தெற்கு வாசல்
தலைவாசல் தொடங்கி, ஆல்ட்டர் வரை
நீண்டு படுத்திருக்கிறது சிகப்பு கம்பளம். அதன் உடல், முற்றியத் தேங்காய் நார்களினால் முறுக்கேறி இருந்தது. சிகப்பு, அடர் நீலச்சாயங்களைத் தன் உடல் முழுதும் வடிய அழகில் பூசியிருந்தது. வெறுங்காலில் நடப்போருக்கு, புதிதாகப்போட்டு நசுக்கியத் தார்சாலையில் நடப்பதுபோன்று இருக்கும். ஆலயத்திற்கு தலைவாசலைத் தவிர்த்து, வடக்குத் தெற்காக இன்னும் சில வாசல்கள், நடு
பகுதியில் இருந்தது. அவரவர் வசதிக்கேற்ப ஆலயத்தில் நுழைவதற்காக நடு வாசல்கள்
நன்றாகப் பயன்பட்டது. சிலர் வாகனங்களைத் தங்கள் பார்வையில் இருக்கும்படியாக விட்டு வடக்கின் நடு வாசல் வழியாக உள் நுழைவார்கள்.
சிலருக்கு வீடு, நடு வாசலுக்கு நேர்எதிர் அமைந்ததால், அதையே வசதியாக்கிக்கொண்டு நுழைவதுண்டு. சிலர் வாரா, வாராம் தான் அமருவது ஒரே இடமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் நடு வாசல்களைப் பயன்படுத்துவதுண்டு. இன்னும் சிலர் ஆயர், செம்பொருள் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்பொழுது, தாமதமாக வருகிறார்கள். குற்ற உணர்ச்சியில் சட்டென நுழைவதற்காக வடக்குத், தெற்கு நடு வாசல்களைப் பயண்படுத்துவதும் உண்டு. சிலர் மட்டும் எவ்வளவு நேரமானாலும், அல்லது மூன்கூட்டியே வருவதானாலும் தலைவாசல் வழியாக மட்டுமே நுழைகிறார்கள். இத்தனைக்கும் நடு வாசல்களைக்கடந்து சுற்றிவந்து தலைவாசலில் நுழைகின்றார்கள். பழக்கதோஷம், அடிப்படையில் வருவதும் உண்டுதான். அவர்களிலும் சிலர் தலைவாசலில் நுழைந்து, சிவப்பு கம்பளம் வழியாக நடப்பதுதான் தன் நிலைக்கு தகுந்தது என அதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மிணு மிணுப்புக் கவசக் காலணிகளுடன் சிகப்பு கம்பளத்தின் மீது நடப்பது, அவர்களுக்கு கம்பீரமாகத்தான் இருக்கிறது.
மனைவி தன் பின்னால் நடந்து வருகிறாள். பெரிய கம்பீரத்தைக் கூட்டிக்காட்டுகிறது. அதை
இருவருமே பெருமையாகக் கருதிக்கொள்கின்றார்கள். ஆலயத்தின் பக்கவாட்டு இருக்கைகளைத்தவிர்த்து நடு ஹாலின் மையத்தில் மட்டும் ஏறக்குறைய ஐநூறுபேர் உட்காரும் இருக்கைகள் இருக்கிறது. இருக்கைகள்
அனைத்துமே பழமையான தேக்கு மரத்தால் வடிவமைக்கப்பட்டிருந்தது. மிஞ்சி இருக்கும் இந்த கலை நயம் மிக்க பொருள்கள்தான், மிஷினரிமார்களை நினைவுபடுத்திக்கொண்டே
இருக்கிறது.
முதுகு சாயும் பகுதி வளைந்து கலைநயத்தை வெளிப்படுத்தும். வெறும் கட்டைதான். எவ்வளவு நேரம் உட்கார்ந்தாலும் சுகமாகவே இருக்கும். சில ஆயர்களின் ஐந்து வருஷ பொறுப்பில் மதிப்புமிக்க இருக்கைகள், உழைப்பாளியின் காப்பு காய்ச்ச உள்ளங்கைகள் போல பொலிவிழந்தும் இருந்ததுண்டு. பொறுப்புள்ள ஆயர்கள் அப்படி விடுவதில்லை. அதைக் கண்ணாடித் தன்மையாக்கி வைப்பதுண்டு. இப்போதெல்லாம் இருக்கைகள், ஏழுதரம் சீலோவாம் குளத்தில் முழுகிய நாகமானின் குழந்தை மேனியாகத்தான் இருக்கிறது. ஹாலின் மையத்தில் திடமான உடல்வாகு உடையவர்கள் உட்கார்ந்தால் எட்டுபேர், ஒரு
இருக்கையில்
உட்காரலாம். பக்கவாட்டின் இருக்கையும் அதே வகைதான். அதில் ஐந்துபேர். அதிகம், ஆறு பேருக்கு நெறுக்குதல் இல்லாமல் இருக்கும்.
நான் எப்போதுமே பிரதான சாலையில் இருந்து தலைவாசலுக்கு நேராகத்தான், வளாகத்திற்குள்
வருகிறேன். எந்த ஞாயிறும் தலைவாசல் வழியாக ஆலயத்தில் நுழைந்ததில்லை. மாறாக பக்கவாட்டின் ஓராமாக வந்து தெற்கு வாசல் வழியாக நுழைவது வழக்கம். நுழைந்தவுடனே முதலாவதாக இருக்கும் பென்ச்சில் அமருவதுண்டு. இருபது ஆண்டுகளுக்கு முன்னால், நான் கிராம திருச்சபை உறுப்பினராக இருந்தபோது, நகரத்திற்கு ஏதோ வேலையாக வந்தால் சில நேரம் இந்த ஆலயத்தில் நுழைந்து ஆராதனையில் பங்குபெற்றதுண்டு. அப்போதெல்லாம் இந்நகர மக்களின் நாகரீக அலங்காரங்களைக்கண்டு, மிரண்டு ஆலயத்தில் நாமெல்லாம் வரலாமா அல்லது ஏதாவது சொல்வார்காளா? நினைத்ததுண்டு. அந்த காரணத்தால்தான் பக்கவாட்டில் வந்து தெற்கு வாசல் வழியாக நுழைந்து முதல் பென்ச்சிற்குப் பின் பென்ச்சில் அமர்ந்திருக்கிறேன்.
தற்போது நகரவாசியாக மாறி இருபது வருடங்கள் முடிந்துவிட்டன. ஆலயத்தின் உருப்பினர்தான். இப்போதும் தெற்கு வாசலில்தான் நுழைகின்றேன். சிறு மாற்றமாக நுழைவு வாசலின் முதல் பென்ச்சில் உட்கார்ந்துவிடுகின்றேன். பென்ச்சை மாற்றியதற்கு இரண்டு காரணம், ஒன்று மெசேஜ் கொடுக்கிறவரின் உடல் மொழியையும், முக பாவணைகளையும் தெளிவாக பார்க்கமுடியும், அவர்களில் இருந்து உதிரும் வார்த்தைகள், எது உண்மை, எது பொய் சரியாக ஊகிக்க உதவும். இன்னொன்று மேசேஜ் முடிந்தவுடன் யாருக்கும் இடையூறு இல்லாமல் எழுந்து வெளியேறுவதற்கு வசதியாக இருக்கும். சில நேரம் ஆசுவாசமாகத் தூங்குவதற்கும் அனுமதிக்கும். இந்த அறிமுகத்தோடுதான் ஒரு ஞாயிறு ஆராதணையில், நான் அதிர்ச்சிக்குள்ளான பகுதிக்குள் என்னால் நுழையமுடிகிறது.
வழக்கம்போலதான் அன்றய ஆராதனையும் நடந்துகொண்டிருந்தது. நற்செய்திப் பாடத்திற்காக சபையார் அனைவரும் எழுந்து நின்றார்கள். நான், அமரும் இடத்திலேயே எழுந்து நின்றிருந்தேன். திடீரென்று ஒரு நபர் தலைவாசலில் இருந்து சிவப்பு கம்பளத்தின் மீது முட்டிப் போட்டுக்கொண்டு, இரு கைகளையும் மேலே உயர்த்திபடி ஆல்ட்டரை நோக்கித் தவழ்ந்து வந்தார். நிற்பவர்களின் இடையிடையில் தடைபட்டுத் தடைபட்டுத் தெரிந்தார். யார் இந்தநபர். வியப்புடன் பார்த்தேன்.
ஆலயத்தின் பல திசைகளில் இருந்து என்னைப்போலவே பலர், அவரைத்திரும்பிப் பார்த்தார்கள். அதில் ஏளனமும், பரிதாபமும் கலந்திருந்தது. அப்போதுதான் நாம் சொர்க்கலோகத்தில் துதிபாடிக் கொண்டிருக்கவில்லை என்று, எனக்கும் உறைத்தது. மனிதர்கள் முன்னிலையில், இந்தளவுக்கு தன்னை அவனமானப் படுத்திக்கொண்டு கடவுளிடம் கையேந்தவேண்டுமா? மறு
முடிவுக்கு வந்தேன். ஆலயத்திற்குள்ளிருந்து தன்மீது விழும் எந்தப் பார்வைகளையும், அந்நபர் பொருட் படுத்தவில்லை. முட்டிப்போட்டுக்கொண்டே ஆல்ட்டர் வரை நடந்துச் சென்று கிறிஸ்துவின் படங்களைப் பார்த்து வணங்குகிறார். எழுந்து
வேகமாக நடந்து பக்கவாட்டு வழியாக வெளியேச் சென்றுவிடுகின்றார். அப்படி பக்க வாட்டின் வழியாக வந்தபோதுதான் அவரின் முகத்தை என்னால்
தெளிவாகப் பார்க்கமுடிந்தது.
‘அய்யோ இந்த மனிதரா‘ என்று சற்று அதிர்ச்சியாகப் பார்த்தேன். முகம், கை கால்கள் என எல்லா இடங்களிலும் திட்டு திட்டாக வெண்தன்மை அதிக அளவில் படர்ந்திருந்தது. நடு நெற்றியில் குங்குமம் இட்டிருந்தார். தலை நரையில் முழ்கியிருந்தது. கண்கள் உள் அமைந்தார் போன்று இருந்தது. இரு கண்களைச் சுற்றி கறுநிறம் இருந்தது. சில நூல் வேலைபாடுகளால் ஆன, வெண் சட்டையும், வேட்டியும் கட்டியிருந்தார். இவர் எனக்கு மிகவும் அறிமுகமானவர். ஏறக்குறைய இருபத்தி நான்கு வருஷம் முன்பு, என்னை வியப்புக்குள்ளாக்கிய நபர் என்றுதான் சொல்லவேண்டும். வெட்கத்தைவிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த மனிதர் மாதிரி ஆகவேண்டும். ஆசைப்பட்டதுண்டு. அப்போதும் இந்த வெண் தன்மை இருந்தது. இப்போது அளவிற்கு இல்லை. லேசாக சிறு சிறு புள்ளிகளாக இருந்தது.
அவர் மளிகைக்கடை வியாபாரி. அப்போது நானும் எங்கள் கிராமத்தில் சிறு மளிகைக்கடை வைத்திருந்தேன். ஓட்டை சைக்களில்தான் எனது
சரக்கு கொள்முதல் இருந்தது. ஒன்றிரண்டு கை பைகளை எடுத்துவந்து மளிகை சரக்கு வாங்குவேன். நான் காய்கறிகள் உட்பட, இரண்டு மூன்று கைபைகளில் சாமான்கள் வாங்கி வைத்திருந்தாலும், அவர் சாமான்கள் வாங்க காலியாக கொண்டுவரும் மூன்று பை மூட்டைகளுக்கு ஈடாகாது. பல நேரங்களில் நான் வாங்கும் கடையிலேயே அவரும் பொருள் வாங்குவார். நான் போடும் துண்டு சிட்டை கடைக்காரன் ஏதாவது, சின்ன பையனிடம் கொடுப்பான். நம்முடைய மதிப்பு அவனளவுதான், என நினைத்ததுண்டு. அவருக்கு, நல்ல திறமையான நபரை ஒதுக்கித்தருவார். முதலில் பணத்தையேக் கொடுக்கமாட்டார்.
சாமான்கள் செக்கிங் முடிந்தபிறகு கத்தையாக நீட்டுவார். அப்போதெல்லாம், ஒரு காதலியின் ஜாடை செயலுக்கு வழிகின்றவனாக பார்த்துக்கொண்டிருப்பேன். வருஷக்கணக்கில் ஆச்சரியம் இருந்துகொண்டே இருந்தது, என்றாலும்
நான் அவரிடம் பேசியதேக் கிடையாது. அவர் கடை முதலாளியைச் சற்று உரத்தக் குரலுடன் “என்ன பில் போடுற நீ. பக்கத்துல டின்னுக்கு ஐந்து ரூபாக் கம்மி. ரவை அம்பதுகாசு ஏத்திப்போடுற. அந்த பாக்சுக்கு பிரி குடு.“ என்று அவ்வளவு உரிமையாகவும்,
சத்தமாகவும் கேட்பார். இப்படித்தான் நமக்கும் ஏத்தி போடுவானா?
நாம வாங்குற அரைகிலோ, ஒருகிலோவிற்கு கேள்வி கேட்டா
பதில் சொல்லுவானா? வெறுமனே துண்டுச் சீட்டின் விலைகளை மட்டும்
பார்த்துக்கொள்வேன்.
கடைகாரன் சிறு பில்லுகள் போடுவோரிடம் அவ்வளவு கவனம் செலுத்தமாட்டான். பில் கணக்கீடு தவறியதில்லை.
அந்தநபர் பொருட்களை சிறு சிறு பைகளில் தனித்தனியாக கட்டி ஒரு பெரிய கோணிப் பைக்குள் அடுக்கிக்கொள்வார். ஓரிரு
கூலியாட்கள் அவருடனேயே இருப்பார்கள். காய்கறி மார்க்கட்டில் நுழையும்போது ஒரு நபர் கூடவே வருவார். அவரைத் தன் வசம் இழுப்பதற்கு பல கடைக்காறர்கள் நயமான பேச்சுக்களை வீசுவார்கள். தனக்கு வசதிபடுகின்ற இடத்தில் இத்தனைக் கிலோ என்று, சொல்லிவிட்டு
மறுகடைக்கு நடப்பார்.
கூட வருபவர் வாங்கியபின் மூட்டையைத் தூக்கிக்கொண்டு பின்னாகவே நடப்பார். வருஷக்கணக்கில் அவரைப்போல்
வியாபாரம் செய்யவேண்டும். வாய்ப்புக்கிடைத்தால் அவராகவே மாறிவிடவேண்டும்.
வாஞ்சை இருந்தது. அதற்கான சந்தர்ப்பம் அமையவே இல்லை,
ஆதே மூச்சான ஈடுபாடும் இருக்கவில்லை.
காலச்சூழல், சுழல்
காற்றுக்குள் அகப்பட்ட குப்பையைப்போல ஏங்கெங்கோ கொண்டு வந்து போட்டுவிட்டது.
அதிலிருந்துதான், இந்த ஆலயத்தின் தெற்கு வாசலின்
முதல் பென்ச்சில் ஞாயிறுதோறும் அமர்ந்துகொண்டிருக்கிறேன். தெற்கு
வாசல் எப்போதும் தன் பிரமாண்டத்தை இழந்ததில்லை. அதன் மீது பெருமை
இருப்பதுபோல், திம்மென நிற்கும். எனக்கு
கடவுள் சார்பு சந்தர்ப்பத்திற்காக வந்து ஒட்டிக்கொண்டதல்ல. தாத்தாவிடம்
உருவாகி, தந்தையிடம் தீவிரம் அடைந்து, ஆரம்பம்,
வேகம், குறைதல் அடிப்படையில் என்னிடம் தங்கியிருக்கிறது.
கூடுதலாக அறிவு, நம்பிக்கை இரண்டையும் சமநிலையில் மனம் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன.
இருபத்தி நான்கு வருஷம் முன்பு பார்த்த
அதே நபர்தான். ஒரு வேளை கடந்த காலங்களில் நான் பார்த்த போது இருந்ததைவிட தற்போது
வியாபாரமும், வசதி வாய்ப்பும் கூடுதலாக இருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது.
அந்தகாலங்களில் அணிந்துகொண்டிருந்த ஆடைகளுக்கு சற்றும் குறையாமல்தான்
உடுத்தியிருகின்றார். பண நொடிப்பிற்கான சாயல் ஏதும் அவரிடம் இருக்கவில்லை.
உடலின் வேகத்தில் கூட குறைவொன்றும் இல்லை. கடந்த
காலத்தைப் பிரிதிபலிக்கிறது. நிறுவமுடியுமா என்றால், முட்டிபோட்டு கையேந்தியபடி வேகமாக நடப்பதை வைத்தே சுலபமாக சொல்லிவிடலாம்.
நெற்றிக்கு சதா கும்குமம் வைத்த அடையாளம், சில
நேரம் வைக்காமலேக்கூட பொட்டின் சாயல் தெரியும். இவரை ஞாயிறு ஆராதனையில்
பார்க்கும்போது, அதிகாலையில் வைத்த மிருதுவான குங்குமம் சற்றும்
நிறம் மாறாமல் இருந்தது. அவருக்கு அவ்வளவு அழகாகத்தான் இருந்தது.
தன் வழித்தோன்றல் சாமியின் முன் தினந்தோறும் வேண்டி வைப்பதை வெளிப்படுத்தியது.
பணம் ஒரு பொருட்டாக இல்லாத மனிதனுக்கு, துக்கங்கொண்டாடும்
அளவிற்கு வேதனையைத்தருவது உறவுகளின் குற்றச்சாட்டுகள் அல்லது இழித்துப் பேசுதலாகத்தான்
இருக்கும். அந்தநபர் முகத்தில் இழித்துரைத்ததற்கான சோகம் மட்டுமே
தங்கியிருக்கிறது. ஆலயத்தை நோக்கி வரச் செய்திருப்பது அதுவாகவும்
இருக்கலாம்.
தொடர்ந்து நான்கைந்து வாரம் அவரை கவனிக்கின்றேன். ஆலயத்தின்
எந்த நபரையும் அவர் தொடர்புகொள்ளவில்லை.
ஞாயிறுகளில் சிகப்பு கம்பளதின் மீது தவழ்ந்தபடியே, கையேந்தியபடியே வருகின்றார். தலைகுனிந்து வணங்குகின்றார்.
எழுந்து விரைவாக வெளியேறி விடுகின்றார். அவர் எதற்காக,
என்னச்சொல்லி வணங்குகின்றார், யாருக்கும் தெரியாது.
வெளியேற வரும்போது தெற்கு வாசல் பக்கமாகத்தான் வருகின்றார். அதிகாலையில் வைத்த குங்குமப்பொட்டு அவர் முகத்தை இன்னும் அழகாக்கியிருக்கிறது.
ஆனால், இருதயத்தில் அத்தனை துக்கம் இருப்பது தெரிகின்றது.
இழக்கக்கூடாத எதையோ இழந்த மௌனம் அவரின் கறுப்பும் வெள்ளையும் கலந்த முகத்தில்
அந்தரங்கமாக நிழலாடிக்கொண்டிருந்தது. இருபத்தி நான்கு வருஷம்
முன் இவரைத்தானே நீ முன்மாதிரியாக நினைத்திருந்தாய், இன்று ஏற்றுக்கொள்ளேன். திரும்பத்திரும்பக் கேட்டது மனம்.
அவர் தன் மன ஆருதலுக்காக தவழ்ந்து வருகின்றார். அப்படி
மட்டும் ஏன் நினைக்கவேண்டும்.
பெருமாளுக்கும், இயேசுவுக்கும்
நட்பு வட்டத்தை உருவாக்குகிறார். நினைப்பதால், நினைப்பவன் உயிர் உடலில் தங்காதா என்ன?
டேனியல்
No comments:
Post a Comment