Friday, December 26, 2014

சிறுகதை


“ராஜாவின் கொம்பு“                (பகுதி1)                              

மரண பயம் தோய்ந்த காட்டின் உயர்ந்த மரங்களில் நீண்டு பழுத்தக்கிளை. அக்கிளை வசீகரமான கொம்பாகும் தகுதியில் இருந்தது. அது ஒன்றுதான் கொம்பாகும் தகுதியில் இருந்ததா? எத்தனை இருந்தாலும், பார்வைக்கு ஏதோ ஒன்று, இரண்டுதான் வசீகரிக்கும் என்பது உண்மையல்லவா?

ராஜா குடும்பத்திற்கு பயன்படவேண்டிய விறகுகளை சேகரிப்பதற்காகவே ஒரு கூட்டம் தினந்தோறும் காட்டைப் பதம்பார்த்தது. ராஜாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்த கட்டைகள் நிறைய உண்டு. அவைகளில் ஒன்றுதான் இக்கொம்பு. நீண்டு பழுத்த கொம்பு தனித்துவமான ஏதோ ஒன்றைப் பெற்றிருந்தது.  பார்வைக்கு ஒழுங்காக திடகாத்திரமாக இருந்த கொம்பு, பலவகையில் பயன்பாட்டுக்கு உகந்ததாக இருந்தது. ராஜாவின் வேலையாள் அக்கொம்பை மொழு மொழுப்பாக்கி வைத்திருந்தான். அநேகமாக கொஞ்ச நாள் மட்டுமே வேலையாள் வைத்திருந்தான். நாளுக்கு நாள் அதன் மினுமினுப்பு கூடியிருந்தது.  மந்திரியின் உதவியாளன், மந்திரி என்று கை மாறி இறுதியாக ராஜாவின் கையில் இருந்தால் பெருமை என்ற யோசனையின் அடிப்படையில், ராஜாவின் கைப் பிடியில் நின்றுகொண்டிருந்தது.

இதேக்கொம்பைதான், வேலைக்காரன். உதவியாளன். மந்திரி என பலர் கையில் வைத்திருந்தார்கள். அப்போதெல்லாம் இவ்வளவு தனித்துவத்தை யாரும் கண்டுபிடிக்கவில்லை. உண்மையிலேயே ராஜா தனக்குக் கிடைத்த கொம்பிற்காக மகிழ்ந்தார். இக்கொம்பால் தனக்கு அழகு கூடுவதாக நம்பினார். மந்திரி சபைகூட ராஜாவை கொம்புடன் பார்ப்பதை உள்ளுர ரசித்தார்கள். அப்படி விரும்புவதற்கு காரணமில்லாமல் இல்லை. ராஜா கையில் கொம்பு வராததற்கு முன்பு, நீண்ட வாள் வைத்திருந்தார். இருந்தாலும் அவ்வளவு கம்பீரத்தைத் தரவில்லை. வாள் உறையிலிடப்பட்டு தலைகவிழ்ந்துக் கிடந்தது. வாளும், ராஜாவும் ஒன்றிற்கு ஒன்று முரணான நிலையில் நிற்பதால், வீரத்தின் பிரிதிபலிப்பு கிடைக்கவில்லை. வாளின் வீரத்தைக் காட்டுவதற்கு ராஜாவிற்கு எந்த சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை.  
  
இன்று ராஜா தன் கைக்குச் சரியான அளவில் கொம்பைப் பிடித்து நின்றார். ராஜாவின் உயரத்திற்கு சமமாக நின்றது. ராஜாவுடன் ஒரு ஆள்நிற்பதுபோன்று இருப்பதாலேயே கம்பீரம் அள்ளியது. மந்திரிசபை அவர் தோற்றத்தை புதிதாகப் பார்த்தது. ராஜா புதியவரா? பார்ப்போரின் கற்பனையூகம் அளவுகடந்ததா? குழம்பினார்கள். நாள் கடக்கக் கடக்க  ராஜாதான் கொம்பு, கொம்புதான் ராஜா என்ற நிலைக்கு மந்திரிசபையும், குடிமக்களும் கணித்தார்கள்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், ராஜா எப்போதும் போலத்தான் இரவுப்படுக்கையில் கவுன் அணிந்து கொள்கிறார். காலையில் வழக்கம்போல தனக்கான கழிவறையில் மலம் கழிக்கின்றார். அந்தப்புறங்களில் வாழ்வின் தத்துவத்திற்கான பயிற்சியை எடுத்துக்கொள்கிறார். நாட்டு மக்கள் மீதான விசாரனையைத் தொடர்கின்றார். வாளை இடுப்பில் சொருகியிருந்தபோது செய்த, செயல்பாடுகளைத்தான் தற்போதும் செய்கின்றார்.  இருந்தாலும் நீண்டு பழுத்த கொம்பு அவர் கையில் வந்தபிறகு ராஜாவின் செயல்பாடுகள் மாறிவிட்டது என கூட்டங் கூட்டமாக குடிமக்கள் பேசிக்கொண்டார்கள். ராஜாவின் காதுபடவே இச்செய்தி பேசப்பட்டது. கத்தி இருந்தபோதும், கொம்பு வந்தபிறகும் தன் செயல்பாடுகள் எதையும் மாற்றிக்கொண்டதாக அவருக்குத் தெரியவில்லை. மக்களிடம் தானாக இப்பேச்சு மாற்றம் நடக்கிற தென்றாலும், ஜொலிப்பது நம் தலை கிரீடம்தானே என்று உள்ளூர நினைத்தார். கூடவே கொம்புக்குள் ஏதோ மகிமை இருப்பது உண்மை என்றும் நம்பினார்.

ராஜாவிற்கு இயல்பாகவே கொம்பின் மீது கூடுதல் அக்கறை ஏற்பட்டது. தன் நடைக்கு முன் கொம்பின் நடையை வைப்பது அவருக்குப் பிடித்துவிட்டது. படுக்கை அறையில் ராணியை அணைத்துக் கொண்டிருந்தாலும், முதுகுக்குப்பின்னால் ஒரு ஆளைப்போல் கொம்பைப் படுக்கவைத்திருந்தார். கொம்பு களவுபோய்விட்டால் தன் ராஜ்ஜியம் கவிழ்ந்துவிடுமோ, என்றளவில் ராஜாவின் மனதுக்குள் கருத்து பலமாக உருவாகிவிட்டிருந்தது. நீண்டு பழுத்த கொம்புக்கு கொடுக்கும் இடத்தை நினைத்து  ராணியாருக்கு எரிச்சல் ஏற்பட்டது.

ராஜா கொம்பைப் பராமரிக்க இரண்டு பணியாளர்களை நியமித்தார். காலையில் ராஜா குளிக்கும் அறையில் அக்கொம்பைக் கழுவ உத்தரவிட்டார். தன் பார்வை முன் நடக்கவேண்டும் என விரும்பினார். ஒருவன் கழுவி முடித்ததும், இன்னொருவன் பட்டு துணியால் துடைத்து வெள்ளிக் குழவிபோன்ற கருவியில் நிறுத்தவேண்டும். பணியாளர்கள் அவ்வேலையை சரியாகச் செய்கிறார்களா என்பதற்காகவும், ராஜா தன் அறைக்குச் சென்று குளித்து வரும்வரை கொம்பை  கண்காணிக்க மேலும் இரண்டு மேற்பார்வையாளர்களை வைத்திருந்தார். ராஜா காலைக்கடனை முடித்து மாற்றுடைத் தரித்துக்கொண்டு மீண்டும் தன் வசம் கொம்பைப் பிடித்துக்கொள்ளும் வரை, பணியாளர்களுக்கு அது முக்கிய வேலையாய் இருந்தது.

இன்னொரு நாள் ராஜா நகை செய்யும் கொள்ளரை அழைத்தார். கொம்பிற்கு விஷேசமான கிரீடம் ஒன்றை செய்து அணிவிக்கும்படி கட்டளையிட்டார். நாட்டின் பணிகளில் இதுவும் ஒன்று என்பதுபோல் நடந்தேறியது.  கிரீடம் சூடி ராஜா கொம்புடன் நின்றபோது, ராஜாவால் கொம்பிற்கும், கொம்பால் ராஜாவிற்கும் பெருமையும், அழகும் கூடியிருந்தது.

இத்தனை மதிப்புக்குறிய இடத்திற்கு வந்ததை நினைத்து கொம்பு உள்ளூர மகிழ்ந்தது. அதன் கடந்த காலத்தை நினைத்து கண்ணீர் வடித்தது. ஆனால், இப்போது அது ஆனந்தக் கண்ணீர் என்பதில் நிம்மதியானது.

தன்னை சிறிதுநேரம் திரும்பிப் பார்த்து. ‘இதே மந்திரிசபையின் மூலையில் எத்தனை நாட்கள் நின்றிருந்தோம். மந்திரிமார்களோ, குடிமக்களோ நம்மை அவ்வளவு வீஷேமாக ஒருபோதும் நினைக்கவில்லையே. இத்தனைக்கும் மந்திரியின் உதவியாளன் ராஜாவிற்கு மிக அருகில் பல முறை நின்றிருக்கின்றான். ஒருமுறைகூட  ராஜாவின் பார்வையில் படாமலே இருந்திருக்கிறோமே. இன்று எல்லா துரதிர்ஷ்டங்களையும் மீறி தனக்கு ஈடான இடத்தில் நிற்கவைக்கும் அளவில் ராஜா, நம்மிடம் என்ன கண்டிருப்பார். அந்த இடத்திற்குறிய தகுதி உடையதுதான் என்பதை எதைக்கொண்டு நிரூபிக்க முடியும் என பலவாறு தனக்குத்தானே‘ யோசித்தது கொம்பு.

அரசபையின் சுமூகமான நகர்விற்கு மிக முக்கியமானவர்கள் மந்திரிகள், என்பது ராஜாவின் கருத்து. தினந்தோறும் நகற்கின்ற பொழுதுபோன்று சபை தானாக நகர்ந்தாலும், ‘இன்று அவைக்குள்ளிருந்து வெளிப்பட்ட  ராஜாவின் முன்யோசனையான தீர்மானம், பலகாலங்களிலும் பேசக்கூடியது. அவரின் ராட்சஷ பலம் எதிரணியைக் கலங்கடிக்கக்கூடியது.‘ என வார்த்தைகளை வாரி வழங்கும் நபர்களை, ராஜா புறம்பேத் தள்ளிவிடுவதில்லை. இந்த விஷயத்தில் நீண்டு பழுத்தக் கொம்பிற்கு லேசான உறுத்தல் இருந்தாலும், ராஜாவின் இயல்பிற்காக தன்னையே ராஜாவின் சாயலில் ஒத்துபோகச்செய்துகொண்டது. ஏறக்குறைய ராஜாவின் விருப்பமே, கொம்பின் சேவை என்றாகிவிட்டது. சில நேரங்களில் ராஜாவிற்குத் தெரியாமல் கொம்பைக்கழுவும் பணியாளர்களைப்பார்த்து, யார் கண்ணிலும் பட்டுவிடாதபடி லேசாகச் சிரிக்கும் முகத்தைக் காட்டிவந்தது.

கொம்பிற்கு ஏற்கனவே காட்டின் மூலிகைச் சார்ந்த இயற்கை நறுமனங்களின் பண்பு இருந்தாலும், தற்போது நறுமனங்களின் மனம் கசிந்துவிடாதபடி, தன் நுண்மை துளைகளை அடைத்துக்கொண்டது. ராஜாவின் மேம்பட்ட கவனிப்பில் கிரங்கி தான் ராஜாவின் முழு நம்பிக்கையின் அடையாளம் என்றானது.

ராஜா தன் நடையை முன்னெடுப்பதற்கு முன், கொம்பை எடுப்பார். எடுத்ததுதான் தாமதம் ராஜா நினைப்பதற்கும் மேலாக இரண்டடி அதிகமாக கொம்பின் நடை நீளும்படியாக நகர்ந்து நிற்கும். யார் குற்றவாளி என்று விசாரிப்பதில் சிறமம் இருக்கும்போது கொம்பை லேசாக உயர்த்தினால்போதும் சரியான குற்றவாளியை காட்டும்படியாக நீண்டு நிற்கும். குடிமக்களுக்கு நீதி போதனைகளை சொல்லும்போது சில நேரம் ராஜாவின் உடல் மொழிக்கேற்றவாறு அசைந்துகொடுக்கும். ராஜா இவைகளை உண்ணிப்பாக கவனித்து மகிழ்ந்தார்.

ஒரு நாள் ராஜா, ராணியைக் கலவி கொண்டு உச்சத்தை அடைவதற்கு முன்னே திடீரென படுக்கையில் சரிந்தார். சற்று நேரத்திற்குள்ளாகவே மூச்சு நின்றுவிட்டது. ராணி அவசர அவசரமாக ஆடையை உடுத்திக்கொண்டார். ராஜாவின் குறி விரைத்தபடியாகவே இருந்தது. ராணியாருக்கு கையால் தள்ளி சாய்ப்பதற்கான யோசனை வந்தது. ஆனாலும், அப்படிச் செய்யவில்லை. பக்கத்தில் இருக்கும் கொம்பைப் பார்த்தார். அதைத் தொடுதலே அசிங்கம் என்றளவில் நினைத்தார், கொம்பைப் பயன்படுத்தவில்லை. சிறிது நேரம் செய்வதறியாமல் யோசித்து, தலையணையை எடுத்து ராஜாவின் குறியை மறைக்கும்படியாகப் போட்டார்.

பாதுகாப்பு மந்திரி விடுமுறையில் இருந்ததால், காவலாளனைக் கொண்டு நிதி மந்திரியை அழைத்தார். நிதி மந்திரி அறைக்கு வந்த அவசரத்தில் “என்னம்மா நடந்தது“ என்றார். மந்திரி இன்னும் ராஜாவைச் சரியாகப் பார்க்கவில்லை. 

“மந்திரியாரே எப்போதும்போலத்தான் என்னுடன் கலவியில் ஈடுபட்டார், நானும் அதிகமாக ஈடுபடவில்லை. ஏனோ இப்படி நடந்துவிட்டது“
அப்போதுதான் மந்திரி ராஜாவின் கிட்டவந்துப் பார்த்து, இரவு கவுனை விலக்கி தலையணையை எடுத்தார். குறி அப்படியே இருந்தது. ராணியார் “அந்த்ச் சனியனை மடித்துவிடு மந்திரியாரே“ என்றவர், ராஜாவை ஒட்டி இருந்த கொம்பைப் பார்த்தார். சற்று தூர நின்றிருந்த பணியாளனை ஆத்திரத்துடன் அழைத்து  “இந்தப் பாழாய் போன கொம்பை எடுத்து ஏதாவது முலையில் எறி“ என்றார்.

தலையணையை குறியின் மீது வைத்து மடித்துப்பிடித்தவாறே மந்திரி, ராணியாரை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

ஆம் மந்திரியாரே, இந்த முட்டாள் ராஜா என்னோடு கலவி கொள்ளும் போதெல்லாம் சில நேரம் கொம்பை அடிக்கடித் தொட்டுப் பார்த்துக்கொள்வார். அச்சமயம் எப்போதும் இல்லாதபடி முரட்டுத்தனமாக இயக்கம் கொள்வார் இன்றும் அப்படித்தான் நடந்துவிட்டது. பிறகு ராணியார், எல்லா நிகழ்வுகளையும் சுமூகமாக நடத்தியிருந்தார்.

ராணியார் அறை முழுவதும் ஒழுங்கு படுத்தும்படியாக சொல்லி இருந்தார் அப்பொறுப்பில் கொம்பைக்கழுவும் பணியாளனும் இருந்தான். மற்றெல்லா வேலைகளையும்விட கொம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதில் அக்கறையாக இருந்தான். ஒரு வழியாக பயனற்ற பொருட்களுடன், நீண்டு பழுத்தக் கொம்பும் தலைக்குப்புற விழுந்துகிடந்தது. ஒருவரால் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் பொருள், இன்னொருவரால் மிக அற்பமாகத் தூக்கி எறியப்படுவது எப்படி? அப்போது, உண்மையிலேயே அப்பொருளின் தரம் என்பது என்ன? என்று யோசித்தவன் கொம்பிற்கான வெள்ளிக் குழவியைத்தேடி இன்னொரு இடத்தில் பாதுகாப்பாக வைத்தான். அநேகமாக ராணியாரின் பார்வையில் படும்படியாக இருக்கவில்லை.

ராணியார், இதற்கு முன் இல்லாதபடி ஆடைகளை புதுவிதமாக உடுத்திக்கொண்டார். இப்போதும் அரண்மனையில்தான் இருந்தார். என்றாலும் பல விஷயங்களை மாற்றி அமைக்கின்றார். ராஜா இருந்தபோதும் அக்காரியங்கள் இருந்திருக்கின்றன. அவைகளை மாற்றவேண்டும் என்ற யோசனை ராணியாருக்கு வந்திருக்குமாத் தெரியவில்லை. நீண்டு பழுத்த கொம்பைப் பராமரித்த பணியாட்களை, அந்தப்புறத்தில் புதிய செடிகளைக் கொண்டுவந்து நடும்படியாகவும், வெப்பக்கதிர்களை அடக்கிக்கொண்டு அடர்சிவப்பும், மஞ்சளும், வெள்ளையும் கலந்து சாதுவாக எழும், மறையும் காலை, மாலை சூரியனின் அதேத் தன்மையைப் பதிவுசெய்து, இரவு ஒன்பதிலிருந்து பதினோரு மணிவரையும், பின்னிரவு மூன்றிலிருந்து ஐந்துவரையிலும், தோட்டங்களில் தினந்தோறும் வெளிச்சங்களாக பிரிதிபலிக்க வைக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டார். 

கொம்பைப் பராமரிக்க வேறு ஆட்களை நியமித்தாரா? என்பது முன்னாள் பணியாட்களுக்குச் சந்தேகமாகவே இருந்தது. ஒரு வேளை வெளி நாட்டில் அரசியல் படிக்கும், தன் மகன் வந்து ராஜ்ஜியத்தை கையில் எடுத்துக்கொண்டால், அவர் என்னவெல்லாம் மாற்றம் செய்வாரோ என்ற யோசனைகளும் பணியாட்களுக்கு இருந்தது.

அரசபையில் கூடும் மந்திரிமார்கள், ராஜா அறையில் நுழைவது என்பது கடினம். பணியாளர்களுக்கு அத்தகைய கஷ்டம் இருப்பதில்லை. அறையின் வேலைகள் அனைத்தும் பணியாள்கள்தான் பார்க்கவேண்டும். அப்படித்தான் ராஜா, அறைகளில் கொம்பைக் கழுவியப் பணியாளன் அடிக்கடி வந்தான்.

திரைச்சீலைகளின் தூசுகளைத் தட்டும்போதே, சற்று தூரத்தில் வெள்ளிக்குழவியில் இருக்கும் நீண்டு பழுத்தக் கொம்பைப் பார்ப்பான். கொம்பு தனக்கு ஏற்பட்டுவிட்ட நிலையை மறக்கமுடியாமல் முன்னாட்களில் ராஜாவிடம் இருந்தபோது, தனக்குக் கொடுத்த அங்கீகாரத்தையே நினைத்து, பெருமிதமும், தற்போது எப்படி அதை இழந்தோம் என்ற வருத்தமும் ஒருசேர பதிந்து வைத்திருக்கும் முகத்தில் தெரிந்தது.

ராஜா மறைந்து கொஞ்ச நாட்கள் கடந்துவிட்டிருந்தாலும், ராணி ஒருபோதும் அக்கொம்பின் முகத்தைப் பார்க்கவேயில்லை. ராணியார் பார்க்காமல் போனால் என்ன? ராஜா மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்த மரியாதைக்காவது அக்கொம்பைக் கழுவி வைக்கச்சொல்லலாம். அவ்வார்த்தையை ராணி உதிர்ப்பாரா? பணியாளன் உள்ளுர காத்திருந்தான். அது நடக்காமலேப் போனது. உத்தரவே இல்லாமல் பணியாளனாக மனமுவந்து கழுவி வைப்பதற்கு சற்று பயமாகவும் இருந்தது. ராணிக்கு பிடிக்கிறதென்றால் கூடுதலாகச் செய்யலாம். பிடிக்காத பட்சத்தில்,  சொல்லாத வேலையை பணியாளன் செய்வது, தெரிந்துவிட்டால் அவன் வாழ்வாதாரமே பாத்திக்கப்பட வாய்ப்புண்டு. அதற்காகவே பணியாளனுடன் இருந்த மற்றப் பணியாளர்கள் ராஜா அறைக்கு வராமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு பாராமுகமாய் போய்விடுகிறார்கள். கொம்பைக் கழுவும் பணியாளன் மட்டும், எல்லா மனிதனுடைய வாழ்வும்போலத்தான். இக்கொம்பின் வாழ்வும் சீக்கிரம் முடிந்துவிட்டது. 

ராஜா அதன் வசீகரத்தை எப்படியெல்லாம் புகழ்ந்தார். அரண்மனையிலோ, குடிமக்களிடமோ அதன் பிம்பம் பதிந்திருந்தாலும், அவைகளால் கொம்பிற்கு பயன் ஏதும் இல்லையே. பணியாளன் யோசித்தான். ராஜாவின் அறைக்கு வரும்போதெல்லாம் அனுக்கு கொடுக்கப்படும் பணிகளை வேகமாக முடித்துவிட்டு, கொம்பின் அருகில் சென்று ஈரத்துணியால் துடைத்து, வெள்ளிக்குழவியில் வைத்திருக்கிறான். அப்போதெல்லாம் அக்கொம்பு, அரசபைக்கு எப்படியும் ராஜாவின் மகன் வரப்போகின்றார். அவர் அப்பா நம்மை வைத்திருந்த நிலமைத்தெரிந்ததும், நமக்கான அந்தஸ்த்தை கொடுத்துவிடுவார். அச்சமயம் பணியாளனுக்கு நாம் ஏதாவது செய்வோம் என்றக் கணிப்பில்தான், ராணியாருக்குத் தெரியாமல் கவனிக்கின்றான் என்ற எண்ணமும் இருந்தது.

கொம்பின் உடல்மொழியை பணியாளன் அறிந்திருந்தான். இன்னொரு விஷயமும் நன்றாகப் புரிந்திருந்தது. ‘எந்தநாளும் அவ்வளவு சுலபமாக ராஜா அங்கீகரிக்கும் படியான நன்மை கிடைக்கப்போவதில்லை என்பதுதான். இருந்தாலும், கொம்பு வெளியிடும் இயல்பான மனங்களில் விருப்பமுடையவனாக இருப்பது பணியாளன் விருப்பமாக இருந்தது.

ராணியார் அரசபைக்கு புதிய ராஜாவை அறிமுகம் செய்கின்றார். ஒவ்வொரு மந்திரியாக அறிமுகம் செய்கின்றார். இடை இடையில் அந்தந்த மந்திரிகளின். தனித்தன்மைகளை, பெருமையாகவும் சில மந்திரிகளின் நிர்வாகத்தில் இருக்கும் குறைகளை லேசான நகை தொனியுடன் சுட்டிக்காட்டினார். தனக்கு ஒரே மகன் என்பதால் நாட்டின் பல விஷயங்களைக்குறித்து. திறம்பட செய்திகளைச் சொன்னார்.
குடிமக்களின் வாழ்வாதார நிலை, வருவாய், நாட்டை பீடிக்கும் முக்கியமான பிரச்சனையெல்லாம், அரசபைக்குள் பாதுகாக்கவேண்டிய விஷயங்கள். நம்மிடம் இருக்கும் பணியாளர்கள், நமக்கு எதிராக வேலை பார்க்காதபடி இருக்கவைப்பதும்தான் என்று ஒன்றுவிடாமல் அவ்வளவு விரிவாக உரையாற்றினார். 

கேட்போருக்கு ‘திறமையின் களஞ்சியமாக இருக்கும் ராணியார். அரசபையை தானே நடத்தலாம். ஏனோ சீக்கிரமாகவே தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டார். அவர் அனுபவமற்றவர், படிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு அரசபை நடத்த வரும்போது, சபையில் இருக்கும் அனுபவசாலிகள் ராஜாவை கைக்குள் வைத்துக்கொள்ள ஏதுவாகத்தானே இருக்கும்‘ என்றும் பேசிக்கொண்டார்கள். அதேவேளையில், கொம்பைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாதது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை மறந்திருப்பாரோ? இருக்கமுடியாது. வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார். என்பதை அறிந்துகொண்டார்கள். ராஜாவின் கையில் இருக்கும்போது கொம்பின் புகழை பாடிக்கொண்டேயிருந்த மந்திரிகள், குடிமக்கள் அத்தனைபேரும் மறந்துகூட புதிய ராஜாவிடம் கொம்பைப்பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. சபைக்கு மிக அருகில்தான் கொம்பு தன் குழவியில் இருக்கிறது என்றாலும், அதன் பக்கம் எந்த அமைச்சரும் தலைக்காட்டவில்லை. காலங்கள்தான் நகர்ந்துகொண்டிருந்தது.

கொம்பு இப்போதுதான் உண்மையிலேயே நடைமுறை எதார்த்ததை உணர்ந்தது. ராஜாவோடு இருந்தகாலம் எவ்வளவு பெருமைக்குறியது. அவைகளின் பிம்பத்தை யார் மறந்துவிடமுடியும். நடந்து முடிந்த கடந்த காலத்தின் மேன்மை தங்கிய நாட்களையே மீண்டும் மீண்டும் நினைத்து நிக்ழ்காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தது.

ஒரு நாள் அரசபை சாராத இளைஞன் வந்தான். அவனுக்கு இயற்கை வைத்தியத்தில் அனுபவமும், நம்பிக்கையும் இருந்தது. ஒருகையில் ராஜாவின் மகனுக்கு அறிமுகமானவன். தற்போது ராஜாவாக இருப்பதால் சற்று தயக்கத்துடன்தான் அரண்மனைக்கு வந்தான். புதிய ராஜாவிற்கு தெரிவிக்கப்பட்டது. ராஜாவும் தனக்கு அறிமுகமானவனா? யாராக இருக்கும். ஐயத்துடன்தான் பார்க்க அனுமதித்தார். சந்திக்க விரும்பியவன் வரும்வரை யோசனை நிலையில் இருந்தார். அந்நபர் கிட்ட வர வர எங்கேயோ பார்த்த முகமாய் இருந்தது. ஒரு முறை தான் படித்த வளாகத்தில் இருந்த அறியவகைச் செடிகளை ஆய்வு செய்வதற்காக, பல்வேறு நாட்டிலிருந்து இளைஞர்கள் குழுவாக வந்திருந்தார்கள். அக்குழுவில் இந்த இளைஞனைப் பார்த்திருக்கின்றார். தன் நாட்டின் குடிமகன் சாயலாக இருந்த காரணத்தினால், அவனிடம் பேசி விசாரித்திருக்கின்றார். பிறகுதான் நினைவுவந்தது. புன்னகையுடன் இருவரும் கைகுலுக்கிக்கொண்டார்கள். இப்போது என்ன விஷயமாக வந்திருப்பான் என்ற ஐயமும் இருந்தது.

மூலிகை இளைஞன் பேசினான். “நீங்கள் இந்நாட்டின் ராஜாவாக வந்தது மிக்க மகிழ்ச்சி தங்களைப்போன்ற இளைஞர்களால்தான் இயற்கையை வளர்த்தெடுக்க முடியும். மேலும், நான் வந்த விஷயம். “எங்கள் ராஜா, உங்கள் அப்பா கடைசிக்காலங்களில் இயற்கை மீது அதிக நம்பிக்கை உள்ளவராக இருந்தார். அதன் அடையாளம்தான், ராஜாவான தோற்றத்திற்கே கம்பீரமான உறைவாளைக்கூடத் தூக்கி எறிந்து, மூலிகை சக்திவாய்ந்த நீண்டு பழுத்தக் கொம்பை தன்னுடன் வைத்துக்கொண்டார். அக்கொம்புடன் அரசபைக்கு வரும்போதெல்லாம், புதிய நம்பிக்கையுடன் செயல்பட்டார். அவருடைய செயல்பாடுகளில் மக்கள் அதிக நம்பிக்கை வைத்தனர். உண்மையிலேயே அக்கொம்பிற்கு அற்புதமான மகிமையிருக்கிறது. அதை உங்களுக்கு ஈடாக வைத்துக்கொண்டால் உங்களுடைய அரசாட்சி சிறப்படையும். சபையாலும், குடிமக்களாலும் பாராட்டப்படுவீர்கள்“ என்றான்.
 
புதிய ராஜாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையைச் சொல்வதென்றால், அதுவரை அக்கொம்பைப் பற்றி யாருமேச் சொல்லவில்லை. “அது எப்படி இருக்கும். தன் அறைக்குள்ளேயே இருந்திருக்கிறது. என் கண்ணில் படவே இல்லை. யாரும்கூட சொல்லவும் இல்லை. ராஜா உதவியாளர்களை அழைத்தான். இவர் சொல்லுகின்ற கொம்பு எங்கே இருக்கின்றது“

உதவியாளன் அழைத்துச்சென்றான். புதிய ராஜாவும், மூலிகை இளைஞனும் பின்னாக நடந்தார்கள். அலங்கார அறையைக் கடந்தார்கள். சில அறைகளுக்கு முன் இருந்த நடைபாதை வழியாகச்சென்றான். முன்னாள் ராஜா அலுவல் பார்க்கும் அறை வந்தது. அதை ஒட்டியிருந்தார்போல ஓய்வறையும் இருந்தது. அவ்வாசலின் திரைச்சீலை முழுமையாக மூடியிருந்தது. உதவியாளன் திரைச்சீலையை சற்று வேகமாக ஒதுக்கியபோது சர்க்… எனும் சத்தம் எழுப்பியது..  சத்தத்தைக் கேட்டவுடன், எதிர்முனை மாடங்களில் அமர்ந்திருந்த கலர் கலரான புறாக்கள் படபடத்து ஓடின. புதிய ராஜா திரும்பிப் பார்த்தான். ஜோடிப்புறாக்களை மட்டுமே பார்க்கமுடிந்தது. புதிய ராஜாவிற்கு அதில் நாட்டம் செல்லவில்லை. அரசபைக்கு ஈடான  இன்னொன்றை பார்க்கும் ஆவலை மூலிகை இளைஞன் ராஜாவிற்கு ஏற்படுத்தியிருந்தான். ‘விளக்குத்திரியைக் கொளுத்தி விட்டு, வேடிக்கைப் பார்ப்பவன்போல், பிறகு எதையுமே பேசவில்லை. வெளிச்சத்தை அறிந்துகொள்ள விளக்கம் தேவையா என்றளவில் அவன் தொனி இருந்தது.

உதவியாளன் நடந்துகொண்டிருந்ததை நிறுத்தவில்லை. இன்னும் ஏதோ பயன் படாத இடத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். ஏறக்குறைய கடந்த ராஜாவின் ஓய்வறையுடன் இணைந்திருந்த கழிவு அறையை ஒட்டி, தேவையற்றப் பொருட்களை குவித்திருந்த இடத்திற்கு முன்னதாக வெள்ளிக்குழவியில் நீண்டு பழுத்த கொம்பு இரும்புத்தூணில் இணைக்கப்பட்டிருந்தது.

கொம்பைக் கழுவும் பணியாளன் பல நேரம் ராணியாருக்குத் தெரியாமல் துடைத்து விட்டதால் கொம்பின் மேனி அவ்வளவாக மங்கியிருக்கவில்லை. ஒரு மூலையில் இருந்து, கொம்பின் கிரீடத்திலோ, பின்பக்கமாகவோ ஒட்டியவாறு சிலந்திக்கூடுகள் வலை பின்னியிருந்தன.
மூலிகை இளைஞன் உதவியாளனைப் பார்த்து. “இக்கொம்பை யாராவது பராமரிக்கின்றார்களா?“ என்றான்.

“ராஜா மறைவுக்குப்பிறகு இந்த இடத்திற்கு அநேகமாக யாரும் வரவில்லை. ராணியார் வாரம் ஒரு முறை அறைகளைச் சீரமைக்க, சில பணியாளர்களை மட்டும் அறைக்குள் அனுமதிப்பார்கள். அப்பணியாளர் முக்கால்வாசி அறிவிலிகள், கூடவே சோம்பேறிகள். மகிமை வாய்ந்த பொருட்களின் மீதோ, கலை சம்பந்தப்பட்ட காரியங்களிலோ ஈடுபாடற்றவர்கள். அவர்களாக தானாக முன்வந்து இவைகளையெல்லாம் சுத்தப்படுத்தமாட்டார்கள். மேலும் ராணியாருக்கு இக்கொம்பென்றாளே கடுங்கோபம் வரும். ஆக அதன் முகத்தைக்கூட எந்தப் பணியாளனும் பார்க்கமாட்டான் என்பது தெளிவான உண்மை“

மூலிகை இளைஞன், ராஜாவைப்பார்த்தான். “ராஜா, அதன் மகிமையைப் பார்த்தீர்களா? நம் ராஜா இறந்து சில வருஷங்கள் கழிந்துவிட்டன. யாரும் பராமரிக்கவும் இல்லை. அதன் தலையில் இருக்கும் கிரீடமாவது லேசாக மங்கியிருக்கிறது. கொம்பின் பழுப்பு நிறமேனி தங்கத்தை ஒத்த ஜொலிப்பில் இருப்பதை நீங்கள் அறிகிறீர்களா? அதனால்தான் முந்தைய ராஜா கொம்பின் மதிப்பறிந்து தனக்கு ஈடாக வைத்திருந்தார். 

உங்கள் நம்மைக்காகச் சொல்கிறேன். உங்கள் கைப்பிடிக்குள் இக்கொம்பு இருந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசபைக்கான கம்பீரம் புலப்படும். அதன்மூலம் சபை இயல்பாக நடந்தேற உதவும். ஒரு வேளை செயல்பாடுகளில் கம்பீரம் குறைவாக இருந்தால், அரசபை மந்திரிகளுக்கு, சபையை முன்னேற்றப் பாதையில் நடத்த அடிக்கடி விண்ணப்பம் வைக்கவேண்டும். மிக முக்கியமான காரியம். இதை சிறப்பாக யோசியுங்கள்“ என்றான்.

புதிய ராஜா கொம்பைக்குறித்து விவாதிப்பதற்காகவே சிறப்பு சபையைக் கூட்டினார். இக்கூட்டத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. ராணியாருக்குத் தெரியாமல் ரகசியமாகவும் போடப்பட்டது. இன்னொரு முக்கியமான விஷயம், சபையில் மந்திரிகளின் இலாக்கா வரிசைக்கிரயமாக அமரவைக்கவில்லை. சபைக்குப் பக்கத்தில் இருந்த நடன அரங்கில் கூட்டினார். ராஜா மட்டும் மேடையின் பிரதான இருக்கையில் அமர்ந்தார். சற்றுத் தள்ளி மந்திரிமார்கள் மற்றும் அதிகாரிகள் இருக்கை இருந்தது. இடது பக்கத்தில் ஐம்பது வயதிற்கு மேல் இருந்தவர்களையும், வலதுபக்கத்தில் ஐம்பது வயதிற்கு குறைவாக இருந்தவர்களையும் அமரவைத்தார்.

புதிய ராஜா தொடங்கினார். “நாம் அனைவரும் மக்களின் நலனுக்காக இயங்குகின்றவர்கள். நான் அரசனாக இருந்தாலும், ஒன்றுபட்ட மக்களைவிட உயர்ந்தவன் அல்ல. நீங்களும் அப்படித்தான் கருதிக்கொள்ள வேண்டும். ஆனால், தனி மனிதன் நாட்டின் கட்டமைப்புக்கு கட்டுப்பட்டவன். அதாவது, அரசனுக்கு கட்டுப்பட்டவன். நம் அரசு மக்களின் நலனில் அதிக அக்கறையுள்ளவையாக இருக்கவேண்டும். அதற்காகவே நம் அன்றாட செயல்பாடு அமையவேண்டும். நான் அரசை நடத்துவதற்கு புதியவன் என்றாலும், அதற்கான தகுதியில்லாதவன் அல்ல. அதே சமயம் அரசின் நாடித்துடிப்பை முற்றிலும் அறிந்தவனும் அல்ல. அப்படி இருக்க என் தந்தையின் நற்காரியங்களை எனக்கு மறைத்துவிட்டீர்கள்“

மந்திரிமார்கள் ஒருவரின் ஒருவர் முகம் பார்த்தார்கள் பலருக்கு பயம்கூடிற்று. ராஜா எந்த காரியத்தைக்குறித்து சொல்லுகிறார். எதோ நடந்துவிட்டிருக்கிறது என கலக்கமடைந்தார்கள்.
புதிய ராஜா மீண்டும் தொடர்ந்தார். “என் தந்தையாரின் கடைசிக் காலங்களில், எல்லா வகையிலும் மிகத்திறமையான ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்கு ஒரு பொருள் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அதுகுறித்து ஒருவர்கூட என்னிடம் கூறவில்லை. உங்களை என்னவென்று நினைப்பது. என் அரசாட்சி சரியாக நடக்கக்கூடாது என, நீங்கள் நினைப்பாதாக எடுத்துக்கொள்ளலாமா?“ என நிறுத்தினார்.

அச்சமயம் நலிந்த கலைஞர்களுக்கான மந்திரி “மன்னிக்கனும் ராஜா. நீங்கள் யாரோ அல்ல. எங்கள் அன்பிற்குறிய ராஜாவின் புதல்வர். உங்களின் அரசபையை நாங்கள் மனதார வரவேற்கின்றோம். அதே சமயம் எங்கள் முழு ஒத்துழைப்பையும் தரக்காத்திருக்கின்றோம். எதுவாயினும் நீங்கள், வெளிப்படையாகச் சொன்னால், எங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு பணியாற்றுவோம்“ என்று சொல்லி அமர்ந்தபோது பல மந்திரிகள் சேர்ந்தார்போல தொப்தொப்பென்று பென்சைப் பலமாகத் தட்டினார்கள்.  இன்னும் சிலர் “ஆமாம் ராஜா, அதுதான் உண்மை“ என உரக்க பேசினார்கள்.

புதிய ராஜா தொடர்ந்தார்“ மிக்க மகிழ்ச்சி. இன்று அவைக்கூட்டியதின் முக்கிய விஷயமே. என் தந்தை கடைசிக் காலங்களில் நீண்டு பழுத்த கொம்பு வைத்திருந்தார் என்பது உங்களுக்கும் தெரியும். அவரின் கைக்கு அக்கொம்பு வந்தபிறகுதான், பெரிய மாற்றம் வந்ததாக பல அறிஞர்கள் சொல்கின்றார்கள்.  கூடுதலாகச் சொல்வதென்றால் கொம்பு வந்தபிறகு, ராஜாவுக்கே உறித்தான நீண்ட வாளைக்கூட தவிர்த்துவிட்டார். எனக்கு அது ஆச்ரியமாக இருக்கிறது. முன்னோர்களின் வழிமுறைகளை அவ்வளவு சீக்கிரத்தில் உதாசினப்படுத்திவிடமுடியாது. ஆனால், என் தந்தை வைத்திருந்தார் என்பதற்காக அதையே நானும் வைத்திருக்கவேண்மோ?  இவ்விஷயத்தில் எனக்கு குழப்பமா இருக்கிறது. அது பற்றி விவாதிக்கவே அவையைக் கூட்டியிருக்கிறேன். நான், என் தந்தை வைத்திருந்த கொம்பு வைத்துக்கொள்வது நல்லதா? அல்லது எனக்கென்று பிரித்தியேகமான நீள வாள் செய்துகொள்ளலாமா? உங்கள் யோசனையைச் சொல்லுங்கள். முதலில் இடப்பக்கம் இருப்பவர்கள் ஆரம்பியுங்கள்“.

ஏறக்குறைய கடைசி இருக்கையில் இருந்து முதலாவதாக எழுந்த கலாச்சாசரம் மற்றும் பண்பாட்டுத்துறை மந்திரி “ராஜா வாழ்க“ என்றவர் சற்றுப் பேச்சை நிறுத்தினார். பிறகு குரலைச் செருமிக்கொண்டு “எங்கள் ராஜாவும், உமது அப்பாவுமான நம் ராஜாவின் ஆட்சிக்காலம் என்பது பொன் எழுத்துக்களால் பதிப்பிக்கப் படவேண்டியது. மக்களை மிகச்சிறந்த முறையில் வழிநடத்தினார் என்பதற்கு பல நாடுகள் அளித்த வாழ்த்துச் சான்னொன்றே போதும். இருந்தாலும் கடைசி மூன்று, நான்காண்டுகள் ஆட்சியில் ஒரு வேகம் இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், அவர் கைக்குள் பிடித்திருந்த நீண்டு பழுத்த கொம்பு. ராஜாவிற்கு மிகப் பொறுத்தமானத் தோற்றத்தை அதுதான் வழங்கியது. நான் ராஜாவிடம் முக்கியமாகக் கவனித்தது உண்டு. ராஜா நடக்கும்போது அக்கொம்பை ஊன்றுகோலாகப் பயன்படுத்தவில்லை. நிற்கும்போது மட்டுமே தனக்கு ஈடாக தரையில் ஊன்றி பிடிப்பார். அது ஒரு பிரமாண்டமான கம்பீரத்தைக் கொடுக்கும்“ 

புதிய ராஜா குறிக்கிட்டு “மந்திரியாரே, தாங்கள் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத்துறையில் செயல்படும் விதமாகவே குழப்பத்துடன் பேசுகிறீர்கள். மற்றெல்லாரிடமும் நான் கருத்துக் கேட்க வேண்டாமா? நான் கொம்பைப் பயன் படுத்தட்டுமா? நீள வாள் வைத்துக்கொள்ளட்டுமா? இவைகளை வைத்துக்கொள்வதால் அரசனான எனக்கு எந்த வகையில் பயன் என்பதை மிகச்சுருக்கமாக இரண்டொரு வரிகளில் சோல்லவேண்டும். நான் பலருடைய பதிலைக் கேட்க ஆவலாய் உள்ளதால், உங்கள் கருத்து சுருக்கமாக இருந்தால் போதுமானது.“
அவையில் பலர் கொள்லென்று சிரித்துவிட்டார்கள். பண்பாட்டுதுறை மந்திரி அமர்ந்துவிட்டார். 
  
நிதி மந்திரி எழுந்தார் “ராஜா வாழ்க. முன்பு நம்முடைய ராஜா அக்கொம்பை வைத்துக்கொண்டபிறகுதான், அரசபை திறமையாக நடத்தமுடிந்தது. என்பதை நான் மறுக்கிறேன். ராணியாருக்கு அதன் மதிப்பு தெரிந்திருந்தது. ஆகவேதான் அதை முற்றிலும் ஒதுக்கியிருந்தார். ஆகையால், நீங்கள் ராஜாவிற்குறிய கம்பீரத்தோடு இருப்பதற்கு நீள வாள் போதுமானது“

நிதி மந்திரி சொல்வதை நான் மனப்பூர்வமாக வழிமொழிகின்றேன்.  என அடுத்தடுத்து இரண்டு, மூன்று மந்திரிகள் எழுந்துரைத்து அமர்ந்தார்கள்.
புதிய ராஜா தொடர்ந்தார். “ஒருவர் கருத்துச் சொல்லி முடித்தபின்பு, அவரை ஒட்டி வழிமொழிகின்றேன் என்று சொல்வது மிகவும் சுலபமான வேலை. உங்களுக்கென்று ஒரு கருத்து இருந்தும், வெளிப்படுத்தத் தெரியாமலோ, அல்லது வெளிப்படுத்த மனமில்லாமலோதான் வழி மொழியும் காரியத்தைச் செய்துவிடுகின்றீர்கள். அப்படி இருக்கவேண்டாம் உங்களுக்கென்று இருக்கும் கருத்து எதுவானாலும் மனம் விட்டு பேசுங்கள் அப்போதுதான், அரசபை நடத்துவதற்காக என் முழு திறமையையும் பயன்படுத்தமுடியும்.“

அவையோர் என்ன இந்த ராஜா. எப்படி எழுந்தாலும் மடக்கிவிடுகின்றார் என்று சிறிதுநேரம் மௌனமாக இருந்தார்கள்.
புதிய ராஜா “சரி வலது பக்கம் இருப்பவர்கள் சொல்லுங்கள். நான் நீண்ட வாள் வைத்துக்கொள்ளட்டுமா? நீண்டு பழுத்த கொம்பு வைத்துக்கொள்ளட்டுமா? “

மக்கள் தொடர்பு மந்திரி எழுந்தார். “ராஜா வாழ்க, மன்னிக்க வேண்டும், நீங்கள் எங்களைத் தெளிவற்ற இடத்தில் நிறுத்தி தீர்வுக்கான பதிலை எதிர் பார்க்கின்றீர்கள். உண்மையிலேயே நாங்கள் திணறுகிறோம் என்பதுதான் உண்மை. ராஜா அவர்கள், என்னை இரண்டு நிமிடம் கூடுதலாகப் பேச அனுமதிக்க வேண்டும். நான் வைக்கும் சிறு குளுவால், இன்றய அவை ஒரு முடிவை நோக்கிச் செல்ல வாய்ப்பிருக்கிறது.“ 
டேனியல்

Wednesday, October 29, 2014

கட்டுரை

கல்விப்  புத்தகங்களை விமர்சிக்கவும், அதன் தரத்தை தீர்மானிக்கவும்மான சுதந்தரத்தை மாணவனுக்கு வழங்கினால் படிப்பில் ஆர்வம் கூடும்

பள்ளிகளில் முக்கால் (கல்லூரிகளிலும்தான். ஆனால் விகிதம் குறைவாக இருக்கலாம்.) பங்கு மாணவர்கள், படிப்புன்னா, ஏன் தலைத் தெறிக்க ஓடுகிறார்கள். நாலுமுறை பரிட்சை எழுதிப்பார்த்தாதான் தெரியுது. பனிரெண்டாவது பாஸ்பண்ணியே ஆகணும் என்ற தீவிர திட்டம் எல்லாம் இல்லை. ஆன்லைன் அப்லைபண்ணலாம்னு அரசு திட்டம் கொண்டாந்தப்ப நானும் ஆர்வமா பண்ணிட்டேன்.
தனிப்பயிற்சியோ, பள்ளி அணுகுமுறையோ இல்லாமல் பாஸ்பண்ணமுடியுமா? நாம படிக்கிற இலக்கிய புத்தகங்கள் இதற்கு ஏதாவது துணைபுரியுமா? என்றக்கேள்வி இருந்துகொண்டே இருந்தது.

அதற்கு அடிப்படையாக, தேர்வு எழுதும்போது பார்த்து எழுதுதல், கேட்டு எழுதுதல் பிட் அடித்தல் என்று எந்த ஒரு சிறு தவறும் செய்யாமல் தேர்ச்சி பெறவேண்டும் முயற்சி செய்துதான் பார்ப்போம் என்று  முடிவு செய்தேன். உள்ளுக்குள் வருஷம் முழுதும் படிக்கிற மாணவர்களே குறிப்பிடத்தகுந்த அளவில் பெயிலாகிவிடுகிறார்கள். நமக்கு இருக்கிற வேலையில் இது சாத்தியமாகுமா என்ற பயமும் இருந்தது.

முதல் முறை எழுதியபோது,  இலக்கிய புத்தகங்கள் படிப்பதுபோலவே டெக்ஸ் புத்தகத்தை அதே பாணியில் ஒரு முறை முழுமையாக படித்துவிட்டு (அனா முழுமையா படிக்க முடியவில்லை. பல பாடங்களைத் தேர்வு செய்து படிக்கவேண்டியதாயிற்று) , கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க முடிகிறதாப் பார்ப்போம் என்று இருந்தேன். அதனால்,கொஞ்சம் தெம்மாங்கும் வந்துவிட்டது. புத்தகத்தை  பரிட்சைக்கு முன் ஓரிருநாள் படித்துச்சென்றேன். முதல் முறை (III குருப்)  தமிழ், வரலாறு  மட்டும் கைகொடுத்தது. ஆனால், மற்ற பாடங்களுக்கு நம் கற்பனை இட்டுக்கட்டல் உதவாது என்று புரிந்தது. ஆனாலும், யாரிடத்திலும் உதவி கேட்கவில்லை. இத்தனைக்கும் பல தெரிந்த நபர்கள்தான் ‘ஸ்கோடு, கண்காணிப்பாளர்கள்  என்று வந்து போய்கொண்டு இருந்தார்கள்.

அடுத்தடுத்த முறை சற்று கூடுதலாக கல்விச்சோலையில் பல ஆசிரியர்களின் கேள்வித்தொகுப்புகளை தேடிப்படித்தேன்.  கணக்குப்பதிவியல் மட்டும் பெரும் பிரச்சனையாக இருந்தது. ஒரு ஆசிரியரிடம் பேசியபோது, ஐந்துமார்க் கணக்கு மெத்தேடு ரெண்டு நடத்தினார். பிறகு மாலை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். மனைவியைக்கூட. நாலுநாள் விட்டுட்டு இருக்கலாம். இணையத்தையும், பேஸ்புக்கையும் விட்டுட்டு இருக்கமுடியுமா? இதுல எங்க சிறப்பு வகுப்பு போறது. இருந்தாலும் முற்றிலும் ஆரம்பத்தில் கொண்ட பரிசோதனை முயற்சியை கடைபிடித்தேன்.

மூன்றாவது முறைதான் ரொம்ப சோதனை. கணக்குப்பதிவியல் பல  ஆசிரியர்கள் யூடியூபில் படம் எடுத்தில் குறிப்பு எடுத்துக்கொண்டேன். என் மகள் பரிட்சைக்கு முன்னாள் இருபது மார்க் கணக்கில் இரண்டு மாடல் கற்றுக்கொடுத்தாள்.  மறுநாள் எக்கனாமிஸ் தேர்வு அறையில் கலக்கா கொள்ளையில் அலைச்சல்போல மாணவர்கள் அவன் அவன் சக்திக்கேற்ப அடிச்சான். அந்த தேர்வாப்பாத்து  ஒன் மார்க் படித்ததுச்சென்றது ஏறக்குறைய   நாற்பதுக்கு சரியா எழுதுனேன். மூணு மார்க்,  ஐந்து இருக்கும். பெரிய கேள்விகளில் சரியாகவே படிக்கலங்கிறதைவிட, படிச்சது வரலை என்றுதான் சொல்லனும். அதற்குமேல் மூளையக் கசக்கி பிழிந்தாலும் ஒண்ணும் எழுதமுடியல. பக்கத்தில் இருந்தவன் இருபது மார்க்னு ரெண்டு சொலையா எழுதியிருப்பான்போல. அவனாக  வேணுமான்னு கேட்டான். அப்பதான் உன் முழுதிறமைக்கான சோதனை முயற்சி என்று சதா சொல்லிக்கொண்டே இருந்தது மனசு. அதனால பக்கத்தில்கூட திரும்பாது எழுதிவிட்டு வெளியே வந்தேன். ஆனால் அதுதான் பெயில் என்று வந்தது. கடைசியாக ஒன்றே ஒன்றுதான் நின்றது.

நான்காவது முறை அக்டோபர் -2014.  இந்த முறை 2008லிருந்து மிக முக்கியமாக ஒன்மார்க் கேள்விகள், சற்று கவனமாக ஐந்து, இருபது மார்க் கேள்விகள் கவனத்தில் கொண்டு. நான்கு இரவுகள் முழு மூச்சாக படித்தேன். மார்க் சீட் வாங்கியபோது பாஸ். ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். பனிரெண்டாவது மனத்திருப்தியாக பாஸ்செய்தேன். இதை ஏன் இங்கு சொல்லவேண்டும். என் திறமை வெளிப்படுத்துவதற்காகவோ, பெரிய நேர்மைசாளி என்பதற்காகவோ அல்ல.

இலக்கியப் புத்தகங்கள் ஏன் விரும்பப்படுகிறது, ஏன் ஆர்வமாக வாசிக்கப்படுகிறது என்று யோசிக்கிறபோது, வாசிக்கிறவனுக்கும் சரி. எழுதுகிறவனுக்கும் சரி. அவனுக்குள் ஏற்படும் மன நிறைவு ஒரு பக்கம் இருந்தாலும்.  தனக்கான மதிப்பை அதன் நுட்பம் அறிந்தவர்கள் மத்தியில் கூட்டித்தருகிறது.

பள்ளிப் புத்தகங்களைக்கூட  வாசித்து விமர்ச்சிக்கிற, அதன் நுட்பங்களை, ஆழங்களை மாணவர்களே விவரிக்கிற, விமர்சிக்கிற முறைகளை வகுத்தால், நிச்சயமாக மாணவர்கள் பள்ளிக் கல்வி புத்தகங்களில் மிக ஆர்வமானவர்களாக மாறுவார்கள்.  உதாரணம் ஒரு வகுப்பறையில் அநேகமாக மாணவர்கள், சக மாணவனை ஆசிரியரிடம் கோள் சொல்லுகிறவனாகவும், குறை கண்டுபிடிப்பவனாகவும் இருக்கிறான். மாணவர்களுக்கு மட்டும்மல்ல. பொதுவாக மனிதம்  இயல்பிலேயே அத்தன்மை ஒவ்வொருவரிடமும் அபரிதமாக இருக்கிறது.  ஒரு விதத்தில் பார்த்தால் இது பலவிதமான சமூக சீர்கேட்டு வழிக்கான ஆரம்பமாகக்கூட இருக்கிறது.

பொதுவாக மனிதனுக்கு தன் இயல்பை வெளிப்படுத்த, அதன் மூலம் நிம்மதியை மனம் உள்வாங்கிக் கொள்ள பிறரை குறைகூறுதல் ஒரு தேவையாக பலருக்கு இருக்கிறது. வேகமாக வரும் தண்ணீரை மடை மாற்றுதல்போல சிறுவயதிலேயே அப்பழக்கத்தை புத்தகங்கள் மீது திருப்பிவிட்டுப் பார்க்கவேண்டும். விமர்ச்சிக்ற  அல்லது தன் திறமையை நிறுவுகிற வேலையை பள்ளிக் கல்வி புத்தகங்களில் திருப்பிவிட்டால். புத்தகங்கள் வாசித்தல் பழக்கம் கூடுதலாகும், படிப்பின் மீது கவனம் குவியும். அதிக பட்சமாக பின்தங்கிய மாணவர்கள் அநேகமாக தேர்வில் தவறிவிடாமல் இருக்க வழிவகுக்கும்.

இன்னொரு விஷயம் நான் சொல்லவந்தது, இலக்கிய புத்தகங்கள் வாசித்தல் பழக்கம் நிச்சயமாக கல்வித் தேர்வுபயத்தை லகுவாக்கும். இலக்கியப் புத்தகம் வாசித்தல் பழக்கம் என்பது, பலவிதமான நுணுக்கங்களை தெளிவுபடுத்தும். பள்ளிகளில் ஒவ்வொரு மாணவனும் நூலகங்களை பயன்படுத்த ஊக்குவித்தல் வேண்டும். பள்ளி நிர்வாகங்கள் அதிகப்படியாக அதனை வலியுறுத்தவேண்டும். படைப்பு புத்தகங்கள், ஒருபோதும் பாடப்புத்தகங்கள் புரிதலைக் கெடுத்துவிடாது என்பதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

டேனியல்

Tuesday, October 14, 2014

கட்டுரை,






‘மேலும்‘ விருதின் கூட்டம்.

நேற்று முன் நாள் மாலை (ஞாயிறு) இக்சா மையத்தில் ஜமாலனுக்கு விருது வழங்கும் விழாவிற்கு, நண்பருடன் சென்றிருந்தேன். கூட்டம் மிக திருப்த்தியாக இருந்தது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக மிக முக்கியமான இலக்கியம், சினிமா சார்ந்த கூட்டங்களுக்கு சென்றுகொண்டிருக்கிறோம். பல கூட்டங்களில் எட்டு மணிவரை இருந்து, பிறகு தி நகர் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக மாம்பலம் ரயில் நிலையத்தில் டிக்கட் எடுத்துக்கொண்டு, அடிச்சி, புடிச்சி ட்ரெயினப் புடுச்சி வீட்டுக்கு வருவோம், அப்ப எல்லாம்கூட கஷ்டமேத் தெரியாது. ஜாமாலன் விருது கூட்டத்தில் ஒரு தமிழ் பேராசிரியர் பின்நவீனத்துவத்தில் நம்பிக்கையற்று பேசி முடித்ததும் (பேசி முடிக்கும் முன்னே, முடிக்க வைத்து விட்டபிறகு) கிளம்பி வெளிய வந்தோம். 

எக்மோர் நடக்க நடக்க தலை வெடித்துவிடும்போல் ஒரு வலி. தாங்கவே முடியவில்லை. ஏன் இப்படியாச்சி. என்ன காரணம் தெரியவேயில்லை. இத்தனைக்கும் ஆகாத பொருள் எதையும் சாப்பிடவும் இல்லை. இருக்க இருக்க தலையை நாலுபக்கமும் யரோ, சுத்தி, கல்லு, கட்டை கொண்டு நெறுக்கி சிதறடித்துக் கொண்டிருப்பாதாகத் தோன்றியது. அதன்பிறகுதான் ஒரு விஷயம் பிடிபட்டது. இன்றையக்கூட்டம் பெரும் விஷையங்களை எதிர்பார்க்காத நேரத்தில் மொத்தமாக கொடுத்திருக்கிறது. நம் மூளை அவ்விஷயங்களை சீராக பதிவு செய்துகொள்ளமுடியாமல் மிகக் கடினமாகப் போராடி தக்கவைத்திருக்கிறது. அதனால்தான் இவ்ளவு தலைவலி என்று புரிந்தது. ஒரு கட்டத்தில் நண்பரிடமும் ரொம்ப தலை வலிக்குது என்று சொன்னேன். அவரும் சொல்லி வைத்தார்போல மூளைக்கு அதிக வேலை அதான் என்றார்.

நாகார்ஜீனன், சிவ.சு, தமிழன்பன், ஷண்முகம் போன்றோர் கடந்த இருபது வருஷமாக பேசிப்பேசி, பழுத்து அவர்களுக்குள் கனிந்த கோட்பாட்டு, கதையாடல், சொல்லாடல் சம்பந்தமான உரையாடல்களை, இவ்வளவு காத்திரமாக கேட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

நாகார்ஜீனன் பேசியவற்றில் நான் உள்வாங்கிய சில விஷயங்கள். கோட்பாட்டின் தேவை என்ன? என்று அவர் எழுப்பிய கேள்விக்கு, அவர் வாசகத்தில் இருந்து, பதில் கருத்தாக வந்த விஷயங்கள். (இதில் அவர் கூறிய வார்த்தை அப்படியே இருக்கலாம், சற்று மாறியும் இருக்கலாம்.) ‘மெட்டீரியலும், ஐடியாவும் சேருமிடம்தான் கோட்பாடு. கோட்பாடு என்பது முடிவற்றவை. எவ்விஷயத்தையும் சீராக எடுத்துக்கொள்வதில்லை. தற்போது கோட்பாடுகளில் அக்கறை இல்லை. எழுத்தாளர்கள் தங்கள் மீது முதலீடு வைத்துள்ளார்கள். ஒவ்வொருவரும் தன்னையே வெளிப்படுத்திக்கொள்கிற விஷயம் நடக்கிறது. படைப்புச்செயல் என்ன, படைப்பாளர் அதில் என்னத்தை நடத்துகின்றார் (நடத்துகின்றாரா? ஒரு வேளை கடத்துகின்றார் என்பதாகவும் இருக்கலாம்) புது விஷயத்தை படைப்புக்குள் கொண்டுவருவதுதான் மெட்டீரியல் எனப்படுகிறது. எழுத்தாளன் தங்களை இன்வெஸ்மெண்ட் செய்தலிலிருந்து வெளிவரவேண்டும். படைப்பாளி, படைப்பு, படைப்புசெயல்பட்ட இடம், காலம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.‘ என்று பேசினார்.

நண்பர் லோகநாதன் கூட்டத்திற்கு போகும்போதே சொன்னார். அக்கூட்டத்திற்கு பேசவருகிறவர்கள் எல்லோருமே ஜீனியர்ஸ்கள்தான். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. பேசும்போது புரிவதுபோல் இருக்கும் ஆனால், பல விஷயங்கள் புரியவே புரியாது. அது நம்முடைய குறைபாடாகவும் இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் படைப்புக்குறித்து தொடர்ந்து பேசுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். நாம் அப்படி செய்வதில்லை அதனால்கூட நமக்கு போதாமை இருக்கக்கூடும் என்றார். அது முற்றிலும் உண்மை என்றே எனக்கு படுகிறது. இருந்தாலும் அவர்கள் ஜெயமோகன், சுந்தரராமசாமி, கோணங்கி ஆகியோரைப்பற்றி படைப்பு அல்லது மதிப்பீகள் குறித்து பேசியதில் எனக்கு பல கேள்விகள் இருக்கிறது அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


எனக்கு புரிந்தவரையில். சட்டத்தை புணிதமாகக் கடைபிடித்துக்கொண்டு, கண்டுபிடிப்பாளர்களை, உற்பத்தியாளர்களை, திருடர்களை, நுகர்வோரை ஒரு கூட்டுக்குள் அடைத்து, அதற்குள்ளிருந்து மிஞ்சி எழும் விளைவின் வெளிப்பாட்டை புதியதொரு வாழ்விற்கான பரிசோதனை வெளி (படைப்பாக்க உத்தி) என்று பெருமகிழ்வு கொள்வது பின்நவீனத்துவம்.

சட்டம் தேவையில்லை. மனிதன் தன் மன ஒழுங்கை பிரதானப்படுத்திக்கொண்டு, அவன், சிரிப்பையும், அழுகையையும், எதிர்கால கனவுகளையும், வாழ்தலுக்கான புதிய வழிமுறைகளையும் நடிப்புத்  தன்மையற்று உள்ளதை உள்ளபடியே அப்பட்டமாக சுவாரசியத் திற்கான வகைமைகளை வைத்திருப்பது. (அதிலிருந்து ஒரு புதிய புதிய முறைகளை அங்கீகரிப்பது) நவீனத்துவம். 

ஜாமாலன் விருது நிகழ்வில் விவாதங்களில் நாகார்ஜீனன்  பேசும்போது ஜெயமோகன் எங்களை ஒதுக்குப்புறமாக தள்ளிவைத்திருக்கிறார். எங்கள் கோட்பாடுகள் விசாரங்களில் அவருக்கு நம்பிக்கையில்லை. (இதை நாகார்ஜீனன் வாசகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால், இந்தக் கருத்தை வலியுறுத்தும் தொனிதான் இருந்தது.) என்கிற அடிப்படையில் பேசுகிறார். சுந்தர ராமசாமி ஒரு படைப்பைக்குறித்து விமர்சனம் செய்கிறார் என்றால். அதில் எங்கள் கோட்பாட்டின் அடிப்படையிலிருந்தும், அவைகளின் மையத்தில் இருந்தும் படைப்பை விளக்குவதற்கு அவருக்குத் தெரியாது.

கோணங்கிக்கு விளக்கு விருது கிடைத்திருக்கிறது. விருது கொடுப்பவர்கள் அவரின் எழுத்துக்கள் புரிந்துதான் விருது கொடுக்கிறார்களா? என்று விவாத்தின்போது பேசினார். மேலும் நம்மாழ்வார், விவேகானந்தர், திருக்குறள். எல்லாம் வெளியுலகுக்கு போவதற்கு ஏதோ இருக்கு, அதனால் போயிருக்கு. மற்றபடி படைப்புகள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு போக தமிழ் படைப்புகளில் என்ன இருக்கு. என்ன இருக்கு என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

இங்கேதான் அறிவாளியாக இருந்தாலும், அவர்களுக்குள் அறியா தனங்களும் சேர்ந்தே இருப்பது இருக்கத்தான் செய்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.

ஏதோ காரணத்தால் அமைந்துவிட்டபடி, ஒரு குழந்தைக்கு இரு தகப்பன் உரிமை கொண்டு, தெரிந்தும், தெரியாமலும் பொத்தி பொத்தி வளர்ப்பதுபோல நவீனத்துவம், பின்நவீனத்துவம், இலக்கியத்தை கையாளவேண்டும்.  அதைவிடுத்து என்னிடம், என்னிடம் வளர்ந்தால்தான் என்று தெருவில் நின்றால் அக்குழைந்தை நோஞ்சானாகத்தான் மிஞ்சும்.
ஜெயமோகன், சுந்தர ராமசாமி இவர்களை ஏதோ இலக்கியக் கத்துக்குட்டிகளைப்போல மிக லேசாக சொல்லிவிடுகிறார் நாகார்ஜீனன். படைப்பாளர்களிடம் விவாதத்திற்குறிய விஷயங்கள் இருக்கலாம் அது வேறு விஷயம். நாகார்ஜீனன் இப்படி சொல்வதற்கு அவரை எது தூண்டியிருக்கிறது. தர்கத்தின் மூலம் நிறுவப்பட்ட கோட்பாட்டின் அடிப்படையே காரணம் என்று நினைக்கிறேன். கோட்பாடு என்பது அறிவியல் சார்ந்து நிறுவப்பட்ட உறுதியான சட்டம் போன்றது. அதனால்தான் சட்டத்தீர்ப்பை எழுதுகிறவர்களுக்கு தன்னளவில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ, அதேபோன்று கோட்பாடு கையகப்படுத்தி வைத்திருப்பவருக்கும், அதில் குறையாதளவு நம்பிக்கையிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் மற்ற இலக்கியத்தரத்தை குறைவாக மதிப்பீடு செய்யத்துணிகிறது.

அந்த நம்பிக்கைதான் மேற்குலகுக்கு ஏற்றுமதி செய்கிற அளவுக்கு தமிழ் படைப்புகளில் ஒன்றும் இல்லை என்று முற்றாக அவரால் சொல்லமுடிகிறது. தமிழ் படைப்புகளை வெளியுலகுக்கு கொண்டு செல்வதற்கும் மெனக்கெடுவதற்கும் இங்கிருக்கும் அறிவாளிகளுக்கும், வசதி படைத்தோருக்கும் தாராளமனம் இருக்கிறதா என்பதைக்கேட்டுப் பார்க்கவேண்டும். குருமார்கள் சார்ந்தோ, மதம் சார்ந்தோ, அறம் சார்ந்தோ படைப்புகள் வெலியுலகு தாராளமாக செல்கிறதென்றால் காரணம் என்ன? குருமார், மதம், இனம் சார்ந்த பெருமை பரப்புதல் காரணத்திற்காக கூட்டாகவோ, தனிமனிதனாகவோ பெரும் முயற்சிக்கு பிறகு படைப்புகள் வெலியுலகு செல்கிறது. தமிழ் படைப்பு சார்ந்து யார், எந்த கூட்டாளிகள், கூட்டணிகள் இச்செயலை செய்ய முற்படுகிறது என்பதை நாகார்ஜீனன் அறிந்தாரா என்பது தெரியவில்லை.

இலக்கியத்தை பாடும் எல்லா இயக்கங்களில் கோட்பாட்டை கைவிடாது இருப்பவர்களானாலும், எதார்த்தத்தை கடைபிடிப்பவர்களானாலும், சகோதரத்துவத்தை கடைபிடிப்பவர்களானாலும் அவரவர்களுக்குள்ளும் எரிந்து, தணிந்த பிறகும் கணந்துகொண்டிருக்கும் நெருப்புக்கங்குகளாக விழித்து விழித்து காட்டிக்கொண்டுதான் இருக்கிறது பழிபாடல். உண்மையானது எதுவும், உண்மையாக மனிதனிடம் இல்லை. ஒருவன் பெரும்பாடைக்கடந்து மொழியை பிறர் நுகர்ந்து மகிழ்ந்து, ஆழ்ந்து, ரசனைத்தன்மையுடன் அணுகும்படிக்கொடுப்பது இலக்கியம் அல்லாமல் வேறென்னவாக இருக்கும். 

டேனியல்