Friday, December 26, 2014

சிறுகதை


 “ராஜாவின் கொம்பு“                             (பகுதி 2)


மக்கள் தொடர்பு மந்திரி, ஏதோ சொல்ல வருகின்றார் என்பது புரிகின்றதுசொல்லுங்கள் மந்திரியாரே“ 

நன்றி ராஜா, இந்த அவையில் என்னைவிட, அனுபவம் மிக்கவர்கள், திறமைசாளிகள் இருக்கின்றார்கள் என்பதை அறிவேன். நான் வைக்கும் வாதம் தீர்க்கமானது என்று சோல்லமாட்டேன். அவ்வாதத்தைத் தொடர்ந்து, ஒரு தீர்வை நோக்கிச்செல்வதற்கான ஆரம்ப வழி என்பதை மட்டும். தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன். பிரித்தியேகமான  வாள் என்பதும், நீண்டு பழுத்த கொம்பு என்பதும் வெறுமனே பொருள்கள் என்று மட்டும் கருதிவிடமுடியாது. நம்முடைய முன்னாள் ராஜா நீண்டு பழுத்த கொம்பைக் காரணமில்லாமல் எந்நேரமும் தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை. அது உளவியல் சார்ந்தது. அதி முக்கியமானது. தன்னளவில் சமமாய் ஒரு பொருள் தன்னுடைய கைக்குள் இருக்கும்போது மனம் இன்னொரு ஆள் தன்னோடு இருப்பது போன்ற உணர்வு வருகின்றது. உணர்வு என்பதுகூட முக்கியமல்ல. தன்னுடன் இருக்கும் ஆள்தன்மை பிம்பத்திற்கு, அதற்கென்று ஒரு மனம் இல்லாது, செயல் இல்லாது லட்சியம் இல்லாது தன்னை வைத்திருக்கும் நபருக்கு விசுவாசமாய் இருப்பதென்பது உலகத்தில் எந்த உயிர் உள்ள ஜீவராசியாலும் இயலாதது. அவ்விதமானப் பணியை நீண்டு பழுத்த கொம்பு செய்தது, என்று முன்னாள் ராஜா நம்பினார். அதற்காகவே அக்கொம்பை எப்போதும் தன்னுடன் வைத்திருந்தார்.

நீள வாள் ஆணவத்தின் மறுஉருவம். ராஜாவிற்கு மிக அலங்காரமான உடைபோன்றதுதான். ஆனால், ஒருபோதும் வாள் பல் வினைப் பயனாற்றுவதற்கு பயனற்றது. பெரும்பாலும் மிரட்டல் தொனிக்காகவும், ரத்தம் சிந்துதலுக்காகவுமே பயன் படுகின்றதுஇச்சித்தாந்தத்தில் நம்பிக்கையற்றவரான உங்கள் தந்தை, நம்முடைய ராஜா மிகச்சரியாகவே  மக்களை வழிநடத்தினார் என்பது உலகறிந்த உண்மை. என் கருத்தாக சொல்ல வருவது புதிய ராஜாவிற்கு நீண்டு பழுத்த கொம்பை வைத்துக்கொள்வதின் மூலம் திறம்பட ஆட்சிப்பணியை நடத்தலாம் என்பது என் நம்பிக்கை

புதிய ராஜா அவரின் பேச்சுக்கு எதையுமே சொல்லவில்லை. இன்னொருவர் யாராவது கருத்து சொல்லமுடியுமாஎன்றார்.

பாதுகாப்பு மந்திரி சற்று ஆவேசமாக எழுந்தார். எதிர்பாராமல் தன் கையில் வைத்திருந்த குறிப்பை கீழேத் தவறவிட்டார். அவருக்கு நேராக காற்றாடி இருந்ததால் குறிப்பு பறந்து ஓடியது. ராஜா உட்பட கலகலவென்று சிரித்துவிட்டார்கள். பலருக்கு பாதுகாப்பு மந்திரிக்கு தன் குறிப்புச்சீட்டையே பத்திரமாக வைத்திருக்க முடியவில்லை. என்பதாக அச்சிரிப்பு இருந்ததுஏற்கனவே மக்கள் தொடர்பு மந்திரியின் பேச்சில் கோபமாக இருந்த அமைச்சருக்கு மேலும் சூடேறியது
 
அப்பதட்டத்தில் தன் பேச்சைத் தொடங்கும் முன் சம்பிரதாயமாகராஜா வாழ்கஎன்று சொல்வதைக்கூட மறந்துவிட்டார். எடுத்த எடுப்பில் மக்கள் தொடர்பு மந்திரி, மக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்போல் தன் கருத்தை வைக்கின்றார். நாம் எப்படியான சூழலில் வாழ்கின்றோம் என்பதுக்கூடத் தெரியவில்லை. நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் பலவிதமான ஆயுதங்களை கையாள்வதில் பயிற்சி பெறுகின்றார்கள். நாளுக்கு நாள். மனிதனுடைய மனநிலை கீழ்த்தரமான செயல்காடுகளை நெறுங்கிப்போகின்றது. இந்நிலையில் ராஜா நீண்டு பழுத்த கொம்பை வைத்துக்கொள்ள பரிந்துரைக்கின்றார். என்ன வேடிக்கையான விஷயம். இன்னொன்று முந்தைய ராஜா வயது முதிர்ந்தவர் அவரின் இயல்புக்கு கொம்பை தன்னோடு வைத்துக்கொண்டது மிரியாதையாக இருந்தது. புதிய ராஜா மிகவும் இளமையானவர் அவரின் தோற்றத்திற்கு கொம்பை தன்னுடன் வைத்துக்கொண்டால், எதிரி நாட்டுக்காரன் நகைப்பதற்கு வசதியாக அமைந்துவிடும். ஆகவே ராஜா ஒருபோதும் அக்கொம்பைப் பயன்படுத்தக்கூடாது.

ஒரு வேளை நமது முன்னாள் ராஜா பயன்படுத்தியக் கொம்பு என்பதற்காக பாதுகாப்பான இடத்தில் வைத்து நினைவுச் சின்னமாக்கி பார்த்துக்கொண்டிருக்கலாம். சிறந்த கொம்பு என்பதற்காக அதனுள்ளிருந்து புறப்படும் மூலிகை கலந்த நறுமனம் காற்றில் கலந்து வெளியேறும்போது நம் எல்லாரின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுதலாக இருக்கும்
பாதுகாப்பு அமைச்சரின் வாதங்கள் வெகுவாக சபையை ஈர்த்தது. மிகுந்த சத்தத்துடன் வரவேற்பைப் பெற்றது. புதிய ராஜாவும் பாதுகாப்பு அமைச்சரின் வாதத்தை வரவேற்றார்.
 
அரசபையின் சனி மூலையில் கொலுமண்டபம் இருந்தது. அம்மண்டபத்தின் இடப்பக்கம், வலப்பக்கம் என வட்ட வடிவிலான இருபெரும் தூண் இருந்தது. வலப்பக்கம் தூண் ஒட்டினார்போன்று கடந்த ராஜாவின் மார்பளவிலான உருவம் அமைத்திருந்தார்கள். அவ்வுருவம் வெங்கலத்தால் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்டு மிகவும் நேர்த்தியாக இருந்தது. புதிய ராஜா ஏற்கனவே கொம்பைக் கழுவிய பணியாளனை தினந்தோறும் ராஜாவின் மார்பளவிலான உருவத்தை துடைத்து பாதுகாக்கம் பணியை கொடுத்திருந்தார். அப்பணியாளன் அதை மிகச்சரியாகச் செய்தான். முன்னாள் ராஜாவின் உருவம் பலபலப்பாகவே இருந்ததுஅதன் அருகில் வருபவர்கள் நின்று வணங்கிச் செல்வார்கள்

இடப்பக்கத் தூணை ஒட்டி, பிரித்தியேகமான கண்ணாடிக்கூண்டை செய்து அதற்குள் நீண்டு பழுத்த கொம்பை புதிய ராஜா வைத்தார். ஒரு தூணில் முந்தைய ராஜா, இன்னொருத்தூணில் கொம்பு இருப்பது மிகப்பொறுத்தமாக இருக்கிறது என்று புதிய ராஜாவை அரசபையும், குடிமக்களும் புகழ்ச்சியாகப் பேசிக்கொண்டார்கள். நீண்டு பழுத்த கொம்புக்கு நல்ல இடம் கிடைத்துவிட்டது என்றாலும், அதன் பிறகு அரசபையில் யாராலும் பேசப்படவே இல்லை. ராஜா வைத்திருந்தக் கொம்பு இப்போது கண்ணாடிக் கூண்டில் இருக்கிறது என்றளவில்தான் அக்கொம்பை நினைவு கூர்ந்தார்கள். அதற்குமேல் விஷேசமான பேச்சுக்கள் எதுவும் இல்லை. பல வருடங்கள் கடந்துவிட்டன. கண்ணாடி கூண்டுக்குள் இருந்து, அனைவரின் பார்வையில் பட்டாலும், யாருமே அதைப் பொருட்படுத்தவில்லை. அநேகமாக மறந்தேவிட்டார்கள் என்பதுதான் நிஜம். தினந்தோறும் அரசபைக்குள், கொலுமண்டபத்தின் அருகில் வருவோரின் பார்வையில் கொம்பு இருந்தாலும், ஏற்கனவே சபையின் ஒரே இடத்தில் இருக்கும் இருக்கை, டேபில், சுவர், சன்னல், திரைச்சீலைகள் போன்று அதுவும் ஒரு பொருளாகத்தான் பார்வையில் பட்டுபோகின்றது.

எப்போதும்போலத்தான் அன்றும் பணியாளன் ராஜாவின் உருவத்தைச் சுத்தப்படுத்திவிட்டு, பக்கத்தில் இருக்கும் கண்ணாடிக் கூண்டைப் பார்த்தான். ஒருவேளை கொம்பு வெளியில் இருந்தால் அதையும் துடைத்தெடுக்கலாம். கூண்டுக்குள் வைத்துவிட்டார்களே என்று சங்கடப்பட்டான். ராஜாவோடு இருந்த நாட்களையும் நினைத்துப்பார்த்தான். எத்தனை மந்திரிகள் அதைச் சுற்றிக்கொண்டே இருந்தார்கள். குடிமக்களால் எவ்வளவு புகழாரம். எல்லாரும் எங்கேப் போனார்கள். நினைக்க நினைக்க உண்மையிலேயே கொம்பை அருகில் சென்று பார்க்க பணியாளன் நெஞ்சு உந்துதல் ஆனது. கூண்டின் மிக அருகில் வந்து உற்றுப்பார்த்தான். அப்போதுதான் அந்த அதிசயத்தைக் கண்டான். நீண்டு பழுத்த கொம்பிற்கு புதிதாக ஒரு கால் முளைத்திருந்தது. அது ஏறக்குறைய ஒருவருஷக்குழந்தையின் உயரத்திற்கு வளர்ந்திருந்தது. கொம்பில் இருந்து வளர்ந்து தொங்கும் காலின் கீழ்பகுதி, காலின் கீழ்பகுதிபோன்று இல்லாதபடி இருந்தது. சரியகச் சொல்லவேண்டுமென்றால் பழுப்பும், ரோசும் கலந்த முகச்சாயலைக் கொண்ட தலைப்பகுதியாய் இருந்தது. அதிலிருந்து மற்ற உடல் உறுப்புப் பகுதிகள் வளரும் சாத்தியம் தெரிந்துகொண்டிருந்தது. பணியாளனுக்கு சதோஷம் தாங்கமுடியவில்லை. உடனே தன் கண்ணில் பட்டவர்களிடம் சொன்னான்.

முந்தைய ராஜா வைத்திருந்தக் கொம்பிற்கு புதிதாக ஒரு கால் முளைத்திருக்கிறது. அது கொம்பின் கால் பகுதிபோன்று இல்லாமல், தலைப்பகுதியின் தோற்றம் கொண்டுள்ளதுஎன்றான்.

சில மந்திரிகள் வந்துபார்த்து ஆச்சரியப்பட்டார்கள். எந்த நபராலும் மேனியைத் தொட்டுப் பார்க்கமுடியவில்லை. செய்தி புதிய ராஜாவிற்குப் போனது. ராணியார் அவசர அவசரமாக கொம்பு இருக்கும் கூண்டை வந்துப் பார்த்தார்கள். ராணியாருக்கு சற்று குற்ற உணர்வுதான் இருந்தது. ‘உண்மையிலேயே இக்கொம்பிற்குள் ஏதோ பிரித்தியேகமான பண்பு ஒளிந்திருக்கிறது. நாம் தான் இதை உதாசினப் படுத்திவிட்டோம்என்று வருந்தினார்.

புதிய ராஜாவும் அவ்விடத்தில் கூடினார். கூட்டம் அதிகமாகிவிட்டது. கொம்பைப் பார்ப்பதற்கு குடிமக்களும், வரத்தொடங்கினார்கள். ஏற்கனவே அதற்கு புகழ் இருந்தபோது கூடவே இருந்தவர்கள், இப்போது முதல் வரிசையில் நின்றார்கள். எபோதும்போல அதன் மூலிகை மகிமையை உணர்ந்தவர்களும், புதிதாக முலைத்த காலைப் பார்ப்பதற்காகவும் வந்தவர்களும் சாரை சாரையாய் வந்தார்கள். கூட்ட நெரிசலில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடப்போகிறதென்று புதிய ராஜா எச்சரிக்கையானார். உடனே பாதுகாப்பு மந்திரியை அழைத்தனுப்பினார்.

காவல் திட்டங்களை பலப்படுத்தவும், மக்களை ஒழுங்குபடுத்தவும் வழிவகை செய்யும்படி உத்தரவிட்டார். இவ்வளவு சீக்கிரம் கொம்பின் கால் முளைப்புச் செய்தி பரவியதைக் கண்டு புதிய ராஜாவிற்கே ஆச்ரியமாக இருந்தது. முன்னாள் ராஜாதான் கொம்பிற்குள் வடிவெடுக்கிறார் என்றப் பேச்சு பரவலானது.

புதிய ராஜாவிற்கேக்கூட நாம் தவறு இயைத்துவிட்டோம் என்ற யோசனை பிறந்தது. அரசபையின் கூட்டத்தில் மந்திரிமார்கள் அதிகம்பேர் கொம்பின் சிறப்பைக் கூறியபோது நாம் அங்கீகரிக்காமல் போய்விட்டோமே. வருத்தப்பட்டார்.

புதிய ராஜா இவ்வளவு தூரம் வருத்தப்பட கொம்பின் கால் முளைப்பு நிகழ்வு, பெரிய அதிசயமாக தோன்றியிருப்பதால் மட்டுமல்ல. நாட்டின் மிக நம்பிக்கைக்குறிய வேத விற்பண்ணர்கள்இக்கொம்புடன் ராஜாவின் இருப்பு என்பது, நாட்டின் மிகப்பெரியப் பாதுகாப்பு, அரசின் சுற்று வட்டப்பாதையில் விருதாவாகச் சுற்றும் நன்மைகளை அதன் மூலிகை ஈர்ப்பு சக்தியால் வசீகரம் செய்யக்கூடியதுஎன அக் கொம்பைக்குறித்து சாட்சி சொன்னார்கள். அச்சாட்சிதான் ஏற்கனவே கலங்கியிருந்த புதிய ராஜாவின் மனதை மேலும் யோசிக்கவைத்தது. இருந்தாலும் புதிய ராஜா பதட்டமடையவில்லை.

கொம்பின் மேனி பிரகாசமாக இருந்தது. முந்தைய ராஜாவின் காலங்களில் ராஜாவின் கட்டளைகளாலேயே கொம்பிற்கு பல பெருமைகள் வந்து சேர்ந்தது. தற்போது தன்னுடைய சுய மகிமையினாலே, குவியும் அன்பும், கவனிப்பும் தரும் உள்ளார்ந்த இன்பம் அலாதியானது. இந்நிகழ்வு வாய்ப்பது எளிதான காரியம் அல்ல. கொம்பு இத்தருணத்தை மாபெரும் கடவுள் சக்தியேக் கொடுத்துள்ளது என நம்பியது.

முந்தையக் காலங்களில் கொம்பு ராஜாவுடன் இருந்தபோது, ராஜாவின் கவனத்திற்கு வராத பல விஷயங்களை கொம்புதான் வெளிப்படுத்தியிருக்கிறது, அதனால், பல மந்திரிகள் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். என்பது அரசபையின் ரகசியப்பேச்சுக்களில் ஒன்றாகவே இருந்தது. ஆனால், அவைகள் எதுவும் இப்போது ரகசியமாகக்கூட பேசிக்கொள்ளவில்லை. பலவிதமான சிந்தனை, மற்றும் செயல் கொண்ட மந்திரிமார்கள், குடிமக்கள் கருத்துவேறுபாடின்றி இணைந்து கொம்பின் புதிய கால் முளைப்பு மகிமையைப் புகழ்ந்தார்கள். ஏறக்குறைய இரவு பகல் ஓய்வில்லாமல் கொம்பைக்காண கூட்டம் இருந்துகொண்டேயிருந்தது.

முந்தைய ராஜாவின் மார்பளவு உருவத்தைக்கூட மந்திரிமார்கள், குடிமக்கள் அநேகமாக பார்க்கவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  புதுவிதமான தோற்றம் மக்களை எப்போதும் ஈர்க்கிறது என்பதை பணியாளன் உணர்ந்தான். அவன், ராஜாவின் மார்பளவு உருவத்தைச் சுத்தப்படுத்திவிட்டு சற்றுத் தள்ளி நின்று கத்தினான்.

கணவான்களே, நீங்கள் தற்போது அதிகமாகப் பார்க்கின்ற கொம்பை வைத்திருந்த நம்முடைய ராஜா இங்கே இருக்கின்றார். இன்று மகிமையை வெளிக்காட்டுகின்ற கொம்பின் மகிமையை அன்றே அறிந்தவர். நம்முடைய ராஜாவும் கணம் பொருந்தியவர்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அவரையும் தரிசித்துச்செல்வது உங்கள் கடமையல்லவா? என்று கூவினான். அதைக்கேட்டவர்கள் அப்போதுதான் நினைவு வந்தவர்களாக முந்தைய ராஜாவின் மார்பளவு உருவத்தை வந்து வணங்கிச்சென்றார்கள்.

மறுநாள் மக்களின் பார்வை நேரத்திற்கு முன் பணியாளன் முந்தைய ராஜாவின் மார்பளவு உருவத்தைத் துடைத்துவிட்டு, நீண்டு பழுத்தக்கொம்பில் இன்று ஏதாவது மகிமை வெளிப்பட்டிருக்கிறதா என்று மிக அருகில் சென்று பார்த்துக்கொண்டிருந்தான்.

கோழைக் கட்டிய சளி பணியாளன் முகத்தில் வந்து விழுந்தது.

ஜே.டேனியல்


No comments: