‘இந்த நாடு நல்லவனுக்கானது அல்ல. நல்லதுக்கானதும் அல்ல. ‘
ஒரு தம்பி, ஏறக்குறைய 2004ல் படித்து வெளியேறி இருக்கிறார். அவர், P.G பட்டதாரி. இன்று பள்ளியில் (Bona fide certificate) நேர்மைச்சான்று வாங்க வந்திருந்தார்.
“என்ன தம்பி. என்ன செய்றே என்றேன்“.
பாவம் அந்த வாலிபன் குன்றி, விம்முவதுபோல சர சர வென்று மனக்குமுறலைக் கொட்டிக்கொண்டே இருந்தான். படித்த வாலிபர்கள் கண்ணீர், சொகுசுடன் வீராவேசம் பேசும் அரசியல் வாதிகள், ஒற்றை ரூபாவிற்கு கையேந்தும் நிலை வந்தால்தான் பட்டதாரிகள் வேலையில்லாமல் படும் பாடு தெரியும் என்று நினைக்கிறேன்.
பட்டதாரி- “இன்னும் எனக்கான போனபைடு வேண்டி, அலையும்போதே தெரியவில்லையா சார்?. சர்வீஸ்கமிஷன் உட்பட அரசாங்கம் வைத்த மூன்று தேர்வில் பாஸ்பண்ணியிருக்கிறேன் சார். என்ன பிரியோசனம். வீட்டில் நச்சரிக்கிறார்கள். உங்களுக்கேத் தெரியும் இல்ல. எங்கம்மா மூணு பசுமாடுகளை மேய்த்தும், எங்கப்பா, கேஸ் கடைக்கு, வாச்மேன் வேலையைப்பாத்தும் என்ன படிக்கவச்சாங்க. இத்தனை வருஷத்திற்குப் பிறகும் அவர்களை நிம்மதியாக வைக்கமுடியவில்லை. அதான் வேதனையா இருக்குது.“
ஜேடி- தம்பி, பெற்றோர்கள் வேண்டுமென்றே பிள்ளைகளை நச்சரிக்க நினைப்பதில்லை. கண்ணுக்குத்தெரியாமல் காலம் ஓடிடும். அவங்க கண்ணு முன்னாலயே, பிள்ளைகள் காலம் செழுமையாய் இல்லாமல் முடிந்துபோகுமோ என்ற பயத்தில்தான். உங்களைத் தற்காத்து விட்டுவிட தூரிதப்படுத்தவேண்டி உள்ளது. அதனாலதான் பெற்றோர் சற்று கோபமாக பேச நேரிடுகிறது.
இதற்கெல்லாம் மனசாட்சியற்று அரசியல் செய்யும் ஆட்சியாளர்கள்தான் காரணம்.
பட்டதாரி- கால்நடைக்கு வேலை அறிவிப்பு வந்ததே. ஏழு லட்சமாம் சார். லேப் அசிஸ்டெண்ட் ரிசல்ட்டே விடல. எல்லா இடங்களையும் நிரப்பியாயிடுச்சாம். தபால் துறையில நூறு பேருக்குமேல, இந்தி ஆட்களுக்குத்தான் எடம். இருக்கிற வேலைவாய்ப்பு எடங்களில் எல்லாம் வெளியாட்களை நிரப்பிவிட்டால், நமக்கு எங்க வேலை கிடைக்கும். நான் ரயில்வேயில் ஒரு தேர்வுமுறைக்குப்போனேன். இரண்டாயிரம்பேருக்கு வேலை வாய்ப்பு இருக்குன்னா, அதுல இரநூறுபேருதான் தமிழன். அந்த ஒதுக்கீட்டுக்குள்ள பத்து இருபதுபேருதான் எஸ்.சி. சார். நான் சுத்திச் சுத்திப் பாத்திட்டேன் சார். எஸ்சி பணம் இல்லாதவனா இருந்தா, அவன் பெரிய படிப்பு படித்தாலும் பிரியோசனம் இல்ல சார். பெரிய பதவிகள் அவ்வளவு சீக்கிரம் கிடைக்க வாய்ப்பே இல்ல சார். இந்த ஓஏ, பெருக்கிறவங்கனா கொஞ்சம் பரவாயில்ல. கெடைக்க வாய்ப்பிருக்கு. நம்ம முனிசிபாலிட்டில பெருக்கிற வேலைக்கு மூணரை லட்சமாம் சார். நெறையபேரு பணம் வாங்கிட்டாங்க. அப்புறம்தான் அதுக்குள்ள ரொம்ப நாளா காண்ராக்ட்டுல வேலை செய்யிறவங்க ஸ்டைக் பண்ணி, போராட்டம் பண்ணாங்க. அப்புறம் வேற வழியில்லனு வாங்குன பணத்தை எல்லாம் கொஞ்சங்கொஞ்சமா திருப்பிக்குடுத்தாங்க.“
வாலிபன் சொல்லும்போது, இந்த நாடு நல்லவனுக்கானது அல்ல, நல்லதுக்கானதும் அல்ல. என்று மட்டும் தோன்றியது. அதிகாரிகளும், அரசியல் வாதிகளும், வயிற்று சாப்பாட்டை பிடுங்கி தங்கள் குடோனில் கொட்டிவைத்து, வத்தல் விபாராம் செய்கிறார்களே, வேலை கிடைக்காமல் வெயிலில் அலைந்து திரியும், பட்டதாரிகள் விடும் சாபம் ஏழேழு தலைமுறை அவர்கள் சந்ததியை பழித்தீர்க்காமல் விடுமா?
No comments:
Post a Comment