“படாபட்“ சிறுகதை
ஜே.டேனியல்
பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய படாபட் நரம்பியல் மருத்துவரின் நோயாளி பெஞ்சில் கடைசியாக உட்கார்ந்திருந்தாள். ஒரு நிமிஷம் அல்ல, அரைநாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருந்தேன். காத்துக்கிடக்கிற கொடூர அவஸ்தை மீறி, நாள் முழுதும் டாக்டர் வராண்டாவிலேயே இருக்கவேண்டும் போல் இருந்தது. அவள் படாபட் என்பதற்காகத்தான். மேக்கப் இல்லாமல், ஒரு திராட்சையின் மென்மேனியாக அவ்வளவு
இயல்பாக முகம் வசீகரத்தை ஏற்படுத்த
முடியுமா? சிவப்பு
நிறத்திலான பெரிய குங்குமப் பொட்டு இல்லை. நெற்றியின் நடு மையத்தில் மிகச்சிறிய மஞ்சள் ஜீகனா, ஒட்டும் பொட்டுதான் இட்டிருந்தாள். அதற்குமேல் நடுவாக மிகச்சிறிய வட்டப்போட்டு சிவப்பு நிறத்தில். சிறிய
மஞ்சள் சூரியன் நெற்றியில் எழுவதாக இருந்தது. எண்ணையில் முழ்கிய கருமயிர்களை இறுக்கமாக வாரியிருந்தாள். கால் நூற்றாண்டு முன் காலத்திற்கே உரிய பாணியில், அரை முழ மல்லியை இரண்டாக மடித்தும், அதற்குமேல்
கனகாம்பரம் அரை முழத்தை இரண்டாக மடித்தும், மல்லிக்குமேல் கனகாம்பரம் கொண்டையில்
பூத்திருந்தது. பின் இல்லை. நூறுமயிர்களை
மட்டும் தூக்கி அதற்குள்ளாக பூக்களை சொருகியிருந்தாள். தலையில் கச்சிதமாக நின்றிருந்தது. தற்கால பெண்கள் நாலுமுழத்தை மூன்றாக, இரண்டாக, பின்குத்தி மயிரோடு சேர்த்தேத் தொங்கவிடுகிறார்கள். அவளுக்கும் தெரிந்திருந்திருக்கலாம். அப்படி செய்திருக்கவில்லை. மிகச்சிறியளவில் மடித்து வைக்கும்போது செடியில் பூத்திருப்பது போலவே தோற்றம் புலப்படுகிறது.
தோகைவிரிக்காமல் தொங்கவிட்டு சிறு கிளையில் அமர்ந்திருக்கும் மயிலாக காதுகளில் மயில் வடிவில், முகத்திற்கு கச்சிதமாக தங்கத்தோடு தொங்கிக்கொண்டிருந்தது. முகத்திற்கு அழகு சேர்க்கும் பணியில் அதன் பங்கு அதிகம். நிறைய வளையல்கள். கைகளின் அசைவுகளுக்கெல்லாம் தேர்ந்த இசையாகக் குளுங்குக் குளுங்கி விழுந்தது. பென்ச்சின் கடைசியாக படாபட், அவளில்
இருந்து, நான் மூன்றாவது ஆள். படாபட் என்பதற்காகவே அடிக்கடி உற்றுப்பார்த்தேன். அவளுக்கும், எனக்கும்
இடையில் நாற்பதியைந்திற்கும் மேலானவள். என் பார்வையால் சங்கடம் அடைந்தாள். எங்குபோனாலும்
மோப்ப நாய்கள் நிறைந்த உலகம்தான். அவள் முடிவு செய்திருக்கக்கூடும். படாபட்டை பாதுகாக்கும் நிலையில் ஆய்த்தமானாள்.
படாபட் தன் சாயலை வரைகின்றவன் முன்னிருக்கும் சொருபமாக இருந்தாள். எனக்கு படாபட்டின் மௌன உதடுகளில் இருந்து ஏதாவது பேச்சு உதிராதா? பேச்சின்
உச்சரிப்பில் உதிரும், ஓசைகளையும், அசைவுகளிலும்,
குறுகி, விரிந்து வெளியேறும் ஒலி நயத்தின் நயத்தையும்
கண்டு, படாபட்டின் மதிப்பை இன்னும் கூட்டிகொள்ளவேண்டும் என்றிருந்தது.
சற்று
நேரம்வரை அதற்கான அறிகுறியே இல்லை. அவள் பேச்சிற்கான அசைவை ஏற்படுத்தினால், அநேகமாக கன்ன எலும்போடு சேர்ந்த சதைப்பகுதி, தனித்தன்மையாக குவிந்து தெரியலாம். அச்சு அசல் படாபட் கண்முன் தரிசனமாகலாம்.
அவள்
தன் சுற்று வட்டாரங்களில் நடக்கும், எந்த நகிழ்வுகளிலும், தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இதழ்களில் சிரிப்பின் சாயல் நிகழ்ந்திருந்தது. காதலி, நண்பன்,
உறவினர்களிடம் அவரவர் சார்ந்து ஈர்ப்பு வரத்தானேச் செய்யும்.
அவள் அமைதியில், எனக்கு அது நிகழ்ந்தது. அமைதலின் சாயலைக்கண்டு, நிர்பந்தம் இல்லாமல் மனித மனம் ஏன் விரும்புகிறது? கையின் அடக்கத்தில் இருக்கும் என்பதற்காகவா? நான் ஆய்வுமுறைக்கு
வராமல் படாபட்டை மிக அற்புதமானவள் என்றாக்கினேன்..
நரம்பியல் மருத்துவர் பிரபலமானவர். நோயாளிகள் கூட்டம் அதிகரித்தது. அச்சூழலுக்குப் புதிதாக, மூதாட்டி நடக்கமுடியாமல் தள்ளாடி வந்ததால், நான் எழுந்து படாபட் எதிரில் நின்றேன். நோயாளிகள் அமரும் இடம் மிகக் குறுகள். அவள் சுவரோம் பென்ச்சில் உட்கார்ந்திருக்கிறாள். நான் எதிர் சுவரில் சாய்ந்து நிற்கின்றேன், இடையில் ஒருவர் மட்டுமே ஒடுக்கமாக நடக்கமுடியும். வம்புக்காறர்கள் என்றால் “ஏன்யா வழியில நிக்கிறே. ஒண்ணு, இப்படி வந்து உட்காரு, இல்ல, அப்படி ஓரமாப்போயி நில்லு,“ என்பார்கள்.
பெண்கள் வெகு சீக்கிரத்தில் சக பெண்களின் நிலமைகளை விசாரித்து அறிகிறார்கள். தங்களை விட உயர்வா, தாழ்வா அறிந்துகொள்ளும் ஆர்வத்தில்கூட
நடக்கலாம். மூதாட்டி சற்று
நேரம் அமைதியாய் இருந்துவிட்டு படாபட்டின் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் “அது யாரு உன் தங்கச்சியா, எந்த ஊரு“.படாபட்டைக் காட்டிக்கேட்டாள்“
“எங்க
நாத்தநாரின் மகள். ஊத்துக்காடு“
“என்னாச்சி
அதுக்கு.“
“போன வருஷம் திடீர்னு மயக்கம் வந்து விழுந்துடுச்சி, அதுலயிருந்து, ஒரு கை, ஒரு கால் சரியா வரல.“
“பிள்ளைங்க இருக்காங்களா? அவுங்க வீட்டுக்காரு வரலையா?“
“ரெண்டு பிள்ளைங்க. கல்யாணம்
ஆகாத வயசுப்பசங்க. வேலை செய்யிறாங்க.“
சற்று தூரத்தில் இருந்த
மூதாட்டியை, மகன்
“எங்கபோனாலும் உன் வெட்டிக்கதையப் பேசிக்கிட்டே இருப்பே. இங்க எய்ந்துவா“ அழைத்துக்
கொண்டிருந்தான்.
“டோக்கன்
போடுறதுக்குக்கூட
என்னாண்டதான் பணம்கேக்குறான். பேசுற
நக்கலைப்பாரு“ பாட்டி முணுமுணுத்துக்கொண்டே
பையன் இருக்கும் இடத்திற்கு போனாள்.
அவர்கள் ஊத்துக்காடு
என தெரிந்ததும் பேசுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. அவ்வூரில் எனக்கு தெரிந்த
நண்பர் இருந்தார். பெயர் விஸ்வம். இத்தகவலை நாற்பத்தியைந்து வயது பெண்ணிடம் சொன்னேன். நம்பினாள். படாபட்டைப் பார்க்கும்போது தற்போது மறைத்துக்கொள்ளவில்லை.
“தெரியும். ரோட்டு பக்கமாக இருக்கிறார்கள்.
படாபட்டுடன் பேசவைப்பதற்கான வாய்ப்புக்கிட்டும்
என நம்பினேன். அவளும், என் பக்கமாகத் திரும்பிச் சிரித்தாள். உதடுகள் பிரியாமல் நீண்டு உள்ளுக்குள் ஒளியும் சிரிப்பு. அம்மௌன சிரிப்புக்கே கன்ன எலும்பின்மேல் எழுந்து உருண்டு நின்ற சதைமுட்டை. அவள் முகம் மத பிரசாரகன் ஏற்படுத்தும் சாந்தத்தை வெளிப்படுத்தியது. நான் நாற்பத்தியைந்து வயதுப்பெண்ணிடம், “எவ்வளவு நாளாக, இப்படி இருக்கிறது“ என்றேன்.
அவள் பாட்டியிடம் தொடங்கியதுபோலவே, மாற்றமில்லாமல் தொடங்கினாள். அநேகமாக பல சந்தர்ப்பங்களில் இதையேத் திரும்பத்திரும்ப சொல்லியிருப்பாள்போல. படாபட் சார்ந்து சிக்கல் இல்லாமல் வார்த்தைகள் வந்தது. படாபட் நம்மை பாவம் பார்த்து விசாரிக்கிறானோ, பாவம் பார்க்கிறவன் புத்தித் தெரியாதா? இந்தமாதிரி ஆம்பளைகள் பொம்பளைப் பொறுக்கிகள் தெரியாதா
என்ன?. எந்த மதிப்பீடுகளையும் செய்யவில்லை. கண்கள்
குளிர்ந்து சற்று வாய்த்திறந்து சிரித்தாள். முன்னம் பற்கள் இரண்டு சற்று படர்ந்த அளவாகவும், அதைத்தொடர்ந்து அளவில் குறைந்தபடி பற்கள் வரிசை. மிகச்சீரான வரிசை. பற்கலால் உதடுகளுக்கும், உதடுகள் நுணிதொடங்கி கோடுகளை இழுத்து சென்று கண் புருவத்திற்கு முன் முடிக்கும் சதைமடிப்பும், புதிய வெண்நிற கண்சுவரின் நடுவில் கருமணியும், அளவிட்ட சந்துக்களுடனான மூக்கும் மிகச் கச்சிதமாக அமைந்திருப்பதால், அழகிய படாப்பட்தான்.
நீண்ட நாள் நோயாளிகளாக இருப்பவர்களைக் கூடஅழைத்து வருகின்றவர்கள், ஓரிடத்தில் வந்து சேர்ந்தவுடன், அங்கிருக்கும் நபர்கள், நோயாளியையும், அழைத்து வருகின்றவர்களையும் பார்க்கும் பட்சத்தில். நோயாளியின் உடனிருப்பவர் இருவேறு நிலைமைகளை விளக்கிக் காட்டுகிறார்கள். ஒன்று, நோயாளி தன்னுடைய நேரடி கடமைக்கு உட்பட்ட நபர் அல்ல. இன்னொன்று, நான், நாங்கள் பெருந்தன்மை மனதுடன் கூடநின்று கவனித்துக்
கொள்கிறவர்கள். இச்சூழலை விளக்கிவிட்டப்பிறகு,
உடன் இருப்பவருக்கு வேறு ஏதும் பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை.
நாற்பத்தியைந்து வயதுப்பெண் அப்படித்தான் படாபட்டின் நிலையைச் சொன்னாள். “ஒரு வருஷம் முன்ன, இவள் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா. பீசக்கை
பக்கம், ஒரு கை. ஒரு கால் வராமப் போச்சி.
நாங்க, அவள் ஊட்டுக்காரனாண்ட ஆஸ்பித்திரிக்கு கூட்டிம்போலாம்னு
கூப்பிட்டோம். நீங்க யாரும் வாராதீங்க. என் பொண்டாட்டிய நான் பாத்துப்பேன். எனக்குத் தெரியும்னு
சொல்லிட்டான். நாங்ளும் அவன் பாப்பான்னு விட்டுட்டோம்.
அவன், யாரோ செய்வினை செய்திட்டாங்கனு, எங்கெங்கயோ கூட்டிம்போனான்.“
“ஏம்மா,
இந்தக் காலத்துலயா இதையெல்லாம் பாக்கிறது. கை.
கால் விழுந்திருக்கு. நேரா ஆஸ்பத்திரிக்கு கூட்டிம்போய்
இருக்கனும்மா.“
“இவ
ஊட்டுக்காரன், ஒரு ஏடா குடம். ஊர்ல ஒரு
வேலைக்கு போகமாட்டான். நாலு ஆடு இருக்கும். ஒரு பசுமாடு இருக்கும் அதை ஓட்டிம்போய் மேய்ச்சி வருவான் அவ்வளவுதான்.
இந்த பொண்ணுதான். நடுவு, களை, அறப்புனு கூலி வேலைகளுக்கு ஓடுவா.
படாபட் கேட்டுக்கொண்டிருக்கிறாள். கணவன்மீது
குற்றம் சொல்லும்போது, வெறுப்பின் மௌன முகத்தையோ, தன் உழைப்பைச் சொல்லும்போது பெருமையின் முகத்தையோ வேறுபடுத்திக் காட்டவில்லை.
சற்று நேரம் சுமை இறக்கும் விதமாகக், கடந்த கால
வாழ்வை யாரிடத்திலோ பகிரப்படுகிறது, மன மகிழ்வை வெளிப்படுத்தும்
விதமாக மௌனமாக சிரித்தாள். சிரிப்பில் ஒலி இருக்கவில்லை.
“நாற்பத்தியைந்து
வயதுப்பெண் தொடர்ந்தாள். ஒரு நாள் வீட்ல நிக்கமாட்டா.“
அப்படி ஒழச்சி ரெண்டு ஆம்பளப் பசங்களைக் காப்பாத்திட்டா. ஒருத்தன் ஐடிஐ படிச்சிட்டு எலக்ட்ரி வேலை செய்றான். இன்னொருத்தன்
ஏதோ கம்பெனிக்கு போகுறான்.“
பிள்ளைகளைப் பற்றி
சொன்னதும், படாபட்டின் முகம் மளர்ந்தது. லேசாக சத்தம்
வரும்படியும் சிரித்தாள்.
“புள்ளைங்கள் வேலை செய்யிறாங்கனு சொன்னதும்,
எவ்ளோ சிரிப்பப்பாரு.“
நான் படாபட்டைப் பார்த்தேன். அவள்
சிரிப்பின் முகம் மாறவில்லை. “இவுங்க, உனக்கு
என்ன முறை வேணும்“ மிக எளிமையாகத்தான் கேட்டேன்.
“அக்கா(ழ்). அக்கா(ழ்) ஓணும்“ அக்கா சொல்லும்போது கடைசியில் ழ் சேர்ந்தே ஒலித்தது.
நாற்பத்தியைந்து வயதுப்பெண்
“எனுக்கு நாத்தநாரு பொண்ணு, ஓணும்.
செய்யார் பக்கத்தில குடுத்திருக்கோம். அக்காவாம்
அக்கா. லேசாக சிரித்தாள்“
“ம்மா,
இது பி.பி அதிகமாகி, தலையின்
மூளை நரம்புகளில் ரத்தம் ஓட்டம் சரியாக இல்லாமல் போரதால கை, கால்
விழுந்திடும்மா. அதப்போயி செய்வினை, மந்திரம்,
நாட்டு வைத்தியம்னு அலைஞ்சி இருக்கிறீங்களேம்மா. அவுங்க வீட்டில் யாருக்கும் விவரம் இல்லைனா. நீங்களாவது
ஆஸ்பத்திரிக்கு கூட்டிம்போயிருக்கலாமேம்மா.“
“அதான்
சொல்றேனேசார். அவுங்க ஊட்டுக்காரன், எங்களைக்
கிட்ட சேக்கல. அப்புறம் ஆறுமாசத்துக்குமேல பாத்துப் பாத்து ஒண்ணும்
சரியாகலனுதான். யப்பா, நீ பார்த்ததுபோதும்.
எங்க ஊட்டு பொண்ணு செத்தாள்னா, நாங்க சொம்மா உடமாட்டோம்னு
மெரட்டினோம். அப்புறமா கூட்டிம்போய் பாருங்கனு அனுப்பினான்.
அதில இருந்து, நான்தான் ஆறுமாசமா அங்க,
இங்கனு கூட்டிம்போய் பாக்குறேன். இப்ப எவ்ளோ பரவாயில்லயே.
ஓரளவுக்கு நடக்குறாளே. கையிதான் அப்பிடியே நிக்குது.“
படாபட் கைகளை மடிமீது
வைத்துக்கொண்டு, வலக்கையால் இடது விரல்களை அழுத்தி அழுத்தி விடுவதும், விரல்களை மடித்து நீட்டுவதுமாக இருந்தாள். இடக்கை விரல்கள்
சமாதானம் அடையாமல், இணங்காமலே இருந்தது. படாபட் ஆறாவது டோக்கன். மூன்றாவது டோக்கன் டாக்டரிடம்.
பக்கத்தில் இருந்த தொடர் நோயாளிகளின் உடன் வருபவர்கள் டாக்டரின் நோய்விடுவிப்பு
முறையை பகிர்ந்தார்கள். “எவ்ளோ காலமா பாக்குறாரு. அவுரு கைராசி, நல்லாயிடும். பஸ்டாண்டு எதிர இருக்குதுபாரு,
அந்த மெடிக்கல்லதான் மாத்திர எழுதித்தருவாரு. மாத்திரை
ஒரு வாரத்திற்கு குறையாமல் இருக்கும். இங்க பீஸ் முண்ணுத்தி ஐம்பதுன்னா.
மாத்திரை மட்டும் ஆயிரத்திஐநூறு, இரண்டாயிரத்திற்கு
எழுதிக்குடுத்துடுவாரு. அவர் கையெழுத்த இந்த ஊர்ல யாரும் படிக்கவேமுடியாது.
அந்த மெடிக்களுக்கு மட்டுந்தான் தெரியும். கொஞ்சம்
வலியத் தாங்கிக்கினோம். ஐஞ்சி, ஆறு ஊசிப்
போடுவாரு. நீ எங்க வலிக்குதுனு சொல்றீங்களோ, அங்கயே ஊசியப்போடுவாரு. சில பேருக்கு மயக்கமே வந்துடும்.“
என்றார்கள்.
“ஏம்மா,
அந்தம்மாவுக்கு ரெண்டு இட்லியாவது வாங்கிக்குடுங்கம்மா. ஊசிப்போட்டா, மயக்கம் வந்துடப்போகுது“ நான் சொன்னேன். பக்கத்தில் இருந்த சிலர் ஏதேச்சியாக என்
யோசனைக்கு ஆதரவு குரல் கொடுத்தார்கள்.
நாற்பத்தியைந்து வயதுக்காரி “சரி வா, இட்லியாவது
சாப்பிட்டு வருவே“ அழைத்தாள். படாபட் வலதுகையால்
இடதுகை விரல்களைப் பிடித்துக்கொண்டே சட்டென்று எழுந்தாள். வலது
பக்கம் மார்பை மறைக்கும் முந்தாணை அதன் பாதையில் இருக்கவில்லை. எதிரில் ஆண்கள். பெண்களும்தான். இருவருக்குமே கணப்பொழுதில் காமத்தை எப்படி நினைவுபடுத்துகிறது. ஒரு பெண் வேகமாக எழுந்து முந்தானையை இழுத்து பக்கவாட்டில் சொருக முயற்சித்தாள்.
படாபட் இடது காலைத்தாங்கும் முன்னே வலக்காலை நம்ப வேண்டியிருந்தது.
சற்றுத்தடுமாறி, வலதுகாலை இழுத்துவைத்து அடுத்தஅடி
வைத்தாள். தடுமாற்றத்தை புதிதாக பலர் பார்த்தார்கள். வீட்டிற்கு பொவதென்றால், பார்ப்பவர்கள் கடவுள் ஏன்தான்
இப்படி படுத்துகிறானோ. பாவம் என்றபடி சும்மா இருந்திருப்பார்கள்.
வெறுமனே கஷ்டப்படுவதை விரும்புவதில்லை. படாபட்
தடுமாற்றத்தை சமயோசிதமாக சமாளித்தாள். பார்வையாளர்கள் பார்த்ததும்
நாற்பத்தியைந்து வயதுக்காரிக்கு யோசனையாக, “அந்தம்மாவ ஒக்கார
வச்சிட்டு நீ. போய் வாங்கிக்கிணு வாம்மா“
“சரி..சரி. நீ ஒக்காரு. நான் போய் வாங்கியாறேன்“
நாற்பத்தியைந்து வயதுக்காரிக்கு மனம் சங்கடப்பட்டது. ஆறு மாதமாக கூட்டிக்கொண்டு திறிகின்றோம். நமக்கு வராத
யோசனை, அவளைப் பார்பவர்களுக்கு வருகிறதே. நாம் சரியாக கவனிக்கவில்லை என்றாகிவிடுமோ, ஊகித்துக்கொண்டே
நடந்தாள்.
படாபட் எழுந்து இழுத்து
நடந்ததைக்கண்டு அதிர்ந்துவிட்டேன். முப்பதிஇரண்டைத் தாண்டியிருக்காது. உடல் தசைகள் மினுமினுப்பும் குறையவில்லை. ஏறக்குறைய இன்னும்
நாற்பது ஆண்டுகள், உடல்பெலனுடன் இருக்கவேண்டியவள். தனக்கான வேலைகள் அனைத்தையும் தானே
செய்துகொள்ளவேண்டும். ஆர்வம் அவளுக்குள் துடிப்புடன்தான் இருக்கிறது.
எதிர்பால் உடல் ஈர்ப்பைத்தூண்டுகிற தசை பாகங்கள் எதுவுமே, அதன் பொலிவை இழந்திருக்கவும் இல்லை. தன் உடலை கவனித்துக்கொள்வதில்
அக்கறையற்றவளாக இருக்க வாய்ப்பில்லை. இந்த நிலமையிலும் நேர்த்தியான
ஆடை உடுத்தல், இயல்பாக முகத்தைப் பராமரித்தல் இருந்திருக்கிறது.
இச்சமயம் இன்னொருவர்தான் அவளுக்கான அலங்காரங்களை செய்யமுடியும்.
படாபட்டிற்கு பாராமரிப்பில் பங்கில்லை. அப்படி
சொல்லிவிடமுடியாது. ஒருவேளை உடல் பராமரிப்பிலோ, ஒழுங்குபடித்திக் கொள்வதிலோ அவளுக்கு அக்கறை இல்லை என்றால், இன்னொருவர் தன்னை அழகுபடுத்த வந்தாலும் அலட்சியப்படுத்துகிறவளாக இருப்பாள்.
அந்நிலையில் மோசமாக, பார்க்க சகிக்கமுடியாதபடிக்கூட,
ஆடை மற்றும் அழகு பராமரிப்பு இருந்திருக்கும்.
நாற்பத்தியைந்து வயதுக்காரி
சொன்னதுபோல, படாப்பட் கணவன் குடும்பத்தலைவனாக இருந்தான். ஆணின் நிலையை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. படாபட்தான்
முழு பெலத்தைக்கொண்டு குடும்பத்தை சீராக்கொண்டு சென்றிருக்கின்றாள். சாட்சி, அவளின் இரண்டு ஆண்பிள்ளைகள் ஓரளவிற்கு படித்து
ஏதோ வேலைகளைச் செய்கிறார்கள். இத்தனை ஞானமுள்ளவளுக்கு இந்நிலைமை
வர யார் காரணம்? எங்கே குறைபாடு? எது நடைமுறையில்
இருந்திருந்தால் அழகு படாபட் இந்நிலமையை தவிர்த்திருக்கலாம்? கேள்வியும், பரிதாபமும் என் பிபியை வேகப்படுத்தியது.
டாக்டர் அறை வாசலில்
தொங்கவிடப்பட்ட சீலை ஒதுங்கியது. அச்சீலை மிகப்ழையதாக பிரவுன், மஞ்சள் கலந்த பூக்களால் நிறைந்திருந்தது. மேற்படிப்பிற்கு
வசதியற்ற மிகச்சறிய பெண், டாக்டர் அறையில் இருந்து வந்தாள். படாப்பட் டோக்கன் அழைக்கப்பட்டது
நா.வயதுபெண் படாபட்டை அழைத்துச்சென்றாள். டோக்கன் பெண் படாபட்டின் பெயரைச் சொன்னதும் முதல் ஆளாக நான்தான் “ம். போம்மா, போம்மா. உங்களைத்தான் அழைக்கிறார்கள். தூரிதப்படுத்தி அனுப்பினேன்.
அரைமணி நேரம் கழித்து வெளியே வந்தாள். வலப்பக்கம்
புடவை சற்று இறங்கியிருந்தது. வலக்கையால், இடக்கையை பிடித்துவராமல் இடுப்பின் பின்புறத்தை தேய்த்துக்கொண்டு வந்தாள்.
உதடுகளை அழுத்தமாக மடித்திருந்தாள். அவ்வளவு வலி.
ஏற்கனவே உட்கார்ந்திருந்த
இடத்திற்கு வந்து உட்கார திரும்பினாள். நா.வயதுப்பெண்,
தலையை ஸ்கேன் எடுக்கும் சீட் மாத்திரை, யூரியன்
டெஸ்ட் சீட்டுகளை ஒரு கையில் பிடித்து, மறுகையில் படாபட்டை பிடித்து
அமரவைத்தாள். அவளுக்கு வைத்தியத்திற்கான தொகையைக் கேட்டு மனம்
பீதியடைந்திருந்தது. பயம் கலந்த சோகத்தை அணிந்திருந்தாள்.
நான் வெகுநேரம் காத்திருத்தலில் இருந்து தப்பித்தார்கள், என்கிற சந்தோஷத்தில் “டாக்டர் பார்த்துட்டாங்களா,
இனிமே சரியாகிடும் போ. பயப்படாதே“படாபட்டைப் பார்த்து சொன்னேன். சொல்லும்போதுகூட இரு உதடுகளையும்
மடித்து அழுகையை அடக்கியபடி இருந்தாள். என் வார்த்தை அவளை ஏதாவது
செய்திருக்குமா? சிறு குழந்தைபோல அழத்தொடங்கினாள். அழுதுவிடுவது ஏனோ நல்லது என்கிறார்கள்.
நான் “ஒண்ணுமில்ல.
ஒண்ணுமில்லை. அழாத, சரியாகிடும்.“
என்று சற்று சத்தமாகவேச் படாபட்டிடம் சொன்னேன். பிறகுதான் நாம் ஏன் இப்படி சிறு குழந்தையை ஆருதல்படுத்துவதுபோல சத்தமாக சொன்னோம்.
பார்த்தவர்கள் என்ன நினைத்திருப்பார்கள். எனக்கு
சிறிய சங்கடந்தான். இருந்தாலும் மக்களைச் சுரண்டுகிற அரசாங்கங்கள்.
ஆயிரமாயிரம் கோடிகளைக்கொட்டித் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்கிற வேலையை
ஓயாமல் செய்கிறது. மர்மமாக வந்து மனித வாழ்வைச் சீரழிக்கின்ற
மிக முக்கியமான நோய்கள் வருவதற்கான அறிகுறியை தொடர் மலினச்செய்தியாகவும், மருத்துவத்தை தேவையுள்ளவர்க்கு இலவசமாகவும் வகுத்திருந்தால், வழங்கியிருந்தால், அழகு படாபட் இந்நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டாள்.
ஜே.டேனியல்
No comments:
Post a Comment