மேல் மூச்சையும் கீழ் மூச்சையும்
அடக்கும் சமூகம்
சில நேரம் வதந்திகள் இயல்பு வாழ்க்கையின் போக்கையே திசைத் திருப்பி
விடுகின்றனவா? இதுதான் நேற்று 10.12.12 காஞ்சிபுரத்தில நிகழ்ந்துள்ளது. எப்போதும்போலவே ஒரு மென்மையான இதத்துடனே அதிகாலைப்
பிறந்தது. ரயில்வே ரோட்டின் அரசு
பொது மருத்துவமனை செல்கிற பாதையில் தடுப்பு போடப்பட்டு காவலர்கள்
நின்றிருந்தார்கள். ஏன் இவர்கள்
நிற்கிறார்கள் என்ற கேள்வியுடன்தான் அலுவலகம் சேன்றேன். தாலுக்கா வளாகத்தில் நண்பர்கள் சொன்னார்கள் இரவு ஒரு நபரை போட்டாங்களாம் (போட்டாங்களாம், தூக்கிட்டாங்களாம் என்பதெல்லாம் தற்போது
வீரத்தைக்குறிக்கும் சொல்லாடலாக,
அடையாளமாக இருக்கிறது) அவர் விடுதலைச் சிறுத்தையின் முக்கியப்
பொறுப்பில் இருப்பவராம். என்றார். 'ஆமாம்,போனவாரம் சரவணபவனில்
சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே ஒருவரை தாக்யிதாக செய்திகளில் வாசித்தோம் நேற்று இப்படி நடந்துள்ளது. கொலைகள் ஏன் மக்களின் பார்வையில் நடக்கிறது? அதுவும் செய்தவர் இன்னார் என்று வெளிப்படையாகத்
தெரியும்படியாகவே கொலைகள் நடக்கிறது. ஆனால்
அவன் எப்போதும் சமூகத்தில் முக்கியப் புள்ளிபோலவே நடமாடி வருகிறான்.' என்று பேசிவிட்டுக் களைந்தோம். அப்போதெல்லாம் காஞ்சிபுரம் இயல்பாகவே இருந்தது.
பதினோரு மணிக்கெல்லாம் எல்லா இடங்களிலும் லேசாக பதட்டங்கள் நிலவியது. அப்போதெல்லாம் வி சி கட்சி இறந்தவர் படத்தை ‘வீர வணக்கம்‘ என்ற
தலைப்பிட்டு ‘சாதிவெறிப் பொறிக்கிகளால் படுகொலைச் செய்யப்பட்ட‘ என்ற
உள் வாசகத்துடன் போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டியிருந்தார்கள். நான் அலுவலகத்திலுருந்து வங்கி
செல்கின்றபோது, விலைவாசி உயர்வுக்கோ, அந்நிய முதலீட்டுக்கோ பந்த் அறிவித்தபோது
திறந்திருந்தது போல் இப்போது இல்லை. அநேகமாக
எல்லாக்கடைகளும் மூடப்பட்டிருந்தது. அரசு
அலுவலகங்கள் மட்டும் திறந்திருந்தது. அதன்பிறகுதான் இறந்தவர் வி சி
கவின் முக்கிய நபர் என்பதுத் தெரிந்தது.
அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கூடியிருந்தார்கள். இவர்கள் ஏதோ தேவையின் அடிப்படையில் கூடியிருக்கிறார்களா? என் இனம் என்ற அடிப்படையில் கூடியிருக்கிறார்களா? தெரியவில்லை. இங்கிருந்து ஆக்ரோஷக்குரல் கிளம்பியது. (எப்படி இருந்தாலும் சரி இந்த இளைஞர்கள் தங்களையும் சுயவிமர்சனம் செய்துக்கொண்டு, சாதி,மதமற்று நேர்மையான சமூக மாற்றத்தின் ஏதோ விஷயத்திற்கு இந்த ஆக்ரோஷக்குரலைப் பயன்படுத்தினால்,அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆட்சியாளர் கூட ஆட்டம் காணச்செய்யுமே என்று எனக்குள்
நினைத்துக்கொண்டேன்) இந்த ஆக்ரோஷக் குரல்கள்தான்
வெளியே வதந்திகளாக பரவிக்கொண்டு இருந்ததுபோல. ''ரயில்வே ஸ்டேஷன் தமிழ்நாடு ஓட்டல் அருகில் இரண்டுபேரை
வெட்டிவிட்டார்களாம், எந்த இடத்தில்
கொலையுண்டாரோ அதே இடத்தில் இவர்கள் தரப்பு இன்னும் இரண்டுபேரை வெட்டிவிட்டார்களாம். அரசு பஸ்கள் எல்லாம் நிருத்தப்பட்டுவிட்டதாம்
இப்படியானப் பேச்சுகள் நகரம் முழுதும் மூலை முடுக்கெல்லாம் தீவிரமாக
பேசப்பட்டுக்கொண்டிருந்தது. இந்த
வதந்திகளால் பயந்துபோன அரசு அதிகாரிகள் அனைத்துப் பள்ளிகளுக்கும் மதியம் அரைநாள்
விடுமுறை அளித்துவிட்டது. இப்படி
எல்லாம் நடக்கிறதா? என்று ரயில்வே ரோட்டை
வந்து பார்த்தபோது அப்படியான அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. ஏன் மக்கள் இப்படியான பீதையை ஏற்படுத்துகிறார்கள். மாறி மாறி கொலைகள் நடக்கவேண்டும் என்று
எதிர்பார்க்கிறார்களா?
ஏறக்குறைய இரண்டு மணிவாக்கில் மருத்துவ மனையிலிருந்து பிணத்தை இறந்தவரின் வீட்டிற்கு
எடுத்துச்சென்றார்கள். அதையே ஒரு எதிர்ப்பு
வியூகமாக மாற்றிக்கொணடிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள். உடலை சிறிய மனி டெம்போவில் சற்று உயரமாக வைத்து கோஷங்களை
எழுப்பிக்கோண்டு போனார்கள். ஆட்டோவில்
ஒலிபெருக்கியில் சாதிவெறிப் பொறிக்கையை, சாராய
வியாபாரியை கைதுசெய் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. போலீஸ் உயர் அதிகாரிகள், சிறப்புக் காவல்படை என்று பலத்த பாதுகாப்புடன் கூட்டம்
ஊர்ந்து சென்றது.
ஊர்வளம் மூங்கில் மண்டபம் வந்ததும் எதிர்ப்பு ஆர்பாட்டமாக மாறியது. திருமாவளவன் பேசியபோது இதற்கு முன் வேலூர்
சிறையிலிருந்து போலீஸ் பாதுகாப்பில் கோர்ட்டுக்கு பஸ்ஸில்வந்த தேவராஜனைக்
கொன்றவன்தான், அம்பேத்கர்வளவனையும்
கொன்றிருக்கிறான். அந்த சாதி
வெறிப் பொறிக்கியை தண்டிக்கவேண்டியக் கடமை அரசுக்கு இருக்கிறது. இப்படியான சாதிவெறியர்களை மக்களுக்குக் காட்டும்
விதமாகதான் தம்பியின் பிணத்தை வீதியில் போட்டு
மக்கள் முன் கோரிக்கையை வைக்கிறோம்.' என்று
பேசினார்.
கொலைகாரன் வேலூர் ஜெயிலில் இருக்கிறானாம். ஜெயிலில் இருக்கிறவனாலேயே இப்படித் தொடர்ச்சியான கொலைகளை சாதாரனமாக செய்யமுடிகிறதா? என்று கூட்டத்தின் ஓரமாக சிலர் பேசிக்கொண்டது காதில்
விழுந்தது. மக்களின் பார்வையில் கொலைகளை
நடத்துவதன்மூலமாக தான் பராக்கிரமசாலி என்று நிரூபிக்க முயற்சி செய்கிறார்களா? அல்லது மக்களை பயமுறுத்தி தனக்குச் சாதகமான சமூகத்தை
கட்டமைத்துக்கொள்ள முயல்கிறார்களா?
தன் மரணத்திற்கு நாள் குறித்துவிட்ட பிறகுதான், தன் எதிராளியை கொலைசெய்கிறோம் என்பதை கொலைசெய்கிறவர்கள்
யோசிக்கவே இல்லையா? தலைபோகிற
வேலையிருந்தாலும் குறிப்பிட்ட நேரம் வந்தால் டீக்கடைக்கு இழுத்துச்செல்லும் கால்கள்போல ஒரு மனிதனை இந்த பூமியிலிருந்து மறைத்துவிடுவதை இவ்வளவு சாதாரணமாக
ஒருவனால் செய்யமுடிவது எதன் அடிப்படையில் நடக்கிறது? பாம்பின் கால் பாம்பறியும் என்று நடமாடுகிறவர்களுக்கே இந்த
நிலமை என்றால் சாமான்ய மனிதன் ‘தொடர்ச்சியாக
வரும் மேல் மூச்சையும், எப்போதாவது வரும் கீழ்
மூச்சையும்‘ சேர்த்து அடக்கிக்கொண்டு
வாழ்வதுதான் தற்போதைய சிறந்த சமூகத்தின் அடிப்படைத் தகுதியா?
ஜேடி
No comments:
Post a Comment