்து இன்னும் மூன்றுபேர் இரு பக்கமுமாக வந்து டேவிட்டைச் சுற்றினார்கள்.
“பாத்தியா மாப்ள. படுக்கையப் பகிர்ந்துக்கிற எனக்குக்கூட இவ்ளோ பதட்டம் வராதுபோல. சாரு எவ்ளோ எமோஷனல், ஆகுறாருப் பாத்தியா. போங்க சார், மரத்தடி கீழதான் என் பொண்டாட்டி விழுந்து கெடக்குறா. போங்க சார்“. என்றான் நரேஷ்.
டேவிட்- “என்ன சார். ஒரு மாதிரியா பேசுறீங்க“
கூட இருந்த இன்னொருத்தன், டேவிட்டை நெருங்கி முதுகைப் பிடித்துத் தள்ளினான். “டே, போடா. மரத்துக்குப் பின்னாடி போ. அவுங்க நெலமையப் பாரு“ என்றான்.
அந்த இடம் விளைநிலங்களிலிருந்து மனைநிலங்களாக மாறியிருந்தது. புதிய மச்சு வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. காற்றோட்டம் தேடி வந்தவர்கள், நெரிசலின் வசதியைத் தேடி மீண்டும் போயிருப்பார்கள்போல, பல வீடுகள் பூட்டியேக்கிடந்தது. புளிய மரத்தில் மூணரையடி உயரத்தில் ஒரு ஆணியும், அதற்குமேல் இரண்டடி உயரத்தில் இன்னொரு ஆணியும் அடிக்கப்பட்டிருந்தது. மரத்தின் எதிர்முணையில் அதே அளவில் கீழும் மேலுமாக இரண்டு ஆணி அடிக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தின் இரண்டு ஆணியிலும், மெல்லிய கம்பிகள் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. டேவிட் ஏதோ விபரீதம் நடக்கப்போவதாகவே நினைத்து இப்படியும், அப்படியும் பார்த்தான். சாலையில் வாகனங்கள் போனாலும் வந்தாலும், நரேஷ் குருப், டேவிட்டை மறைத்துக் கொள்வதும், பாதசாரிகள் போனவுடன் விலகி நின்று கேள்விக் கேட்பதும் செய்கின்றார்கள். இரண்டுபேர் டேவிட்டின் இரு பக்கமும் வந்து நின்றார்கள்.
இடது பக்கமாக வந்தவன் கறுப்பு நிறம். கிளி பச்சை காம்பு, முனையில் சிகப்பு மொட்டு வரைந்த டிசைனில், முக்கால் டவுசர் அணிந்திருந்தான். ஒல்லியான உடல். விரிந்த மூக்கு, வேளைக்குச் சாப்பாடு கிடைக்காமல் உளர்ந்திருந்தான். முகத்தாடை எலும்பு துருத்தலாக இருந்தது. டேவிட்டைப் பார்த்து பேசினான். “அண்ணாத்த, நீ செய்த காரியத்துக்கு நடு ரோட்டுலக்கூட வச்சி அடிக்கலாம், விஷயத்தை விசாரிச்சிட்டு, பொது மக்களும் சேர்ந்து அடிப்பாங்க. நாங்க ஒரு நாகரீகத்துக்காக மறைவாக் கூட்டியாந்தோம். நீ சத்தம் போட்டு ஊரக் கூட்டிடலாம்னு நெனைச்சா. உனக்குத்தான் ஆபத்து. பாத்துக்க“ அவன் சொல்லி முடிக்கும்போது எதிரில் இரண்டு பேர் பேசிக்கொண்டே போனார்கள். அதில் ஒருவன் புளிய மரத்தின் பக்கம் திரும்பித்திரும்பி பார்த்துச்சென்றான். நரேஷ் உள்ளிட்டவர்கள் இயல்பாக டேவிட்டிடம் பேசும் பாவணையில் சுற்றி நெருங்கினார்கள்.
நரேஷ் குருப்பில் ஒருவன் எல்லாருக்கும் முன்பாக நடந்து வீடியோ எடுத்தான்.
நரேஷ், “மாமா, வீடியோவைத் தெளிவா எடுத்து யூ டீயூப்ல போடுறா, பாக்கிறவன். அடுத்தவன் பொண்டாட்டியப் பார்த்து, சிரிக்கக்கூட பயப்படனும்“
டேவிட், சாலையிலிருந்து இறங்கி புளியமரம் பின்பாக வந்தான். ஒருவன் டேவிட்டைப் பிடித்து மரத்தோடு அழுத்தி நிறுத்தினான். இடது பக்கம் நின்றவன். ஆணியில் கட்டியிருந்தக் கம்பியை வலது பக்கம் நின்றவனிடம் கொடுத்தான். அவன், எதிர்த் திசை ஆணிகளில் இறுக்கி சுற்றினான். முற்றிய புளியமரத்தோல் வெடித்துக் காய்ந்து, முதலையின் முதுகு சொரசொரப்பாக இருந்தது. டேவிட்டுக்கு வெடித்த மரச்செறா குத்தி வலியை ஏற்படுத்தியது. சாலையில் தொடர்ந்து ஆட்களும், போக்கு வரத்தும் சென்றுகொண்டுதான் இருந்தது. புளியமரத்தின் பின் பக்கம் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
டேவிட்டை, மரத்தில் அறைந்த பின் இருப்பக்க நபர்கள் அழுத்தமான பொசிசனில் நின்றார்கள். எதிரில் நரேஷ் நின்றிருந்தான். இன்னொருவன் சற்று தள்ளி நின்று ஆட்களை நோட்டமிட்டதோடு, அடிக்கடி செல்லில் வீடியோவும் எடுத்தான்.
“சார் நீங்க ஏதோ தப்பா நெனைச்சிட்டீங்கனு நெனைக்கிறேன். உங்க மனைவியாண்ட, நான் தப்பா எதுவுமே பேசல, நடந்துக்க முயற்சியும் செய்யல சார்“ என்றான் டேவிட்.
வலப் பக்கம் நின்றவன் “அடுத்தவன் பொண்டாட்டியப் பாக்கிறதேத் தப்பு, நீ தப்பாப் பேசுவியா. முயற்சி வேற செய்வியா.“ பாளார் என அறை விட்டான்.
இடப் பக்கம் நின்றவன். “மாப்ள, எதுக்கு பேசிக்கினு, அடிச்சிக்கினு. அவன் குஞ்ச அறத்திடலாம் மாப்ள.“ அப்படிச் சொல்லிக்கொண்டே டேவிட்டின் தொடை இடுக்கின் அருகில் கை சென்றது. டேவிட் இரு கால்களையும் இடுக்கி அப்படியும் இப்படியும் நெளிந்தான். நரேஷ், அவன் கையைத் தவிர்க்கச் செய்து, டேவிட்டின் அருகில் வந்து நின்றான்.
டேவிட் முகம் துக்கமாய் இருந்தது. கண்களில் நீர் கோர்த்தது. குரலில் கம்மி “எனக்கு யாரும் இல்லைனு நெனைக்காதீங்க. ஏதாவதுத் தப்பாச் செய்தீங்கன்னா, அதுக்காக பின்னாடி ரொம்பக் கஷ்டப்பட வேண்டி வரும்“
நரேஷ், திடீரென ஆவேசமானான். பக்கத்தில் இருந்த மலத்தை மிதித்து, டேவிட்டின் தொடை நடுவில் உதைத்தான். “ங்கோத்தா, ராத்திரி பனிரெண்டு மணிக்குக்கூட விடுறீங்களாடா, நாங்க, எங்கியோப் பொழப்பத் தேடி ஓடி. நாயா, பேயா ஒழைச்சிட்டு வந்தா, வாட்சப்புல, பேஸ்புக்குல எப்பாப்பாரு, லொட லொடனு சத்தம் போட்டுக்கினே இருக்குறீங்களே. பொண்டாட்டியாண்ட படுத்திருக்கும்போதுகூட லொட லொட சத்தம் வருது. சத்தம் வரும்போதெல்லாம், நாலஞ்சுப்பேரு படுக்கையச் சுத்தி ஒக்காந்து, வேடிக்கை பார்க்கிறா மாதிரியே இருக்கு. அப்புறம் எங்கடா, எங்க தாம்பத்யம் சுமூகமா நடக்குறது.“
பக்கத்தில் இருந்தவன் “மச்சான், நான் சொல்றதக் கேளுங்கடா. ஒட்டப் புடிச்சி அறுத்துட்டா, வேல முடிஞ்சிடும், அதுக்கப்புறம் யாரையும் பாக்க மாட்டான் இல்ல“ மீண்டும் தாறுமாறகப் பேசினான்.
மலத்தின் நாற்றத்தால் யாரும் மூக்கைப் பொத்திக் கொள்ளவில்லை. நரேஷ் உதைத்த உதையில் டேவிட் சற்று நேரம் தலைக் கவிழ்ந்து அழுதான். “சார், பத்து பேரு, ஒரு எடத்துல சேர்ந்து செய்யவேண்டிய ஆன்லைன் புராஜக்ட் ஒர்க் சார். அந்த வேலைக்கு என்னைப் பொறுப்பாகப் போட்டாங்க. சிலர் அந்த, வேலையைக்குறித்து என்னாண்ட சந்தேகம் கேப்பாங்க, நானும் சொல்லுவேன். அவுங்க ஒர்க் எந்த நிலைமையில இருக்கிதுன்னுக் கேட்பேன் அவ்வளவுதான். மத்தபடி தப்பான வார்த்தைகளாக்கூட பேசினதில்ல சார். அவசரப்பட்டு ஏதுவும் செய்திடாதிங்க சார்“
நரேஷ், “எப்பிடி நடிக்கிறாம் பார்றா“ கன்னத்தில் அறை விட்டான். “பொய் சொல்றாண்டா மச்சான், ஒருவாரம் முன்னாடி, மணி பதினொண்ணு இருக்கும்டா, அப்பத்தான் நானு வேலையிலிருந்து ரொம்ப டையார்டா வரேண்டா. என் பொண்டாட்டி போன் வைச்சிட்டு கிச்சனுக்குள்ள போறா. வாட்சப்புல லொட லொடனு சத்தம். யார்றா, இந்த நேரத்துலனு எடுத்துப் பார்த்தா இவன்தான் மச்சான். ‘இன்னா, அந்தாளு செத்துட்டானா என்ன‘ அப்பிடினு மெசேஜ் அனுப்பி இருக்காண்டா மாப்ள.“ எனக்கு எப்படி இருக்கும். மீண்டும் வயிற்றில் குத்துவிட்டான். டேவிட் உடல் குளுங்கி தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து “இக்..ம்மா“ என சத்தம் எழுப்பினான்.
நரேஷ் இதைச் சொல்லி முடித்ததும் பக்கத்தில் இருந்தவர்கள் மாறி மாறி முகவாயிலும், இடுப்பிலும், மார்பிலும் கையாலும், காலாலும் மிதித்தார்கள். டேவிட்டுக்கு வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. வலப்பக்கம் இருந்தவன் நிறுத்தாமல், “ஏன் மச்சான் செத்துட்டா, அவன் பொண்டாட்டிய நீ தள்ளிம் போயிடலாம்னு கேட்டியாடா, நாயே?“ என்றான்.
“சார், சொல்றதக் கொஞ்சம் கேளுங்க சார். நான் சொல்றதுல உண்மையில்லனா என்ன இங்கேயேக் கொண்ணுடுங்க சார். இந்த அவமானத்தோட சமூகத்துக்குள்ள போக விரும்பல. உண்மையிலேயே நானா அவுங்களைத் தேடிக் கண்டுபிடிச்சி வாட்சப்புல பேசல.
2
பள்ளி மாணவர்களின் ரகளையான குரல்கள் அந்த வளாகத்தையே முழுங்கிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் தலைமை ஆசிரியர் அறை, இன்னொருப் பக்கம் அலுவலகம். ஒற்றைக் கட்டடத்துக்குள் புழங்கியது. அலுவலகத்தில் நான்கு பேர் வரிசையாகத் தங்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். முதலாமவர், வானத்தின் நீல நிறம், அடர்பச்சையில், படர்ந்த இலைகள், சுருள் சுருளாக படரும் கொடிகள்போன்ற வடிவத்தில் சேலை அணிந்திருந்தாள். நீலத்தில் ஜாக்கட் அவளுக்கு எடுப்பாக இருந்தது. பழைய பைல்களில் அன்றய வேலையைக் கண்டுபிடித்திருந்தாள். அடுத்தடுத்த இருக்கைகளில் இருந்தவர்கள் வேலைகளில் ஆழ்ந்திருந்தார்கள்.
ஒருவரிடம், பெற்றோர் தன் மகனின் மாற்றுச்சான்றிதழில் திருத்தம் இருப்பதாகவும், அதைக் களைந்துத் தரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தாள். ஃபேன்கள் பரபரப்பாக சுழன்றது. சுவரில் மாட்டியிருந்த மாத காலண்டர் பட படத்துப் பறந்திருந்தது. சற்று ஒதுங்கி, உள் அறையாக இருந்த சிறிய அறையில் நான், கணினியில் வேலை செய்துகொண்டிருந்தேன். பணியாளர் ஒருவர் என்னை தலைமை ஆசிரியர் அழைப்பதாக அழைத்தார். தலைமை ஆசிரியர் அறை பெரும்பாலும் கண்ணாடிக் கதவுகளால் சூழப்பட்டிருந்தது. கண்ணாடியில் கறுப்பு ஒன்சைடு சீட் ஒட்டப்பட்டிருந்தது. தஆ அறை உள்ளிருந்து வெளியில் தெளிவாக பார்க்கமுடியும், வெளியிலிருந்து அறைக் காட்சித் தெளிவாகத் தெரியாது. அறையில் நான்கு பெண்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். அவர்களை இதற்கு முன்பு நான், பார்த்ததே இல்லை.
தலைமை ஆசிரியர் என்னைக்காட்டி “ஏம்மா, இந்த சாருதான் ஆன்லைன் வேலைக்கு பொறுப்பு. எதுவானாலும் நீங்க இவரைக்கேட்டு அவுங்கவுங்க வேலையைச் சீக்கிரம் முடிச்சிடுங்க. மேலெடத்துல இருந்து என்னக் கேள்விக் கேட்குறாமாதிரி வச்சிடாதிங்க சரியா. போய் வேலையப்பாருங்க.“ என்றார்.
நான், ஆசிரியைகளின் முகங்களை அவ்வப்போதுப் பார்த்தாலும், எனக்கு ஒரு முகத்தின் அடையாளங்களும் மனதில் பதியவில்லை. மிகச் சொற்பநேரத்தில் அறிமுகம் முடிந்துவிட்டது. நான் வெளியே வந்துவிட்டேன். தலைமை ஆசிரியரிடம் சிலர் நாளையிலிருந்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். நான், கணினியிடம் சென்றுவிட்டேன். இருவர் மட்டும் என், கணினியருகில் வந்தார்கள். நான், உட்காரச் சொன்னேன். ஒரு இருக்கைதான் இருந்தது. ஒருவர் நின்றார். ஒருவர் உட்கார்ந்திருந்தார். எனக்குச் சங்கடமாக இருந்தது. நான் எழுந்துகொண்டு “நீங்க உட்கார்ந்து செய்யிங்க டீச்சர், வெப்சைட் முகவரி சொல்றேன் அப்படியே ஓப்பன் பண்ணிப்பாருங்க“ என்றேன்.
அவர்கள் மறுத்து “நீங்கள் ஒரு முறை செய்துகாட்டுங்கள்“ என்றார்கள். நான் அவசரமாக ஆன்லைனில் பதிவிடுவதற்கான இணையத்தின் பக்கம், அதைத் திறப்பதற்கான, பயனர் பெயர். மற்றும் ரகசிய வார்த்தைப் போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்தேன். எனக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த நபரைத்தான் முகம்பார்த்து பேசமுடிந்தது. நின்று இருந்தவரையும், பார்த்துப் பேசவேண்டும் எனத்தோன்றியது, நான் முயற்சி செய்தபோது, இயல்பானதாக இருக்கவில்லை. ஒருவேளை நிற்பவரைப் பார்த்து பேசாமலே இருந்தால், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாகிவிடலாம். ஆரம்பத்திலேயே ஒருவருக்கு மனக்கசப்பு ஏற்படக்கூடாது. அது வேலையில் ஆர்வக்குறைவைக்கூட ஏற்படுத்தும் எனவே நின்றிருந்தவரின் முகத்தைப் பார்த்து சில விஷயங்களைப் பேசினேன். அப்போதுதான் எனக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. நின்றிருந்தவர் என் சிறு வயது பள்ளித்தோழி கௌரியை நினைவு படுத்தினார். முப்பது ஆண்டுகளுக்குமுன் என் சொந்த கிராமத்தில் ஒரே வகுப்பறையில் நானும், கௌரியும் பயின்றவர்கள். சற்று நேரம் உங்கள் மனைவியை உற்றுபார்த்தேன் பிறகு சுதாரித்துக்கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.
மறுநாள் காலை வந்தவுடன் கணினி வேலையில் ஆழ்ந்துவிட்டேன். நேரம் போனதேத் தெரியவில்லை. டீ சாப்பிடும் நேரம் என்னை எழுப்பி அனுப்பியது. நான் வெளியே கிளம்பி, பள்ளி நுழைவு வாயிலை நெருங்கினேன். இருபெண்கள் எதிரில் வந்தார்கள். நேற்று பார்த்தவர்கள்தானா? எனக்கு அந்த முகங்கள் சரியாக மனதில் பதிந்திருக்கவில்லை. அவர்களாக, “என்னசார் நாங்க வரும்போது வெளிய கௌம்பிட்டீங்க“ என்று கேட்டபோதுதான். அவர்கள் முகத்தை நேருக்கு நேர் முழுமையாகப் பார்த்தேன். பெயர்கள் நினைவு இருக்கிறது. முகங்கள் பதியவில்லை. கௌரி முகம்தான் கனகலட்சுமிக்கு பொருந்தியிருந்தது. நேற்றை விட நான் கூடுதலாகத் திகைத்து நின்றேன்.
“சார், நாங்கள் சான்று எண்ட்ரி போட வந்திருக்கோம். சிஸ்டம் இருக்கா? நீங்க வெளிய போறீங்களா,“ என கனகலட்சுமியின் பக்கத்தில் நின்றவள் கேட்டாள்,
நான், கனகலட்சுமியையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்த கால கௌரி புத்தகப் பையோடு அந்தரத்தில் மெதுவாக எழும்பி எழும்பி நடப்பதை கனகுவின் முகத்தில் பார்க்கின்றேன். கனகு கூட வந்தவள் “சார்“ என்று சத்தமாக அழைத்து, என்னை இயல்புக்குத் திருப்புகின்றாள். நான் கௌரியின் கண்களிலிருந்து, கனகுவின் கண்கள் வழியாக வெளியேறுகின்றேன். என் வார்த்தைகள் தடுமாறி, நிலைகொண்டன. கனகுவின் பக்கத்தில் இருந்தவளிடம் சொன்னேன். “டீச்சர், நீங்க நான் உட்காருவேனே அந்த சிஸ்டம் எடுத்துக்குங்க., இன்னொருத்தர் வெளியே இருக்கிற சிஸ்டம் எடுத்து ஒர்க் பண்ணுங்க. நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்.“ என்று வெளியேச் சென்றேன்.
இருவரும் கிசுகிசுத்துக்கொண்டேப் போனார்கள். ஒருவேளை “ஏய், அந்தாளு செம ஜொள்ளு பார்ட்டியா இருப்பான்போல. எப்படி நம்ம வேலையை முடிக்கிறது.“
“உனக்கு, அனுபவம் பத்தாதுன்னு நெனைக்கிறேன். ஜொள்ளு வடியிறது பெரிய விசயம் இல்ல. சிலர் கெடைக்கிற நேரத்த சுவாரசியமாக் கடந்துபோக பாப்பாங்க. சிலர் நட்பைத் தக்கவச்சிக்க பாப்பாங்க. சிலர் வன்மத்த மனசில வச்சிக்கினு செய்யிறாங்க. இந்தாள், கட்டாயம் முதல் இரண்டு வகைக்குள் அடங்கினவராத்தான் இருப்பார். இந்தமாதிரி ஆட்களால் பிரச்சனை இல்லை. உண்மையிலேயே அவர்களிடம் நாம் கஷ்டமில்லாம வேலைய முடிச்சிட்டுப் போயிடலாம். நாம, பதிலுக்கு வழியிறது, அவனுக்குப் பிரச்சனையாகவும் இருக்காது. ஏன்னா, நாம உறவை கடைபிடிக்கிற குடும்ப அமைப்புக்குள்ளிருந்து ஜொள்ளு வடியிற வேலையைச் செய்யவில்லை. தற்காலிகமாகப் பிழைப்பை நடத்துகின்ற இடத்தில் இருக்கின்றோம். அது அவ்வளவு சீக்கிரம் மனதளவில்கூட ஒருவரில் ஒருவர் ஒன்றிணைய இடங் கொடுத்துவிடாது. ஆக ரெண்டு பக்கமும் பிரச்சனை இல்லை“ இருவரும் சிரித்துக்கொண்டே பேசி சென்றிருக்கலாம்.
நான் வெளியே சென்றுக்கொண்டிருந்தேன். என் மனம் அவர்களைத் திரும்பிப் பார்க்கத்தூண்டியது. பார்த்தேன். கனகலட்சுமியின் பின் நடையில் மீண்டும் சிறுவயது கௌரி நடந்து செல்வதும், கௌரியின் வகுப்புத்தோழனான நான் அவளைப் பார்ப்பதும்‘ தோன்றித் தோன்றி மறைந்தது.
நான் வேகமாகச் சென்று தேநீர் அருந்திவிட்டு, அலுவலகம் திரும்பினேன். என்னுடைய சிஸ்டத்தில் கனகலட்சுமி வேலை செய்துகொண்டிருந்தார். நான் எதிர்பார்க்கவில்லை. இன்னொரு நபரைத்தான் என் சிஸ்டத்தில் வேலை செய்யச்சொன்னேன். ஏனென்றால், கனகலட்சுமியைப் பார்க்கிறபோது சிறு வயது கௌரி நாபகம் வருவதால், பேச்சுவாக்கில் நான் அதிக உரிமை எடுத்துக்கொள்ள நேர்ந்திடலாம் என பயந்தேன். என்னக் காரணமோத் தெரியவில்லை. கனகலட்சுமிதான் என் சிஸ்டத்தில் வேலை செய்திருந்தார். ஒருவேளை அந்த நேரம் மற்றொரு ஆசிரியை இருந்திருந்தால் எனக்கு இந்த நிலமை ஏற்பட்டிருக்காது.
கனகலட்சுமியைப் பார்த்ததும் பதட்டமாகவே இருந்தது. சமாளித்துக்கொண்டு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து, அவர்கள் வேலை செய்வதைக் கவனித்தேன். ஆங்கில எழுத்துக்களை வேகமாகத் தட்டச்சு செய்கின்றார். தமிழ் தட்டச்சுத் தெரியவில்லை. கூகுள் டூலுக்குச்சென்று தமிழ்ங்கிலம் அடித்து, அதைக் காப்பிசெய்துக் கொண்டு வருகின்றார். சற்றுத் தாமதமாவதால் சான்று பதிவிட வேண்டிய இணையப் பக்கம் எரராகி வெளியேறி விடுகின்றது. கனகலட்சுமிக்கு மட்டுமல்ல கணினி ஆசிரியைகளாக வருகின்ற பல பெண்களுக்குத் தமிழ் தட்டச்சுத் தெரிந்திருக்கவில்லை. நான் பேசத்தொடங்கினேன். “இந்தச் சாப்ட்வேரில் தமிழ் நேரடியாக அடிக்கத் தெரிந்திருந்தால் நல்லது, இல்ல என்றால் இப்படித்தான் அடிக்கடி வெளியேறி விடும்“
கனகலட்சுமி எந்தத் தடையுமில்லாமல் சாதாரணமாக “சார், இதுக்குன்னு போயி தமிழ் டைப்பிங் கத்துக்கினா வரமுடியும். நாங்க ஸ்கூல்ல செய்யிற வேலையே அதிகம். அதுல, இந்த மாதிரி ஆச்சின்னா, நான் எப்ப வேலையை முடிக்கிறது“ முதல் முதலாக அவரின் குரலைக் கேட்டேன். துளி கரகரப்பும் இல்லை. இதயத்தில் எழும் சத்தம், நேராக மூக்கின் குழலில் வழியாக, சுண்டு விரல் தட்டிவிட்ட ஒரு இழையின் மெல்லிசையாக இருந்தது. அவர், பேச்சில் நகைச்சுவைத் தூக்கலாக இருந்தது.
நான் பேசினேன். “ஒண்ணு செய்றீங்களா, நீங்க சொல்லுங்க நான் அடிக்கிறேன். அவர் தயக்கத்துடன் எழுந்தார்கள். கனகலட்சுமி, சில சமயம் பார்க்கும்போது கண்களை உருட்டி இமை மூடித் திறக்கின்றார். அந்த நேரம், எனக்கு கௌரியின் கண்கள்தான் நிழலாடிச் செல்கிறது. அந்த நேரம் நான் அவர்கள் கண்களைப் பார்க்கிறேன். அப்படியானப் பார்வையை தவிர்க்கச் செய்ய, அவர் பார்வையை உடனே வேறு பக்கம் மாற்றிப் பேசுகிறார்.
“சார், எங்களுக்குக் குடுக்கிற சம்பளத்துக்கு மேலயே ஸ்கூல்ல, உழைக்கிறோம். இதுல இந்த வேல வேற குடுத்தா. என்ன சார் செய்யிறது.“
நான் “அரசாங்கம் பிள்ளைங்க, நலனுக்காகனு, செய்யச் சொல்றாங்க. அதனால, நமக்கு கஷ்டம் இருந்தாலும் செய்யிறதுல தப்பில்ல“ என்கிறேன்.
“சார், இன்னக்கி நான் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும். நாளை மறுநாள் வந்துடுறேன்“
“சரி டீச்சர். சரி உங்க ஃபார்ம் கொஞ்சம் வச்சிட்டு போங்க நான் எண்ட்ரி போட்டு வக்கிறேன்“
“சார், உங்க வேல“.
“அதுல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க கௌம்புங்க“ என்று முதல்நாள் வேலை முடிந்தது. இரண்டாம் நாள் கனகலட்சுமி நேராக என் அறைக்குள் வந்து விடுகின்றார்.
“டீச்சர், எவ்வளவு ஃபார்ம் எண்ட்ரி பண்ணியிருக்கிறேன், கணக்குப் பாத்துக்குங்க, அதுவரைக்கும் பிரிண்ட் எடுத்துக்குங்க. பிறகு மற்ற ஃபார்ம்களை எண்ட்ரி போடலாம்“ பேசிக்கொண்டே கனகலட்சுமியின் முகத்தைப் பார்த்தேன். இரவு மின்மினியாக ஒரு நிமிடம் அவர் கண்களை உருட்டிப் பார்த்து பேசினார். “சார், உங்களுக்கு பெரிய மனசு சார். உங்க வேலைய நிறுத்திட்டுக்கூட, எங்களுக்கு உதவி செய்திருக்கிறீங்க“ கொஞ்சம் கிண்டல் தொனியில் சொன்னார். கனகலட்சுமி ஒரேநாளில் என்னிடம் சகஜமாக பேசும் நிலைக்கு வந்துவிட்டார். நான் சகஜத்துக்கும், எச்சரிக்கைக்கும் இருமுனைப் பந்தாக விழுந்து கொண்டிருந்தேன்.
“டீச்சர், இது டீம் ஒர்க்கு, இதுல உங்க வேல, எங்க வேலனு பார்க்க முடியாது, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து எல்லாரும், எல்லாருடைய வேலைக்கும் உதவியாய் இருந்து சீக்கிரம் முடிக்கிறதுலதான் நம்ம வெற்றி இருக்கு“ என் அறிவுத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக பதில்சொன்னேன்.
அதற்கு கனகு “அடடா, உங்க ஞானத்தப் பாத்து, பல்லியே உச்சிக் கொட்டுது சார்“. என்றார்.
நான் அதிர்ந்துவிட்டேன். பள்ளி நாளில் சிறுவயது கௌரி “உன் ஞானத்துல பல்லி உச்சாப் போகப்போகுது“ என்று சொன்ன அந்த வாசகம் நினைவு வந்தது. கடந்த கால கௌரியின் சிரிப்பும், தற்சமயம் கனகலட்சுமியின் சிரிப்பும் மாறி மாறி வந்தது. ஒப்பீட்டளவில் இருவேறு காட்சிகள் தோன்றி மறைந்தன. அறிவைப் பயன்படுத்தாத பருவத்தில், கௌரியின் கன்னத்தில் ‘பளார்‘ என அறை விட்டதை நினைத்தேன். கௌரி விளையாட்டுக்குத்தான் சொல்லியிருப்பாள் என்பதை அப்போது அறியவில்லை. அன்று கனகலட்சுமியைப் பார்த்து, கௌரியின் விளையாட்டுத் தன்மையை உணர்ந்தேன். நான் என் நிலமையை நினைத்து கனகுவைப் பரிதாபமாகப் பார்த்தேன். அவர், என் பார்வையைத் தவிர்த்து முகத்தைத் திருப்பினார். அது, கௌரி அடிவாங்கியதற்கும், கனகு முகத்தைத் திருப்பிக்கொண்டதும் ஒரேக் காட்சிபோல அமைந்தது. நான் என் பால்ய காலத்தில் நுழைந்துவிட்டிருந்தேன்.
3
இற்கை உயிர்கள் மலையிலும், மடுவிலும் வளமாய் இருந்தது. முட்கள் இல்லாத உயர்ந்த நாட்டு மரம் அரசுப் பேருந்துகளின் நிழல் குடில். பஸ் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை மட்டுமே வந்து போனது. வந்தால் வரவில் வை. இல்லை என்றால் நடையில் செல் என்பது அக்கிராமத்திற்கு பழகியச் சொல்லாய் இருந்தது. அக்கிராம பஸ் நிறுத்தத்தில் மைல் கல் இருந்து. அதில் கறுப்பு மையில் பதினைந்து என எண்ணால் எழுதியிருந்தது. புதிய பயணிகள், பெருநகராட்சி நகரத்திற்கு செல்லும் தூரத்தைக் கணித்துக்கொள்ள அது பயன்பட்டது. கல்லின் எதிர்புறமாகத் திரும்பி அரை கிலோ மீட்டர் நடையை எட்டிப்போட்டால் டேவிட்டின் கிராமம். கிராம சாலையை ஒட்டியவாறு பள்ளிக்கூடம். பின்பக்கம் தாங்கல் ஏரி. பள்ளிக்கு நிழல் தரும் மரங்கள் இருந்தன.
ஐந்தாம் வகுப்பில் தொடங்கி, எட்டுவரையிலாயான பள்ளி. குடுமி வைத்த பிராமண தலைமைஆசிரியர். சற்று பல் எடுப்பான ஆசிரியை பணிபுரிகிறார்கள். சீமை ஓடு வேய்ந்த கூரை. தடிமனானச் சுற்றுச் சுவர். வராண்டாவில் இரண்டுக்கு இரண்டு கணத்தில் தூண் இருந்தது. நடு தூணின் அருகில் ஆறாவது படிக்கும் பையன் தலையில் இடிக்கும்படி, இரண்டடி நீளத்தில் தண்டவாள பெல் தொங்கியது. தண்டவாளம் மையத்தில் சிறு சிறு ஓட்டை. அதற்குள் பெல் தட்டும் ஆணி. அது, ரயில் பாதையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடக்கும். சிலநேரம் ரயில்வே இரும்பு துண்டுகள் பையன்களிடம் இருந்தால், அதைக் கையில் வைத்திருக்கக்கூடாது, போலீஸ் பிடித்துவிடும் என எச்சரிப்பார்கள். சிலர் பயமுறுத்துவார்கள். அந்த ஆணியில்தான் பெல் தட்டுவார்கள். ஆசிரியர் சொன்னமாத்திரம் பல மாணவர்கள் முண்டியடித்து ஓடிவருவார்கள். ஓசையும் இனிமைதான்.
பள்ளி, நீளமாக ஒரே ஹாலாக இருந்தது. தடுப்பு இல்லாமல் வகுப்புகள் குழுக்குழுவாக பிரிக்கப்பட்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு கறும்பலகை நின்றிருந்தது. வகுப்புகளில் பல மாணவர்கள் குள்ளங்குள்ளமாய் வயிறு புடைத்து இருந்தார்கள். சில மாணவர்கள் மூக்கில் ஏடு கட்டிக்கொண்டும். சில மாணவர்கள் சட்டை பட்டன் விழுந்து, திறந்துகொண்டும் இருந்தது. பெரும்பாலும் மாணவர்கள், சந்தோசமாக இருந்தார்கள். கட்டடம் மேற்கு, கிழக்கு வாக்கில் இருந்தது. கட்டடத்தின் இரு கோடி முடிவுக்குள்ளும் இரு பிரதான கதவுகள். மாணவர்கள் பெரும்பாலும் கிழக்குக்கு நெருக்கமானக் கதவைத்தான், பயன் படுத்தினார்கள். மேற்குக்கு நெருக்கமான கதவு தலைமைஆசிரியர் இருக்கை எதிரில் இருப்பதால் அந்த நுழைவு வாயிலை மாணவர்கள் சமயம் பார்த்துதான் பயன்படுத்தினார்கள். இரண்டுமே தெற்கு பார்த்த வாசல்.
கிழக்கின் கதவிற்கு நேராக பின் சுவற்றை ஒட்டியவாறு எட்டாம் வகுப்பு. பதினைந்து, இருபது மாணவர்கள் இருந்தார்கள். அந்த வகுப்பில்தான் கௌரியும், இருந்தாள். சாலையில் நடப்பவர்கள் தற்செயலாக பள்ளியைப் பார்த்தால் நிச்சயம் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தெரிவார்கள். மற்ற மாணவர்களைவிட கௌரி பளிச்சென ஆடை அணிந்திருந்தாள். எப்பொழுதுமே அவள் தனியாகத் தெரிந்தாள். கருப்பு நிறம்தான். பெரிய வெள்ளை கண்களால் முகம் பிரகாசித்தது. அரும்பில் அமர்ந்து பட படவென சிறகை அடிக்கும் பட்டாம் பூச்சியாக, அவள் இமைகள் அடித்து மூடுவாள். அது எதற்கான சைகையும் அல்ல. அவளுக்கு இயல்பாக ஏற்படுகின்ற சிறு பழக்கம். அதை நேரடியாகப் பார்த்தவன், மனம் அலைபாயும். டேவிட் பல முறை அதை தரிசித்திருக்கிறான். பள்ளி சிமெண்ட் தரைதான். சில இடங்களில் காரை பெயர்ந்து மணலும், சிறு சிறு ஜல்லிகளும் தெரிந்திருந்தது. சில நேரம் பெயர்ந்திருக்கும் சிறு கற்களை எடுத்து பையன்களின் மேலும், பெண்கள் மேலும் அடித்து விளையாடிக் கொள்வார்கள்.
மாணவர்களுக்கு ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளி என்பதெல்லாம் தெரிந்திருக்கவில்லை. குடுமி வாத்தியார் தலைமைஆசிரியர். சாந்தி டீச்சர். அவ்வளவுதான். யார் என்ன தகுதி ஆசிரியர்கள் என்பது தெரியாது. தெரிந்து கொள்வதற்கான அவசியம் மாணவர்களுக்கு தேவைப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான மாணவர்கள், அவர்கள் இருவரையும் கணவன், மனைவி என்றே அடையாளம் கண்டிருந்தனர்.
கௌரியின் வரிசைக்கு சற்று பின்தங்கியபடி, கிராஸ் நேர்கோட்டில் டேவிட் உட்கார்ந்திருந்தான். அந்த இடம் அவனுக்கு தற்செயலாகக் கிடைத்தது. ஏற்கனவே அந்த இடத்தில் காளிதாஸ் உட்கார்ந்திருந்தான். அவன் எல்லாரையும் விட சற்று பெரிய வயிறும், உயரமும் கொண்டவனாக இருந்தான். எரியும்பானை கொடி பறக்கும் தெருவைச் சார்ந்தவன். புருவங்களில் அடர்ந்த மயிர் இருந்தது. கூர்மையான மூக்கு, ஒட்டிய கன்னம். உதடுகளின் இரு ஓரங்களிலும் வெள்ளையாக அரித்தபடி இருந்தது. அந்த இடங்களில் எப்போதும் எச்சில் தங்கியிருந்தது. பல சமயம் கால் சட்டையின் ஒரு பட்டன் பூட்டப்படாமலே இருந்தான். வகுப்பறையில் சில பையன்கள் சுட்டிக் காட்டுவார்கள். அவன் அலட்சியமாக “எப்படியும் பல்ளி டீச்சர் வெளுத்து வாங்கப்போகுது, அந்நேரம் ஒண்ணுக்கு வருதுன்னு கேட்டுக்கிணு போகணும். வெளிய ஓடினா அவசரத்துல பட்டன் கழட்டமுடியாது. சால் சட்டையிலே போயிடும். எதுக்கு வம்பு அதான் பட்டன் போடறது இல்ல“ சிரித்துக்கொண்டே சொல்லுவான்.
கால் சட்டையின் மீது கறுப்பு அரைநாண் கயிறை மேல்விட்டிருந்தான். ஓடும்போதும், நடக்கும்போதும் அடிக்கடி கால் சட்டையின் பட்டன் காது வெளியே நீட்டிக்கொண்டு வந்துவிடும். பையன்கள், “வெளிய வருதுடா“ என்பார்கள். அதை அவன் சட்டை செய்ததே இல்லை. எப்போதாவது உள்பகுதியில் மடித்து விடுவான்.
ஒருநாள் கௌரி, “டீச்சர் காளி, எப்பப்பாரு கல்லு எடுத்து அடிக்கிறான் டீச்சர்“ எனச் சொல்லிவிட்டாள். டீச்சர் காளியின் காதைப் பிடித்து ஐந்து நிமிடத்திற்கு மேலாக திருகி, “படிப்பில ஒண்ணும் இல்லை. இந்தமாதிரி வேலைய பாக்கிறதுல மட்டும் கெட்டி“ திட்டிக்கொண்டு, ஒரு மாதிரி கீழ் உதட்டை மடித்து முகம் கோணி திருகினாள். பையன்கள் “டே டீச்சருக்கு, அந்த நாலு பல்லும் எவ்ளோ நீட்டா இருக்குது பாரேன்“ என்று கமுக்கமாக பேசினார்கள்.
காளிதாஸ் ஒரு பக்கமாக தலையைச் சாய்த்து, முகம் கோணினான். பிறகு காளியின் கையில் பட்டாசு வெடித்தது. இரண்டடி பட்டக்சில் விழுந்தது. வழக்கம்போல ஆட்காட்டி விரலை கொக்கிமாதிரி மடித்துக்காட்டினான். “எருமமாடு, போய் வந்து, பின்னாடி உட்காரு“ துரத்திவிட்டாள். டேவிட், காளிதாஸ் இடத்திற்கு வந்தான். கௌரிக்கு இவனும் அப்படித்தான் இருப்பானோ, ஐயம் இருந்தது. அவள் எதிர்பார்த்தமாதிரி எதுவும் நடக்கவில்லை. வெறுமனே லேசான சிரிப்பு, தேவையான நேரத்தில் பேச்சு மட்டுமே இருந்தது. அதன் பிறகு ஒரு நாளும் டேவிட் அமரும் இடம் மாறவில்லை. கௌரியின் சிறு சிறு செயல்கள் டேவிட் கண்களில் பட்டுக்கொண்டிருந்தது. இருவரும் கைகளை நீட்டினால் தொட்டுக்கொள்ளும் இடைவெளிதான்.
கௌரி, டேவிட்டைப் பார்க்கும்போதெல்லாம் கண்களை உருட்டி, படபடவென்று இமைகள் அடித்துக்கொள்கிறாள். அது அவளுக்கு இயல்பாக நடப்பதுதான். ஆனால், டேவிட்டுக்கு ஏதோ சைகை செய்வதாகவேத் தோன்றியது. இருந்தாலும் தனிப்பட்ட கவனிப்பாக இருவருக்குள்ளும் எதுவும் நடக்கவில்லை. லேசான சிரிப்பும், சில நேரங்களில் பார்த்துக்கொள்வது மட்டுமே இயல்பாக நடந்தது. கௌரி சில நேரம் பென்சிலை மாணவர்களுக்கு தூக்கி போடுவாள், பல நேரம் டேவிட்டிற்கு கை நீட்டிக் கொடுத்திருக்கிறாள். டேவிட் சிறு மணல் கற்களைத் தூக்கி அவள் மீது எறிந்து, ஏதாவது கேட்க யோசிக்கிறான். டீச்சர் இடம் மாற்றிவிடுவாளோ என்று தயங்குகிறான். கௌரி அதைத் தைரியமாகச் செய்தாள். ஒரு நாள் சாந்தி டீச்சர், வகுப்பை விட்டு தலைமைஆசிரியரின் டேபில் எதிரில் நின்று பேசிக்கொண்டிருந்தாள். டேவிட் நோட்டில் எழுதிக் கொண்டிருந்தான். கௌரி சிறு கல்லெடுத்து டேவிட்டின் மீது போட்டு, நோட்டைக் குடு எனச் சைகையாகக் கேட்டாள். கௌரி பெரும்பாலும் அமைதியாக இருப்பவள். அன்று சிறு கல்லைத்தூக்கிப் போட்டதும் டேவிட் சற்று மிரண்டுவிட்டான். அவள் தலையை ஆட்டிக்கேட்டது “டே, பார்த்தது போதும் குடுடா. என்பதாக இருந்தது“ டேவிட் சடாரென்று நோட்டை மடித்துக் கொடுத்தவன். அதில் பென்சில் இருப்பதை மறந்துவிட்டான். கௌரி, இரண்டிலிருந்து ஏழுவரை வாய்ப்பாடுகளை காப்பிங் செய்துகொண்டாள்.
மாணவ சேட்டைகள், வகுப்பறைக்குள் மட்டுமே நடந்தது. கௌரியும் தோழிகளும் வீட்டிற்கு போகும்போதும், வரும்போதும் ஆண்களுக்கு முன்பாகவே நடக்கிறார்கள். ஆண்கள்தான் அந்த வாய்ப்பை வழங்குகிறார்கள்போல, டேவிட்டுடன் சில பையன்கள் இடைவெளிவிட்டு பின்பாக நடக்கிறார்கள். டேவிட் சில நேரம் கௌரியைத் பார்ப்பதுண்டு. அவளும் இரண்டொருமுறை டேவிட்டைத் திரும்பிப் பார்க்கிறாள். ஒரு எல்லைக்குப்பிறகு, இருவேறு பாதைகள் கீழும், மேலுமாகப் பிரிகின்ற முக்கு இரக்கமில்லாமல் வந்துவிடுகிறது. மேல்பாதையில் பானையில் எரியும் முத்திரைப் பதித்த மஞ்சள் கொடி பறந்துகொண்டிருந்தது. கௌரி அந்த வழியில் சென்று மறைந்துவிடுகிறாள். மறுநாள் பள்ளிக்கு வரும்போது பிரிவினை முக்கு கரைந்து ஒற்றைப் பாதையாகிவிடுகிறது.
கௌரி காலரற்ற ஜாக்கட் அணிந்திருக்கிறாள். முன்னழகு வளர்ந்திருந்தது. எந்த ஆண் பிள்ளைகளும் விளையாட அழைக்க பயப்படும் தோற்றம். சில பையன்கள் முட்டைக் கண்ணி என்றார்கள். அதற்காக அடிப்பதோ, டீச்சரிடம் சொல்வதோ இல்லை. கண்களை லேசாக உருட்டிக் காட்டுவாள், சொன்னவன் எதிரில் நிற்காமல் ஓடுவான். அவள், அவர்களின் கோழைத்தனத்தைக் கண்டு சிரித்துக்கொள்வாள். சாலையில் ஆண்களுக்கு முன் பெண்கள் நடந்தாலும், கௌரி வெடுக்கெனத் திரும்பி டேவிட்டைப் பார்த்து மிகச்சிறிய சிரிப்பை வெளிப்படுத்துவது வழக்கம். அது காதல் என சொல்லமுடியாது. காதலாவதற்குமுன், கைகூடும் அறிமுகச் சேட்டைகள். காதல் கைகூடலாம், கூடாமல்போகலாம் அதற்கு உறுதிப்பாடுகள் கிடையாது, என்றாலும் மனசுக்கு மகிழ்வைத் தருகின்ற, தற்செயலான ஓரக்கண் பார்வையை அவ்வப்போது இருவரும் மாறி மாறி செய்கிறார்கள். அவள் பார்வையைக் காணாத நாள் அவனுக்கு துயரமாய் இருந்தது.
வெள்ளிக்கிழமை கௌரி, தங்கம் முலாம் பூசிக்கொள்கிறாள். இரு பின்னல். நடுவில் அடர்ந்த மல்லி. எட்டாம் வகுப்பை மதியம் வரை மல்லியின் வாசம் சாகாமல் வாழ வைக்கிறது. வெள்ளிக் கிழமையின் அக்மார்க்கில் வந்திருந்தாள். சாந்தி டீச்சர் காலை வகுப்பு முடித்து, அடுத்த வகுப்புக்கு சென்றிருந்தார். எட்டாம் வகுப்பு விளையாட்டு பீரியடு. மாணவர்கள் வெளியில் விளையாடினர். கௌரியும், தோழியும் கிழக்கு சுவர் ஓரமாக நின்றிருந்தார்கள். சில மாணவர்கள் வராண்டாத் தூணைச் சற்றிச்சுற்றி விளையாடினார்கள். சிலர் ஓடிப்பிடித்து ஆடினார்கள். சில மாணவர்கள் குனியவைதத்துத் தாண்டினார்கள். பொதுவாகப் பையன்கள் டேவிட்டை ‘டே… டே‘ என்று உரிமையோடும், சிலர், சமயத்தில் கிண்டலாகவும் அழைப்பதுண்டு. அழைக்கும் நபர்களை வைத்தோ, அழைக்கும் தொனியை வைத்தோ எது கேலி, எது உண்மை என்பதை டேவிட் தெரிந்து வைத்திருந்தான். கிண்டலாக அழைத்தவர்களைக் கண்டித்தான். பெரும்பாலும் பையன்கள் சாட்ஃபாமில் அழைத்தாலும், அது இயல்பாகவே இருந்தது. சில நேரம் பெண்கள் அதைப் பாலோப் பண்ணுவதுண்டு டே… என்பதைச் சத்தமாகவும் விட் என்பதை அழுத்தம் குறைவாகவும், கேலியாகவும் அழைப்பதுண்டு. அந்த நேரம் டேவிட் கோபப் படுகின்றான். அன்றைய விளையாட்டில் டேவிட்தான் ஓடி பிடிக்கவேண்டும். ஒருவனைத் துறத்தினான். ஓடுபவன் எதேச்சியாக கௌரி இருக்கும் திசைபக்கமாக ஓடினான்.
கௌரி எதிரில் இருந்தவளைத் தூண்டினாள் ‘ஏய் டேவிட்ட, டே..னு கூப்பிடேன். ஏய் கூப்புடுடி ‘டே..னு
“எம்மா நான் கூப்பிடமாட்டேன்“
“சும்மா வெளையாட்டுக் குத்தாண்டி. போடி பயந்தாங்கொள்ளி“ கௌரி, டேவிட் போன திசையைப்பார்த்து ‘‘டே..‘ டே. உன்னத்தாண்டா“ என்றாள். டேவிட் முதல் முறையே கேட்டுவிட்டான், இருந்தாலும் இரண்டாவது முறைதான் திரும்பிப் பார்த்தான். உடனே கௌரி பையன்கள் இருந்த வேறு பக்கம் திரும்பி “டே இங்க வாடா“ எனும் விதமாக பாவணை செய்தாள்.
டேவிட், பையனைத் துறத்துவதை விட்டு, கௌரியை நோக்கி வேகமாக வந்தான். கூட இருந்தவள் வகுப்பறைக்கு ஓடிவிட்டாள். கௌரிக்கு நேராக நின்று ‘ஏய், என்ன திமிரா? அறிவுகெட்டத்தனமா கூப்புடுறே. அறைஞ்சிடுவேன் ஜாக்கிறதை“
“நீ அறைஞ்சியானா சும்மா விட்டுடுவாங்களா? அங்க பாரு, யாரு போறாங்க“ அவள் சொல்லியபோது கௌரியின் அப்பா முன்பாகவும், இரு அண்ணன்கள் பின்பாகவும், அவர்களுக்குப் பின் நாலைந்து வேலையாட்கள் நடந்து சென்றார்கள். கௌரியின் அப்பா சாலை ஓரங்களைக் காட்டி ஏதோ பேசிக்கொண்டு போனார். பள்ளி தலைமை ஆசிரியர் வகுப்பறையில் இருந்து வேகமாகச் சென்று வணக்கம் வைத்துவிட்டு பேசிவந்தார்.
டேவிட் அவர்களைப் பார்த்து, பின் கௌரியிடம் திரும்பி உங்களுக்கு, ஆளும், ஆஸ்தியும்தான் அதிகம். மண்டையில அறிவு கொஞ்சந்தான்னு தெரியும் போ“ என திரும்பினான். கௌரி நக்கலாக “இவுரு பெரிய அறிவாளி. ‘உன் ஞானத்தப் பாத்து பல்லிதான் உச்சாபண்ணும் போடா“ என்று லேசாகச் சிரித்தாள்.
டேவிட், கௌரிக்கு அருகில் சென்று கன்னத்தில் பளார் அறை விட்டான். “போடி. போய் உப்பங்கிட்ட சொல்லு. உன்மேல எவ்வளவு மரியாதை வச்சிருந்தேன். எல்லாத்தையும் கெடுத்திட்டியே“ என்று பேசி வகுப்பறைக்குப் போனான்.
கௌரி கன்னத்தைப் பிடித்துக்கொண்டு டேவிட்டையே பார்த்திருந்தாள். கண்களில் சாரை சாரையாக கண்ணீர் கொட்டியது. அவள் வாழ்வில் இதுவரை ஏற்படாத அனுபவம். வகுப்பறைக்கு வந்துவிட்டாள். கவிழ்ந்தபடியே இருந்தாள். யாரையும் திரும்பிப் பார்க்கவில்லை.
சாந்தி டீச்சர் பாடம் எடுக்கும்போது கௌரியைக் கேட்டாள். என்ன கௌரி ஒரு மாதிரியா இருக்கே ஒடம்பு சரியில்லையா? உங்கப்பாலாம் இங்கதான் இருக்காங்க கூப்பிடவா“ என்றாள்.
டேவிட்டுக்கு உள்ளுக்குள் பயம் கூடியது. கௌரி வாத்திறக்கவில்லை. வேண்டாமென்று தலையை மட்டும் ஆட்டி, நோட்டில் எதையோ எழுதினாள். டேவிட்டுக்கு உயிர் வந்தது.
சாப்பாட்டு நேரம் மணியடித்து வெளியே வந்தபோது டேவிட் நிதானமாக கௌரியின் அருகில் சென்றான். “மன்னிச்சிக்கோ கௌரி. நீ, தற்செயலா கூப்பிடுறாமாதிரி அப்படி கூப்பிட்டிருந்தியானா, பிரச்சன இல்ல. பசங்க முன்னாடி கேலி பண்றாமாதிரி வேணும்னே கூப்டதாலதான், கோவப் பட்டேன். சாரி கௌரி.“ என்று அவள் பின்னாகவே நடந்து சென்றான். பிரிவினை முக்கு வந்ததும் நின்றான்.
பதில் ஏதும் சொல்லாமல் கௌரி சற்று தூரம் நடந்தாள். பின்பு வலதுகையில் கன்னத்தைப் பிடித்தபடி திரும்பி டேவிட்டைப் பார்த்து நடந்தாள். லேசாக உதடு மலர்ந்தது. அவள் உதட்டின் சிரிப்பில் இருந்து டேவிட் கனகலட்சுமியின் முகத்தைக் கண்டடைந்தான்.
4
மூன்றாவது நாளாக உங்க மனைவி கனகலட்சுமி என் கணினி அறைக்கு வந்தாங்க.
“டீச்சர், இன்னொரு நாள் வந்தா, உங்க ஒர்க் முடிஞ்சிடும் இல்லியா?“ என்றேன்.
கனகலட்சுமி “ஆமாம் சார், அதோட ஒரு தலைவலி ஓஞ்சிடும்“
“தலைவலினு எதைச் சொல்றீங்க. எங்களாண்ட வேல செய்யிறத சொல்றீங்களா?“
“சார், எங்களுக்கு எவ்ளோ உதவி செஞ்சியிருக்கிறீங்க. உங்களப்போயி சொல்லுவேனா சார்“
“ஓகே, டீச்சர். நீங்க இன்னும் ரெண்டு ஃபாம் எண்ட்ரி போட்டுட்டு கௌம்புங்க. நான் கொஞ்சம் வெளிய போயிட்டுவரேன்“ என்று கிளம்பினேன்.
மறுநாளும் கனகலட்சுமி வந்தார். அவருக்கு வழங்கப்பட்ட சான்று எண்ட்ரி வேலை அன்றுடன் முடிந்துவிட்டது. மீண்டும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து பதிவு செய்த சான்றுகள் பிரிண்ட் எடுப்பதற்கான வேலை வரும் அந்த நேரம் வந்தால்போதும் என்று கனகலட்சுமிக்கு அறிவுறுத்தப்பட்டது. பிறகு எனக்கும், கனகலட்சுமிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கௌரியின் சாயலாக கனகலட்சுமியை, கணித்ததால், தனிப்பட்ட முறையில் உள்ளார்ந்த மதிப்பு இருந்தது. அந்த மரியாதைதான் என்னை அவரிடத்தில் உரிமையான நட்பிற்கு அறிமுகப்படுத்தியது. அந்த அறிமுகம்தான் கனகலட்சுமியை வாங்க, போங்க என்ற அறிமுகமற்ற மரியாதையை எடுத்துவிட்டு ஒருமையில் பேசத்தூண்டியது. கனகு என் கணினி அறையில் இருக்கும்போது, சில நேரம் தமிழக அரசியலில் பணம் சம்பாதிக்கும் நிலமை. சில நேரம் பெண்கள் மன இயல்பு. சில நேரம் குடும்ப உறவுகள் சார்ந்து அலைபாயும் எண்ணம் போன்ற பல விஷயங்களைப் பேசிக்கொண்டே வேலை செய்திருக்கின்றேன். அவர் சிறு முக சுழிப்பைக்கூட எதிர்ப்பாகக் காட்டவில்லை. என் பேச்சை ரசிக்கும் விதமான சிரிப்பைத்தான் வெளிப்படுத்தினார்.
பள்ளி வேலை நேரம் போக மீதி நேரங்களில், வலைதளம், முகப்புத்தகம், ட்டுவிட்டர், கூகுள்பிளஸ், போன்ற இணையத் தேடல்களில் முழு நேரத்தையும் செலவிடுகின்றவன். நான் பேஸ்புக் கணக்கைத் தொடங்கியபோது, நல்ல விஷயங்களைக் கையாள்பவர்களையும், என் கருத்துக்கு ஒத்தவிஷயங்களைப் பேசுகின்ற நபர்களாகப் பார்த்து, நட்புக் கோரிக்கை வைத்தேன். ஏற்றவர்கள் நண்பரானார்கள். அதில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை. குறிப்பிட்ட நபர்கள் சேர்ந்த பிறகு. முகப்புத்தகத்தில் நடக்கும் வெட்டிப்பேச்சுகள், அடாவடிக் கருத்துக்கள், மோசமான எண்ணங்களைப் பிரிதிபலிக்கும் நபர்களின் பக்கம் போகாமல் விலகியிருந்தேன். முகப்புத்தகத்தில் நான்கைந்து ஆண்டுகள் சர்வீஸ் ஆனபிறகு, நானாகத் தேடிக்கொண்டு சென்று யாருக்கும் நட்புக் கோரிக்கை வைப்பதில்லை. பல விஷயங்களைக் வாசித்து என் கருத்துக்கு ஏற்புடையதாக இருந்தால் லைக்போடுவதோடு சரி. பெண்கள் பதிவுகளுக்கும் லைக். சில நேரம் கமெண்ட் செய்வதோடு சரி. அதில் சில ஆண், பெண் என்னை நட்பு வட்டத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். அதன் பிறகு நானாக நட்பு கோரிக்கை விடுப்பதை சில ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தியிருந்தேன்.
அந்த நிலையில் திடீரென்று பெண் பெயரில் எனக்கு நட்புக் கோரிக்கை வந்திருந்தது. சிகப்புக் கலரில் மனித அடையாள பொம்மை இருந்தது. எனக்கு ஆச்சரியம். எனக்குக்கூட பெண் நட்பு கோரிக்கை அனுப்பியிருக்கிறாள். யாரது என டைம்லைனில் பார்த்தபோது கனகலட்சுமி பெயர் இருந்தது. பள்ளியில் ஆன்லைன் எண்ட்ரி வேலை முடிந்து இரண்டு மாதம் கடந்துவிட்டிருந்தது. கனகலட்சுமியோடு, எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஏறக்குறைய கௌரியோடு ஒப்பிட்ட அந்த முகம் மறந்திருக்கும் நிலையில்தான் கனகுவின் நட்புக் கோரிக்கை வந்திருந்தது. பொதுவாக எனக்கு புதிய நட்பு கோரிக்கை வந்தால், அவர்கள் பக்கத்தைப் பார்வையிட்டபிறகு நட்பை ஏற்கிற பழக்கம் இருந்தது. கனகலட்சுமி பெயரைப் பார்த்ததும் உடனே நட்பு கோரிக்கையை ஏற்றுக்கோண்டேன். இருந்தாலும் நானாக ஒருபோதும் சாட் செய்யவில்லை.
பேஸ்புக்கில் சாட்செய்து அல்லாடிய சில பதிவுகளைப் படித்திருந்தேன. அந்த பயம் இருந்தது. கனகலட்சுமியின் சில பதிவுக்கும், புதிதாக அப்லோடு செய்யும் அவர் போட்டோவிற்கும் லைக் செய்வதோடு சரி.
இன்னும் சில வாரங்கள் கழித்து கனகலட்சுமி என் எண்ணை வாட்சப்பில் இணைத்து காமடி குறுந்தகவல் அட்டை அனுப்பியிருந்தார். அந்த வாட்சப் செய்தி ஒருவித லகலகா சத்தம்போட்டு என் கைபேசியில் ஒலித்தது. அப்போதெல்லாம் வாட்சப் எனக்கு பிடிக்காத விஷயமாக இருந்தது. இருந்தாலும், கனகலட்சுமி என்பதால் செய்தியைப் பார்த்தேன். அதற்குமேல் தனித்துவமான அக்கறை இருந்ததில்லை. அவர் அனுப்பும் காமடியைப் படித்து சிரிப்பேன். பதில் ஏதும் போடவில்லை. நாட்கள் அதிவேகமாக மறைந்து விடுகின்றது.
சான்றுகள் பிரிண்ட் எடுக்கவேண்டிய நாட்கள் வந்துவிட்டது. அவரவர் பள்ளிகள் மூலம் மின்னஞ்சல் செய்தி தெரிவிக்கப்பட்டது. கனகலட்சுமி என் கணினி அறைக்கு வந்துவிட்டார். கணினியில் வேலை செய்துக்கொண்டே அவரிடம் பேசினேன். “என்னா, வாட்சப்புல ஒரே அமர்க்களம் பண்றீங்க“.
“சொம்மா சார். காமடியா அனுப்புவோம். எனக்கு நகைச்சுவைன்னா ரொம்ப புடிக்கும். எங்க வீட்டுக்காரருடன்கூட செம ஜாலியா காமடி பண்ணுவேன். அவரும் செம ஜாலியா எடுத்துக்குவார். வாட்சப்ல எனக்குத்தெரியாத விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பார். ‘ரோட்டுல நடக்கும்போது மட்டும் போன்ல பேசிக்கினே போகாதே. பாக்கிறவங்க ஒரு மாதிரியா நெனைப்பாங்க‘ என்பார். மத்தபடி நாங்க வீட்ல ரொம்ப சகஜமா விளையாடிக்குவோம்“
“எங்க வேலை செய்யிறாரு. வேல முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்திடுவார்போல“
“அது ஒரு சோகக்கதை சார். கலியாணம் ஆன புதுசுல வேலையில இருந்து வரதுக்கு ரொம்ப நேரம் ஆகும். நான்தான் அவருக்கு டார்ச்சர் குடுத்து அந்த வேலையே வேணாம். பொழுதோட வீட்டுக்கு வராமாதிரி வேலையப் பாருங்கனு சொல்லிட்டேன். அவரும் பொசுக்குனு செய்த வேலைய விட்டுட்டார். சொஞ்ச நாள் வேலையே இல்லாம இருந்தார். சீக்கிரம் போரடிக்க ஆரம்பிச்சிது. வேற வழியில்லாம மீண்டும் வேலையைத் தேடி ஏதோ ஒரு கம்பெனிக்குப் போனார். நானும் போகட்டும்னு விட்டுட்டேன். இப்போ வாரத்துக்கு ஒரு முறைதான் வீட்டுக்கு வரார். சரி இருக்கட்டும்னு விட்டுட்டேன். இப்பக்கூட போயி ஒரு வாரத்துக்கு மேல ஆகுது இன்னும் வீட்டுக்கு வரல. என்ன வாழ்க்கையோ. அதான் போரடிச்சிதுனா பிரண்சுக்குலாம் வாட்சப்புல மேசேஜ் பார்வோர்டு பண்ணிவிடுவேன். எங்க வீட்டுக்காரராண்ட உங்களப்பத்திக்கூட சொல்லியிருக்கிறேன். அந்த ஸ்கூல்ல ஒரு சாரு இருக்காரு. அவரு செம பார்ட்டி. எங்க வேலைய பாதி அவரே முடிச்சிடுவாருனு சொல்லியிருக்கிறேன்“
“உங்களுக்கு போரடிச்சா எங்களுக்கு மெசேஜ் அனுப்புவீங்க. அதக்கூட ஒரு கவிதையா, நல்ல கருத்துங்களா போடமாட்டீங்க. அது என்ன செம பார்ட்டி, இடையில வார்த்தைய விட்டுட்ட. ஜொள்ளு பார்ட்டினுதானே சொன்னே“
“எப்படிசார், கரைக்ட்டா நெறப்புறீங்க. நீங்க பெரிய ஆளுசார்.“
“என்னம்மா, இவ்ளோ மட்டமா நெனைச்சிட்டீங்க. அரசு வேலைன்னா திடீர் திடீர்னு முடிச்சிட்டிங்களா. ரிப்போர்ட் அனுப்புங்கிறான். அதுக்காகத்தான் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேலைய முன்கூட்டியே முடிச்சிடுறேன். அது உங்களுக்கு ஜொள்ளு வடிக்கிறதாத் தெரியுதா?. ஆமாம், வாட்சப்புல மெசேஜ் அனுப்புறதெல்லாம் உங்க ஊட்டுக்காருக்குத் தெரியுமா?“
“கோவிச்சிக்காதிங்க சார். ஒரு காமடிக்காகதான் அனுப்புறேன். எங்க ஊட்டுக்காருக்குள்ளும், எனக்குள்ளும் எந்த ஒளிவு மறைவும் இல்ல. உங்களுக்கு அனுப்புற மெசேஜ்ஜக் காண்பிப்பேன். அவரும் பார்த்து, இத அனுப்பு, இப்படி மாத்தியனுப்பு என்பார்“.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது, “இந்த தொழில் நுட்பகாலத்தில், இவ்வளவு தாராள மனசு ஒரு ஆம்பளக்கி இருக்கிறதே பெரிய விஷயம்தான். நீ ரொம்ப குடுத்து வச்ச ஆளுதாம்மா“ என்று பேசிக்கொண்டே சான்றுக்கான மாணவன் பெயரைக் கேட்டேன். அதன் பிறகு வேலை விருவிருப்பாகச் சென்றது. கனகலட்சுமி கிளம்பிவிட்டார். அன்று இரவு கனகலட்சுமி காமடி டெம்ளேட்டை அனுப்பியிருந்தார். ஒரு பெண் குழந்தை, சேலை கட்டிக்கொண்டு தெருவில் பெருக்கிக்கொண்டிருப்பாள். ஒரு சின்ன பையன் வேட்டி சட்டையில் வந்து, ‘டார்லிங் ‘ஐ லவ் யூ‘னு சொல்லுவான். அதற்கு பெண் குழந்தை ‘தொடப்பக்கட்டை பிஞ்சிடும். போடா எடுபட்ட பயல‘ என்ற வார்த்தை இருந்தது.
அடிக்கடி மனசைத் தொடுகின்ற வார்த்தைகள் வாட்சப்பில் குறுந்தகவலாக கனகலட்சுமி அனுப்புவதைப் பார்த்ததும், நான் நெறுங்கிப் பேசத் தொடங்கினேன். தவறான நோக்கத்தோடு அல்ல. வெறுமனே நேரத்தை காமடியாகக் கழிக்கத்தான். கனகலட்சுமி, கணவன், மனைவிக்குள் நடக்கும் ஊடல் நகைச்சுவைகள் பலவற்றை எனக்கு அனுப்பினார். நான் வேற்று ஆண் என்ற நிலையிலும், அந்தச் செய்திகளில் ஆரம்பத்தில் நான் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் ஏதோ விளையாட்டுக்கு அனுப்புகிறார்கள். என்றுதான் இருந்தேன். ஒருவேளை அவர்களும் அப்படித்தான் நினைத்திருக்கலாம். ஒரு கட்டத்திற்குமேல் நேரடிப் பேச்சில் நான்தான் அதிகமாகப் பேசினேன். தனக்கு பல விஷயங்கள் தெரியும் என்ற முணைப்பும் இருந்தது. அவர்கள், சொந்தக் குடும்பம் சார்ந்தும், பொதுமனித வாழ்வு சார்ந்தும் பல விஷயங்களை விவாத நிலையில் வைத்து பேசும் பழக்கமானபிறகுதான். கனகலட்சுமி வாட்சப்பில் அனுப்பும் செய்திகளுக்கு நான் தவராமல் பதில் அனுப்புவதைச் செய்தேன். நான் காமத்திற்கு வயப்பட்டு பதில்கள் அனுப்பவில்லை. ஒருவேளை அந்த எண்ணம் எனக்கு இருந்திருந்தால், கனகலட்சுமி இரவுநேரங்களில் சாட்செய்யும்போது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பேன் இல்லையா?.
கிடைத்த நட்பை பலப்படுத்திக்கொள்ள சில சமயம் ரசனை சார்ந்த வாசகங்கள் அனுப்பியுள்ளேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதுவும் நட்பு, அறிவு, திறமை, தேடல் சார்ந்த விஷயங்கள்தான், உரையாடலாகவே எழுதினேன்.
‘நீங்கள் சொன்ன, அந்தாளு செத்துட்டானா‘ எனக்கேட்டதுகூட ஒருநாள் கனகலட்சுமி இரவு பத்துமணிக்குமேல் ஒரு வீடியோவை வாட்சப்பில் அனுப்பியிருந்தார். அது என்னவென்றால் ‘இரவு நேரம். வலைவான நடைபாதை ஒட்டி, குளம் இருந்தது. சாலை ஓரமா ஒருவன் நடந்து போகிறான். எதிரில் ஒருவன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து நடப்பவனை முட்டுவதுபோல் திரும்புகின்றான். நடந்து சென்றவன் சடாரென்று குளத்தில் பாய்ந்துவிடுகின்றான்‘ அந்த வீடியோவின் நகைச்சுவையில் ஆழ்ந்த நான் உணர்ச்சி வசப்பட்டவனாக “அந்தாளு செத்துட்டானா என்ன“ என பதில் போட்டுவிட்டேன். வார்த்தைகள் கன நேரத்தில் செய்தியாகச் சென்றுவிட்டது. பிறகுதான் நான் யோசித்தேன். நாம குளத்தில் குதித்த ஆளைத்தான் சொன்னோம், கனகலட்சுமி ஒருவேளை அபசகுணமாக எடுத்துக்கொண்டாரோ, அல்லது தன் கணவனை சொல்வதாக எடுத்துக்கொள்வாரோ? என வருத்தப்பட்டேன்.
அதன் பிறகு கனகுவிடமிருந்து பதிலே இல்லை. நான் நினைத்ததுபோல அவர் என்னை தவறாக நினைத்து விட்டிருக்கின்றார். அவர் பதில் போடாமல் எனக்குச் சங்கடமாகிவிட்டது. அந்த நிகழ்வில் நான் தவறு செய்யவில்லை என நிரூபிக்க நான் சில மெசேஜ்ஜைத் தொடர்ந்து அனுப்பவேண்டி இருந்தது.
கனலட்சுமி, விளையாட்டுக்கு அனுப்பிய ஸ்லேடைகளை, நான் தவறாகப் புரிந்துகொண்டு அவரை நெருங்கி வருகின்றேன் என நினைத்திருந்தார். அதனால், நான் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில் போடுவதைத் தவிர்த்தார். சகஜமாய், நட்பாய் பழகிய கனகலட்சுமி திடீரென என்னை காமுகன் என்கிற நிலையில் வைத்து தவிர்த்ததால், நான் அப்படிப்பட்டவன் இல்லை என நிரூபிக்கும் பொறுப்பு எனக்கிருந்தது. அதன் அடிப்படையில் சில தகவல்களை மீண்டும் மீண்டும் அனுப்பினேன்.
அப்படியான வாட்சப் செய்திகளைத்தான் நீங்கள் உங்கள் மனைவிக்குத் தெரியாமல் பார்த்திருக்கிறீர்கள். நான் அனுப்பிய மொத்த குறுஞ்செய்திகளையும் ஆய்வு செய்தால்கூட ‘அந்தாளு செத்துட்டானா என்ன‘ என்கிற ஒரு வாசகத்தைத்தான் எனக்கெதிராகத் திருப்ப முடியும். மற்ற எந்த வாசகத்தையும் வைத்து, நான் கள்ள நட்புக்கு அழைத்ததற்கான சாட்சியாகக் கொண்டுவரமுடியாது.
நான் கனகலட்சுமியைக்கூட குற்றம் சாட்டவில்லை. அவர்கூட எனக்கு தவறான வார்த்தைகளை அனுப்பவில்லை. ஆனால், நேரடிப் பேச்சில் இருவரும் ஒத்தக் கருத்துடையவர்களாகவே நயம்பட பேசிக்கொண்டோம். நான் கனகலட்சுமியிடம் பேசும்போது என் இளமை கால பள்ளித்தோழி கௌரி என்னிடம் அறைவாங்கி அப்பாவித்தனமாக அழுத முகம்தான் நியாபகம் வந்தது. அந்த ஒன்றுபட்ட பிம்பத்தால் நான் இளமை காலத்திற்கு சென்று விட்டிருக்கிறேன். உண்மையிலேயே சொல்லப்போனால், உங்கள் மனைவி மீது நான் வைத்தது காதல் அல்ல. “காதலற்ற அன்பு“ என்னை நம்புங்க நரேஷ் சார்“
‘டேவிட் தலைசாய்த்து அழுதான். உதட்டின் ரத்தம் உறைந்து கறுப்பு நிறம் கூடியிருந்தது. இரண்டு பக்கத்தில் இருந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நரேஷ் முட்டிகால் போட்டு உட்கார்ந்திருந்தான். செல்லில் வீடியோ எடுத்தவன் நின்றபடி இருந்தான்.
நரேஷ் டேவிட்டின் தலையைத் தூக்கி “அப்படியா, சங்கதி. எதுவா இருந்தாலும் போகட்டும். இனிமே அப்படி எதுவும் நடக்கக்கூடாது சரியா. டே, மச்சான் சார் நல்ல மனுஷந்தாண்டா, நாமதான் கொஞ்சம் அவசரப் பட்டிட்டோம். பரவாயில்ல அவித்து விட்டு வாங்கடா“
நரேஷ் முன்னே வேகமாக நடந்தான். இடதுபக்கம் இருந்தவன் கம்பிக் கட்டுகளை அவிழ்த்து விட்டான்.
டேவிட் புளிய மரத்தினடியிலேயே சரிந்து உட்கார்ந்தான். வீடியோ எடுத்தவன் கடைசியாக அதைப் பதிவு செய்துவிட்டு. வேகமாக ஓடி டூவீலரில் உட்கார்ந்து கிளம்பினார்கள். இரண்டு வண்டி அதிகச் சத்தம் போட்டுக்கிளம்பி வேகமாகச் சென்றது. டேவிட், முதுகில் மரச் சிறால்கள் ஒட்டியிருந்தது. தொடை நடுவில் ஒட்டியிருந்த மலத்துகள்கள் காய்ந்திருந்தது. சிறு குச்சி எடுத்து தள்ளினான். அனைத்தையும் சரி செய்துகொண்டு கிளம்பினான்.
சில நாட்கள் கழித்து கனகலட்சுமி கைபேசியில் வீடியோ லைவ் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பல வீடியோக்கள் இடையில், டேவிட்டை புளியமரத்தில் கட்டி அடிக்கிற வீடியோ வந்தது.
டேனியல்
No comments:
Post a Comment